Loading

காதல் 11

“நான் டாமை லவ் பண்ணுறேன்னு அலெஸாண்ட்ரோ சொன்னார்… முதல்ல என்னால நம்பவே முடியல… ஆனா கொஞ்சநேரம் உக்காந்து நிதானமா யோசிச்சுப் பாத்தா அது உண்மை தான்னு தோணுது… டாம் கிட்ட எனக்கு வர்ற உரிமையான பேச்சு, பாதுகாப்பு உணர்வுலாம் இது வரைக்கும் வேற எந்த ஆண் கிட்டவும் வந்தது இல்ல… முன்ன பின்ன தெரியாத ஆண்கள் கிட்ட வந்த ஒதுக்கம் எனக்கு டாம் கிட்ட வந்ததே கிடையாது… அவனோட ஹக்குலயும் ஹிஸ்லயும் மதிமயங்கி நிக்குறதுக்கு வெறுமெனே ஹார்மோனோட சேட்டை மட்டும் காரணமா இருக்காதுனு தோணுது… அதை தாண்டி காதல் தான் உந்து சக்தியா இருந்து என்னையும் டாமையும் நெருங்கிப் பழக வைக்குதுனு இப்ப நான் கூட நம்ப ஆரம்பிச்சிட்டேன்”

     -ஜெர்ரி

காதல் என்ற உணர்வு நமக்குள் எப்படி புகுமென யாருக்கும் தெரியாது. யாருமறியாமல் நமக்குள் நுழைந்து வேர் பிடித்து பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்த பிறகே ‘ஆஹா! நாம் காதலில் விழுந்துவிட்டோம்’ என்றே கண்டுபிடிப்போம்.

இத்தகைய காதலை மாயையுடன் ஒப்பிடுவது எத்தனை சரியானது என்று சமீப நாட்களாக டாமும் ஆர்யாவும் புரிந்துகொண்டனர்.

இருவரும் காதல் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆயிரம் முறை உறுதிபடுத்தியிருப்பார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மூச்சு விடவேண்டுமே!

டாமுக்கு எங்கே காதலைக் காரணம் காட்டி ஆர்யாவுடன் தனது வாழ்க்கையை பிணைத்துக்கொண்டால் அது வாழ்நாள் முழுமைக்குமான சிறையாக மாறிவிடுமோ என்ற அச்சம். அவனது சுதந்திரமான வாழ்க்கை முறைக்கு அந்தக் காதல் தடையாகிவிடுமோ என்ற தயக்கம்.

அதே நேரம் டாமின் வாழ்க்கை முறை குறித்த உறுதியான பேச்சு ஆர்யாவை அமைதி காக்க வைத்தது. அவள் வளர்ந்த முறைக்குச் சற்றும் ஒவ்வாத வாழ்க்கை முறை அல்லவா அது!

துளிர்த்த அத்தனை காதல்களும் மலர்வதில்லை. மலர்ந்த காதல்கள் அனைத்தும் வாழ்க்கையில் ஒன்றாய் இணைவதில்லை. அந்த எத்தனையோ காதல்களில் தனது சொல்லப்படாத காதலும் இருந்துவிட்டுப் போகட்டுமென மனதிலுள்ள காதலை மறைக்கத் துணிந்தாள் மங்கையவள்.

ஏற்கெனவே டாமிடம் சொன்னது போல தனியே வீடு தேடும் முயற்சியிலும் இறங்கியிருந்தாள். பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தாள். அது கிடைத்துவிட்டால் பகுதிநேர வேலையொன்றை செய்தபடியே படித்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருந்தாள்.

அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதை டாமிடம் மறைத்தாள் அவள். கட்டாயம் அவன் இதற்கு சம்மதிக்க மாட்டான். அதே சமயம் அவனுடன் தங்கிவிட்டால் அவளது மனம் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றுவிடுமோ என்ற பயம். அந்தளவுக்கா சுயக்கட்டுப்பாடு போய்விட்டது என்றது கேட்டால் ஆம் என்ற பதிலே கிடைக்கும் அவளிடமிருந்து.

 எப்போது டாமை அணைக்கவும் முத்தமிடவும் அவள் அனுமதித்தாளோ அப்போதே அவளது சுயக்கட்டுப்பாடு எல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. அவனது அணைப்பிலும் இதழ் முத்தத்திலும் சுயம் தொலைந்து நிற்பவளுக்கு இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்ற பயம் வரவில்லை என்றால் தானே ஆச்சரியம்.

இருவரும் தங்களுக்குள் இருக்கும் தயக்கங்களையும் பயத்தையும் வெளிப்படையாகச் சொல்லாமல் தங்களது உறவுக்குப் பெயரும் கொடுக்காமல் இயல்பாகவே ஒரு மாதத்தைக் கடத்தினர்.

ஆனால் ஒன்று, அவர்களின் தயக்கமோ பயமோ அல்லது பெயரிடப்படாத உறவோ இருவரின் வேலைக்கும் படிப்புக்கும் தடையாக வரவில்லை. அந்த வகையில் இருவரும் மனமுதிர்ச்சி கொண்டவர்களே!

இரண்டாம் மாதத்தின் ஆரம்பம், அதாவது ஆகஸ்ட் டெக்சாஸ் பல்கலைகழகத்தைப் பொருத்தவரை சம்மர் டெர்மின் முடிவு.

படிப்பு படிப்பு என அதிலேயே மூழ்கியிருந்தால் மூளை மறத்துவிடுமென்பதால் டெக்சாஸ் பல்கலைகழக மாணவர்களின் பொழுதுபோக்கு கூட்டமைப்பு ஒன்றில் உறுப்பினர் ஆகியிருந்தாள் ஆர்யா.

அந்தக் கூட்டமைப்பில் இருந்து மாணவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்துவார்கள். அதில் கலந்துகொள்பவர்களுக்கும் ‘கிவ்-அவே’ எனப்படும் இலவசப்பரிசு பொருட்கள் உண்டு. சில நிகழ்ச்சிகளில் இலவசமாக உணவு, பானங்கள் வழங்கப்படும்.

சம்மர் டெர்மின் முதல் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ‘டூனிவெர்ஸ் (Tooniverse)’ என்ற மாறுவேடப்போட்டி பல்கலைகழகத்திலுள்ள வில்லியம்  சி பவர்ஸ் ஸ்டூடண்ட்ஸ் ஆக்டிவிட்டி சென்டரில் இருக்கும் பால்ரூமில் (ball room) நடைபெறுமென அந்தக் கூட்டமைப்பின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கூறியிருந்தார்கள்.

நாம் சிறுவயதில் கண்டு ரசித்த கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிகழ்ச்சிகளில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒன்றைப் போல உடையணிந்து போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.

ஆர்யா இதுவரை பள்ளி, கல்லூரி சமயங்களில் எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டதே இல்லை. கடிவாளம் கட்டிய குதிரையைப் போல படிப்பை நோக்கி மட்டுமே அவளது கவனம் இருந்த காலம் அது.

மாறுவேடபோட்டி பற்றி டாமிடம் பேசியபோது “நீ பார்டிசிபேட் பண்ணலாம் ஜெர்ரி… நீ ஜெர்ரி மாதிரி ட்ரஸ் பண்ணிட்டுப் போ… கண்டிப்பா வின் பண்ணுவ” என்றான்.

அவன் விளையாடுகிறான் என்று நினைத்தவளை மறுநாளே கார்ட்டூன் கேரக்டர்களின் மாதிரி உடைகள் விற்கும் கடைக்கு அழைத்துச் சென்று ஜெர்ரி உடையை வாங்கி கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் டாம்.

“ஆர் யூ சீரியஸ் டாம்?” என்றவளிடம்

“வெரி சீரியஸ்… ஆஸ்டின் லைஃப்ல நீ எக்ஸ்ப்ளோர் பண்ண வேண்டியது நிறைய இருக்கு ஜெர்ரி… அதுக்குக் கிடைச்ச ஃபர்ஸ்ட் சான்ஸ் இது” என்றான் டாம் தீவிரக்குரலில்.

அவன் சொன்னதும் ஆர்யாவுக்கே ஆசை வந்துவிட்டது. ஜெர்ரி உடையை வாங்கிய கையோடு போட்டிக்குப் பதிவு செய்துவிட்டாள்.

வாரயிறுதியில் டாமே அவளை வில்லியம் சி பவர்ஸ் பால் ரூமில் கொண்டு சென்று விட்டான். தந்தையின் கையைப் பிடித்துக்கொன்ண்டு பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தையைப் போல குதூகலத்துடன் அரங்குக்குள் சென்றவள் சக மாணவர்களுடன் வெகு சீக்கிரத்தில் கலந்துவிட்டாள்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் நடித்துக் காட்டுவதை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தவள் தனது ‘ஜெர்ரி’ கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்து முடித்தாள். வெற்றியாளர்களில் ஒருவராகத் தேர்வும் ஆனாள்.

வந்தவர்களுக்கு ‘ஸ்பின் த வீல் (Spin the wheel)’ மூலமாக கிவ்-அவே பரிசுகளாக கார்ட்டூன் நெட்வொர்க் கதாபாத்திரங்களின் பொம்மைகள் வழங்கப்பட்டன.

ஆர்யா ஆசைப்பட்ட டாம் பொம்மை அவளுக்குக் கிடைத்துவிட மகிழ்ச்சியோடு அந்த நாளை எதிர்கொண்டாள்.

கொண்டாட்டங்கள், போட்டிகள், கிவ்-அவே அனைத்தும் முடிந்த தருவாயில் சில புதிய நண்பர்கள் அவளுக்குக் கிடைத்திருந்தார்கள்.

அவர்களிடம் விடைபெற்றவளை அழைத்துச் செல்ல டாம் வந்திருக்கவும் உற்சாகத்தோடு அவனிடம் ஓடியவள்

“எனக்கு டாம் பொம்மை கிடைச்சிருக்கு” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும்

“ஜெர்ரிக்கு டாம் கிடைச்சு தானே ஆகணும்” என புருவம் உயர்த்தி கேட்டவன் அவளைத் தோளோடு அணைத்தபடி காரில் ஏறச் சொன்னான்.

ஆர்யா உற்சாக மிகுதியில் அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“எனக்கு இன்னைக்கு கிடைச்ச புது அனுபவத்துக்கு நீ தான் காரணம் டாம்” என்றாள் நன்றியுணர்ச்சியோடு.

கண்கள் ஜொலிக்க அவள் சொல்லவும் “யூ ஆர் டீ-க்ரேடிங் த கிஸ்” என்றான் விளையாட்டாக.

ஆர்யா பொய்யாக முறைக்கவும் ஆட்காட்டி விரலால் அவளது சதை பற்றான இதழில் கோடிழுத்தவன் “உதடும் உதடும் சேரலனா அது முத்தமே கிடையாது ஜெர்ரி” என்றான் குறும்பாக.

ஆர்யா அவனைக் கேலியாகத் தள்ளியவள் “காரை ஸ்டார்ட் பண்ணு” என்று அதிகாரம் செய்யவும் முன்பக்க கதவை அவளுக்காகத் திறந்தவன் சிரித்தபடியே அவள் அமர்ந்ததும் கதவை அடைத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

அவர்கள் இருவரும் கவனிக்கத் தவறியது சிறையிலிருந்து வெளியேறிய ரவி, உடை வாங்கிய கடையில் இருவரையும் ஒன்றாய் பார்த்த தினத்திலிருந்து அவர்களைப் பின் தொடர்வதை தான்.

இதோ இப்போதும் சற்று தொலைவில் இருந்து வன்மத்துடன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தவன் இருவரும் கட்டியணைத்தது, முத்தமிட்டது என ஒன்றுவிடாமல் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

டாமின் கார் சென்றதும் குரோதத்துடன் பற்களைக் கடித்தவன் “உன்னால நான் வேலைய இழந்து, அடுத்த வேலை கிடைக்காம ஃப்ரெண்ட்ஸ் தயவுல பிச்சைக்காரன் மாதிரி வாழ்துக்கிட்டிருக்கேன்டி… நீ மட்டும் இந்த அமெரிக்கக்காரன் கூட ஜாலியா இருக்கியா? இந்த போட்டோவ உன் அப்பனுக்கு அனுப்பி வைக்குறேன்… அவன் நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்டு உன் சந்தோசத்தை ஒன்னுமில்லாம ஆக்குவான்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான்.

சிறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து ரவியின் மனமெங்கும் ஆர்யாவைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்தது.

தனது வருங்கால மனைவி என்பதால் ஆர்யாவிடம் நெருங்க நினைத்ததாகச் சொல்லி பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து தப்பித்தாலும், போதைமாத்திரை வழக்கில் வசமாகச் சிக்கிக்கொண்டவனுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சிறைக்காலம் முடிந்து வெளியே வந்தவனுக்குப் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பணிநீக்க ஆணை கொடுத்துவிட்டார்கள். வேலையும் பறிபோய் இருக்க இடமும் இன்றி தவித்தவனை உடன் பணிபுரிந்த இந்தியன் ஒருவன் தன்னுடன் தங்க வைத்தான்.

வேலை தேடிக்கொண்டே ஆர்யாவைப் பின்தொடரும் முடிவுக்கு வந்தவன் அவளும் டாமும் நெருங்கிப் பழகுவதை மனம் முழுக்க வன்மத்துடன் கவனித்தான்.

இதோ லட்டு போல கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களது நெருக்கத்தைப் புகைப்படங்களாக எடுத்துவிட்டான். இனி அப்புகைப்படங்களை தேவநாராயணனுக்கு அனுப்புவது மட்டும் தான் பாக்கி!

அவன் தங்கியிருக்கும் வீடு அமைந்துள்ள இடத்தை அடையும் முன்னர் அந்த வேலையையும் செய்துவிட்டான் ரவி.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நேரமண்டல வேறுபாட்டால் உடனே வெடிக்காவிட்டாலும் சில மணி நேரங்கள் கழித்து பிரச்சனை பெரிதாக வெடித்தது.

நீண்டநாட்களுக்குப் பிறகு ரவியிடமிருந்து வாட்சப்பில் செய்தி வரவும் தேவநாராயணன் ஆவலோடு எடுத்துப் பார்த்தார். பார்த்த அடுத்த நொடி அவரது இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

“மைத்ரீஈஈஈ”

அவரது அலறல் கேட்டு என்னவோ ஏதோ என பதறியடித்து ஓடிவந்தார் மைத்ரி.

“என்னங்க?” என்று பதற்றமாக கேட்டவரின் கையில் தனது மொபைலைத் திணித்தார் தேவநாராயணன்.

எதற்கென புரியாமல் திகைத்த மைத்ரியிடம் “வாட்சப்ல இருக்குற போட்டோவை பாரு” என உச்சபட்ச கோபத்தில் உறுமினார் அவர்.

மைத்ரி பயத்தில் நடுங்கிய கரத்துடன் தொடுதிரையைப் பார்த்தவர் அதில் ஆர்யா டாமை அணைப்பது, முத்தமிடுவதை புகைப்படமாகப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்.

ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய போது கூட ஆண்களை நெருங்கவிடாமல் நெருப்பாய் வாழ்ந்த என் மகளா இது என இடிந்து போனார் அந்த அன்னை.

“நம்ம வளர்ப்பு தப்பு பண்ணாதுனு சொன்னியே,… பாரு, உன் வளர்ப்பு அமெரிக்கா தெருவுல சந்தி சிரிக்குது… சீ! இவளை என் மகள்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு… படிக்க வெளிநாட்டுக்குப் போனாளா? இல்ல வெளிநாட்டுக்காரன் கூட ப….”

“என்னங்க”

ஒரு தந்தை சொல்லக்கூட வார்த்தையை தேவநாராயணன் சொல்லிவிடுவாரோ என அஞ்சி அலறினார் மைத்ரி.

“என்னடி கத்துற? உன் மகளோட லெச்சணம் மட்டும் சம்பந்தியம்மாக்குத் தெரிஞ்சா ஆராதனா வாழ்க்கை என்னாகும்னு யோசி… படிக்க அனுப்புன கழுதை தரங்கெட்டு நிக்குறத பாத்தா அந்தம்மா நாக்கை புடுங்கிக்கிற மாதிரி கேப்பாங்கடி… இப்பிடி ஒழுக்கங்கெட்டு திரியுறவளையா என் மகனுக்குக் கட்டிவைக்க நினைச்சிங்கனு அந்தம்மா கேட்டா நம்ம முகத்தை எங்க கொண்டு போய் வைக்குறது? மரம் மாதிரி நிக்கிற, வாயை திறந்து பேசுடி”

தேவநாரயணன் தேளின் விஷத்தை விட கொடிய நஞ்சை வார்த்தைகளில் கக்கினார்.

மைத்ரி கண்ணீர் வழியும் கண்களுடன் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தவர் மனம் நொடிந்து போனார்.

“உன் மகளை நான் சும்மாவிட மாட்டேன்டி… அவளை நறுக்குனு நாலு வார்த்தை கேக்கலனா எனக்கு மனசு ஆறாது… தேவநாராயணன் கௌரவமா வாழுறவன்னு நான் எடுத்தப் பேரை குழி தோண்டி புதைக்கவே அந்தச் சனியன் பிறந்திருக்கா போல”

கணவரைத் தடுக்க இயலாதவராக மைத்ரி கண்ணீரில் மூழ்கிவிட்டார். மனைவியை நோகடித்த பிறகும் வெறி அடங்காதவராக தேவநாராயணன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக ரவியின் எண்ணுக்கு அழைத்தார்.

அவன் இதற்காக காத்திருந்தவனைப்போல உடனடியாக அழைப்பை ஏற்றான்.

“சொல்லுங்க மாமா” என்றான் போலி பவ்வியத்துடன்.

“இனி சொல்ல என்ன இருக்கு ரவி? நான் பெத்த மகராசி என் மானத்தை கடல் கடந்து போய் கப்பல்ல ஏத்திருக்கா…  இந்தக் கேவலம் எத்தனை நாளா நடக்குதுப்பா?”

கிடைத்த வாய்ப்பை விடுவானா ரவி? ஒன்றுக்கு இரண்டாக ஆர்யாவையும் டாமையும் பற்றி தரக்குறைவாகப் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தான்.

“நான் அவளைக் கண்ணியமா நடத்துனேன் மாமா… நான் செஞ்ச ஒரே தப்பு ஆல்கஹால் போதையில ஆர்யா கிட்ட உரிமை எடுக்க நினைச்சது மட்டும் தான்… அது கூட நான் கட்டிக்கப்போற பொண்ணு தானேங்கிற எண்ணத்துல தான் மாமா… ஆனா ஆர்யா மனசுல அந்த அமெரிக்கன் இருக்கான்னு எனக்குத் தெரியாம போச்சே… ரெண்டு பேரும் ப்ளான் போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க… இப்ப எனக்கு வேலையும் இல்ல மாமா… ஃப்ரெண்ட் தயவுல தங்கியிருக்கேன்… அவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தான் வாழுறாங்க… நான் அக்கம்பக்கத்துல விசாரிச்சேன்…. அந்த அமெரிக்கக்காரன் ஆர்யா படிக்குற யூனிவர்சிட்டில புரொபசரா இருக்குறான்… ஆர்யாவோட படிப்பு ஆர்வத்தைப் பயன்படுத்தி அவளை வலையில வீழ்த்திட்டான் மாமா… அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாமலே ஒன்னா சேர்ந்து வாழுறாங்க மாமா”

ரவி வேப்பிலை அடிக்க அடிக்க தேவநாராயணனுக்குக் கோபம் உச்சந்தலையில் ஏறியது.

எத்துணை கட்டுப்பாடுகளுடன் ஆர்யாவை வளர்த்திருப்பார்! இப்போது கண் முன்னே பெற்றோர் இல்லை என்றதும் எல்லை மீறி ஒழுக்கங்கெட்டு வாழத் துணிந்துவிட்டாளே!

இனி அவருக்கு ஆர்யா என்று ஒரு மகளே கிடையாது. அதே நேரம் அவள் செய்த ஒழுக்கக்கேட்டை அப்படியே விடவும் அவரது வறட்டுக்கௌரவம் இடமளிக்கவில்லை.

எனவே வழக்கம் போல பெற்ற மகள்களைத் துளியும் நம்பாமல் அவர்களை நோகடிக்கும் வேலையை இப்போதும் செய்யத் துணிந்தார்.

தந்தையின் கோபமும் குரோதமும் சூறாவளியாய் தன்னைச் சுழற்றிப் போடப்போவதை அறியாமல் டாமுடன் க்ளே பிட்டில் பிரியாணியைச் சுவைத்துக்கொண்டிருந்தாள் ஆர்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
39
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்