Loading

காதல் 1

“காதல் – இப்ப வரைக்கும் என்னால ஒரு வரையறைக்குள்ள கொண்டு வரமுடியாத உணர்வு… அனுபவரீதியா உணராத எந்த ஒரு உணர்வையும் நம்மளால எப்பிடிப்பட்டதுனு விளக்க முடியாதுல்ல… என்னைச் சுத்தி இருக்குறவங்க காதலை ஒரு அற்புதமான உணர்வா கையாளுறதை விட, அதை உறவா மாத்திக்க துடிக்கிறதை பாத்திருக்குறேன்… உறவா மாறுன பிறகு அவங்களுக்குள்ள இருந்த காதல் காணாம போறதையும் பாத்திருக்குறேன்… இது தான் நிதர்சனமா? ‘and they live happily ever after’ இதெல்லாம் fairy talesல மட்டும் தான் நடக்குமா? I haven’t got the faintest idea”

    -ஜெர்ரி

ஆஸ்டின் – பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையம், டெக்சாஸ், அமெரிக்கா…

தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களை விழுங்கிக்கொண்ட அந்த இயந்திரப்பறவை ஓடுதளத்தில் இறங்கி ஓடுவதை மூடிய விழிகளுக்குள் உணர்ந்தவளாக பெருமூச்சு விட்டாள் ஆர்யா.

தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சக பயணிகளோடு வெளியேறியவளின் மனம் அன்னை என்ன செய்து கொண்டிருப்பார் என்று சிந்தித்தது.

பாவம்! தனக்காக தந்தையிடம் திட்டு வாங்கிக்கொண்டிருப்பார் என பரிதாபப்பட்டபடி விமானநிலையத்தின் செயல்முறைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டவளை “ஹே ஆர்யா” என பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றான் ரவி.

அவனைக் கண்டதும் மனதுக்குள் சலித்துக்கொண்டவள் “ஹாய் ரவி” என்று சினேகமாக கையசைக்க அவனோ புதிதாக கற்றுக்கொண்ட அமெரிக்க உடல்மொழியோடு “டோண்ட் கால் மீ ரவி… ரேவ்னு கூப்பிடு பேப்” என்கவும் மானசீகமாகத் தலையிலடித்தவாறு வராத சிரிப்பை இதழ்களில் ஒட்ட வைத்துக்கொண்டாள்.

“லாஸ்ட் வீக் அண்ணி கால் பண்ணுனப்ப நீ டெக்சாஸ் வர்றதா சொன்னதை நான் நம்பல… அங்கிள் இவ்ளோ தூரம் உன்னை அனுப்புவாரானு ஒரு டவுட்… அப்புறம் அங்கிளே கால் பண்ணி நீ வருவனு சொன்னதும் தான் நம்புனேன் தெரியுமா? அவர் உன்னை என்னோட பாதுகாப்புல விட்டிருக்கார்… அதான் என்னோட பிசி வொர்க் ஷெட்யூல்லயும் உன்னை அழைச்சிட்டுப் போக நானே வந்திருக்குறேன்”

ரவியின் அலட்டல் சுபாவத்தை அமெரிக்க வாசம் இன்னும் அதிகரித்துவிட்டதைப் புரிந்துகொண்டவள் பேச்சைச் சுருக்கிக்கொண்டு அவனோடு கிளம்பினாள்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறி கேப் ஒன்றில் ஏறியமரும் வரை அவனது சுயபுராணம் ஓயாமல் தொடரவும் ஆர்யாவுக்குத் தலைவலி வந்துவிட்டது.

புன்னகைப்பது போல இழுத்து வைத்த உதடுகளை சுருக்காமல் அமர்ந்திருந்த ஆர்யா எப்போதடா அவன் தங்கியிருக்கும் ‘அட்லாண்டிக் ஹௌசிங் ஃபவுண்டேசன்’ வந்து தொலையுமென எரிச்சலோடு பயணித்தாள்.

அவளது மனநிலையை அறியாதவனாக தனது வேலை, அலுவலகம், வீடு என பெருமை பீற்றிக் கொண்டிருந்தான் ரவி.

ஒரு வழியாக ‘ஆஸ்டினில்’ அமைந்திருக்கும் அவனது வீடு இருக்கும் பகுதியை கேப் அடைந்ததும் நிம்மதியுற்றவளாக இறங்கினாள் ஆர்யா.

“இந்த சரவுண்டிங்ல இது தான் வசதியான ரெசிடென்சியல் கம்யூனிட்டி… சாமானியப்பட்டவங்களுக்கு அவ்ளோ ஈசியா இங்க வீடு கிடைக்காது… என்னை மாதிரி ஹைஃபை பெர்சன்சுக்குத் தான் இங்க ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி”

தனது பேச்சில் ஆர்யா அசுவாரசியமடைவதைக் கண்டதும் பேச்சை நிறுத்தியவன் அவனது வீட்டுக்குள் நுழைந்ததும் வேறு விதமாகச் சோதிக்க ஆரம்பித்தான்.

“அங்கிளுக்கு என் மேல எவ்ளோ நம்பிக்கை இருந்தா உன்னை இங்க தங்க சொல்லியிருப்பார்? அவரோட கேரக்டருக்கு கல்யாணம் ஆகாத பொண்ணை வயசுப்பையன் கூட ஒரே வீட்டுல தங்குறதுக்கு பெர்மிசன் குடுக்குறதுலாம் இம்பாசிபிள்… அதை விட ஆச்சரியம், நல்ல வேலைய ரிசைன் பண்ணிட்டு ஃபாரீன் யூனிவர்சிட்டில படிக்கப்போறேன்னு சொன்ன உன்னை இங்க அனுப்பி வச்சது தான்… அவர் இடத்துல நான் இருந்திருந்தேன்னா படிப்பாவது மண்ணாவது போய் வேலைய பாருனு சொல்லியிருப்பேன்”

ஆர்யாவுக்கு அவனது பேச்சில் கோபம் வந்தது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொன்னபடி தந்தை தன்னை இவ்வளவு தூரம் படிக்க அனுப்பியதே பெரிய விசயம். வந்த இடத்தில் இவனிடம் கோபப்பட்டு அது அவரது காதுக்குப் போனால் சரியான மண்டகப்படி கிடைக்கும்.

காரணம், ரவி ஆர்யாவின் தமக்கை ஆராதனாவின் மைத்துனன். ஆராதனாவின் கணவன் ராஜேஷிற்கு அப்படியே எதிர் குணம் கொண்டவன்.

டெக்சாசை தாயகமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘டெல் டெக்னாலஜி’ எனும் மாபெரும் கணினி நிறுவனத்தில் ‘டேட்டா இன்ஜினியராகப்’ பணியாற்றும் கர்வம் வேறு. சும்மாவே தற்பெருமை திலகமாக சுற்றுபவனை அமெரிக்க டாலரின் வாசனை தலை கீழாக நடக்க வைத்துக்கொண்டிருக்கையில் அவனிடம் ஆர்யா கோபப்பட்டால் அது முதலுக்கே மோசமாகிவிடும்.

வீணாக அவனது தாயாரின் வாயில் ஆராதனா அவலாக மாறி அரைபட, தான் ஏன் காரணமாக இருக்கவேண்டுமென அமைதி காத்தாள் ஆர்யா.

ரவி அவளுக்கான அறையைக் காட்டி அரைமணி நேரம் விளக்கவுரை ஆற்றிவிட்டு வெளியேறியதும் கதவை அடைத்தவள் அக்கடாவென மெத்தையில் விழுந்து கண்களை மூடினாள்.

கண்ணுக்குள் அன்னை மைத்ரியின் உருவம் வந்து போனது.

“நீ பாட்டுக்கு அமெரிக்காக்குப் பறந்துடுவடி… உன் அப்பா கிட்ட மாட்டி முழிக்கப்போறவ நான் தான”

ஐந்திலகத்தில் ஊதியம் வாங்கிக்கொண்டிருந்த ஐ.டி நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு டெக்சாஸ் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு படிக்கப்போகிறேன் என ஆர்யா அவரிடம் சொன்னதும் மைத்ரி கொடுத்த பதில் இது தான்.

கணவர் என்றால் அவருக்குச் சிம்மசொப்பனம். அவருக்கு மட்டுமா? ஆர்யாவுக்கும் அவளது தமக்கை ஆராதனாவுக்கும் கூட தந்தை தேவநாராயணனிடம் அப்படி ஒரு பயம்.

அன்பையும் அரவணைப்பையும் முலாம் பூசி கண்டிப்பைக் காட்டும் தந்தையாக அவர் இல்லாமல் போனது காரணமாக இருக்கலாம். பெண்கள் என்றால் ஆண்களுக்கு அடங்கி வாழ வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தோடு மனைவி, மகள்களிடம் அவர் காட்டிய அதிகாரம் கலந்த அலட்சியம் காரணமாக இருக்கலாம். வீட்டில் ஒரு அணு அசையவேண்டுமென்றாலும் அதற்கு அவரிடம் அனுமதி கேட்க வேண்டுமென்ற நிலை கூட காரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில் மனைவியும் மகள்களும் எந்த விசயத்திலும் தன்னிச்சையாகச் சிந்தித்துவிடக்கூடாதென உறுதியாய் இருந்த தேவநாராயணனுக்கு வாழ்க்கையில் கிடைத்த முதல் அதிர்ச்சியே ஆர்யா தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் படிக்கப்போகிறேன் என்று சொன்னது தான்.

அதிலும் அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு அவள் விண்ணப்பித்ததாக சொன்னதும் மனிதர் ஆடிய ருத்ரதாண்டவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

“காலேஜ் முடிச்சதும் ஆருவ மாதிரி உன்னையும் கல்யாணம் பண்ணி புகுந்தவீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கணும்… காம்பெஸ்ல ப்ளேஸ்மெண்ட் கிடைச்சிருக்கு, ரெண்டு வருசம் வேலை பாக்கட்டும்னு நினைச்சு ஃப்ரீயா விட்டேன்ல, அதான் திமிரெடுத்து ஆடுற”

ஆர்யா அவரது கோபத்தைக் கண்டுகொள்ளவில்லை. அவளுக்கு வீட்டுச்சிறையிலிருந்து விடுதலை வேண்டும். அந்த விடுதலையைக் கொடுப்பது படிப்பாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் தான் யாருக்கும் தெரியாமல் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் விண்ணப்பித்தாள். அவளுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தந்தையின் கோபத்திற்காக இழக்க விரும்பாதவள் முடிவில் பிடிவாதமாக நின்றாள். இருபத்து நான்கு வயது வரை அவளுக்கு வராத பிடிவாதம் அச்சமயத்தில் ஏன் வந்ததென ஆர்யாவுக்கே புரியவில்லை.

தேவநாராயணனும் அவ்வளவு எளிதில் சம்மதித்துவிடவில்லை. வெளிநாட்டில் தங்கி படிப்பது பெண்பிள்ளைகளின் வளர்ப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்றார்.

குடும்ப அமைப்பை பின்பற்றாத அன்னிய தேசம் நமது பாரத கலாச்சாரத்தைச் சீர்குலைத்து விடுமென அறிக்கை வாசித்தார். தன்னால் அவளது மேற்படிப்புக்குப் பணம் செலவளிக்க முடியாதென மிரட்டினார்.

எதையும் ஆர்யா செவிமடுக்கவில்லை. தன் முடிவில் ஸ்திரமாக நின்றாள்; தந்தையின் பிடிவாதத்தை வென்றாள். இதோ அமெரிக்காவுக்கும் வந்துவிட்டாள்.

ஜூலை ஆறாம் தேதி வகுப்பு ஆரம்பிக்குமென மாணவர் குறிப்பேட்டில் சொல்லியிருந்தார்கள். அதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது. அது வரை ஆஸ்டினைச் சுற்றிப் பார்க்கலாமென திட்டமிட்டிருந்தாள்.

கண் மூடி படுக்கையில் கிடந்தவள் தமக்கையின் நினைவு வரவும் எழுந்து அமர்ந்தாள். நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது.

தமக்கையிடம் வாட்சப் வழியே பேசலாமென அழைத்தாள்.

அழைப்பு ஏற்கப்பட்டதும் படபடப்புடன் ஆராதனாவின் குரல் ஒலித்தது.

“பத்திரமா வீட்டுக்குப் போயிட்டியா ஆர்யா? ரவி எதுவும் லூசுத்தனமா பண்ணி வைக்கலயே?”

“ஒரு பிரச்சனையும் இல்லக்கா… நீ பயப்படுற அளவுக்கு உன் ப்ரதர் இன் லா இல்ல… கொஞ்சம் நார்சிசிஸ்ட் (Narcissist)… தற்பெருமை ஜாஸ்தி… அவ்ளோ தான்”

“நீ அவன் வீட்டுல தங்குறதுல ராஜேஷ்கு உடன்பாடு இல்ல… கூடப்பிறந்த அண்ணனுக்கே அவன் மேல நம்பிக்கையில்லடி… அவனை அமெரிக்கா நிறைய மாத்திடுச்சு, ஆர்யா அவன் கூட தங்குறது சரியா வராதுனு புலம்பித் தள்ளுனார்… எவ்ளோ சீக்கிரம் நீ வேற அப்பார்ட்மென்ட் போய் தங்குறியோ அவ்ளோ சீக்கிரம் அவருக்கும் நிம்மதி”

ஆராதனா கவலையுடன் கூறினாள்.

“இதெல்லாம் அம்மா கிட்ட சொல்லாதக்கா… சும்மாவே அப்பா பேசுற பேச்சுல அவங்க பதபதைச்சு போயிருப்பாங்க… ரவிய நான் சமாளிச்சிப்பேன்… ஒரு மாசத்துல ஆஸ்டின் எனக்குப் பழகிடுச்சுனா வேற வீடு பாத்துட்டுப் போயிடுவேன்… நீ என்னை நினைச்சு டென்சனாகாத”

“நான் அம்மா கிட்ட இப்ப வரைக்கும் எதையும் சொல்லல ஆர்யா… எப்ப நான் அம்மா கிட்ட பேசுனாலும் என் மாமியார் கூடவே நின்னு ஒட்டு கேக்கும்… அந்தம்மாக்கு எப்பிடியாச்சும் பேசுன சம்பந்தம் முடிஞ்சு நீ இந்த வீட்டுக்கு மருமகளா ஆகிடணும்… அதுக்கு குறுக்க நான் வந்துடுவேனோனு பயம்… எல்லாம் உன்னை சொல்லணும்டி… அப்பா சொன்னார்னு நீ ஏன் ரவியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச? முடியாதுனு மறுத்திருக்கலாம்ல”

ஆர்யாவின் பெருமூச்சே சொன்னது அவளுக்கும் இந்த சம்பந்தத்தில் பெரிய பிடித்தமில்லை என்பதை. ஆனால் மறுக்கவும் தோன்றவில்லை. காரணம் ஆராதனாவும் மைத்ரியும்.

ஆர்யா ரவியை மணமுடிக்கச் சம்மதித்திருக்கவில்லை என்றால் தேவநாராயணன் மைத்ரியை வாட்டியெடுத்திருப்பார். ஆராதனாவின் மாமியார் அபர்ணாவோ தமக்கையின் வாழ்க்கையை நரகமாக்கியிருப்பார். ராஜேஷ் என்ன தான் ஆராதனாவுக்குத் துணையாய் நின்றாலும் ஒரேயடியாக அவனாலும் அன்னையை எதிர்க்க முடியாதென ஆர்யாவுக்குப் புரிந்துவிட்டதால் தந்தை சொன்னதுமே ரவியை மணக்கச் சம்மதித்தாள்.

மைத்துனனின் குணமறிந்தவள் என்பதால் ஆராதனா ஆரம்பத்திலிருந்தே இந்தச் சம்பந்தம் வேண்டாமென்ற முடிவில் பிடிவாதமாக நின்றாள். ஆனால் அவளது முடிவை அபர்ணாவோ தேவநாராயணனோ மதிக்கவா செய்வார்கள்?

இதோ திருமணம் பேசி ஆறு மாதங்கள் சுமூகமாக கழிந்து போன நிலையில் மணமுடிக்கவிருப்பவனின் வீட்டிலேயே தங்கும் நிலை ஆர்யாவுக்கு.

மனத்தாங்கலோடு பேசிய தமக்கையைச் சமாதானம் செய்தாள் ஆர்யா.

“எப்பிடியும் எவனோ ஒருத்தனை அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பார்… அது ரவியா இருந்துட்டுப் போகட்டுமேக்கா… இந்தக் கல்யாணம் முடிஞ்சுதுனா நீயும் நானும் ஒரே வீட்டுல இருக்கலாம்… உன் மாமியார் இஷ்டத்துக்கு உன்னை உருட்டி விளையாடுறதை என்னால தடுக்க முடியும்… நான் இதெல்லாம் யோசிச்சு தான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்” என்றாள் அவள்.

தங்கையின் சமாதானப்பேச்சில் ஆராதனாவின் ஆதங்கம் குறைந்தது. ஆனால் முற்றிலும் மறையவில்லை.

“என்னவோ சொல்லுற… என்னால இதை ஏத்துக்க முடியல… இப்பவும் சொல்லுறேன், ரவி சரியில்ல… நீ அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு… கொஞ்சம் அவன் நடவடிக்கை மேல சந்தேகம் வந்தாலும் அங்க இருக்காத… ராஜேஷோட ஃப்ரெண்ட் ஒருத்தர் டெக்சாஸ்ல இருக்கார்… அவர் கிட்ட பேசி உனக்கு வேற ஒரு இடத்துல வீடு ஏற்பாடு பண்ணுறேன்னு ராஜேஷ் சொல்லியிருக்கார்… இது எதுவும் என் மாமியாருக்குத் தெரியாது… ரவியும் நீயும் ஒரே வீட்டுல தங்க போறிங்கனு ரொம்ப சந்தோசமா நடமாடுது அந்தம்மா… அது காதுக்குப் போகாம ராஜேஷ் எல்லாத்தையும் கச்சிதமா முடிச்சிடுவார்… அது வரைக்கும் ஜாக்கிரதை”

“சரிக்கா… என்னை விட நீ ரொம்ப டென்சனா இருக்க… ரிலாக்ஸ்… ரவியை என்னால சமாளிக்க முடியும்”

தமக்கையைச் சமாதானம் செய்து அழைப்பைப் பேசி முடித்தவள் ரவியிடம் ஜாக்கிரதையாக இருக்க என்ன அவசியமென யோசித்தாள்.

ஆராதனா பொய் சொல்பவளில்லை. பிறந்த வீட்டில் இருந்தவரை தந்தைக்குக் கட்டுப்பட்ட மகளாக அவர் சொன்ன படிப்பை படித்து, அவர் கை காட்டிய மாப்பிள்ளையை மணந்தவளுக்கு மாமியாரின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற மறைமுக தாக்குதல்களைச் சமாளிக்கும் தைரியம் அறவே கிடையாது. திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் அவளுக்குக் குழந்தை இல்லாதது அபர்ணாவுக்குப் பெரும் மனக்குறை. பணமே பிரதானம் என எண்ணும் அப்பெண்மணிக்கு ஆராதனா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதிலும் பிடித்தமில்லை.

ஆர்யா கை நிறைய சம்பாதிப்பதால் இளையமகனுக்குப் பேசி முடித்தவருக்கு இரு பெண்களும் தேவநாராயணனின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாதது வசதியாய் போய்விட்டது.

என்ன சொன்னாலும் ஆராதனா தந்தையிடம் முறையிடப்போவதில்லை. முறையிட்டாலும் தேவநாராயணன் கண்டுகொள்ளப்போவதில்லை என்ற தைரியத்தில் அடிக்கடி ஆராதனாவைச் சீண்டுவார் அப்பெண்மணி.

திருமணம் மட்டும் ஆகட்டும், அவருக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டுமென தீர்மானித்த ஆர்யா பிரயாணக் களைப்பில் தாகம் எடுக்கவும் சமையலறையை நோக்கி சென்றாள்.

அங்கிருந்த ஃப்ரிட்ஜை திறந்தவள் அதில் இருந்த மது பாட்டில்களைப் பார்த்ததும் கண்களை அதிர்ந்து போனாள். கூடவே சில மாத்திரை அட்டைகள் வேறு இருந்தன.

இத்தனை மதுபாட்டில்களை ஒன்றாய் இதுவரை அவள் பார்த்ததில்லை. அவளது தந்தை எந்தளவுக்குப் பெண்களுக்குக் கட்டுப்பாடு விதித்தாரோ அந்தளவுக்கு தானும் கட்டுப்பாடாய் வாழ்பவர். மது, புகைப்பழக்கம் என எந்தக் கெட்டப்பழக்கமும் அவருக்குக் கிடையாது.

அப்படிப்பட்ட மனிதருக்கு ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது மட்டும் தெரிந்தால் என்னவாகும்? அங்கே கிடந்த மாத்திரை அட்டைகள் வேறு ஆர்யாவுக்கு போதை மாத்திரையாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பின.

இதற்கு தான் ஆராதனா பயந்தாளா? அவளது பயத்தைப் புரிந்துகொள்ளாமல் இங்கே வந்து தவறு செய்துவிட்டோமோ?

அவள் யோசனையோடு சிலையாய் நிற்பதை பார்த்தபடி அங்கே வந்த ரவி அசட்டுச்சிரிப்போடு “என்னாச்சு ஆர்யா?” என்கவும் படாரென ஃப்ரிட்ஜ் கதவை அடைத்தாள்.

“ஒன்னுமில்ல” என்று சொல்லிவிட்டு நகரப்போனவளை கைப்பற்றி நிறுத்தியவன் ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.

ஆர்யா அதை வாங்கிக்கொண்டவள் மடமடவென அருந்திவிட்டு அவனிடம் கொடுக்க அதை ஃப்ரிட்ஜில் வைத்தவன்

“நீ படிக்கப்போற கோர்ஸ் ஒரு வருசம் தானே ஆர்யா?” என வினவினான்.

பேச விருப்பமின்றி ஆமாமென தலையாட்டினாள் அவள்.

“ஹூம்! ஒரு வருசம் நீயும் நானும் ஒரே வீட்டுல வேற வேற ரூம்ல தங்கணும்… எவ்ளோ பெரிய கொடுமைல்ல?”

திருமணம் பேசி முடித்த பெண்ணிடம் ஆண்மகன் இவ்வாறு ஏக்கமாகப் பேசுவது வழக்கம் தான். ஆனால் அவனது பேச்சிலிருந்த ஏக்கம் ஆர்யாவுக்குள் சிலிர்ப்பை உண்டாக்காமல் அருவருப்பைக் கொடுத்தது.

ரவியை நேருக்கு நேராகப் பார்த்தவள் “ரொம்ப நாள் அந்தக் கொடுமைய அனுபவிக்க வேண்டாம் ரவி… சாரி ரேவ்… நெக்ஸ்ட் மன்த் நான் வேற வீடு தேடி போயிடுவேன்” என்று நிமிர்வாகச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் ரவியின் இதழில் கோணல் சிரிப்பு ஒன்று உதயமானதைப் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டாள் ஆர்யா. 

*****

அடுத்த எபி நாளை வரும் டியர்ஸ் 😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
39
+1
35
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.