அத்தியாயம் 6
அவள் நினைவுகளில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு வந்தவனின் மனமோ பெரும் குழப்பத்தில் தத்தளித்தது. கனிந்தாவின் மீது அவனுக்கு இப்போது ஒரு துளி வருத்தம்கூட ஏற்படவில்லை. அவளது சுயநலத்தில் உண்டான வெறுப்பு ஒருபக்கம் இருந்த போதும், தான் மறந்துவிட நினைத்தாலும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தன் மனங் கவர்ந்தவளை மீண்டும் பார்த்ததும் உண்டான கிளர்ச்சியும் தவிப்பும் அந்த வெறுப்பை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டன. அவள் அப்படி இருப்பதால் அவளைத் தவிர்த்து தன் உள்ளத்து காதலியை, தன் தேவதையை ஆராதிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று எண்ணி ஒரு பக்கம் ஆனந்தப்பட்டான். அவளை நினைக்கும்போது எப்படியாவது அவளைச் சந்தித்து கதைக்க வேண்டும் என்று உறுதியெடுத்தான்.
சம்பந்தக் கலப்புச் செய்து நாட்கள் பல கடந்து விட்டன. திருமணத் திகதியையும் குறித்து அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இரு வீட்டாராலும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் தன் மனமாற்றம் இரு குடும்பத்தினருக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றதோ என எண்ணியபோது மனதின் ஒரு ஓரத்தில் சிறிது தவிப்பும் உண்டானது. முதலில் இதனை எப்படி அத்தையிடமும் அப்பாவிடமும் சொல்வதென தெரியாது மனம் குழம்பியது.
வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவனது அத்தை ஜெயராணியைக் கூட அவன் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் சென்றான். உடை மாற்றிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தவன் தொடர்ந்து அவள் நினைவுகளுடனேயே பயணிக்கத் தொடங்கினான்.
அவன் கனிந்தாவைச் சந்திக்கச் சென்றது ஜெயராணிக்குத் தெரியும். எனவே அவன் வரும் போது மகிழ்ச்சியாக வருவான், அவனைக் கிண்டல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தவருக்கு அவனது இந்தப் பாராமுகமும் குழப்பமான முகமும் தவிப்பையும் யோசனையையும் உண்டாக்கியது. எனவே அவனது அறைக்குத் தேடிச் சென்றார். அங்கே அவன் வழமைக்கு மாறாக அந்த நேரத்தில் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்ததைக் கண்டவர் மனம் ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது.
அவன் அருகில் போய் அமர்ந்தார். “தம்பி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? அந்தப் பிள்ளையைப் போய்ச் சந்திச்சியா?”
“ஓம் அத்தை, அவாவ ரெஸ்ரோரன்ட் கூட்டிப் போனனான். பிறகு அத்தை…” என்று இழுத்தவன் அவர் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தான்.
“என்ன தம்பி?” என்று கேள்வியாய் நோக்கினார்.
“அத்தை.. நான் எது செஞ்சாலும் அது எல்லாருக்கும் நல்லதா இருக்கணும் என்டு யோசித்துத் தானே செய்வன்?” என்று முடிக்காமல் கேள்வியாய் தன் அத்தையை நோக்கினான்.
“என்ன தம்பி இது? இப்படி ஒரு கேள்வியைக் கேக்கிறாய். நீ எப்பவுமே யோசித்து தான் முடிவெடுப்பாய். இப்போ மட்டும் இல்ல. நீ படிக்கிற காலத்தில கூட கெட்டிக்காரன் தான்” என்று சொன்னவரது முகம், அவனை நினைத்து சந்தோசத்தில் பூரித்துப் போயிருந்தது.
“அத்தை அவ நமக்கு சரிவரமாட்டா. இந்தக் கல்யாணம் வேண்டாம். அவங்க வீட்டயும் சொல்லிடுங்க” என்று அவன் பட்டென்று தன் முடிவைச் சொல்லவும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தார்.
ஜெயராணி எப்போதும், எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் துணிவுடனும் நிதானத்துடனும் எதிர்கொள்வார். அதனையே தான் வளர்த்த செந்தூரனுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். தான் பெற்ற பிள்ளைகளைவிட அதிகளவு பாசம் வைத்துள்ள செந்தூரனுக்கு ஒன்று என்றால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே எந்தவிதக் காரணமுமில்லாமல் அவன் இவ்வாறு முடிவெடுத்து இதைச் சொல்லமாட்டான் என உணர்ந்திருந்தாலும் அவனது திருமணம் குறித்து பல கனவுகளுடன் இருந்தவரால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை, தடுமாறிப் போனார்.
“தம்பி… ஏன்… என்ன தம்பி இப்படிச் சொல்லுறாய். இன்னும் ஒரு மாசத்தில கல்யாண நாளும்
குறிச்சு கார்ட்டும் அடிக்கக் குடுத்தாச்சு.. இப்போ திடீரென வந்து தலையில குண்டத் தூக்கிப் போடுறாய் ஏனய்யா? என்னாச்சு?” என்று கலக்கத்துடன் கேட்டார்.
உடனேயே சற்றுத் தெளிவடைந்தவராக, “ஏனய்யா.. அந்தப் பிள்ளை நல்ல குணம் என்றுதானே சொன்னாங்கள். உன்னட்ட ஏதும் சண்டை போட்டாளா?” என்று வினவினார்.
“அத்தை… சண்டை எதுவும் போடல. அவங்க வீட்டில கல்யாணம் பேசும் போது என்ன சொன்னாங்க? கல்யாணம் முடிஞ்சதும் இங்கேயே இருப்பா என்றுதானே. ஆனா, அவவுக்கு இங்கே இருக்க ஏலாதாம். அத்தை உங்களுக்கே தெரியும். என்னால அப்பாவையும் உங்களையும் விட்டு எங்கேயும் போக முடியாதென்டு. கல்யாணம் என்று நீங்க பேசும் போதே நான் என் முடிவைச் சொன்னனான். அம்மா என்னோட ரெண்டு வயசுல போனவா.. அப்பாவுக்கு அப்போ எத்தன வயசு? நினைச்சிருந்தா வேற கல்யாணம் கட்டி சந்தோசமா இருந்திருக்க ஏலாதா? ஆனா அவர் தன்னோட ஆசைகளையெல்லாம் விட்டுட்டு என்னோட சந்தோசம் மட்டுமே அவற்ற சந்தோசமா நினைச்சு வாழுறார். அவர இங்க விட்டுட்டு வெளிநாடில்ல வெளியூருக்கே போய் கொஞ்ச நாள் கூட என்னால இருக்க முடியாது. ஏன் அத்தை, நீங்களே சொல்லுங்க என்ன விட்டுட்டு உங்களாலயும் இருக்க முடியுமா?” என்ற அவனது கேள்விக்கு ஜெயராணியால் பதில் சொல்ல முடியவில்லை. அவனைப் பிரிவதா என்று நினைக்கும்போது தொண்டைக்குள் ஏதோ கல்லு சிக்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன் மூன்று பிள்ளைகள் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் வாழ்கின்ற போதும் ஒரு நாள் கூட அவர்கள் வீட்டில் போய் தயங்கியதில்லை. செந்தூரனைப் பிரிந்து அவரால் இருக்க முடியாது என்பதே உண்மை.
“அவவுக்கு இங்க இருக்க சுத்தமாப் பிடிக்கலையாம். கல்யாணம் முடிஞ்சதும் என்னையும் அவகூட கனடாவுக்கு வரவாம். கனவிலகூட என்னால போக முடியாது. நீங்க கோசலாத்தையிடம் விசயத்தைச் சொல்லி இப்பவே எல்லா ஏற்பாட்டையும் நிறுத்துங்க. நீங்க கவலைப்படாதிங்க அத்தை. இது அப்படி ஒன்றும் தலை போற விசயமே இல்லை. நாம சம்பந்தக் கலப்பு மட்டும்தானே செஞ்சிருக்கம். அதால ஒரு பிரச்சினையும் இல்லை. அவவும் நான் கனடா வரமாட்டேன் என்றதால இத நிறுத்தத்தான் பார்ப்பா. அவவிட்டயும் என்ர முடிவச் சொல்லிடுங்க”
இதுதான் செந்தூரன், ஒரு முடிவெடுத்தால் இழுத்தடிக்காமல் உடனேயே செயற்படுத்தி விடுவான்.
இங்கே ரெஸ்ரோரன்ரில் இருந்து கடைக்கு வந்தாள் நிறைமதி. கூடவே வேலை செய்யும் சிந்து மூதூருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் என்பதால் அவளை அனுப்பி விட்டாள். அன்பரசன் இன்னும் அவளது ஸ்கூட்டியைக் கொண்டு வராததால் அவனுக்கு அலைபேசியில் தகவல் அனுப்பி விட்டு கடையைப் பூட்டிவிட்டு பிரணிதாவுடனேயே வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்கு வந்ததும் அவள் தலையில் மீண்டும் இடியை இறக்கினார் உமையாள்.
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மீண்டும் மாமன் மகன் குகனைத் திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். அதைக் கேட்டதும் அதிர்ந்து போய் விட்டாள் நிறைமதி. அந்தக் கல்யாணம் வேண்டாம் என்பதால் தன் படிப்பைக் கூடத் தியாகம் செய்தாள். வீட்டின் பொறுப்பைத் தன் தலையில் சுமக்கத் தொடங்கினாள். இன்று வரை அதற்கு எவ்வித குறையும் நேராமல் பார்க்கிறாள். அப்படியிருந்தும் தாயின் வெறுப்பான வார்த்தைகளும் பாராமுகமும் அடிக்கடி அவளைக் காயப்படுத்தத் தவறவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துப் போகப் பழகிக் கொண்டாள்.
ஆனால் இன்று மீண்டும் அவனுடன் கல்யாணம் என்று தாய் தொடங்கவும் பதறிப் போனாள்.
நிறைமதி கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை எனவும் உடனேயே தன் மகனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து கட்டி வைத்து விடவே மாதவனின் மனைவி முயன்றார். ஆனால் அவனது திருவிளையாடல்கள் ஊரில் பிரபலம் என்பதால் எவரும் தங்கள் மகளை அவனுக்குக் கட்டி வைக்க விரும்பவில்லை.
இரண்டு வருடங்களாகப் பொறுத்துப் பார்த்தவர் எதுவும் சரிவரவில்லை எனவும் மீண்டும் நிறைமதியிடமே வந்து நின்றார்.
அதற்கு தூண்டில் புழுவாக அவர் பயன்படுத்தியது நிறைமதியின் தம்பி அன்பரசன். இப்போதுதான் உயர்தரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவனை தன் அண்ணன் மூலம் பிரான்சுக்கு அனுப்பி வைத்தால் இவர்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். அதற்கு குகனை இவள் கல்யாணம் செய்யணும் என்று நிபந்தனை விதித்தார்.
உமையாளுக்கு வெளிநாட்டு ஆசை பிடித்துக் கொள்ளவே எப்படியாவது அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஏற்கனவே வேறு ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவள் உள்ளம் தாயின் முடிவைக் கேட்டு மேலும் உடைந்தது.
அவருக்கு எந்தப் பதிலும் கூறாமல் அவர் கத்தக்கத்தத் தன் அறைக்குள் போய் முடங்கினாள்.
ஆம், அவள் வீட்டுக்கு வரும்வரை செந்தூரனின் நினைவுகளே அவளை வலம் வந்திருந்தது.
அவனை இன்று ரெஸ்ரோரன்ரில் சந்திப்பாள் என்று இவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கவிதாவின் வீட்டில் சந்தித்த அவனது பார்வை அன்று அவளுக்குச் சொன்ன செய்தி அவள் உள்ளத்துக்கு உவப்பாகத்தான் இருந்தது. பஸ் விட்டு இறங்கியதும் அவன் மேல் விழுந்த போது அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த போது சட்டென்று அவன் வதனம் இவள் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. அவள் மனம் அவன்பால் ஈர்க்கப்பட்டதும் உண்மைதான். ஆனால் மேற்கொண்டு எதையும் சிந்திக்க முடியாமல் தாயும் பவித்திராவும் நடந்து கொள்ளவும் அங்கிருந்து சென்றாள்.
கவிதாவின் வீட்டிலும் அவன் தன்னைப் பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தாள். சாப்பிடும் போது அவன் பார்வை இவளுக்குப் பல மன உணர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நடந்த பிரச்சினையால் அவனைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. சொல்லிக் கொள்ளும் படியாக அவன் நினைவுகள் எதுவும் இல்லாவிடினும் அவன் முகமும் பார்வையும் அவள் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டிருந்தன. தொடர்ந்து அவளது படிப்பு தடைப்பட்டதும் தினம் தினம் வீட்டில் வார்த்தைகளால் காயப்படுவதும் வேறு எதைப்பற்றிச் சிந்திப்பதற்கு மனதிற்கு இடம் கொடுக்கவில்லை.
இன்று மீண்டும் அவனைக் கண்டபோது உள்ளத்தில் உண்டான உவகை உடனேயே துடைத்தெறியப்பட்டது. அவன் ஒரு பெண்ணை பொதுவெளியில் முத்தமிடுவதைக் கண்டதும் மனதில் பெரும் தவிப்பை உணர்ந்தாள். உள்ளே கோபமும் உண்டானது. அது அவள் முகத்தில் அப்பட்டமாகவும் வெளிப்பட்டது.
அதனை நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவளை தாயும் வேதனைப்படுத்தவும் உள்ளே அறைக்குள் சென்று அமர்ந்தாள். கோபம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் என செய்வது அறியாது தனியே உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
மறுநாள் காலையில் தாய், சகோதரர்கள் எழும் முன்னர் எழுந்து ஆயத்தமாகிக் கடைக்கு ஓடி விட்டாள். தாய் எழுந்தால் மீண்டும் கல்யாணப் பேச்சைத் தொடங்கிவிடுவார் என்று பயந்தே அவள் வேளைக்கு கடையைத் திறக்கச் சென்றாள்.
ஒன்பது மணிக்கே வேலை செய்யும் சிந்து வருவாள் என்பதால் தானே தனியாகக் கடையைச் சுத்தம் செய்து முடித்தாள். நேற்று பாதியில் வைத்துவிட்டுச் சென்ற கேக்கை எடுத்து ஐசிங் அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் தன் முன்னே யாரோ நிற்பது போல் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள் இமைக்கவும் மறந்து போனாள்.
உமையாள் நிறைமதிய ரொம்ப அழ வைக்கிறாங்க அதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை அந்தம்மாவை எதையாவது பண்ணி விடுங்க.
செந்தூர முறை தேடி வந்து விட்டானா? அதனால தான் நிறைமதியோட கண்கள் ஆச்சரியத்தில் இருக்கிறதா??