Loading

 

காதல் 20

 

“ஜெர்ரி கிட்ட எனக்குப் பிடிக்காத விசயம் என்னனா, வருங்காலத்தை நினைச்சு நிகழ்காலத்துல ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைத் தனக்குத் தானே போட்டு வச்சிப்பா… என்னைக்கோ ஒரு நாள் சாகப்போறோம், நம்ம முடிவு என்னனு தெரிஞ்சிடுச்சு, அப்ப எதுக்குக் கஷ்டப்பட்டு படிச்சு, வேலைக்குப் போய் சம்பாதிச்சு, செட்டில் ஆகணும்னு யாராவது யோசிப்போமா? கண்டிப்பா யோசிக்கமாட்டோம்… ஏன்னா வாழ்க்கையோட முடிவு மரணமா இருந்தாலும் அதோட நோக்கம் நிறைவா வாழுறது.. எங்க உறவை பத்தி எப்ப யோசிச்சாலும் அது நிரந்தரமில்ல, என்னைக்கோ ஒரு நாள் பிரிஞ்சிடும்னு யோசிச்சு என் கிட்ட உரிமை எடுத்துக்க தயங்குறா ஜெர்ரி… பிரியுறது எங்க உறவோட முடிவா இருக்கட்டுமே, அதுக்காக ஏன் வாழுற காலத்துல முழுமையா வாழாம ஒரு தயக்கத்தோடவே வாழணும்? ப்ளீஸ் யாராச்சும் ஜெர்ரிக்கு இதைப் புரிய வைங்க”

 

-டாம்

 

டாமின் மனக்குழப்பங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அவன் தனக்குள்ள புதைத்துக்கொண்டு அன்றாட அலுவல்களில் இயல்பாகக் கலந்தான்.

 

ஆர்யாவும் அவனது குழப்பம் அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை. செப்டம்பர் மாதத்தின் முடிவில் மேரி ஹாகின்ஸ் ஃபவுண்டேசன் வழங்கும் விருதுக்கான பேராசிரியராக டாம் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

 

வழக்கமாக செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் அந்நிகழ்வு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 

விருது வழங்கும் விழாவுக்குத் தனியே செல்லலாமா என யோசித்த டாம் பின்னர் ஆர்யாவையும் தன்னுடன் வருமாறு அழைப்பு விடுத்தான். அதை அழைப்பு என்று சொல்வதை விட கட்டளை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

 

“நான் எப்பிடி டாம்?” என்று தயங்கியவள் அவனது பார்வையின் உஷ்ணம் தகிப்பதைத் தாங்காமல் “அங்க உன் ஃபீல்ட்ல உள்ள புரொபசர்ஸ், ஸ்காலர்ஸ் எல்லாம் வருவாங்க… அவங்க முன்னாடி நம்ம ஜோடியா…” என்று தயங்கி தயங்கி காரணத்தை வெளியிட்டாள்.

 

“போனா என்ன ஜெர்ரி? லெட் மீ க்ளியர் ஒன் திங்… என்னால என் கொள்கையை ஒதுக்கி வச்சிட்டு ஒருத்திய பைத்தியக்காரத்தனமா காதலிக்க முடிஞ்சுதுனா, அது நீ மட்டும் தான் ஜெர்ரி… நீ என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல, வீ ஆர் நாட் இன் ஹூக் – அப் கைண்டா ரிலேசன்ஷிப்… யூ ஆர் மை லேடி லவ்… நீ என்னோட பார்ட்னர்னு வெளியுலகத்துக்கும், என் ஃபீல்ட்ல உள்ளவங்களுக்கும் சொல்லுறதுல எனக்கு எந்த தர்மசங்கடமும் இல்ல”

 

தெள்ளத்தெளிவான குரலில் அழுத்தமாகத் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்தவன் “அங்க போறதுக்கு ட்ரஸ் பர்சேஸ் பண்ணிட்டு வரலாமா?” என்று பழைய இலகு குரலில் பேச ஆரம்பிக்கவும் ஆர்யா பொம்மை போல தலையாட்டினாள்.

 

தனது கரடுமுரடான பேச்சில் கொஞ்சம் பயந்துவிட்டாள் போல என்றெண்ணியவன் சினேகத்துடன் தோளணைத்தான்.

 

“டோண்ட் கெட் பேனிக்… அமெரிக்காவ பொறுத்தவரைக்கும் நம்ம எந்த ஒழுக்க விழுமியத்தையும் மீறி நடந்துக்கல… உன் நாட்டு மக்களோட இங்க உள்ளவங்க மைண்ட் செட்டை கம்பேர் பண்ணி எம்பாரசிங்கா ஃபீல் பண்ணாத ஜெர்ரி”

 

வழக்கம் போல டாமின் பேச்சிலிருந்த தைரியம் ஆர்யாவுக்கும் கடத்தப்பட இருவரும் சேர்ந்து விருது வழங்கும் விழாவுக்குச் செல்வதற்கான ஆடைகளை வாங்க புறப்பட்டனர்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நியூமரோ 28 ரெஸ்ட்ராண்டுக்குச் சென்றனர். அவர்களை உற்சாகத்தோடு வரவேற்ற அலெஸாண்ட்ரோ டாமைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட எல்சாவைத் தேடிப் போனாள் ஆர்யா.

 

“ஹே ஜெர்ரி”

 

அலெசாண்ட்ரோவுக்குச் சற்றும் குறையாத உற்சாகத்தோடு வரவேற்ற எல்சா நட்போடு ஆர்யாவை அணைத்தாள்.

 

“ஐ ஃபீல் வெரி ஹேப்பி ஃபார் யூ அண்ட் டாம்… டாமுக்கு அவார்ட் கிடைக்கப்போகுதுனு கேள்விப்பட்டேன்”

 

“யாஹ் எல்சா… டீச்சிங்ல டாமை அடிச்சிக்க முடியாது, யூ நோ… இன்ஃபேக்ட் ரொம்ப சின்ன வயசுல இந்த அவார்டை வாங்குறது டாம் தானாம்”

 

பெருமிதத்துடன் சொன்னாள் ஆர்யா. எல்சா குறுகுறுவென அவளது பெருமிதமான வதனத்தைப் பார்த்துவிட்டு புன்சிரிப்பை உதிர்த்தாள்.

 

“டாமுக்கு இவ்ளோ சப்போர்ட்டிவான பார்ட்னர் அமைவாங்கனு இது வரைக்கும் விளையாட்டா கூட நினைச்சதில்ல”

 

“ஏன்?”

 

“ஹீ ஹேட் நோ இண்ட்ரெஸ்ட் டு ஷேர் ஹிஸ் லைஃப் வித் எனி கேர்ள் (அவனுக்கு எந்தப் பொண்ணு கூடவும் தன்னோட வாழ்க்கைய பகிர்ந்துக்கிற ஆர்வமில்ல)… மார்கரேட்டை கூட ஒரு எல்லைக்கு வெளிய தான் நிறுத்தியிருந்தான்… அவ அவன் கிட்ட க்ளோஸ் ஆக முயற்சி பண்ணுனது தான் அவங்க ப்ரேக்கப்புக்கே காரணம்… பட் உன்னை பாக்குறப்ப அவன் பார்வை கூட அவ்ளோ சாஃப்டா மாறுது ஜெர்ரி… யூ ஆர் ஸ்பெஷல் டு ஹிம்”

 

எல்சாவின் பேச்சில் ஆர்யாவின் முகம் கனிந்தது. ஒரு பக்கம் வெட்கம், மறுபக்கம் பெருமிதம்! இரண்டையும் அடக்க வழி தெரியாமல் புன்னகை எனும் பூட்டு போட்டு மறைக்க முயன்றவள் சோகம் கப்பிய முகத்தினனாக அலெஸாண்ட்ரோவோடு அங்கே வந்து சேர்ந்த டாமைக் கண்டதும் திடீரென அவனுக்கு என்னவாயிற்று என கவலைகொள்ள ஆரம்பித்தாள்.

 

ஆர்யா தன்னைக் கவனிப்பதை உணர்ந்தவன் முகபாவத்தை மாற்றிக்கொண்டான். ஆர்யாவின் கையை விட மனமின்றி இறுக்கமாகப் பற்றியவன் “டின்னர் சாப்பிடலாமா ஜெர்ரி?” என்கவும் மறுப்பு கூறாமல் சரியென்றாள் ஆர்யா.

 

அன்றைய இரவுணவின் போது டாம் அதிகம் பேசவில்லை. என்ன காரணமென வினவலாமா என்று தனக்குள் கேட்டுக்கொண்ட ஆர்யா அலெசாண்ட்ரோ மற்றும் எல்சாவிடம் விடைபெற்று காரில் அமர்ந்ததும் வெளிப்படையாக என்ன பிரச்சனையென கேட்டுவிட்டாள்.

 

“நத்திங்” என்றவன் அவள் ஆராய்சிப்பார்வை பார்க்கவும் “என்னைப் பாத்தா பிரச்சனைல சிக்குனவன் மாதிரியா இருக்கு?” என்று சமாளிக்கும் முயற்சியில் இறங்கினான்.

 

“சொல்லக்கூடாத அளவுக்கு ரொம்ப சீரியசான விசயம்னா சொல்லவேண்டாம் டாம்… ஷேர் பண்ணிக்கிட்டா உன்னோட கவலை குறையுமேனு கேட்டேன்”

 

டாமிற்கு தான் தொண்டைக்குள் யாரோ மரக்கட்டையை வைத்து அடைத்தது போன்ற உணர்வு. அவனுக்கு இருப்பது கவலை இல்லை, அது ஒருவிதமான அதிர்ச்சியென சொன்னானெனில் முழு விவரத்தையும் ஆர்யாவிடம் சொல்ல வேண்டும். எனவே தான் மழுப்ப பார்த்தான்.

 

ஆர்யாவும் தோண்டித் துருவாமல் நாகரிகமாகப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

 

அப்படி இருந்தாலும் டாமின் மனக்குமுறல் குறையவில்லை. இரவு உறக்கத்தின் போது அவளை விடாமல் அணைத்தபடி உறங்கினான்.

 

ஏதோ ஒரு பிரச்சனை அவனை வாட்டியெடுக்கிறதென புரிந்துகொண்டவள் சிறிது நேரம் அவனது சிகையை வருடிவிட்டாள். பின்னர் அவளுக்கும் உறக்கம் வந்துவிட்டது.

 

அதன் பிந்தைய நாட்களில் டாமிற்கு வந்த பிரச்சனை என்னவென ஆர்யா யோசிக்கக்கூட முடியாதளவுக்குப் பழைய டாமாக மாறி கல்லூரி, வீடு என இரண்டு இடங்களிலும் கச்சிதமாக நடந்துகொண்டான் அவன்.

 

விருது வழங்கும் நாளன்று விழா அரங்கிற்குள் ஆர்யாவின் கையைப் பிடித்து நடந்து வந்தவன் “மிஸ்டர் போல்டன் அண்ட் ஹிஸ் ஃபேமிலி” என்று எழுதப்பட்ட இரட்டை நாற்காலிகளைப் பார்த்ததும் அர்த்தபுஷ்டியாய் ஆர்யாவை நோக்கினான்.

 

அவளுக்குமே குடும்பம் என்ற சொல்லில் மெல்லிய ஆனந்தம் பிறந்தது.

 

வெகு உரிமையோடு அவளை அணைத்தபடி சென்றவன் நாற்காலியில் அமர்ந்தான். அடுத்தடுத்து பேராசிரியர்கள் வந்து அமர்ந்து அரங்கு நிறைந்ததும் விழா ஆரம்பித்தது.

 

விழா என்றாலே மேடைப்பேச்சு இல்லாமல் போகுமா? துறை சார்ந்த பேராசிரியர்களின் உரைகள் பேசப்பட்டன. விருது வழங்கும் நேரம் வந்ததும் டாமின் முகம் விகசித்தது.

 

“மிஸ்டர் தாமஸ் போல்டன்”

 

அவனது பெயர் ஒலித்ததும் கோட்டை சரி செய்தபடி எழுந்தவன் மேடையில் சென்று விருதைப் பெற்றுக்கொண்டான்.

 

எத்தனையோ நட்சத்திரங்கள் வானெங்கும் நிறைந்திருந்தாலும் நம் கண்கள் நிலவை தானே ஆவலோடு நோக்கும். அதே போல அங்கே இருந்த கூட்டத்தில் ஆர்யாவை மட்டுமே டாமின் விழிகள் கவனித்தன. அவன் விருதை கையில் வாங்கியதும் இருக்கையிலிருந்து எழுந்தவள் மொபைலில் புகைப்படம் எடுத்தாள்.

 

விருதை வாங்கிக்கொண்டு இறங்கியவனை ஆறத் தழுவியவள் “யூ டிசர்வ் திஸ் புரொபசர் போல்டன்:” என்றாள் அரிசிப்பற்கள் மின்னிய சிரிப்போடு.

 

அங்கே டாமிற்கு தெரிந்த சில பேராசிரியர்களிடம் ஆர்யாவைத் தனது பார்ட்னர் என நிமிர்வோடு அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

அவனது இச்செய்கை மெல்ல மெல்ல ஆர்யாவைச் சங்கடத்தில் ஆழ்த்தின.

 

அதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தாள். அவன் கோபம் கொள்வானோ என கலங்கியவளை உச்சி முகர்ந்தவன்

 

“உன்னோட சூழ்நிலை உன்னை அப்பிடி யோசிக்க வைக்குது… என்னோட காதல் என்னை இப்பிடி செய்ய வைக்குது… இதுல சங்கடப்பட எதுவுமில்ல ஜெர்ரி… நம்ம ரெண்டு பேருக்கு இடையில கல்சுரல் டிஃபரன்ஸ். வளர்ந்த முறை, சூழல்னு நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரே ஒற்றுமையும் இருக்கு… அது தான் நம்ம ரெண்டு பேருக்கு இடையில இருக்குற பரஸ்பர அன்பு… அந்த அன்பு குறையாம பாத்துக்கிட்டா மட்டும் போதும்… நம்மளை யாராலையும் பிரிக்க முடியாது” என்றான்.

 

பரஸ்பர அன்பு! இதைத் தானே லிண்டாவும் குறிப்பிட்டார். அன்னைக்கும் மகனுக்கும் சிந்திக்கும் விதத்தில் ஒற்றுமை உள்ளதே என திகைத்தாள் ஆர்யா.

 

டாம் குறிப்பிட்டது போல அந்த அன்பை மட்டும் மனதில் வைத்துக் கொள்வோமே என தீர்மானித்தவள் “நம்மளைப் பிரிக்குற அளவுக்கு யாரும் வரப்போறதில்ல… என் பயமே அந்தப் பிரிவுக்கு நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர் காரணமாயிடுவோமாங்கிறது தான்… அதுக்கான வாய்ப்பு வரவேக்கூடாது… இது நான் கடவுள் கிட்ட வைக்குற வேண்டுதல் டாம்” என்றாள் உள்ளம் உருக.

 

ஆர்யாவிடம் தென்பட்ட சிறுமாற்றத்தில் ஆசுவாசமுற்ற டாம் ஒரு கையில் விருதையும் மறுகையில் அவளையும் தாங்கியபடி விழா அரங்கத்தை விட்டு வெளியேறினான்.

 

அதே நேரம் ஆர்யாவின் அன்னை மைத்ரியைக் காண பிறந்த வீட்டுக்குக் கணவனோடு வந்திருந்தாள் தமக்கை ஆராதனா.

 

ராஜேஷ் மாமியாரிடம் கவலை பொங்கும் குரலில் ஆர்யா தனது மொபைல் அழைப்பு எதையும் ஏற்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

 

“உங்க மேல அவளுக்கு மரியாதை உண்டு மாப்பிள்ளை… உங்க காலையே எடுக்கலான அவளுக்கு எங்க மேல உள்ள கோவம் தீரலனு தானே அர்த்தம்”

 

வேதனை மண்டிய குரலில் கேட்டார் மைத்ரி.

 

ஆராதனாவின் முகத்திலும் அதே தவிப்பு.

 

“இனிமே போன் பண்ணிப் பேசுனா அவ மனசு மாறுவானு நம்புறது வேஸ்ட் அத்தை… என் ஃப்ரெண்ட் பிரதீப் டெக்சாஸ்ல தான் வொர்க் பண்ணுறான்… அவனை வச்சு யூனிவர்சிட்டில ஆர்யாவ பத்தி விசாரிக்கலாம்னு இருக்கேன்… அவ இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சுனா நம்ம நேர்ல போய் பாத்துட்டு வந்துடலாம்… பிரயாணச்செலவு பத்தி கவலைப்படாதிங்க… நான் பாத்துக்கிறேன்”

 

ராஜேஷ் மைத்ரிக்கு வாக்கு கொடுத்தான். ரவியால் தானே ஆர்யாவிற்கு இந்த நிலை என்ற குற்றவுணர்ச்சி அவனுக்கு. தம்பியைப் பற்றி தெரிந்தும் தேவநாராயணனிடம் அவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனது, ஆர்யாவை ரவியோடு தங்க வைத்த அவரது முடிவை எதிர்க்காமல் போனது எல்லாம் எத்தனை பெரிய மடத்தனம் என்பது காலங்கடந்து அவனுக்குப் புரிந்தது.

 

மாமனார் ஆர்யாவுடன் யார் உறவு கொண்டாடினாலும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி மைத்ரி மற்றும் ஆராதனாவின் சிம் கார்டை உடைத்துப்போட்டபோதே மனம் விட்டுப் போனான் ராஜேஷ்.

 

வெறும் புகைப்படத்தை வைத்து பெற்ற பெண்ணை சந்தேகிக்கலாமா? ஒருவேளை அந்நபர் அவளது காதலனாக இருக்கலாம் அல்லவா? ரவியைத் தவிர வேறு யாரை ஆர்யா காதலித்தாலும் ராஜேஷே முன்னின்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பானே!

 

இதைச் சொன்ன போது தேவநாராயணனின் முகம் அருவருப்பில் சுளித்தது.

 

“சீ! நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்துவராத வெள்ளைக்காரனை என்னால மருமகனா ஏத்துக்க முடியாது மாப்பிள்ளை…. நான் பெத்த கழுதைய படிக்க தானே அமெரிக்கா அனுப்பி வச்சேன்… படிக்குறதை விட்டுட்டு காதலிக்கிறாளா அவ? பெத்தவங்களை துளி மதிச்சிருந்தா அந்தக் காதல் அவளுக்கு வந்திருக்குமா? விடுங்க மாப்பிள்ளை, அவளைப் பத்தி யாரும் பேசவேண்டாம்… எனக்குப் பிறந்த ரெண்டு பெண்குழந்தைல ஒன்னு செத்துடுச்சு”

 

மனதில் பாசமில்லாமல் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் நியாயவானான ராஜேஷால் அப்படியே விடமுடியவில்லை. ஆர்யாவைத் தனது தங்கை போல நினைப்பவன். மாமனாரின் எதிர்ப்பை மீறி, மாமியார் மற்றும் மனைவியின் மனவேதனையைப் போக்க ஆர்யாவின் மொபைலுக்கு விடாமல் அழைத்துப் பார்த்தான்.

 

ஒரு நாள் கூட அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை. இறுதியில் அவனது மொபைல் எண் ஆர்யாவால் முடக்கப்பட்டது.

 

இப்போது ராஜேஷ் அவனது நண்பன் பிரதீப்பை மலையாக நம்பினான். மாமியாரின் காதில் இந்த விசயத்தைப் பகிரலாமென மனைவியோடு வந்தவன், தான் சொன்னதை மாமனாரும் கேட்டுவிட்டார் என்பதை அவர்கள் அமர்ந்திருந்த ஹாலுக்குள் தேவநாராயணன் ருத்திரமூர்த்தியாக பிரவேசித்ததும் அதிர்ந்து போனான்.

 

வந்த மனிதரோ மூவரையும் ஆவேசமாக உறுத்து விழித்தார்.

 

“அவ செத்துப்போயிட்டானு சொல்லியும் இன்னும் ஏன் அவளையே நினைச்சிட்டிருக்க? அந்தக் கழுதை இந்நேரம் வெள்ளைக்காரன் கூட கல்யாணம் பண்ணாம குடும்பம் நடத்திட்டிருக்கா… நாளைக்கு வயித்துல ஒன்னை வாங்கிக்கிட்டு ‘அம்மா எனக்குப் பேறுகாலத்துல உதவியா இருக்க வானு’ கூப்பிடுவா…. பல்லை இளிச்சிக்கிட்டு அதுக்கும் போயிட்டு வாடி”

 

கோபம் முழுவதையும் மைத்ரி மீது காட்டி வெறுப்பைக் கக்கினார் தேவநாராயணன்.

 

மைத்ரியின் கண்கள் குளமாகின. ஆராதனா தந்தையிடம் தங்கைக்காக பேச முனைந்தாள்.

 

“போதும்! அவ பண்ணுன கேவலத்துக்கு அப்புறமும் இன்னும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சனா, என் வீட்டை விட்டு வெளிய போய்டு மைத்ரி… இது என் உழைப்புல வாங்குன வீடு… எனக்குத் துரோகம் செஞ்சவளுக்கு வக்காலத்து வாங்குற யாருக்கும் இங்க இடமில்ல”

 

வெட்டி கௌரவத்திற்காக இத்தனை ஆண்டுகள் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்த மனைவியையே தூக்கியெறிய தயாரான மனிதரை ஆதங்கத்துடன் ஏறிட்டனர் ஆராதனாவும் ராஜேஷும்.

 

மைத்ரியோ கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். அடுத்து அவர் எடுத்த முடிவில் அங்கிருந்த மூவருமே பூகம்பம் வந்தாற்போல அதிர்ந்து போய் நின்றார்கள்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
40
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்