Loading

அத்தியாயம் -15

கல்லூரியின் இறுதி ஆண்டு பரிட்சையை முடித்து விட்டு வீடு வந்தாள் அஷ்வினி.

“அப்பாஆஆ..” என கத்தி கொண்டே உள்ளே ஓடி வந்த மகளை வாஞ்சையோடு அணைத்து கொண்டார் அவள் தந்தை.

” அவளோ தான் இனி இந்த கழுத பொதி மூட்ட சுமக்கற மாறி இத தூக்கிட்டு போக தேவையில்லயே!!” என்றவள் உற்சாகமாக அவளின் ஐ.டி கார்டையும், பேக்கையும் தூக்கி கிடாச,

“அடியேய்.. இதுலாம் பத்ரமா எடுத்து வைக்கனும் எதுகாச்சி தேவப்படும்..! நீ பாட்டுக்கு கழட்டி வீசுற?”

“ம்ம்ச் போம்மா எப்ப பாத்தாலும் திட்டிக்கிட்டு. அப்பா இன்னும் பத்து நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்க போறேன், யாரும் என்ன எந்த வேலையும் சொல்ல கூடாது ஒழுங்கா சொல்லி வைங்க உங்க பொண்டாட்டி கிட்ட..! இந்த எக்ஸாம் முடியறக்குள்ள எனக்கு பாதி முடியே கொட்டி போச்சுப்பா..!” என்றவள் உதட்டை பிதுக்கி செல்லம் கொஞ்ச, அதை பார்த்து சிரித்தவர்.

“சரிம்மா உன் இஷ்டம்”

“ம்ம்க்கும் இன்னும் நல்லா இடுப்புல்ல தூக்கி வெச்சி கொஞ்சுங்க. இவ அப்படியே பால்வாடி பாப்பா..! எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தா இப்படி ஓவரா ஆட்டம் போடுறா..! பத்து நாளைக்கு வேல செய்ய மாட்டாலாமே, இல்லனா மட்டும் மகாராணி அப்படியே வேல செஞ்சி கிழிச்சிட்டு தான் மறுவேல பாப்பாங்க, இந்த லட்சனத்துல்ல நீங்க வேற இவளுக்கு மாப்பிளை பாத்து வெச்சிருக்கீங்க..”

அதுவரை தாயின் பேச்சை அலட்டி கொள்ளாமல் கேட்டு கொண்டிருந்தவள், மாப்பிளை என பேச்சு அடிப்படவும் திடுக்கிட்டு அவளின் தந்தையை பார்த்தாள்.

“மாப்பிள்ளை பேரு அஷ்வின். சொந்தமா தொழில் பண்ணுறாரு, சொத்து பத்து தோட்டம் தொறவுனு எல்லாம் இருக்கு. உங்க பொண்ணோட ஜாதகம் அவங்களுக்கு நல்லா பொருந்தி வருதாம், நீங்க பாத்துட்டு சொல்லுங்க, நல்லா இடம். மாப்பிளைக்கு நா கேரண்டி..!”

தரக்கர் கூறிய அனைத்து விஷயங்களும் அஷ்வினிக்கு சொல்லப்பட்டது. இவர்களுக்கும் ஜாதகம் பொருந்தி வர, விசாரித்த வரைக்கும் அனைத்தும் திருப்தியே.
இதோ முறைப்படி வீட்டிற்கு வந்து பெண் பார்க்கும் சடங்கும் இனிதே நிறைவுற்றது.

” பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கு. கையோட நிச்சயத்தையும் முடிச்சிரலாம் “

” ஹையோ அது எப்படிங்க? என்ன இருந்தாலும் மொறனு ஒன்னு இருக்குல்ல? “

அடுத்த பத்தாவது நாளில் நல்ல சுபமுகூர்த்தம் இருப்பதால் அப்பொழுதே நிச்சயத்தை வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

பத்தே நாளில் நிச்சயம் என்றால் சும்மாவா? எத்தனை வேலை இருக்கிறது. சொந்தங்கள் சூழ வீடே பரபரப்பாகியது, ஆனால் அதில் ஏதும் கலந்து கொள்ளாமல், அஷ்வினி தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அன்று பெண் பார்க்கும் போது ஒற்ற புருவத்தை ஏற்றி அவளை பார்த்து அவன் சிரித்தது மட்டுமே அவள் மன கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து போனது.

அஸ்வின் -அஸ்வினி அடடா பேர் பொறுத்தமே செமயா இருக்கே..!?
அனைவரும் கூறிய விஷயம் தான்.
ஆனால் இருவர் பேரயும் அவள் இணைத்து சொல்லி பார்க்கையில் மனம் சிலாகித்தது. முகத்தில் பூர்ப்பு வர புது விதமான உணர்வு ஒன்றை உணர்ந்தாள் அஷ்வினி, நிச்சயம் முடிந்து தான் போனில் பேச வேண்டும் என பெரியவர்களின் உத்தரவு வர அவனின் புகைப்படத்தோடு மட்டுமே உரையாடி கொண்டிருந்தாள்.

“உனக்கு நல்ல வரன் அமஞ்சா ஒரு மாசம் துர்கைக்கு நெய் விளக்கு ஏத்தறேனு வேண்டிக்கிட்டேன். நீயே அத நிறைவேத்தி வெச்சுரு..!”

தாயின் கட்டளைப்படி தினம் காலையில் குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு போய் விளக்கேற்றி விட்டு வருவாள்.

அன்றும் அப்படி தான் வீட்டில் இருந்து கிளம்பி, கோவிலிற்கு நடந்து போய் கொண்டிருந்தாள்.

“அஷ்வினி “

யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, அஷ்வின் தான் நின்றுகொண்டிருந்தான். அவனை அங்கு எதிர்ப்பார்க்காதவள் செய்தவதறியாது விழித்து நிற்க. அதை பார்த்து சிரித்தவன் அவள் முன்பு சொடகிட்டு, ” என்ன அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிக்குற? “

உண்மையில் அவளிற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை..!
அவனை பார்த்த நொடி நெஞ்சம் குறுகுறுக்க வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.

“சரி என்கூட வாயேன் உன்கிட்ட ஒன்னு காட்டனும் “

அவளின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்,
“என்ன? இல்ல அப்படி எல்லாம்… அ… அம்மா திட்டுவாங்க”

“ஹேய்.. உன்ன என்ன ஹனி மூனுக்கா கூப்பிடுறேன்.. ஜஸ்ட் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல வந்துருலாம் என் மேல நம்பிக்கை இல்லயா?”

“அப்படி எல்லாம் இல்லை”

“அப்றம் என்ன வண்டில ஏறு!”

மறுப்பதற்கு சரியான காரணம் ஏதும் இல்லை. அடி மனதில் ஒரு எதிர்ப்பார்ப்பு..! என்னவாக இருக்கும் என்ற ஆவல் அவளிற்குள் இருக்கதான் செய்தது. இருப்பினும் வீட்டில் சொல்லாமல் எப்படி என அவள் யோசித்து கொண்டிருக்க, அவனின் ‘நம்பிக்கை இல்லையா? ‘ என்ற வார்த்தை அவளை அசைத்து பார்த்தது. இது என்ன அபத்தமான கேள்வி நம்பிக்கை இல்லாமலா திருமணத்திற்கு ஒற்று கொண்டாள்?

இனிதே ஆரம்பம் ஆகி விட்டது அவனுடனான முதல் சவாரி. பைக் கண்ணாடி வழியே அவன் அவளை பார்ப்பது அவளிற்கு தெரிய அவளின் கன்னத்து கதுப்புகள் சிவப்பேறியது.

அவள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் தான் ஹைவேஸ் ரோட் இருக்கிறது. இங்கு ஏன் கூட்டி கொண்டு வந்தான், என அவள் யோசிக்கும் போதே வண்டி நின்றது.

” அங்க பாரு, இது தான் நம்ம வீடு “

புதுதாக கட்டிய வீட்டை காண்பித்தான்.
“என்னோட சொந்த காசுல எனக்குனு ஒரு வீடு கட்டனுங்கறது தான் என் லட்சியமே. ஆனா என் வீட்டுக்கு பக்கத்துல்லயே என் மாமியார் வீடும் இருக்கும்னு நா யோசிச்சி கூட பாக்கல்ல “

அவனின் பேச்சில் சின்னதாக புன்னகைத்தாள் அஷ்வினி.

“வா.. உள்ள போய் பாக்கலாம். நாளையில்ல இருந்து இன்டீரியர் ஒர்க் ஸ்டார்ட் ஆகுது. அதுக்கு முன்னாடியே நீயும் பாத்துட்டேனா உனக்கு பிடிச்ச மாறியும் ஒர்க் பண்ணிக்கலாம்ல அதான் உன்ன கூட்டிட்டு வந்தேன்.”

அவனின் பேச்சில் சிலிர்த்து போனாள் அஷ்வினி.

ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்து விட்டு, ” வீடு ரொம்ப நல்லா இருக்கு. நாம கிளம்பலாமா? அம்மா தேடுவாங்க, போன் பண்ணிட்டாங்கனா எனக்கு என்ன சொல்லி சமாளிக்கறதுனு
தெரில ” என்றாள் உண்மையான பதட்டத்தோடு.

“ம்ம்.. ம்ம்ம்… போலாம் போலாம் அதுக்கு முன்னாடி எதாவுது ஸ்பெஷலா கொஞ்சம் கொடுத்துட்டு போயேன் ” என்றவன் ஒரு மர்ம புன்னகையோடு அவளை நெருங்கி வர, அவளின் அடி வயற்றில் பய பந்து உருண்டோடியது.

குடும்பத்தை தவிற வேறு எந்த ஆண்களிடமும் நட்பாக கூட அவள் பேசி பழகியது கிடையாது. இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவள். அவனின் செய்யலில் மிகவும் அரண்டு தான் போனாள்.

பயத்தில் முகத்தில் வேர்வை பூக்க, கண்கள் லேசாக கலங்கியது.

“இல்ல நா.. நா.. வீட்டுக்கு போனோம் ” குரல் கம்மியது.

“ஹேய்.. சில் ஏன் டென்ஷன் ஆகுற ” என்றவன் அவனின் கை குட்டையை எடுத்து அவளின் நெற்றி வேர்வையை துடைத்து விட, பட்டென அவனின் கையை தட்டி விட்டவள்.

” நா போறேன் ” என வேகவாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

” அஷ்வினி எங்க போற நில்லு, பயந்துட்டியா? ஹேய் நா சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன். வா வண்டியில்ல ஏறு போலாம் “

“இல்ல நா நடந்தே போய்கறேன்”

“ம்ம்ச் நா நில்லுனு சொல்லறேன்ல..!” என்றவன் அவள் கையை பிடித்து இழுக்க, பொல பொலவென அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.

” நா வீட்டுக்கு போகனும்
என்ன விடுங்க ” என்றாள் கெஞ்சலாய்.

“ஏய்.. இப்போ ஏன் ரோட்ல நின்னு அழுது சீன் கிரியட் பண்ணுற? நான் ஒன்னும் பொறுக்கி கிடையாது சரியா? நீ இப்படி நடந்துகறது என்ன இன்ஸல்ட் பண்ணுற மாறி இருக்கு. எனக்கும் ரெண்டு அக்கா இருக்காங்க நானு நல்லா குடும்பத்து பையன் தா ” என்றான் வேதனை கலந்த குரலில், உண்மையில் அவளிடம் அத்து மீற வேண்டும் என்பது அவன் எண்ணம் இல்லை. விளையாடாக சீண்ட நினைத்தான் அவ்வளவே..!
இருப்பினும் சில நேரங்களில் விளையாட்டு வினையாகி விடுகிறது.
தன்னை பற்றி தவறாக அவள் மனதில் பதிந்த பிம்பத்தை மாற்ற நினைத்தான்.

அவள் அவனிடம் விலக நினைக்க அவன் பிடி இறுகியது. அதுவே அவளிற்கு வலியை கொடுத்தது. பயமும் , பதட்டமும் அவளை முழுதாக ஆட்கொள்ள அம்மாவிடம் போக வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருக்க, மற்ற எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை.

அவனிடம் இருந்து கையை உதறி விட்டு அவள் பின்னால் இரண்டடி வைக்க அவளை விடாமல் அவளிடம் நெருங்கி வந்தவன்,

“ஒரு நிமிஷம் நா சொல்லுறத கேளு” என பெரு மூச்சு விட்டு பேச ஆரம்பிப்பதற்குள், ஹைவேஸில் வேகமாக வந்த கார் அவர்களை இடித்தது.

என்ன நடந்தது, எப்படி நடந்தது, என அஷ்வினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. கார் அடித்த வேகத்தில் அவள் மயங்கி விட்டாள். கண் விழித்து பார்க்கையில் மருத்துவமனையில் காலில் பெரிய கட்டு போட்டு இருந்தார்கள். உடம்பெல்லாம் ஒரே வலி, கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை யோசித்து பார்த்தவளிற்கு கண்களில் நீர் கோர்த்தது.

அவன் கூப்பிட்டவுடன் சென்று பெரிய தவறிழைத்து விட்டோமோ என மனம் துடித்தது. வீட்டில் கேட்டால் என பதில் கூறுவது என மருகினாள். ஆனால் அவள் நினைத்ததை விட மோசமான நிகழ்வு அவளிற்கு காத்து கொண்டிருக்கிறது என அவள் அறியவில்லை.

ஆம் தீவிர சிகிச்சைக்கு பலன் இல்லாமல் அடுத்த இரண்டாவது நாள் உயிர் இழந்தான் அஷ்வின்..!

அன்று அவனின் தாய் அவர்களின் வீட்டின் முன்பு வந்து கொடுத்த சாபதிற்கு அளவே இல்லை.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த ஒற்றை ஆண் வாரிசு அவன். செல்ல பிள்ளை மட்டுமல்ல, அவர்கள் வீட்டின் அதிர்ஷ்ட்ட பிள்ளையும் அவன் தான். அஷ்வின் பிறந்த பிறகே அவர்கள் வீட்டில் லட்சுமி சேர்ந்தது என அவனை மிகவும் கொண்டாடி வளர்ந்தனர்.

இதில் அஷ்வினின் தாய் மீது குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை. மருமகளுக்கு தாரை வார்த்து கொடுக்க வேண்டிய பிள்ளையை காலனுக்கு கொடுத்து விட்டு தவிக்கும் அவள நிலை யாருக்கும் வர கூடாது தான்.

ஆனால் நம் மனிதர்கள் செய்யும் மிக பெரிய தவறு என்ன தெரியுமா?
நம் மன நிம்மதிகாக, நம் ஆற்றாமையை போக்கி கொள்வதற்காக, நம் மனம் கொண்ட வேதனையை குறைத்து கொள்வதற்காக பிறர் மீது நாம் வீசி எறியும் வெறுப்பின் கற்கல் அவர்களின் ஆழ் மனது வரை சென்று கீரி ரணமாக்கும் என்பதை அறிந்தும் அதை செய்வது.

” இன்னும் நிச்சயம் கூட ஆகல அதுக்குள்ள என்ன வேண்டி கிடக்கு அப்படி தனியா போக “

“ஆம்பள புள்ள அவன் கூப்பிட்டா இவ உடனே வீட்டுல கூட ஒரு வார்த்த கேக்காம ஏறிட்டு போய்யிரதா?”

” பொண்ணு பாக்க போகும் போதே சொன்னேன் ஏதோ தடங்கலா இருக்குனு நா சொன்னா யார் கேக்கறாங்க? ராசி இல்லாத புள்ளய பேசி முடிச்சி இப்போ ஒரேடியா எல்லாம் முடிஞ்சிருச்சா? “

“எல்லாம் அவங்க அப்பா கொடுக்கற செல்லம்! ஒரேடியா புள்ள புள்ளனு தூக்கி புடிச்சி வளத்துனா இப்படி தான் அவுத்து விட்ட கழுதையாட நடந்துக்கும். பொட்ட புள்ளய அடக்க ஒடுக்கமா வளக்காம இப்போ உக்காந்துட்டு அய்யோ வலிக்குதே, அம்மா வலிக்குதேனா போனவன் திரும்ப எந்திரிச்சா வர போறான்?”

இது போல் பல பல ஏச்சு பேச்சுகள், அவள் பக்க நியாயத்தை காது கொடுத்து கேட்க கூட ஆள் இல்லை.

மனிதனை முழுமையாக உருகுலையச் செய்ய குற்ற உணர்ச்சி ஒன்றே போதுமானது..!

அந்த குற்ற உணர்ச்சியில் தான் தவித்து கொண்டிருந்தாள் அஷ்வினி.

‘ முதலிலேயே மறுத்திருக்க வேண்டுமோ?’

‘ இல்ல பொறுமையாக அவன் சொல்வதை கேட்டு அந்த சூழ்நிலையை வேறு மாதிரி கையாண்டு இருக்க வேண்டுமோ? என்னால் தானே அவனிற்கு இந்த நிலமை? அப்பொழுது நான் தானே அவன் சாவிற்கு காரணம்? ‘

இன்னும் அவள் நிலையை மோசமாகியது அவள் தந்தையின் ஹார்ட் அட்டாக்.

திடீரென அவர் நெஞ்சை பிடித்து சாய மொத்த குடும்பமே ஆட்டம் கண்டு விட்டது.

‘ மைல்ட் அட்டாக் தான் ஒன்றும் பிரச்னையில்லை ‘ என டாக்டர் சொன்னாலும் அவர் படுத்த படுக்கையாகி போனார்.

மனமது ஒத்துழைத்தால் தானே உடலது வலுப்பெறும்..!

மற்றவர்கள் கூறுவது போல் தன் மகளை தான் சரியாக வளர்க்கவில்லையோ என்ற எண்ணமே அவரை படுக்க வைத்து விட்டது.

இதை அறிந்த அஷ்வினி மனதளவில் மிகவும் நொறுங்கி போனாள். அவள் உயிருக்கு உயிரான தந்தையின் நிலைக்கும் அவள் காரணம் என தன்னை தானே வருத்தி கொண்டாள்.

சிட்டி குருவி அவள் சிதறி
போய் கிடக்க,
ஆறுதல் தர வேண்டிய குடும்பமோ
அமைதியாக இருக்க,
வீடே மையானம் ஆனது.

ஒரு நாள் அஷ்வினியின் பெரியப்பா மகள் வீட்டிற்கு வந்து இவர்கள் இப்படி எதயோ பறி கொடுத்தவர்கள் போல் ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி கிடப்பதை பார்த்து சத்தம் போட்டாள்.

” என்ன சித்தி இது? இப்படியே இருந்தா எப்படி? வாழ வேண்டிய புள்ள அவ..! இப்படி நடந்ததையே நெனச்சிட்டு இருந்தா எல்லாம் சரியா போய்யிருமா? எனக்கு என்னமோ இது சரியா படல.. வீட்டுக்குள்ளயே இருந்தா இவ இப்படி தான் இருப்பா “

அவரின் ஏற்பாடு படி தான் அஷ்வினி ஒரு டிசைனிங் கோர்ஸ் எடுத்து படித்து, இப்பொழுது வேலைக்கும் போய் கொண்டிருக்கிறாள்.

அன்று அஷ்வினியை திட்டி அவளிடம் சண்டை போட்டவர் அஷ்வின் உடைய தாய் தான். அவரின் மூத்த மகள் இந்த ஊரில் தான் இருக்கிறாள். எதிர்ப்பாராத விதமாக நடந்த சந்திப்பு பழைய நினைவுகளை மறுபடியும் கிளறி விட்டு சென்றிருந்தது.

அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல், இப்பொழுதும் தவித்து கொண்டு தான் இருக்கிறாள்.
திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அமிலத்தை ஊற்றியது போல் அவள் மனம் அலறியது. அதை பற்றி நினைத்து பார்க்க கூட அவளிற்கு தைரியம் வரவில்லை. அந்த கசப்பான நினைவுகள் ஆறாத வடுவாய் அவள் மனதில் ஆழ பதிந்தது. இவளிற்கு எப்பொழுது ஒரு நல்ல வாழ்கை அமையும் என அவளின் பெற்றோரும் ஒரு பக்கம் இவளை நினைத்து உருகி கொண்டு தான் இருக்கிறார்கள்.

காலங்கள் போனாலும் காயமது காயாமல் அப்படியே இருந்தது..!

இதை அறிந்த மாதவ் திக் ப்ரமை பிடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான்.

சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள். ஆனால் அவனால் தான் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை, தன்னவளின் நிலை தெரியாமல் அவள் மனம் கொண்ட வேதனையை சரி செய்யாமல்,
அவளிடம் காதல் சொல்ல நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான செயல் என தன்னை தானே கடிந்து கொண்டான்.

ஒரு வகையில் இதற்கு தானும் காரணம் தான் என வருந்தினான். முன்னயே அவளிடம் போய் பேசி பழகி காதலை சொல்லி இருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருந்திருக்கும் அல்லவா!?

” என்ன மன்னிச்சிரு பஞ்சுமிட்டாய்..! இனிமே உனக்கு எந்த கஷ்டமும் வராம உன்ன நல்லா பாத்துக்கறேன்.. “

ஹ்ம்ம்.. என்னவென்று சொல்வது இவனின் காதலை..! சில நேரங்களில் காதல் பைதியகார தனமான ஒன்றாக சித்தரிக்கப்படுவது உண்மை தான் போல்..!

ஆனால் அப்படி ஒரு பைதியகார காதலிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உள் அன்பானது விலைமதிக்க முடியாத பொக்கிஷம் ஆகிறது. அதை சரியாக புரிந்து கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கை சொர்க்கம் ஆகிறது.

“ஆதி இன்னும் ஒரே ஒரு இடம். அங்க போய்ட்டு வந்த அப்றம் உங்கள சேஃப்பா வீட்டுல ட்ரோப் பண்ணிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் “

” இப்போ நா முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவ? “

” அது எப்படி நீங்க முடியாதுனு சொல்லலாம் கண்டிப்பா போய் தான் ஆகனும் “

“அப்றம் எதுக்கு என்கிட்ட கேக்கற “

“அதுலா அப்படி தான்..! இது ஒரு வகையான ரிவர்ஸ் சைக்காலஜி உங்களுக்கு இதுலா புரியாது விடுங்க “

“அது சரி..!”

கடற்கரைக்கு தான் அவனை கூட்டி வந்திருந்தாள் கண்மணி. இருள் சூழ ஆரம்பித்திருந்தாலும் இன்னும் ஆங்ஆங்கே ஜன கூட்டம் இருக்க தான் செய்தது.

” வாங்க ஒரு நல்ல இடமா பாத்து நாமளும் செட்டில் ஆவோம்..! செம்மயா இருக்குல்ல.. இந்த நிலா வெளிச்சம், உப்பு காத்து, கடலோட சலசலப்பு எனக்கு ரொம்ப புடிக்கும் ” என்றாள் ரசனையான பார்வையோடு.

“ம்ம்ம்.. ஆனா எனக்கு எப்பவும் சன் ரைஸ் தான் புடிக்கும். அமைதியான இடத்துல்ல நானு அந்த சூரியனும் மட்டும், எவளோ கஷ்டமான இருள் வந்தாலும் விடியல்னு ஒன்னு கண்டிப்பா இருக்குனு நம்மக்கு அடிக்கடி
நியாபகப்படுதற மாறி ” என்றவன் இதழ் வளைத்து சொல்ல,

“க்யூட் ” என்றாள்.

“க்யூட்டா?”

“ஆமா நீங்க தான்..!”

சட்டென அவளிடம் இருந்து வந்த பதிலிற்கு எதிர்வினை எப்படி கூறுவது என தெரியாமல் விழித்தவன். அவளின் பாராட்டில் சின்னதாய் அரும்பி வந்த புன்னகையை மறைக்க கொஞ்சம் சிரம்மப்பட்டு தான் போனான்.

அதை கண்டு கொண்டவள் பொங்கி வந்த சிரிப்போடு, “இதுவும் சோ கியூட் ” என்றாள் அவன் கன்னம் கிள்ளி.

“சரி நீங்க இருங்க நா போய் சுட்ட சோளக்கருது வாங்கிட்டு வரேன் “

அவள் சொன்னது எதுவும் அவன் காதில் விழுந்தபாடில்லை.

அவளின் தொடுகையிலும் பேச்சிலும் தடுமாறிய அவன் மனதை மீட்டெப்பதே அவனிற்கு பெரும் பாடாகி போனது. இது என்ன மாதிரியான உணர்வு? அவளோடு இருக்கும் பொழுது மட்டும் சகலமும் மறந்து ஒரு மாயகோட்டையில் சஞ்சரிப்பது போல் இருக்கிறதே. யோசனையாய் இருந்தவனின் கவனத்தை ஈர்த்தது அவன் முன்பு கை கோர்த்து போன இளம் ஜோடி.

அவர்களை பார்த்ததும் தாரிகாவின் நினைவு தான் அவனிற்கு வந்தது.

” வருண் எங்க போறோம்? “

“சொல்லறேன் வா ” என்றவன் கார்த்தியை பார்க்க தான் அழைத்து சென்றிருந்தான். கார்த்தியிடம் இவளை பற்றி முன்னமே சொல்லி இருந்தாலும் இப்பொழுது தான் முதல் முறையாக நேரில் சந்தித்து கொள்கிறார்கள்.

“ஹாய் சிஸ்டர் “

“ஹலோ..! வருண் உங்கள பத்தி நெறைய சொல்லி இருக்கான். நீங்க பாஸ்கெட் பால் ப்ளேயர் தானே? அதுக்கு தான் பயங்கரமா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல”

“ஆமா அடுத்த மாசம் நேஷனல்ஸ் இருக்கு அதுல வின் பண்ணிட்டா போதும், ஈசியா இந்தியன் டீம்ல செலக்ட் ஆகிறலாம் “

“சூப்பர். ஆல் தி வெரி பெஸ்ட், உங்க கரீயருக்கு “

“சரி எனக்கு ப்ராக்டீஸ்க்கு டைம் ஆச்சு நீங்க பேசிட்டு இருங்க நா வரேன்.”

இருவரிடமும் விடை பெற்று கொண்டான் கார்த்தி.

” வருண் எப்போ நம்ம விஷயத்த வீட்டுல சொல்ல போற? “

” சொல்லலாம் சொல்லலாம் கொஞ்சம் பொறுமையா இரு “

அவனை நன்றாக முறைத்தவள் முகத்தை சுளித்து கொள்ள. மெல்ல அவள் கரம் பற்றியவன், ” ஒரு ஆறு மாசம் டைம் கொடு, அப்பா நா வேலை கத்துக்கனும்னு எல்லாத்தையும் என்னயவே பாக்க சொல்லிட்டாரு இதுவே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு. நம்ம கல்யாணம் அப்போ வேற எந்த டென்ஷனும் இல்லாம நம்மள பத்தி மட்டுமே என்னோட தாட்ஸ் இருக்கனும்னு யோசிக்கறேன் அவ்வளவு தான்.”

” எனக்கு எல்லாம் ஒன்னும் பிரச்னையில்ல ப்பா உனக்கு தான் வயசாகிட்டே போகுதுனு சொன்னேன் “
என்றவள் நகைக்க அவளின் சிரிப்பு அவனிற்கும் ஒட்டி கொண்டது.

இதோ வீட்டிலும் அவர்கள் விஷயத்தை கூறி சம்மந்தம் பெற்றுவிட்டார்கள்.

இதற்கிடையில் தான் வருண் கார்த்தியின் செர்டிபிகேட்ஸை எல்லாம் எரித்து, இருவரும் பிரித்திருந்தனர்.

திருமணத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு நிச்சயமும் முடிந்தாயிற்று.

வருணின் தாய் அவர்களின் குல தெய்வ கோவிலில் பூஜை ஒன்று ஏற்பாடு செய்திருக்க அதற்கு தாரிகாவையும் அழைத்திருந்தனர்.

சுடிதார் போட்டு கொண்டு வந்த தாரிகாவை கேள்வி கேட்டார் வருணின் அன்னை, ” என்னம்மா நீ உங்க ரெண்டு பேர்காகவும் தான் பூஜ ஏற்பாடு பண்ணுறோம், ஒரு சாரி கட்டிட்டு வந்திருக்க கூடாது. சரி ஒன்னும் பிரச்னை இல்ல இங்க சுமங்கலிக்கு தானம் கொடுக்க சேலையும் ரெடி மேட் ப்ளௌஸ்யும் இருக்கு, அத போய் பாத்ரூம்ல கட்டிட்டு வா போ ” என அவளை அனுப்பி வைக்க அவரின் செய்கை சுத்தமாக பிடிக்கவில்லை தாரிகாவிற்கு. இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அமைதியாக உடை மாற்றி வந்தவள்.

அதை கவனித்த வருண் யாரும் பார்க்கா வண்ணம் அவளை கோவிலின் பின்பக்கம் அழைத்து சென்று,

“அம்மா அப்படி சொன்னது உனக்கு புடிக்கலயா தாரிகா?”

“ஆமா ” பட்டென வந்தது அவளின் பதில், தாரிகாவின் குணமே இது தான். எந்த ஒளிவு மறைவும் இன்றி உடைத்து பேசிவிடுவாள்.

” எனக்கு புடிக்கல தான், பட் இருந்தாலும் உனக்காக நா என்ன வேணா பண்ணுவேன். இந்த ஒரு சின்ன விஷயம் பண்ண மாட்டேனா. நீ என்கூட இருந்தா மட்டும் போதும், சரி அங்க போய் அத்தைக்கு நா எதாவுது ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன் நீயு வந்துரு “

என்றவள் அவ்விடம் விட்டு நகர அவள் செல்லும் பாதையையே பெருமை பொங்கும் விழிகளோடு பார்த்தான் வருண் . ஆனால் பாவம் அப்பொழுது அவனிற்கு தெரியவில்லை எந்த பெண் உனக்காக நான் என்ன வேண்டுமாலும் செய்வேன். உன்னோடு எப்பொழுதும் துணையாக இருப்பேன் என சொன்னாளே அவளே அவனிற்கு ஏம்மாற்றுகாரன், துரோகி என முத்திரை குத்தி கல்யாணத்தை நிறுத்தி விட்டு செல்வாள் என..!!

“ஆதிஈஈஈ ” கண்மணியின் அழைப்பில் சுயம் பெற்றவன் அவளை பார்க்க, சுட்ட சோளகருதை அவனிற்கு நீட்டினாள்.

” இல்ல எனக்கு வேணா நீ சாப்பிடு “

” அச்சசோஓஓஓஓ.. கடலுக்கு வந்துட்டு சோளகருத சாப்பிடாம போனா சாமி மூக்க குத்திரும் “

“அப்படி என்ன சாமி? ” என்றான் ஸ்வாரசியமாக,

“சாமி பேரு எல்லாம் வெளிய சொல்ல கூடாது..!”

வருணை அவனின் வீட்டில் இறக்கி விட்டாள் கண்மணி.

“தேங்க்ஸ் “

“பார்றா சாரில ஆரம்பிச்சி தேங்க்ஸ்ல முடிக்கறீங்க”

“ட்ராப் பண்ணுனதுகாக தேங்க்ஸ் சொல்லல”

“பரவால நீங்க எதுக்கோ சொல்லிட்டு போங்க. நா கிளம்பறேன்ல அப்போ என்கிட்ட தேங்க்ஸ் சொல்ல கூடாது, பத்ரமா போய்ட்டு வா, வீட்டுக்கு போன உடனே எனக்கு கால் பண்ணு, அப்படி சொல்லணும் “

மெல்ல சிரித்தவன், அவள் தலையில் சின்னதாய் ஒரு கொட்டு வைத்துவிட்டு,
” நீ பத்ரமா தான் போவ எனக்கு தெரியும். குட் நைட்..!”

மெத்தையில் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள் கண்மணி..!
தூக்கம் வருவேனா என அடம் புடித்து கொண்டிருந்தது. இன்று அவனோடு கழித்த நிமிடங்களை நினைத்து பார்த்தவளிற்கு வெட்கம் வந்தது.
“அச்சோ என்ன கொல்லுறீங்க ஆதி ” என்றவள் தலயணையை கட்டி கொண்டாள் அவள் நினைவுகளோடு.

இங்கு அவள் தூக்கதிற்கும் சேர்த்தி அவன் நன்கு தூங்கி கொண்டிருந்தான்.
எவ்வளவு நாள் ஆயிற்று அவன் இப்படி நிம்மதியாக தூங்கி.

இன்று அவளுடன் இருந்த நிமிடமங்கள் அவனுள் ஒரு அழகிய இதத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்க அமைதியாக துயல் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

தூங்கா அவன் இரவுகளுக்கு
தூக்க மாத்திரையாய் அவள் பேச்சு..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
52
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment