மினி பஸ் ஏறியதும் ‘இன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் எப்படியும் சொல்லிவிட வேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது’ என்று நினைத்துக் கொண்டாள் தெய்வானை.
அதே சமயம் வள்ளியம்மாள் என்ன நினைப்பாங்களோ என்ற பயமும் அவளுக்குள் ஓடியது. மகனை மடியில் வைத்துக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவளின் முகத்தில் பட்டஇதமான காற்று அவளை அமைதி படுத்தியது.
அவர்களின் இருப்பிடம் வருவதற்குள் குழந்தையும் உறங்கிவிட, மகனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு இறங்கினாள். ஐந்து நிமிட நடையில் வீட்டிற்கு சென்று விட, “என்னம்மா சீக்கிரம் வந்து விட்டாய்?” என்று அவளிடம் இருந்து குழந்தையை வாங்கியப்படியே கேட்டார் வள்ளியம்மாள்.
“ஆமாம் அம்மா. நல்ல கூட்டம் ஆகையால் சீக்கிரமே கிளம்பி விட்டேன்” என்று சொல்லி தான் வாங்கி வந்தவற்றை அடுப்படியின் அருகில் வைத்து விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றாள்.
அலுப்பு தீர நன்றாக குளித்துவிட்டு இரவு உடையை உடுத்திக் கொண்டு வள்ளியம்மாளின் அருகில் வந்து அமர்ந்தாள். அவரும் அவள் வாங்கி வந்த மில்சேக்கை குடித்துக் கொண்டு “உனக்கு கொஞ்சம் வேண்டுமா?” என்று கேட்டார்.
வேண்டாம் என்று மறுத்த தெய்வானை அவர் அதைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து இன்று பள்ளியில் நடந்ததை மெதுவாக கூறத் தொடங்கினாள்.
முழுவதையும் கேட்ட வள்ளியம்மாள் “நீ என்ன முடிவு செய்து இருக்கிறாய்?” என்று அவளிடம் கேட்டார்.
அவரை கேள்வியாக பார்த்த தெய்வானை “எதைப்பற்றிம்மா?” என்றாள்.
“அதுதான், அந்த தம்பி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறாரே! திருமணத்தைப் பற்றி நீ என்ன முடிவு செய்கிறாய்?” என்றார்.
“அம்மா, நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன்? எனக்கு செந்தூர் இருக்கிறான். அதுவே போதும். திருமணம் எல்லாம் நான் செய்து கொள்ள மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
“இத்தனை வருடங்களாக நீ என்னுடன் தான் இருக்கிறாய்! ஆனால் உன்னை பற்றி நான் இதுவரை எதுவும் கேட்டதில்லை. நீயாக சொல்வாய் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நீ இன்று வரை உன்னை பற்றி எதுவும் அதிகம் சொல்லவில்லையே. நீ சொன்ன விஷயங்களும் உண்மையா? என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை” என்றார் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு.
“அம்மா நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மைதான்” என்றாள் கலக்கமாக.
“உண்மைதான். அதை நான் நம்புகிறேன். ஆனால் உனக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை அல்லவா?” என்று சோகமாக கூறினார்.
“அச்சோ அம்மா. அப்படி எல்லாம் இல்லை. உங்களிடம் சொல்லி உங்களையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று தான்” என்று தயக்கமாக கூறினாள் தெய்வானை.
“என்ன கஷ்டம் வந்து விடப் போகிறது? அன்று அந்த கயவர்களிடமிருந்து உன்னை காப்பாற்றி, இங்கு அழைத்து வந்ததில் இருந்து உன்னை என் மகளாக தான் நான் பார்கிறேன். நீ என் மகள், எல்லாவற்றையும் உன் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டி இருப்பதை பார்ப்பது தான் எனக்கு கஷ்டம்”
இதற்கு மேலும் மௌனமாய் இருப்பதில் அர்த்தம் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் தெய்வானை. ஆகையால் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து விட்டாள். சொல்லலாம் என்று நினைத்தாலே தவிர எப்படி ஆரம்பிப்பது என்று அவளுக்கும் புரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.
அவளின் தவிப்பை உணர்ந்த வள்ளியம்மா “பரவாயில்லை, உன்னால் சொல்ல முடியவில்லை என்றால் சொல்ல வேண்டாம். அதற்காக நீ இவ்வளவு கஷ்டப்படாதே!” என்றார் ஆதங்கமாக.
அவரின் கண்களை பார்த்த தெய்வானை “உங்களிடம் எதையும் நான் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை அம்மா. ஆனால் என் வாழ்க்கையில் நடந்ததை நான் மறக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தாள்.
“நான் சேலத்தை சேர்ந்த பெண். என் அம்மாவும் அப்பாவும் வீட்டிலேயே தறி வைத்திருந்தார்கள். அப்பா இருந்தவரை எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. அப்பா இறந்த பிறகு எங்களது வாழ்க்கையே மாறிவிட்டது” என்று அவர்களது பழைய வாழ்க்கை பற்றி கூறத் தொடங்கினாள்.
அவளது தந்தை இறந்த ஒரு மாதம் கழித்து அவர்களது வீட்டிற்கு நான்கு பேர் வந்தார்கள்.
“அம்மா அவரு புடவை நெய்து தருவதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். அதற்குள் இறந்து விட்டார். இறந்த வீட்டிற்குள் வந்து அதைப் பற்றி பேசுவது என்று தவறு என்றுதான் இவ்வளவு நாள் காலம் கடத்தி வந்துள்ளோம்” என்றார்கள்.
அதைக் கேட்டதும், “ஆமாம் அய்யா. அவர் சொல்லி இருக்கிறார். அதற்குரிய நூல்களை எல்லாம் வாங்கி வைத்து விட்டார். ஆனால்..” என்று புடவை தலைப்பால் வாயை மூடி, தன் அழுகையை அடக்கினார்.
அவர்களும் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “இப்பொழுது அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் அம்மா”
“அவர் இருந்த வரையில் யாருக்கும் எந்த பழைய பாக்கியும் கிடையாது. ஆனால் இப்பொழுது என் கையில் நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் ஒரு லட்ச ரூபாயும் இல்லை. என்னால் இப்பொழுது கொடுக்கவும் முடியாது. ஆனால் அதற்குரிய பொருட்களை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் கெஞ்சலாக.
“ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த பொருட்களின் மதிப்பு சரியாக இருக்குமா? நீங்களே கொஞ்சம் புரிந்து சொல்லுங்கள்” என்றார்கள் அவர்களும்.
இவருக்கும் இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்து நின்றான் அவரது தம்பி அழகு.
“என்ன சார்? இப்பதான் எங்க மாமா இறந்திருக்கிறார். அவர் இறந்த வீட்டுக்குள்ள வந்து இப்படி பணம் கேட்டா, எங்க அக்கா என்ன பண்ணும்” என்றான்.
“நாங்களும் என்ன செய்வோம் தம்பி. பணம் போட்டு வேலை செய்பவர்கள் தானே நாங்களும்” என்றார் அவரும் தன்மையாக.
“எங்களாலும் இப்பொழுது முழு பணத்தையும் கொடுக்க இயலாது. அதற்கு பதிலாக மாமா வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு வாருங்கள். ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய இயலாது” என்றான்.
அவர்களும் அங்கிருந்த மூலப்பொருட்களை பார்த்ததில் ரூபாய் இருபத்தைந்து ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கும். அவர் ஒரு ஐம்பதாயிரம் தருகிறார். அவர்களின் நல்ல எண்ணத்தால் இதற்கு மேலும் அவர்களை வற்புறுத்த வேண்டாம் என்று நினைத்தார்கள்.
“உங்கள் கணவர் இருந்தவரையில் அவர் எங்களுக்கு கேட்கும் நேரத்தில் துணி நெய்து கொடுத்திருக்கிறார். அதற்காக நாங்களும் நீங்கள் கூறிய தொகைக்கு ஒத்துக் கொள்கிறோம். எங்களை நீங்க தவறாக நினைக்க கூடாது. எங்களுக்கும் வேறு வழியில்லை” என்றார்கள்.
அவர்களை நன்றியுடன் பார்த்தார் தெய்வானையின் அம்மா.
அவர்கள் கிளம்பியதும் அக்காவிடம் கோபித்துக் கொண்டான் அழகு. “ஏனக்கா அவர்களை இப்படி உட்கார வைத்து தன்மையாக பேசிக் கொண்டிருக்கிறாய்? பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட வேண்டியது தானே?” என்றான் கோபமாக.
தம்பியின் குணம் இதுதான் என்று தெரிந்தவர், “இல்லை தம்பி அப்படியெல்லாம் செய்யக்கூடாது. மாமாவிற்கு அது சுத்தமாக பிடிக்காது. நீ பேசியதால் ஐம்பதாயிரம் என்று குறைத்துக் கொண்டார்கள் அல்லவா. அதுவே போதும். ஐம்பதாயிரம் தானே? நான் தெய்வானையின் நகை எதையாவது அடமானம் வைத்து செலுத்தி விடுகிறேன். நீ எந்த பணமும் கொடுக்கத் தேவையில்லை” என்றார்.
தம்பியின் குணத்தை பற்றியும் அவன் செய்யும் வேலை பற்றியும் அவரது கணவர் கூறியிருப்பதால், அவனிடம் இருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்று உறுதியாக இருந்தார்
“ஏன் அக்கா? இப்படி பேசுகிறாய். நான் உன் தம்பி தானே. நான் உனக்காக இதை கூட செய்ய கூடாதா?” என்று தெய்வானையை பார்த்துக்கொண்டே ஏக்கமாக கேட்டான் அழகு.
தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..