Loading

 

 

 

காதல் 19

 

“உங்களால ஒருத்தரை நிரந்தரமா சொந்தமாக்கிக்க முடியாதப்ப அவங்களோட நினைவுகளையாச்சும் சொந்தமாக்கிக்க முயற்சி பண்ணுங்க… நினைவுகளைச் சொந்தமாக்கிக்க நம்ம யாரோட மனசையும் கஷ்டப்படுத்த வேண்டாம்… யாரையும் வற்புறுத்த வேண்டாம்… டாக்சிக்கான மனுசனா மாற வேண்டாம்… யாரையும் இழுத்துப் பிடிச்சு உங்களோட ஒட்ட வச்சிக்க வேண்டிய அவசியமும் வராது… யாருக்குத் தெரியும், உங்களோட இந்தப் பக்குவமான அணுகுமுறை சம்பந்தப்பட்ட நபரோட மனசை மாத்தலாம்… அவரே விரும்பி உங்களுக்குச் சொந்தமாகலாம்… அப்பவும் அவரோட இணைஞ்சு செலவளிச்ச தருணங்ளோட நினைவுகள் உங்களுக்குள்ள பிரிக்க முடியாத பிணைப்பை உருவாக்கும்”

 

     -ஜெர்ரி

 

டெக்சாஸ் பல்கலைகழகத்தில் ஃபால் செமஸ்டருக்கான வகுப்புகள் விறுவிறுப்பாக ஆரம்பித்தது. அது சம்மர் செமஸ்டர் போலன்றி அதிக க்ரெடிட் பீரியட்களைக் கொண்ட செமஸ்டர்.

 

எனவே ஆர்யாவின் பொழுதைப் படிப்பும், அவளது இன்ஸ்ட்ரக்சர் பணியும் விழுங்கிக்கொள்ள முன்பு போல வாலண்டியராகப் பணியாற்றுவதற்கான அவகாசம் அவளுக்குக் கிடைக்கவில்லை.

 

அவளுக்குக் கடந்த செமஸ்டரை விட தற்போதைய செமஸ்டர் வகுப்பு சுவாரசியமாக இருந்தது. அதற்கு காரணம் டாமின் வகுப்புகள். அவர்களிடையே இருக்கும் ‘லிவின்’ உறவினால் பேராசிரியர் – மாணவி உறவுக்குக் குந்தகம் வராதபடி இருவருமே பொறுப்போடு நடந்து கொண்டனர் எனலாம்.

 

டாம் அவளுக்கு நல்ல துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நடந்து கொண்டான். அவளது சின்ன சின்ன ஆசைகளைக் கூட வெகு கவனமாகக் கேட்டறிந்து நிறைவேற்றி விடுவான். இதெல்லாம் ஏன் செய்கிறோம் என அவனுக்கே புரியாத நிலை.

 

நிரந்தரமற்ற ‘லிவின்’ உறவில் அவளது முகம் வாடிவிடக்கூடாதென தான் ஏன் துடிக்கிறோமென்று பலமுறை டாம் அவனையே கேட்டுக்கொண்டான். அதற்கு பதில் கிடைத்தால் தானே!

 

அவனது மனநிலை இன்னதென துல்லியமாக அறிந்து கொண்டாலும் ஆர்யாவால் அவனை விலக முடியவில்லை. பிரிவின் போது டாமின் அரவணைப்பில் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் அவளுக்குச் சொந்தமாகுமே, அவை மட்டும் போதாதா மிச்ச மீதி வாழ்நாட்களை அவள் அர்த்தத்தோடு கழிப்பதற்கு!

 

இருவரையும் கட்டிப்போட்ட உறவின் தன்மை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டே வருகிறதென்பதை உணரவில்லை அந்தக் காதலர்கள்.

 

செப்டம்பர் மாதத்தின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான “Once upon a ball”லில் ஆர்வத்தோடு கலந்துகொள்ள தயாரானாள் ஆர்யா. டாமும் அவளும் டிஸ்னி பிரின்ஸ் மற்றும் பிரின்சஸாக ஆடையணிந்து கொண்டார்கள்.

 

வில்லியம் சி பவர்ஸ் ஸ்டூடண்ட்ஸ் ஆக்டிவிட்டி சென்டரில் இருக்கும் பால்ரூமை அடைந்தபோது அங்கே ஏகப்பட்ட ஜோடிகள் ஃபேண்டசி தீமில் கதாநாயகிகள், கதாநாயகர்கள், வில்லன்களாக மாறுவேடம் பூண்டு நின்றார்கள்.

 

டாமின் முகத்தில் பாதியை மறைக்கும்படி முகமூடி ஒன்றை அணிவித்துவிட்ட ஆர்யா “நீ யார்னு இவங்களுக்குத் தெரியவேண்டாம் டாம்” என்றாள்.

 

“ஏன்? தெரிஞ்சா என்ன?”

 

“வேண்டாம் டாம்… எனக்கு எம்பாரசிங்கா இருக்கும்”

 

“நான் உன்னோட பார்ட்னர்னு சொல்லுறதுக்கு எம்பாரசிங்கா இருக்குமா?”

 

ஒரு மாதிரி குரலில் கேட்டான் டாம். அவனது குரலில் தெரிந்த அதிருப்தியில் விக்கித்தவள் அவன் இறுகிய முகத்தோடு முகமூடியை அணியும் வரை வாய் திறக்கவில்லை.

 

“லெட்ஸ் கோ” என்றபடி தனது முழங்கையை அவன் நீட்டவும் அதை தனது முழங்கையால் வளைத்துக்கொண்டாள் ஆர்யா.

 

உள்ளே நுழைந்து தனது பதிவெண்ணையும் பெயரையும் கூறியவள் கூட அழைத்து வந்த நபரின் பெயரைக் கேட்டதும் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தாள்.

 

முகமூடி மூடாத டாமின் இதழ்கள் அலட்சியமாகச் சுழிக்கவும் கண்களால் இறைஞ்சினாள்.

 

“ப்ளீஸ்! எப்பிடியாச்சும் சமாளி”

 

டாம் நக்கல் சிரிப்போடு “மிஸ்டர் எக்ஸ்னு மென்சன் பண்ணிக்கோங்க… எங்க ரிலேசன்ஷிப் பத்தி லோ ப்ரொஃபைல் மெயிண்டெயின் பண்ணிட்டிருக்கோம்… சோ..” என்று அவன் இழுக்கவும் பதிவைச் சரிபார்த்துக்கொண்டிருந்த மாணவி அப்படியே பெயரைக் குறித்துக்கொண்டாள்.

 

பின்னர் ஜோடிகளுக்குத் தனித்தனியே நடனப்போட்டிகள் நடத்தினார்கள். டாம் ஆர்யாவை இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

அவனது கரம் அழுத்திய விதத்தில் வலிக்கவும் ஆர்யா அவனை ஏறிட்டாள்.

 

“இட்ஸ் ஹர்ட்டிங் டாம்” என அவள் முணுமுணுக்க

 

“லைக் யுவர் வேர்ட்ஸ்” என்று வெட்டுவது போல பதிலளித்தவன் அங்கே ஒலித்த பாடலின் இலயத்திற்கேற்ப அவளோடு சேர்ந்து நடனமாட ஆரம்பித்தான்.

 

அவன் அளவுக்கு இலாவகமாக ஆட முடியாவிட்டாலும் தன்னால் இயன்றவரை அவனுக்கு ஒத்துழைத்து நடன அசைவுகளை வெளிப்படுத்தினாள் ஆர்யா.

 

வளைந்து நெளிந்து ஆடுகையில் இருவரின் மனதிலுள்ள மற்ற உணர்வுகள் அடங்கி நடனத்தில் முழு கவனத்தையும் செலுத்தியதால் அழகான ஜோடி நடனமாக அது முழுமை பெற்று அங்கிருந்தவர்களின் பாராட்டையும் பெற்றது.

 

பின்னர் தனித்தனியே விளையாட்டுகள் வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவும், டாம் ஆர்யாவை அதில் பங்கேற்குபடி ஊக்கினான்.

 

“நீ தான் என் மேல கோவமா இருக்கியே.. இப்ப மட்டும் ஏன் இவ்ளோ ஆர்வமா என்னை கேம்ஸ்ல கலந்துக்க சொல்லுற?”

 

அவள் முறுக்கிக்கொண்டாலும் விடாப்பிடியாக அவளையும் பங்கேற்க வைத்துத் தானும் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளில் ஜெயிக்கவும் செய்தான் டாம்.

 

அதற்குப் பரிசாகக் கிடைத்த இதய வடிவ மினி குஷனை ஆர்யாவிடம் அவன் முழங்காலிட்டு நீட்டியபோது பால் ரூமிலிருந்த அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

 

இன்னொரு போட்டிக்கான பரிசு ஸ்வரோவ்ஸ்கி கற்கள் பதித்த சிறிய கிரீடம். அதை அவள் தலையில் சூட்டியவன் ஆர்யாவின் கண்களில் மூண்ட கலவரத்தை ரசித்தபடியே அவளது விரல்களில் முத்தமிட்டான்.

 

யாரேனும் முகமூடிக்குப் பின்னே இருப்பது பேராசிரியர் தாமஸ் போல்டன் என்று அறிந்துகொள்வார்களோ என்ற பயம் அவளுக்குள் பரவும் போதே அவளை அணைத்தவன் “இப்பவும் எம்பாரசிங்கா தான் இருக்குதா ஜெர்ரி?” என்று விசமமாகக் கேட்க ஆர்யாவோ மலங்க மலங்க விழித்தாள்.

 

அடுத்த நொடியே “அப்பிடி இருந்தாலும் ஐ டோண்ட் கேர்” என்றவனின் கண்களில் தெரிந்த பிடிவாதமும் அழுத்தமும் இதுவரை ஆர்யா பார்த்தறியாதது.

 

இந்த அழுத்தமும் பிடிவாதமும் ஒரு போட்டியில் அவனது முகத்தைக் காட்டி அவர்கள் உறவை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாமென அவள் சொன்னதற்காகவா? அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா?

 

யோசித்து யோசித்து ஆர்யாவிற்கு தலைவலி வந்துவிட்டது. காரில் ஏறும் போதே நெற்றிப்பொட்டை நீவியபடி வந்தவளை டாம் மட்டும் கவனிக்காமலா இருந்திருப்பான்?

 

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக காபி போட்டு அவளிடம் நீட்டியவன் ஆர்யா மௌனமாக கோப்பையை வாங்கி பருகுவதைப் பார்த்தவாறு மேஜை மீது சாய்ந்து மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு நின்றான்.

 

எவ்வளவு நேரம் தான் அவனது பார்வையைக் கவனிக்காதது போல காட்டிக்கொள்வது? ஒரு கட்டத்திற்கு மேல் குறுகுறுப்பு தாங்காமல் “என்னாச்சு டாம்?” என்று கேட்டேவிட்டாள் அவள்.

 

“உனக்குத் தெரியாதா?”

 

“உஃப்”

 

உதட்டைக் குவித்து மூச்சுக்காற்றை வெளியிட்டவள் அடுத்த மிடறு காபியை அருந்தப்போக, அது டாமின் பார்வைக்கு அலட்சியமான செய்கையாகக் காட்சியளித்தது.

 

“ஐ அம் ஆஸ்கிங் யூ ஜெர்ரி”

 

அழுத்தமாகக் கேட்டவனின் பார்வையில் இறுக்கம் விரவியிருந்தது.

 

“அதுக்கு முன்னாடி கேள்வி கேட்டவ நான்”

 

“ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட் யூ ஜெர்ரி… நம்ம லவ்வர்ஸ் தானே?”

 

“இதுல என்ன சந்தேகம் டாம்?”

 

“உன் பிஹேவியர் தான் எனக்குச் சந்தேகத்தை உருவாக்குது ஜெர்ரி”

 

ஆர்யாவுக்கு அப்படி என்ன தவறு இழைத்தோம் என்று புரியவில்லை. அவள் பார்வையும் அதையே பிரதிபலித்தது. புரியாத காரணத்தால் பதில் சொல்லும் எண்ணமும் இல்லை அவளுக்கு. ஆனால் அவளருகே அமர்ந்திருந்தவனுக்கோ அவளது ஒவ்வொரு நொடி மௌனமும் ஒரு யுக நரக வேதனையைக் கொடுத்தது.

 

“ஜெர்ரி”

 

என்ன என்பது போல பார்த்தவள் இப்போதும் வாயைத் திறக்கவில்லை.

 

“நம்ம லவ்வர்ஸ்னு ஏன் சொல்ல தயங்குற ஜெர்ரி? ஒய் டூ வீ கீப் லோ ப்ரொஃபைல்? ஒருவேளை நம்ம ரிலேசன்ஷிப்பை நீ வெளிய சொல்லிக்க முடியாதளவுக்கு மோசமானதுனு நினைக்குறியா?”

 

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் டாமை தீர்க்கமாகப் பார்த்தாள்.

 

“அப்பிடி நினைக்குறவ ஏன் மது – நவீன் கிட்ட நாங்க லிவின்ல இருக்கோம்னு சொல்லப்போறேன்? ப்ராப்ளம் என் பிஹேவியர்ல இல்ல டாம், உன் மனசுல தான் இருக்கு… கொஞ்சநாளாவே நீ ரொம்ப கன்ஃபியூஸ்டா தெரியுற… எது உன்னைக் குழப்புதுனு தெரியல… ஒருவேளை நீ என்னைப் பத்தி யோசிச்சு குழம்புறியா?”

 

“யெஸ்” வேகமாக வந்த பதில் படபடவென பேசிக்கொண்டிருந்தவளை அமைதியாக்கியது. டாம் பெருமூச்சை எடுத்துவிட்டுக்கொண்டான். அவனுக்குள் இருந்த குழப்பத்தை அவளிடம் சொல்லியே விட்டான்.

 

“மது – நவீன் மாதிரி உனக்கும் ஃபேமிலி, பேபினு எதிர்பார்ப்பு இருக்குதுல்ல ஜெர்ரி… எனக்காக நீ அதை மறைச்சு நடிக்கிறியோனு சந்தேகம் வருது… முன்னாடிலாம் நீ கிஸ் பண்ணுறப்ப எக்சைட்டா ஃபீல் பண்ணுவேன்… இப்ப உன்னை நான் எக்ஸ்ப்ளாயிட் பண்ணுறேனோனு குற்றவுணர்ச்சி வருது… என்னோட உடல்ரீதியான தேவைக்கு மட்டும் உன்னை யூஸ் பண்ணிக்கிறேனோனு தோணுது… வீ ஆர் லவ்வர்ஸ், பட் இந்த உறவு நிரந்தரமில்ல… அவர் இண்டிமசி இஸ் ஆசம், பட் இது என்னைக்கோ ஒரு நாள் முடிவுக்கு வந்துடும்… யூ ஆர் தி பெஸ்ட் பார்ட்னர்… பட் ஒருநாள் உன்னை நான் பிரிஞ்சு தான் ஆகணும்… இந்த நிதர்சனம் என்னைக் கொல்லுது ஜெர்ரி… ஒருவேளை நீயும் என்னைப் போல இங்க உள்ள கல்சருக்கு பழக்கப்பட்டிருந்தனா நான் இவ்ளோ தூரம் யோசிக்கமாட்டேன்”

 

டாம் சொன்னதை தெளிவாகக் கேட்டுக்கொண்டாள் ஆர்யா. அவனுக்குள் எழுந்த குற்றவுணர்ச்சிக்குக் காரணம் தன் மீது அவனுக்கு இருக்கும் மரியாதை என்று கூடவா அவளுக்குப் புரியாது!

 

அவன் ஒன்றும் பார்த்த உடன் இணைந்து வாழ்வோமா என்று அவளிடம் கேட்டுவிடவில்லையே! ஏதோ ஒரு கட்டத்தில் அவளுக்கும் குடும்ப அமைப்பு, உறவுகள் மீது விரக்தி உண்டான போது தன் மீது அக்கறை காட்டியவன்பால் அவள் மனம் விழுந்தது.

 

டாமின் அன்பு, அவனது காதல், இவற்றிற்கு முன்னே வேறெதுவும் அவளுக்குப் பெரிதாக தெரியாததால் தானே அவனுடன் மனதளவில் இணைந்தது போல உடலளவிலும் ஆர்யாவால் இணைய முடிந்தது.

 

ஒரு இந்தியப்பெண்ணாக மணவாழ்க்கை மீது அவளுக்கு இருந்த எதிர்பார்ப்பு எப்போதோ மடிந்து போய்விட்டது. எனவே தான் எக்காலத்திலும் டாமை கட்டாயப்படுத்தி மணவாழ்க்கைக்குள் இழுத்துக்கொள்ளக்கூடாது என தனக்குள் சங்கல்பம் செய்துகொண்டாள்.

 

ஒருவேளை தங்களது உறவின் பலனாக குழந்தையே உருவானாலும் அவன் முதுகில் அக்குழந்தையின் சுமையை சுமத்தப்போவதில்லை. குழந்தையைக் காரணம் காட்டி அவனைத் தன்னோடு வலுக்கட்டாயமாகப் பிணைக்கும் எண்ணமும் அவளுக்கு இல்லை.

 

அவனது காதலில் காலம் முழுக்க மூழ்கியிருக்க ஆசைப்படுபவளுக்கென தனியே எந்த வேறெந்த ஆசையும் இல்லை.

 

“நீ ரொம்ப யோசிக்காத டாம்… எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல… அதனால நீ குற்றவுணர்ச்சில தவிக்க வேண்டிய அவசியமில்ல”

 

மனதிலுள்ளதை முழுமையாகச் சொல்லாமல் சுருக்கமாக கூறினாள் அவள்.

 

டாமிற்கு அந்தப் பதில் போதவில்லை. அவனது எதிர்பார்ப்பு அந்தப் பதில் இல்லை என நினைத்தான்.

 

“ஒருவேளை இதனால தான் நீ என் கிட்ட உரிமை எடுத்துக்க தயங்குறியா? உன்னோட பார்ட்னர் நான்னு வெளியுலகத்துக்குச் சொல்ல தயங்குறதுக்கு என்ன காரணம்? எதிர்பார்ப்பு இல்லாத உறவு எதுவுமில்ல ஜெர்ரி… உண்மைய சொல்லு”

 

ஆர்யாவால் இதற்கு மேல் அவனிடம் வாதிட முடியவில்லை.

 

“உன் கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா காலம் முழுக்க நீ என் கூட நிரந்தரமா இருக்கணும்னு நான் யோசிக்க ஆரம்பிச்சிடுவேன் டாம்… நான் இப்பிடியே இருந்துக்குறேன்… அப்ப தான் நாளைக்கு நம்ம நண்பர்களா பிரிஞ்சா கூட வலிக்காது”

 

டாமின் மனம் கசந்தது. சற்று முன்னர் அவனும் பிரிவைப் பற்றி பேசினான். அப்போது வராத கசப்பு இப்போது ஆர்யா அதை குறிப்பு காட்டி பேசவும் வந்தது என்றால் என்ன அர்த்தம்?

 

நியாயப்படி இந்தப் பெண் என்னுடன் ஒட்டிகொள்ளாமல் இருப்பதே நல்லதென நினைத்து அவன் குதூகலித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய முடியவில்லை.

 

ஆர்யா அவனைத் துணைவன் என அனைவரிடமும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிதவித்தது அவனது மனம். பணம் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவள் உரிமையாக நடந்துகொள்ள வேண்டுமென தவித்தது. இதெல்லாம் நடக்க வேண்டுமாயின் அவர்களுக்குக்கிடையே நிரந்தர பிணைப்பும், சமுதாய அங்கீகாரத்துடன் கூடிய உறவும் அவசியம் அல்லவா!

 

உறவென்றால் எட்டிக்காய் என்பவனுக்கு அவள் உரிமை எடுக்கமாட்டேன் என்று சொன்னால் மட்டும் கோபம் வருமாயின் ஆர்யாவாலும் என்ன தான் செய்யமுடியும்?

 

எனவே தன்மையாய் தன் மனதிலுள்ளதை எடுத்துரைத்தாள்.

 

“நான் ரொம்ப தெளிவா இருக்குறேன் டாம்… எனக்கு லைஃப்ல கிடைக்காத நிறைய விசயங்களை நீ குடுத்திருக்க… வாழ்க்கைய பத்தி தெளிவா சிந்திக்க எனக்குக் கத்துக் குடுத்தவனும் நீ தான்… வேண்டாம்னு ஒதுங்கிப்போற எத்தனையோ விசயங்களை உன் துணை இருந்ததால என்னால செய்ய முடிஞ்சுது, இந்தப் போட்டியையும் சேர்த்து தான் சொல்லுறேன்… இவ்ளோ நல்லது செஞ்ச ஒருத்தனை எந்த நிலமையிலயும் நான் தர்மசங்கடத்துல சிக்கவிடமாட்டேன் டாம்… ப்லீவ் மீ”

 

ஆர்யா கொடுத்த விளக்கத்திற்கு வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தானே தவிர டாம் பதில் எதுவும் பேசவில்லை. அவன் பரிசாக வாங்கிய இதய வடிவ குஷனை அவள் பத்திரப்படுத்துவதைப் பார்த்தபடி நின்றான் அவன்.

 

அவனுக்குள் நடக்கும் போராட்டத்தின் முடிவும், அவனது எதிர்பார்ப்பும் என்னவென காலம் தான் டாமிற்கு புரியவைக்க வேண்டும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
49
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்