Loading

அத்தியாயம் 4

 

நிலாவெளி என்னும் அழகிய  கிராமத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது கீர்த்திவாசனின் இருப்பிடம். தென்னந் தோட்டத்திற்கு நடுவில் இருந்த சிறிய வீட்டிற்கு முன்னால் ஆங்காங்கே சிறு சிறு பந்தல்கள் போடப்பட்டிருந்தன. அவற்றிற்கு நடுநயகமாகப் பெரிய பந்தல் ஒன்று போடப்பட்டு அதில் அழகான மரத்தொட்டில் ஒன்றை வைத்து ஜிகினா தோரணங்கள், பலூன்கள் என்பவற்றால் அலங்காரம் செய்திருந்தனர். அலங்காரங்களைச் செய்து முடித்த செந்தூரனும் அவனது நண்பன் கஜனும் அதிகாலையிலேயே வந்துவிட்டனர்.

அன்றைய விழா மதியம்தான் என்றாலும் தங்களது உயிர் நண்பனுக்கு உதவி செய்யவெனவே நேரத்திற்கு வந்திருந்தனர். பந்தல் அலங்காரங்கள் முதல் சமையல் வேலை வரை எல்லாவற்றிலும் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தனர்.

 

காலை சாப்பாட்டை முடித்துவிட்டு மிகுதியாக இருந்த சிலபல வேலைகளைச் செய்து கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் ஏற்கனவே கடையில் சொல்லிவைத்திருந்த ஐஸ்கிரீமை எடுத்துவரவென அனுப்பி வைத்தான் கீர்த்திவாசன்.

 

அப்போது செந்தூரன் கார் வாங்கியிருக்கவில்லை. அவனது மோட்டார் சைக்கிளிலேயே இருவரும் சென்றனர். பிரதான வீதிக்கு இருவரும் வரவே அங்கே நண்பன் ஒருவனைக் கண்டதும் வாகனத்தை வீதி ஓரமாக நிறுத்திவிட்டு அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களின்பின் சந்தித்ததால் மூவரும் தங்களை மறந்து பேசிக்கொண்டு நின்றனர்.

 

அந்த வழியால் வந்த பேருந்து ஒன்று அவர்களுக்கருகில் நின்றது. அப் பேருந்தில் பயணிகள் நிறைந்து வழிந்தனர். அதிலிருந்து மிகவும் சிரமப்பட்டு இறங்கினர் நிறைமதி குடும்பத்தினர்.

“என்ர கோணேசப் பெருமானே” என்று பெரிய குரலில் கூறியபடி இறங்கினார் உமையாள். அவருக்கடுத்து கவினயாவும் அடுத்து நிறைமதியும் இறங்கினர். கடைசியாக இறங்கிய பவித்ரா தனக்கு முன்னால் இறங்கிக் கொண்டிருந்த தமக்கையைப் பார்த்து பொறுமையை இழந்தாள். “ஏய் அக்கா கெதியா இறங்கு. ஆடி அசைஞ்சு இறங்குறாய்” என்று சினந்து கொண்டு அவளை பின்னாலிருந்து முதுகில் கைவைத்து தள்ளி விட்டாள். பேருந்தின் கடைசிப்படியில் கால் வைத்திருந்த நிறைமதி இதனை எதிர்பார்க்கவில்லை. அவள் தள்ளிவிடவும் தடுமாறி சற்று தள்ளி நின்று கதைத்துக் கொண்டிருந்த செந்தூரன் மீது விழுந்தாள். பவித்ராவின் சத்தத்தால் திரும்பிப் பார்த்த செந்தூரன் தன் மீது அவள் விழப் போவதை அறிந்தும் விலகிக் கொள்ள முடியாமல் நின்றுவிட்டான். எங்கே தான் தள்ளி நின்றால் விழுபவள் நேரே வீதியில் விழுந்து கற்களில் மோதி காயப்பட நேரும் என்பதை உணர்ந்தது ஒரு காரணம் என்றால், அவளைப் பார்த்ததும் தன்னை மறந்து அவள் முகத்திலேயே தன் பார்வையை நிலைக்கவிட்டது மறு காரணம்.

 

அவள் விழுந்துவிடாத வண்ணம் அவளது புஜங்களைப் பற்றி நிறுத்தினான். தன்னை யாரோ தாங்கிப் பிடிப்பதை புலன்கள் எடுத்துரைத்தாலும் அதனை உணரவோ யார் எனப் பார்க்கவோ விழையவில்லை அவள். மெதுவாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். பேருந்து புறப்பட்டதும் கீழே இறங்கி நின்ற பவித்ரா எதிரே நின்ற ஆடவர்களைக் கண்டதும் தன் இருப்பை அந்த இடத்தில் பதிவு செய்ய நினைத்தாள். “ஏய் அக்கா… உனக்கு பார்த்து இறங்கத் தெரியாதா? அல்ல உன்ர மூளை மாதிரியே கண்ணும் மழுங்கிற்றோ” என்று சிரித்தபடி கேட்டாள். பவித்ரா சிறு வயது முதல் இப்படித்தான். குணத்தில் நிறைமதிக்கு நேர் எதிர். அவள் எப்போதும் யாரையும் மதித்து மரியாதை கொடுத்து பேச மாட்டாள். அலங்காரம் செய்வதிலும் விதம் விதமாக உடையணிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். உமையவளுக்கும் ஏனோ தன் இரண்டாவது பெண்மீதே அதிகபாசம். அவள் தன் தோற்றத்தை ஒத்து பிறந்ததாலேயே அவள்மீது அதிக அக்கறை காட்டுவார். இதனால்தானோ என்னவோ அவளைக் கண்டிப்பதே இல்லை. அதனை தனக்குச் சாதகமாக்கிய பவித்ரா எப்போதும் நிறைமதியை மதிப்பதேயில்லை.

 

அவளது பேச்சால் உண்டான கவலையை மறைத்தபடி, தன்னைத் தாங்கிப் பிடித்தவனை நிமிர்ந்து பார்த்தாள் நிறைமதி. அவனது குறுகுறு பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவளால். முடியவில்லை என்பதை விட அதற்கான மனநிலையில் அவள் அன்று இருக்கவில்லை. அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு கடகடவென தாய்க்கருகில் போய் நின்றாள். தாயும் வழமைபோல் பவித்ராவைக் கடிந்து கொள்ளாமல் இவளையே கோபமாகப் பார்த்தார்.

 

அவள் அணிந்திருந்த அரக்கு நிற பட்டிலான சுடிதார் அவளது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தை மேலும் எடுத்துக் காட்டியதுடன் அவளுக்கு மிகவும் அழகாகவும் இருந்தது. முகத்திற்கு கண்மை தவிர்த்து வேறு எந்த செயற்கை ஒப்பனைகளும் இல்லாவிடினும் அவளது அந்தத் துறுதுறு கண்களும் ஆப்பிள் பழத்தை வெட்டி வைத்தது போன்ற கன்னங்களும் அவளைத் தேவதையாகவே அவனுக்குக் காட்டின. அவளது இடை வரை நீண்டிருந்த அந்தப் புரிகுழல்  அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. அவளைப் பார்த்ததும் தான் என்னமாதிரி உணர்கிறேன் என அவனுக்கே புரியவில்லை. காதலா? அல்லது ஈர்ப்பா? என்று பிரித்துணர முடியாமல் இருந்தான்.

 

“என்ன மச்சி… பார்வை எங்கேயோ போகுது… ” என்று இழுத்தான் கஜன். 

 

“டேய், எதுவும் இல்லடா. சும்மா பார்த்தேன்…”

 

“நல்லாத்தான் இருக்கு… ஆனா… அந்த ரெனிம் ஸ்கேட், பிளவுஸ் போட்டிருக்கே அந்தப் பிள்ளை நல்லா ஸேப்பா அழகா இருக்கே..” என்று பவித்ராவை பார்த்து ஜொள்ளு விட்டான் கஜன்.

 

“டேய்.. அது சின்னப்பிள்ளைடா.. இப்பதான் பத்தோ பதினொன்றோ படிக்கும் போல இருக்கு” என்று அதட்டினான். உண்மையில் பவித்ரா அப்போது தரம் பதினொன்றில்தான் கல்வி கற்றாள்.

 

ஒருமுறை நிறைமதியைத் தன் கண்ணுக்குள் வாங்கிவிட்டு புதிதாக சந்தித்த தங்கள் நண்பனிடம் கூறிக்கொண்டு கஜனுடன் புறப்பட்டான் செந்தூரன்.

நிறைமதி குடும்பத்தினர் வரவும் வாசலுக்கு வந்த கவிதா “வாங்கத்த… வாங்கடி… நேற்றே வரச்சொன்னால் பிறத்தி ஆக்கள் மாதிரி இப்பதான் வாறிங்களா?” என்று உரிமையோடு சண்டை போட்டாள்.  “மச்சி எப்போ ஜஃப்னாவில இருந்து வந்தனி. நான் உன்னை எதிர்பார்க்கல.. அன்டைக்கு பேசும்போதும் இரண்டு மாசத்துக்கு ஊருக்கே வரமாட்டன். எக்ஸாம் இருக்கென்றாய்.. என்னவோ… நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோசம் மச்சி” என்று நிறைமதியின் கையைப் பற்றிக்கொண்டு சந்தோசத்தில் மூச்சு விடாமல் பேசினாள்.

 

“போதும் போதும்.

ஏதோ ஜனாதிபதியே வந்த மாதிரி அலட்டிக்காதிங்க…” என்று ஒரு நொடிப்போடு சொன்னாள் பவித்ரா.

அவளின் குணம் அறிந்த கவிதாவோ “எனக்கு இவள் அதைவிட மேல்.. நீ போடி” என்றுவிட்டு தன் தோழியின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

தோழியுடன் சாதாரணமாகப் பேசிவிட்டு, தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தாள் நிறைமதி. கவிதா அப்போது வந்த வேறு உறவினரை உபசரிக்கச் செல்லவும் தன் வீட்டினரைத் தேடிச் சென்றாள். தாயாருடன் கவிதாவின் அண்ணி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் எப்போதும் ஊர்வம்புகளையே அதிகம் பேசுவார். எனவே அந்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்த்த நிறைமதி வீட்டின் பின்புறம் இருந்த கடற்கரைக்கு சென்றவள் அங்கே கிடந்த மரக்கட்டை ஒன்றில் அமர்ந்தாள். அந்த ஏகாந்தத்தில் ஆழியின் அழகு பன்மடங்காகக் காட்சியளித்தது. அது பெரும் சமுத்திரம் என்பதாலும் அன்று வீசிய காற்றினாலும் கடல் அலைகள் துள்ளி எழுந்து ஓடிவந்து கரையை முத்தமிட்டது. அந்தக் கடற்கரையை அண்டி தென்னை மரங்கள் வரிசையாக நின்றதால் வெய்யோனின் சுடுகதிர்கள் அவள் உடலைத் தீண்டவே இல்லை. அந்த சூழ்நிலையின் இதத்திலும் புள்ளினங்களின் சங்கீதத்திலும் தன்னை மறந்து லயித்துப் போயிருந்தாள் அவள்.

 

ஐஸ்கிரீமை எடுத்துவந்து பக்குவப்படுத்தி விட்டு நின்ற செந்தூரன்   அலைபேசி அழைப்பொன்று வரவும் தனிமையில் பேசுவதற்கென பின்பக்கம் வந்தான். அங்கே அமர்ந்திருந்த அவளைக் கண்டதும் அலைபேசியில் மறுபக்கம் இருந்தவருடன் பேசிக்கொண்டே அவளை ரசிக்கத் தொடங்கினான். அவளின் நிர்மலமான முகத்தையும் அந்தக் கண்களையும் ரசித்தான். அந்த வதனத்தில் ஏதோ ஓர் சோகம் இழையோடியிருக்கின்றதோ என்ற ஐயம் அவன் மனதில் உதித்தது. மேற்கொண்டு அவனை சிந்திக்கவும் ரசிக்கவும் விடாது கஜன் தூரத்தில் இருந்து அவனை அழைத்தான். இன்று எப்படியாவது அவளுடன் பேசிவிட வேண்டும் என்று எண்ணமிட்டபடி உள்ளே சென்றான்.

 

நிறைமதியோ தன்னைச் சுற்றி நிற்பவர்களையோ, நடப்பவற்றையோ சிந்திக்கும் மனநிலையில் இல்லை என்பது பாவம் அவனுக்குத் தெரியவில்லை. அவன் வந்து தன்னைப் பார்த்ததையோ சென்றதையோ அறியாதவள் மனமோ பெரும் வேதனையில் தத்தளித்தது. கண்கள் அவளை மீறி கண்ணீர் சிந்தியது.

 

முதல்நாள் காலையில்தான் தாயாரின் அழைப்பிற்காக அவள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தாள். வந்த சற்று நேரத்திலேயே கல்யாணப் பேச்சை ஆரம்பித்துவிட்டார். அவள் மறுத்துப் பேசி வீட்டில் பெரும் போராட்டமே நடைபெற்றது.

 

பேச்சில் ஆரம்பித்த விடயம் இறுதியில் உமையாளின் கைவண்ணத்தில் முடிந்தது. ஆம் நிறைமதியை அடி அடியென வெளுத்து வாங்கிவிட்டார். பக்கத்தில் நின்ற பவித்ராவோ “நல்லாப் போடம்மா.. இவா பெரிய மகாராணி.. இவவுக்குத் திமிர் கூடிற்றுது. நாம வாழுறதே மாமாவாலதான்.. அவங்க வீட்டில போய் வாழ இவவுக்கு என்ன கஸ்ரமாம்” என்று சொன்னதோடல்வாமல் கையால் அடித்துக் கொண்டிருந்த உமையாளுக்கு முறிந்த துடைப்பத்தின் தடியை எடுத்துக் கொடுத்தாள். அவரும் அதை வாங்கி அடி பின்னிவிட்டார். சற்றுத் தள்ளி படுத்திருந்த அவளது தந்தையோ அங்கே எதுவும் நடக்காதது போல திரும்பிப் படுத்தார்.

 

முதுகு, கை என இரத்தக் கண்டல்கள்(தழும்புகள்) ஏற்படும் அளவுக்கு அடித்து ஓய்ந்தார் உமையாள். “பாவி, பாவி எங்கட வாழ்க்கையைப் பாழாக்குறதுக்கெண்டே வந்து பிறந்திருக்காள்..” என்று திட்டத் தொடங்கியவர் ஓயாமல் திட்டிக்கொண்டே இருந்தார். உடம்பில் ஏற்பட்ட ரணத்திற்கு அழுவதா? அல்லது தாயார் திட்டுவதை கேட்டு மனம் வெதும்புவதா? என தெரியாது கண்ணீர் சிந்தினாள் நிறைமதி. மதியம் வீட்டுக்கு வந்த மாதவனும் மனைவியும் அவளது முடிவை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மாதவனின் மனைவியும் தன் பங்குக்கு அவளை ஒரு மூச்சு திட்டிவிட்டு இனிமேல் எந்த உதவியும் இந்த குடும்பத்திற்குத் தாங்கள் செய்வதில்லை எனக் கூறிவிட்டுச் சென்றார். மாதவனும் மனைவியை மீறி எதுவும் பேச முடியாமல் மௌனமாகவே சென்றார். இதற்குப் பிறகு சொல்லவா வேண்டும், பவித்ரா ஒரு பக்கம் உமையாள் ஒரு பக்கம் என அவளை வறுத்தெடுத்து விட்டனர்.

 

மறுநாள் காலையில் எழுந்ததும் கவிதா வீட்டுக்கு புறப்பட ஆயத்தமானவளைத் திட்டத் தொடங்கியவர்கள் இன்னும் முடிக்கவில்லை.

 

வாழ்க்கை நமக்கு பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் தரக் காத்துக் கொண்டிருக்கிறது. அது எப்படி எப்போது மாறும் என்று எவராலும் இலகுவில் கணித்து விட முடியாது. எனக்கு என்ன தரக் காத்திருக்கின்றதோ? என்று எண்ணமிட்டபடி கடலையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நிறைமதி. மனதுக்குள் அழுதாள். கண்களும் தன் பங்கிற்குக் கண்ணீரைச் சிந்தின.

 

வீட்டின் முன் பக்கம் வந்த செந்தூரன் சாப்பாட்டு மேசைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தான். ஆனாலும் அவனால் அவ்விடத்தில் இருப்புக் கொள்ள முடியவில்லை. அவளிடம் பேச ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். அவளைக் கண்ட நொடிமுதல் ஏதோ ஓர் பிணைப்பு அவன் எண்ணங்களூடாக அவளுடன் உண்டானதை உணர்ந்தான்.

 

சற்று நேரத்தில் தொட்டில் போட்டு பெயர் வைக்கும் நிகழ்வு தொடங்கியது. அங்கே கலகலப்புக்கும் சந்தோஷத்திற்கும் குறைவிருக்கவில்லை. எல்லோரும் குழந்தைக்குத் தம் பரிசுகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மதிய உணவுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. ஓடியோடி எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் செந்தூரனின் கண்களும் மனமும் என்னவோ நிறைமதியையே சுற்றிச் சுழன்றன. அவளும் மாறாத புன்னகையுடன் விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் கண்களில் ஒரு கலக்கம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. இந்த உமையாளும் பவித்ராவும் ரொம்ப பண்றாங்க அவங்களை வச்சு செய்யணும்.
      செந்தூரா சீக்கிரம் பேசி நிறைமாதியை சரி பண்ணு