Loading

அத்தியாயம் 16

செந்தூரன் சென்ற நேரம் தொடக்கம் ஜெயராணி அவள் தங்குவதற்கென காட்டிவிட்டுச் சென்ற அறையிலேயே அடைந்து கிடந்தாள் நிறைமதி. வேலைகளுக்கு நடுவிலும் ஜெயராணியும் அடிக்கடி வந்து அவளைப் பார்த்து ஏதாவது பேசி விட்டே சென்றார். புது இடம், புது மனிதர்கள் என்பதால் இவளுக்குத்தான் வெளியில் போவதற்குச் சங்கடமாக இருந்தது.

 

திடீரென நிறைமதிக்கு ஏனோ இனம் புரியாத பயம் மனதில் தோன்றியது. ஏனென்று தெரியாமல் தவித்தாள். கை,கால்களில் எல்லாம் படபடப்பு. தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

 

தாயும் சகோதரர்களும் இப்போது என்ன செய்வார்கள்? செந்தூரன் சொன்னது போல் அம்மா பாவம்தான். அவர் மனதில் இருந்த ஆற்றாமையால்தான் என்னை அடித்திருக்கிறார். பவித்ரா வளர்ந்து விட்டாள், துணிவானவள். எதையும் சமாளிப்பாள். ஆனால், அன்பரசனும் கவினயாவும் பாவம். நான் இல்லாமல் என்ன செய்யப் போகிறார்களோ? என்று எண்ணியவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

 

“பிள்ளை..” என்று ஜெயராணி அழைத்துக் கொண்டு உள்ளே வரவும் அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆனாலும் அவர் அதனைக் கண்டு கொண்டார்.

“என்ன பிள்ளை அழுகிறாயா? வீட்டை நினைக்கிறாயோ? எதுவும் யோசிக்காதம்மா அவர்களுக்கு உன்மீது கோபம் இருந்தாலும் அது கொஞ்ச நாளிலேயே போயிடும். உன்னைத் தேடி கட்டாயம் வருவாங்க. இல்லாட்டியும் தம்பி சும்மா விட மாட்டான். எப்படியும் சமாதானப்படுத்தி விடுவான்” என்றார்.

 

அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் இருந்த சின்ன மேசையில் அவள் வந்ததும் கொடுத்த தேநீர் குடிக்கப்படாமல் அப்படியே இருப்பதைப் பார்த்தார்.

 

“ஏன் பிள்ளை ரீ கூடக் குடிக்காமல் இருக்கிறாய்? எவ்வளவு சோர்ந்து போய் இருக்காய். வாம்மா இரவுக்கு புட்டும் கறியும் வச்சிருக்கேன். சாப்பிடுவோம்” என்று அழைத்தார். “இல்லை அத்தை, நான் பிறகு சாப்பிடுகிறேன்” என்று சொன்னவளைச் சிரிப்புடன் நோக்கியவர்,

“நான் உனக்கு அத்தை இல்லை, அம்மா… அம்மா என்றே கூப்பிடு. தம்பியும் சின்னவனும் கடையைப் பூட்டிவிட்டு வந்து சாப்பிட ஒன்பது, பத்து மணியாகும். அதுவரைக்கும் நீ பசியோடு கிடக்க வேண்டாம். வாம்மா சாப்பிடுவோம்” என்று கனிவோடு அழைத்தார். அவரது கனிவு மனதிற்கு இதத்தைத் தந்தது. 

 

“அத்தை.. அம்மா அவங்க வந்ததுமே சாப்பிடுவோம் பிளீஸ்” என்று சொல்லவும்

“சரியம்மா, சும்மா அறைக்குள்ளேயே குந்தி இருக்காமல் ஏதாவது செய்யன். ஹோலுக்கு வந்து ரீவி பார். அது இல்லாட்டி தம்பியிட அறைக்குள்ள ஒரு கபோர்ட்டில் நிறைய புத்தகங்கள் வச்சிருக்கான். கதை புத்தகங்களும் இருக்கு. அதுல ஒன்றை எடுத்து  வாசிக்கலாமே  பிள்ளை” என்றார். அவள் புத்தகம் எடுத்துப் படிப்பதாகக் கூறிவிட்டு அவனது அறை எது எனக் கேட்டு அங்கே சென்றாள். செந்தூரன் சிறு வயதாக இருந்தபோது அவர்களுக்கு இரண்டு அறைகளுடன் கூடிய வீடே இருந்தது. அவன் தொழிலில் நுழைந்ததும் எல்லோரும் பெரியவர்களானதால் பார்த்து பார்த்து பெரிதாகக் கட்டினான்.  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகளாக இரண்டு மாடிகள் கொண்ட வீடாக அமைத்திருந்தான். ஜெயராணியின் மகள் தங்கியிருந்த அறையிலேயே நிறைமதியைத் தற்போது தங்க வைத்திருந்தார். அவனது அறையில் இருந்து வேள்பாரி நாவலைக் கண்டதும் ஆசையுடன் எடுத்தவள், முதல் பக்கத்தைப் பிரித்தபோது வெளியில் கேட்ட சத்தத்தில் அதிர்ந்து போனாள். பெரிதாக யாரோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

 

வெளியில் வந்தவள் அங்கே நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்து போனாள். நிறைமதி தன் வீட்டில் இருந்து தைரியமாக வெளியேறி வந்து விட்டாள்தான். செந்தூரன் கொடுத்த துணிவில் வந்திருந்தவள் வாசலில் நின்றவர்களைப் பார்த்ததும் பயத்தில் கையில் வைத்திருந்த புத்தகத்தை இறுக்கி பிடித்தாள்.

 

சத்தம் கேட்டு தன்னறைக்குள் நின்ற ஜெயராணியும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தார்.

 

அவர்களை அங்கே கண்டதும் பதறிய நெஞ்சைக் கைகளால் பற்றியபடி ஜெயராணியைப் பார்த்தாள். அவளது பார்வையில் தெரிந்த பயத்தையும் பதட்டத்தையும் கண்டுகொண்டவர் அவள் அருகில் சென்று நின்று தோள்களில் ஆதரவாகக் தட்டிக் கொடுத்தவர். அவர் தந்த தைரியத்தில் சற்றே தெளிந்தார்.

 

அங்கே வந்திருந்தது அவளது தந்தை சங்கரனும் குகனும் அவனது தாயார் நிர்மலாவும். மற்றைய இருவரையும் அங்கே அழைத்து வந்ததும் சங்கரனேதான்.

 

நிறைமதி வீட்டைவிட்டுப் போனதும் கத்திகத்தி ஓய்ந்து போன உமையாள் அழுதுகொண்டே தரையில் அமர்ந்திருந்தார். அப்போது மணப்பெண்ணுக்கான கூரைப்புடைவையை எடுத்திருந்த நிர்மலா, அதற்கு பிளவுஸ் தைக்கக் கொடுப்பதற்காக அளவு பிளவுஸ் வாங்க வந்திருந்தார்.

 

உமையாளின் அழுகையைக் கண்டதும் “என்ன? என்னாச்சு? ஏன் அழுறிங்க” எனக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் போய் அமர்ந்தார். அவரைக் கண்டதும் எப்படி நடந்த விஷயத்தைச் சொல்வதெனத் தெரியாமல் தவிப்புடன் பார்த்தார். அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த சங்கரனும் அழுகுரலைக் கேட்டு “சீச்சி.. இது வீடா இல்லை இழவுவீடா.. எப்போ பார்த்தாலும் அழுகுரல்தான்” என்று சினந்து கொண்டே உள்ளே வந்தார்.

 

பதில் சொல்ல முடியாமல் அழுதுகொண்டே இருந்தார் உமையாள். அவர் எதுவும் சொல்லப் போவதில்லை என்பதை உணர்ந்த பவித்திரா தானே நடந்த விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் கத்தத் தொடங்கிவிட்டார் நிர்மலா. சற்று நேரம் கத்திவிட்டு ஓயவும் சங்கரன் எழுந்து “வா உமையாள், நான் போய் அவளை இழுத்துவாறன்” என்றார். ஆனால் உமையாளால் அது முடியவில்லை. அவர் மாட்டேன் என தலையசைக்கவும்

“இவங்க வரமாட்டாங்க அண்ணா, நீங்க வாங்க நான் உங்ககூட வாறன். குகனையும் போனை போட்டு கூப்பிடுறன். அவனையும் கூட்டிட்டு போவம். அவளை இழுத்துட்டு வந்துடுவோம்” என்று கூறிய நிர்மலாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டார்.

 

யார் இவர்கள் என கண்களால் கேட்ட ஜெயராணிக்கு பதில் சொன்னாள் நிறைமதி.

“இது அப்பா, மாமி, குகன் அத்தான்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் சொன்னதுமே அவர் புரிந்து கொண்டார். ஓஹோ இவனுக்குக் கல்யாணம் செய்யத்தான் என் பிள்ளையைப் போட்டு இந்த பாடாய் படுத்திருக்கிறார்களா என்று சிந்தனை ஒரு பக்கம் ஓடினாலும் வாய் அது பாட்டுக்கு மரியாதைக்காக வாங்கோ என அழைத்தது.

 

“யார் எங்களை வரவேற்கிறது. எங்க புள்ளையை, எதுவும் தெரியாத என் மகளைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்கான் உங்க வீட்டுப் பிள்ளை. அவளை எவ்வளவு செல்லமாக நாங்க வளர்த்தோம் என்று தெரியுமா? அவளைக் கொண்டு வந்து இந்த வீட்டுக்குள்ள அடைத்து வைத்திருக்கிறான். என் தங்கப்புளள இல்லாம நான் எவ்வளவு துடிச்சுப் போயிட்டேன்” என்று குரலை உயர்த்திக் கத்தினார் சங்கரன். நிறைமதிக்குச் சட்டென சினம் மூண்டது. இப்போதுதான் இவருக்கு நான் மகள் என்பதே தெரிகிறதா? நான்கு பிள்ளைகளைப் பெற்றுவிட்டபோதும் அவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுக்க கூட முடியாமல் குடியுடன் வாழும் இவருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கு. இப்போது பிள்ளைகளின் ஞாபகம் வந்து பாசமழை பொழிகிறார்

 

இவ்வாறு, சற்றுமுதல் அவரைக் கண்டதும் தன்னைத் தேடி தந்தை வந்துள்ளாரே என இளகிய உள்ளம் இறுகியது. அவள் பயத்துடன் ஏதோ சொல்ல வரும்போது அவர்கள் பின்னால் வந்து நின்ற செந்தூரன்

“என்ன வேண்டும்? என்று பெரும் குரலில் கேட்டான். திடீரென பின்னால் கேட்ட அவனது குரலை எதிர்பார்க்காதவர்கள் அதிர்ந்து போய் திரும்பினர்.

அவனைக் கண்டதும் ஜெயராணிக்கும் அப்பாடா என்றிருந்தது. நிறைமதிக்கோ மனதில் பெரும் ஆறுதல் ஏற்பட்டது.

 

“என் பிள்ளை இவள். இவள் இங்கே ஏன் இருக்க வேண்டும். அதுதான் கூட்டிப்போக வந்தேன் என்று கூறிய சங்கரனின் குளறல் பேச்சிலேயே அவர் குடித்திருப்பதைப் புரிந்து கொண்டவன்,

“மதி நீ உள்ளே போ. அத்தை நீங்கள் அவளைக் கூட்டிக்கொண்டு போங்க” என்று சொன்னவன் தன்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை பறைசாற்றக் கைகளைக் கட்டியபடி அவர்கள் எதிரில் தன் முழு உயத்துக்கும் நிமிர்ந்து நின்றான். 

 

“எல்லாம் உன்னைச் சொல்ல வேண்டுமடி. குகனைக் கல்யாணம் செய்யிறன் என்று சொல்லிப்போட்டு இவனைக் கூட்டிக்கொண்டு ஓடி ஒளிஞ்சி வந்திருக்கிறாய்? இவன் உன்னைக் கல்யாணம் பண்ணமாட்டான். இவனுக்கு ஏற்கனவே சம்பந்தம் செய்தாச்சு. உன்னை வைப்பாட்டியா வைச்சிருக்கத்தான் கூட்டி வந்திருக்கான். நீயும் வெட்கம் கெட்டு இவனோட வந்திற்றாய். உன்னைப்போல உன் தங்கச்சிகளும் ஒழுக்கம் கெட்டதுகள். அதுகளும் எவன்கூட சுத்தித் திரியுதுகளோ. எவனை இழுத்துக் கொண்டு ஓடிப் போகப் போகுதுகளோ. நாசமாய் போனதுகள்” என்று நிர்மலா கரித்துக் கொட்டிக் கொண்ட ருந்ததும் அவமானத்தால் குறுகிப் போனாள் நிறைமதி. இவ்வளவு நேரமும் துணிந்து நின்றவளால் தன் தங்கைகளைப் பற்றிப் பேசியதும் அழுகையை அடக்க முடியவில்லை. வேதனையில் மனம் துடிக்க இயலாமையோடு அவனைப் பார்த்தாள். அவள் வேதனையைக் கண்டதும் அவளருகில் வந்து நின்றவன் ஆதரவாக தோள் மீது கையை போட்டு “நீ உள்ளே போ. நான் இவங்களிட்ட பேசுறன். உள்ளே போங்கள்” என்று அத்தையையும் பார்த்து அதட்டலாகச் சொனனான். உடனேயே ஜெயராணி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

 

“நாம் இப்படி கேட்டால் சரியாக வராது. வீட்டுக்குள்ள  என் மகளை அடைச்சு வச்சிருக்காய். இப்ப கையோட அவளைக் கூட்டிக்கொண்டு போகப்போறேன். இல்லாவிட்டால் போலீசுக்குப் போவேன்” என்று சங்கரன் சொல்லவும்,

“உன் மிரட்ஞலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவளைக் கூட்டிக்கொண்டு போவேன். இல்லாவிட்டால் உன்ர குடும்ப மானம் சந்தி சிரிக்கும்” என்று குகன் கத்தவும் கோபம் வந்துவிட்டது செந்தூரனுக்கு.

“என்ன சண்டித்தனம் செய்கிறீர்களா? அவள் என் பொண்டாட்டி. அவளை எனக்கு என்ன செய்யணும் என்று தெரியும். அவளுடைய அப்பா என்று கூடப் பார்க்க மாட்டேன்” என்று விரல் நீட்டி அவன் எச்சரிக்கவும் பயந்து போனார் சங்கரன். திரடகாத்திரமான அவனிடம் வாங்கிக் கட்டி உடம்பை புண்ணாக்க மூவரும் தயாராக இல்லை. அங்கிருந்து கோபத்துடன் வெளியேறிவிட்டனர்.

 

அவர்கள் சென்றதும் அவளைத் தேடி அறைக்குள் சென்றான். அங்கே கட்டிலில் அமர்ந்து இருந்தவள் அவனைக் கண்டதும் கணணீர் வடித்தாள்.

“இப்ப என்ன நடந்தது என்று அழுகிறாய்?” என்று அதட்டினான் அவன்.

“என்னால தானே உங்களுக்கு பிரச்சனை” என்று உடைந்து போய் அழுதாள்.

“அடி வாங்கப் போகிறாய். எனக்கு நீ வேண்டும் மதி. அதற்காக நான் எதையும் தாங்குவேன். எதையும் நினைச்சு நீ கவலைப்படாதே. உன் அப்பாவை பற்றி என்னை விட உனக்கு நல்லா தெரியும் தானே. குடித்துவிட்டு உளறுகிறார். அவரைக் கோவிக்க மாட்டேன்”

 

அவனுடைய வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலை கொடுத்தது. அவளை ஆறுதலாக அணைத்தவன் மனம் சிந்தனையில இருந்தது.

 

கொஞ்ச முன்னர்தான் கனிந்தா புதிதாய் ஒரு பிரச்சினையுடன் வந்திருந்தாள் என்றால் வீட்டில் அவர்கள் வந்து பிரச்சினை. என் இதயத்தில் குடியிருக்கும் மதி தன் வீட்டில் குடியிருப்பதற்கு யார் அனுமதியைக் கேட்க வேண்டும்? மதி இந்த செந்தூரன் உனக்காக எதையும் செய்வான். இனி உன்னை யாரும் இந்த வீட்டில் வந்து கேள்வி கேட்கிற இடத்தில் நிற்பாட்ட மாட்டேன் என்று மனதிற்குள் சபதம் எடுத்தவன்  “அடியே என் மதிச் செல்லம்.. நாமிருவரும் காலம் முழுவதும் இப்படியே இருந்தால் எவ்வளவு நிறைவான சந்தோசமாயிருக்கும் என கண்களால் இருவரும் அணைத்தபடி இருந்ததைக் காட்டி கேள்வி எழுப்பினாள். அவனிடமிருந்து விலகி எழுந்து செல்ல முயன்றவளின் கைகளை சட்டென்று பிடித்து இழுத்தான். “கையை விடுங்களன்” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.

“ஏன்? சொல்லு நான் ஏன் உன் கையைப் பிடிக்கக் கூடாது?” என்று கேள்வி கேட்டவன் ஆசையோடு அவளையை பார்த்தான். அவன் கண்களை எதிர் கொள்ள முடியாமல் வெட்கப் புன்னகை பூக்கத் தலையை குனிந்து கொண்டாள். அவளை நெருக்கமாக இழுததுக் கொண்டவன், அவளது முகத்தை மென்மையாகத் தூக்கி நெற்றியில் இதழ்களை பதித்தான். தன் கைவளைவுக்குள் வைத்திருந்தவனை நிமிர்ந்து அவள் பார்க்க கசிந்திருந்த அவளது விழிகளில் கனிவோடு முத்தம் ஒன்றை வைத்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்