Loading

 

காதல் 18

 

“நம்ம எப்பிடிலாம் இருக்கக்கூடாதுனு பிடிவாதமா இருக்குறோமோ அப்பிடியெல்லாம் நம்மளை இருக்க வச்சிடும் இந்த ப்ளடி லவ்… நம்மளை தலைகீழா மாத்துறதுக்கு எல்லா முயற்சியையும் எடுக்கும்… நமக்கே நம்மளோட மாற்றம் ஆச்சரியத்தைக் குடுக்குற அளவுக்கு காதல் நமக்குள்ள புகுந்து ஆட்டி வைக்கும்… இதெல்லாம் தெரிஞ்சும் மனுசங்களான நம்ம ஏன் காதல்ல விழுறோம்? இந்தக் கேள்விய யாராச்சும் உங்களை நீங்களே கேட்டிருக்கிங்களா? நான் கேட்டுருக்கேன்… அப்ப எனக்குக் கிடைச்ச பதில், பிறவியிலயே நிறைய இம்பெர்ஃபெக்சனோட இருக்குற மனுசன் அதை போக்கிக்கணும்னா அதுக்குக் கட்டாயம் காதல் தேவை… காதலர்கள்ங்கிறவங்க பரஸ்பரம் ஒருத்தரோட இம்பெர்ஃபெக்சனை இன்னொருத்தர் கம்ப்ளீட் பண்ணி முழுமையானவங்களா மாத்துவாங்க… காதல் வந்ததுக்கு அப்புறம் தன்னை மாத்திக்கிட்டு வாழ்க்கையில ஜெயிச்சவங்களோட கதை எல்லாம் இந்த மாரலை தானே நமக்குச் சொல்லுது”

 

-டாம்

 

மதுரிமாவின் கருக்கலைப்பு சமயத்தில் ஏழு நாட்களும் அவளை அன்போடு கவனித்துக்கொண்டாள் ஆர்யா. அவள் இன்ஸ்ட்ரக்சராகப் பணியாற்றிய வகுப்பிற்கு தினமும் ஒரு மணி நேரம் மட்டும் போய் பாடம் எடுத்துவிட்டு வருவாள்.

 

கூடவே நவீனின் நிலையும் பரிதாபம் தான் என அவளுக்குப் புரியவைத்தாள்.

 

உதிரப்போக்கு முழுவதுமாக நின்றதும் மகப்பேறு நிபுணரிடம் பரிசோதனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது நவீனும் அங்கே வந்திருந்தான்.

 

மதுரிமாவுக்கு அவனைத் திட்டித் தீர்த்த பொழுதெல்லாம் ஞாபகம் வர கண்ணீருடன் அவனை அணைத்துக்கொண்டாள்.

 

“சாரி நவீன்”

 

“எதுக்குச் சாரி கேக்குற? என் கிட்ட கத்தாம வேற யார் கிட்ட உன் கோவத்தைக் காட்ட முடியும் சொல்லு… உன் கோவத்துக்கு அடிப்படை என் மேல உனக்கு இருக்குற உரிமை தான்னு மிஸ்டர் போல்டன் எனக்குப் புரிய வச்சார் மது”

 

காதலர்கள் ஒன்று கூடிய பிறகு அங்கே மூன்றாவது ஆளாக இருக்க விரும்பாத ஆர்யா அவர்களிடமிருந்து விடைபெற்றாள்.

 

“இப்பவே போகணுமா? மிஸ்டர் போல்டன் இன்னைக்கு ஈவ்னிங் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்குறேன்னு சொல்லிருக்கார்”

 

“டாமுக்கு நான் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இருக்குறேன் நவீன்”

 

கண்ணைச் சிமிட்டிச் சொன்னவளை நவீனே ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டின் வீட்டில் கொண்டு போய் விட்டான்.

 

“இந்த வாரம் முழுக்க க்ளாஸ் இல்லாததால பிரச்சனை இல்ல… நெக்ஸ்ட் வீக்ல இருந்து செம் ஃபயரா ஆரம்பிக்கும்… எங்க நீ என்னால கிளாஸை மிஸ் பண்ணிடுவியோனு பயந்துட்டே இருந்தேன் ஆர்யா… தேங்க் காட், அப்பிடி எதுவும் நடக்கல… நீ பால்ரூம் காம்படிசன்ல கலந்துக்கப்போறனு மிஸ்டர் போல்டன் சொன்னார்… அனேகமா இன்னைக்கு நைட் உன்னை ஷாப்பிங் அழைச்சிட்டுப் போவார்… இந்த செவன் டேய்ஸ் ஒரு அற்புதமான மனுசன் கூட இருந்தேன்… அதுக்கு உனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்… அண்ட் யூ ஆர் வெரி லக்கி டு ஹேவ் ஹிம் அஸ் யுவர் பார்ட்னர்”

 

முழு மனதோடு சொல்லி விடைபெற்றான் நவீன். ஆர்யாவின் மனம் டாமை நவீன் புகழ்ந்ததில் பூரித்துப் போயிருந்தது.

 

அன்று பல்கலைகழகத்தில் ஏதோ செமினார் என்று காலையில் போகும் போதே ஆர்யாவிடம் மொபைலில் சொல்லியிருந்தான் டாம். எப்படியும் வீடு திரும்ப மாலை ஆகிவிடும்.

 

அதுவரை அடுத்த வார வகுப்பிற்கான பாடத்தைத் திட்டமிட ஆரம்பித்தாள். படிப்பும், கற்பிக்கும் பணியும் அவளது நேரத்தை கருங்குழி போல இழுத்துக்கொள்ள மதியவுணவுக்கு மட்டுமே மடிக்கணினியை விட்டு நகர்ந்தாள்.

 

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சோம்பல் முறித்தவள் டாமிடமிருந்து மொபைலில் அழைப்பு வரவும் உற்சாகமாக ஏற்றாள்.

 

“இன்னைக்கு நீ திரும்ப வரவேண்டிய நாள்” என்றான் அவன்.

 

“ஞாபகம் இருக்கு” அமர்த்தலாக அவள் சொல்லவும் “நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கவா?” என்று கேட்டான்.

 

“நானே வந்துட்டேன் டாம்… இன்னைக்கு நைட் நீ என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போறதா சொன்னியாமே?”

 

“யாஹ்! அப்பிடியே க்ளே பிட் போய் இந்தியன் ஃபூட் சாப்பிடலாமா?”

 

“நோ நோ! நம்ம வீட்டுல சமைக்கலாம் டாம்… நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?”

 

“ஷ்யூர்” என்று அவன் பதிலளிக்கும்போதே “புரொபசர் போல்டன்” என யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது ஆர்யாவுக்கு.

 

“யூ கேரி ஆன் யுவர் ஒர்க் டாம்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவள் என்ன சமைக்கலாமென இணையத்தில் தேட ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு இருந்த சமையலறிவுக்கு இணையத்தின் உதவியின்றி சமைப்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமல்லவே! கூடவே டாமிற்கான சர்ப்ரைசும் இருக்கிறதல்லவா!

 

தோசையும் சட்னியும் செய்யலாமா என யோசித்தவள் அதற்கு தேவையான பாத்திரங்கள் அங்கே உள்ளதா என ஆராய ஆரம்பித்தாள். இல்லை என்றதும் அதையும் வாங்கும் முடிவுக்கு வந்தாள்.

 

வால்மார்ட்டில் ‘ரெடி டு மிக்ஸ்’ தோசை மாவு கிடைக்கும். அங்கேயே இதர பாத்திரங்களையும் வாங்கலாமென நினைத்தாள்.

 

மாலையில் வீட்டுக்கு வந்த டாம் “ஐ மிஸ் யுவர் ஹக்ஸ் அண்ட் குட்நைட் கிஸ் ஜெர்ரி” என்று சொன்னபடியே இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

 

பிரிவுத்துயர் வடியும் வரை அணைப்பை விடவில்லை அவன்.

 

“எவ்ளோ நேரம் இப்பிடி ஹக் பண்ணிட்டே இருப்ப டாம்?” விளையாட்டாக ஆர்யா கேட்டபோதும் அணைப்பை விலக்க வேண்டுமே அவன்.

 

“ப்ச்! செவன் டேய்ஸ் மிஸ் பண்ணுனதை ஈடுகட்டணும் ஜெர்ரி… டிஸ்டர்ப் பண்ணாத”

 

அவளுக்கும் அவனது அணைப்பு கசக்குமா என்ன? ஆவலும் ஆசையுமாக அணைப்புக்குள் அடங்கிக்கொண்டாள் ஆர்யா.

 

சிறிது நேரத்தில் டாமே மனம் வந்து விலகிக்கொண்டான்.

 

“இனிமே எந்தக் காரணத்துக்காகவும் நீ என்னைத் தனியா விட்டுட்டுப் போகக்கூடாது… இது என்னோட ஆர்டர்” என மிரட்டியவன் ஷாப்பிங் செல்ல ஆயத்தமாகச் சொல்லிவிட்டுத் தானும் தயாரானான்.

 

இருவரும் முதலில் ஒரு டிசைனர் அவுட்லெட்டுக்குச் சென்று ‘பால் ரூம்’ நடனப்போட்டிக்கான உடையை வாங்கிக்கொண்டார்கள். பின்னர் வால்மார்ட்டில் தோசை மாவு மற்றும் வீட்டுபயோகப்பொருட்களை வாங்கும் போது அவனுக்குத் தெரியாமல் சிலவற்றை வாங்கி இரகசியமாகப் பணம் செலுத்தினாள்.

 

“ஹோம் டெலிவரி பண்ணிடுங்க”

 

டாம் வால்மார்ட்டின் ‘இன் ஹோம் டெலிவரி’ திட்டத்தில் பணம் செலுத்தும் உறுப்பினர் என்பதால் வீட்டிற்கு இலவச டெலிவரி உண்டு. அதை இப்போது பயன்படுத்திக்கொண்டாள் ஆர்யா.

 

இது டாமிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டவள் அவனோடு கமுக்கமாக வீடு வந்து சென்றாள்.

 

“ஐ நீட் டு டேக் பாத்” என்று டாம் குளியலறைக்குள் பதுங்கவும், வால்மார்ட்டிலிருந்து அவள் வாங்கிய பொருட்கள் டெலிவரி செய்யப்படவும் சரியாக இருந்தது.

 

அதை வாங்கி பதுக்கி வைத்தவள் அவன் வருவதற்குள் தோசை மாவை பாத்திரத்துக்கு மாற்றி உப்பு போட்டு கலக்கி வைத்தாள்.

 

டாம் குளித்துவிட்டு வந்தவன் “எனி ஹெல்ப் ஜெர்ரி?” என்று கேட்க

 

“யெஸ்… நான் எவ்ளோ அழகா தோசை சுடுறேன்னு பாரு… இன்னைக்கு அதான் உன்னோட வேலை” என்றாள் கட்டளையிடும் பாணியில்.

 

டாம் இடை வரை குனிந்து “ஓ.கே மை குயின்” என்கவும் பீறிட்டுச் சிரித்தவள் தோசையை ஊற்ற ஆரம்பித்தாள்.

 

அவன் அதை ஆர்வமாகப் பார்த்தபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

 

“ஏன் இதை சர்கிளா தான் குக் பண்ணனுமா? ஒய் டோண்ட் வீ குக் ஸ்கொயர் தோசா?”

 

“இவ்ளோ க்ளாரிஃபைட் பட்டர் ஊத்துனா கொலஸ்ட்ரால் எவ்ளோ அதிகம் ஆகும் தெரியுமா?”

 

“உனக்கு ஸ்வீட் தோசா செய்ய தெரியாதா ஜெர்ரி?”

 

“ஏன் செப்பரேட்டா கோகனட் க்ரீன் சில்லிய அரைச்சு டெம்பர் பண்ணுற? அதை தோசா மேல ஊத்திட்டா அந்த வேலை மிச்சம்ல?”

 

தோசையை ஊற்றுவதிலிருந்து சட்னியைத் தாளிப்பது வரை ஒவ்வொன்றுக்கும் அவனுக்குச் சந்தேகம் பிறந்தது. அவனது சந்தேகங்களுக்குப் பதிலளித்து தோசையையும் சுட்டெடுத்தவள் “ஐ நீட் ஷவர் பாத்” என்று நழுவினாள்.

 

அவள் குளித்து உடைமாற்றும் போது டாம் அவர்களின் அறைக்குள் வரக்கூடாதென்பது அவர்களிடையே இருக்கும் பரஸ்பர ஒப்பந்தம். எனவே ஹாலில் அமர்ந்து மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தவன் ஆர்யா குளித்து உடைமாற்றிவிட்டு அந்த அறைக்குள் செய்த எதையும் கவனிக்கவில்லை.

 

அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தவள் ஹாலுக்கு வந்து சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவனத் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “லெட்ஸ் ஹேவ் டின்னர் டாம்” என்று சொல்லவும் அவனும் எழுந்தான்.

 

டைனிங் டேபிளுக்குச் சென்றவனைக் கைப்பிடித்து தடுத்தவள் “ரூமுக்குப் போகலாம்” என்று மையலாக உரைக்க டாமோ குதூகலத்துடன் அவளைத் தொடர்ந்தான்.

 

அறைக்குள் அடியெடுத்து வைத்தவன் அங்கே கண்ட காட்சியில் மெய்யுருகிப் போனான்.

 

அறையில் ஆங்காங்கே இருந்த கேண்டில் ஹோல்டர்களில் மெழுகுவர்த்திகள் சுடர் விட்டு வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருக்க, அங்கே மெல்லிய லாவண்டர் நறுமணம் கமழ்ந்தது.

 

அவனது மடிக்கணினியை வைத்திருக்கும் மேஜை தற்காலிக உணவுமேஜையாக மாறியிருந்தது. அதன் நடுவே இருந்த ஃப்ளவர் வாஷில் டெய்சி மலர்கள் சிரித்தன.

 

“ஜெர்ரி” என்று கண்களில் நட்சத்திரம் மின்ன திரும்பியவனின் காதுகளில் “சர்ப்ரைஸ் கேண்டில் லைட் டின்னர் ஃபார் யூ மை கிங்” என்று முணுமுணுத்தாள் ஆர்யா.

 

அவனது உயரத்துக்கு எம்புவதற்காக தோளில் கரங்களை அழுத்தியிருந்தவள் டாமின் கைவிரல்கள் அவளது இடையில் விளையாடவும் கூச்சத்தில் சிரித்தாள்.

 

“லெட்ஸ் ஈட்” கையைப் பற்றி மேஜைக்கு அழைத்துச் சென்றவள் தோசையைப் பரிமாறினாள்.

 

“கேண்டில் லைட் டின்னரோட பட்ஜெட் வெர்சன்” என டாம் கிண்டல் செய்ய அவனைப் பொய்யாக முறைத்தபடி தோசையை பிய்த்தாள் ஆர்யா.

 

“ஜஸ்ட் ஃபன் பண்ணுனேன்… ஐ லவ் யுவர் சர்ப்ரைஸ் கேண்டில் லைட் டின்னர்… இட்ஸ் ரியலி க்யூட்” என்றவன் அவளது இடதுகரத்தின் விரல்களின் நுனிகளில் முத்தங்களை சரமாகப் பொழிந்தான்.

 

ஆர்யா நெக்குருகிப் போய் சாப்பிடுவதை நிறுத்தவும் “யூ ஹேவ் டு ஈட் வெல் டுடே… என் லவ்வை தாங்கிக்க எனர்ஜி வேணும்ல” என்றவனின் குரலில் கூடை கூடையாய் தாபம் பொங்கியது.

 

அதில் நாணியவளாக ஆர்யா தோசையை எப்படி சாப்பிட வேண்டுமென அவனுக்குச் சொல்லிக்கொடுத்தாள்.

 

தேங்காய் சட்னியின் காரம் ‘சுள்ளென்ற’ ரகம் தான். ஆனாலும் ஒரு விள்ளல் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டான் டாம்.

 

அன்பானவர்கள் கொடுக்கும் உணவை அலட்சியம் செய்யக்கூடாதென அடிக்கடி லிண்டா கூறுவார். அதை எப்போதுமே கடைபிடிப்பவன் காதலி செய்த உணவை மிச்சம் வைப்பானா என்ன?

 

சாப்பிட்ட பிறகு மேஜை மற்றும் பாத்திரங்களை ஒதுங்க வைத்தவர்கள் மீண்டும் அறைக்குள் வந்தபோது அங்கிருந்த மெல்லிய வெளிச்சம் அவர்களுக்குள் மென்மையாகப் போதையூட்டியது.

 

போதாக்குறைக்கு நாசியில் நிரடிய அதே லேவண்டர் நறுமணம் ஆர்யாவின் மேனியையும் ஆக்கிரமித்திருக்க அதை வாசம் பிடிக்கும் சாக்கில் அவளைத் தன் வசப்படுத்தினான் டாம்.

 

கழுத்து வளைவுகளில் ஆரம்பித்த அவனது உதடுகளின் ஊர்வலம் கன்னக்கதுப்புகளில் தொடர்ந்து உதடுகளில் முடிவடைந்தது.

 

இதழ் முத்தம் கொடுத்த போதை உடலில் ஒவ்வொரு அணுவிலும் கிளர்ச்சியை உண்டாக்கியது.

 

அவள் இல்லாத ஏழு நாட்களின் இழப்பு இப்போதைய போதையிலும் கிளர்ச்சியிலும் பூதாகரமாகத் தோன்ற அதை உடனடியாக ஈடுகட்டும் வேகத்துடன் ஆர்யாவை முற்றுகையிட்டான் டாம்.

 

காதலெனும் காட்டாற்று வெள்ளத்தை எந்தப் பிரிவெனும் பாலத்தாலும் தடுக்க முடியாது. அதற்கு தடையிடப் பார்த்தால், அதன் வேகம் அசுரத்தனமாக அதிகரிக்குமே தவிர கொஞ்சமும் குறையாது.

 

அத்தனை தடையையும் அதிவேகத்தில் மோதி உடைத்து பிரவாகமாகப் பாயவல்லது இந்தப் பொல்லாத காதல். அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆக்கிரமிப்புக்குள் அடக்கும் திறன்மிக்கதும் கூட.

 

ஆர்யாவையும் டாமையும் மட்டும் அது விட்டு வைக்குமா என்ன? காதல் கொடுத்த தைரியத்தில் இணைந்தவர்கள் தங்களை மறந்து தாபத்தில் திளைத்தனர். மோகத்தில் முக்குளித்தனர். காதலோடு சேர்ந்து இலவச இணைப்பாக வந்த காமம் அவர்களின் கூடலை அழகாக்கியது. காதல் போரில் அணைப்புகளும் முத்தங்களும் படை பரிவாரங்களாகிவிட யாருக்கு வெற்றி என்பதே தெரியவில்லை.

 

வெற்றியோ தோல்வியோ இரண்டும் சமம் தானே காதலர்களுக்கு. கூடலின் முடிவில் பரிசாகக் கிடைத்த பரஸ்பர நெற்றி முத்தங்களைக் கண் மூடி ஏற்றுக்கொண்டர் இருவரும்.

 

“ஐ லவ் யூ டாம்” என்றவள் வழக்கமான குட் நைட் கிஸ்சை மறக்காமல் கொடுத்துவிட்டு அவன் மார்பிலேயே படுத்துக் கண்ணுறங்கி போனாள்.

 

டாம் அவளைத் தன்னோடு பசை போட்டு ஒட்டாத குறையாக சேர்த்து அணைத்தபடி கண் மூடினான். ஆனால் அவன் உறங்கவில்லை.

 

காரணம் ஆர்யா இல்லாமல் கழித்த ஏழு நாட்கள் அவனுக்குள் ஏற்படுத்திய கேள்விகள். அந்தக் கேள்விகளுக்குக் காரணமானவள் ஆர்யா மட்டுமில்லை. அவள் அவனோடு அனுப்பி வைத்த நவீனும் தான்.

 

ஏழு நாட்களுக்கு நவீன் பெயரளவுக்குத் தான் டாமுடன் இருந்தானே தவிர அவனது மனம் முழுவதும் மதுரிமாவிடம் இருந்தது.

 

மதுரிமாவின் உடல்நிலையை எண்ணி அவன் பலவாறாகப் புலம்பினான். வருந்தினான். சில நேரம் அழக்கூட செய்தான். டாம் அவனை வெகு சிரமப்பட்டுத் தான் தேற்றினான்.

 

“எனக்குக் குழந்தைனா ரொம்ப பிடிக்கும் மிஸ்டர் போல்டன்… பட் இப்ப எங்க ரெண்டு பேரோட வீட்டுலயும் சிச்சுவேசன் சரியில்ல… நாங்க ஸ்டடீஸ் முடிச்சு நல்ல பொசிசனுக்கு வந்தா தான் எங்க ரெண்டு பேரோட ஃபேமிலியும் மேரேஜுக்குச் சம்மதிப்பாங்க… வேற வழியில்லாம குழந்தைய அபார்ட் பண்ணிட்டோம்… நானும் அதுக்கு ஒரு காரணம் தான்… ஆனா வலிய என் மது மட்டுமே அனுபவிக்குறா”

 

மதுரிமாவின் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையைச் சொல்லிக் காட்டியே நவீனுக்கு அறிவுரை கூறினான் டாம். இதை மறந்து படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னவன் இன்னும் சில மாதங்களில் படிப்பு முடிந்தும் நல்ல வேலையில் அமர்ந்ததும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றான்.

 

நவீனும் தேறினான். ஆனால் டாமின் மனம்தான் யோசனையில் ஆழ்ந்தது.

 

என்ன தான் ஆர்யா குடும்பத்தினரைப் பற்றி யோசிக்காவிட்டாலும் அவளும் இந்தியப்பெண். அவளுக்கும் மதுரிமா, நவீனைப்போல குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா!

 

தனக்காக அதை காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொள்கிறாளோ? தனது நிபந்தனையில் நியாயம் இல்லையோ? தான் நிரந்தர உறவுக்குத் தயங்குவதால்தான் அவள் சில நேரங்களில் நீ நான் என பிரித்துப் பேசுகிறாளோ?

 

இப்படி எண்ணற்ற கேள்விகள் அவனுக்குள். சற்று முன்னர் கடந்த காதல் கணங்களின் பாதிப்பில் மறைந்திருந்த கேள்விகள் அவனுக்குள் இப்போது மீண்டும் பேயாட்டம் போட ஆரம்பித்தன.

 

எதையும் யோசிக்காமல் புறந்தள்ளிவிட்டு அவனால் உறங்க முடியவில்லை. தன்மீது மலர்க்கொடி போல சாய்ந்து உறங்குபவளின் மீது இருக்கும் காதல் அவனை உறங்கவிடவில்லை.

 

அன்றைய இரவு ஆர்யாவுக்கு இனிய இரவாகவும் டாமுக்கு உறங்கா இரவாகவும் நீண்டது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
47
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்