Loading

அத்தியாயம் 11

 

“ரவி, இனி இவங்களுக்கு இங்க எந்த வேலையும் இல்லை. இவங்களோட எந்த பிஸ்னஸும் நமக்குத் தேவையில்லை. உடனேயே இவங்கட கணக்கைப் பார்த்து, ஏதாவது பலன்ஸ் இருந்தால் செக்.. இல்லையில்லை காசாவே குடுத்து செட்டில் பண்ணி அனுப்பிடு. அப்புறம் நீ ஒரு வேலை செய்.. நமக்குத் தேவையான  அங்கர், மலிபன் மா இறக்கிறதுக்கு வேற ஒரு டீலரைப் பார். அதுவும் இன்டைக்குப் பின்னேரத்துக்குள்ள எனக்கு வேற டீலரிட்ட இருந்து கொட்டேஷன் வாங்கித் தந்திடனும். ஏதாவது காரணம் சொல்லிச் சமாளிக்காத” என்று தீர்மானமாகக் கூறினான்.

அவனது குரலும் முகமுமே அவனது கோபத்தின் அளவையும் பிடிவாதத்தையும் காட்டியது.

இதற்கு மேல் அவனிடம் எதைப் பேசினாலும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதைப் புரிந்து கொணட அநத இருவரும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அவனது கடையிலிருந்து வெளியேறினர்.

அவனது குணத்தை நன்கு அறிந்திருந்த ரவிவர்மனும் உடனேயே அவன் சொன்னவற்றைச் செய்ய   விநியோகஸ்தர்களைத் தேடி அவர்களுக்கு அழைப்பெடுத்துப் பேச ஆரம்பித்து விட்டான்.

சும்மாவே இன்று காலையிலிருந்து பெரும் கோபத்துடனும் எரிச்சலுடனும் இருந்தான் செந்தூரன். அவனது கோபம் என்னும் பொறிக்கு எண்ணெய் ஊற்றியது போல இன்று கடையில் நடந்த சம்பவம் அமைந்தது. கடைக்கு மொத்தமாகப் பால்மா இறக்க வந்தவர்கள், தங்களது கணக்குகளில் குளறுபடி செய்திருந்ததோடு, இறக்கிய பொருட்களின் எண்ணிக்கையிலும் தில்லுமுல்லு செய்து மாட்டிக் கொண்டு விட்டார்கள். எனவே இதற்கு மேல் அவர்களிடமிருந்து பொருளைக் கொள்வனவு செய்யக் கூடாது என்று தீர்மானம் எடுத்துவிட்டான்.

அவர்களை அனுப்பிவிட்டு வந்தவனால் தொடர்ந்தும் கடையில் அமர்ந்திருக்க முடியவில்லை. ரவியிடம் சொல்லிவிட்டு நேரே நிறைமதியின் கடைக்கு வந்துவிட்டான். அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவன் சனிக்கிழமை கடையில் நிறைமதியைச் சந்தித்து விட்டு வந்தபின் மாலையில் அவளுக்கு அழைப்பெடுத்தான். அவள் அதற்குப் பதிலளிக்கவில்லை எனவும் புலனத்தில் செய்தியை அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திருந்தான். அவன் காத்திருப்புப் பொய்யானது. அவள் அனுப்பிய செய்தியைப் பார்க்கவேயில்லை. மறுநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தந்தைக்கும் அத்தைக்கும் அவளை அறிமுகப்படுத்தலாம் என எண்ணி சமாதானமானான்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக புலனத்தில் அவளுக்குப் பறக்கும் முத்தங்களை அனுப்பினான். பதில் இல்லை எனவும் யோசனையுடன் அழைப்பெடுத்தான். ஆனால், அவளிடம் இருந்து பதில் இல்லை. மதியம் வரை முயன்று பார்த்தான். அவளை இன்று வீட்டிற்கு அழைத்து வந்து அவள் வாழப்போகும் வீட்டைக் காட்ட வேண்டும். அவள் உறவுகளை அறிமுகப்படுத்தி பேச வைக்க வேண்டும். இன்று முழுவதும் அவளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று என்னென்னவோ ஆசைகள் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்க, அந்த ஆசைகளை நிறைவேற்ற வேண்டிய அவனவளோ அவனது அழைப்பையே ஏற்காமல் அவனை அலைப்புற வைத்தாள். அன்று மட்டும் அவளுக்கு பலதடவை அழைப்பெடுத்தான். அவனது அலைபேசி சிணுங்கிய போதெல்லாம் அவளாய் இருக்குமோ என்று எண்ணி ஆர்வத்துடன் எத்தனை முறை எடுத்துப் பார்த்திருப்பான். ஆனாலும் ஏமாற்றம் மட்டுமே அவனுக்கு மிஞ்சியது. அன்று முழுவதும் அவளது அழைப்பு வரவே இல்லை.  இரவும் அவனுக்கு உறக்கமில்லாமலே கழிந்தது. என்னதான் அவளுக்கு நடந்தது என்று அவனுக்கு புரியவே இல்லை.

இனிமேல் நீயாக அழைத்துப் பேசாமல் நான் பேசவே மாட்டேன் என்று அவள் மீது செல்லக் கோபம் கொண்டான்.

ஆனால், மறுநாள் வந்ததுமே அந்தக் கோபம் அவனை விட்டு தூரச் சென்று விட்டது. அவளை நேரில் காண வேண்டும் என்று  மட்டுமே அவனுக்கு இருந்தது.

அவள் எப்படி இருக்கிறாள், என்னுடன் பேசாமல் அவளால் எப்படி இருக்க முடிகிறது என்று பலவாறு சிந்தித்தபோதுதான் அவனுக்கு நினைவு வந்தது. ஒருவேளை நேற்று அவளது தங்கை கடைக்கு வந்துவிட்டுச் சென்றதால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று மூளை எச்சரிக்கை மணி அடித்தது. என்னவென்று அறிந்து கொள்ளவும் வழி இன்றி தவித்துப் போனான்.

கடைக்கு வந்தவனுக்கு அது பூட்டியிருக்கவும் பிரச்சினைதான் என்பது உறுதியாகிப் போனது. அதை எப்படி அறிந்து கொள்வது என தவித்தான். வருகின்ற கோபத்தில் அவள் வீட்டிற்கே நேரில் போய் நின்றுவிடத்தான் துடித்தான். ஆனாலும் அவள் மனமும் சூழ்நிலையும் அறியாமல் சென்று நிற்க முடியாது என அறிவு தடுத்தது. அவள் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் இருந்த சினம் ஒரு பக்கம் என்றால் அவளுக்கு என்ன நடந்தது என்று அறிய முடியாத தவிப்பு ஒரு பக்கம் அவனை வதைத்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவன் நேரே சென்றது கவிதாவைத் தேடித்தான். அவளிடம் சென்று விடயத்தைச் சொன்னதும் அவள் நிறைமதி வீட்டிற்குச் சென்றாள். அங்கே அவளைக் கண்டதும் கவிதாவே பதறிப் போனாள்.

ஆம், சனிக்கிழமை மாலையில் வீட்டிற்குச் சென்றவளை வரவேற்றது உமையாளின் வசைமொழிகளே. இவளைக் கண்டதும் இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவர் 

பளார் பளார் என இருபக்கக் கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தார். ஏன் என்று காரணம் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்ததும் புரிந்தது. எனவே அந்த அறைகளை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றாள். வலியினால் அவளது கண்களில் கண்ணீர் நிற்காது வழிந்து கொண்டே இருந்தது. 

“இங்க பாரடி, இதுதான் நான் எடுத்திருக்கிற முடிவு. அத எவளுக்காகவும் என்னால மாத்தேலாது. நாளைக்குக் காலையில குகனும் அத்தையும் வருவாங்க. அவங்க எதிரில எதுவும் பேசக்கூடாது. அவங்க என்ன சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டு.. சரியா..?” என்று முடித்துவிட்டார். அவளது அலைபேசியையும் பறித்துச் சென்றுவிட்டார். அவர்கள் ஏன் வருகிறார்கள் என்ன சொல்வார்கள் என்பது தெரிந்த விடயம் தானே. எனவே மௌனமாக அழுவதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அலைபேசி இல்லாததால் அவனது தொடர்பும் இல்லை. இப்போது அவன் அழைப்பெடுப்பானே என்று எண்ணும்போது மனம் பதறியது.

மறுநாள் காலை அவளுக்கு நரகமாக விடிந்தது. காலையிலேயே அவளது மாமாவும் அவர் மனைவி மகனுடன் இன்னும் ஒரு சிலரும் வந்து விட்டனர். அவர்கள் கைகளில் தட்டுக்களில் அடுக்கப்பட்டிருந்த பலகாரங்கள், பழங்கள் என்பவற்றைப் பார்த்த உடனேயே புரிந்து கொள்ள முடிந்தது. இவர்கள் சம்பந்தக் கலப்புச் செய்யவே வந்திருக்கின்றார்கள் என. நிறைமதியின் மனம் கோபத்தில் தகித்தது. எவ்வளவோ சொல்லியும் இந்த அம்மா புரிந்து கொள்ளவில்லயே என்று ஆதங்கமும் எரிச்சலும் உண்டானது. உள்ளே வந்தவர் ஒரு பட்டுச் சேலையை அவள் அருகில் வைத்து விட்டு,

“இந்தச் சாரியை கட்டிக் கொண்டு வா. உனக்கும் குகனுக்கும் இன்றைக்கு நிச்சயம் செய்யுறோம். இந்தத் திங்கள் விட்டு அடுத்த திங்களே நல்ல நாளாம்.. அன்றைக்கே கல்யாணத்தையும் கோயில்ல வச்சு சிம்பிளா செய்யப் போறோம்” என்று யாரோ ஒரு பெண்ணிற்கு சடங்கு செய்வது போல அவளிடம் கூறினார்.

“அம்மா நான்..” என்று அவள் சொல்ல வருவதற்கு முன்னரே ” மூடு.. உன் முடிவை இங்கு யாரும் கேட்கல. நான் சொல்றதைத்தான் நீ செய்யணும்” என்று விட்டு வெளியில் சென்று விட்டார்.

வெளியில் வரவேற்பறையில் எல்லோரும் அமர்ந்து பலகாரம் சாப்பிட்டு கலகலவென்று பேசியபடி இருந்தனர்.

தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தன் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும் என்பது நிறைமதிக்கு புரிந்து விட்டது. 

காலையில் எழுந்து குளித்துவிட்டு அணிந்திருந்த வீட்டு சட்டையுடன் முடியைத் தூக்கி கொண்டை போட்டு விட்டு வெளியே வந்தாள். அதைப் பார்த்ததும் பதறி எழும்பி அவள் அருகே ஓடிவந்த உமையாள் அவளின் இடக்கையைப்பற்றி நகங்களால் திருகிக் கொண்டே,

“ஏனடி, உன்னை உடுப்ப மாத்திட்டு வா என்றால் இப்படி வந்து நிக்கிறாய்” என்று எரிச்சலுடன் மிக மெதுவாகக் கேட்டார்.

“நான் மாமாட்ட கதைக்கணும்”

“தேவையில்லை உள்ளே போ” என்று கத்தினார் உமையாள்.

“இல்லை.. நான் கதைக்கணும்” என்று பிடிவாதமாய் அங்கேயே நின்றாள். பவித்ராவும் அருகே வந்து, 

“அக்கா.. உள்ளுக்க வா..” என்று கையைப் பிடித்து உள்ளே இழுத்தாள். அவள் கையைத் தட்டி விட்டாள்.

தாய் திருகுவது வலித்த போதும், இந்த வலியைப் பார்த்தால் வாழ்க்கை முழுவதும் வலியுடன் வாழ முடியுமா என்று நினைத்தவள் தாயின் கையையும் சற்றே தள்ளிவிட்டு தன் மாமனின் அருகில் சென்றாள்.

“மாமா..” என்று அவள் அழைக்கவும் அவரால் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. குற்றவுணர்ச்சி அவரைத் தலைகுனிய வைத்தது. தான் பார்த்து வளர்ந்த பிள்ளை. இன்று இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கத் தானே காரணமாகி  விட்டோமே என்ற எண்ணம் அவரைத் தடுமாற வைத்தது. இன்றும் மனைவியின் நச்சரிப்பும் கத்தலும் தாங்க முடியாமலேயே புறப்பட்டு வந்திருந்தார். 

“மாமா” என்று மீண்டும் அவள் அழைக்கவும் சற்றே நிமிர்ந்து பார்த்தார். உடனே அவள் அருகில் ஓடிவந்த உமையாள்

“நிறை நீ உள்ள போ” என்று சத்தம் போட்டு கூறினார்.

அவரது குரலுக்கு அவள் மசியவில்லை. “மாமா நான் உங்ககிட்ட தான் கதைக்கணும். எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமே இல்லை. நான் வேற ஒருத்தரை விரும்புறேன். அவரைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்” என்று அனைவருக்கும் முன் பட்டென போட்டு உடைத்தாள்.

உமையாளும் பவித்திராவுமே திகைத்துப் போய் விட்டனர். இவள் எல்லோர் முன்னிலும் இப்படிச் சொல்லி விட்டாளே. அவர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள் என்று தடுமாறிப் போயினர். ஆனால்  குகனோ அவனது தாயாரோ அசரவில்லை. குரலிலும் முகத்திலும் எந்தவித மாறுபாடும் இன்றி சிரித்தபடியே இருந்தனர். அவளிடம் பேசாமல் திரும்பி உமையாளிடம் “மச்சாள்… நீங்க கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்க. வாற திங்கக்கிழமை பிள்ளையார் கோயில்ல வச்சு தாலியக் கட்டுவோம். உங்க சைட்ல ஒரு பத்துபேர் காணும். இந்தாங்க இதுல கல்யாணச் செலவுக்குத் தேவையான காசிருக்கு” என்று அசால்ட்டாகக் கூறி ஒரு கட்டு பணத்தையும் உமையாளிடம் கொடுத்தார்.

“அவள் சின்னப் பிள்ளை தானே தெரியாமல் கதைக்கின்றாள். நான் அவளுடன் கதைக்கின்றேன். நாம கதைச்சபடியே கல்யாணத்தைச் செய்வோம்” என்று சமாளித்து விட்டு பணத்தையும் வாங்கினார் உமையாள்.

அவ்வளவு தானா? நம்பவே முடியவில்லை அவளால். தான் இன்னும் ஒருவரை விரும்புகிறேன் என சொல்லியும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்களே. என்ன மனிதர்கள் இவர்கள். சற்றே நம்பிக்கை வைத்தபடி தன் மாமன் ஏதாவது சொல்லுவார் என்று அவரைப் பார்த்தாள். ஆனால், அவரும் மனைவிக்குப் பயந்து வாய் மூடி இருந்து விட்டார். இவர்களிடம் பேசி பிரயோசனமே இல்லை என்று எண்ணியவள் தனது அறைக்குள் சென்று ஓய்ந்து அமர்ந்துவிட்டாள். அடுத்து என்ன செய்வதென முடிவெடுக்க முடியாமல் மூளை மரத்துவிட்டது.

வந்திருந்தவர்கள் பேசிவிட்டு வெளியேறியதும் உள்ளே சென்ற உமையாள் வெறி பிடித்தவர் போல் நிறைமதியை அடித்து வெளுத்துவிட்டார். கையில் கிடைத்த தடி, வயர் என அனைத்தாலும் விளாசினார்.

அந்தளவு வெறிபிடித்தவர் போல் அடித்து ஓய்ந்தவருக்கு மனம் ஆறவில்லை. மீண்டும் வந்து அவள் கன்னங்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா… வேண்டாம் அம்மா… அக்கா பாவம்” என்று தாயின் கால்களைப் பிடித்து கதறித் துடித்துக் கொண்டிருந்தாள் கவினயா.

அங்கே கிடந்த கட்டிலில் அமர்ந்திருந்து தமக்கை அடிவாங்குவதையும் கதறுவதையும் குரூரமாக ரசித்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. இடையிடையே “போடுங்கள்… இன்னும் போடுங்கள்…” என்று கூறிக் கொண்டிருந்தாள்.

“எப்படி அமுக்குனி மாதிரி இருக்காள் பார்த்திங்களா? செய்றதெல்லாம் செய்து போட்டு நிற்கிறாள். இவளுக்கு இப்போ லவ்வெல்லாம் தேவையா?” என்று தாய்க்கு இன்னும் தூபம் போட்டாள்.

வழமைபோல இரவு குடித்துவிட்டு வந்து வீட்டின் பின்பக்க மூலையில் படுத்திருந்த சங்கரன் கதறல் சத்தத்தில் சற்றே தலையைத் தூக்கிப் பார்த்தார்.

“ச்சே இந்த வீட்டில நிப்மதியாப் படுக்கக்கூட ஏலாதா….. ” என்றவர் இன்னும் சில கேட்கக் காது கூசும் வார்த்தைப் பிரயோகங்களுடன் திரும்பிப் படுத்துவிட்டார். பிள்ளைகளின் கதறல் அவர் காதை எட்டிய அளவுக்கு அவர் மனதை எட்டி அசைக்கவில்லை. 

அப்பொழுதுதான் தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு வந்த அன்பரசன் தமக்கையின் கதறல் கேட்டு அவள் அறைக்குள் ஓடினான். தாய் என்றும் பார்க்காமல் அவரைத் தள்ளி விட்டவன் தமக்கையைத் தாங்கித் தூக்கினான்.

“விடுடா அவளை.. இன்டைக்கு இவளுக்கு போட்டால்தான் என்ர ஆத்திரம் எல்லாம் அடங்கும்” என்றவரை முறைத்துப் பார்த்தான் அன்பரசன். வளர்ந்த ஆண்பிள்ளை எனவும் அவருக்கு சற்றே மனதில் கிலி உண்டானது. அதைவிட இவனை வெளிநாட்டுக்கு அனுப்பி இவன் உழைப்பில்தான் தாங்கள் வாழ வேண்டும் என்ற தங்கள் ஆசைக்காகவும் அவன் முறைப்பை பொருட்படுத்தாவிட்டாலும் அவளைத் திட்டிக் கொண்டே வெளியேறிவிட்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. இந்த உமையாள் பவித்ரா ரெண்டு பேரையும் பார்க்கும்போது செம்ம கோவம் வருது 😡😡😡
      பணத்திற்காக தானே எல்லாத்தையும் பண்றாங்க அவ சம்பாதித்து கொட்ட அதுல சாப்பிட்டு தானே இவங்க திமிரெடுத்து ஆடுகிறார்கள் அவங்கள அடுத்த ஒரு வேலை சாப்பாட்டிற்கே பிச்சி எடுக்குற நடுவுல நடு தெருவில் நிறுத்துங்க