Loading

ஓம் நமசிவாய. 🙏

 

 

 ஜன்னல் நிலவு ..01

 

 

அழகிய மாலை நேரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மிகவும் அருமையாக ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது..

 

 

 

 

 இன்று மாலை வேலை பூஜை அந்த ஊரில் இயற்கையை கொண்டாடும் குடும்பம் என அழைக்கப்படும் பத்மாவதி குடும்பம் தான் இந்த பூஜைக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு செய்கிறார்கள்..

 

 

 

 

 பத்மாவதி-க்கு மீனாட்சி அம்மன் மிகவும் இஷ்ட தெய்வம்..

 

 

 

 அந்த தாயிடம் தன் மாபெரும் குறையான 30 வயது ஆகியும் மகனுக்கு திருமணத்திற்கு பார்க்கும் எந்த பெண்ணும் இன்னும் சரி வரவில்லை.. அதை இந்த முறையாவது சரி செய்து வைக்கும்படி வேண்டி அம்மனை தொல்லை செய்து கொண்டிருந்தார்..

 

 

 தாயின் அழைப்புக்கு செவி சாய்த்து மகனும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஆறு மணியளவில் கோவிலுக்கு வந்து சேர்ந்தான்..

 

 

 

 ஆறடிக்கு நெருங்கிய உயரத்தில் பட்டு வேட்டி சட்டையில் மீசையை முறுக்கிக் கொண்டு வேக எட்டு வைத்து வந்து தாயின் அருகே அமர்ந்து கொண்டான்.. 

 

 

சற்று நேரத்தில் “ பத்மா அம்மா யார் பேருக்கு அர்ச்சனை..” என்றார் ஐயர்..

 

 

“ அதோ அந்த ஈசன் சுந்தரேஸ்வரன். அவர் பெயர் தானே சாமி என் மகனுக்கும் சுந்தரேஸ்வரன். மேஷ ராசி, பரணி நட்சத்திரம். அப்படியே. சீனிவாசன் கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம்.. ” என்று கூறி அவர் வாய் மூடும் முன்

 

 

“ பத்மாவதி கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம்.. எங்க அம்மா பேருக்கும் சேர்த்து பண்ணிடுங்க ஐயா.. ” என்று கூறி ஈஸ்வர் பணத்தை தட்டில் வைக்கவும் ஐயர் சந்தோசமாக மந்திரம் ஓத ஆரம்பித்தார்.. 

 

 

“ அம்மா.. தாயே மீனாட்சி. வர்ற தைக்குள்ள என் மகன் திருமணத்துக்கு அவனுக்காக பொறந்த பொண்ணு எந்த திசையில் இருக்குன்னு வழி காட்டு.. என் மகனுக்கு நல்லபடியா திருமணம் நடந்தால் நான் பாதயாத்திரை வருவேன்.. என் மகனுக்கு அலகு குத்தி காவடி எடுக்குறேன்.. அத்தோடு சேர்த்து இந்த சீனி பயலுக்கும் மொட்டை எடுக்கிறேன்.. எங்களுக்கு நல்ல வழி காட்டு.. ” என்று வேண்டி மீனாட்சி தாயை ஒரு வழி பண்ணிவிட்டு சிறப்பு பூஜைகள் முடித்து பிரசாதத்தை வாங்கிகொண்டு மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்..

 

 

 

 தாய்க்கு முன்பு மட்டும் சுந்தரேஸ்வரன் என்றும் குழந்தைதான்..

 

 

 

 எப்பொழுதும் வாடாத புன்னகையோடு நண்பனுடனும் தாயுடனும் சிரித்து பேசி விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பான்..

 

 

 

 

 அதுவே தொழில், மற்றும் எதிரி என்று வரும்பொழுது அவனது முகம் மிகவும் வித்தியாசமாக மாறிவிடும்.. சிரிப்பு இருந்ததற்கான தடயமே இருக்காது..

 

 

 

 

 

மூவரும் பேசி சிரித்துக் கொண்டே அவர்களது காரில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..

 

 

 

“ அம்மா இங்க பக்கத்துல இருக்கிற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அது என்ன பாதையாத்திரை வருவேன் அப்பிடின்னு ஒரு வேண்டுதல். இந்த தடியனுக்கு கல்யாணம் நடப்பதற்கு அவனுக்கு அலகு குத்தி காவடி எடுப்பது சரி.. அது என்ன சேர்த்து எனக்கு மொட்டை எடுக்கிறேன் என்ற வேண்டுதல். என்ன டா நடக்குது?. நான் மொட்டை போட்டால் யாருடா எனக்கு பொண்ணு தருவா?. இந்த 90’ஸ் கிட்ஸ் பாவம் உங்களை சும்மா விடாது சொல்லிட்டேன்.. நல்ல அம்மா, நல்ல பிள்ளை, அருமையா பண்ணுறீங்கடா.. போங்க நான் கோவமா போறேன்.. ” என்று அழுது விடுவது போல் பேசிவிட்டு சென்றான் சீனிவாசன்..

 

 

 

 

“ அட போடா பொசகெட்ட பயலே.. இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவான்..” என்று சீனிவாசனை சொல்லிவிட்டு மகனிடம் திரும்பினார் பத்மா..

 

 

 

“ அப்புறம் எல்லாம் ரெடி தானே மகனே?..”

 

 

“ திருச்செந்தூர் போறதுக்கு எல்லாமே ரெடி பத்து குட்டி.. சீனி வந்தால் போகவேண்டியதுதான்..” என்று கூறி தாயின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனது அறைக்கு சென்றான் ஈஸ்வர்..

 

 

 

 மீண்டும் ஒருமுறை குளித்து தன்னை சுத்தப்படுத்திவிட்டு பயணத்திற்கு ஏற்ற உடையை மாற்றிக் கொண்டு தயாராகி பெட்டியுடன் கீழே வந்தான்..

 

 

 

 அப்பொழுது சரியாக சீனிவாசனும் அவனது கையில் ஒரு பெட்டியுடன் வீட்டிற்குள் வந்தான்..

 

 

 

“ டேய் மகனே..! யாரோ ஒரு ரோஷக்காரன் இனி இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போனானே அப்படி உனக்கு யாரையும் தெரியுமா?… ”

 

“ அடடே இருந்தாலும் இந்த சீனியை கட்டெறும்பு இப்படி குறி வச்சு தாக்க கூடாது.. ” என்றான் குறும்பு சிரிப்போடு ஈஸ்வர்..

 

 

“அம்மா பாத்தீங்களா இந்த தடியன் உங்களை கட்டெறும்புன்னு சொல்லிட்டான்.. ” என்றான்..

 

 

“ அட விடு சீனி அவனாவது கட்டெறும்பு சொன்னான்.. அன்னைக்கு நீ டெவில் சொன்னியே அதுவே நான் மன்னித்துவிட்டேன் இதை மன்னிக்க மாட்டேனா?. ” என்றார்..

 

 

 

“ அம்மா இருந்தாலும் இந்த தடியனுக்கு நீங்க இவ்வளவு சப்போர்ட் பண்ண கூடாது.. திரும்பி வரும்போது கையோட உங்களுக்கு ஒரு மருமகளை கூட்டிட்டு வந்து குடுமி பிடி சண்டை பிடிக்க வைக்க போறான் பாருங்க.. என்னை காப்பாத்துன்னு நீங்க என்கிட்ட வந்தாலும் நான் திரும்பியும் பார்க்க மாட்டேன்.. எப்பவும் இந்த அடியேன் உதவி உங்களுக்கு தேவை..” என்றான்..

 

 

 

 சீனி எந்த நேரத்தில் அப்படி சொன்னானோ இவ்வளவு பாசமாக இருக்கும் தாயும் மகனும் நிரந்தரமாக பிரிய வேண்டிய காலம் வரும் என்று இருவரும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை..

 

 

 

“ அட போடா.. எனக்கு ஈஸ்வரன் இருக்கான்டா எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.. டைம் ரொம்ப ஆயிடுச்சு விளையாட்டை விட்டுட்டு பத்திரமா போயிட்டு வாங்க. பாதுகாப்பா மெதுவா கார் ஓட்டு மகனே..” என்று கூறி இருவரையும் பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தார் பத்மாவதி..

 

 

 

 

 ஈஸ்வரனும் சீனிவாசனும் அவர்களுடன் காலேஜில் படித்த குமார் என்னும் நண்பனின் திருமணத்திற்கு தான் திருச்செந்தூர் செல்கிறார்கள்..

 

 

 

 இளையராஜாவின் இசையில் எஸ் பி பி யின் காந்த குரலில் பாடல் அந்த காரை நிரப்பி பயணத்தின் அலுப்பு தெரியாமல் வைத்திருந்தது அவர்களை..

 

 

 

 

 ஒரு வழியாக அவர்கள் திருச்செந்தூர் வந்து சேர்ந்தார்கள்..

 

 

 

 இவர்களை பார்த்த குமாரின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்..

 

 

 

 என்னதான் காலேஜில் ஒன்றாக படித்தாலும் ஈஸ்வர் அவர்களை விட பல மடங்கு உயர்ந்தவன் பணம் அழகு படிப்பு திறமை என அனைத்திலும் உயர்ந்த அவன் தூய நட்பு என்று வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களுக்காக கீழே இறங்கி வருவான்..

 

 

 

 

ஈஸ்வர் வருவானோ எனும் சந்தேகத்தில் தான் திருமணத்திற்கு குமார் அழைப்பு விடுத்தான். ஆனால் நட்பை மதித்து வந்து சேர்ந்து விட்டான்..

 

 

 

ஈஸ்வர் போகும் வரை அவனுக்கு எந்த ஒரு வசதி குறைவும் இல்லாமல் நல்லபடியாக பார்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அவன் தலையாய கடமை.. 

 

 

 

 

 இவர்களுடன் மற்ற நண்பர்களும் சேர்ந்து இரவு ட்ரிங்க்ஸ் பார்ட்டி வைத்து சந்தோஷமாக பழைய நினைவுகளை பற்றி பேசி கொண்டாடினார்கள்..

 

 

 

அந்த ஊரில் பெரிய கல்யாண மண்டபங்களில் பெரும்பாலும் திருமணம் செய்ய மாட்டார்கள்.. அவர்கள் வீட்டின் முன் பந்தல் போட்டு அனைவரும் ஒன்று கூடி வேலைகளை உறவுகள் எடுத்துக் செய்து அன்பாக பார்த்துக் கொள்வார்கள்..

 

 

 அப்படித்தான் வந்திருப்பவர்களை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.. அவர்களும் இரவு உணவை முடித்துக் கொண்டு அவனுக்கென்று கொடுத்து அறையில் சென்று அடைந்து கொண்டான் ஈஸ்வர்..

 

 

 

 

 

 அன்று முழு பௌர்ணமி நாள் வானில் நிலா மகள் உலா வந்து கொண்டிருந்தாள்.. அந்த பௌர்ணமி நிலவை ரசித்துக் கொண்டு அவன் அறை ஜன்னலோரம் வந்து அமர்ந்து கொண்டான்..

 

 

 

 கைபேசியில் தாய்க்கு அழைப்பு விடுத்து பாதுகாப்பாக வந்து சேர்ந்ததை கூறி வைத்துவிட்டு லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து பிசினஸ் சம்மந்தமான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்..

 

 

 

 

 அப்போது அறைக்குள் வந்த சீனி அவன் வேளையில் உட்கார்ந்து இருக்கும் போது தொல்லை செய்தால் கோபம் வரும் என்பதை அறிந்து அவன் சென்று படுத்து உறங்கி விட்டான்…

 

 

 

 

 

 ஒரு மணி நேரம் அவனது வேலைகளை பார்த்துவிட்டு இனி ஓய்வு வேண்டும் என்பதால் அந்த லேப்டாப்பை கட்டிலில் வைத்து விட்டு நிலா வெளிச்சத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..

 

 

 

 அப்பொழுது அவன் காதில் மெல்லிய அழுகை ஒலி கேட்டது..

 

 

 

 

 சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தான் அங்கு நிலவுக்கு ஒத்த 

 பேரழகை கொண்ட பெண் நிலவு சோக சித்திரமாக கன்னத்தில் கை வைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.. 

 

 

 

 சாதாரணமாக பெண்கள் அழுவதை பார்த்தால் அவனுக்கு கோவம் வரும்..

 

 

 

கோழை என்று மனதில் திட்டி விட்டு கடந்து செல்வான்..

 

 

 

 ஆனால் அவள் அழும்போது அவன் மனது பிசைந்தது சொல்ல முடியாத ஒரு உணர்வு அவனை தாக்கியது..

 

 

 

 அவளுக்கு மலையளவு பிரச்சனை என்றாலும் அதை தன் தோளில் சுமந்து அவள் கண்ணீரை துடைக்க வேண்டும் என்னும் உத்வேகத்தில் அறையை விட்டு வெளியே வந்தான்..

 

 

 

அவள் கண்ணீர் அவன் கண்ணை மறைத்திருந்தது போல் அவன் இருக்கும் இடம் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமல் நடு இரவு ஒரு பெண்ணின் அறையை நோக்கி செல்ல துணிந்து விட்டான்..

 

 

 

 அவள் அறையை திறந்து கொண்டு உள்ளே சென்று அவள் கையை பிடித்து எழுந்து நிக்க வைத்து கண்ணீரை துடைத்து இறுக்கி அணைத்து கொண்டான் ஈஸ்வர்..

 

 

 

 

அவளும் இன்று நடந்த பிரச்சினையால் கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்தவள் அவன் யார் என்ன என்று உணர்ந்து கொள்ளாமல் அவன் அணைப்பு ஆறுதலாக இருக்கவும் அனைத்தையும் மறந்து அடங்கி நின்றாள் பெண்..

 

 

 அப்பொழுது ஏதோ சத்தம் கேட்டதே அவள் ஏதும் தவறாக முடிவு எடுத்து விட்டாளோ என்று பயந்து அந்த வீட்டு ஆண்கள் மூவரும் வந்து அவள் அறையில் லைட் போட்டு பார்க்கவும் அழகிய ஓவியமாக இருவரும் அணைத்து கொண்டு கண்மூடி நின்றார்கள்.. 

 

 

 

 

 ஈஸ்வரின் தோற்றமும் அழகும் அவர்களை சத்தம் போடாமல் அந்த இடத்திலேயே வேரூன்றி நிற்க வைத்தது..

 

 

 

 

 மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்..

 

 

 

 

 மூவர் தங்களை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிர்க்கிறார்கள் என்பதையும் உணராமல் அவர்கள் இருவரும் பல காலம் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்தது போல் அணைப்பு இன்னும் இறுகி கொண்டே போனதே தவிர இருவரும் சூழ்நிலை உணர்ந்து பிரிந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை போல்..

 

 

 

சீனி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் பொழுது அவன் கைபேசி அழைப்பு வந்தது..

 

 

 

‘ யார்ரா இந்த நேரத்துல..’ என்று நினைத்துக் கொண்டு கைபேசியை எடுக்கும் போது குமார் எண் அழைப்பில் வந்தது..

 

 

 

 கைபேசியை காதில் வைக்கவும் “ சீனி எல்லா வசதியும் சரியாக இருக்குதானே.. ஈஸ்வர் போன் எடுக்கவே இல்ல. இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்டானா?..” என்று குமார் கேட்கவும் தான் கண்ணை திறந்து அறையை சுற்றி பார்த்தான்.. அவனை அறையில் எங்கும் காணவில்லை.. ஈஸ்வரின் முழுப் பொறுப்பும் அவனது என்பதால் எங்கே சென்றான் எனும் பதட்டத்தில் “ வசதி எல்லாம் சரியா இருக்குடா.. அந்த தடியனை தான் அறையில் காணவில்லை.. வெளியே எங்கேயும் போயிட்டானோ தெரியல நான் பார்த்துட்டு உனக்கு கூப்பிடுறேன் இப்ப வை..” என்றான்..

 

 

 

 

 

குமார் வீடு சிறியது.. அதனால் அவன் இவர்களை தங்க வைத்திருப்பது அவனின் மற்றொரு நண்பனின் வீட்டில் தான்.. அங்கே யாரும் இல்லை.. என்பதாலும் அங்கு வசதி சற்று அதிகம் ஏசி மற்றும் அட்டாச் பாத்ரூம் எனக் இருக்கும் வீடு என்பதால் அவனுக்கு அதுதான் சரி என்று அங்கே தங்க வைத்திருக்கிறான்..

 

 

 

 

 

 காலையில் திருமணம் என்பதால் இனி குமார் அறையை விட்டு வெளியே வர முடியாது அதனால் சற்று பதற்றத்துடன் தான் அங்கே இருந்தான்..

 

 

 

 

ஒரு வேலை எதிர் வீட்டுக்கு சென்றிருப்பானோ?.. அதை தவிர அவன் அங்கே போவதற்கு வேறு இடமில்லை..

 

 

 

 அந்த வீதியின் கடைசி வீடு தான் அது..

 

 

 

 

“ கடவுளே இவன் எதிர் வீட்டுக்கு மட்டும் போயிருக்கவே கூடாது.. ஹால்ல இருந்து டிவி பாக்குறான்னு சீனி கால் பண்ணி எனக்கு பேசணும் இதை மட்டும் நல்லபடியா முடிச்சு கொடுத்து விடு..” என்று இறைவனிடம் அவசர வேண்டுதல் வைத்தான் குமார்..

 

ஆனால் அவன் என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தானோ அவன் நண்பன் அதைத்தான் சிறப்பாக எதிர்வீட்டில் செய்து கொண்டிருக்கிறான்..

 

 

 

 அவன் குணம் தெரிந்தும் அவனை அங்கே தங்க வைத்தது தன் பிழை. இனி அதனால் வரும் பிரச்சினைகள் அனைத்தையும் தன் பொறுப்பு என நினைத்து தவிப்புடன் அமர்ந்திருந்தான்..

 

 

 

 

 வீட்டை சுற்றி தேடிய சீனி வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிர் வீட்டில் வெளிச்சத்தில் யாரோ நிற்பது போல் தெரியவும் வேகமாக அங்கே சென்றான்..

 

 

 

 

தன் நண்பன் நின்ற கோலத்தை பார்த்து ‘ஈஸ்வர் ’ என்று சத்தமாக அழைத்தான்.. 

 

 

 

 அப்பொழுதுதான் சுயம்பெற்ற ஈஸ்வர் சட்டென்று அவளை விட்டு விலகி “ என்ன நடந்தாலும் பரவாயில்லை. உனக்கு நான் இருக்கேன். இனி இந்த கண்ணுல எப்பவும் நான் கண்ணீரை பார்க்கவே கூடாது.. ” என்று கூறி அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்..

 

 

 

“ டேய் ஈஸ்வர் என்னடா பண்ற இங்க வந்து. யாருடா இவங்க?. முன்ன பின்ன தெரியாதவங்க வீட்ல உனக்கு என்ன வேலை?. வா போகலாம்..” என்று கூறி சீனி அவன் கை பிடிக்கவும்..

 

 

 

 சீனியின் கையை எடுத்துவிட்டு அங்கு நின்ற மூன்று ஆண்களைப் பார்த்து

 

 

“ நீங்க யாரு என்ன எதுவும் தெரியாது இவளோட கண்ணில் வந்த கண்ணீர் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.. நாளைக்கு காலைல நான் இங்கே வருவேன். வந்து எல்லாத்தையும் பேசிக்கலாம்.. இனிமே அவ கண்ணில் கண்ணீர் வரவே கூடாது.. அப்படி மீறி உங்களால் வந்தால் உடம்புல உசுரு இருக்காது.. இதை நல்லா நினைவில் வச்சுக்கோங்க.. ” அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று விரல் நீட்டி எச்சரிக்கவும் அவன் தோற்றம் ஐய்யனாரை பார்ப்பது போல் இருக்கவும் சற்று பயந்து பின் வாங்கினார்கள்..

 

 

 

 

 

இன்னும் விட்டால் இங்கேயே அடிதடி நடக்கும் என்று உணர்ந்த சீனி அவன் கையைப் பற்றி ‘ வா.’ என அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்..

 

 

 

“ என்னடா ஈஸா இப்படி பண்ணிட்ட யாருடா அவங்க?.. முன்ன பின்ன தெரியாதவங்களை நிமிந்து கூட பாக்க மாட்ட அப்படிப்பட்ட நீ அந்த பொண்ணை கட்டிப்பிடிச்சு நிக்கிற..

 அந்த பொண்ணோட டிரஸ்ஸ பாத்தியா எவ்வளவு அழுக்கா இருந்துச்சு..

 

 

 

 விரல் நுனியில் கூட ஒரு சின்ன அழுக்கு இல்லாமல் சுத்தமா இருக்கணும்னு நினைக்கிற நீ அந்தப் பொண்ணு சுத்தம் இல்லாமல் அழுக்கா பேட் ஸ்மெல் வரும்படி இருந்தது அதை போய் நீ தொட்டு உரசி நிக்கிற..” என்று சீனி கேட்கவும் எப்பொழுதும் அவனை ஒரு கடும் சொல் சொல்லாத ஈஸ்வர் முறைத்து பார்த்துவிட்டு அங்கும் இங்கும் அறையில் நடந்தான்..

 

 

 

 நேரம் தற்பொழுது நள்ளிரவை நெருங்கியதால் அவளை பற்றிய விவரம் அறியாமல் வந்துவிட்டான்.. எப்பொழுது விடியும் மீண்டும் ஒரு முறை அவளை பார்க்கலாம் என விடியலுக்காக காத்திருந்தான் ஈஸ்வர்..

 

 

 

 நண்பன் எங்கே சென்றான் என்ற தவிப்புடன் மீண்டும் சீனிக்கு குமார் அழைக்கவும் அழைப்பை ஏற்று ஈஸ்வரை சந்தித்த விதத்தை பற்றி குமாரிடம் கூறவும் அதைக் கேட்டு பதற்றத்துடன் அலைபேசியை கீழே விட்டு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் குமார்..

 

 

 

 

 ஈஸ்வரருக்கு ஏன் இப்படியான ஒரு உணர்வு அவளை பார்த்ததும் தோன்றியது..

 

 

 

 

 குமார் ஏன் நண்பன் அவளை பார்ப்பதற்கு இப்படி தவித்து பயப்படுகிறான்..

 

 

 

 கேள்விக்கான விடை தொடர்ந்து கதையில்..

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்