Loading

அத்தியாயம் 3

சாதாரணமாகவே செந்தூரன் யாரிடமும் சட்டெனக் கோபப்பட மாட்டான். அவன் வியாபாரத் தளத்தில் இருப்பதால் எப்போதும் பொறுமையாகவே  செயற்படுவான். வாடிக்கையாளர்களிடமும் இன்முகத்துடனே சகஜமாகப் பழகுவான். இதுவே அவனது வியாபாரம் தழைக்க முதற்காரணம். அப்படிப் பட்டவனையே ஒரு நொடியில் கோபப்படுத்திவிட்டாள் கனிந்தா.

கோபத்தில் முகம் சுருங்கிய போதும், அவன் எப்போதும் கைக்கொள்ளும் நிதானம் அவனை வார்த்தைகளை அளந்து பேச வைத்தது. மனதில் உண்டான எரிச்சலையும் கோபத்தையும் வெளியே காட்டாது எதிரே இருந்தவளை உறுத்துப் பார்த்தான்.

“அவ்வளவு தானா? இல்ல இன்னும் ஏதாவது சொல்ல இருக்குதா? கனிந்தா…, நீ சொல்ல வாறது எனக்கு சரியாப் புரியல. இதப்பற்றி அத்த உங்களோட பேசிற்றாதானே? எல்லாம் கேட்டு ஓகே பண்ணின பிறகு தானே சம்மந்தக் கலப்பும் செய்தது. இப்ப வந்து மாத்திப் பேசுறாய்” என்று சற்றே அழுத்தமான குரலில் கேட்டான்.

அவனது குரலில் இருந்த பேதத்தை அவள் உணரவில்லை. தன் எண்ணத்திலேயே லயித்து இருந்தாள்.

“கனடாவில் இருந்து வெளிக்கிட முதலே நான் அப்பாட்ட சொல்லிட்டேன். என்னால இங்கெல்லாம் இருக்க முடியாதென்று அவரிட்ட நான் நிறைய தடவை சொன்னான். ஆனா அவர் பிடிவாதமா இருக்கார். அங்க இருந்து நான் கெட்டுப் போயிட்டனாம். வ்போய் வ்பிரண்டோட அவுட்டிங் போறதெல்லாம் பெரிய பிழையா? என் பிரண்ட்ஸ் எல்லாம் குடிப்பாங்க. ஆனா நான் அதப் பழகல. பட் பஃப்புக்கு போய் சும்மா என்ஜோய் பண்ணிட்டு வருவன். அங்கு இதெல்லாம் சகஜம். வெளிநாட்டில இருந்தா அங்கத்தய கல்ச்சருக்கு நாங்க வாழனும்தானே… இது புரியாமத்தான் அப்பா இங்கேயே செட்டிலாக ட்ரை பண்ணுறார்”

என்றாள்.

‘இதுவேறயா?’ என்று மனதுக்குள் சலிப்புடன் எண்ணிக்கொண்டான்.

“செந்தூரன் இதில யோசிக்க என்ன இருக்கு… இங்க இருந்து கஷ்டப்படுறதுக்கு கனடா போனால் எவ்வளவு நல்லம் தெரியுமா? அங்கத்தைய லைவ் ஸ்ரைலும் வித்தியாசம். அங்க போனதும் உங்களுக்கும் பிடிச்சிடும். நீங்களே இங்க வர விரும்ப மாட்டிங்க. இப்பெல்லாம் இங்க இருந்து எவ்வளவு பேர் கனடா வாறினம் தெரியுமா. அதோட உங்களுக்கும் உங்க அப்பாவை விட்டா யாருமில்லை. சோ, எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் வயசாயிடுச்சுதானே… அவராலையும் அங்க வந்து வாழ முடியாது. இங்கேயே இருக்கட்டும். அவருக்கு செலவுக்கு மாசமாசம் அனுப்பிடுவோம். அங்க போய் நீங்க ஸ்ரோர் ஒன்றை ஓபன் பண்ணினால் ஓகே. உங்களுக்கும் பிஸ்னஸ் பண்ணின மாதிரி போயிடும்” எதிரே இருப்பவனின் மனநிலையைப் பற்றி எந்த சித்தனையுமின்றி படபடவெனப் பேசிக்கொண்டே சென்றாள் கனிந்தா.

இதற்குமேல் அவனால் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. எதிரில் இருந்து பேசுபவள் மீது வந்த கோபத்தை இயன்ற அளவு அடக்கிக் கொண்டு,

“சரி கனிந்தா… நான் இதப்பற்றி பிறகு உன்கிட்ட  பேசுறன். எனக்கு அவசரமாப் போக வேண்டிய வேலை ஒன்று இருக்கு. நான் வாறன்” என்றவன் எழுந்து செல்ல முயன்றான்.

தான் சொன்னவை எதற்கும் எந்தப் பதிலும் இல்லாமல் திடீரென எழுந்து செல்ல எத்தனிப்பவனை குழப்பத்துடன் நோக்கியவள், அவன் கையை எட்டிப் பிடித்தாள். சுற்றி இருந்தவர்களின் பார்வையைக் கண்டவள், குரலைத் தணித்து “என்ன செந்தூரன் இது? திடீரெனப் போறிங்க. எனக்கு எந்தப் பதிலும் சொல்லலை. நானும் உங்க கூடத்தானே வந்தன். அத மறந்திட்டிங்களா?” என்று உள்ளூர எரிச்சலுடன், வெளியில் கண்களை சிமிட்டியபடி கேட்டாள்.

“சொறி, எனக்கு அவசரமா நிலாவெளிக்குப் போகணும். முன்னுக்கு ஓட்டோ நிற்குது. அதைப் பிடிச்சு போயிடு”

என்று அவன் சொல்லவும் மனதின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த முடியாமல்,  

“ஓகே நான் பிக்மீயில் கோல் பண்ணி போறன். வீட்ட போனதும் கோல் பண்ணுங்க” என்று நளினமாகக் கூறினாள்.

அதேநேரம் அந்த தளத்தில்  வேறொரு மேசையைச் சுற்றி நிறைமதியும் அவளது தோழிகளும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “இங்கே எப்பவும் இதே போலத்தான் நிறைய ஆட்கள் வருவாங்களோ?” என்று கேள்வி கேட்டபடி சுற்றும்முற்றும் பார்வையால் அளந்தாள் நிறைமதி. 

“இன்று சண்டேதானே அதுதான் கூட்டம் அள்ளுது. அண்ணாக்களோட நான் ரெண்டு கிழமைக்கு முன்னர் வந்தனான். இங்க எல்லா டிஸ்ஸும் ரேஸ்ரா இருக்கும். அதால ரவுனுக்க இருக்க சனமே இங்கதான் தேடி வருவினம்” என்று பதிலளித்தாள் பிரின்ஸி . 

“என்னங்கடா இது நாங்க வந்து ஒரு மணி நேரமாச்சு. ஒருத்தர் கூட வந்து எட்டிப் பார்க்கல. வாங்கடி வேற ரெஸ்ரோரன்ட் போவம்” என்ற பிரணிதாவின் புலம்பலைக் கேட்டதும், 

“கொஞ்சம் அடங்கடி… நாம வந்து அஞ்சு நிமிஷம் கூட ஆகல. சுத்திப் பார் எவ்வளவு சனம். வெயிட்டர்ஸும் எவ்வளவுதான் ஓடுவாங்க” என்று நிறைமதி கூறினாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பணியாளர் வந்து தேவையான உணவுகளைக் கேட்டு எழுதிக் கொண்டு சென்றார். 

பிரின்ஸி இது எதையும் கணக்கில் எடுக்காது தன் கைபேசியில் விதம் விதமாகத் தன்னையும் தன்னைச் சுற்றியும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

உணவு வரும்வரை அவர்களுக்கு வரவேற்புக்கென வழங்கப்படும் பழக்கலவை வழங்கப்பட்டது. பிரின்ஸியும் பிரணிதாவும் ஒரே மூச்சில் அதனைக் குடித்து முடித்தனர். மற்றைய இருவரும் மெல்ல மெல்ல அதனை சுவைத்தனர். தோழிகள் நால்வரும் வளவளத்தபடி இருந்தனர்.

கனிந்தா கண் சிமிட்டியபடி அவனது கையைப் பிடித்து பேசுவதையும் அவனும் அருகில் உள்ளவர்களுக்கு கேட்காதபடி அவளருகே குனிந்து பதில் சொல்வதையும் பார்த்து “அங்க பாருங்கடி அந்த காதல் ஜோடியை ரொமான்சில் கலக்குறாங்க” என்று பிரின்ஸி நக்கலாக சிரித்தபடி பார்க்கவும் அப்படி எதைத்தான் அவள் சொல்கிறாள்  என்று திரும்பி பார்த்தனர் தோழிகள்.  அவர்கள் பார்க்கும்போது அவன் அவளிடம் இருந்து கையை விடுவித்து விட்டு குனிந்து மேசைமேல் இருந்த தன் கார்  சாவியையும் கைத்தொலைபேசியையும் எடுத்தான். அது நிறைமதியின் கோணத்திலிருந்து பார்க்கும் போது அவன் கதிரையில் இருப்பவளை முத்தமிடுவது போல ஒரு காட்சிப் பிழையை ஏற்படுத்தியது. அவளது முகத்தில் அருவருப்பு தன்மை தோன்றியது. சீ..சீ.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? பொது இடம் என்றும் பார்க்காமல் இப்படி முத்தமிடுகிறானே என்று எண்ணமிட்டபடி இருக்கவும் சாவியை எடுத்துத் திரும்பியவன் பார்வையில் அவளது உருவமே விழுந்தது. அதிலும் இவளது அருவருத்த முகபாவனையே விழுந்தது.

இவள் ஏன் இப்படி முகத்தை வைத்திருக்கிறாள் என்று நினைத்தவனால், அவளிடம் இருந்து தன் பார்வையை அகற்ற முடியவில்லை. ஏன் அந்த மேசையை சுற்றி அத்தனை பெண்கள் இருந்தார்கள். ஆனாலும் அவளிடம் மட்டும் தன் பார்வை சென்றதென அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று தான் முதல் தடவை பார்க்கிறானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இந்த துறுதுறு கண்களையும் அந்த குழந்தைக் கன்னங்களையும் அவனால் மறக்க முடியுமா? ஆனால் அவள் இவ்வளவு தூரம் தன் மனதில் பதிந்து இருப்பாள் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை. அவளை தான் மறந்துவிட்டதாக எண்ணியிருக்க அவள் ஆழப் பதிந்துவிட்டதை இன்றுதான் உணர்ந்தான். அவளின் பார்வை தன்னை ஏளனமாகப் பார்த்ததை அறிவு எடுத்துரைத்த போதும் உள்ளமோ ஒரு வகை உவகையுடன் தத்தளித்தது.

அவனை மேலே சிந்திக்கவிடாது “செந்தூரன்” என்ற கனிந்தாவின் அழைப்பு நிஜ உலகத்திற்கு கூட்டி வந்தது.

அவளிடம் எதுவும் கூறாமல் தன் நீண்ட கால்களை எட்டி வைத்து அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

காரில் செல்லும்போதும் மனம் ஒரு நிலையில் இல்லை. கனிந்தா கூறியதைக் கேட்டு கோபத்தில் கொந்தளித்த மனம் இப்போது அதைப் பற்றி துளியளவும் சிந்தனையின்றி வேறு ஒன்றில் லயித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. பார்த்த நொடியே எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும் மாயக்காரி அவள் என உள்ளுக்குள் புலம்பினான். 

ஏதோ தோன்றவும் காரை நேரே விட்டது நிலாவெளியிலுள்ள தன் நண்பன் கீர்த்திவாசனின் வீட்டிற்கு. அவனது கார் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கதவைத் திறந்து அவன் இறங்கும் முன்னமே வீட்டிற்குள் இருந்து ஓடி வந்தாள் இரண்டே வயதான ரிதன்யா. அவளைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்து காரை விட்டு இறங்கி அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“மாமா.. மாமா.. மாமா”

என்று குதூகலித்த அந்த மழலையின் மெல்லிசையில் அவன் தன்னையே மறந்து போனான்.

“அம்முக்குட்டி… மாமாக்கு ஒரு அவ்வா(முத்தம்) தாங்க” என்று கேட்டுப் பெற்றுக் கொண்டு தானும் கொடுத்தான்.

அதற்கிடையில் வெளியில் வந்த கீர்த்திவாசன் அருகில் நின்ற தன் மனைவி கவிதாவிடம் “ஏய் கவி அப்பவும் காலைல ரீவியில சொன்னதல்லோ.. இன்டைக்கு பின்னேரம் மழை பெய்யும் எண்டு. நான் நம்பல.. இப்ப பார்த்தால் அது உண்மைதான் போல” என்று கூறிக்கொண்டே வானத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தான். அவனது நக்கல் பேச்சை புரிந்து கொண்ட கவிதா “சும்மா இருங்க.. நீங்க வேற..” என்று அவனை அடக்கி விட்டு “வாங்கண்ணா” என்று அவனை முகம் நிறைந்த புன்னகையுடன் வரவேற்றாள். நண்பனின் முதுகில் ஓங்கி செல்லமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றான் செந்தூரன்.

வரவேற்பறையில் அமர்ந்து ரிதன்யாவை மடியில் அமர்த்தி, அவளுக்கு  விளையாட்டு காட்டியபடி நண்பனோடு பேசிக் கொண்டிருந்தான்.

“இருங்கண்ணா வாறன்” என்று கவிதா எழுந்து செல்லவும், “அவனுக்கு இஞ்சிப் பிளேன்ரி போடு. அதுதான் அவனுக்கு விருப்பம்” என்று கூறிய கீர்த்திவாசனுக்கு  கண்களால் ஜாடை காட்டினான் செந்தூரன். அவனது சைகை மொழியைப் புரிந்து கொண்டவன் “கவி.. நானும் மச்சானும் அப்படியே தோட்டத்தில் இருந்து கதைக்கிறோம். நீ எங்களுக்கு கொஞ்ச நேரத்துல பிளேன் ரீயைக் கொண்டு வா” என்று விட்டு வெளியே நடந்தான்.

தென்னை மரங்களுக்கிடையே மர நாற்காலிகளைப் போட்டு அமர்ந்ததும் “என்னடா மச்சான் ஏதோ கதைக்கத்தான் கூப்பிட்டாய் என்று தெரியுது. சொல்லடா” என்று கேட்டான்.

“டேய், நம்ம ரிதும்மாட தொட்டில்ல போடுற ஃபங்ஷனுக்கு வந்தப்ப நான் சொன்னது நினைவிருக்கா?” என்று கேட்டான் செந்தூரன்.

“இதென்னடா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த பங்ஷன்ல சொன்னத இப்ப கேட்கிறாய். எதக் கேக்கிறாய் என்று புரியல”

“கீர்த்தி.. அது வந்து.. நீ கவிதாவ வல் பண்ணும் போதுதானே ரேணுவையும் சைட் அடிச்சாய். அது எப்படிடா?” என்று அசால்ட்டாக வேறொரு கேள்வியைக் கேட்டான். சற்றுத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்த மகளைப் பார்த்தபடி இருந்த கீர்த்திவாசன், இவனது கேள்வியால் அதிர்ச்சியில் புரைக்கேறி இருமியபடி இவனைப் பார்த்து “ஏன்டா இப்ப நீ என்ட வாழ்க்கைக்கு குண்டு வைக்கவா வந்தாய்? இது மட்டும் அவள்ட காதில விழுந்திச்சு நான் செத்தன். ஏண்டா ஏன்? சம்மந்தம் இல்லாம ஏதேதோ பேசுறாய்” என்று பரிதாபமாகக் கேட்டான்.

“இல்லடா சும்மா ஒரு தெளிவுக்குத்தான் கேட்டன்”

“கேட்பாயடா கேட்பாய்.. நல்ல நேரம் பார்த்து கேட்டாய்.. சரிடா என் கதைய விடு… இப்போ எதுக்கு நீ இந்த விசாரணையில் இறங்கியிருக்காய்?”

என்று கண்களை இடுக்கி அவனை யோசனையாய் கேட்டான். பிறகு தானே தன் தலையை ஆட்டியபடி “சீ..சீ… நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய்” என்று சினிமாவில் சொல்வது போலவே கூறினான்.

“டேய்… எதுக்கடா நான் சரிப்படமாட்டேன்”

“இல்லடா, நீ லவ் ஏதும் பண்ணுறியோ எண்டு யோசிச்சன். ஆனா உனக்குத்தான் சம்பந்தம் பேசியாச்சே.. பிறகு எப்படி நீ லவ் பண்ணுவாய்”

“ஏண்டா நான் லவ் பண்ணக் கூடாதா?” என்று செந்தூரன் கேட்கவும் மீண்டும் அதிர்ச்சி அடைந்த கீர்த்திவாசன்,

“ஏன்டா குண்டத் தூக்கிப் போடுறாய். வாறமாசம் உனக்குக் கல்யாணமடா”

“அது நடக்காது”

“ஐயோடா… அணுகுண்டையே போடுறியே”

“உண்மையைத்தான் சொல்லுறன்” என்றவன் கனிந்தா தன்னுடன் பேசியதைக் கூறினான்.

“நான் அத்தையும் அப்பாவும் சந்தோசப்படுவாங்க என்றுதான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சன். அப்பவும் அத்தைட்ட சொன்னான் வெளிநாட்டிலிருந்து வந்த பிள்ளை, இங்க இருக்கமாட்டா என்று. அத்தைதான் தான் எல்லாம் பேசிட்டன். அவ இங்கதான் இருப்பா என்று சொன்னா. நானும் அத நம்பித்தான் ஓகே பண்ணினன். ஆனா அவவுக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இது சரிவராது. நான் அத்தைகிட்ட பேசுறன். அதோட…” என்று இடை நிறுத்தினான்.

“அதுசரிடா.. இதில லவ் எங்க வந்திச்சு?” என்று புரியாமல் கேட்டான் கீர்த்தி.

“அதுக்குத்தான் ரிதுக்குட்டிட ஃபங்ஷன் பத்திக் கேட்டன்”

“அந்தப் ஃபங்ஷனில் என்னடா?” என்று கேட்டவன் திடீரென நினைவு வந்தவனாக “டேய் நீ நிறைமதியச் சொல்லுறியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஓமடா.. இன்று அவளையும் அந்த ரெஸ்ரோரன்ரில் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் எனக்குள்ள ஒரு வித்தியாசத்த உணர்ந்தேன்.

“டேய் செந்து, அன்று நீ ஏதோ விளையாட்டுக்குச் சொல்லுறாய் என்று நினைச்சன். பிறகு நீ அதப் பத்தி எதுவுமே பேசலையா… நீ ரைம் பாசுக்கு அன்றைக்கு விளையாடினாயோ என்று நினைச்சு நானும் மறந்திட்டன்”

“இல்லடா அடிக்கடி அவள் முகம் என் நினைவுக்கு வரும். கல்யாணம் பேசினப்பவும் அவள நினைச்சன். ஆனா அத அப்படியே ஓரங்கட்டிட்டன். இண்டைக்கு அவளைத் திரும்பப் பார்த்ததும் எனக்குச் சொந்தமானது திரும்பவும் கிடைச்சமாதிரி ஃபீல் ஆச்சுடா.. கனிந்தா சொன்னது எதுவுமே எனக்கு அவ்வளவா மண்டைல ஏறல” 

“இப்ப என்னடா சொல்ல வாறாய்? ஆமா இதில..” என்றவன் திரும்பி ஒரு தடவை கவிதா இன்னும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு,

“இதில ரேணுகாட கதை ஏண்டா வந்திச்சு” என்று மிகவும் மெதுவாகக் கேட்டான்.

“இல்லடா… என் மனதில இவள் இருக்கும்போது எப்பிடி என்னால கனிந்தாவைக் கல்யாணம் பண்ண சம்மதிக்க முடிஞ்சுது… அதுதான் கேட்டன். ஆனா கனிந்தாவ ஒரு நிமிஷம் கூட நான் ஆசையா நினைச்சுப் பார்க்கலடா.. ” என்று அவனுக்கு சொல்வது போல தன் மனதுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டான்.

கவிதா கையில் தேநீர்க் கோப்பைகளுடன் வரவும் இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். 

மூவரும் ஏதேதோ பேசியபடி தேநீரை அருந்தினர். திடீரென “ஏன் கவி, நிறைமதி கம்பஸ் முடிச்சிட்டாளா?” என்று தன் மனைவியிடம் கேட்டான் கீர்த்தி. அவனது கேள்விக்கு கவிதா என்ன சொல்லப் போகிறாள் என ஆவலுடன் பார்த்திருந்தான் செந்தூரன். கவிதாவின் ஒன்றுவிட்ட மாமாவின் மகள்தான் நிறைமதி. இருவரும் ஒரே வயது என்பதால் தோழிகள் போலவே உறவாடுவர்.

அவள் படிப்பு பாதியில் நின்று போனதையும் தற்போது அவள் கேக் தயாரித்து விற்பனை செய்வதையும் கூறினாள். சற்று நேரத்தில் அவர்களிடம் கூறிக்கொண்டு புறப்பட்ட செந்தூரன் அவளின் நினைவுகளுடனேயே தன் வீடு நோக்கிச் சென்றான். அவளை முதல்முதலாக சந்தித்த நினைவுகள் அவன் மனதில் பனிச்சாரலாகப் பயணம் செய்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. செந்தூரன் மதி ரெண்டு பேரும் முதல் சந்திப்புல ரெஸ்டாரண்ட்ல ரொம்ப ரொமான்ஸா லுக்கு விடுவாங்கன்னு பார்த்தா இப்படி மதி அருவருத்தும் செந்தூரன் யோசித்துக் கொண்டும் பார்த்துகிட்டு இருக்காங்க.

      செந்தூரன் மதி ரெண்டு பேரும் முன்னாடியே சந்திச்சி இருக்காங்களா அப்போ என்ன நடந்துச்சு??

      1. Author

        என்னதான் நடந்நிருக்கும்????
        🤔🤔😍😍😍
        எதிர்பார்த்து இருப்போம்…