Loading

 

ஜாலம் 12

 

அங்கே கஃபி ஷாப் ஒன்றில் ஹரிஷின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேந்தனின் எண்ணம் எல்லாம் ஆர்வன் அவன் கையில் கிடைத்த நாளை நோக்கி சென்றது…

 

_____________________________________________

 

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்..

 

வெளிநாட்டுக்கு சென்றிருந்த வேந்தன்  மீண்டும் நாட்டுக்கு வந்திருந்த நாட்கள் அவை.. இங்கே இருந்த வெறுமையை விட அங்கே அவனை இன்னும் வாட்டியது என்று கூட சொல்லலாம்..

 

அவன் ஒன்றும் தனிமையை விரும்பி எடுத்துக்கொள்ளவில்லையே வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பரிசு அது..

 

தாயாய் தாய்நாடாவது இருக்கட்டும் என அங்கே கிடைத்த சலுகை எல்லாம் விட்டுவிட்டு இங்கேயே வந்துவிட்டான்…

 

வந்து ஒரு வாரம் முடிந்திருந்தது… வீட்டுவேலை, வேலையில் சேர்வதற்கான படிமுறைகள் என இந்த ஒருவாரமும் அவளை இழுத்துக்கொண்டது…

 

நண்பனிடம் வந்ததை இன்னும் சொல்லவில்லை..  இன்னும் பத்து நாட்களில் அவன் பிறந்தநாள்.. அன்று நேரில் சென்று அவனுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி இருந்தான்…

 

கல்லூரி வேலையில் சேர இன்னும் ஒருவாரம் மீதம் இருக்க,  இதோ கிளம்பிவிட்டான் இயற்கையோடு தன்னை மறக்க ஒரு தூர பயணத்தை நோக்கி..

 

அவன் ஒரு இயற்கை விரும்பி.. தனிமையாக தோன்றும் நேரமெல்லாம் வண்டியை எடுத்துக்கொண்டு எங்காவது இயற்கையோடு தன்னை இணைத்துக்கொள்வது வழக்கம்..

 

பயணத்தின் நான்காம் நாள்.. அங்கே மரங்கள் சூழ்ந்த அந்த காட்டில் பறவைகள் இரண்டு ஒன்றோடு ஒன்று காதலை பரிமாறும் காட்சியை அவன் படமாக்கி கொண்டிருந்த நேரம், அங்கே யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க திரும்பியவன் கண்டது உடலில் இரத்தம் வழிய ஒன்றை கை வெட்டப்பட்ட நிலையில் குழந்தையை கையில் தூக்க முடியாமல் ஓடி வந்தவனை தான்..

 

வேந்தன் அவனிடம் விரைந்து அவனை தாங்கிக்கொள்ள, வேந்தனை கண்டு கொண்ட மகிழ்வு அந்த புதியவன் கண்களில் தெரிந்தது..

 

“ஐயோ அன்பு என்னாச்சுடா?… இவ்வளவு பிளட், ஹாஸ்பிடலுக்கு போய்டலாம்…” என்று அவனை தூக்க போக,  அன்பு என்று வேந்தனால்  அழைக்கப்பட்டவனோ மயங்கி இருந்த குழந்தையை கீழே  படுக்க வைத்தவன் வேந்தனை தடுத்தான்…

 

“வேணாம் வேந்தா.. என் உயிர் வேண்டாம்.. என் புள்ளய காப்பாத்திடுடா ப்ளீஸ்…” என்றான்

 

“அச்சோ ஏண்டா இப்படி பேசுற… சீக்கரம் போய்டலாம் டா ப்ளீஸ்..”

 

“என் புள்ள உயிர காப்பாத்துடா.. என் பொண்டாட்டி  என்ன நம்பி காத்திருக்கா நான் போகணும்..” என்றான் மீண்டும்..

 

“அவங்களையும் கூட்டிட்டு போகலாம்  நானும் வறேன்…”

 

“அச்சோ புரியாம பேசாதடா டைம் இல்ல… இவனையும் கொன்னுடுவான்..”

 

“சரி போலீஸுக்கு இன்போர்ம் பண்ணிடலாம்..” என்று தொலைபேசியை எடுக்க, புதியவனோ கோபமாக தட்டிவிட்டான்..

 

“சொன்னா புரிஞ்சிக்கோ வேந்தா.. அனாதையா வாழ்ந்த எனக்கு கடவுளா கொடுத்த பொக்கிஷம்டா என் குடும்பம்… ப்ளீஸ்டா அவங்க வர்றதுக்குள்ள என் புள்ளைய கூட்டிட்டு போ வேந்தா…” என்றவன் சுற்றி பார்த்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்..

 

“ஒரு டாக்டரா நான் பிழைக்க மாட்டேன் எனக்கே தெரியும்.. ஆனா என் புள்ள வாழனும்டா.. மயக்க மருந்து ஓவர்டோஸ் கொடுத்திருக்கான்.. இப்போ போனா காப்பாத்திடலாம்.. டைம் வேஸ்ட் பண்ணாத வேந்தா…” என்று இருந்த ஒன்றை கையை எடுத்து கும்பிடுவது போல் கஷ்டப்பட்டு வைத்துக்கொள்ள..  வேந்தன்னுக்கே கண்கள் கலங்கியது.. பேசவே அத்தனை கஷ்டப்பட்டு  பேசுகிறானே அவன் நண்பன்…

 

அவன் பேசிகொண்டிருக்க அந்தப்பக்கம் நான்கைந்து பேர் ஓடி வருவது போல் சத்தம் கேட்க பதறிப்போன அன்பு எழுந்துகொள்ள, வேந்தன் குழந்தையை தூக்கிகொண்டான்…

 

வேந்தனின் கையை பற்றிய அன்பு அங்கே இருந்த மறைவான கிளைகளால் சூழ்ந்த இடத்தில் மறைவாய் நிற்க வைத்தான்..

 

“கடவுள் தான் உன்ன இங்க அழைச்சிட்டு வந்திருக்காரு வேந்தா, என் பாரத்தை உங்ககிட்ட கொடுக்குறேன்னு தப்பா நினைக்காதடா..  என் மஞ்சுவோட தங்கச்சிக்கும் ஆபத்து இருக்கு.. அவளையும் காப்பாத்தி நீயே கட்டிக்கோடா..” என்றவன் மேலும் பேசவர அதற்குள் ஆள்கள் அருகில் நெருங்கிவிட்டது புரிந்ததது.. இனி பேச முடியாது என்பதை உணர்ந்தவன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுத்து அவன் கையில் வைத்தான்…

 

அவன் கண்களில் தான் எத்தனை உணர்வுகள்… குனிந்து குழந்தை கன்னத்தில் முத்தமிட்டவன், வேந்தன் தலையில் கைவைத்து கண்களை மூடி திறக்க.. ஆட்கள் இன்னும் அருகில் வந்ததுவிட்டது சத்தத்தில் புரிந்தது…

 

அதற்கு மேல் நொடியும் வீணாக்கவில்லை அவன்.. அவர்களை விட்டு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் நடந்தவன், சிறிது நேரத்தில் அவர்களிடம் மாட்டியும் கொண்டான்.. வேண்டும் என்றே மாட்டிக்கொண்டான் என்பது வேந்தனுக்கு புரிந்தது..

 

அன்புவிடம் அவர்கள் குழந்தையை பற்றி அத்தனை விசாரித்தும் வாயும் திறக்கவில்லை… அவர்கள் இருந்த திசைக்கு பார்வையையும் திருப்பவில்லை அவன்…

 

அங்கிருந்த அடிட்களில் ஒருவனோ, “பாஸ் கேட்டா என்னடா சொல்றது… தெரிஞ்சா சுட்டு தள்ளிடுவாரே..”

 

அதற்கு இனொருவனோ… “இவனையே பிடிச்சாச்சு.. இவன் தான் ஒத்தகைல தூக்க தெரியாம எங்கயாச்சும் பாடிய போட்டிருப்பான்.. அவனுக்கு குடுத்த மயக்க மருந்துக்கு இந்நேரம் பரலோகம் தான்.. இல்லனாலும் இங்க இருக்குற மிருகம் இரவானதும் வேலைய காட்டிட்டும்… இதுக்கு போய் பயந்துட்டு… வாங்கடா போகலாம்…” என்க மற்றவர்களும் ஆமோதித்து அன்புவை அழைத்துச்சென்றனர்…

 

வேந்தனுக்கோ ஒன்றும் செய்ய முடியாமல் போன வலியும், குற்றஉணர்வும் சேர்ந்துக்கொண்டது… தன் கண் முன்னே தன் நண்பனின் நிலை, அதை பார்த்தபடி வெறுமனே வேடிக்கை பார்க்கும் தன் நிலை.. இப்படி அனைத்தையும் வெறுத்தான்..

 

ஆனால் நண்பன் தன்னிடம் விட்டுச்சென்ற பொறுப்பு அவனை அங்கேயே தேங்க விடவில்லை…

 

அவன் இரத்த உறவையேனும் காத்தே தீருவேன் என்று உறுதியுடன் விரைந்தான் மருத்துவமனையை நோக்கி..

 

அரைமணிநேரத்தில் குழந்தையை அனுமதித்தவன் வெளியே அமர்ந்திருக்க… எண்ணம் முழுவதும் நண்பனிடம் தான்….

 

எழிலன்பன்.. ஆசிரமத்தில் அவனுக்கென்று கிடைத்த முதல் உறவு.. உயிர் நட்பும் கூட… ஆசிரமத்தைவிட்டு வெளியேறியதும் ஆளுக்கொரு துறை.. ஆளுக்கொரு வேலை என்று பிரிந்தாலும் அவ்வப்போது பேசிக்கொள்வது வழக்கம்…

 

ஒருவர் மீதொருவருக்கு அக்கரையும் அதிகம் தான்… தினமும் பேசிக்கொள்ளாவிட்டாலும் பேசும் பொழுதுகள் அவர்களுக்காகவென்றே இருக்கும்.. அந்தளவுக்கு புரிதலும் அவர்களிடத்தில் இருந்தது…

 

வேந்தனை மேற்படிப்புக்காக வற்புறுத்தியதும் இவன் தான்… அத்தனை பிடிக்கும் வேந்தனை அவனுக்கு…

 

தனக்கு திருமணம் என்பதாய்  நண்பன் செய்தி அனுப்பி இருந்தும் வேந்தனால் அங்கிருந்து வரமுடியாமல் போனது…

 

அதில் சற்று கோபமாய் திட்டியும் இருந்தான் எழில்… கோபத்தில் திருமண புகைப்படம் கூட அனுப்பி இருக்கவில்லை.. கேட்டதுக்கும் நேரில் வந்து பார்த்துக்கொள் என்பதாய் முடித்துவிட்டான்…

 

நண்பனின் கோபத்தில் இருப்பது உரிமையல்லவா?.. அவனுக்கென்றிருந்த உறவும் இவன் ஒருவன் தானே… திருமணத்தில் தன்னை எத்தனை எதிர்பார்த்திருப்பான் என்பது வேந்தனுக்கு புரியத்தான் செய்தது… இன்னும் மூன்று வருடங்களில் வந்து விடுவேன் என்று  ஒருவழியாய் பல போராட்டங்களின் நடுவே சமாதானம் செய்திருந்தான்…

 

அதன் பின் குழந்தை பிறந்தது கூட தெரியும், வாழ்த்தை கூட அனுப்பியிருந்தான் வேந்தன்… குழந்தைகளின் படம் மட்டும் வந்து சேர்ந்தது இவனுக்கு…

 

அவ்வப்போது எழிலன்பனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறான் தான் ஆனால் பார்த்ததில்லை… நன்பனின் விருப்பப்படி நேரிலே பார்த்துக்கொள்கிறேன் என்பதுபோல்  விட்டுவிட்டான்…

 

மனைவியின் தங்கையை திருமணம் செய்து தங்களோடு வந்துவிடு என அன்பனும் அடிக்கடி சொல்வதுண்டு.. ஆனால் வெறுமனே சிரித்தபடி கேட்டுக்கொள்வான்…

 

எழில் பேச்சின் இடையே அவளை பற்றி பேச என்றும் மறப்பதில்லை… பேசியே விருப்பத்தை வளர்க்க எண்ணினானோ என்னவோ?..

 

எழில் “சேட்டை” என்று ஆரம்பித்தானென்றால் வேந்தனுக்கு புரிந்து போகும் இன்று முடியாது அவளை பற்றிய பேச்சு என்பது…

 

ஆனால் ஒவ்வொரு முறையும் நண்பன் திருமணம் என்றவுடன் அவனுக்கு ஒரு முகம் மனதில் எழும்.. காதல் என்றெல்லாம் இல்லை ஒரு சுவரஷ்யம் அவள் மீது… அவளில் கடிதம் மீது.. அதனால் அந்த ஆர்வக்கோளாரை பற்றி எண்ணிகொள்வான்…

 

இப்படி எத்தனையோ நினைவுகள் அவனிடம்… நண்பனை அவன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு காலம் இப்படி  ஒரு சந்திப்பை கொடுக்கும் என அவன் துளியும் எண்ணவில்லை…

 

_________________________________________

 

யோசனையில் அமர்ந்திருந்தவன் கண்களில் கண்ணீர் கோடாய் வழிந்து நண்பனை நினைவூட்டியது…

 

எழில் கொடுத்த.. தங்க சங்கிலியை வைத்து இத்தனை நாளாய் அந்த முகம் தெரியாத பெண்ணை தேடிக்கொண்டு தான் இருந்தான்…

 

தான் தேடும் பெண் திருமணம் செய்யவில்லை என்றால் தான் செய்துகொள்ள வேண்டும் என்றே தேடினான்.. அதற்கும் காரணம் இருந்தது… ஒன்று நண்பனின் கடைசி வார்த்தை அவன் ஆசை… இன்னொன்று ஆர்வன்.. அவனை குடும்பத்துடன் சேர்க்க வேண்டுமே… அவனை பிரிவதெல்லாம் வேந்தனால் முடியாத ஒன்று… அதனாலேயே இந்த திருமண முடிவு…

 

காரணம் அவ்வப்போது மனசாட்சி என்ற ஒன்று அவனை கொள்கிறது… உன் சுயநலத்துக்காக அவனை உன் கூடவே வைத்திருக்கிறாயா?  அவனையும் உன்னைப்போல் குடும்பம் இல்லாமல் வாழவைக்க போகிறாயா?.. என்றெல்லாம் அவனை சாடும்…

 

இன்னொரு மனம் உனக்காக நண்பன் கொடுத்த பரிசு என்று அவனை சமாதானப்படுத்தும்… இந்த அலைபுறுதல் அவனிடம் இருந்து விலக வேண்டும் என்றால் அவளை கண்டுபிடிக்க வேண்டுமே..

 

அதற்காக அவன் கண்டுபிடித்தவன் தான் ஹரிஷ்… டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவன்… ஏனோ காவல்துறையிடம் செல்ல தோணவில்லை.. நண்பன் அன்று தடுத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்…

 

ஆனால் இடையில் மீனாட்சியை கண்டது, அவள் காதல்.. மகியின் ஏக்கம் எல்லாம் ஏது வந்தாலும் சமாளித்து கொள்ளலாமென அவனை வேறு முடிவுக்கு கொண்டு வந்து விட்டிருந்தது… 

 

இதோ நான்கு வருடங்களின் பின் கண்டுபிடித்தும் விட்டான்… அவனவள் தான் அவன் தேடும் பெண்.. அவன் உணர்வுகளை எப்படி சொல்லவது என்பதே புரியாமல் தான் காலையில் அவளை முத்தமிட்டதும்.. அத்தனை சந்தோஷத்தில் இருந்தான்…

 

தன் மகன் தனக்கென கிடைத்த இரண்டாவது உறவு அவன்… அத்தனை பாசம் அவன் மீது… அவனை பிரிய வேண்டுமே என அவன் தவித்ததெல்லாம் இன்று ஒன்றுமில்லை என்பது போல ஆகிவிட்டதே… இனி அவனது ஆருவை அவனை தவிர யாராலும் உரிமைகொண்டாடிட முடியுமா என்ன?…

 

அதோடு அவன் மனதை முதலில் சலனப்படுத்திய பெண்… நண்பனால் தனக்கென பார்க்கப்பட்ட பெண் இருவரும் ஒருவர்… அதுவும் இப்போது தன் மனைவியாய்… ஏதோ திரைப்படம் பார்ப்பது போல் தான், அவன் வாழ்க்கை விசித்திரங்களை அவனுக்கு பரிசளித்திருந்தது….

 

_____________________________________________

 

“குட் ஈவினிங் சார்… முகத்துல பல்ப் எரியுதே.. கல்யாணக்கலையா சார்…” என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்தான் ஹரிஷ்…

 

“குட் ஈவினிங் ஹரிஷ்… இது அதுக்கும் மேலனு சொல்லலாம்… ரொம்ப தேங்க்ஸ் ஹரிஷ்… இந்த மூனு வருசமா எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க… ஒரே ஒரு செயின் கொடுத்து உங்கள ரொம்ப அலைய விட்டதுக்கு ரொம்ப சாரி…”

 

“என்ன சார் இதெல்லாம்… இது என்னோட வேல… காம்ப்ளிகேட்டான கேஸ் தான எங்களுக்கான பூஸ்ட்.. இப்போ இத கண்டுபிச்சதுனால எங்களுக்கே எங்க டீம் மேல கான்பிடென்ட் வந்திருக்கு.. அண்ட் உங்கள போல நல்ல கிளைண்ட் கூட ஒர்க் பண்ணின திருப்தியும் இருக்கு..”

 

“இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு ஹரிஷ்…” என்க அவனின் பார்வை கேள்வியாய் வேந்தனை நோக்க..

 

“நம்ம இவ்வளவு நல்ல தேடிட்டு இருந்தவங்க தான் இப்போ மிஸஸ் பாரி வேந்தன்..”

 

“சார்… நிஜமாவா?…” என்றான் அதிர்ச்சியுடன்… கூடவே சந்தோஷமும்…

 

“செம ட்விஸ்ட்ல சார்… எதிர்பாக்காத ஒன்னு… எனிவேய்ஸ் ஹாப்பி போர் யூ சார்..  அண்ட் இது உங்களோடது…” என்றவன் அந்த தங்க சங்கிலியை வேந்தனிடம் ஒப்படைத்தான்…

 

____________________________________________

 

இரவு வீட்டில் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்… ஆனால் பார்வை அங்குமிங்கும் குழந்தைகளோடு செல்லும் மனையாள் மீதே…

 

மீனுவிடம் இப்போதைக்கு சொல்லவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் வேந்தன்.. ஏற்கனவே அவள் சகோதரியின் இழப்பு அவளை பெரிதும் பாதித்திருக்கிறது என்பது தெரியும்…. இதில் கொலை என்றால் இன்னும் கவலை கொள்ளக்கூடும்…

 

சரிவர உண்மையை கண்டறிந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம் என எண்ணியவன்… இப்போதைக்கு அவளிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொள்ள முடிவெடுத்திருந்தான்… கொலையாளியை கண்டறிய வேண்டிய கட்டாயம் இருந்தது.. இவளுக்கும் ஆபத்து என்பதாய் தானே நண்பன் சொல்லி இருந்தான்…

 

நான்கு வருடங்களில் எதுவும் ஆகவில்லை தான்.. ஆனால் அதற்கான  வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலில் அறியவேண்டுமே..

 

இன்னும் குழந்தைகள் அவளை தொடர்வதை நிறுத்தவில்லை பார்த்தவனுக்கு புன்னகை தான்..

 

“ஆரு.. மகி,  அம்மாக்கு என்ன ரெண்டு பேரும் வாலா?.. எதுக்கு பின்னாலயே போறீங்க… இங்க வாங்க அப்பாகிட்ட…”

 

“ப்பா கேக் பண்ணி கொடுக்க கேக்குறோம் மீனும்மா மாட்டேன்றாங்க…” என்று ஆர்வன் வந்ததும் தந்தையிடம் புகார் வாசிக்க… வேந்தானோ மீனாட்சியை பார்த்தான், அவன் பர்வையை உணர்ந்தவள்..

 

“இன்னைக்கு ஸ்வீட் ஐட்டம்ஸ் ஓவரா சாப்டாங்க ரெண்டு பேரும்.. அதான் அடுத்தவாரம் பண்ணி கொடுக்குறதா சொன்னேன்…”

 

“அம்மா சொல்றது சரிதானடா… நாளைக்கு பண்ணி கொடுப்பாங்க… இப்போவே லேட்டாகிடிச்சு தூங்க வேண்டாமா?.. நாளைக்கு ஸ்கூல் போகணும்…”

 

அவன் மடியில் சென்று அமர்ந்த குழந்தைகள் இருவரும்.. “ப்பா இப்போ செய்றத பாக்க மட்டும் செய்றோமே நாளைக்கு தான் சாப்புடுவோம்… ப்ரோமிஸ்…” என்று இரு கன்னத்திலும் முத்தமிட்டு வினவ.. இனி எங்கே அவன் மறுப்பு தொடர்ந்து இருக்க…

 

மீனாட்சியோ பார்வையை மாற்றவில்லை.. அதில் இன்னும் கண்டிப்பு இருந்தது… விடுமுறை தினமென இஷ்டத்துக்கு இனிப்பு சாப்பிடிருந்தனர் குழந்தைகள்.. அவள் முடிவில் மாற்றம் இருக்கவில்லை… அப்படிதான் இருந்தது அவள் பார்வை…

 

அது வேந்தனுக்கு புரிய, “சிட்டு நானும் இன்னைக்கு மார்னிங் வேறொரு ஸ்பெஷல் ஸ்வீட் சாப்பிட்டதால.. கேக் சாப்பிடல தெரியுமா?.. அந்த ஸ்வீட்ட மறக்க எனக்கும் இப்போ கேக் சாப்பிட்டாகணுமே..” என்றான் கண்களில் குறும்புடன்.. அவன் பேச்சு அவளுக்கா புரியாமல் போகும்… சட்டென்று தோன்றிய வெக்கத்தை மறைக்க கோபம் முகம் பூசிகொண்டாள்..

 

“என்ன ஸ்வீட் ப்பா எனக்கு தரல…”

 

“அம்மாதான் மகி கொடுத்தா… அவகிட்டயே கேளேன்…” என்று  அவளை வசமாய் மாட்டி விட்டான் கேடி வாத்தி..

 

“மா என்ன ஸ்வீட் எனக்கு தரல…” என்று மகி கேட்க பதிலுக்கு ஆர்வனும் “மீனும்மா எனக்கும் தரல…” என்று உதட்டை பிதுக்கினான்…

 

“அது அது… இப்போ இல்லையே முடிஞ்சு போச்சு…” என்றால் திணறளுடன்..

 

“பொய் பொய்.. அதெல்லாம் எப்பவும் முடியவே முடியாது… இப்போ கூட வெச்சிருக்கா.. ஆனா உங்களுக்கு தரமட்டா.. அப்பாக்கு மட்டும் ஸ்பெஷல்..” என்றான் அவள் இதழ்களை பார்த்தவண்ணம்..

 

“அப்படியாம்மா…” குழந்தைகள் இருவரும் அவளை பார்க்க..

 

“இல்லையே.. என் பட்டுங்களுக்கு அம்மா  இப்போவே கேக் பண்ணிக்கொடுக்குறேன் வாங்க..” என்றவள் பேச்சை மாற்றி அவர்கள் கேட்ட விடயத்தையே சொல்ல.. குழந்தைகளும் சந்தோஷத்தில் இதை மறந்து குதூகளித்தனர்…

 

போகும் போது இவனை முறைக்கவும் தவரவில்லை… வேந்தன் மனதை அந்த பார்வை மயிலிரகாய் வருடிச்சென்றது…

 

அதன் பின் சமையலறையே ஒரு கொண்டாட்டம் தான்… சத்தம் இங்க அமர்ந்திருந்தவனை விடவில்லை… கூடவே அந்த கேக் வாசனை.. அவனையும் சமையலறை பக்கம் இருத்து சென்றது…

 

ஜாலம் தொடரும்…

          

                        _ஆஷா சாரா_

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
67
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அந்த விஜய்க்கு அப்படி என்ன கொலவெறி?? ஏன் மீனோட அக்கா மாமாவை எல்லாம் கொலை பண்ணி இருக்கான்?