Loading

அத்தியாயம் 5

தொட்டில் போடும் நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து மதியபோசன விருந்துபசாரமும் சிறப்பாக இடம்பெற்றது. எல்லோரையும் ஓடியோடிக் கவனித்தனர் செந்தூரனும் ஹரிஸும். நிறைமதியும் கவிதாவுடன் சேர்ந்து வந்தவர்களை உபசரித்தாள்.

செந்தூரன் வேலைகளில் ஈடுபட்டு இருந்தாலும் நிறைமதியை கண்களால் கைது செய்யும் சேவையையும் செவ்வனே செய்து கொண்டிருந்தான். ஏனோ அவனால் அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாதிருந்தது.

வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் உபசரித்து அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் வீட்டினரும் பரிமாறியவர்களும் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர். சாப்பிடும் கடமையை சீராக நிறைவேற்றிய பெரியவர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக 

அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு மேசையைச் சுற்றி செந்தூரனும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். இன்னுமொரு மேசையில் நிறைமதியும் கவிதாவும் அவளது தோழி ஒருத்தியும் அமர்ந்து உண்டனர். நிறைமதிக்கு சாப்பிடும் மனநிலை இருக்கவில்லை. எனவே, தான் எடுத்து வந்த உணவை அளைந்தபடி இருந்தாள்.

“நிறைமதி… எப்பயடி ஊருக்கு வந்தனி. உன்னை நான் இங்க எதிர்பார்க்கல. எவ்வளவு நாளாச்சு, இப்பெல்லாம் நீ ஒரு ஹோல் கூடப் பண்ணுறதில்ல. நீங்களெல்லாம் பெரிய படிப்ஸ்தானே. நம்மள எங்க நினைவிருக்கப் போகுது” என கூறியபடி அவள் அருகில் வந்து அமர்ந்தாள் அவளது பள்ளிக் காலத் தோழி ரம்யா.

“உன் நம்பர் அழிஞ்சிட்டுது. பிரணிட்ட கேட்டனான். அவளும் அனுப்பல. சொரிடி”

“இத மட்டும் சொல்லு. நான் பண்ணினாலும் நீ ஆன்ஸர் பண்ணுறதில்ல. பொய் சொல்லாதடி”

“சரி சரி, கதைய விடு. நீ ஏன் இவ்வளவு லேட்டாய் வாறாய்” என்று கவிதா கேட்கவும் அப்படியே நண்பிகள் அளவளாவியபடி இருந்தனர்.

அதுவரை விழிகளால் அவளைப் பருகிக் கொண்டு இருந்தவனோ ரம்யா அவளை அழைத்ததும் அவளது பெயரைத் தன் காதுகளால் உள்வாங்கி உள்ளத்தில் நிரப்பிக் கொண்டான். 

‘நிறைமதி’ என்று அவளது பெயரை ஒருமுறை தன் மனதுக்குள் சொல்லிப் பார்த்தான். மிகவும் அழகான பெயர், அவளைப் போலவே என எண்ணினான்.

‘இரக்கமின்றி என்னை இம்சிப்பவளே எங்கிருந்து வந்தாய் நீ.. என் உள்ளத்தை களவாடியவளே உன் கள்ளூறும் விழிகளால் என்னை வதைக்கின்றாயடி’ என கவிதையாய் அவன் மனதில் ஓடியது. அவனுக்கே தன்னை எண்ணும்போது ஆச்சரியமாய் இருந்தது. படிக்கும்போதும் சரி, தொழிலில் இறங்கிய பின்னரும் சரி எத்தனையோ அழகான பெண்களைச் சந்தித்திருக்கிறான்தான். ஆனாலும் எப்போதும் அவன் மனம் தடுமாறியதே இல்லை. இவளிடம் மட்டும் ஏன் மனம் அலை பாய்கிறது எனப் புரியாமல் நின்றான். எப்போதும் இல்லாமல் கவிதை வேறு வந்து கொட்டுதே. இதை வெளியில் சொன்னால் ஹரிஸும் வாசனும் கலாய்ச்சு தள்ளிடுவாங்கள் என்று எண்ணியவன் உதட்டின் ஓரத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.

தன்னை யாரோ உற்றுப் பார்க்கின்றார்கள் என்னும் உணர்வு அவளை உந்தவும்  நிமிர்ந்து பார்த்தாள். சுற்றும்முற்றும் தனது பார்வையை சுழல விட்டவள் தன்னையே துளைக்கும் அந்தக் காந்தப் பார்வையைச் சந்தித்தாள். அந்தப் பார்வை அவளை இம்சித்தது. அவளது பார்வையும் ஒரு சில நொடி அங்கே தயங்கி நின்றது. கூச்சம் மேலிட தலையைக் குனிந்து கொண்டாள். ‘அப்பா.. என்ன பார்வை இது? ஆளையே அடிச்சு விழுத்துது ‘ என்று எண்ணமிட்டாள். அதற்குப் பிறகு அருகில் இருந்த தோழிகளிடம் சகஜமாகப் பேச முடியாது தடுமாறிப் போனாள்.

அவளை மேலும் சிந்திக்கவிடாது கடகடவென அருகில் வந்தாள் பவித்ரா. புது ஆட்கள் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாது “ஏய் அக்கா, என்ன இங்க இருக்காய். உன்னை அம்மா வரட்டாம். தின்னிப் பண்டாரம் மாதிரி சோத்தோட இருக்காத. வந்து தொலை” என்று கத்திச் சொன்னாள். மறக்காமல் அவளது தட்டில் இருந்த ஒரு இறைச்சித் துண்டை எடுத்துத் தனது வாய்க்குள் போட்டு விட்டுத்தான் சென்றாள்.

பவித்ரா எப்போதுமே நிறைமதிக்கு மரியாதை கொடுப்பதில்லைதான். நேற்றைய பிரச்சினைக்குப் பின் தொட்டதுக்கெல்லாம் தமக்கையை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாள். எங்கெல்லாம் வன்மத்தைக் கக்க முடியுமோ அங்கெல்லாம் கக்கினாள்.

சுற்றியிருந்த எல்லோரும் என்ன இந்தப் பிள்ளை இப்படிப் பேசுகின்றதென எரிச்சலுடன் பவித்ரைவைப் பார்த்தனர். நிறைமதிக்கு அவமானத்தில் முகம் கன்றிவிட்டது. உள்ளத்தால் கூனிக்குறுகிப் போனவள் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்களின் ஓரத்தில் ஈரம் கசியத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவளது உள்ளத்து உணர்வைப் புரிந்துகொண்ட கவிதா அவளது கையைப் பிடித்து “இந்தப் பவிக்கு ஒண்டு போடனும். மரியாத தெரியாதவள். கதைக்கிற கதையைப் பார். எப்பவும் இப்படித்தான். வயசுக்கேத்த மாதிரி கதைக்க மாட்டாள். உங்க அம்மா குடுக்கிற இடம். அவளை விடு நிறை.. நீ சாப்பிடு” என்று கூறினாள்.

“இல்லை கவி எனக்குப் போதும். நீங்க சாப்பிடுங்க” என்றுவிட்டு எழுந்து குனிந்த தலை நிமிராமல் கைகழுவச் சென்றாள்.

“ஏன் கவி, இவள்ட தங்கச்சிக்கு ஒரு மரியாதைகூடத் தெரியாதா? அக்கா என்டும் பாராமல் எப்படிக் கதைச்சிட்டுப் போறாள்” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் ரம்யா.

“ம்..ம் அவள் எப்பவும் இப்படித்தான். யாருக்கும் மரியாதை குடுக்க மாட்டாள். திருந்தாத ஜென்மம். பாவம் நிறை.. ரெண்டு வாய் சோறு கூட ஒழுங்கா சாப்பிடல” என்று கவலைப்பட்டாள் கவிதா.

இங்கு செந்தூரனுக்கும் உள்ளூர கோபம் ஊற்றெடுத்தது. கோபத்தில் அவனது முகம் சிவந்தது. “என்ன பிள்ளை இவள். அக்கா என்றுகூடப் பார்க்காமல் இப்படிக் கதைக்கிறாளே. பல்லைத் தட்டிக் கையில குடுக்கோணும்’ என்று மனதில் கனன்ற கோபத்துடன் முணுமுணுத்தான்.

“என்னடா ஆச்சு.. யார்ட பல்லைத் தட்டப் போறாய்” தன் நண்பனின் மனதை அப்படியே படித்த போதிலும் தெரியாதவன் போல் கேட்டான் ஹரிஸ்.

“வெங்காயம்.. உன்னை..” மேலே பேச முடியாமல் எரிச்சலில் பற்களைக் கடித்தபடி ஹரிஸை முறைத்தான்.

“டேய் மச்சி.. நான் என்னடா பண்ணினேன். அந்தப் புள்ள பேசினதுக்கு…”

“எனக்கு வாற கோபத்துக்கு எழும்பிப் போய் ஓங்கி ஒரு அறை குடுக்கணும் போல இருக்கு” 

“என்னடா நடக்குது இங்க. ஏதோ ஓடுதெண்டு தெரியுது. ஆனா என்னெண்டுதான் புரியல” என்று இவர்களின் பேச்சில் எதுவும் புரியாமல் கேட்டான் கீர்த்திவாசன்.

“மச்சி, அத நான் சொல்லுறன். அதுவா…” என்று தொடங்கி செந்தூரன், நிறைமதியைப் பார்வையால் காதல் செய்யும் கதையைக் கூறிவிட்டான் ஹரிஸ்.

அதனை ஆச்சரியமாகக் கேட்ட கீர்த்திவாசன் 

“செந்து.. என்னால நம்பவே முடியலடா. நீ கூட ஒரு பெட்டயை சைட் அடிக்கிறியா? வாவ்..”

“ஏன்டா செந்துவுக்கு லவ்வெல்லாம் வரக் கூடாதா?” என்று கேட்டான் ஹரிஸ்.

“நான் எப்படா அப்படிச் சொன்னன். அவன் லவ் பண்ணினால் எனக்கும் சந்தோசம் தானே. அந்த நிறையும் நல்ல பொண்ணுதான்.. சூப்பர்..” என்று சொல்லிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.

“உன் காட்டில மழைதான் மச்சி. நீ போய் அந்தப் பிள்ளை கிட்ட பேசுடா”

“அப்படிங்கிறியா?”

“ஆமாங்குறேன்”

“ஒருவேளை நான் கதைக்கப் போக அது பிடிக்காம என்னை அடிச்சிட்டாள்னா என்னடா பண்றது?”

“அடிய வாங்கிட்டு கம்முனு இருந்துடு”

“என்ன மச்சி இப்படிச் சொல்லுறாய்”

“பின்ன லவ் பண்ணுறதெண்டா சும்மாவா? ஆனா எனக்கு ஒரேயொரு கவலைதான்”

“என்னது”

“உன் ஆள்ட தங்கச்சிய சைட் அடிக்கலாம் என்று நினைச்சிருந்தன். ஆனா, அதுட பேச்சும் நடையும் நமக்கெல்லாம் இது செட் ஆகாதுடா”

“புரிஞ்சா சரி”

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் இவனது பார்வை கலங்கிய கண்களுடன் எழுந்து செல்லும் நிறைமதியைத் தொடர்ந்தது.

அப்போது எழுந்து உள்ளே சென்ற நிறைமதியை அதன்பின் அவன் காணவேயில்லை. அவனும் எப்படியாவது அவளைப் பார்த்து கதைக்க வேண்டும் என்று காத்திருந்தான். பாவம் அவனுக்குத் தெரியவில்லை, இவன் வீட்டிற்குப் பின்னால் பாத்திரங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வருவதற்கிடையில் அவள் அழுதுகொண்டு தனியே வீட்டிற்குச் சென்றது.

ஆம், உள்ளே அறைக்குள் இருந்த தாயாரைத் தேடிச்சென்றாள் நிறைமதி. அவருடன் இருந்த கவிதாவின் அண்ணி இவள் உள்ளே வருவதைக் கண்டதும் அவளை ஏற இறங்க ஒருதடவை பார்த்து வைத்தாள். அவளது பார்வை நிறைமதியைச் சங்கடப்படுத்தியது.  

“ஏன் நிறை, அன்ரி சொல்றது உண்மையா? நீ குகனைக் கட்ட மாட்டன் எண்டுட்டாயாமே. உனக்கு அறிவிருக்கா? உங்க அப்பாவப் பத்தி நல்லாத் தெரியும் தானே… இத்தனை வருஷமா உங்களுக்கு சோறு போட்டதும் உங்களப் படிப்பிச்சதும் உங்க மாமாதானே. அவங்ககிட்ட லூசு மாதிரி கதச்சிருக்காய். அவங்க உங்க வீட்டில பொம்பிளை எடுக்கிறதே பெரிய விஷயம். இந்தக் காலத்தில சீதனம் இல்லாம யாராவது கல்யாணம் கட்டுவாங்களா? உங்க மாமி எவ்வளவு பெரிய மனசுவச்சு இதக் கேட்டிருக்கா. அது தெரியாம மாட்டன் எண்டு சொல்லிட்டியாமே” என்று தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத விஷத்தில் நடுவராய் இருந்து பேசினாள் அவள்.

அவளது பேச்சால் அதிர்ந்து பார்த்தவள், அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தாயின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“என்னை ஏன்ரி பார்க்கிறாய்? அவ கேக்கிறதும் சரிதானே. நீ உன்ர இஷ்டத்துக்கு ஆடி எங்க எல்லாற்ற தலையிலையும் மண்ணள்ளிப் போட்டிற்றாய். மனசு பொறுக்காம அதத் தான் அவாவிட்ட சொன்னனான். அதுதான் கேட்கிறா” என்று மூக்கை சிந்தி அழுதபடி சொன்னார் உமையாள்.

“இவளால எங்கட படிப்பும் எல்லோ நாசமாய் போகப் போகுது.. அக்கா என்டு எங்களுக்கு என்ன நல்லதச் செய்திட்டாள்” என்று அழுவது போல கூறிவிட்டு இல்லாத கண்ணீரைத் துடைத்துவிட்டாள் பவித்ரா.

“அதுதானே நிறை. உனக்குப் பின்னால இருக்கிற மூன்று பேரிட வாழ்க்கையும் உன்ர கையிலதானே இருக்கு. பேசாம உங்க மாமா மகனைக் கல்யாணம் கட்டு. உனக்கும் அது நல்லம்தானே. உங்கட அம்மா தங்கச்சிகளுக்கும் நல்லமல்லோ” என்று அசால்டாகத் தீர்ப்புக் கூறினாள் கவிதாவின் அண்ணி. ஒரு பெண்ணின் வாழ்வை அவளைத் தவிர மிகுதி எல்லோருமே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டனர்.

“இல்லை என்னால முடியாது. அவர் சரியான குடிகாரர். எல்லாக் கெட்ட பழக்கமும் இருக்கு…” என்று நிறைமதி சொல்லி முடிக்க முதலே அவள் கன்னம் அதிர பளார் என ஓங்கி அறைந்திருந்தார் உமையாள்.

“யார் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதென்ற திமிரடி உனக்கு. அவங்க அப்பன்ட புத்தி அப்படியே இவளிட்டத் தான் இருக்கு. தானும் நாசமாய் போய் எங்களையும் நாசமாக்கப் போறாள். பாவி பாவி.. ” என்று குரலெடுத்து அழத் தொடங்கினார்.

வீட்டுக்குள் 

தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து விட்டதா என பார்க்க வந்த கவிதா சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தாள். கன்னத்தைப் பற்றியபடி கண்ணீர் வழிய நின்றிருந்த தோழியைக் கண்டதும் பதறியபடி உள்ளே ஓடி வந்தாள்.

“என்னடி என்னாச்சு..” என்ற அவளது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தேம்பத் தொடங்கினாள். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. 

“இப்ப அழுது ஏன்டி ஊரைக் கூட்டுறாய்? எங்கள அவமானப் படுத்தப் போறியா?” என அதற்கும் கத்தினார் உமையாள்.

“ஏன் அத்தை நிறையைப் பேசுறிங்க. இப்ப என்ன நடந்து போச்சு”

“உனக்கு ஒன்டும் தெரியாது. நீ பேசாம இரு. உன்கூடத்தானே இவளும் படிச்சாள். உனக்குக் கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பிறந்திட்டு. இவளுக்கும் ஒரு கல்யாணத்தப் பண்ணி வைச்சிடலாம் எண்டால் இப்படி நடிச்சுக் கொண்டு இருக்காள்”

“அத்தை.. அவள் படிக்கிறாளல்லோ.. அவளுக்கு இப்போ ஏன் கல்யாணம்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“உனக்கு ஒன்றும் தெரியாது கவிதா. நீ பேசாம இரு” என்று கவிதாவின் அண்ணி அவளை அதட்டினாள்.

இவர்கள் இந்தப் பேச்சை நிறுத்தப் போவதில்லை என்றும் இங்கே நின்றால் தன்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்த நிறைமதி கட்டிலில் கிடந்த தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அவள் பின்னால் வந்த கவிதா

“என்னடி பிரச்சினை? ஏதேதோ சொல்லுறாங்க?” என்ற கேள்வியுடன்  அவள் கையைப் பற்றினாள்.

“எனக்கு இப்ப எதுவும் சோல்லேலாது. பிறகு உனக்கு போன் பண்ணுறன். நான் இப்ப வீட்ட போறன்”

“பஸ்ஸிலா போகப் போறாய். நானும் சந்திக்கு வாறன் பொறு”

“இல்லடி.. நீ வீட்ட வந்திருக்கிற ஆக்களக் கவனி. நான் ஓட்டோ எதுவும் வந்தால் பிடிச்சுப் போயிடுவன்” என்றவள்

ஓட்டமும் நடையுமாகப் பிரதான வீதிக்குச் சென்றாள். அவ்வழியால் வந்த முச்சக்கர வண்டியை வழிமறித்து ஏறி வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

இது எதனையும் அறியாது இங்கே அவளைக் காணக் காத்திருந்த செந்தூரனின் காதல் மனதுக்குள்ளேயே புதைந்தது. அதன்பிறகு அவளை இவன் சந்திக்கவேயில்லை. இவனுக்கும் தொடர்ந்து கடை விஸ்தரிப்பு, புதிய கடைகள் திறத்தல் என வேலைகள் நெட்டி முறித்ததால் அவளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் நிராசையாகி அப்படியே அடங்கிவிட்டது. அவ்வப்போது அவள் நினைவு தோன்றினாலும் தன்னைத்தானே தட்டி அடக்கினான். நாளடைவில் அவளை மறந்துவிட்டதாகவே இருந்தான். ஆனால் இன்று அவளைக் கண்டதும் அவள் நினைவுகள் பசுமரத்தாணியாகப் பதிந்து விட்டதை உணர்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. உமையாள் பவித்ரா கவிதாவோட அண்ணி இவங்கல்லாம் என்ன ஜென்மங்கள் இதுங்க சொகுசா வாழ்றதுக்காக இன்னொரு பெண்ணோட வாழ்க்கை கெடுக்க பாக்குதுங்க.

      மதிய சீக்கிரமா செந்தூரனோட சேர்த்து அதுங்கள ரோட்ல நிக்க வையுங்க அப்பதான் அதுங்களுக்கு மதியோட அருமை தெரியும்

      1. Author

        பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறும் உலகமிது😭😭