Loading

ஜாலம் 02

இரவு தாமதமாக தூங்கினாலும்.. வழமை போல் ஐந்து மணிக்கெல்லாம் வேந்தன் முழிந்துகொண்டான்.. அவன் அருகில் அவனை அணைத்து உறங்கும் உருவத்தின் தூக்கம் கலையாதபடி நெற்றியில் மென் முத்தம் ஒன்றை வைத்தவன், அவனது தினசரி வேலைகளில் மூழ்கினான்..

சிறிது நேர உடற்பயிற்சி, தியானம் சமையல் என நேரம் அதன் சுழலுக்குள் அவனை இழுத்துக்கொண்டது..

ஒருவாறு வேலையை முடித்தவன் குளித்து தயாராகியும் அந்த உருவம் எழுந்தபாடில்லை… திடீரெனெ மூளையில் மின்னல் வெட்ட, வில்லத்தனமான சிரிப்புடன் மெத்தையை நெருங்கினான்.. விளைவு அருகில் இருந்த நீர் இப்போது அந்த உருவத்தை குளிப்பாட்டி இருந்தது…

“டாம்ம்ம்ம்ம்…”  என்ற காட்டு கத்தலுடன் எழுந்த அந்த உருவமோ.. தலையில் வழிந்த நீரை தன் மென் விரல்களால் துடைத்தபடி இவனை சரமாரியாக முறைத்துக்கொண்டிருந்தது…

“முறைச்சது போதும் எழுந்து ரெடி ஆகுங்க ஜெர்ரி டார்லிங்… சீக்கிரம் போக வேண்டாமா?..” என்றான் சிரிப்புடன்..

“வேண்டாம் போகவேண்டாம்.. தூக்கம் தூக்கமா வருது டாம்.. நைட் எங்க தூங்க விட்ட நீ.. சோ டுடே உன் ஜெர்ரிக்கு லீவ்..” என்று அரை தூக்கத்துடன் அவனை அணைத்துக்கொண்டு அவன் கழுத்தில் மீதி தூக்கத்தை தொடர, அவனுக்கோ மனது உருகத்தான் செய்தது.. ஆனால் அதனை காட்டிக்கொண்டால் அந்த கழுதை இன்னும் அடம்பிடிக்கும் என்று தான் அவனுக்கு தெரியுமே…

“நோ நோ..  நீ என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்.. இன்னைக்கு நோ எக்ஸ்கியூஸ்…” என்று அவனது ஜெர்ரியை கைகளில் அள்ளி கொண்டவன், குளியலறையில் விட்டு கதவை அடைக்கும் முன்னர், “உனக்கு பிப்டீன் மினிட்ஸ் தான் டைம்.. நீ வெளிய வரல.. நான் உள்ள வந்துடுவேன்.. அப்பறம் என்ன நடக்கும்னு தான் உனக்கே தெரியுமே..” என்றான் கண் சிமிட்டலுடன்…

“ஐ ஹெட் யூ..” என்ற கோபமான வார்த்தையுடன் கதவு மூடப்பட்டது…

“பட் ஐ ஆல்வேய்ஸ் லவ் யூ மை டியர் ஜெர்ரி..” என்று சிரித்தபடி சத்தமாக சொன்னவன், அவனது ஜெர்ரி தயாராகி வருவதற்குள் சமைத்த உணவை மேசையில் அடுக்கியவன் இருவருக்கும் மதிய உணவை பெட்டியில் அடைத்து தனி தனியாக எழுத்துக்கொண்டு சாப்பாடு மேசையில் அமரவும் அவனது டார்லிங் தயாராகி வரவும் சரியாக இருந்தது…

திரும்பி  பார்த்தவன் கண்களில், ஏதோ குறைவது போல் ஒரு தோற்றம்.. எழுந்து  ஆடையில் சிறிது மாற்றம் செய்தவன்.. தள்ளி நின்று பார்க்க இப்போது எல்லாம் சரியாக இருப்பதாய் தோன்றியது..

“இப்போ பேர்பெக்ட்.. வர வர உன் அழகு கூட்டிட்டே போகுதே என்ன ரகசியம்…” என்று அந்த உருவத்தின் கன்னத்தில் ஆசையாய் முத்தம் ஒன்று பதிக்க..

இருந்த கோபத்துக்கு கன்னத்தை துடைத்தபடி  “நான் கோபமா இருக்கேன் யாரும் என்ன டச் பண்ண வேணாம்..” என்று முடிக்கவில்லை மீண்டும் அடுத்த கன்னத்தில் மீண்டுமொரு முத்தத்தை வைக்க, குட்டி போரே உருவானது..

ஏட்டிக்கு போட்டியாய் சண்டையிட்டு ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தவர்கள், செல்ல வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தும் விட்டனர்..

ஆனால் கதவை திறக்க முடியவில்லை என்றதும், பார்வை வேந்தனை துளைக்க..

“தினமும் மண்டே ஆனா இதே கோபம்.. உன் டாம் பாவமில்லையா?.. இப்படி ஒரு கிஸ் கூட கொடுக்காம போன நான் எப்படி ஈவினிங் வர உன்ன பிரிஞ்சி இருப்பேன் சொல்லு..” என்று ஏற்ற இரக்கதோடு வினவ.. அவன் நீல நிற காந்தவிழிகள் அதற்கேற்ற போல சுருங்கி விரிந்தது…

“அப்போனா நைட் பைக் ரைட் கூட்டிட்டு போவியா??..” என்று கண்ணில் எதிர்பார்ப்புடன் வினவ, அவன் மறுப்பானா என்ன?.. ஆமோதிப்பாய் வேந்தன் தலை மேலும் கீழும் அசைந்தது.

அது ஒன்று போதுமே.. அத்தனை நேரம் இருந்த கோபம் மறந்து அவனது ஜெர்ரி சிரித்துவிட..

விழுந்த கன்னகுழியில் எப்போதும் போல் ஆசையாய் ஒரு முத்தம் வைத்த வேந்தன்.. பதில் முத்தத்தையும் பெற்றுக்கொண்டு அவனது கல்லூரியை நோக்கி விரைந்தான்…

___________________________________________

மீனாட்சி இருக்கும் அவசரத்துக்கு பறந்து தான் போக நினைத்தாலும், இருக்கும் வாகன நெருசலில் அதெல்லாம் எங்கே சாத்தியமாகும்…

இன்றும் வழமை போல் எழ தாமதம் தான் அவளுக்கு.. அன்னையில்  வாயில் எழுந்ததுமே அர்ச்சனை வாங்கியாகியிற்று..  அடித்துப்பிடித்து தயாராகி, மகளை பாடசாலையில் விட்டு.. தான் வேலை செய்யும் இடத்துக்கு தான் இப்போது சென்று கொண்டிருக்கிறாள் மீனாட்சி..

“ச்சே இன்னைக்கும் லேட்.. இன்னைக்கு செத்தேன்.. அவன் வேற வைச்சு செய்வானே.. எனக்கு ரெண்டு றெக்கைய தந்தா தான் என்னவாம்.. டு பேட் பிள்ளையாரப்பா.. நீ வர வர என் விசயத்துல கொஞ்சம் ஓவர் டியூட்டி பாக்குற போலவே தோணுது..”  என்று பேசியபடி அங்கே வாகன நிறுத்தத்தில் நின்றிருந்தாள் மீனாட்சி

அருகில் நின்றவரது பார்வை அவளை ஒரு மாதிரியாக துளைக்க, அதன் பிறகே மனதுக்குள் பேசுவதாக நினைத்து சத்தமாக பேசி இருக்கிறோம் என்பதே அவளுக்கு புரிந்தது..

அந்த பெரியவரை பார்த்து “ஈஈஈ” என்று இழித்து வைக்க.. அவரோ சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டார்..

அவர் திரும்பிய வேகமே சொன்னது நிச்சயம் இவளை பைத்தியம் என்று எண்ணியிருக்க கூடும் என்பது…

“விடு விடு நமக்கென்ன புதுசா..” என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் சிறிது நேரத்தில் அவள் வேலை செய்யும் இடத்துக்கு வந்திருந்தாள்..

வாகனத்தை நிறுத்தியவள் நிமிர்ந்து பெயர் பலகையை பார்க்க அதிலோ, “ஸ்மைல் கிரீமி ஹெவன்..” என்ற வாசகமும் கீழே “டேஸ்ட் அவர் கேக் வித் ஸ்மைல்.. இன் ஸ்மைல்..” என்று கவரும் விதமாக எழுதபட்டிருந்தது…

அது அணிச்சல்(கேக்) தயாரிக்கும் சிறியளவிலான பேக்கரி.. மீனாட்சி மற்றும் அவள் நண்பர்கள் மூவர் மூலம்  ஆரம்பிக்கப்பட்டது..

மீனாட்சி, கௌரவ், விக்ரம் மற்றும் ஸ்ருதி நால்வரும் ஹோட்டல் மெனேஜ்மென்ட் கற்கை நெறியில் பயின்றவர்கள்.. படிப்பு முடிய வெவ்வேறு இடங்களில் வேலை செய்தாலும் அவர்களது கனவுக்கான ஓட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட அவர்களது கனவு, இந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கென்று தனி அங்கீகாரத்தை கொடுத்திருந்தது..

அந்த சுற்று வட்டாரத்தில் “ஸ்மைல் கிரீமி ஹெவன்..” என்ற பெயரை அறியாதவர்கள் இல்லை என்ற அளவுக்கு முன்னேறி இருக்கிறது எனலாம்..

அவர்கள் தயாரிப்பின் தரமும் சுவையும் தான் அவர்களுக்கு இந்த வளர்ச்சியை கொடுத்தது என்பதில் மிகை இல்லை…  கடந்த இரண்டு மாதங்களாக குளம்பி(காபீ) வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு ஓரளவுக்கு விற்பனையாகிறது..

உள்ளே  அவர்களது அறைக்குள் நுழைந்தவளை “அடடே என்னம்மா மீனாட்சி இவ்வளவு ஏர்லியா வந்துடீங்க?..  உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்த்தேனே..” என்ற அவள் நண்பன் விக்ரமின் குரலே வரவேற்றது…

அவன் முதுகில் தன் பையால் அடியொன்று போட்டவள்.. “உதபடுவ ராஸ்கல்.. உன்னால தான் டா எல்லாம்..  நேத்து நீ வாய் வெக்காம இருந்திருந்தா இன்னைக்கு நான் நேரத்துக்கு வந்திருப்பேன்..”

“என்னங்கடா இது.. இவங்க கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு லேட்டா வருவாங்களாம்.. அதுக்கு நான் காரணமாம் நல்ல கதையா இருக்கே…”

“சரி இப்போ நான் தான் காரணம் போதுமா?…” என்றாள் கோபம் போல்..

“ஹெலோ மேடம் நீங்க கோபமா பேசுனா  நாங்க டீல்ல மறந்துடுவோம்னு நினைப்போ?… எடுங்க பைவ் ஹன்ரட்…”

“ஈஈஈ… அதெல்லாமா நம்புற நீ.. நட்புக்குள்ள கொடுக்கல் வாங்கல் கூடாதுடா விக்கிறோம்…”

“அம்மா தாயே நீ காச கூட கொடுக்க வேணா.. என் பேர கொல பண்ணாம கூப்பிடு அதுவே போதும்…” என்று கும்பிடு போட மீனு சிரித்தே விட்டாள்..

“ஹாஹா.. அதெல்லாம் ஒரு அன்புடா மகனே.. உன்ன யாரு விக்கிறோம் வாங்குறோம்னு பேர் வைக்க சொன்னா?…”

“அடியேய் வந்ததே லேட்டு இதுல இவன் கூட நின்னு அரட்டை அடிச்சிட்டு இருக்கியா??… உன்னோட ஸ்பெஷல் காபீ கேக் நீ தான் பண்ணனும்.. கஸ்டமர்ஸ் வந்துட்டே இருக்காங்க.. வாடி..” என்று அவள் நண்பி ஸ்ருதி அங்கு வர..

மீனாட்சியோ, “ஆமால.. இந்த அரைடிக்கட் கூட பேசி டைம் வேஸ்ட்.. நீ வா சுருதி…” என்று வடிவேலு பாணியில் நண்பியின் கையை பிடித்து இழுத்துச்சென்றாள்….

அதன் பின் வேலை அவளை இழுத்துக்கொண்டது.. கேக் செய்வதில் அலாதி இன்பம் அவளுக்கு.. அப்படி பார்த்து பார்த்து காதலோடு தான் செய்வாள்..

வேலைக்கென்று ஆட்கள் இருந்தாலும், கேக் தயாரிப்பு வேலை மட்டும் இவர்கள் நால்வரிடம் மட்டும் தான்… அதிலும் பெரும்பாலும் மீனாட்சி தான்…

அவள் கைப்பக்குவம் கடவுளின் வரம் என்று கூட சொல்லலாம்.. அதிலும் அவளுக்கே சிறப்பான காபீ கேக் செய்வது அவள் மட்டும் தான்.. அதன் சுவையில் ஈர்க்கப்பட்டு இங்கு வருபவர்களே அதிகம்…

“மீனு.. டைம் த்ரீ தேர்ட்டி ஆகிடிச்சுடி..” என்ற ஸ்ருதியின் குரலில் வேலை செய்துகொண்டிருந்தவளின் கரம் சிறிது வேலையை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தது..

“என்னடி ரியாக்ஷன காணோம்..”

“என்ன ரியாக்ஷன் வேணும் இப்போ உனக்கு..” என்றாள் சாதாரணமாக

“இல்ல உன் ஆளு வர்ற நேரமாச்சே.. அதான் கேட்டேன்.. இன்னைக்காச்சும் அவர போய் பாக்கலாம்ல… பாவம் ஒரு வருசமா உன்ன பாக்கணும்னு கேட்டுட்டே இருக்காரு.. போய் பார்த்தா தான் என்னவாம்…”

“உத வாங்க போற நீ இப்போ..  ஆள் அது இதுனு லூசு போல உளராம போய் வேலைய பாருடி.. இத அவர் பொண்டாட்டி கேட்டா உன்ன தூக்கிப்போட்டு மிதிச்சிட போறா…”

“பொண்டாட்டியா??..” என்றாள் ஸ்ருதி சற்று அதிர்ச்சியுடன்…

“ஆமா… வாய்ப்பிருக்குல…” என்க

ஸ்ருதியோ,  “இருக்கு தான் பட் இல்லாமலும் இருக்கலாம்ல.. முயற்சி செஞ்சி பாக்குறதுல தப்பு இல்லையே மீனு..”

“சில விஷயம் தூரத்துல இருந்து, நமக்கு மனசுக்கு நெருக்கமா இருக்குறது தான் பெட்டர் ஸ்ருதி… இதே நம்ம நெருங்கி போய் அது நமக்கு இல்லைனு நூறு வீதம் தெரிஞ்சிட்டா ரொம்பவே மனச உடஞ்சிடும்..” என்றவள் சிறு மௌனத்துக்கு பின்

“கனவுகள் கனவுகளாவே இருந்துட்டுட்டா யாரும் எந்த கஷ்டமும் இல்லயே… எனக்கு யாரும் வேணா விட்டுடு என்ன…” என்று தன் மனதில் இருப்பதை நண்பிக்கு எடுத்துச்சொல்ல..

அவளுக்கும் புரியத்தான் செய்தது… ஆனால் அப்படியே விட முடியாதே.. மீனுவின் காதலின் ஆழம் அவள் அறியாததா?…

“இப்போ என்ன இப்படியே இருந்துட்டா உனக்கு தியாகி பட்டமா கொடுக்க போறாங்க?..”

“நான் ஏன் இப்படியே இருக்க போறேன்.. சீக்கிரமே கல்யாணம் பண்ணிப்பேன்.. அதான் வீட்ல மாப்பிள பாக்க ஓகே சொல்லிட்டேனே..” என்று கண் சிமிட்டினாள்…

“அப்படியே அறஞ்சேன்னா தெரியும்.. பிடிச்சவன கட்டிக்காம வேற எவனயாச்சும் கட்டிக்கணும்னு ரெடி ஆனேன்னு வெச்சிக்கோ என் கையாள தான்டி உனக்கு சாவு… இன்னைக்கு அண்ணாகிட்ட நான் சொல்லிடுவேன்.. நீ உள்ள தான் இருக்கேன்னு..” என்று அங்கிருந்து சென்ற ஸ்ருதி, இவள் எத்தனை அழைத்தும் திரும்பி பார்க்கவே இல்லை….

சரியாக வேந்தனின் வண்டி “ஸ்மைல் கிரீமி ஹெவன்..” உள்ளே நுழைந்தது… கடந்த ஒரு வருடமாக தினமும் அவன் இங்கே வருவது வழக்கம்..

உள்ளே சென்றவன் அவனுக்கு பிடித்த இடத்தில் சென்று அமர, சரியாக பத்து நிமிடங்களில் விக்ரம் அவனுக்கான காபீ கேக்கினை கொண்டு வந்தான்..

“குட் ஈவினிங் சார்.. ஹேவ் யுவர் டெசேர்ட் வித் ஸ்மைல்.. இன் ஸ்மைல்…” என்றபடி வேந்தனின் மேசையில் வைத்திருந்தான்…

“குட் ஈவினிங் மிஸ்டர் விக்ரம்… இன்னைக்காச்சும் உங்க பிரண்ட்ட பாக்கலாமா?… ஏன் அவங்க என்ன பார்க்க விரும்ப மாட்டேங்குறாங்க?… நான் ரசிச்சு சாப்பிடுற கேக்க செஞ்சவங்கள அப்ரிசியேட் பண்ணனும்கிறது என்னோட ஆச.. ஏன் என்ன அவொய்ட் பண்ணுறாங்க?…”

“அவொய்ட் எல்லாம் இல்ல சார்… அவங்க கொஞ்சம் பிசி… நீங்க வர்ற டைம் இங்க இருக்கிறது இல்ல அவ்வளவு தான்…” என்க வேந்தனின் தலையோ இடம் வலமாக ஆடியது..

“ஐ எம் நாட் எ கிட் மிஸ்டர் விக்ரம்.. ஒரு வருசமா எதேர்ச்சியா நடக்குதுன்னு சொன்னா சின்ன பிள்ளையும் நம்பாது.. ஓகே அவங்களுக்கு என்ன பார்க்க விருப்பம் இல்லனா எனக்கும் அவங்கள பார்க்க வேணாம்… இந்த கேக் எடுத்துட்டு போங்க.. வேற பிளேவர் கொண்டு வாங்க…” என்றான் தீர்க்கமான குரலில்…

இத்தனை நாள் அவனை ஒருத்தி வேண்டும் என்று தவிர்ப்பது அவனுக்கு ஏதோ போல் தான் இருந்தது… பாராட்ட  வேண்டி தான் அழைத்தும்.. அதனை உதாசீனப்படுத்தும் அவள் மீது கோபம் இருக்கத்தான் செய்தது…

இது வேந்தனின் குணமே அல்ல.. எல்லோரையும் ஒரு சிரிப்பில் கடந்து விடுபவன்..  ஏனோ இதுவரை காணாத இவள் மீது மட்டும் அப்படி ஒரு கோபம் அவனுக்கு…

விக்ரமின் முகத்தில் ஈ ஆடவில்லை.. இந்த ஒரு வருடமாக அவன் ஆசையாக உண்ணும் கேக் வேண்டாம் என்கிறானே என்று கையை பிசைந்து கொண்டு நிற்க..

மீண்டும் வேந்தனே, “எடுத்துட்டு போங்க  மிஸ்டர் விக்ரம்.. வேறது கொண்டு வாங்க..” என்றவனின் குரலில் இருந்த தீவிரம் விக்ரமை எடுத்து செல்ல வைத்திருந்தது….

சரியாக பத்து நிமிடங்களில் வேந்தன் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நடந்தேறியது… மீனாட்சியோ அவனருகில் பேச்சற்று அவன் பார்வை சிறையில் நின்றிருந்தாள்…

                 

ஜாலம் தொடரும்……

                      ..ஆஷா சாரா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. வேந்தன் மீனாட்சி பாக்க வந்திருகான் அப்ப அந்த ஜெர்ரி யாரு? மீனாட்சிக்கும் வேந்தனுக்கும் என்ன??

      1. Author

        Thank you sis 😍😍
        வரபோற udsla தெரியும் டா