Loading

 

காதல் 22

 

“நம்மளோட ஒரு பார்வையோ, சிரிப்போ ஒருத்தரைச் சந்தோசப்படுத்துதுனா அது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? எல்லாருக்கும் அடுத்தவங்களைச் சந்தோசப்படுத்த தெரியாது… இன்னொருத்தரோட கண்ணீருக்குக் காரணமானவங்க கோடிக்கணக்குல இருக்குறப்ப அவங்களைச் சிரிக்க வைக்குற ஆட்களோட எண்ணிக்கை ஆயிரத்துல கூட இருக்காது… சப்போஸ் உங்களால யாரையும் சந்தோசப்படுத்த முடியாது, அந்த குணம் உங்களுக்கு இல்லனா, அட்லீஸ்ட் அவங்க சந்தோசத்தை நாசமாக்குற வேலைய மட்டும் செஞ்சிடாதிங்க… எதை உங்களால ஆக்க முடியாதோ அதை அழிக்குறதுக்கான உரிமையும் உங்களுக்குக் கிடையாதுங்கிறதை மறந்துடாதிங்க”

 

-டாம்

 

ஆர்யாவிடம் மைத்ரி மற்றும் ஆராதனாவின் மொபைல் எண்ணைக் கொடுத்த கையோடு பிரதீப் செய்த அடுத்த காரியம் ரவியைப் பற்றி விசாரித்து ராஜேஷிடம் விவரம் கூறியது தான்.

 

ரவி சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி எந்த நிறுவனமும் அவனுக்கு வேலை கொடுக்க முன்வராததால் இன்னுமே நண்பனொருவனின் தயவில் அவன் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தது.

 

ராஜேஷுக்கு இத்தகவல் கிடைத்ததும் முதல் காரியமாக அவனை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தான். ரவி வெட்டி கௌரவத்தோடு மறுக்கவும் தந்தை ராகவனை வைத்து காயை நகர்த்தினான்.

 

இளைய மகன் போதைக்கு அடிமையானதோடு மட்டுமன்றி ஒழுக்கமற்றவனாகாவும் மாறிய துக்கம் கோபமாக உருவெடுக்க ரவியைப் போனிலேயே துவம்சம் செய்துவிட்டார் ராகவன்.

 

“ஒழுங்கா ஃப்ளைட் பிடிச்சு இந்தியா வந்து சேரு… இல்லனா என் சொத்து முழுக்க ராஜேஷுக்கு எழுதி வச்சிடுவேன்… நயா பைசா உனக்குக் கிடைக்காது.. உங்கம்மாவை வச்சு சமாளிக்கலாம்னு நினைக்காத… அவளே இப்ப அடங்கி ஒடுங்கி தான் இருக்கா”

 

ராகவன் சொன்னதை நம்பாத ரவி அபர்ணாவின் மொபைலுக்கு அழைத்துப் பேசினான். அவரோ பிரதீப் அமெரிக்காவில் ரவி செய்த கேவலங்கள் அனைத்தையும் ராஜேஷிடம் புட்டு புட்டு வைத்துவிட்டதைக் கூறினார்.

 

ரவி கெட்டுப் போனதற்கு அபர்ணா தான் காரணம் என்று ராகவன் அவரைத் திட்டித் தீர்த்தாராம். அதன் பிற்பாடு மனைவியோடு எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளாதவர் வீட்டுப்பொறுப்பை மருமகள் ஆராதனாவிடம் ஒப்படைத்த கதையை இளைய மகனிடம் பிழிய பிழிய அழுதவாறு சொல்லி முடித்தார் அபர்ணா.

 

“எதுவா இருந்தாலும் இந்தியா வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம் ரவி… உங்கப்பாவும் அண்ணனும் கடுங்கோவத்துல இருக்காங்க… இப்ப நீ வரலனா சொத்துல உனக்குப் பங்கு குடுக்கமுடியாதுனு தீர்மானமா சொல்லிட்டார் உங்கப்பா”

 

அபர்ணாவும் எச்சரித்த பிறகு ரவி அமெரிக்காவில் இருப்பானா என்ன? விமானப்பயணச்சீட்டுக்கு ராஜேஷ் கொடுத்த பணத்தை வைத்து இந்தியாவுக்குச் சென்றுவிட்டான்.

 

பிரதீப்பும் அவனுடைய மனைவியும் அழைப்பு விடுத்ததால் அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்கு டாமோடு சென்ற ஆர்யாவுக்குச் சாப்பாட்டோடு இத்தகவலும் சேர்த்துப் பரிமாறப்பட அவளை விட டாம் அதிகம் சந்தோசப்பட்டான்.

 

ரவி இந்தியா சென்றதை அறிந்ததும் தன்னைச் சுற்றி கொஞ்சநஞ்சமிருந்த எதிர்மறை உணர்வும் போய்விட்ட நிம்மதியில் ஆர்யா அன்னையின் மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசினாள்.

 

முதலில் அவரது குரலைக் கேட்டதும் தொண்டையிலிருந்து குரல் வரவில்லை அவளுக்கு. மைத்ரி விசும்பவும் “அழாதம்மா” என்றவள் மௌனமாகிவிட அவரே பேசினார்.

 

“ஏன் அமைதியா இருக்குற ஆர்யா?”

 

“இங்க நடந்த எல்லாத்தையும் பிரதீப் சார் சொல்லியிருப்பார்ல… உனக்கு என் மேல வருத்தம் கூட இருக்கும்… நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைச்சா, ரெண்டு வார்த்தை திட்டிடும்மா”

 

“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் திட்டுனா மட்டும் என்னாக போகுது ஆர்யா? உன்னை நாங்க வளத்த விதத்துக்கும், நீ இப்ப வாழுற விதத்துக்கும் எவ்ளோ வித்தியாசம்னு சில நேரம் தோணும்… ஆனா எந்தக் குழந்தைக்கு பெத்தவங்க ரெண்டு பேரோட அன்பும் அரவணைப்பும் முழுசா கிடைக்கலையோ அந்தக் குழந்தை அதை வெளிய தேட ஆரம்பிக்கும்… நீயும் அப்பிடி தான்… உன் அப்பாவும் மத்த அப்பா மாதிரி அன்பா, அரவணைப்பா இருந்திருந்தார்னா நீ அந்த அன்பை வேற ஒருத்தர் கிட்ட தேடிருக்க மாட்ட… என் பொண்ணைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… நீ தப்பான ஒருத்தனை உன் வாழ்க்கைத்துணையா தேர்ந்தெடுத்திருக்க மாட்ட… இந்தக் காலத்து பசங்களோட வாழ்க்கை முறை பத்தி எனக்குப் பெருசா அறிவில்லடி… ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க, உன் வாழ்க்கைமுறைல எனக்கு உடன்பாடு இல்லனாலும், நீ காதலிக்கிற பையனும் நீயும் வாழ்க்கைல ஒன்னு சேர முடியலனா உனக்கு யாருமில்லனு நினைச்சுடாத… என் தலை சாயுற வரைக்கும் நான் உனக்குத் துணையா இருப்பேன்”

 

“ம்மா…”

 

இதற்கு மேல் பேச முடியாமல் விசும்ப ஆரம்பித்தாள் ஆர்யா.

 

“என்னை அழாதனு சொல்லிட்டு நீ அழுற பாரு… சரி, உன் படிப்புலாம் எப்பிடி போகுது? உன்னோட ஃப்ரெண்ட் தான் உனக்குப் புரொபசர்னு பிரதீப் தம்பி சொன்னார்”

 

“நல்லா போகுதும்மா… இன்னும் ஒரு செமஸ்டர் தான்… அதுக்குள்ள நல்ல ஜாப் ஆபர் எங்கனு பாத்து இண்டர்ன்ஷிப் அப்ளை பண்ணனும்… அதுக்கு அப்புறம் வேலை கிடைச்சிடும்… உன்னை இங்க அழைச்சிட்டு வந்துடுவேன்”

 

“ஏன் ஆர்யா? நீ இங்க வரமாட்டியா?” ஏக்கம் தொனித்தது மைத்ரியின் குரலில்.

 

“இல்லம்மா… எனக்கு இந்தியா வர்றதுக்கு இஷ்டமில்ல”

 

“ஏன்டா?”

 

டாமிடம் சொல்ல முடிந்த காரணத்தை ஏனோ அன்னையிடம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லும் தைரியமும் இல்லை.

 

“விடும்மா… இப்பவே அதை பத்தி ஏன் பேசணும்மா? அக்கா எப்பிடி இருக்கா? நான் நம்ம மூனு பேர் மட்டும் இருக்குற வாட்சப் க்ரூப் ஓப்பன் பண்ணட்டுமா?” என்று பேச்சை மாற்றினாள் ஆர்யா.

 

மைத்ரியும் மகளைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவள் இஷ்டப்படி வாட்சப் குழு ஒன்றை ஆரம்பிக்கும்படி சொன்னவர் வேளைக்குச் சரியாகச் சாப்பிடும்படி அறிவுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

அன்னையிடம் பேசி முடித்ததும் வாட்சப் குழு ஒன்றை ஆரம்பித்தாள் ஆர்யா. அதில் தமக்கை, அன்னையிடம் அரட்டையடித்தவளின் மனம் நிறைந்திருந்தது.

 

டாமிடம் நடந்ததைப் பகிர்ந்து கொண்டவள் எப்போதும் அவள் பேசும் போது மலர்ச்சியோடு கவனிப்பவன் அன்று சோர்வாக இருந்தது போல தெரியவும் பேச்சை நிறுத்தினாள்.

 

“என்னாச்சு டாம்? எதுவும் பிரச்சனையா?” என்று ஆதரவாகக் கேட்டபடி அவனது தோளைத் தொட்டாள்.

 

டாம் நெற்றிப்பொட்டை நீவிக்கொண்டவன் “யாஹ்! பட் இன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சனை இல்ல ஜெர்ரி… ரொம்ப நாளா நடக்குற பிரச்சனை” என்றான் சலிப்போடு.

 

“ரொம்ப நாளா மீன்ஸ்?”

 

“அவார்ட் ஃபங்சனுக்கு ஷாப்பிங் பண்ண போனப்ப நம்ம நியூமரோக்கு டின்னர் சாப்பிட போனோம்ல… அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சனை”

 

“என்ன பிரச்சனை?” என்று கேட்டவள் டாமின் புருவங்கள் சுருங்கி நெறிந்ததும் “ரொம்ப பெர்ஷனல்னா சொல்ல வேண்டாம் டாம்” என்றாள்.

 

டாம் சன்னமாய் புன்னகைத்தான்.

 

“உனக்குத் தெரியாம எனக்கு எந்த பெர்ஷனலும் கிடையாது ஜெர்ரி… அப்பவே சொல்லியிருக்கணும்… நான் வேற மாதிரி கால்குலேட் பண்ணுனேன்… ப்ச்… என் கால்குலேசன் தப்பா போயிடுச்சு”

 

எதிலோ தோற்றுப்போன பாவனை அவனது குரலில். தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவன் ஆறுதல் வேண்டி ஆர்யாவை அணைத்தான்.

 

“என் அப்பா மேரேஜ் பண்ணிக்கிட்டார் ஜெர்ரி”

 

ஆர்யாவின் கண்கள் முட்டை போல விரிய வாயோ ஆச்சரியத்தில் ‘ஓ’ போட்டது.

 

“கல்யாணமா?” இறங்கிப்போன குரலில் கேட்டாள் அவள்.

 

டாமின் இதழில் மீண்டும் சிரிப்பு. அவள் முகம் மாறிப்போனது.

 

“இதுல சிரிக்க என்ன இருக்கு டாம்? முப்பத்திரண்டு வயசுல ஒரு பையன் இருக்கப்ப உங்கப்பாவால எப்பிடி கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது? ரிடிகுலஸ்” என்றாள் எரிச்சலோடு.

 

“கம் ஆன் ஜெர்ரி… இங்க இதுல்லாம் சகஜம்”

 

“அப்ப ஏன் நீ இவ்ளோ கவலையா இருக்க? எனக்குப் புரியல டாம்”

 

“அவர் கல்யாணம் பண்ணுனதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… பட் அவர் கல்யாணம் பண்ணுன ஆள் சரியில்ல… அவர் யாரைக் கல்யாணம் பண்ணுன போறார்னு அலெஸாண்ட்ரோ சொன்னதுமே நான் அவரை வார்ன் பண்ணுனேன்… பட் ஹீ டிண்ட் லிசன் மை வேர்ட்ஸ்… அதோட விளைவுகளை இப்ப அனுபவிக்குறார்”

 

“அவருக்கு என்னாச்சு?”

 

“அப்பாவ மேரேஜ் பண்ணிக்கிட்டவ அவரோட தொழில் சம்பந்தப்பட்ட இரகசிய டாக்குமெண்ட் ஒன்னை திருடிட்டுப் போயிட்டா… பிசினசுக்கு முக்கியமான டீல் ஒன்னு கையை விட்டுப் போயிடுச்சு… அதுல அப்பாக்கு பலத்த நஷ்டம்… தொழில் நொடிஞ்சிடும்ங்கிற பயத்துலயே இருந்தவருக்கு இன்னைக்கு மானிங் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கார்”

 

“சோ அப்பாவுக்கு எதுவும் ஆகிடுமோங்கிற பயம்”

 

டாம் ஆம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் மறுக்கவில்லை.

 

ஆனால் மனம் திறந்து பேசத் துவங்கினான்.

 

“அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சப்ப என் கஷ்டடிக்காக அவங்க சண்டை போட்டுக்கல… நான் அம்மாவோட இருந்துட்டேன்… அப்பா நினைச்சா கோர்ட் அலோ பண்ணுன டைம்ல என்னைப் பாக்க வந்திருக்கலாம்… பட் அவர் வந்ததே இல்ல… என் பர்த்டேக்கு காஸ்ட்லியான கிப்ட் அவரோட செகரட்டரி மூலமா வரும்… ஹாலிடே வெகேசனுக்கு விரும்புன ப்ளேஸ்கு போக ஃப்ளைட் டிக்கெட்ஸ் வரும்… ஸ்கூல், காலேஜ்னு படிப்புனு எல்லா செலவும் அவரே பாத்துக்கிட்டார்… ரொம்ப ப்ரஸ்டீஜியஸ் யூனிவர்சிட்டில சீட் ஏற்பாடு பண்ணுனார்… ஒரு அப்பாவா அவர் எல்லாமே பண்ணுனார்… என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறதை தவிர… ஒரு கட்டத்துக்கு மேல நான் அவரோட அருகாமைக்காக ஏங்குறதை நிறுத்திட்டேன்… ஃபேமிலி அமைப்பு மேல எனக்குக் கசப்பு வரக் காரணம் எனக்குக் கிடைச்ச இந்த அனுபவம் தான்… இப்ப நான் அவரைப் போய் பாக்கணுமா? வேண்டாமானு குழப்பமா இருக்கு ஜெர்ரி.. என் இடத்துல நீ இருந்தனா என்ன செய்வ?”

 

ஆர்யா பெருமூச்சு விட்டாள்.

 

“நான் கண்டிப்பா அவரைப் போய் பாத்திருப்பேன் டாம்” என்றாள் நிதானமாக.

 

டாமின் கண்கள் அந்நொடியில் கூட ஆர்யாவின் பெருந்தன்மையைக் கண்ட கர்வத்தில் மிளிர்ந்தன.

 

“என்ன செஞ்சாலும் அவர் என்னோட அப்பா… அந்த உறவை நான் மதிக்கணும்ல”

 

அவளைக் கட்டுப்பாடு என்ற வட்டத்தில் கட்டிப்போட்ட தந்தை, அவள் பேச்சை ஒரு பொருட்டாகக் கூட மதியாத தந்தை, எக்கணமும் அவளது பக்க நியாயத்தைக் காது கொடுத்து கேட்காத தந்தை, செய்யாத தவறுக்கு அவளை ஒதுக்கி வைத்த தந்தை – இத்தனையையும் செய்தவரை இக்கட்டான நேரத்தில் போய் பார்ப்பேன் என்று சொன்னவளைப் பெருமிதமாகப் பார்த்தவன்

 

“அப்ப நாளைக்கு அப்பாவ பாக்க போகலாம்… நீயும் என் கூட வர்றீயா ஜெர்ரி?” என்று கேட்க ஆர்யாவும் மறுப்புக் கூறாமல் சம்மதித்தாள்.

 

“உன் கிட்ட அப்பவே அந்த பிரச்சனைய சொல்லிருக்கலாம்… இவ்ளோ நாள் எனக்குள்ள போட்டு ஒளிச்சு வச்சு மூச்சு முட்டுற ஃபீல் ஜெர்ரி”

 

ஆர்யா அவனது முகவடிவை ஆட்காட்டி விரலால் அளந்து கொண்டிருந்தவள்

 

“என்ன செய்யுறது? புரொபசர் போல்டன் படிப்பு விசயத்தைத் தவிர மத்த எல்லாத்துலயும் தத்தியா இருக்குறாரே” என்று விளையாட்டாகக் கூற அவளது விரலைப் பிடித்துக்கொண்டான் டாம்.

 

“அப்பிடியா? நான் தத்தியா?”

 

“ஆமா… கொஞ்சம் இல்ல, ரொம்ப ரொம்ப தத்தி”

 

“யூ மீன் ‘எல்லாத்துலயும்’?”

 

அவன் அழுத்திக் கேட்ட விதமும் பார்வை மாறிய விதமுமே உரைத்தது எந்தப் பொருளில் கேட்கிறான் என்பதை புரியவைத்துவிட ஆர்யா வெட்கத்தில் தடுமாறினாள்.

 

“யூ நாட்டி” என்று அவனது புஜத்தில் குத்தியவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் “நான் தத்தியா புத்திச்சாலியானு ஒரு ப்ராக்டிக்கல் எக்சாம் வச்சு மார்க் போட்டுப் பாத்துடுவோமா?” என்று குறும்பு கொப்புளிக்கும் குரலில் கேட்டவனின் பார்வையில் விசமம் கொட்டிக் கிடந்தது.

 

“மார்க் போடுறவருக்கே எக்சாமா?” புருவத்தை உயர்த்தி வினவினாள் ஆர்யா.

 

“வேற வழியில்ல… என்னைத் தத்தினு சொன்னல்ல… அது தப்புனு உனக்குப் புரிய வைக்க வேண்டாமா ஜெர்ரி?”

 

பேச்சு பேச்சாக இருக்கும்போதே அவனது விரல்கள் அவளது இதழில் கையெழுத்து போட ஆரம்பித்தன.

 

விரல்களின் வருடலில் இதழ்கள் துடிக்க அவற்றின் துடிப்பை எங்களால் மட்டுமே அடக்க முடியும் என அவனது இதழ்கள் வேகமாகச் செயல்பட ஆரம்பிக்க அடுத்து அங்கே நடந்தேறிய காதல் தேர்வில் தான் எப்பேர்ப்பட்ட புத்திசாலியென ஆர்யாவிடம் நிரூபிக்க ஆரம்பித்தான் டாம். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
42
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்