Loading

காதல் 14

“எந்த நிபந்தனையும் விதிக்காம எதிர்பார்ப்பு இல்லாம வர்ற காதல் எவ்ளோ அற்புதமான உணர்வு தெரியுமா? அந்த மாதிரி காதலை உங்களுக்கு உணர்த்த ஒரு நபர் வர்றாங்கனா, Don’t loose him or her… இந்த மாதிரி அற்புதமான மனுசங்க இப்ப உள்ள ஃபாஸ்ட் மூவிங் வேர்ல்ட்ல குறைஞ்சிட்டே வர்றாங்க… கால்குலேட்டிவ் மைண்ட் பீபிள் நிறைஞ்ச உலகத்துல இப்பிடிப்பட்ட அற்புதமான காதல் கிடைக்குறது ரொம்ப பெரிய விசயம்… காதலோட அருமை தெரியணும்னா அதுக்கு நீங்க காதல்ல விழுந்தா மட்டும் போதாது… உங்க பார்ட்னரால காதலிக்கப்படணும்… ஆரம்பத்துல அந்தக் காதல் எவ்ளோ தீவிரமா இருக்குமோ அதே தீவிரம் வாழ்நாள் முழுக்கவும் இருக்குறபடி பாத்துக்க வேண்டியது சம்பந்தப்பட்டவங்க கையில இருக்கு”

 

-டாம்

 

சம்மர் டேர்மின் இறுதியில் வரும் தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருந்தாள் ஆர்யா. அவள் பல்கலைகழகத்தின் S.E.E.D (Student Employee Excellece Development) மூலம் பயிற்சி பெற்று இளங்கலை வணிக மேலாண்மை (BBA) வகுப்புகளுக்கு அசிஸ்டெண்ட் இன்ஸ்ட்ரக்சராகப் பணியாற்ற ஆரம்பித்திருந்தாள்.

 

இந்தியாவில் தொலைத்தொடர்பு மேலாண்மையில் முதுகலை படித்திருந்ததால் அந்தப் பாடத்தை மட்டும் எடுக்கத் தகுதி பெற்றிருந்தாள் அவள். அதற்காக அவளுக்கு ஊதியம், மருத்துவ காப்பீடு எல்லாமே வழங்கப்பட்டது.

 

படிப்பு, வேலை, பொழுதுபோக்கு என அவளது டெக்சாஸ் வாழ்க்கை செம்மையாகச் சென்று கொண்டிருந்தது. சம்மர் டேர்ம் முடிந்ததும் சில நாட்கள் விடுமுறை உண்டு. அதை சம்மர் ஃபால் ப்ரேக் என்பார்கள்.

 

அந்த விடுமுறையில் டாம் அவனது அன்னை வசிக்கும் விம்பர்லி என்ற சிறிய நகரத்துக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தான். அது நகரத்தின் பரபரப்புக்கு அப்பாற்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த கிராமந்திர பகுதி.

 

ஆர்யா ரசிப்பதற்கென அங்கே ஏகப்பட்ட இடங்கள் இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டியிருந்தான். அவளுக்குமே அங்கே செல்வதில் மாற்று கருத்தில்லை. ஆனால் மனதின் ஓரம் சின்ன தயக்கம் ஒட்டிக்கொண்டிருந்தது.

 

தேர்வை நல்லபடியாக முடித்ததும் மதுரிமாவும் நவீனும் அழைத்தார்கள் என்று வெஸ்ட் காம்பஸ் பகுதிக்குச் சென்றிருந்தாள் ஆர்யா. மறுநாள் அவளும் டாமும் விம்பர்லி செல்வதாக ஏற்பாடு.

 

வெஸ்ட் காம்பஸ் பகுதியில் அளவுக்கதிகமாகச் சமைக்கப்பட்டு வீணாகும் உணவை சாப்பாடு தட்டுப்பாடாக இருக்கும் மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு மாணவர் கூட்டமைப்பினர் இருந்தார்கள்.

 

அவர்களோடு வாலண்டியராகப் பணியாற்ற நவீனும் மதுரிமாவும் செல்லும்போது தங்களுடன் ஆர்யாவையும் அழைத்துச் சென்றனர்.

 

ஆர்யாவுக்கு இயல்பிலேயே இம்மாதிரி தன்னார்வ வேலைகளில் ஆர்வமுண்டு. ஆனால் தேவநாராயணனுக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொள்வாள்.

 

அவளுக்கு ஆஸ்டின் நகரம் அற்புதமான வாய்ப்பை வழங்குகிறபோது மறுக்கவா செய்வாள்? ஆர்வத்தோடு அபரிமிதமாக இருந்த உணவை ‘டிஸ்போசபிள் டப்பாக்களில்’ எடுத்து வைக்கும் வேலையை செய்தாள்.

 

அதை சான் கபிரியேல் தெருவில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக ஒரு குழுவினர் எடுத்துச் சென்றார்கள்.

 

படிக்கும் மாணவர்களுக்குப் பற்றாக்குறையான உணவு தான் மாபெரும் பிரச்சனை. அதை தீர்க்கும் வேலையைச் செய்த மாணவர் கூட்டமைப்பினர் இதைப் போல பல்கலைகழக மாணவர்கள் தங்கியுள்ள இதர தெருக்களுக்கும் உணவை எடுத்துச் செல்லும் ஏற்பாட்டைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

 

வந்த வேலை முடிந்ததும் நவீனும் மதுரிமாவும் ஆர்யாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப அவளும் ஒரு கேப் புக் செய்து ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினுக்குக் கிளம்பினாள்.

 

அன்று துறை சம்பந்தப்பட்ட மீட்டிங் ஒன்றில் டாம் கலந்து கொண்டதால் வீட்டுக்கு வர தாமதமாகும் என்று சொல்லியிருந்தான்.

 

வீட்டை அடைந்தவளுக்குத் தனிமை போரடித்தது. இந்த ஒரு மாதத்தில் படிப்பு, தேர்வு, வேலையென ஓடியதில் இந்திய உணவு சாப்பிடுவதையே மறந்து போயிருந்தவளுக்கு இன்று சமைத்தால் என்ன என்று தோன்றவும் மொபைலோடு அருகிலிருக்கும் ஆரஞ்ச் மார்க்கெட்டுக்குக் கிளம்பினாள்.

 

சப்பாத்தியும் பன்னீர் க்ரேவியும் செய்யலாம் என திட்டமிட்டவள் வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பலாமென அங்கிருந்து கேப் புக் செய்தபோது தான் ஆரஞ்ச் மார்க்கெட்டின் வெளிப்பகுதியில் நின்ற ரவியைக் கவனித்தாள்.

 

அவன் செய்த காரியத்தை மறக்க முடியுமா? ஜிவுஜிவுவென கோபத்தில் முகம் சிவந்து போனது ஆர்யாவுக்கு. அவனைப் போல கீழ்த்தரமானவனிடம் பேசுவது கூட இழுக்கு என்று தோன்றியது.

 

அவன் வெகுநேரமாக ஆரஞ்ச் மார்க்கெட் கட்டிடத்தையே நோட்டமிடவும் தன்னைப் பின் தொடர்ந்து அங்கே வந்திருப்பானோ என்ற சந்தேகம் அவளுக்குள் கிளம்பியது.

 

வெளியே போக எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் தன்னைப் பற்றி குடும்பத்தினரிடம் இழிவாகச் சொல்லி தனது வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாக எண்ணி குதூகலித்திருப்பானே, அந்த குதூலகத்தை அழித்தால் என்னவென தோன்றியது.

 

ஆர்யா வெளியேறும் வரை ரவி அங்கிருந்து நகரப்போவதில்லை. எனவே டாமின் மொபைல் எண்ணுக்கு அழைத்தாள்.

 

“சொல்லு ஜெர்ரி”

 

“மீட்டிங் முடிஞ்சுதா டாம்?”

 

“ஆன் தி வே ஜெர்ரி”

 

“அப்ப என்னை ஆரஞ்ச் மார்க்கெட்ல வந்து பிக்கப் பண்ணிக்க டாம்”

 

“ஓஹ்! புரொவிசன் இப்ப தேவையா ஜெர்ரி? நாளைக்கு நம்ம விம்பர்லி போறோம்”

 

“எனக்கு இந்தியன் ஃபூட் சாப்பிடணும் போல இருந்துச்சு டாம்… லீவ் தட்… நீ என்னை சூப்பர் மார்க்கெட் உள்ள வந்து அழைச்சிட்டுப் போ”

 

“வாட்?”

 

“டூ வாட் ஐ சே”

 

அவன் பதிலளிக்கும் முன்னர் அழைப்பைத் துண்டித்தவள் டாம் வரும் வரை காத்திருந்தாள். அவளை எதிர்பார்த்து வெளியே நின்று கொண்டிருந்த ரவியும் நகரவில்லை.

 

சிறிது நேரத்தில் டாமின் கார் அங்கே வரவும் மறைவாய் பதுங்கிக்கொண்டான் அவன்.

 

டாம் ஆரஞ்ச் மார்க்கெட்டுக்குள் வந்தவன் ஆர்யா வைத்திருந்த மளிகைப்பொருட்கள் அடங்கிய பைகளை வாங்கிக்கொண்டான்.

 

இருவரும் ஜோடியாக ஆரஞ்ச் மார்க்கெட்டை விட்டு வெளியே வர இக்காட்சியைக் கண்ட ரவி வயிறெரிந்தான்.

 

காரினுள் டாம் பைகளை வைத்த பிறகு ஆர்யாவை உள்ளே அமர சொல்ல அவளோ மாட்டேன் என்று சிறுகுழந்தை போல தலையாட்டி மறுத்தாள்.

 

“ஜெர்ரி” அவன் கண்டிப்பது போல பார்க்கவும் எம்பி அவனது தாடையைப் பிடித்து முத்தம் பதித்தாள்.

 

டாமின் முகம் உடனே கனியவும் சுற்றிலும் கண்களை அலையவிட்டவள் ரவி தங்களை மறைந்திருந்து கவனிப்பதைப் பார்த்துவிட்டு வெகு அழுத்தமாக டாமின் இதழில் முத்தமிட்டாள்.

 

இதையும் என் வீட்டாரிடம் சொல் என்பது போல இருந்தது அவளது உடல்மொழி.

 

டாம் அவளை விலக்கியவன் “உனக்கு என்னாச்சு ஜெர்ரி? ஆர் யூ ஓ.கே?” என விசாரிக்க

 

அவனது சட்டைக்காலரை இழுத்து “ஏன் நான் உன்னை கிஸ் பண்ணுனதே இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

 

“பப்ளிக்ல பண்ணுனதில்ல தானே… சொல்லு என்ன காரணம்?”

 

“நீ ரொம்ப ஷார்ப் டாம்” என அவனை மெச்சியவள் இரகசியம் பேசுவது போல “ரவி ஒளிஞ்சு நின்னு நம்மளை கவனிக்குறான் டாம்” என்றாள்.

 

அவள் சொன்னது தான் தாமதம், டாமின் முகம் இறுகி கை முஷ்டிகள் நெறிந்தன.

 

“எங்க இருக்குறான் அந்த ஸ்கவுண்ட்ரல்?” என்று பற்களைக் கடித்தபடி எகிறியவனை அமைதிப்படுத்தியவள் சைகையில் ரவி நின்ற இடத்தைக் காட்டினாள்.

 

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மறைந்து நின்று கவனிப்பவனைப் புரட்டி எடுத்து எலும்பை உடைக்கலாமா என்னுமளவுக்குக் கோபம் டாமிற்கு. இவனால் என் ஜெர்ரி எவ்வளவு அவமானப்பட்டாள் என ஆத்திரத்துடன் ரவியை நோக்கி செல்ல எத்தனித்தவனை போக விடாமல் தடுத்தாள் ஆர்யா.

 

“விடு ஜெர்ரி! அவனை அடிச்சு நொறுக்கலனா என் ஆத்திரம் அடங்காது”

 

“காம் டவுன் டாம்… நான் கஷ்டப்படுவேன் அதை பாத்து ரசிக்கலாம்னு வந்தவனுக்கு நான் சந்தோசமா இருக்கேன்னு தெரிஞ்சா அடி உதைய விட அதிகமா வலிக்கும்”

 

“அன்னைக்கு நீ எவ்ளோ அழுத? எல்லாத்துக்கும் காரணமானவனைச் சும்மா விட சொல்லுறியா ஜெர்ரி?”

 

“இல்லையே! அவனை கொஞ்சம் இரிட்டேட் பண்ணலாம்”

 

குறும்போடு மொழிந்தவள் டாமின் விலா எலும்புகளில் கிச்சுகிச்சு மூட்டிவிடவும் கூச்சத்தில் நெளிந்தவன் பின்னர் பொறுக்க முடியாமல் சிரித்தான்.

 

“ஹாஹா! வேண்டாம் ஜெர்ரி”

 

அவளிடமிருந்து விலகி ஓடினான். ஆர்யா விடாமல் அவனைத் துரத்தி மீண்டி கிச்சுகிச்சு மூட்டிவிட டாம் அவளது கைகளைப் பின்னே சேர்த்துப் பிணைத்தான்.

 

ஆர்யா அவனது மார்பு உயரமே இருந்து குதித்து அவனுடைய தலையில் முட்ட முயன்றாள். ஆனாள் அதற்கு அவளது கையை டாம் விடவேண்டுமே!

 

ரவியைக் கடுப்பேற்ற ஆரம்பித்த இந்த விளையாட்டு காதலர்களின் மெய்யான விளையாட்டாக மாறிவிட்டது.

 

அதை கண்டு ரவியும் கடுப்புறான் என்பது சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

 

அவன் அவர்களின் பார்வையில் படாமல் மெதுவாக நழுவுவதைக் கூட கண்டுகொள்ளாமல் விளையாட்டாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்தவர்கள் பின்னர் சிலர் தங்களை வேடிக்கை பார்ப்பதை அறிந்து சண்டையை நிறுத்திவிட்டுக் காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினர்.

 

காரில் வரும் போது ஆர்யா தனது மணிக்கட்டு டாமின் இறுகிய பிடியில் கன்றி சிவந்திருப்பதைக் காட்டி உதட்டைப் பிதுக்கினாள்.

 

“யூ ஆர் சோ ரூட் டாம்”

 

அவள் குறை சொல்லவும் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள வெகு சிரமப்பட்டான்.

 

அவள் முறைக்கவும் “யூ ஆர் சோ சாப்ட் ஜெர்ரி” என்றான் அவன்.

 

வீட்டுக்கு வந்தவள் தனது ஆசைப்படி அன்றிரவு சப்பாத்தியும் பனீர் க்ரேவியும் செய்து அசத்தினாள்.

 

டாம் சப்பு கொட்டிச் சாப்பிட்டான். கூடவே தனக்கும் இதை செய்ய கற்று தரும்படி கேட்டான்.

 

“கண்டிப்பா கத்து தர்றேன்… பட் இப்ப இல்ல… ஐ அம் சோ டயர்ட்… ஐ நீட் ரெஸ்ட்”

 

வழக்கம் போல கவுச்சில் படுக்கப்போனவளின் கையைப் பற்றி இழுத்து தன் மீது போட்டுக்கொண்டான் டாம்.

 

“டாம் என்ன இது?” திக்கித்திணறி பேசியபடி எழ முயன்றவளை தனது வலிய கரங்களால் தடுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

“என் கூடவே தூங்கு ஜெர்ரி”

 

ஹஸ்கியாய் பேசி தனது நாசியால் அவளது நாசியை நிமிண்டினான்.

 

ஆர்யாவின் மேனி அவனது அணைப்பில் நடுங்கவும் பூமாலையாய் தன் மேல் கிடந்தவளை படுக்கையில் கிடத்தியவன் நெற்றியில் முத்தமிட்டான்.

 

“ரொம்ப டயர்டா இருக்குனு சொன்னல்ல?” கிசுகிசுப்பாய் ஒலித்தது அவனது குரல்.

 

“ஆ… ஆமா” திணறினாள் பெண்ணவள்.

 

“கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணுமா ஜெர்ரி?” அதிகப்படி ஆர்வத்துடன் ஜொலித்தன அவனது பச்சை விழிகள். விரல்களோ அவளது குட்டி மச்சத்தையும் மெல்லிய உதடுகளையும் தொட்டு முக்தியடைய முயன்று கொண்டிருந்தன.

 

இப்படி நெருக்கமாக அணைத்துக் கேட்டால் என்ன பதில் சொல்வாள் அவள்?

 

“டா…ம்ம்ம்” தவிப்போடு ஒலித்தது அவளது குரல்.

 

இன்னும் கொஞ்சநேரம் இந்த நெருக்கம் நீடித்தால் அவர்களிடையே இருக்கும் எல்லைகள் உடைந்துவிடும் அபாயம். கரை தாண்டி அவளைத் தனது காதலில் மூழ்கடித்து தானும் அமிழ டாமிற்கும் ஆசை தான்.

 

ஆனால் பெண்ணவளின் கண்களில் கொஞ்சமே கொஞ்சம் தயக்கம் ஒட்டியிருந்தது.

 

அந்தக் கண்களில் காதல் மட்டுமே பொங்கி வழியவேண்டும் என்ற பேராசை அவனுக்கு. பெருங்காதலோடும் மையலோடும் அவள் அவனிடம் மயங்கி முயங்கும் நாள் எப்போது வருமோ?

 

ஏக்கப்பெருமூச்சு அனலாய் வெளிவந்தது டாமிடமிருந்து.

 

இன்று வெஸ்ட் காம்பஸ் போவதாகச் சொன்னாள் அல்லவா! அங்கே வாலண்டியராகப் பணியாற்றிய களைப்பு இருக்குமே! ஆர்யாவை ஆளவேண்டும் என்ற தாபம் அடங்கி அவளது களைப்பை நினைத்து கவலை கொண்டது டாமின் காதல் கொண்ட மனது.

 

கம்ஃபோர்டரை அவளுக்குப் போர்த்திவிட்டவன் “குட் நைட் ஜெர்ரி” என்று சொல்லி அவளது இதழில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு விளக்கை அணைத்தான்.

 

குட் நைட் கிஸ் என்பது அவர்களது வழக்கங்களுள் ஒன்றாகிவிட்டது. அது மோகத்தின் ஆரம்பமாகத் தோன்றாததால் கண் மூடி அனுபவித்த ஆர்யா தனது நிலையைப் புரிந்து விலகிக்கொண்டவனை நினைத்து முறுவலித்தபடி கண் மூடிக்கொண்டாள்.

 

அதே நேரம் அவர்களது நெருக்கத்தை ஆரஞ்ச் மார்க்கெட்டில் பார்த்து வயிறெரிந்த ரவி, ஆர்யா அமெரிக்கனுடன் கொஞ்சி குலாவி இன்பமாக வாழ்கிறாள் என்று தனது அன்னையிடம் மொபைலில் சொல்லிக்கொண்டிருந்தான்.

 

அவனது அன்னை அபர்ணா லபோதிபோவென வாயில் அடித்துக்கொண்டார்.

 

“அவ நல்லாவே இருக்கமாட்டா ரவி… என் வயித்தெரிச்சல் அவளைச் சும்மாவிடாது… வெள்ளைக்காரனை விடவா என் மகன் கேவலமா போயிட்டான்? ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்க… அதெல்லாம் கழிஞ்சதும் அவன் இவளைத் துரத்திவிடப்போறான்… அப்ப தான் ஆர்யாக்கும், அவளுக்குச் சப்போர்ட் பண்ணி சண்டை போட்டாளே என் மருமக அவளுக்கும் புத்தி வரும்… வெளிநாட்டுல சீரழிஞ்சு வந்த மகளை உன் அத்தைக்காரி வச்சு அழகு பாக்கட்டும்”

 

“அண்ணியும் அத்தையும் அவளுக்கு இன்னும் சப்போர்ட் பண்ணுறாங்களாம்மா?”

 

“ஆராதனா அவ தங்கச்சிய பத்தி பேசக்கூடாதுனு ராஜேஷை வச்சு என் வாயை அடைச்சிட்டா… அந்த மைத்ரி பொம்பளை நீ அனுப்புன போட்டோவ பாத்த நாள்ல இருந்து சம்பந்தி கிட்ட பேசுறதே இல்லயாம்… அந்த வீட்டுல மானஸ்தன் சம்பந்தி ஒருத்தர் தான்… அதான் ஒழுக்கங்கெட்டவளோட உறவே வேண்டாம்னு தலைமுழுகுன கையோட அவ கிட்ட பொண்டாட்டிய பேசவிடக்கூடாதுனு சிம் கார்டையும் உடைச்சுப் போட்டுட்டார்… நம்ம வீட்டுக்கு வந்தவர் உன் அண்ணி சிம்மையும் உடைச்சிட்டார்… நீ அந்த ஒழுக்கங்கெட்டவளை மறந்து உன் வாழ்க்கைய பாரு ரவி”

 

அபர்ணா சொன்னாலும் ரவியின் மனதில் ஆர்யா சந்தோசமாக இருக்கிறாள் என்ற எண்ணம் உருவாக்கிய காழ்ப்புணர்ச்சி அகல்வேனா என்றது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
39
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்