அத்தியாயம் -13
அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தாள் சாத்வி.
அவள் பக்கத்தில் தூங்கும் மகள் மகிஷாவை பார்த்தாள். தூக்கத்தில் கூட சிரித்த முகமாய் தூங்கும் குட்டி அழகை தூக்கி கொஞ்ச பரபரத்த கைகளை அடக்கியவள். மகளின் தூக்கம் கலையா வண்ணம் மெல்ல முத்தமிட்டாள்.
எத்தனையோ பிரச்னைகள், சுமைகள், சாவல்கள் என வெளி உலகம் நம்மை வாட்டி எடுத்தாலும் குழந்தையின் பூ முகம் பார்க்கையில் அனைத்தும் மறந்துவிடுகிறது.
சோர்வு வரும் நேரங்களில் நம் பிள்ளைகளே நமக்கு புத்துணர்ச்சி பானங்கள்.
டீ போட்டு குடிக்கலாம் என சமையல் அறைக்கு வந்தவள், டீ தூள் டப்பாவை திறக்க அது காலியாகி இருந்தது.
‘சரி கீழ் இருக்கும் கடையில் போய் வாங்கிக்கொள்ளலாம் ‘ என தீர்மானித்தவள் முகம் கழுவி தலை சீவி ப்ரஸை எடுத்து கொண்டு , சோஃபாவில் அமர்ந்து போன் நொண்டி கொண்டிருந்த துருவ்விடம், ” கடை வரைக்கும் போய்ட்டு வரேன். மகி தூங்கிட்டு இருக்கா பாத்துகோங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள்.
சிறு தலையசைப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது.
அவர்கள் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. மூன்றாம் தளத்தில் இருக்கும் அவளின் வீட்டில் இருந்து கீழே வர சில சமயம் மின்தூக்கியை பயன்ப்படுத்தி கொள்வாள், சில நேரங்களில் படிக்கட்டுகளையும் உபயோகித்து கொள்வாள்.
அன்று மின்தூக்கியையே பயன்படுத்தினாள்.
” என்ன சாத்விகா இப்போல்லாம் சொசைட்டி மீட்டிங்ல உன்ன ஆளே காணோம்? “
சின்ன புன்முறுவலை மட்டும் சிந்தியவள் எதுவும் பேசவில்லை.
அவள் அப்படி தான், தன் சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். அவளை அறியாதவர்களுக்கு அவள் ஒரு பேசாமடந்தை தான். அவளுக்குள் ஒளிந்துருக்கும் குறும்பு, கலகலப்பு யாவும் அவள் மனம் விரும்பியவர்களிடம் மட்டுமே வெளிப்படும்.
கடையில் டீ தூள் மற்றும் இதர பொருட்களை வாங்கியவள், லிப்ட்டில் ஏற தீரென லிப்ட் நின்றுவிட்டது. ஒரு பக்கம் மனம் பதறினாலும் எப்படியும் சிறிது நேரத்தில் பழுது பார்த்து சரி செய்து விடுவர் என நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
ஆனால் நேரம் போக போக அவளின் நம்பிக்கையும் கரைய ஆரம்பித்தது.
வேர்த்து கொட்ட ஆரம்பிக்க, மூச்ச விடவே சற்று சிரமம்மாக உணர்ந்தாள்.
கீழ் இருக்கும் கடைக்கு தானே போகிறோம் என அவள் ஃபோனை வீட்டிலேயே வைத்து விட்டு
வந்துவிட்டாள்.
கண்களில் நீர் சுரக்க அப்படியே கீழே கீழே சரிந்து அமர்ந்தாள் .
” துருவ் வாங்க எனக்கு பயமா இருக்கு ” கண்ணீரை துடைத்து கொண்டே முனுமுனுத்தது அவள் இதழ்கள்.
துன்பம் வரும் வேளைகளில் துணையவனையே தேடும் காதல் கொண்ட மனமது.
அப்பார்ட்மென்டில் இருக்கும் யாரும், கடந்து அரைமணி நேரமாக லிப்டை உபயோகிக்கவில்லை. அதனால் யாரும் எதுவும் தெரியவில்லை. அதன் பிறகே யாரோ பயன்படுத்த லிப்ட்டின் உள்ளே ஆள் மாட்டி இருப்பதை கண்டறிந்து பழுது பார்க்கும் வேலையில் வேகமாக இறங்கினர்.
அவ்வப்பொழுது இப்படி நடக்கும் என்பதால் பெரிதாக ஒன்னும் கூட்டம் கூடவில்லை தான். இருப்பினும் பல் வலியும் தலை வலியும் அவனவனுக்கு வந்தால் தானே தெரியும்..!
தனக்கிருந்த படபடப்பையும் பயத்தையும் உள்ளேயே அடக்கியவள் முகத்தில் எதயும் காட்டாது வெளியே வந்தாள்.
” ஒன்னும் பிரச்னை இல்லயே..? இந்தா மொத தண்ணி குடி “
” அசோசியேஷன் ஹெட் கிட்ட சொல்லணும் இதே நைட் டைம்ல ஆகி இருந்தா என்ன பண்ணுறது. எலக்ஷன் வரும்போது மட்டும் இதை பண்றேன் அதை பண்றேன்னு சொல்ல வேண்டியது, அப்புறம் ஒன்னும் பண்ணறது கிடையாது “
அங்கு நடந்த சலசலப்பு எதுவும் அவள் காதில் விழவில்லை. சாத்விகாவின் கண்கள் அவள் கணவனை மட்டுமே தேடி அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.
அவன் அங்கு இல்லாமல் போக,
” தேங்க்ஸ், நா வீட்டுக்கு போறேன். “
படி ஏற ஏற அவள் மனதில் பாரம் ஏறியது. அவள் கடைக்கு போகிறேன் என சொல்லி வந்து ஒரு மணி நேரம் மேல் ஆகிவிட்டது. இங்கு நடந்த விவகாரம் தெரியுமா தெரியாதா? தன்னை தேடவில்லையா?
‘ இல்லை இல்லை நிச்சயம் தேடி இருப்பார் வீட்டிற்கு போய் பார்த்தால் தானே தெரியும்? ‘ என சமாதானம் பேசிய மனசாட்சியை சாணியில் அடித்தார் போல் இருந்தது துருவ்வின் நடவடிக்கை.
அவள் கிளம்பும் போது எப்படி அமர்ந்திருத்தானே அதில் இருந்து ஒரு இன்ச் கூட அவன் உடம்பு அசையவில்லை. இன்னும் ஃபோனை தான் நொண்டி கொண்டிருந்தான்.
அவள் உள்ளே வரும் சத்தம் கேட்டு, ஒரு நொடி தலை நிமிர்ந்து பார்த்தவன் மறுபடியும் போனில் ஐக்கியமானான்.
அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்தவள் விறுவிறுவென அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்.
என்ன தான் துருவ் நல்லவன், அன்பானவன், பொறுப்பானவன் என நாம் பட்டம் கொடுத்தாலும் அவனிற்குள் இருக்கும் மற்றோரு குணம் அலட்சியம். சிலருக்கும் பெரிதாக தெரியும் விஷயம் பலருக்கு சிறிதாக தெரியலாம். இன்னும் சிலர் அதை எல்லாம் ஒரு விஷயமாக கூட கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம்.
அதை போல் தான் துருவ் நிறைய விஷயங்களை பெரிதாக அலட்டி கொள்ள மாட்டான். உண்மையில் அவன், அவள் சென்று ஒரு மணி நேரம் மேல் ஆகிவிட்டதை கூட கவனிக்கவில்லை. இது போல் சிறு சிறு விஷயங்கள் எல்லாம் அவன் பெரிதாக அக்கறை கொள்ள மாட்டான்.
ஆனால் அவள் லிப்ட்டில் மாட்டி இருந்தது தெரிந்திருந்தால் நிச்சயம் போய் பார்த்திருப்பான்.
அநேக பெண்கள் எதிர்ப்பார்ப்பது எல்லாம் தன் கணவன் வீரனாகவோ சூரனாகவோ இருக்க வேண்டும் என்பது அல்ல..! தன் மேல் கவனம் கொண்டு தன்னை கவனித்து. தான் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அரவணைத்து கொள்ள வேண்டும் என்பதே.
பல நேரங்களில் அதை செய்ய தவறி விடுகின்றன ஆண்கள்.
தேவை இல்லாததிற்கு எல்லாம் சண்டை போடுப்பவள். தப்பி தவறி கூட இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை.
சில நேரங்களில் உச்சக்கட்ட கோவம் என்பது மௌனமாக தான் வெளிப்படுகிறது , ஆனால் அதை புரிந்து கொள்ளும் திறன் தான் இங்கு சிலருக்கு இருப்பது இல்லை..!
சாத்விகாவிற்க்கு ஆற்றாமையில் அழுகை பொங்கி வந்தது. ஒவ்வொரு முறையும் தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவனை என்ன செய்வது என வெதும்பினாள்.
ஆனால் புரியும் படி அவள் எடுத்து கூறி விளக்கவில்லை என்பதை உணர மறந்தாள் சாத்விகா.
” ஓய் பஞ்சுமிட்டாய்..! என்ன பண்ணுற? “
சாப்பிட்டு கொண்டிருந்த அஷ்வினியின் அருகில் வந்தமர்ந்தான் மாதவன்.
அன்று அவளிற்கு உடம்பு சரி இல்லாத போது அவன் காட்டிய அதீத அக்கறையும் , பாசமும் அவளை வெகுவாகவே பாதித்திருந்தது. அவனோட சகஜமாக பேசவே சற்று சௌகரியமாக உணர்ந்தாள்.
அவள் பதில் ஏதும் பேசாமல் சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த
அமைதியாக அவளை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“அ… அது.. கொஞ்ச வேலை இருக்கு அப்றம் பேசலாம் ” என்றவள் வேகமாக தட்டை காலி செய்து விட்டு ஓட, அதை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் மாதவன்.
‘ நீ எங்க போய் ஓடி ஒழிஞ்சாலும் இந்த முறை உன்ன விடுறதா இல்ல பஞ்சுமிட்டாய்..! ஒரு முற உன்ன தொலைச்சிட்டு நா பட்ட பாடே போதும் ‘
” டேய்.. மச்சி உன் ஆளு அங்க பஸ் ஸ்டாப்ல நிக்குதுடா “
” அப்படியா! எப்பவும் 9 மணிக்கு தானே வருவா இன்னிக்கு என்ன இவளோ சீக்கரம் வந்துட்டா ? “
” நா வேணா போய் என்னனு கேட்டுட்டு வரட்டா? கேக்கறான் பாரு கேள்வி”
“டேய் டேய் இருடா இருடா இதோ கிளம்பிட்டேன் ” என்றவன் அவசர அவசரமாக சட்டையை மாட்டி கொண்டு கைகளாலேயே தலையை சரி கொண்டு வெளியே ஓட,
” டேய் பல்ல வெளக்கிட்டு போடா..!!” என்ற நண்பனின் குரல் அவன் காதை எட்டுவதற்கு முன் அவன் பஸ் ஸ்டாண்டை அடைந்திருந்தான்.
வழக்கம் போல் அவளிற்கு தெரியாமல் மறைத்து நின்று பார்த்து கொண்டிருந்தவன் அவள் எங்கே போகிறாள் என தெரிந்து கொள்ள அவளோட அவனும் பஸ்ஸில் ஏறினான்.
இவர்கள் தான் முதல் ஸ்டாப் என்பதால் பஸ் காலியாக தான் இருந்தது.
அஷ்வினியும் அவள் தோழியும் அமர்ந்திருந்த சீட்டிற்கு பின்னாடி சீட்டில் உட்கார்ந்து கொண்டான் மாதவன்.
அதிக கூட்டம் இல்லாததால் அவர்கள் பேசி கொண்டிருப்பது மாதவனுக்கு தெளிவாக கேட்டது.
” என்ன டி பதில் சொல்லட்டும் அவன் வேற விடாம லவ் டார்ச்சர் பண்ணிட்டே இருக்கான் ” அஷ்வினிடம் கேட்டாள் அவள் தோழி.
” என்னய கேட்டா எனக்கு என்ன தெரியும்? நீ தான் முடிவு பண்ணனும் “
” ரொம்ப பண்ணாதடி, அப்றம் நீயு இப்படி புலம்பும் போது நா உனக்கு எந்த அட்வைஸ்யும் கொடுக்க மாட்டேன் “
” நா ஏண்டி லவ் பண்ண போறேன், நமக்கு எல்லாம் இந்த லவ்வே செட் ஆகாது”
“பார்றா நீ லவ் பண்ண வேணா உன்ன யாராச்சும் லவ் பண்ணி ப்ரொபோஸ் பண்ணா? “
” அப்படிலாம் யாரும் பண்ண மாட்டாங்க டி “
“சப்போஸ் பண்ணா, என்ன சொல்லுவ”
” என்ன சொல்லுவேன். எனக்கு எல்லாம் இது செட் ஆகாதுனு சொல்லி நோ தான் சொல்லுவேன்.”
“அடிப்பாவி, அப்போ அவன் ரொம்ப நல்ல பையன்னா இருக்கான். உனக்கும் கேரக்டர் எல்லாம் புடிச்சிருக்குனா?”
“ம்ம்ம்.. அப்பவோம் நோ தான். எங்க அம்மா அப்பா பாக்கற மாப்பிளைய தான் நா கட்டிப்பேன் “
“சரி அப்போ இப்படி வெச்சிக்கலாம். உன்ன விரும்பற பையன் உன்கிட்ட சொல்லாம நேர உங்க அம்மா அப்பா கிட்ட வந்து பேசி அவங்கள ஓகே பண்ண வெச்சிட்டானா?”
“என்னடி .. லூசு மாறி பேசுற? இதுலாம் படத்துல்ல தான் நடக்கும். நிஜ வாழ்கையில்ல இப்படி எல்லாம் யாரும் கிடையாது “
“ஒரு வேள அப்படி நடந்தா என்ன பண்ணுவ?”
” அம்மா அப்பாக்கு ஓகே னா எனக்கும் ஓகே!”
அவளின் பதில் மாதவனிற்கு அளவில்லாத மகிழ்ச்சியை வாரி வழங்கியது. எப்படி அவளிடம் தன் காதலை தெரியப்படுத்தி அவளை கரம் பிடிப்பது என யோசித்தவனிற்கு அவளே வழிகாட்டி சொல்லி விட்டாள் அல்லவா. இனி அதை அப்படியே பின்பற்ற வேண்டும்.
இன்னும் அவனின் ஆசையை நோக்கி புது உத்வேகத்துடன் ஓட தொடங்கினான் மாதவன்..! வழக்கம் போல் வீட்டில் கேட்டரிங் கனவிற்கு எதிர்ப்பு கூற..! அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் அவனின் கனவை நிறைவேற்றி கொள்ளும் முதல் படியாக இங்கு வந்து வேலைக்கு சேந்தான்.
வேலைக்கு சேர்ந்த இரண்டே மாதத்தில் அஷ்வினியின் பெற்றோரை சந்தித்து பேச நினைத்தவன். பல முறை என்ன பேசுவது எப்படி பேசுவது என தனக்குள்ளையே ஒத்திக்கை பார்த்து கொண்டான்.
எப்பொழுதும் காதலிற்கு முதல் எதிரியாக வந்து நிற்பது ஜாதி தான். ஆனால் அதில் மாதவனிற்கு எந்த பிரச்னையும் இல்லை. ஏனென்றால் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் தான்.
முதலில் அதை அவன் அறிந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பாதி கடலை தாண்டிய உணர்வு..! இதற்கு மேல் அவன் பேசும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது என உணர்ந்தவன் அனைத்திற்கும் தயாராகி போனான்.
வீடு பூட்டி இருக்க, அங்கு பூ கடை போட்டு இருக்கும் பாட்டியிடம் விசாரித்தான்.
” அவங்க பொண்ணுக்கு கல்யாணம் உறுதி ஆகிருச்சிப்பா. அதான் நிச்சயத்துக்கு ஜவுளி எடுக்க போய்யிருக்காங்க, வெடி காத்தாலேயே கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல்ல வந்துருவாங்க “
அதிர்ச்சில் அவனால் அந்த செய்தியை நம்பவே முடியவில்லை.
‘ இல்ல நிச்சயமாக இப்படி நடக்க வாய்ப்பே இல்லை’ என அவன் மனம் உருப்போட்டு கொண்டிருக்க,
‘எ.. என்ன.. என்ன.. சொ சொன்னேங்க பா.. பாட்டி ” வார்த்தைகள் கரகரத்து வந்தது.
அவர், ‘ நான் தவறாக சொல்லி விட்டேன், மாற்றி சொல்லி விட்டேன் ‘ என சொல்ல மாட்டாரா என ஏங்கியவன் அவனிற்கு தெரிந்த அனைத்து கடவுளிடமும் வேண்டுதல் வைத்தான்.
ஆனால் உண்மையை மறைக்க முடியாதல்லவா?
” என்னப்பா நீ, இப்போ தானே சொன்னேன். அவங்க பொண்ணு நிச்சயத்துக்கு ஜவுளி எடுக்க போய் இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல்ல வந்துருவாங்க, இதோ பாரு வந்துட்டாங்க “
இரண்டு கார்கள் வர அதில் இருந்து ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர்.
முகம் கொள்ளா புன்னகையுடன் காரில் இருந்து இறங்கினாள் அஷ்வினி, உறவுகார பெண் அவள் காதில் எதையோ கூற, சினுங்கி கொண்டே வீட்டினுள் ஓடிவிட்டாள் அவள்.
அவள் கண்களில் தெரிந்த மின்னலும், முகத்தில் இருந்த பிரகாசமும் அவனிற்கு புதிது, இது தான் கல்யாண களை என்பார்களோ!?
பாவை மேல் ஆசைப்பட்ட
பாவி ஆனேன் நான்
உன்னை என் கண்ணில்
காட்டிய விதி மேல் பழி
சொல்வதா?
இல்லை இப்போழுது
பலி ஆகி நிற்கும்
என் காதலிற்கு வழி
சொல்வதா?
சொல்லடி பெண்ணே!
என்னை கொள்ளை
கொண்ட கண்ணே…!
எப்பொழுதும் தித்திக்கும்
உன் நினைவுகள்
இப்பொழுது தீப்பட்டது போல்
சுட்டெரிக்குதடி..!
காதல் செய்து உன்னால்
காயம் கொண்டு மனமது
கத்தி கூப்பாடு போடுகிறடி
நான் என்ன செய்யட்டும்
சொல்லடி பெண்ணே..!
அதன் பின் அவன் அவளை பார்க்கவில்லை. போய் பார்த்து மட்டும் என்ன செய்ய? மிகவும் மனம் உடைந்து போய் இருந்தான் மாதவன். நித்தம் வரும் அவள் நினைவுகளில் இருந்து தப்பி ஓடுவதே அவனிற்கு பெரும் பாடாக இருந்தது. அவள் இன்னொருவனுக்கு சொந்தமாக போறவள். அவளை பற்றி நினைப்பதே பாவம் என மூளையது ஒரு பக்கம் ஓலமிட்டாலும், மனமது அதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தது.
அவளை இழந்த வேதனை ஒரு பக்கம், திருமணம் ஆக போகும் ஒருத்தியை நினைக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் அவனை கொல்ல துடிதுடித்து போனான் மாதவன்.
ஒரு வருடம் கடந்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் நினைவுகளை ஓரம் கட்டி வைத்திருந்தான் மாதவன்.
அவளை மறந்தானா என்பதை சொல்ல முடியாது, ஆனால் நினைப்பதை குறைத்திருந்தான்.
அப்படி இருக்கும் பொழுது தான் ஒரு நாள் அவனின் கம்பெனி இன்டெர்வியூற்கு வந்த அப்ளிகேஷன்களில் அவன் கண்ணில் பட்டது அவளின் ரெஸ்யூம்..!
அவளின் விவர குறிப்பில் இருந்த
அன் மேரிட் ( unmarried) என்ற விவரத்தில் திகைத்தவன் அவன் நண்பர்கள் மூலம் ஊரில் அவளை பற்றி விசாரிக்க சொன்னான்.
எதோ பிரச்சனையாகி திருமணம் நிச்சயத்திற்கு முன்பே நின்றுவிட்டதாக கூற, உண்மையில் அவனிற்குள் என்ன உணர்வு என்று அவனிற்கே தெரியவில்லை.
வேண்டாம் என மூளை ஒரு எச்சரிக்க, அவனின் கண்களோ அவளை பற்றிய விவரங்களை ஆராய்ந்தது.
அவள் வசிப்பிடம் அலைபேசி எண் என அனைத்தையும் எடுத்து கொண்டான்.
முன்பு செய்த தவறை இப்பொழுது செய்ய கூடாது என தீர்மானித்தவன்.
அவனின் ஸ்டைலில் அதிரடியாக அவனின் முதல் உரையாடலை அவள் ஆட்டோவிற்கு காத்திருந்த பொழுது ஆரம்பித்தான். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதில் இடம் பிடிக்கும் முயற்சில் இருக்கிறான்.
ஆனால் ஏன் திருமணம் நின்று போனது என்ற காரணத்தை அவன் சற்று விசாரித்து தெரிந்திருந்தால் அவளின் இப்பொழுதைய மன நிலையை அவனால் புரிந்து கொண்டிருக்க முடியும். என்ன செய்ய நாம் ஒரு திட்டம் போட்டால் நம்மக்கு மேல் இருப்பவர் வேறு ஒரு திட்டம் போடுகிறார் அல்லவா..!!
நல்லபடியாக கேம்ப் முடிந்து அனைவரும் வீடு திரும்பி விட்டனர்.
அடுத்த நாள் ஆசையாக ஆஃபிஸ் வந்த கண்மணிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது, வருண் வரவே இல்லை.
பெரு மூச்சு விட்டவள் அமைதியாய் அவள் வேலையில் மூழ்கி போனாள்.
அடுத்த நாளும் அவன் வராமல் போக மனம் சற்று நிரன்டியது.
“ஒரு போன் கூட பண்ணி சொல்ல முடியாதா? ” என சற்று கோவம் எட்டி பார்க்க,
” உன் கிட்ட சொல்லற அளவுக்கு நீ யாரு? ” மனம் காரி துப்ப அமைதியாகி போனாள்.
தீவிரமாக பேப்பரில் ஏதயோ கிறுக்கி கொண்டிருந்தாள் கண்மணி.
நட்பு – காதல் – கல்யாணம் – குடும்பம்
அதில் நட்பிற்கும், காதலிற்கும் டிக் போட்டவள். கல்யாணத்தையும் குடும்பத்தையும் வெறித்துப்பார்த்து கொண்டிருந்தாள்.
‘ எப்படியும் கல்யாணம் பண்ணிட்டு அவரு வீட்டுக்கு போய் அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட எல்லாம் நல்ல பேர் எடுக்கனும், அதுக்கு இப்போவே அட்வான்ஸா போய் நல்ல பேர் எடுத்து கிட்டா என்ன? வாவ் செம ஐடியா டி மணி. உனக்கு இருக்க அறிவுக்கு எல்லாம் இன்னேரம் எங்கயோ போக வேண்டிய ஆளு, இங்க வந்து மாட்டிருக்க. இதுவும் நல்லதுக்கு தான் விடு விடு ‘என தன்னை தானே புகழ்ந்து கொண்டவள், மாதவனிடம் இருந்து வருணின் அட்ரஸை வாங்கி கொண்டவள்.
ஆப்பள், ஆரஞ்சு, மாதுளை மற்றும் சில நொறுக்கு தீனிகளை வாங்கி கொண்டு
வருணின் வீட்டு காலிங் பெல்லை அடித்தாள்.
வருணின் அண்ணி மது தான் கதவை திறந்தாள். அவள் குழப்பமாய் கண்மணியை பார்க்க,
” என்ன அப்படியே நிக்கறீங்க? எவளோ வைட்டா இருக்கு தெரியுமா சீக்கிரம் சீக்கிரம் வாங்குங்க ” என அவள் கையில் பை ஒன்றை கொடுக்க திரு திருவென விழித்து கொண்டே அதை வாங்கினாள் மது.
” ஹாப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு, செம வைட்டு என்ன பாக்கறீங்க என்ன தெரிலயா ஹீஹீ உங்களுக்கு எப்படி தெரியும்..! நானே சொல்லறேன் புதுசா ஆரம்பிச்சி இருக்க ப்ராஜெக்ட்டோட ஆப் டெவெலப்பர் நான்..! அப்றம் வருண் சாரோட ப்ர்சனல் அசிஸ்டன்ட்னு கூட சொல்லிக்கலாம் ” என்றவள் அந்த ப்ர்ஸ்னல் என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்தி கூறினாள்.
“ஓஹ்.. வாம்மா ” என மது சொல்லி முடிக்கும் முன்னரே சோபாவில் அமர்ந்து கொண்டவள்,
” பாஸ் ரெண்டு நாளா ஆபிஸ்க்கே வரல? “
” அவன் எதோ வேல விஷயமா சென்னை போறனு போய்யிருக்கான் நாளைக்கு வந்துருவான் “
“ஓ.. அப்படியா “
அவள் பேசி கொண்டிருக்கும் பொழுதே விளையாடிவிட்டு மதுவின் மகன் க்ருஷ் வீடிற்கு வர அவனோடு அரட்டை அடித்து கொண்டிருந்தாள் கண்மணி.
“எதாவுது குடிக்கரியா டீ? காபி?”
” ஹான் நானே போட்டுக்கறேன் ” என்றவள் அவள் பாட்டிற்கு சமையல் அறைக்கு செல்ல அவள செய்கையில் சிரித்தாள் மது.
வருணின் தாய் தந்தை திருப்பதிக்கு போய்யிருந்தனர். பேசி பேசியே அவளிடம் விஷயத்தை வாங்கினாள் கண்மணி.
புரட்டாசி மாதம் வீடு கிளீனிங் நடந்து கொண்டிருப்பதாக மது சொல்ல, “அப்போ நானு ஹெல்ப் பண்ண வரேன்.” என அடுத்த நாளும் வந்து விட்டாள் கண்மணி. முக்கியமாக வருணை பார்ப்பதற்கு.
மதுவிற்கு கண்மணியின் துறு துறு பேச்சு மிகவும் பிடித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் அவள் கேட்கும் நூறு கேள்வியில் என்பது கேள்விகள் வருண்ணை சுற்றியே இருப்பதை அவள் உணராமல் ஒன்றும் இல்லை.
எப்படியோ வருணின் வாழ்வில் ஒரு நல்லது நடந்து விடாதா என்ற ஏக்கத்தில் தானே அவளும் இருக்கிறாள்.
வருண் வந்தவுடன் அவனிடம் இதை பற்றி பேச வேண்டும் என நினைத்திருந்தாள்.
“வாவ்..! மதுக்கா உங்க சாரி கலெக்ஷன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு..”
“போதும் போதும் நீ வெக்கற ஐஸ்ல.. எனக்கு குளிர் காச்சலே வந்துரும் போல..! ஏம்மா இங்க இருக்கறதே ரெண்டு சாரி.. அதுவும் ஒன்னு சாணி கலரு.. இது ஒனக்கு அழகா இருக்கா? கொஞ்சமாச்சி மனசாட்சியோட பேசு மா..”
“ஹீஹீ.. அப்படி இல்ல கா.. உங்க ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்ல வெச்சே உங்க பேஷன் ஸ்டைல்ல நான் மொப்பம் புடிச்சிட்டேன்.. ஐ மீன் கண்டு புடிச்சிட்டேன்.. என்னோட இஸ்ரோ தொலை நோக்கு பார்வை படி பாத்தா உங்ககிட்ட அழகான சாரி கலெக்ஷன் இருக்கும் னு.. என்னோட நடு மனசு சொல்லுது கா..!”
“உங்க நடு மனசு வேற என்ன எல்லாம் சொல்லுது ..?” என கேட்டபடியே அவர்கள் இருந்த அறைக்குள் இன்னும் சில அட்டை பெட்டிகளை கொண்டு வந்து வைத்தான் அசோக்.
“இவுங்க..?” என கண்கள் சுருங்க கேள்வி கொக்கியிட்டு அவள் மதுவை பார்க்க..
சின்ன சிரிப்புடன்.. ” என் ஹஸ்பண்ட் ” என்றாள் மது..
“ஓஓ.. ஹாய் மாமா! இங்க பாருங்க உங்க வீடுக்கு வந்த கெஸ்ட்டுக்கு சோறு தண்ணி ஒன்னு கூட கண்ணுல காட்டாம இப்புடி வேல வாங்கறாங்களே உங்க பொண்டாட்டி..இதுலா தட்டி கேக்க மாட்டீங்களா..ம்ம்ம்ஹும்ம்.. இதுலா கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா.. நம்ம வள்ளூர் என்ன சொல்லி இருக்காரு..!
வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சிக்கன் பிரியாணி போடனும் னு சொன்னாறா இல்லயா..? என்னம்மா இப்புடி பண்ணுறீங்களே ம்மா..” என அவள் பொய்யாய் சலித்து கொள்ள..
சின்ன சிரிப்போடு அவ்விடம் விட்டு நகர்ந்தான் அசோக்..
” என்ன மதுக்கா சி.எம்ம இன்னும் கானோம்.. “
“சி.எம்மா? அது யாரு..? “
“வேற யாரு என் சின்ன மாமா தான்..!”
“என்னது சின்ன மாமாவா?”
“ஆமா நீங்க எனக்கு அக்கானா, உங்க ஹஸ்பண்ட் எனக்கு மாமானா , அப்போ அவரோட தம்பி எனக்கு சின்ன மாமா தானே? என்ன நான் சொல்லறது கரெக்ட் தானே..!”
” அது சரி ஆத்தா..! எப்போ அவன் கிட்ட நீ வாங்கி கட்டிக்க போறனு தெரில..
இந்தா உன் சி.எம்மோட திங்க்ஸ் தான் இந்த அட்ட பெட்டி ல இருக்கு இத போய் பக்கத்து ரூம் ல வெச்சிட்டு வா.. “
பக்கத்து அறையில் அதை வைத்தவள் அந்த அறையை சுற்றியும் நோட்டம்மிட்டு கொண்டே வர.. அவள் கண்ணில் பட்டது அந்த சூட் கேஸ்ஸ்..
அதை ஆர்வமாக திறந்தவளிற்கு புஸ் என ஆகிவிட்டது..
அதில் முழுக்க.. பாட புத்தங்களே நிறைந்து இருந்தது..
” ஹ்ம்ம்.. சரியான படிப்பு கொரில்லாவா இருப்பாரு போலயே.. எவ்வ்வ்ளோ வெயிட்டா இருக்கு எப்பா சாமி..
இதுல ரெண்ட ஆட்டைய போட்டு அப்படியே அத எடைக்கு போட்டு ரெண்டு வட வாங்கி தின்னுற வேண்டியது தான்”
என நினைத்தவள் இண்டு மூன்று புத்தங்களை எடுக்க.. அதற்கு அடியில் ஒரு பைல் இருந்தது..
என்னவாக இருக்கும் என அதை திறந்து பார்க்க அதில் வருண் ஆதித்யன் வெட்ஸ் தாரிகா என்ற கல்யாண பத்திரிக்கையுடன் ஒரு சின்ன ஹார்ட் ஷேப் போட்டோ பிரேமில் ஒருத்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருக்க..
அழகாய் சிரித்து கொண்டிருந்தான்..
அவன்..
அவளவன்..
வருண் ஆதித்யன்..!