ஜாலம் 08
வேந்தனின் மின்னல் வேகத்தில் மீனாட்சி கூட மலைத்து தான் போனாள்… இப்படி ஒரு வேகம் அவனிடம் எதிர்பார்க்கவில்லையே.. இதோ இன்றே அவளது பெற்றோரிடமும் பேசிவிட்டான்.. விஜய்யை பார்க்கவும் அழைத்து வந்துவிட்டான்…
வீட்டில் அவன் அடித்து விட்ட பொய்யிலிருந்தே இன்னும் மீள வில்லை.. இதில் விஜயிடம் என்ன சொல்ல காத்திருக்கிறானோ என்ற யோசனையுடனே அமர்ந்திருந்தாள் மீனாட்சி…
________________________________________
சில மணி நேரங்களுக்கு முன்…
மகியின் பரிசை பிரித்தவனுக்கு இனியும் இவர்களை தனியே விடக்கூடாது என்ற எண்ணமே மனதில் உறுதியாக பதிந்து போனது..
மீனாட்சி வரைந்த அவனது படம் தான் அது.. அதில் மகியின் கைவண்ணமும் சேர்ந்திருந்தது… படத்துக்கு கீழே “மிஸ் யூ அப்பா” என்று கிறுக்கி இருந்தாள் குழந்தை..
அவன் உதட்டுக்கு சிவப்பு வர்ணம் தீட்டி.. அவன் ஆடைகளுக்கு அவளுக்கு பிடித்த வர்ணம் என அவன் படத்திடம் அவள் ஏக்கத்தை காட்டி இருந்தாள்.
மகியை அணைத்து முத்தமிட்டவன்.. “தேங்க்ஸ் டா மகிகுட்டி.. அப்பாக்கு உங்க கிப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு…”
“யாரு வரைஞ்சதுப்பா இது..” என்றான் ஆர்வன் அதனை கையில் வாங்கியபடி..
“உன்னோட மீனும்மா தான்…”
“சோ ஸ்வீட் மீனும்மா.. ஆருவயும் இப்படி வரஞ்சி தறீங்களா?…” என்று ஆசையாய் கேட்க..
“சூர் ஆரு.. அம்மா நம்ம நாலுபேரையும் சேர்த்து வரஞ்சி தருவாங்க… அத நம்ம ஹால்ல மாட்டி வெச்சிக்கலாம்… இப்போ நாம உன் மீனும்மா வீட்டுக்கு போவோமா?…” என்றவனது கேள்வி ஆர்வனிடம் இருந்தாலும் பார்வை என்னவோ மீனாட்சியிடம் தான்…
“எதுக்கு?…” என்றாள் மீனாட்சி கேள்வியாக..
“கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண தான்.. நாளைக்கு கல்யாணம்னா சொல்லணும் தானே…”
“நாளைக்கா??…”
“ஒவ்வொண்ணுக்கும் அதிர்ச்சி ஆகிட்டே இருப்பியா நீ?.. நாளைக்கு இல்லாம உன்ன மாதிரி இன்னொரு எட்டு வருஷம் கடத்துவோமா?.. நேரடியாக அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றான் அவளை முறைத்தபடி…
“மீனு சத்தியமா நீ கனவுதான்டி கண்டுட்டு இருக்க.. முழிச்சிக்கோ… இல்லனா இந்த வாத்தி இப்படி எல்லாம் பேசுற ஆளா?… உனக்கு பூரி பைத்தியம் முத்திடிச்சு…”
“இப்படியே கனவு கண்டிட்டு இருந்தினா.. இங்கயே தூங்கி எழும்பி கல்யாணம் பண்ண வேண்டியது தான்.. சீக்கிரம் வா…” என்றவன் குரலில் மீண்டும் உலகுக்கு வந்தாள் மீனாட்சி…
மீனாட்சியின் வீட்டில் அப்படி ஒரு அமைதி.. வேந்தனும் குமரேசணும் அமர்ந்திருக்க, வைதேகி அங்கே கணவருக்கு அருகில் நின்றிருந்தார்..
மீனாட்சி குழந்தைகள் இருவரையும் மேலே விளையாட அழைத்து சென்றவள்… கீழே இறங்கி வர வேந்தன் பேச்சை ஆரம்பித்தான்…
“முதல்ல பெரியவங்க என்ன மன்னிக்கணும்… இப்படி அவசரமா நாளைக்கே கல்யாணம்னு வந்து பேசுறதுக்கு.. ரொம்ப நாளா தேடி அலஞ்சி இப்போதான் என் சிட்டு எனக்கு கிடைச்சிருக்கா… இனியும் அவள விட்டு பிரிஞ்சி என்னால இருக்க முடியாது…”
மீனாட்சிக்கு மயக்கம் வராத குறைதான் “இது உலக நடிப்புடா சாமி…” என்று மனதுக்கு கவுண்டர் கொடுத்துக்கொள்ளவும் மறக்கவில்லை…
“எனக்குன்னு சொல்லிக்கிறதுக்கு சொந்தம் யாரும் இல்ல.. என் மகனையும் உங்க பொண்ணையும் தவிர… ஆசிரமத்துல தான் வளந்தேன்.. இப்போ ஒரு காலேஜ்ல ப்ரோபஸ்ஸரா இருக்கேன்… குடும்பத்தை பாத்துகிற அளவுக்கு வருமானம் போதுமா தான் வருது… உங்க மகள நம்பி எனக்கு கொடுக்கலாம்… உங்க நம்பிக்கையை நூறுவீதம் காப்பாத்துவேன்…
“தம்பி உங்க அவசரம் புரியுது.. ஆனா பொண்ண பெத்தவங்க நாங்க, நாளைக்கேனு நீங்க சொல்லும் போது யோசிக்கணும்ல…”
“கண்டிப்பா.. பட் எட்டு வருஷ காதல் என்னோடது… இடைல ஏதேதோ நடந்துடிச்சி.. இப்போ குழந்தைங்க எதிர்காலத்தை பாக்கணுமில்லையா?… நாள் தள்ளி போனாலும் நாங்க தான கட்டிக்க போறோம்.. அது நாளைக்கா இருந்தா என்ன??..”
மீனாட்சியோ, “புழுகினி வாத்தி.. பிலேட்ட அப்படியே மாத்தி போட்டாச்சு… மூஞ்சில அப்படியே அரிச்சந்திரனுக்கு கொள்ளு பேரன் மாதிரியே ஒரு ரியாக்ஷன்…” என்று அவனுக்கு மனதுக்குள் அர்ச்சனை தான்..
“ஒரு நிமிஷம் தம்பி..” என்று எழுந்த குமரேசன் தன் மனைவியை கண்களால் அழைக்க அவரும் பின்னே சென்றார்..
இப்போது ஹாலில் வேந்தனும் மீனாட்சியும் தான் நின்றிருந்தனர்…
“என்ன மேடம் மனசுகுள்ள எனக்கு ஒரே புகழாரமா இருக்கும் போலயே…”
“என்னா பொய்யி… நீங்க பேசுனதுல ஏதாச்சும் உண்மை இருக்கா?…” என்றாள்..
“நியாயப்படி நீ எனக்கு தேங்க்ஸ் தான்டி சொல்லணும்… உன்ன மாட்டி விடாம நானே லவ் பண்ணதா சொல்லி உன்ன காப்பாத்தி இருக்கேன்..”
“ரொம்ப பெரிய மனசு தான்…” என்றாள் நக்கல் குரலில்…
“இல்லையா பின்ன.. இதே நீ லவ் பண்ணதா சொல்லி இருந்தா.. உன்ன கன்வின்ஸ் பண்ணி அந்த விஜய்க்கு தான் கட்டி வெச்சிருப்பாங்க உன் பேரண்ட்ஸ்.. அப்பறம் எப்படி என்ன நீ தரைல நடக்க விடாம பாத்துப்பியாம்..”
“அத விடவே மாடீங்களா?.. ஏதோ ஆர்வ கோளாறுல எழுதிட்டேன்..”
“அதெல்லாம் மறக்குற வார்த்தைகளா??.. எப்படில்லாம் எழுதி இருந்த.. அதெல்லாம் உண்மை தானா, இல்ல அரசியல்வாதி போல வெறும் வாய் வார்த்தைக்கு பேசுனியானு செக் பண்ணி பாத்துடலாம்னு தான் இந்த கல்யாணமே..
“பேச்சை மாத்தாதீங்க என் அப்பா அம்மாவ என்னவிட உங்களுக்கு ரொம்ப தெரியுமோ?..”
“எந்த பேரண்ட்ஸா இருந்தாலும் தெரியாத பேய விட தெரிஞ்ச பிசாசே மேல்னு தான் யோசிப்பாங்க… இதே நீதான் லவ் பண்ண நான் பண்ணலனு சொன்னா, அப்போ வேணான்னு சொல்லிட்டு இப்போ ஏன் வந்தேன்னு கூட யோசிப்பாங்க… உன் நிலைமைய யூஸ் பண்ணிக்க நினைக்கிறேன்னு தப்பா தான் தோணும்.. பட் இப்போ நானே லவ் பண்ணன்னு சொல்லிட்டேன்ல.. அதுவும் எட்டு வருஷம்.. சோ கொஞ்சம் யோசிப்பாங்க… உன்ன நல்லா பாத்துப்பேன்னு நம்புவாங்க…” என்றான் தோள்களை குலுக்கியபடி…
இதில் இத்தனை இருக்கிறதா?… நாம் ஒரு வழியில் யோசித்தால் அவனோ இன்னொரு அர்த்தம் சொல்கிறானே… இவன் அதிரடியில் மீனாட்சிக்கு ஏதோ சுழலில் மாட்டிக்கொண்ட உணர்வுதான்
“ஆயிரம் பொய்ய சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்னு நீ கேள்வி பட்டதில்லையா?.. அப்படி பாத்தா இன்னும் தொள்ளாயிரம் பொய் ஸ்டாக் இருக்கு… கவலைபடாத நாளைக்குள்ள அதையும் சொல்லி முடிச்சிடலாம்…”
“போர் எ கைண்ட் இன்போர்மேஷன்… உங்க பழமொழியே தப்பு.. கணக்கு வாத்தில அதான் தமிழ் தெரியல… அது ஆயிரம் பேருக்காவது போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணனும்னு தான் முன்னோர்கள் சொல்லி இருகாங்க.. அத நம்ம ஆளுங்க காலப்போக்குல அவங்க ஈஸிக்கு இப்படி மாத்திட்டாங்க…” என்றாள் அவனை வாரிவிட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி…
“அடடே பாரேன், என்ன கல்யாணம் பண்ணி போறன்னதும் உனக்கும் அறிவு எக்கச்சக்கமா பெருகுது… வாழ்த்துக்கள் மிஸஸ் பாரி வேந்தன்…”
இறுதியில் அவன் அவளை விழித்த விதம் அவளுக்குள் ஆயிரம் மத்தாப்பு… எத்தனை நாள் கனவு என்று கடந்திருப்பாள்… இறக்கை இல்லாமல் பறக்கும் உணர்வு தான்… ஆனால் காட்டிக்கொள்ளவில்லை…
“என்ன மேடம் சவுண்ட காணோம்…” என்றவனுக்கு பதிலுக்கு ஏதோ சொல்ல வர, குமரேசணும் வைதேகியும் சிரித்த முகமாய் வெளியே வந்தனர்…
“பொண்ணு கல்யாணம் ரொம்ப நாளா நாங்க எதிர்பாக்குற ஒன்னு அதனால தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா போயிடிச்சு… தம்பி தப்பா நினைக்க வேணாம்… ஏற்கனவே அவ மகி விசயத்துல ரொம்ப பிடிவாதமா இருந்தா.. எங்க அதனால இவ வாழ்க்கை பாலா போய்டுமோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தோம்.. கடவுள் கை விடல…” என்று மனைவியை பார்க்க, வைதேகியோ கண்களை மூடித்திறந்தார்…
குமரேசனோ, “நேத்து வரைக்கும் விஜய் தம்பிக்கே கட்டி குடுத்துடலாம்னு தான் யோசிச்சோம் தம்பி… மகிக்காக தான் அவரும் மீனுவ கட்டிக்க முன் வந்தாரு, ரொம்ப நல்லவரும் கூட.. ஆனா மனசுல ஒரு உறுத்தல்.. எங்க மகிக்காகனு இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கைய தொலச்சிடுவாங்களோன்னு…” என்றவர் பெருமூச்சு விட்டு மீண்டும் தொடந்தார்..
“நீங்க இவ்வளவு பிடிச்சு என் பொண்ண கேக்கும் போது அந்த கடவுளே உங்கள அனுப்பி இருப்பாரோன்னு தான் தோணுது… உங்க பேச்சிலேயே மீனு மேல உங்களுக்கு இருக்குற பாசம் புரியுது… எல்லாம் நல்லதாவே நடக்கும்ற நம்பிக்கைல என் பொண்ண உனக்கே கொடுக்குறேன்ப்பா…”
“ரொம்ப சந்தோசம் மாமா… மாமான்னு கூப்பிடுலாம்ல…”
“தாராளமா மாப்பிள…”
“அப்பாவயும் கவுத்துட்டாரா.. அது எப்படித்தான் இவர பார்த்ததும் எல்லாருக்கும் புடிக்கிதோ?.. சரியான ஆள் மயக்கி… அய்யய்யோ கையும் ஓடல காலும் ஓடலயே… இப்போ நம்ம மச்சான் கூட பக்கத்துல இல்லையே… மகி உன் பூரி உனக்கே உனக்குன்னு கிடைக்க போறாருடி… மூஞ்சில லைட் அடிக்காத மீனு.. அப்பறம் அந்த வாத்திக்கு கொம்பு முளச்சிடும்.. கண்ட்ரோல் கண்ட்ரோல்…”
“என் சிட்டுவ எனக்கே கொடுத்ததுக்கு உங்களுக்கு தேங்க்ஸ் எங்குற ஒரு வார்த்தை போதாது தான் பட் இப்போதைக்கு தேங்க்ஸ வெச்சுக்கோங்க.. உங்க மகள பூப்போல பாத்துக்குவேன்..”
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை… இப்போ மனசு நிறைஞ்சிடிச்சு… நூறு வருஷம் ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க…”
“என்னடா இது நான் இவர லவ் பண்ணுனேனா? இல்ல இவரு நம்மல லவ் பண்ணுனாரா?…” என்ற குழப்பதுக்கே சென்று விட்டாள் மீனாட்சி… அந்த குழப்பதுடனே விஜய்யை பார்க்கவும் அழைத்து வந்திருந்தான்…
__________________________________
“என்ன உன் அண்ணாக்கு டைம் கீப்பப் பண்ணுற பழக்கமே இல்லையா?.. நமக்கு கல்யாண வேல ஆயிரம் பெண்டிங்ல இருக்கு.. பேசாம போயிடுவோமா?…”
“அதோ விஜய் அண்ணா” என்று மீனாட்சி சொல்ல, வேந்தன் நிமிர்ந்து பார்க்க ஆறடி வளர்ந்த ஒருவன் வந்துகொண்டிருந்தான்…
“மீனு எதுக்காக வர சொன்ன?..” என்று அமர்ந்தவன் கண்கள் மீனாட்சியின் அருகில் அமந்திருந்த வேந்தனை கேள்வியாக நோக்கியது..
“பேசலாம் விஜய் உங்ககிட்ட பேச தான வந்திருக்கோம்..” என்க விஜயின் பார்வையோ கேள்வியாக மீனாட்சியிடம் தான் இருந்தது…
“அட இங்க பாருங்க பாஸ்.. நான் பாரி வேந்தன்… முல்லைக்கு மட்டுமில்ல இந்த மீனாட்சிக்கும் தேர் கொடுத்த பாரி… மீனாட்சியோட ப்ரோபஸ்ஸர்… “
“சாரி பாடன்..”
“என்னத்த பாட, நீங்க தான் டூயட் பாட விடமாட்டேங்குறீங்களே…. ஓகே ஜோக்ஸபார்ட், நான் மீனுவோட ஹஸ்பண்ட்.. எட்டு வருசத்துக்கு முன்னவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம்.. யாருக்கும் தெரியாம கூட வாழ்ந்தோம்.. அப்பறம் டூ இயர்ஸ்ல சின்ன மிஸ்ஸன்டர்ஸ்டாண்ட் பிரிஞ்சிட்டோம்.. இப்போ எங்களுக்கு ஆறு வயசுல ஒரு பையன் இருக்கான்… இப்போ மறுபடியும் சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறோம்.. நீங்க புரிஞ்சிக்கணும்…” என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்டான்..
சூடம் ஏந்தி சத்தியம் செய்தாலும் இவன் பொய் பேசுகிறான் என்பதை யாராலும் நம்பவே முடியாது.. அப்படி ஒரு ப்லொவ் அந்த பொய்யில்.. அதிர்ச்சி விஜக்கு மட்டுமில்ல மீனாட்சிக்கும் தான்…
மெல்ல அவன் காதருகில் குனிந்தவள்… “உண்மைய சொல்லுங்க.. பொய் சொல்லுறதுல தான பிஎச்டி முடிச்சிருக்கீங்க.. மேத்ஸ்லனு ஊர ஏமாத்துறீங்களா?…”
“அட என்ன அவசரம் சிட்டு அதான் சார் யோசிக்கிறாருல புரிஞ்சிப்பாரு… அதுக்குள்ள கேளுங்கிற…” என்று மீண்டும் அவளை நேக்காக மாட்டிவிட “அடப்பாவி வாத்தி…” என்ற பார்வைதான் மீனாட்சியிடம்.. அதன் பின் எங்கே அவள் வாய் திறக்க…
எதிரே அமர்ந்திருந்தவனுக்கு இவர்கள் இரகசிய பேச்சும் கிண்டலும்.. ஏதோ பல வருட காதலர்கள் போல தான் தோன்றியது…
“ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் மிஸ்டர் வேந்தன்… மகிக்காக தான் யோசிச்சேன்.. மீனாட்சிக்கு உங்கள தான் பிடிச்சிருக்குனா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல… சீக்கிரமே கல்யாணத்துக்கு கூப்பிடுங்க…” என்றவன் எழ போக..
“உங்க ஆசைய கெடுப்பானேன்… சீக்கிரம் தான, நாளைக்கே பண்ணிக்கிறோம் வந்துடுங்க…” என்றான் சாதாரணமாக..
“ஆர் யூ சீரியஸ்..”
“விஜய் ணா… நாளைக்கு தான் ணா.. வீட்டுக்கு பக்கத்துல உள்ள கோவில்ல சிம்பிளா பண்ண தான் பிளான் பண்ணிருக்கோம்… வந்துடுங்க.. பிரண்ட்ஸ் சேர்க்கில் மட்டும் தான்.. நைட் அம்மாப்பா வருவாங்க முறப்படி சொல்லுவாங்க ணா…” என்றாள் வேந்தன் பேச முன் முந்திக்கொண்டு…
வார்த்தைகள் தான் அவனிடம் நக்கலாக அல்லவா வருகிறது.. விட்டால் பேசியே விஜய்யை ஒரு வழி பண்ணி விடுவான் என்பது தான் தெரியுமே….
விஜய் சென்றதும் தான் தாமதம்.. “பேசாம நீங்க கதை எழுத போய் இருக்கலாம்… எப்படில்லாம் சொல்லுறீங்க… ஆளாளுக்கு ஒவ்வொரு கதை…”
“வேற யாருக்கு சொல்லணும்னு சொல்லு சொல்லிடலாம்…”
“எப்பா சாமி ஆள விடுங்க.. இனி யாருக்காச்சும் கதை சொல்லுறேன்னு கிளம்புனா அவ்வளவு தான்.. ” என்று முறைக்க..
“அதென்ன இந்த பொண்ணுங்க மட்டும் கலயாணம்னு சொன்னதும் பொண்டாட்டி ஆகிடுறாங்க.. சிட்டுக்கு முறைக்கவெல்லாம் வருதே…”
“அதென்ன பேச்சுக்கு பேச்சு சிட்டு சிட்டுனு செல்ல பேர்.. இங்கதான் யாரும் இல்லயே நார்மலாவே பேசலாம்..”
“அதெல்லாம் ஆசைனு வெச்சுக்கோயேன்… கல்யாணம் பண்ணிக்கிட்டா பொண்டாட்டிய செல்லமா சிட்டுனு கூப்பிடணும்னு ரொம்ப நாள் ஆசை.. அதான் நீ என் பொண்டாட்டின்னு ஆகிடிச்சில.. ஆசைய நிறைவேத்திக்கிறேன்…” என்று அவன் கண்சிமிட்ட,
அதன் பின்னரும் மீனாட்சி இந்த உலகில் இருப்பாளா என்ன?.. அவள் தான் அவன் விழி ஆழிக்குள் எப்போதோ மூழ்கி இருந்தாளே…
இன்றைய ஒரு நாளைக்கே அவளை தலையால் தண்ணி குடிக்க வைத்திருந்தான் வேந்தன்….
“ஹெலோ மேடம்… இப்படி சைட் அடிச்சிட்டே இருந்தா, என்ன எப்போ லவ் பண்ண வைப்பீங்கல்லாம்?.. சீக்கிரம் லவ் பண்ண வைங்க, வயசு வேற முப்பதிரெண்டாகிடிச்சு.. நர முடி வர முதல் லவ் வரணும் சொல்லிட்டேன்… இல்ல உங்க பொண்ணு சரியா ஒர்க் பண்ணலன்னு உங்க அப்பாகிட்ட ரிடேர்ன் பண்ணிடுவேன் பாத்துக்க…” என்றவன் எழுந்து செல்ல
“ஐயோ இவர எப்படி தான் சமாளிக்க போறேனோ?.. இந்த பூரிய போய் அமைதினு நெனச்சிட்டேனே.. கடவுளே இவர சமாளிக்கிற திறமைய மட்டும் கொடுத்துடுப்பா…” என்று அவசர வேண்டுதல் வைத்தவள் அவன் பின்னே ஓடினாள்…
ஜாலம் தொடரும்
_ஆஷா சாரா_
என் ஆளு ரொம்ப தான் fast aa porappadi aayo ithukku mela ethuvume solla வரல appadiye vekkam வெக்கமா varuthu 🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பூரி❤️❤️❤️❤️❤️
😁😁😁😁 இன்னும் இருக்கு காத்திருக்கவும் 🙈🙈🙈
அடே கூறி என்னடா இவ்வளவு வேகத்தில் போற இவ்வளவு வேகமா போனா நாங்க எப்படிடா உன்ன பிக்கப் பண்றது 😂😂
Thank u sis ❤❤❤
நாம கூடவே flight ஒன்னு பிடிச்சி போவோம் sis 🤭🤭🤭
Ada paavi.. speechless daaa