Loading

அத்தியாயம் 15

வாழ்க்கை நாம் நினைப்பது போல சுலபமாக நமக்கு சந்தோசத்தைத் தந்துவிடாது. எதிர்பார்ப்பது போல எல்லாமே நடந்துவிட்டால் கோயில்களையும் கடவுளையும் நாம் மறந்தே விடுவோம்.

 

அதேபோலவே செந்தூரன், நிறைமதியின் காதல் வாழ்வும் அவர்கள் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமாக ஆரம்பிக்கவில்லை. அவளை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, அவள் புது இடத்தில் சங்கடப்படக்கூடும் என்பதால் அவளுடனேயே அன்று முழுவதும் இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தவனை அவனது வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் அழைத்து விட்டது. கடைக்கு வர வேண்டிய சரக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதுபோன்ற சில குழறுபடிகளால் கடையில் இருந்து அழைப்பு வரவும் ரவிவர்மனையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றுவிட்டான். தனது வேலையை நேரத்திற்கு முடித்துவிட்டு வீட்டிற்குப் போவோம், தன்னவளுடன் மிகுதி நேரத்தைச் செலவிடுவோம் என பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தவனைக் கலைத்தது அவனது தொலைபேசியில் வைத்திருந்த அழைப்பிற்கான பாடல். யார் அழைப்பது என எடுத்துப் பார்த்தவன் ஆச்சரியத்தில் விழி விரித்தான். அவன் எதிர்பாராமல் அழைத்திருந்தது கனிந்தா. இவள் இப்போது ஏன் அழைக்கிறாள் என யோசனையுடன் அதனை ஏற்காமல் இருந்தான். அழைப்பொலி நின்றுவிட்டு மீண்டும் ஒலித்தது. விடாமல் அழைப்பதால் என்னவென்று கேட்டு விடுவோம் என நினைத்து அழைப்பை ஏற்று “ஹலோ” என்றான். “செந்தூரன்.. நான்தான்” என மெதுவாக அழைத்தாள் கனிந்தா. அவளது குரலில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தவன்,

“ம்ம்.. சொல்லும்” என்றான்.

“நான் உங்களோட கொஞ்சம் கதைக்கணும். நேரில பார்க்க முடியுமா?” என்று குழைவாகக் கேட்டாள். அவளது குரல் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றியது. அது மனதை உறுத்தியது.

“நோ.. நேரில் பார்க்கிறது கஸ்டம் கனிந்தா. எனக்கு நிறைய வேலையிருக்கு. என்னவென்று போனிலேயே சொல்லும்”

“செந்து, நேரில் தான் உங்களோட கதைக்கணும்”

 

“இப்ப என்னால நிச்சயமாக வர முடியாது. வேலைய விட்டுட்டு வரவே முடியாது” என்றான்.

 

“இல்லை நான் கட்டாயம் உங்களைச் சந்தித்தே ஆகவேண்டும்” என்று தீர்க்கமாகச் சொன்னாள். தொடர்ந்து

“பிளீஸ் செந்தூரன் மிக முக்கியமான விஷயமாய் கதைக்கணும். எப்படியாவது ரைம் தாங்க. இன்னும் 10 நிமிஷத்துல நான் ரவுண் பீச்சுக்கு வந்து உங்களுக்காக வெயிட் பண்றேன். ப்ளீஸ் வந்துடுங்க”

 

“இல்லை நான்..” என்று சொல்ல வந்தவனின் கதையைக் கேட்காமல்,

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வந்துடுங்க. கட்டாயம் வந்துடுவீங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

என்ன இவள் நான் சொல்ல வருவதைக் கூடக் கேட்காமல் கட் பண்ணி விட்டாளே என சலித்துக் கொண்டவன், இப்போ என்ன செய்வது? இவளைப் போய் சந்திக்கத்தான் வேண்டுமா? என்று சிந்தித்தான். பேசாமல் விடுவது தான் நல்லது என்று மனம் ஒரு பக்கம் சொன்னாலும், மிக முக்கியமான விஷயம் கதைக்கணும் கட்டாயம் வாங்க என்று கெஞ்சினாளே, என்னவாக இருக்கும். போய்த் தான் பார்ப்போமே என ஒரு பக்கம் மனம் முனகியது. 

சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறியவன், இறுதியில் சரி போய்த்தான் பார்ப்போமே என புறப்பட்டுக் கடற்கரைக்குச் சென்றான். பொழுதுபோக்கிற்காக உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடம் இந்தத் திருகோணமலை நகரக் கடற்கரை. அது விடுமுறை நாள் அல்லாததால் அதிகமான கூட்டம் அங்கே இல்லை. ஆங்காங்கே ஓரிருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.சிலர் நொறுக்குத்தீனிகளை உண்டபடி கடலை ரசித்துக் கொண்டிருந்தனர். மேலிருந்து படிகள் மூலம் கடற்கரை மணலில் அவன் கால் வைக்கவும், அவனைக் கண்டு கொண்டு கனிந்த கையைத் தூக்கி தான் இருக்கும் இடத்தை காட்டினாள். அவள் அருகே சென்றவன் சற்றே தள்ளி உட்கார்ந்து கடலை ரசித்துப் பார்த்தான். அலைகள் மாலை வேளை என்பதால் கொஞ்சம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அது துறைமுக கடற்கரையாதலால் ஆழ்கடலில் தரித்து நின்ற கப்பல்களும் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுத்துக் கழிக்கும் சிறிய கப்பல்களும் மின்விளக்குகளை ஒளிரவிட்டிருந்ததால் கடல் மிகவும் ரம்மியமாகக் காணப்பட்டது.

 

“தங்க்ஸ் செந்து.. நீங்கள் வராமல் விட்டுடுவீங்களோ என்று பயந்து போயிருந்தேன். என்று அவள் பேசவும், அவள் குரலுக்குத் திரும்பி அவளைப் பார்த்தான்.

 

“ஏதோ முக்கியமான விஷயம் கதைக்கணும் என்று சொன்னாய். சொல்லு.. நான் அவசரமாகப் போக வேண்டும்” என்றான்.

 

அவன் மனதில் எப்படியாவது நேரத்திற்கு வீட்டுக்குப் போவோம். தன் மதியைப் பார்ப்போம் என்று இருந்தது.

 

“என்ன அவசரம். ஆறுதலாகப் போவோம்” என்று மிக நிதானமாகக் கேட்டாள்.

 

உள்ளூர உண்டான எரிச்சலில் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான். அவன் பதில் சொல்லவில்லை எனவும் பேச்சை மாற்ற நினைத்து

“மஜிக் கோன் வாங்கி வரவா” என கேட்டாள்.

“எனக்கு இப்ப ஐஸ்கிரீம் குடிக்கும் எண்ணம் இல்லை. என்ன விஷயம் சொல்லு” என்று கொஞ்சம் அழுத்திக் கேட்டான்.

 

“அது… செந்து.. நீங்க நம்ம மரேஜை நிப்பாட்டச் சொன்னதும், முதல்ல கொஞ்சம் கஷ்டமாய்தான் இருந்திச்சு. நானும் பரவாயில்லை கனடாவுக்கு போயிடலாம் என்று தான் நினைச்சேன். பட் அப்பா வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்ன செய்தாவது கல்யாணத்தை நடத்திடனும் என்று முடிவு எடுத்துட்டார். நான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கிறார் இல்லை. கடைசி வரைக்கும் என்னை இங்கேயே இருக்க வைக்கணும் என்று தான் நினைக்கிறார். அதுதான்..” என்றவள் எதுவும் சொல்லாமல் அவன் முகத்தை அந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் ஆராய்ந்தாள் அவன் முகம் எதையும் வெளிக்காட்டவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தாள். “அதுதான் உங்களோட ஆசைப்படியே நடக்கட்டும் என்று நினைத்தேன்” என்று அவள் சொல்லிவிட்டு அப்படியே நிறுத்தி விட்டாள்.

“அப்படியென்றால்” என்று அவள் கூறியது புரியாமல் அவன் கேள்வியாய் அவளை நோக்கினான். “எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சது. பட், நீங்க கனடா வர மாட்டேங்குறது மட்டும்தானே பிரச்சினையாய் இருந்தது. நாமளே கல்யாணம் பண்ணுவோம். நீங்க கனடா வரத் தேவையேயில்லை. நான் இங்கேயே இருக்கன்” என்று சொல்லிவிட்டு வெட்கப் புன்னகை சிந்தினாள்.

 

அவள் சொன்னதைக் கேட்டவனோ அதிர்ந்து போனான் உடலும் உள்ளமும் உறைந்து போக சற்று நேரம் அசைவற்று இருந்தான்.

 

இவள் என்ன இப்படி வந்து சொல்கிறாள். நான் எனக்கானவளை உடமையாக்கி விட்டேன். என் மனதில் இவள் மீது ஒரு துளி கூட அன்பு எட்டிப் பார்க்கவில்லையே. இதை அவளுக்கு பொறுமையாகச் சொல்லிப் புரிய வைப்போம் என மனதிற்குள் எண்ணியவன், “கனிந்தா இங்கபாரும்.. நமக்கு கல்யாணம் இனி நடக்காது. நான் வேறு ஒருத்தியை” என்று அவன் சொல்ல வருவதைக் காது கொடுத்துக் கேட்காமல்,

“செந்தூரன் உங்களுக்கு என்மீது விருப்பம் இருக்கு என்று எனக்கு நல்லாத் தெரியும். நான் இங்கு இருக்க மாட்டேன் என்று சொன்னதும் தானே கல்யாணத்தை நிப்பாட்டுனீங்க. இப்ப எதுவும் பிரச்சனை இல்லை. நான் இங்கு தான் இருப்பேன். டபுள் சிட்டிசனுக்கு அப்ளை பண்ணுறேன். அப்ப விரும்பினால் கனடா போய் வரலாம் தானே” என படபடவென பேசிக்கொண்டே சென்றாள். “அதைவிட உங்களுக்கு என் மேல லவ் இருக்குன்னு எனக்கு தெரியும். என்னை மறக்க முடியாம நீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க என்றும் எனக்குத் தெரியும். அதுதான் நான் உங்களுக்குத் திரும்ப கிடைச்சா சந்தோஷப்படுவீங்கதானே” என்றாள்.

 

“கனிந்தா உமக்கு விசரா பிடிச்சிட்டு. சுமார் உளறுகிறீர் நான் சொல்வதை முதலில் கேளும்” என்று கோபத்தில் சீறினான் அவன். அவனது கோபம் எதற்காக என்று புரியாமல் அவனைப் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை தன்னை முதல் தடவை அவன் பார்த்ததுமே தன் அழகில் அவன் லயித்துப் போய்த்தான் தன்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொண்டான் என்று எண்ணியிருந்தாள். அதைவிட கனடாவில் வாழ்ந்த தன் தந்தை சேர்த்து வைத்துள்ள கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு தான் மட்டும் என்பதோடு தானும் நன்கு படித்து வேலை செய்து நிறைய காசு சேர்த்து வைத்து இருப்பதால் நல்ல செட்டிலான வாழ்க்கைக்காகவும் தான் அவன் முழுதாய் சம்மதித்திருக்க வேண்டும் என்றுமே எண்ணி இருந்தாள். ஆனாலும் அவனது தந்தை பாசமே தங்களுக்குத் தடையாக இருந்தது என்று சிந்தித்தவள், இப்போது இங்கு இருப்பதற்குத் தான் சம்மதித்ததால் அவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பான், தன்னைக் கட்டி அணைப்பான் என்று எண்ணி இருந்ததால்தான் அவனை நேரில் சந்திக்க ஆசைப்பட்டாள். அப்போதுதான் அவனது சந்தோசத்தையும் நேரில் பார்க்க முடியும். இவன் என்னவென்றால் அவளது எதிர்பார்ப்புக்கு நேர்மாறாகக் கோபப்படுகிறான் என மனதிற்குள் சிணுங்கினாள். 

“என்ன செந்தூரன் நீங்க.. சந்தோஷப்பட வேண்டிய விஷயத்துக்குக் கோவிக்கிறிங்க” என்று சிணுக்கத்துடன் கேட்டாள். அந்த சிணுங்கலும் அவனுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கியது.

 

“கனிந்தா நீ நினைப்பது போல நமக்குக் கல்யாணம் நடக்காது. உங்க அப்பா பார்க்கிற ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கட்டும்”

 

“இல்லை செந்தூரன், எனக்கு உங்களைத்தான் பிடிச்சு இருக்கு. நாம கல்யாணம் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம்” என்று விட்டு அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவன் தோள் மீது தலை சாய்த்து அவன் கையில் தன் கையைக் கோர்த்தாள்.

“ஐ லவ் யூ செந்து” என்று மிக மெல்லிய குரலில் கூறினாள்.

 

அதிர்ந்து போனான் செந்தூரன். அவளை மெல்லத் தள்ளிவிட்டு, கோபமான குரலில் “கனிந்தா.. நான் வேறு ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவளுக்கும் எனக்கும் திங்கள் அன்று கல்யாணம். அவளை நான் என்னுடன் கூட்டி வந்து விட்டேன். இனி அவள் மட்டுமே என் வாழ்வில். நமக்கிடையே எப்போதும் காதல் தோன்றியதே இல்லை. பெரியவர்கள் விருப்பத்திற்காகக் கல்யாணம் செய்ய சம்மதிச்சன். ஆனால், என் மதி மீதான காதல் அடி மனதில் இருந்ததைப் பிறகுதான் உணர்ந்தேன். அதனால் நீர் வீண் கற்பனை பண்ணாமல் உம்முடைய அப்பா, அம்மா விருப்பப்படி கட்டிச் சந்தோஷமாய் இரும் என அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு விருட்டன்று எழுந்து வந்தவன் தன் காரில் ஏறி அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. இப்போதான் மதி வீட்டு பிரச்சனையை முடித்து அவளை தன்கூட கூட்டிட்டு வந்தா அதுக்குள்ள இந்த பிரச்சனையா 🙄🙄