Loading

தெய்வானை குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று கூறிய மருத்துவர், அவளுக்கு மயக்கம் தெளிந்ததும் மற்ற பரிசோதனைகளை செய்து விடலாம் என்க, அதன்படியே அவளது மயக்கம் தெளிய காத்திருந்தார் வள்ளியம்மாள். 

சற்று நேரத்திற்கு எல்லாம் மயக்கம் தெளிந்த தெய்வானை சுற்றும் முற்றும் தாங்கள் இருக்கும் இடத்தை பார்க்க, அவரின் அருகில் வந்த வள்ளியம்மாள் அவளின் உச்சந்தலையை தடவி, “உங்கள் வீட்டில் எதுவும் பிரச்சனையாமா? புருஷன் கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்துட்டியா?” என்றார் மெதுவாக. 

தெய்வானையோ மிரண்டு விழிக்க, அவளின் நாடி பற்றிய வள்ளியம்மாள் “உன் வயித்துக்குள்ள புதுசா ஒரு ஜீவன் வந்திருக்கு. இந்த நேரத்துல உன் புருஷன் கிட்ட சண்டை போட்டுட்டு வரலாமா?” என்றார். 

அதில் என்னவென்று சொல்ல முடியாத உணர்வு தோன்ற, அழுகையும் மகிழ்ச்சியும் அவளுக்குள் போட்டி போட்டு வந்தது. அவளின் மலர்ந்த முகத்தில் கண்ணீரைக் கண்டு, “என்ன ஆயிற்று?” என்க, 

வள்ளியம்மாளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்ட தெய்வானை “உண்மையா அம்மா!” என்றார் மகிழ்ச்சியாக. 

“ஆமாம், இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் எல்லா செக்அப்பும் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காங்க” என்று அவளுக்கு இட்லியை கொடுக்க, சந்தோஷத்தில் அவளால் சாப்பிட முடியவில்லை. வள்ளியே அவளுக்கு கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று ஊட்டி விட, அதன் பிறகு அனைத்து பரிசோதனைகளையும் முடித்து தங்களது வீட்டிற்கு அழைத்து வர சாயங்காலம் ஆகிவிட்டது. 

சின்னமுட்டம் கிராமத்தில் கடற்கரையோரம் உள்ள ஒரு சிறிய குடிசையில் தான் வள்ளியம்மாள் வசித்து வந்தார். அவரது கணவன் மீன் பிடிக்கும் வேலை செய்பவர். ஒரே மகன். போதுமான வருவாய். எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் கிடைக்கும் பணம் அவர்கள் மூவருக்கும் சரியாக இருந்தது. மகனை கல்லூரி படிப்பு வரை படிக்க வைத்தார்கள். படிப்பு முடிந்ததும் வெளி ஊர்களில் வேலை கிடைக்க, கடைசியாக கோட்டயத்தில் சென்று செட்டில் ஆகிவிட்டான். 

அங்குள்ள பெண்ணையே காதலித்து மணந்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டான். அவன் வேலைக்குச் சென்ற கொஞ்ச நாட்களிலேயே வள்ளியின் கணவர் இறந்து விட, தன் தாயை தன்னுடன் வந்து தங்கிக் கொள்ளுமாறு கூறினான். ஆனால் அவருக்கு தன் கணவனுடன் இவ்வளவு காலம் வாழ்ந்த இந்த ஊரையும், கடற்கரையையும், சுற்றி இருந்த மக்களையும் விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் நான் என் கணவன் வாழ்ந்த இடத்திலேயே வாழ்ந்து உயிரை விட்டு விடுகிறேன் என்று மகனிடம் பிடிவாதமாக கூறிவிட்டார்.  

தனியே இருந்தாலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சொந்தம் பந்தம் போல் பழக, அவருக்கு தனியாக இருப்பது போல் தோன்றியதே இல்லை. இப்பொழுது துணையாக தெய்வானையும் வந்துவிட்டாள். மகனின் ஊருக்கு சென்ற வள்ளியம்மாள் ஒரு இளம் வயது பெண்ணுடன் வருவதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் வந்து விசாரிக்க, எல்லோரிடமும் தெய்வானையை அனாதை என்று கூறி, இன்றிலிருந்து இவள் தன்னுடைய மகள் என்று அறிமுகப்படுத்தினார். 

ஏதாவது வேலைக்கு செல்வேன் என்று உறுதியாக நின்றவளை, ஊர் தலைவரிடம் அறிமுக படுத்த, அவர்கள் ஊரில் உள்ள பள்ளியில் வேலைக்கு சேர்த்து விட்டார் அவர். வள்ளியம்மாளின் மகளாகவே சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் வாழ தொடங்கினாள் தெய்வானை. 

தனது மகளாகவே நினைத்து தெய்வானைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் எந்த குறையும் இல்லாமல் செய்தார் வள்ளியம்மாள். 

மாதாமாதம் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது முதற்கொண்டு, ஏழாம் மாதம் அக்கம் பக்கம் உள்ளவர்களை வைத்து வளைகாப்பும் நடத்தினார். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூற, அரசு மருத்துவமனையிலேயே குழந்தை பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டார் தெய்வானை.

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்று எடுத்தாள். கணவன் பெயரில் குகன் பெயரை கொடுத்தாள். அவர்கள் ஒன்றாக இருந்த நாட்களில், அவன் குழந்தை பற்றி பேசியது தானே அதிகம். குகன் கூறியது போல குழந்தை பிறந்தால் என்னென்ன, எப்படி செய்ய வேண்டும் என்று அவன் பேசிய அனைத்தையுமே நிறைவேற்றினாள். 

செந்தூர் என்று பெயர் வைத்தாள். ஒன்பதாவது மாதத்தில் திருச்செந்தூர் சென்று மொட்டையும் போட்டு வந்தாள். அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தார் வள்ளியம்மாள். 

தெய்வானையை தான் முதலில் பார்த்த நாளிலிருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைத்து பார்த்து கொண்டிருந்தார் வள்ளியம்மாள்.

தாம் இன்று வரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தும் எதுவும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையாக உட்காரந்திருக்கும் வள்ளியம்மாளின் தோளை பற்றிய தெய்வானை, “என்னம்மா யோசிக்கிறீங்க? நான் உண்மையைத்தான் இவ்வளவு நேரம் சொன்னேன் அம்மா. என் வாழ்க்கையில் நடந்தது அனைத்தையுமே மறைக்காமல் உங்களிடம் சொல்லிவிட்டேன். இப்பொழுது சொல்லுங்கள், என்னால் வேறு யாரையாவது மணந்து கொள்ள முடியுமா?” என்று கண்களில் நீருடன் அவரைப் பார்த்து கேட்டாள்.

வள்ளியம்மாவின் மடியிலேயே செந்தூர் உறங்கி விட, அவனை தூக்கி படுக்கையில் போட்டு விட்டு, “என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கொஞ்சம் நடைமுறையையும் யோசித்துப் பார். ஒன்று… நீ உன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்.இல்லையென்றால்” என்று அவர் சொல்லி முடிக்கும் முன், 

“ஆனால் அவர்தான் அவரின் அம்மா பேச்சைக் கேட்டு அவரது முறைப்பெண்ணை கட்டி இருப்பார் இல்லையா?” என்று சோகமாக கூறினாள் தெய்வானை.

“ஆமாம் அப்படி நடக்க வேண்டும் என்று நினைத்து தானே நீ அங்கிருந்து கிளம்பி விட்டாய்” என்று அவளை கோபமாக பார்த்தார் வள்ளியம்மாள். பின்னர் “ஒருவேளை அவருக்கு கல்யாணம் முடிந்திருந்தால், நீ இப்போது அங்கு போனால், அவர்களை பிரித்த மாதிரி ஆகிவிடும். அதெல்லாம் வேண்டாம் இனிமேல் நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருந்து விடு. 

இனிமேல் உனக்கும் உன் கணவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்து, உன்னை விரும்பும் அந்த வாத்தியாரையாவது கல்யாணம் கட்டிக்கோ! அதுதான் சரியாக வரும்” என்றார்.

“அம்மா, தயவு செய்து என்னை கல்யாணம் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் அம்மா. நான் இப்படியே இருந்து விடுகிறேன். நான் இருப்பது உங்களுக்கு பாரம்மா அம்மா °?” என்று அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள் தெய்வானை .

“நீ எனக்கு பாரமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் எனக்கு நீதான் ரொம்ப துணையாக இருக்கிறாய். என் தனிமையை போக்கி எனக்கு ஆதரவாக தான் இருக்கிறாய். என்னை விட்டு போகச் சொல்வதற்காக உன்னை கல்யாணம் பண்ண சொல்லவில்லை. இளமையில் நம்மால் தனிமையாக வாழ்ந்து விட முடியும். 

ஒரு வயதிற்குப் பிறகு பேசுவதற்காவது ஒரு துணை வேண்டும் என்று தோன்றும். அப்பொழுது உன் மகனும் திருமணம் முடிந்து அவன் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பான். நீ மட்டும் தனித்திருக்கும் பொழுது, முதலிலேயே சென்று கணவனை சந்தித்திருக்கலாமோ? என்று எண்ணமெல்லாம் தோன்றும். அப்போது யோசித்து என்ன செய்ய? அதற்காகத்தான் இப்போதே சொல்கிறேன்.

அது மட்டுமல்ல நான் இருக்கும் வரை உனக்கு துணையாக இருப்பேன். என் காலத்திற்குப் பிறகு நீ என்ன செய்வாய்?” என்று அவர் கேட்டதும், 

பதறி அவரின் வாயை மூடிய தெய்வானை “இப்படியெல்லாம் பேசாதீர்கள் அம்மா. மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. என் அம்மாவை நான் உங்கள் உறவில் தான் பார்க்கிறேன். நீங்க நல்லா இருந்தாதான் என் அம்மாவும் நல்லா இருப்பதாக நினைத்துக் கொள்வேன். தயவுசெய்து இனிமேல் இப்படி பேசாதீர்கள்” என்று அழுதே விட்டாள்.

அவளின் கண்ணீரை துடைத்த வள்ளியம்மாள், “பின்னாளில் நடப்பதை தான் சொன்னேன். சரி இனிமேல் அப்படி பேசவில்லை. அழாதே! ஏதாவது சாப்பிடு சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி ஓய்வெடு” என்றார். 

பழைய நினைவுகளில் இருந்த தெய்வானைக்கு பசியே மறந்து போய்விட்டது. “எனக்கு பசிக்கவில்லை அம்மா. நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்” என்று மகனின் அருகில் அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டாள். 

ஆழ் மனதில் இருந்த குகனின் நினைவுகள் எல்லாம் மேலே எழும்பி, கடல் அலை போல, ஓயா நினைவுகளை மேலும் மேலும் கிளரி விட்டுக் கொண்டே இருந்தது. 

அவளது கண்ணீர் தலையணையை நனைக்க, தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள். 

இரவு வெகு நேரம் உறக்கம் இல்லாமல் இருந்ததால், விடிந்த பிறகும் மூவருமே எழுந்திருக்கவில்லை. வழக்கமாக காலையிலேயே எழுந்து வாசல் பெருக்கி தெளித்து சமையலை ஆரம்பிக்கும் தெய்வானை, இன்னும் வீட்டை விட்டு வெளி வராததால், பக்கத்து வீட்டுப் பெண்மணி, ‘என்ன ஆயிற்று?’ என்று இவர்கள் வீட்டு வாசலை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். 

ஏழு மணி தாண்டியும் கதவுகள் திறக்கப்படாததால் பொறுமை இழந்தவர் “வள்ளியக்கா , வள்ளியக்கா” என்று அவர்கள் வீட்டில் இருந்தபடியே குரல் கொடுத்தார். அவர் தன்னை யாரோ அழைப்பது போல் இருக்க மெதுவாக கண்களை கசக்கி எழுந்த வள்ளியம்மாளுக்கு ஜன்னலின் வழியே வெளிச்சம் வர கண்டு, ‘நேரம் ஆகிவிட்டது போலிருக்கே?’ என்று தெய்வானையை பார்க்க, 

தெய்வானையும் செந்தூரும் அணைத்த படி உறங்கிக் கொண்டிருந்தனர். செந்தூர் ஒரு காலை தூக்கி அவள் இடுப்பில் போட்டு அணைத்திருக்க, இருவரையும் பார்த்து புன்னகைத்தபடியே, எழுந்து கதவை திறந்தார். 

“என்னக்கா? இன்னைக்கு ரொம்ப நேரமா ஆயிடுச்சு? தெய்வானை இன்னும் வெளியே வரல? உடம்புக்கு ஏதும் சரியில்லையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். 

“ஒன்னும் இல்ல புள்ள. நேத்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அதனால கொஞ்சம் அசந்து தூங்கிட்டோம். அதுக்குன்னு இப்படி தான் கத்தி கூப்பாடு போடுவியா?” என்று அவரை அதட்டி விட்டு, தன் காலை வேலைகளை முடித்து, ‘இன்று தெய்வானை பள்ளிக்கு செல்வாளா? என்று தெரியவில்லையே’ என்று நினைத்துக் கொண்டு எதற்கும் சமைப்போம் என்று சமையல் செய்ய அடுப்பை பத்த வைத்தார் வள்ளியம்மாள்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்