Loading

அத்தியாயம் 8

பகலவன் தன் கதிர்களைப் பரப்பி புதிய நாளை விடியச் செய்து ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வரக் காத்திருக்கும் அந்த காலை வேளை.

ஹோட்டல் ஒன்று புக் செய்து குளித்துக் கிளம்பி விட்டு ஓலா கார் புக் செய்து மிதமான வேகத்தில் மதியைப் பெண் கேட்க ரவிச்சந்திரன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அந்தக் காரில் வெற்றியைத் தவிர மற்ற அனைவரும் கலகலப்பாய் பேசிக் கொண்டும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த சென்னையை வியப்பாகவும் சிலசமயம் இதென்ன இப்படி என்று சலிப்புடன் பார்த்துக் கொண்டும் வந்தனர் வெற்றியின் தாய் கனிமொழி, தந்தை சிவகுரு, பூங்குழலியின் தாய் லட்சுமி மற்றும் அவர்களுடன் குமார்.

அவர்களுக்கு தன் மகனுக்கு ஏத்த மகாலட்சுமி கிடைத்த சந்தோஷம். வெற்றி மட்டும் யோசனையுடனே கார் ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இன்னமும் ‘இது சரி வருமா?’ என்ற யோசனை. ஆக அவன் மனதில் ஏதோ நினைத்துக் கொண்டு யோசனையில் இருக்கிறான் போல. அது அவனாக சொல்லும் போது பின்னொரு நாளில் பார்க்கலாம்.

கார் வீட்டை நெருங்கவும் இதுவரை இருந்த யோசனை போய் ‘இன்னைக்காவது அல்லிராணி அடக்க ஒடுக்கமா இருப்பாளானு பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினான்.

“பெரியம்மா இதான் உங்க வருங்கால சம்மந்தி வீடு நல்லா பாத்துக்கோங்க” என்று கனிமொழியிடம் உரையாடிக் கொண்டே வந்தான் குமார்.

வந்தவர்களை வரவேற்று அமர வைத்தனர் ரவி மற்றும் லதா இருவரும். சம்பிரதாய நல விசாரிப்புகள் முடிந்து “என்ன லதாக்கா பொண்ணை எப்போ தான் கண்ணுல காட்டுவேங்க” என்றார் பூங்குழலியின் தாய் லட்சுமி.

“இதோ கூப்பிட்டு வர்றேன் லட்சுமி” என்று சிரிப்புடன் உள்ளே சென்றார் லதா. அவருக்கு பழகிய சில நிமிடங்களிலே உறவு முறை வைத்துப் பேசும் அளவிற்கு அவர்களின் நெருக்கம் மிகவும் பிடித்திருந்தது.

வெற்றியின் கண்களும் ஆர்வமாய் மதியின் அறையை நோக்கியது. அதைக் கண்டு கொண்ட குமார் “அண்ணே ரொம்ப ஆர்வம் போல. அவசரப்படாதணே பொண்ணை காண்பிப்பாங்க” என்றான் சிரிப்புடன்.

“நான் ஆர்வமா இருந்தேன். நீ பாத்த.. போடா அங்குட்டு” என்று வாய் சொன்னாலும் அவன் கண்களும் மனமும் எதிர்பார்த்தது என்னவோ உண்மை.

அறைக்குள்ளே வைஷாலி மதியைக் கிளப்பிக் கொண்டிருந்தாள்.

“பரவாயில்லைடி மதி புடவை கட்டவும் நீ கூட பொண்ணு மாதிரி தான்டி இருக்க” என்றாள் வைஷாலி நக்கலாக சிரித்துக் கொண்டே.

“ஒன்னைக் கொன்னுறுவேன்டி. அந்தக் காட்டானுக்கு இது போதும் போடி” என்றாள் எரிச்சலாக தன்னால் இந்தக் கல்யாண விஷயத்தில் தந்தையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதக் கோவத்தில்.

“அடியே மதி வெளியே சத்தம் கேட்குது. மாப்பிள்ளை வந்துட்டாரு போல இருடி நான் போய் பாத்துட்டு வர்றேன்” என்று வெளியே எட்டிப் பார்த்தாள்.

அறைக்கு வெளியே எட்டிப் பாரத்தவள் “என்ன ரெண்டு பேரு ஒரே வயசு ரேன்ஜ்ல இருக்காங்க. யாரு இதுல மாப்பிள்ளைனு தெரியலையே” என்று யோசனையுடன் உள்ளே நுழைந்தாள்.

“என்னடி பாத்துட்டியா அந்த மைசூர் மகாராஜாவ‌” என்றாள் நக்கலாக.

“அடியே ரெண்டு பேரு இருக்காங்கடி. யாரு மாப்பிள்ளைனே தெரியலையே”.

“விருமாண்டி மாதிரி மீசையை முறுக்கிட்டு காட்டான் ஒருத்தன் இருப்பான் அவன் தான்டி”.

“ரெண்டு பேரும் அப்டி தான்டி இருக்காங்க”.

“அவனுக்கு அண்ணன் தம்பினு கூடப் பொறந்தவங்க யாரும் இல்லயே. இவன் ஒரு பையன் தான்டி. வேற யாரா இருக்கும்?” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலே “மதி ரெடியாயிட்டியா?” என்றபடி உள்ளே வந்தார் லதா.

“ம் ம் ரெடிமா. ஏதோ ஊரு உலகத்துல இல்லாத மாப்பிள்ளையை பார்த்துட்ட மாதிரி ரொம்ப தான் பண்றேங்கமா. என்ன பிளாக் மெயில் பண்ணி ஓகே சொல்ல வச்சுருக்கேங்க. போலீஸ்காரன் வீட்லயே இந்த மாதிரி கொடுமை எல்லாம் நடக்குமா?” என்று அவள் புலம்பினாள்.

“அடியே வாயை மூடு டி. வாய்க்கொழுப்பு உனக்கு அதிகமாயிடுச்சு. கம்முனு வந்தோமா வணக்கம் சொல்லிட்டு அமைதியா இருந்தோமானு இருக்கனும். ஏதாவது வாயைத் தொறந்து ஏடாகூடாமா பேசிடாத”.

“வாயை மூடிக்கிட்டா அப்புறம் அவங்க ஏதாவது கேட்டா எப்டி பதில் சொல்றதாம்” என்று முனுமுனுத்தாள்.

“சரி வைஷூ நீ இவளை அழைச்சுட்டு வாடா” என்கவும் வைஷூ அவள் கைபிடிக்க வரவும் “ஏய் இருடி நான் என்ன கிழவியா கைத்தாங்கலா புடிச்சுட்டு போக. நானே வர்றேன் வா” என்று அவளுக்கு முன் இவள் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

“இவளை என்ன தான் பண்றதோ” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு பின்னே சென்றார் லதா.

சிறு புன்னகையோடு எல்லாருக்கும் வணக்கம் வைத்து விட்டு ஓரமாக நின்று கொண்டாள்.
அவ்வப்போது கண்கள் வெற்றி பக்கம் சென்றது. “இன்னைக்கு கூட பட்டிக்காட்டான் மாதிரி வேஷ்டி சட்டை தானா. காட்டான் முரடன்” என்று அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் திட்டவும் அவன் மனதிற்கு தெரிந்ததோ என்னமோ அவனுக்கு புரையேறியது. “அல்லிராணி திட்டுறா போல. சேலைல அழகா தான்டி இருக்க திமிரழகி. ஆனால் என்ன தான் சேலை கட்டுனாலும் அந்த திமிர் மட்டும் முகத்துல அப்படியே தான் இருக்கு” என்று நினைத்துக் கொண்டான்.

பாலில் குங்குமப்பூவை
கலந்தது போல்
பால் வண்ண முகத்தில்
வில் போன்ற புருவ மத்தியில்
சிவப்பு வண்ண வட்டப் பொட்டு
அவ்வப்போது அவனை அளந்து
கொண்டிருக்கும் அங்கும் இங்கும்
துள்ளித் திரியும் மீன் விழிகள்
காதில் சதிராடும் பெரிய ஜிமிக்கி
சிவந்திருந்த உதட்டில் மேலும்
சிவப்புப்பூச்சு பூசியதால்
மாதுளைப் பூவென
சிவந்திருந்த உதடுகள்
வழுவழுவென இருந்த
சங்கு கழுத்தை அலங்கரித்த சிவப்புக் கல் பதித்த நெக்லஸ்
பின்னலிட்ட ஜடையில்
தொங்கிக் கொண்டிருந்த
தோளை உரசிய மல்லிச்சரம்
அவள் வெள்ளை நிறத்தைத்
தூக்கிக் காட்டும் சிவப்பு
வண்ண பட்டுச்சேலை
அவனை திட்டும் போது
வரும் முக பாவனைகள்..

என்று முழுதாய் அவளை அளந்து கொண்டிருந்தான். இல்லை இல்லை ரசித்துக் கொண்டிருந்தான். என்ன தான் புடவை, பூ, பொட்டு என்று இருந்தாலும் முகத்தில் பட்டினத்தின் நாகரிகம் தெளிவாகத் தெரிந்தது. நாகரிகம் என்பது பண்பாக நடத்தல், மரியாதையாக பேசுதல் என்பது போய் உடைகளும் ஆபரணங்களும் செயற்கை முகப்பூச்சுகளுமே நாகரிகமாக உருவெடுத்து விட்டது இந்தக் காலத்தில்.

பக்கத்தில் இருந்த குமார் “அண்ணே போதும் இங்க கல்யாணத் தேதியே குறிச்சுட்டாங்க. ஆனால் இன்னும் நீ பொண்ணைப் பார்த்துட்டு இருக்க. பேசனும்னா பேசிட்டு வாணே” என்றான் குமார்.

“நானும் அதுக்கு தான் வெயிட் பண்றேன். இருடா பெரியவங்க பேசி முடிக்கட்டும்” என்று பெரியவர்கள் பேசி முடித்த பின் “நான் மதிக்கிட்ட பேசனும் மாமா” என்றான்.

“நீ தாராளமா பேசலாம் வெற்றி” என்று விட்டு “மதி வெற்றியை உன் ரூம்க்கு அழைச்சுட்டு போ” என்றார்.

“இதுக்கு தான்டா நானும் வெயிட் பண்ணேன் காட்டான்” என்று உள்ளுக்குள் மகிழ்ந்து விட்டு “ம் வாங்க” என்றாள் வராத புன்னகையை வரவழைத்து.

அவள் பின்னோடு சென்றவன் வெகுநேரம் எதுவும் பேசாமல் அவளைப் பாரத்தவாறே அமர்ந்திருந்தான். அவளும் நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் எதுக்கு மேடம் இந்த பட்டிக்காட்டானைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சேங்க” என்றான்.

“எல்லாம் என் தலையெழுத்து உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு என்ன பண்றது” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

“அப்படி ஒன்னும் நீ என்னை சலிச்சுக்கிட்டு கல்யாணம் பண்ண வேண்டாம். நீயே உங்க அப்பாக்கிட்ட போய் என்னை பிடிக்கலைனு சொல்லிடு”.

“எங்க அப்பா கேட்க மாட்டாங்க. நீ போய் என்னை பிடிக்கலைனு சொல்லு” என்றாள்.

“ஓஓ…” என்று அவளை நக்கலாக பார்த்து விட்டு “என்னோட சம்மதத்தை கேட்டு தான் எங்க வீட்ல இவ்வளவு தூரம் சம்மந்தம் பேச வந்துருக்காங்க. உங்கிட்டையும் கேட்டு தான மாமா எங்களை வர சொன்னாரு. நீ அப்பவே சொல்லிருக்கலாமே” என்றான் ஒரு புருவம் உயர்த்தி.

“என்னால சொல்ல முடியாத சூழ்நிலைல இருக்குறேன். நீ  தான் பிளான் பண்ணி நீ சொன்ன மாதிரியே பண்ணிட்ட. உன்னை கல்யாணம் பண்ணிட்டு அந்த பட்டிக்காட்டுல இருக்கனும்னு நினைச்சாலே கடுப்பாக வருது” என்றாள் எரிச்சலாய்.

“அடிங்..” என்று அவள் கையை முறுக்கி அவள் முதுகோடு வளைத்து சுவரோடு சாய்த்து “கிராமத்துல வந்து வாழுறதுக்கு என்னடி வலிக்குது உனக்கு. கிராமத்துக்காரங்கனா என்ன காட்டானா உனக்கு?. படிச்சுட்டு விவசாயம் பண்ணா முட்டாளா நாங்களாம்?. ஒரு பொண்ணை ஆடம்பரமா வச்சுக்கிறவனை விட சந்தோஷமா வச்சுக்கிறவன் தான்டி ஆம்பளை. உன்னை சந்தோஷமா வச்சுக்க என்னால முடியும். எனக்கு இந்த கல்யாணம் நடக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை. உனக்கு இதுல விருப்பம் இல்லனா இப்பவே வெளியே போய் சொல்லிடு விருப்பம் இல்லனு. ரெண்டு குடும்பத்தோட நட்பையும் நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் பாழாக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றான்.

அவன் பேச்சில் விக்கித்து நின்றாள்‌ ஒரு நிமிடம்.

“என்ன அல்லிராணி என் பொண்டாட்டியாக ரெடியா” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

அதுவரை அவன் பிடியில் வலியில் முகம் சுளித்து இருந்தவள் இப்போது வெகு அருகில் மூச்சுக்காற்று படும் அளவுக்கு அவன் முகம் இருக்கவும் கூச்சத்தில் நெளிந்தாள். அலை அலையான காற்றில் பறக்கும் கேசம் வேஷ்டி சட்டை என்றாலும் மண்வெட்டி பிடித்து வேலை செய்த முறுக்கேறிய உடம்பில் பாந்தமாக பொருந்திருந்த சட்டை அவனுக்கு பொருத்தமாக இருந்தது. கண்களில் குறும்போடு முறுக்கி விட்ட மீசைக்கு கீழே உதட்டில் குறுநகையோடு அவளை அணைபோட்டவாறு சுவற்றில் இருகைகளை ஊன்றி நின்றிருந்தவனை ரசித்துக் கொண்டிருந்தவள், ‘அழகாத்தான் இருக்கான் இல்ல மதி’ என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு ‘ம் ஆமா’ என்று தலையாட்டியவள் தன் மனம் போகும் போக்கை அறிந்தவள் சே என்று மானசீகமாக தன் மனதில் தட்டி அடக்கி விட்டு “தள்ளி நில்லு காட்டான்” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்தினாள்.

அவன் சிரித்து விட்டு “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தேங்க அல்லிராணி மேடம். பரவாயில்லை சேலையில பொண்ணு மாதிரி கலக்கலா தான் இருக்க” என்றான் கண்ணடித்து.

அவன் சொன்னதில் ஒரு வினாடி உள்ளம் மகிழ்ந்து ‘சே மானங்கெட்ட மனசே’ என்று மனதை அடக்கி விட்டு “இங்க பாரு” என்று கைநீட்டி பேச வந்தவளின் விரலை பிடித்து மடக்கி “இந்த மாதிரி வருங்கால புருஷனை கைநீட்டி பேசுறதுலாம் தப்புடி செல்லக்குட்டி. அதுனால என்ன பண்ற உன் கொழுப்பெல்லாம் கொஞ்சம் சென்னையிலே இறக்கி வச்சுட்டு வா. ஓகேவா” என்று விட்டு அவன் வெளியில் சென்று விட்டான்.

‘சே எல்லாம் அந்த ரஞ்சித் குரங்குமூஞ்சி அண்ணாவால வந்தது. அவன் மட்டும் அன்னைக்கு என்னை அப்பாவ இன்டர்வியூவ் பண்ண போக சொல்லாம இருந்துருந்தா இப்படிலாம் நடந்துருக்குமா’ என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள். ‘நீ இன்டர்வியூவ் பண்ணதோட மட்டுமா விட்ட. அதுக்கப்புறம் அந்த கேஸ்ல நீ ஒன்னுமே பண்ணலயா?’ என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு ‘நல்லது பண்ணனும்னு நினைச்சு அது எனக்கே வினையா திரும்பிருச்சு. நான் என்ன பண்ண?. இந்தக் காட்டான் தான் என் தலைல எழுதிருக்கு போல. எவ்வளவோ பாத்துருக்கோம் இந்தக் காட்டானை சமாளிக்க மாட்டியா மதி. அவனும் நல்லவன் தான் இருந்தாலும் கிராமத்துல இருக்க முடியுமா?’ என்று அவள் மனசாட்சியும் மூளையும் மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டிருந்தது.

“என்னடி?. மாம்ஸ்க் கூட பேசுனதுல லூசாகிட்டியா. அப்படி என்னடி ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்தாரு” என்றபடி உள்ளே வந்தாள் வைஷூ.

இருக்குற கடுப்புல இவ வேற என்று விட்டு “ஆமா அதென்னடி மாம்ஸ்” என்றாள் எரிச்சலாக.

“ஏய் என்னடி மறந்துட்டியா நம்ம அக்ரிமென்ட். நாம ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ் மாதிரி. என்னோட ஹஸ்பன்ட் உனக்கு மாம்ஸ் உன்னோட ஹஸ்பன்ட் எனக்கு மாம்ஸ். மாம்ஸ் செமயா இருக்காருடி. விருமாண்டி மாதிரி. எனக்கு பிடிச்சுருக்குடி”.

“அப்போ நீயே அவனைக் கட்டிக்கிட்டு அந்த ஊர்ல போய் குப்பைக் கொட்டு”.

“நான் ரெடிடி” என்று தோளைக் குலுக்கவும் “உனக்கு வெட்கமே இல்லயாடி ஓகேனு சொல்லுற” என்று அவளை கொட்டினாள்.

“இதென்னடி பிடிக்கலை பிடிக்லைனு சொல்லிட்டு இப்படி பொறாமைல பொங்குற. ஏதோ சரியில்லையே. எங்கயோ இடிக்குதே” என்று யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

“இடிக்கும் இடிக்கும். போடி அங்குட்டு” என்று அவள் சமாளிப்பதற்குள் அவள் அம்மா லதா அழைக்கவும் இருவரும் அறையை விட்டு வெளியே சென்றார்கள்.

அவர்கள் வருவதற்குள் திருமணத்தேதி குறித்து அடிக்கடி ஊருக்கும் சென்னைக்கும் அலைய முடியாதென்று இன்னைக்கே பூ வைத்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.

மதி வெளியே வரவும் “உனக்கு என்‌ புள்ளையக் கட்டிக்க சம்மதமாடா மதி” என்றார் வெற்றியின் தாய் கனிமொழி.

ரவிக்கு மதி தன் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டாள், தான் எப்போதும் அவள் நல்லதற்கு தான் சொல்வேன் என்று உறுதியாக இருந்தார். லதா மட்டும் ‘மாட்டேன் என்று சொல்லி மானத்தை வாங்கி விடுவாளோ’ என்று பயத்தில் இருந்தார்.

அவள் வெற்றியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே ‘உன்னை சமாளிக்க முடியாதா என்னால’ என்று நினைத்து விட்டு ‘எனக்கு சம்மதம் அத்தை” என்றாள் புன்னகையோடு.

அதன் பிறகு என்ன பூ வைக்கும் சடங்கு இனிதே நடந்து முடிந்தது.

பூங்குழலியின் தாய் லட்சுமி ‘இவ்வளவு பெரிய இடத்துப் பொண்ணை எதுக்கு அந்தக் கிராமத்துல அதுவும் விவசாயம் பண்றவனுக்கு குடுக்குறாங்க?. ஏதாவது இல்லாமலா இருக்கும்’ என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார்.

ரவிக்கும் லதாவுக்கும் தன் மகளை நினைத்துப் பயம் நீங்கியது என்றால் சிவகுரு மற்றும் கனிமொழிக்கு மகாலட்சுமி மாதிரி பெண் தன் மகனுக்கு கிடைத்ததில் ஏகபோக மகிழ்ச்சி. ஆனால் அவளுக்கு சுடுதண்ணி கூட வைக்க இவங்க தான் கத்துக் குடுக்கனும்னு மருமகளா வந்த பிறகு தான் தெரியப்போகுது.

கல்யாணம் பண்ணிக்கப்போற பையனும் பொண்ணும் பாத்துக்குறாங்க அது ஓகே. இந்தக் குமாரோட பார்வை அவ்வப்போது மதியுடன் நின்ற வைஷாலியிடம் சென்று வந்தது.

அவன் பார்வையை உணர்ந்த வைஷாலி ‘இவன் யாருனே தெரியலையே. இப்படி பார்த்துட்டு இருக்கான். டேய் பார்வையிலே முழுங்கிடுவ போல’ என்று நினைத்து விட்டு அவனை முறைக்கவும் ‘அய்யய்யோ முறைக்குறாளே. இப்படியா பார்த்து வைப்போம்’ என்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டான் அவன்.

அதன் பிறகு ரவியின் சொந்தமும் ஊரிலே இருப்பதால் அங்கயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டு வாரத்தில் திருமணம் மற்றும் வரவேற்பு மட்டும் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அவர்களிடம் விடை பெற்று ஊருக்குக் கிளம்பினர்.

எதிர்பார்த்த வாழ்க்கை
இங்கு யாருக்கும்
அமைவதில்லை
ஆனால் கிடைத்த
வாழ்க்கையில் எந்த
எதிர்பார்ப்புமின்றி
வாழ்வதும் இல்லை..

எதிர்பாராத சம்பவங்களை
எதிர்கொள்ளும்
வாழ்க்கைப் பயணம்
ஆரம்பமாகிறது..

வெற்றிமாறன் மதிவதனியின் திருமண விழாவில் சந்திக்கலாம்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. hani hani

      வாவ்… வார்த்தையே இல்ல அவ்வளவு அழகான கதை… நான் சொல்லனும்னு நினைச்சத நீங்க கடைசி எபில சரி பண்ணிட்டீங்க. கொட்டேஷன் பேச்சுக்கு போட்டுட்டீங்க. அது போட்டப்புறம் தனியா அழகா தெரியுது. இன்னும் ஒன்னு மட்டும் இருக்கு… நீங்க பேசும் போது பேச்சு வழக்குல எழுதுறீங்க. அது மாத்தி தூய நடையில எழுதினா செம்மயா இருக்கும். அத மட்டும் மாத்திக்கோங்க. மத்தபடி கதை சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள் ❤️

      1. Pandiselvi
        Author

        தங்கள் கருத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சகி. பிழையை அடுத்த பதிவில் திருத்திக் கொள்கிறேன். தங்கள் வாசிப்பின் மூலம் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.