
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 34
மருத்துவமனையே கதியென இருந்தனர் அன்புவின் வீட்டு ஆட்கள். மகன் உடல்நிலையால் வைரம் பாட்டிக்கும் உடம்பு முடியாமல் போக அவரையும் அங்கே சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இளங்கோவும் விஷயம் கேள்விப்பட்டு நேரே மருத்துவமனை வந்துவிட்டார். அங்கு இருந்த அனைவருக்கும் அவரைப் பார்த்தபோது ஆதங்கமாக இருந்தது. இவர் நினைத்திருந்தால் இந்த இரசாபாசங்களைத் தடுத்திருக்கலாம். இத்தனை பேருக்கு மனவேதனையும், உடல் வேதனையும் இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இரு உள்ளங்கள் பிரியும் நிலை வாராமல் காத்திருக்கலாம். ஆனால் மனைவியின் வாயை அடக்கத் தெரியாத அவர்மீது ஆதங்கமாகத் தான் இருந்தது.
பூபாலன் “பார்த்தீங்களா அண்ணா உங்க பொண்டாட்டி பண்ணின வேலையால என்னாச்சுனு”
இளங்கோ “நான் இவ இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்லப்பா. நேத்து யாரோ கொரானா அப்போ நடந்தத இவளாண்ட சொல்லிருக்கினானுங்க. நேத்து நைட்டே அன்பு வூட்டுக்குப் போய்க் கேட்குறேனு என்கிட்ட ஆடுனா.. நான் தான் படுடினுட்டேன். காத்தால நான் அத மறந்துட்டு கடைக்குப் போய்ட்டேன். இவ இப்படி பண்ணுவானு நினைக்கலயே”
“ரொம்ப அசிங்கமா பேசியிருக்காங்க அண்ணா. எல்லாரும் ஆடிப்போய்ட்டாங்க”
“நான் இப்படி பண்ணுவானு நினைக்கலயே.. இல்லனா அவள வுட்டுருக்க மாட்டேனே”
அஸ்வந்த் “மாமா உங்க பொண்டாட்டி சொல்ற மாதிரி எங்களுக்கு என் தங்கச்சிய கட்டிக்கொடுக்க வக்கில்லாம இல்ல.. அவன் தான் நான் கட்டிக்கிறேனு, டிரைனிங் முடியவும் அம்மா, அப்பாவோட வந்து பொண்ணு கேட்குறேனு சொன்னான்.
நான் போன போட்டு அவன் கிட்ட சொல்லிடுறேன் இனி அவனே வந்து பொண்ணு கேட்டாலும் நாங்க குடுக்குற நிலைமையில இல்லனு. எதுவா இருந்தாலும் உங்கம்மா கிட்ட பேசிக்கோ. உங்க குடும்பத்தால நாங்க பட்டது போதும்னு”
இளங்கோ “அஸ்வந்து தயவு செஞ்சி அப்படி எதுவும் பண்ணிடாதப்பா.. அவனுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வூணாம். தனியா கிடக்கான். வரட்டும் அப்பால முடிவு பண்ணிப்போம். சுமூகமா முடிக்கலாம் அவனுக்குத் தெரிஞ்சா முரடன் எதாவது செஞ்சு வச்சிடுவான். எனக்காகப்பா” என்றார் பாவமாக.
அவரிடம் சரி என்றவன் அவருக்காக சித்தார்த்திடன் எதையும் கூறவில்லை. அவர்கள் மருத்துவமனையிலிருந்த சமயம் யாருக்கும் எதுவும் ஓடவில்லை அன்பு குணமடைந்து வந்தால் போது என்பது மட்டும் தான் நோக்கமாக இருந்தது. அதனால் அஸ்வந்த் சித்தார்த்துடன் பேசவும் இல்லை. சித்தார்த்துக்கும் ஆரம்பக்கட்ட பயிற்சி கொஞ்சம் அதீதமாக இருக்க அவனுக்கும் இங்கே பேச வாய்ப்பு அமையவில்லை அதனால் அவனுக்கு இவ்விஷயம் தெரியாமலே போய்விட்டது யாரும் தெரிவிக்க முயற்சியும் செய்யவில்லை என்பதும் உண்மை.
மருந்துக்களின் மூலமும், அவர் குடும்பமே அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டதாலயும், உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்தார் அன்பு. வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருக்கும் வீட்டில் ஆனந்தி பற்றிய பேச்சை முற்றிலும் தவிர்த்திருந்தனர். மேலும் மேலும் ஞாபகப்படுத்தி அவரைக் காயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஒரு வாரம் செல்ல இளங்கோ அன்புவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
“வாங்க”
“அன்பு.. நல்லா இருக்கியா?”
“இருக்கேன்”
“மன்னிச்சிடு அன்பு.”
“விடுங்க. மன்னிப்புலாம் எதுக்கு”
“சத்தியமா அந்தக் கயிதை இப்படி பண்ணுவானு நினைக்கல”
“நானும் என்கூட பிறந்தவ இப்படி இருப்பானு நினைக்கல. எவ்ளோ பேச்சு. என் மகள பத்தி”
“என்ன சொல்றதுனு தெரியல.. மன்னிச்சிடு அன்பு”
“நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கனும்? அவ பண்ணினதுக்கு நீங்களும், சித்தார்த்தும் என்ன பண்ணுவிங்க? பாவம் அவன் மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டான் இவளுக்காகச் சித்தார்த்தை நான் விட முடியாது. அவன் மனச என்னால நோகடிக்க முடியாது”
எனக்கூற இளங்கோவுக்கு அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தன் மனைவி அவர்களை இவ்வளவு கீழ்தரமாகப் பேசியும், அவர் அவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் தன் மகன் மனம் என்ன பாடுபடும் என நினைக்கிறார். அவர் அவமானப்பட்டாலும் தன் மகன் விருப்பம் முக்கியமென நினைக்கிறார் அவரிடம் எப்படி தான் கூற வந்ததை கூற, என அயர்சியாகப் பார்த்தார்.
“நீங்க எதோ சொல்ல வந்த மாதிரி இருக்கே?” என அன்பு கேட்க,
“உன் நல்ல மனசு யாருக்கும் வராது அன்பு. என் பிள்ளைய உன் பிள்ளையா வளர்த்து ஆளாக்கி விட்டுருக்க, உனக்கு என்ன கேவலம் வந்துக்கினாலும் என்புள்ள நல்லா இருக்கனும் நினைக்கிற. உன்னாண்ட முன்னாடி நிக்கவே எனக்குக் கூச்சமா இருக்கு. ஆனாலும் நிக்கிறேன். ஏன் கையேந்தி நிக்கிறேனு கூடச் சொல்லலாம்” எனக்கூற அன்பு கூர்ந்து நோக்கினார் இளங்கோவை.
பின் இளங்கோவே தொடந்தார் “உண்மை தான் நான் உன்னாண்ட பிச்சை கேட்டுத் தான் நிக்கிறேன். புள்ள பிச்சை. என் புள்ளை எனக்கு வேணும் அன்பு” எனக்கேட்க திகைத்தார் அன்பு. அன்பு என்ன அவர் பிள்ளையை அவரிடமிருந்து பிரிக்கவா நினைத்தார்? அந்த எண்ணமே அன்புவிடம் இல்லையே!
“என்ன மச்சான் என்னென்னவோ சொல்றீங்க. புரிபடலயே!”
“அன்பு எனக்கு என் பிள்ளை வேணும் அன்பு. அவன் சின்னதா இருக்கும்போது அந்தக் கயிதை பேச்ச கேட்டு இந்தாண்ட வுட்டுப்புட்டேன். ஆனா இப்போ புள்ளைக்காக ஏங்கி நிக்கிறேன். நான் மட்டும் இல்ல அந்தக் கயிதையும் தான் புள்ளைக்கு ஏங்குறா. அதுல தான் இப்படி வந்து சலப்பிட்டு போய்ருக்கா”
“மச்சான் நாங்க உங்க பிள்ளைய பிடிச்சு வைக்கலயே! அவன் இங்கயே வளர்ந்தான், இருக்கான். இங்க இருக்குறவன கட்டாயப்படுத்தி வெளிய துறத்தவா முடியும்?” என்றார் மெதுவாக, ஆதங்கமாக. கண்டிப்பா இப்போ அஸ்வந்த் இருந்திருந்தால் இதைப் பேசவே விட்டிருக்க மாட்டான் அன்புவின் உடல்நிலை கருதி. ஈகையும் அடுக்களையில் வேலையாக இருக்க, இளங்கோவும் அன்புவும் பேசிக்கொண்டது யாருக்கும் தெரியவில்லை.
“எனக்குப் புரியுது அன்பு. நாங்க பண்ணினது தப்பு தான் பெரிய தப்பு தான். பெத்த பிள்ளைய பாரமா நினைச்சு ஒதுங்கினது தப்பு தான். ஆதான் இப்போ அனுபவிக்கிறோம் எல்லாரும் அவங்கவங்க பிள்ளைகளோடு இருக்கும்போது நாங்க எங்க பிள்ளைய எட்டி நின்னு பார்க்கும்போது வலிக்குது அன்பு.
அவன எங்களாண்ட வச்சிக்கனும்னு தோனுது ஆனா அவன் எங்கள எட்ட நிற்க வைக்கிறான். எங்க வூட்டுக்கே விருந்தாளிபோல வரான். அவனுக்கு நீங்கத் தான் குடும்பம்னு இருக்கான். ஊருக்குப் போகும்போது கூட நாழு பேரோட ஐஞ்சாம் பேரா சொல்லிட்டு போறான். வலிக்குது அன்பு.
எங்க புள்ளையே எங்கள இப்படி எட்டி நிறுத்துனா நாங்க எங்க போறது சொல்லு. உனக்கு அஸ்வந்த் இப்படி பண்ணினா எப்படி இருக்கும்? அப்படி தான எங்களுக்கும் எங்க புள்ளை எங்கள தள்ளி நிறுத்துறது வலிக்கும். தினமும் அவளும் நானும் புலம்பாத நாளே இல்லை. முன்னாடி பண்ணின தப்புக்கு இப்போ அனுபவிக்கிறோம் நாங்க”
“புரியுது. ஆனா நாங்க கட்டாயபடுத்தி அவன பிடிச்சு வைக்கலயே. அதுக்காக அவன வெளிய போனு எங்களால சொல்ல முடியாது மச்சான் மன்னிச்சிடுங்க. வேற நான் என்ன பண்ணனும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?”
“தெரியலயே” எனக் கையை விரித்துக் கண்ணீர் விட்ட இளங்கோவை பார்க்குக் போது அன்புவுக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை.
“அவன வெளிய போனு நீங்க சொல்ல மாட்டீங்க எனக்குத் தெரியும் ஆனா அவனுக்குக் கண்ணாலம் நடந்தாலாவது அவன் எங்களாண்ட வந்து மகன், மருமகள்னு நாங்க குடும்பமா இருக்கலாம்னு அவளும், நானும் நினைக்கிறோம். அப்போ உங்களுக்கும் அவனுக்கும் கஷ்டமில்ல, எங்களுக்கும் எங்க புள்ள எங்களாண்டவே இருப்பான்னு தான் நாங்க நினைச்சோம். ஆ..ஆனா மதும்மாவ கண்ணாலம் பண்ணினா அதுவும் நடக்க வாய்ப்பில்லை” எனத் தலை கவிழ்ந்தார்.
அன்புவுக்கு அவர் பேச்சின் சாராம்சம் இப்போது தெளிவாக விளங்கியது. அவர் எங்க சுத்தி எங்க வராரென விளங்கியது. மனைவி சூறாவளி ஆட்டம் ஆடிச் சொன்னதை இவர் தென்றலால் வருடிய படி கூறிகிறார். ஆனால் விஷயம் ஒன்னே ஒன்னு மதுதாராவும், சித்தார்த்தும் சேரக் கூடாது என்பது மட்டும் தான். கசந்துவிட்டது தான் ஆனாலும் ஆனந்தி அளவுக்கு வலிக்கவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டார்.
“இப்போ என்ன என் மகள் உங்களுக்கு மருமகளா வேணாம் அவ்வளவு தான”
“இல்ல எனக்கு மதும்மாவ மருமகளா ஆக்கக் கொடுத்து வைக்கல. எனக்கும் கொள்ளை ஆசைக்கீது. மதும்மா எங்க வீட்டுல வந்து விளக்கேத்த, அவ கையால கஞ்சு குடிக்க, அவ மூலமா என் குடும்ப வித்து விருத்தியடைய ஆனா.. ஆனா.. அது உங்க தங்கச்சி இருக்குற வரை நடக்கவே நடக்காது.
நடந்தாலும் என் மகனும், மருமகளும் நிம்மதியா இருக்க முடியாது. இருக்க விட மாட்டா. எனக்குப் பிடிச்ச இரண்டு குழந்தையும் வாழ்க்கை முழுக்க அங்க கஷ்டப்படனும், இல்ல அவங்க இந்தாண்டவே தங்கிட்டா காலம் முழுக்க என் மகனையும், மருமகளையும் பிரிஞ்சு நான் கஷ்டப்படனும்.
மருந்து கசக்கும் தான் ஆனா அத குடிச்சா தான் குணமாகும்னா குடிக்க தான வேணும். மதும்மா இல்லாம வேற பொண்ணை சித்தார்த்துக்கு கட்டினா காலம் முழுக்க நம்ம எல்லாருமே நிம்மதியா இருக்கலாம்”
அன்பு எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தார். “அன்பு என்னைக்கும் உங்க குடும்பம் மேல எனக்கு ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கு. ஆனா இப்போ எல்லாத்துக்கும் மேல என் புள்ளை எனக்கு வேணும். உன் கால்ல வேணா விழுகுறேன்” எனக் கால்ல விழுந்து அழுக, சட்டுனு அன்புவால் எழும்பவும் முடியவில்லை. அந்நேரம் சரியாக உள்ளே வந்த பூபாலன் இளங்கோவை பிடித்துத் தூக்கி நிறுத்தினார்.
“நீங்க பேசினது எல்லாம் கேட்டேன். நீங்க சொல்றது புரியுதுண்ணா. நாங்க என்னனு பேசிட்டு முடிவு சொல்றோம். அன்புக்கும் இப்போ ரொம்ப யோசிக்க கூடாது” எனக்கூற அவரின் பேச்சில் இடையிட்ட அன்பு,
“ஆதவனுக்கு மதுவ கட்டிவைக்கலாமா?” எனப் பூபாலனைப் பார்த்துக் கேட்க,
“எப்போ கல்யாணம் வைக்கலாம்னு சொல்லு அன்பு வச்சிக்கலாம்” என உடனடியாகப் பதில் கூறினார் பூபாலன். அதில் இளங்கோவின் முகம் கறுத்தது. அவர்கள்போல் என்னால் இருக்க முடியவில்லையே! அன்புவிக்காக எதுவும் செய்யும் பூபாலன் குடும்பத்தின் மேல் எப்பவும் இளங்கோவுக்கும் நல்ல அபிப்ராயாம் தான்.
“மச்சான்! நீங்க என்ன சொல்றீங்க” என இளங்கோவைப் பார்த்துக் கேட்டார் அன்பு.
“அன்பு! அன்பு!” என அவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுத இளங்கோ, “நானே கூட இருந்து என் மருமக கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” எனக்கூற, விரக்தியாய் ஒரு சிரிப்பு சிரித்துவைத்தார் அன்பு.
அதற்குப் பிறகு தான் அவசர அவசரமாக ஆதவன், மதுதாரா திருமணம் ஆரம்பமானது. யாரும் தடுக்கவில்லை. அன்புவின் பேச்சு மட்டுமே அங்கு முக்கியம். அவர் மனநிலையும், உடல்நிலையும் மட்டுமே முக்கியம்.
ஆனால் அன்புக்கு சித்தார்த்தை பற்றித் தெரியும் அல்லவா! அவனை வளர்த்தவராச்சே! இவ்விஷயம் எல்லாம் தெரிந்தால் அவன் அவன் பெற்றோரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டானெனத் தெரிந்ததால்,
“சித்தார்த்துக்கு எதுவும் தெரிய படுத்த மாட்டேனு எல்லாரும் என்மேல சத்தியம் பண்ணுங்க. அவன் அவங்க பெத்தவங்களோட இனி இருக்கட்டும்” என அனைவரிடத்திலும் தன்மேல் சத்தியம் வாங்கிக் கொண்டார். அந்தச் சத்தியத்தால் மட்டுமே மதுவும், ஏன் ஆதவனும் கூடச் சித்தார்த்திடம் எதையுமே தெரிவிக்க வில்லை.
ஆதவனுக்கும், மதுவுக்கும் இந்தத் திருமண விஷயம் அதிர்ச்சி தான் எனினும் அன்புவின் உடல்நிலை ஒன்று மட்டும் தான் இருவரையும் எதிர்த்தோ, மறுத்தோ பேச முடியாத அளவுக்கு அவர்களின் வாயைக் கட்டிப்போட்டது.
மதுவிற்கு சித்தார்த்தின் மீதான காதல் அஸ்வந்துக்கும் தெரியும் சித்தார்த்தின் முன்னமே கூறியிருந்தானே அவளுக்கும் தன்னை பிடிக்குமென. ஆதலால் அவனுக்கு தெரியும். தாயறியா சூழா ஆகவே ஈகை, அன்பு ஏன் வைரம் பாட்டி முதற்கொண்டு அனைவருக்கும் தெரியும். அன்புவுக்காக மட்டுமே கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறாள் எனவும் தெரியும்.
அகிலாவின் தொடர் வற்புறுத்தலால் ஆதவனும் சரி என்ற முடிவுக்கு வந்திருந்தான். மதுவை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற மனநிலையில் சந்தோஷமாகவே அந்தத் திருமணத்திற்கு தயாரானான் ஆதவன் அவன் முகூர்த்த உடைகள் எடுக்கும் வரையுலும்.
திருமணத்திற்கான உடைகள் எடுப்பதற்கு கூட வராமல் இருக்க ஆதவனுக்கு அப்போது தான் ஏதோ தவறாகப்பட்டது. பின்னர் தான் அவளைக் கூர்ந்து கவனிக்க மதுவின் கசங்கிய முகமும், கலங்கிய கண்களும் அவனுக்கு வேறொன்றை உணர்த்தியது. அது மதுவிற்கு சித்தார்த்தின் மீதான காதலை. அதை அவள் வாயாலும் கேட்டறிந்து கொண்டான்.
“மது என்கிட்ட எதுவும் மறைச்சு வச்சிருக்கியா?”
“இல்லையே ஏன்?”
“இல்ல உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லயோனு தோனுது” எனக்கூற சரேலென நிமிர்ந்தாள்.
“சித்தார்த் அண்ணன் உனக்கு ரொம்ப குளோஸ் என்னைப் போல அது தெரியும். அதையும் தாண்டி அவர் மேல உனக்கு” எனக்கேட்க, முகத்தினை மூடி அழுதாள். அவள் அழுகையே அவனுக்கான பதிலை தந்துவிட்டது தான் ஆனாலும் அவளே மனம் திறந்தாள்.
“ஆமா எனக்கு அவர பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும்னு கொஞ்ச நாள் முன்னாடி தான தெரியும் அஸ்வந்த் அண்ணா சொல்லி, ஆனா எல்லாமே வேஸ்ட். என் காதலுக்கு ஆயுளே இல்ல. என் காதல் அவருக்கு இதுவரையும் தெரியாது இனிமேலும் தெரிய வராது” என்றாள். ஆனால் அவள் கண்களில் தெரிந்த காதலை அவள் கள்வன் ஏற்கனவே கண்டுக்கொண்டானெனத் தெரியாமல் மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“என்னால சித்தத்துவ மறக்க முடியல ஆது. எனக்கு அவர் வேண்டாம் ஆனா அவர தவிற யாரும் வேண்டாம். நான் இப்படியே தனியாவே இருந்துக்குறேன். என்னால உன்னை அப்படி நினைக்க முடியலடா. பிளீஸ் எப்படியாது கல்யாணத்த நிறுத்து. எனக்கு உன் வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்குற மாதிரி ரொம்ப கில்டியா இருக்கு” என அழுதாள்.
“அப்போ தனியாவே இருக்க போறியா?”
“எனக்கு அவர நினைச்சுக்கிட்டே வாழ்க்கை முழுசும் வாழ நினைவுகள் கொட்டிக்கிடக்கு. அது போதும் எனக்கு. என்னால கடைசி வரை அந்த ஞாபத்துலயே வாழ்ந்துருவேன்”
“மெண்டல் மெண்டல் எத்தனை நாளைக்கு இப்படி வாழ முடியும்னு நினைக்குற?”
“முடியும் என்னால முடியும்”
“ஆனா என்னால முடியாது. உன்ன அப்படி விட என்னால முடியாது. என்னை உன் புருஷனா நினைக்க வேண்டாம்.. கல்யாணம் ஆனாலும் என் ஃபிரண்டா கடைசி வரைக்கும் இரு. நான் பார்த்துக்குறேன்”
“என்னால ஏன் உன் வாழ்க்கையையும் பாழாக்குற?”
“அப்போ என்னைக் கட்டிக்கிட்டு என்னோடு வாழு”
“என்னால முடியாதே” என அழுக,
“அப்போ ஃபிரண்டாவே இரு. வேற ஆப்ஷனே இல்ல. நான் வரேன்” எனக் கிளம்பியவன் அந்தத் திருமணத்தை நிறுந்த எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஆனால் அதற்கு மேல் அந்தத் திருமண வாழ்விற்குள் செல்லவும் அவன் மனம் அனுமதிக்கவில்லை. கடைசியில் அவன் சென்று நின்றது இடம் தான் சித்தார்த்.
அவனிடம் மது என்னுடையவள், நான் அவளை மணக்கப்போகிறேன், என அவனைச் சீண்டி, தூண்டி, அவள் புகைப்படங்களை அனுப்பி வெறுப்பேத்தி அவனை இங்கு வரவழைத்து அவனுடன் மதுவிற்கு திருமணத்தையும் முடித்து வைத்தான்.
சிந்து “இது தான் நடந்தது அண்ணா.. கல்யாணத்துக்கு பிறகு அப்பா மதுவை ஏத்துக்கினாலும் எனக்கும், அம்மாவுக்கும் மதுவ பிடிக்கல. எதாவது ஒன்னு செஞ்சிக்கிட்டே தான் இருந்தோம். நீ அவங்களை தனியா எங்களாண்ட விட்டுட்டு போனதும் எங்களுக்கு வசதியா போச்சு”
என ஆரம்பித்துச் சித்தார்த் ஊருக்குப் போனபின் மது அவர்களிடம் அனுபவித்த அத்தனை துன்பத்தையும் கூறியவள்,
“அதுக்கு தண்டனையா தான் கடவுள் என் குழந்தையைப் பறிச்சுட்டார். அதை நான் உணர்ந்து இன்னைக்கு காலையில மதுக்கிட்ட மன்னிப்பு கேட்டேன். உங்ககிட்டயும், மாமாக்கிட்டையும் மன்னிப்பு கேட்குறேனு மதியானம் கூட மதுக்கிட்ட சொன்னேன். ஆனா அதுக்குள்ள அம்மா திரும்பவும் மதுக்கிட்ட போய்”
என இன்று மாலை நடந்ததைக் கூறி அத்தனை பேருக்கும் நடுவில் அனைவரின் காலிலும் விழுந்து “என்னை மன்னிச்சிடுங்க” என அழுதாள். அங்கிருந்த யாரும் அவளைத் தூக்கிக்கூட விடவில்லை அத்தனை பேரும் மதுவை நினைத்து வருந்த, தானாக எழுந்து அண்ணனிடம் சென்றவள்,
“என்னை மன்னிச்சிடுண்ணா” எனக் கையைப் பிடிக்க, அவள் கையை உதறியவன்,
“நான் உனக்கு அண்ணனுமில்ல.. நீ எனக்கு தங்கையுமில்ல. தப்ப உணர்ந்து உண்மைய சொன்னதால உன்ன சும்மா விடுறேன். இனி என் கண் முன்னாடி நீ வந்துடாத”
“அண்ணா!”
“கெட் லாஸ்ட். இனி எனக்கும், உங்களுக்கும் சம்மந்தமே இல்லை. என்னை பெத்தவங்க கிட்ட போய் இப்படியொரு பிள்ளை உங்களுக்கு இருந்தான்ற நினைப்பையே மறந்திட சொல்லு. என் கண் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு. வந்தா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. உங்களால இப்போ வரை நான் இழந்தது போதும். இனிமேலும் இழக்க என்கிட்ட என் உசுரத்தவிற ஒன்னுமில்ல. இந்த உசுரு ஐ.சி.யூககுள்ள தவிச்சிட்டு இருக்காளே அவளுக்கானது. அதையும் உன்னையும், என்னையையும் பெத்தவளுக்காகக் குடுக்க நான் தயாரா இல்லனு சொல்லிடு”
எனக்கூறியவன் மேற்கொண்டு யாருடமும் பேசாமல் கண்களை இறுகமூடி அந்த இருக்கையில் தலைசாய்ந்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் அமைதியாக இருப்பது போலான தோற்றம் தான் தெரியும் ஆனால் அவன் மனதில் பல பூகம்பங்களும், சுனாமிகளும் போட்டி போட்டுத் தாக்கி அவனை நிலை குழைய செய்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் இதெல்லாம் போதாதென அவனைச் சுழற்றி, சுழற்றி சூறாவளியாய் அடிக்க ஒருத்தி கண்விழித்திருக்கிறாளெனத் தெரியாது இவனோ கண்களை மூடித் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்காகக் காத்திருக்கிறான். சூறாவளியைச் சமாளித்து அவளைத் தென்றலாக மாற்றுவானா அல்ல அந்தச் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாவானா பொருத்திருந்து பார்க்கலாம்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
15
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 33
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 35
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

இத்தனை வருடம் இல்லாத பிள்ளை பாசம் இப்பொழுது எங்கிருந்து வருகின்றதோ இளங்கோவுக்கு.
ஆனந்தியின் செயல்களுக்கு எதிர்ப்பு சொல்லாமல் வாயை மூடி அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், சிறிது காலம் சென்றிருந்தால் சரியாகி இருக்க கூடிய விடயத்தை தங்கள் பிள்ளை தங்களுடனே இருக்க வேண்டும் எனும் சுயநலத்தினில் இன்னும் மோசமாக்கி விட்டிருக்கிறார்.
இனிமேல் கத்தி கூப்பாடு போட்டால் வேலைக்கு ஆகாது என்றறிந்து இளங்கோ மூளையை கழுவி அவர் மூலம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதித்துள்ளார் ஆனந்தி.
மகன் மனது தெரிந்தும் அவன் எங்கிருந்தால் சந்தோஷமாக இருப்பான் என்றறிந்தும் சுயநலமாக இருந்துவிட்டாரே.
ஆனந்தி பேச்சை சகித்து கொண்டு சித்தார்த்திற்காக யோசித்தவர்களை இப்படி இக்கட்டில் நிறுத்தி திருமணத்தை நடத்த தூண்டியுள்ளார்.
சித்தார்த் முடிவு சரியே. மது என்ன செய்ய இருக்கிறாளோ?
மிக்க நன்றி😍
அய்யோ இதென்ன இப்படி பண்ணி வச்சிருக்காங்க. அந்த குடும்பத்தை அப்பாவும் அம்மாவும் பண்ண கஷ்டம் போதாதுன்னு இவன் வேற என்னென்ன பண்ணான். நானே சொல்லுவேன் மது எல்லாருக்கும் நல்லா பதிலடி தரணும்.
மிக்க நன்றி😍