
இறுதி அத்தியாயம்
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாவகாசமாக எழுந்து குளித்து வந்த சஞ்சய், நிரஞ்சனாவைப் பார்க்க வேண்டி அறையை விட்டு வெளியே வர, கீழே அர்ஜூன் கர்ண கொடூரமாக அலறும் சப்தம் கேட்டதில், அலுப்பான பெருமூச்சுடன் கண்கள் மூடித் திறந்தான். தம்பியின் அட்டகாசங்களுக்கு பழகிவிட்டிருந்தாலும், இப்போதெல்லாம் அவனுடன் சந்தனாவும் சேர்ந்து லூட்டி அடிப்பதில் விடுமுறை நாட்களில் தலை வேதனையாகவே இருந்தது இவனுக்கு.
‘எல்லாம் இந்த அம்மா கொடுக்கற செல்லம்!’ என்ற கடுப்புடன் மேலே இருந்தவாறே எட்டிப் பார்த்தான்.
அனு கையில் சட்டை தொங்கவிடும் ‘ஹேங்கரை’ வைத்து அர்ஜூனை அடிக்கிறேன் பேர்வழியென அவன் முதுகில் இங்கும் அங்கும் விளாச, அதனை லாவகமாக தடுத்தபடி குதித்துக் கொண்டிருந்தான் அவன்.
பாஸ்கரன் நொந்து போன பாவனையில் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவனருகே ஆப்பிளைக் கடித்தபடி, “இந்தப் பக்கம் அத்தை… பெடக்ஸ்ல!” என்று அனுவிற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தாள் சந்தனமாரி.
“எம்மா எம்மா! விடும்மா ப்ளீஸ்…”
“அது யாருடா எம்மா? புது கேர்ள் ஃப்ரெண்டா?” என்ற சந்தனா எழப் பார்க்க,
“அப்டி படக்குன்னு எந்திரிக்கக் கூடாது அண்ணி!” என்றவன் படபடத்த போது, அனுவின் அடி சுள்ளென முதுகில் விழுந்தது.
அனைத்தையும் பார்த்தவாறு சஞ்சய் கீழே வர, “ப்ரோ, எல்லாத்துக்கும் போட்டிக்கு வருவியே… இதுலயும் கம்பெனி தரலாம்ல?” என்ற அர்ஜூன் அம்மாவிடமிருந்து துள்ளிக்கொண்டு நகர, இவனிடம் சிறு திகைப்பு!
உண்மையில் அம்மாவையும் தம்பியையும் மேலேயிருந்து பார்த்தபோது இவனுக்கும் மெல்லிசை போல் அந்த உணர்வு தோன்றியிருந்தது. இவன் அம்மாவிடம் அடி வாங்கியதே இல்லை. அவர் தன்னைத் துரத்தி வந்து அடித்தால் எப்படியிருக்கும் என்று சில நொடிகள் கற்பனை செய்துவிட்டு, அவன் எண்ணம் அவனுக்கே சிறு பிள்ளைத்தனமாக, நிரம்ப கேவலமாகத் தெரிந்ததில் புன்சிரிப்புடன் தலையை உலுக்கிக்கொண்டான்.
பின் எப்போதும் போல் இறுக்கமான தோரணையில் கம்பீரமாக இறங்கி வர, அர்ஜூனும் இவனின் அந்தக் கற்பனையை அப்படியே சொல்கிறான்.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அனுவைப் பார்க்க, அவள் பாவமாகச் சொன்னாள். “வசு அக்கா கால் பண்ணிருந்தாங்க சஞ்சு!”
“அக்கா இல்லம்மா, அண்ணி!” என்று அர்ஜூன் திருத்த, அப்பாவும் அம்மாவும் அவனை முறைக்க, சந்தனா வாயில் ஆப்பிளுடன் சத்தமாக சிரித்தாள்.
அர்ஜூன், “பார்த்துடீ! விக்கிக்கப் போகுது.” என்று உள்ளே ஓடி தண்ணீரை எடுத்துவந்து கொடுக்க, ஓர் மகாராணியின் தோரணையில் வாங்கி அருந்தியவள், ‘எப்டி?’ என்ற ரீதியில் கணவனைக் கண்டு ஒற்றைக்கண் சிமிட்டினாள்.
சந்தனாவிற்கு ஐம்பத்து ஐந்து நாட்கள் ஆகிறது என்று நேற்றுதான் மருத்துவரைக் கண்டு உறுதிபடுத்திக் கொண்டு வந்திருந்தனர். செய்தி கேட்டதிலிருந்து ஓர் சிறுவன் தான் வளர்க்கும் நாய்க்குட்டியைப் போல், அர்ஜூன் அவளை மிகுந்த பந்தோபஸ்துடன் கவனித்துக் கொள்கிறான். அவளும் அவனை நன்றாக வேலை வாங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.
“அத்தை என்ன சொன்னாங்க?” கேட்டவாறு அப்பாவின் மறுபுறம் அமர்ந்தான் சஞ்சய்.
“இவன் பாவனாவை லவ் பண்றானாம்! அதை நம்மக்கிட்ட தானே முதல்ல சொல்லிருக்கணும்? முந்திரிக் கொட்டை மாதிரி அவங்க வீட்டுல போய் பொண்ணுக் கொடுங்க’ன்னு பேசிட்டு வந்திருக்கான்.” என்று பல்லைக் கடித்தாள் அனு.
ஆன மட்டும் தம்பியை முறைத்த சஞ்சய், “நான்தான் வெய்ட் பண்ணு! டைம் பார்த்து மாமா கிட்ட பேசறேன்னு சொன்னேன்லடா?” என்று பாய்ந்தான்.
“நீ பேசற லட்சணம் எனக்கு தெரியாதா? நீ சனாவுக்கு வெய்ட் பண்ண மாதிரிலாம் என்னால என் ஆளுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்க முடியாது! அதான் நானே பேசிட்டேன்.” என்றவன் தோள் குலுக்க,
அவன் பிடறியில் ஓர் அடியை வைத்துவிட்டு, “உனக்கு முன்னாடியே தெரியுமா சஞ்சு?” என மூத்த மகனிடம் திரும்பினான் பாஸ்கரன்.
“அவி கல்யாணத்தப்போவே தெரியும் மாமா!” என்ற சந்தனா, கணவனிடம், “எனக்கு ரொம்ப நாளாவே டௌட்! அவங்க லவ்வை எப்டி அத்தான் மோப்பம் பிடிச்சீங்க?” என சுவாரஸ்யமாகக் கதைக் கேட்க ஆயத்தமாக,
“ப்ச்!” என்றொரு ஆட்சேபணையை அவளுக்கு தந்துவிட்டு, “இப்போ அத்தை என்னம்மா சொல்றாங்க?” என அனுவிடம் கேட்டான் இவன்.
“ஏற்கனவே பாவனாவுக்கு அலையன்ஸ் பார்த்துட்டுதானே இருந்தாங்க? இவன் போய் கேட்டதும் பாவனாவும் எல்லார் முன்னாடியும் ஆமாம்’ன்னு சொல்லிருக்கா…”
அர்ஜூன், “பர்ஃபார்ம் பண்ண சொல்லிக் கொடுத்தது யாரு!” எனச் சட்டைக் காலரை உயர்த்தி தன்னைத்தானே மெச்சிக்கொள்ள,
“தெறி அஜூ!” என்று அவனை மேலும் உற்சாகப்படுத்தினாள் சந்தனா.
மற்ற மூவரும் அவர்களைப் பார்வையாலேயே எரிக்க,
அனு தொடர்ந்தாள். “இவனைப் பத்தி தெரிஞ்சதால அந்த அண்ணா ஸ்போர்டிவ்வா தான் எடுத்துக்கிட்டாராம். கம்மிங் ஃப்ரைடே பூ வச்சு, உறுதிபடுத்திக்க வர சொல்றாங்க!”
காரியம் ஆக வேண்டி, முன்பே பாவனாவின் அப்பா கண்ணனுடன் அர்ஜூன் தோழமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவருக்கும் அவன் குணம் பிடித்ததோடல்லாமல், அவனின் தொழில் நேர்த்தியும் வளர்ச்சியும், தொழில்துறை ஆட்களிடம் அவன் காட்டும் முகமும் தெரிந்துதான் இருந்தது. அதனாலேயே திருப்தியுடன் சம்மதம் தெரிவித்திருந்தார்.
“அவங்க பொண்ணுக்கும் விருப்பம்ங்கறதால தப்பிச்சான். இல்லைன்னா நம்மள பத்தி என்ன நினைச்சிருப்பாங்க? நாளைக்கு பிரபு முகத்துல என்னால முழிக்க முடியுமா?” என்ற பாஸ்கரன் இளைய மகனைக் கடுமையாகப் பார்க்க,
“பிடிக்காத பொண்ணு பின்னாடி நான் ஏன்ப்பா போகப் போறேன்?” என்று சுணங்கியது அவன் முகம்.
சந்தனா, “இது ஆக்டிங் மாமா!” என்றதில்,
பக்கென சிரித்தவன் பாஸ்கரனை இடித்துக்கொண்டு அவளருகே வந்து குனிந்து, “குட்டி பேபி, சித்தியைப் பார்க்க போகலாமா?” என்றதில் மற்றவர்களுக்கும் புன்னகை அரும்பியது.
சஞ்சய் எப்போதும் போல் மலைப்புடன், “எப்டிம்மா இவனை வச்சு வளர்த்த?!” என அனுவிடம் கேட்டவன், அர்ஜூனை மிரட்டினான். “பாவனாவை மட்டும் இப்டி அலைக்கழிச்ச… பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்!”
அர்ஜூனைச் சொன்னதில் ரோஷம் பொத்துக்கொண்டு வர, “அவளையும் நாங்க எங்க கேங்ல சேர்த்துப்போம்.” என்ற மனைவியைக் கண்டு, தலையிலடித்துக்கொள்ள மட்டுமே முடிந்தது இவனால்!
**********
வெள்ளிக்கிழமை காலையில் மனைவியை வீடெங்கும் விழிகளால் தேடினான் சஞ்சய். “எங்கேம்மா போனா இந்த மாரியாத்தா?”
மாலையில் பாவானா வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தட்டுக்களில் எதையும் தவறவிட்டு விடக்கூடாதென்ற முனைப்பில், இவனை நிமிர்ந்தும் பாராமல் அலைபேசியில் குறித்துக்கொண்டே பதிலளித்தாள் அனு. “பாட்டி கூப்பிட்டாங்கன்னு போனா! பிரகதி வந்திருக்கா இல்ல? அங்கே பேசிட்டிருப்பாளா இருக்கும்.”
உடனேயே இவன் அங்கே செல்ல, ஒரு கையில் பாடப்புத்தகமும் மறு கையில் கணவனுக்கு காபியுமாக வந்த பிரகதி எதிர்ப்பட்டாள். அவள் ஆசைப்படி அவளின் மேற்படிப்பிற்கு அவினாஷ் ஒத்துழைப்பு தந்ததால் தற்சமயம் முதுகலைப் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கிறாள்.
“ஹே ப்ரூ காஃபி! எங்கேடி உன் ஹீரோயின்?”
“பாட்டி ரூம்ல!” என்றவள், “தெரியுமா அக்னி? அட்லாஸ்ட் பாட்டி அவங்க வைரமாலையை அம்மாவுக்கு கொடுத்திட்டாங்க.” என்று சிரித்தாள்.
“என்ன திடீர்னு?”
“நீயே போய் கேளு!”
இவன் பாட்டி அறையைச் சமீபிக்க, திறந்தே இருந்த கதவு வழி அவர் உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. அபிராமிக்கும் வயது தள்ளாமையின் காரணமாக உடல் உபாதைகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளது. சென்ற வாரம் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, முழு ஓய்வு அவசியம் என்று எச்சரித்துவிட்டு போயிருக்கிறார்.
அலைப்பேசியுடன் வெளியே வந்த நிரஞ்சனா இவனைக் கண்டுவிட்டு, “பாட்டி தூங்கறாங்க அக்னி!” என்றாள்.
“இவ எங்கேம்மா?”
“உங்க ரூம்ல தான் இருக்கா!” என்றவள், அழைப்பில் இருந்த வசுதாவிடம், “ஓகே அண்ணி. நான் அனுகிட்ட சொல்லிடறேன்.” என்றவாறு இவனைக் கண்டுகொள்ளாமல் கடந்து போனாள்.
அங்கே அனுவும் இப்படித்தான் அலைப்பேசிக்குள் தலையை நுழைத்திருந்தாள். ‘தெரிஞ்ச பொண்ணைப் பார்க்கப் போறதுக்கு ரெண்டும் ஓவரா அலப்பறைப் பண்ணுதுங்க!’ என்று இகத்தாளமாக எண்ணமிட்டபடி மாடியேறினான்.
அங்கே சர்வாபரண பூஷிதையாய் இருந்த அவன் மனைவி ஏற்கனவே இருந்த நகையுடன், இன்னும் ஏதோவொரு நகையைக் கழுத்தில் வைத்து அழகு பார்த்தவாறு கண்ணாடி முன் நின்றிருந்தாள். கட்டிலில் திறந்தும் திறக்காமலுமிருந்த இன்னும் சில நகைப்பெட்டிகளைப் பார்த்தவன் கேட்டான். “மாரியாத்தான்னு கூப்பிட்டா நிஜமாவே மாரியாத்தா வேஷம் போடப் போறியா? எதுக்குடி இவ்ளோ ஜூவல்ஸ்?”
“பாட்டிக்கு இப்போல்லாம் அடிக்கடி உடம்புக்கு முடியாததால அவங்க ஜூவல்ஸை எனக்கு, பிரகதிக்கு, அத்தைக்குன்னு பிரிச்சு கொடுத்திட்டாங்க.”
“ஓ! அதான் வைரமாலை அம்மாவுக்கு போயிடுச்சாமா?”
“ஆமா! இன்னிக்கு ஈவ்னிங் ஃபங்ஷனுக்கு இது எல்லாத்தையும் போட்டுக்கணும்ன்னு அபி டார்லிங் ஆர்டர்! அதுக்கு எங்கே நான் தாலியையும் கழட்டி வச்சிட்டு வெறும் கழுத்தோட வந்து நின்னுடுவேனோன்னு பயம்!” என்று தெற்றுப்பல்லைக் காட்டியவளை,
பின்னோடு அணைத்துக்கொண்டு காதோரத்தை உதடுகளால் ஸ்பரிசித்தவன், “டெய்லி நைட் கழட்டிதான் வைக்கறேன்னு சொல்லேன்.” எனக் கிசுகிசுக்க,
கையிலிருந்த நகையைக் கீழே வைத்துவிட்டு கழுத்தை வளைத்து அவனைத் திரும்பிப் பார்த்தவள், “நீ சொல்லி கேட்காம இருப்பேனா சஞ்சுத்தான்? இப்போவே போய் சொல்லிட்டு வர்றேன்.” என்று அவனிடமிருந்து விடுபட்டு வெளியே வர,
‘ஷ்ஷ்! இவளைப் பத்தி தெரிஞ்சும் பட்டப்பகல்ல ரொமான்ஸ் பண்ணுவியாடா நீ?’ என்று நெற்றியில் அறைந்துக்கொண்டு அவள் பின்னே ஓட,
வெளியே, “இவ்ளோ வேகமா நடக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல? அப்டி என்ன அவசரம்?” என்று விழிகளை உருட்டிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.
சந்தனாவிற்கு அனுவிடம் சலுகைகள் உண்டு என்பதால், நிரஞ்சனா சிறிது கெடுபிடியாய் நடந்துகொள்வதுண்டு. இல்லையெனில் அந்தக் குறும்புக்கார மருமகளின் வால் நீண்டுவிடாதா?
“அவசரம் ஒண்ணுமில்லை அத்தை. பாட்டிகிட்ட நைட் கழு…” என்றவளின் வாயைப் பின்னே இருந்து பட்டென மூடியிருந்தான் அக்னிஸ்வரூபன்.
ஏதோ இளஞ்சோடிகளின் பேச்சு என்று கணித்த நிரஞ்சனா முயன்று மாமியார் மிடுக்கை விடாமல், “விளையாடிட்டு இருக்காம கீழே வந்து ஈவ்னிங் கொண்டு போக வேண்டிய சாமானை எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணு!” என முறைத்துவிட்டு போக,
இவன் மனைவியை மீண்டும் உள்ளே இழுத்துக்கொண்டு வந்தான். “இந்த வாய்க்கு கொழுப்பு கூடிப் போச்சுடீ!” என்ற அவனிதழ்கள் அவளிடம் கோபமாய் மோகமொழி பேசியது.
********
மாலையில் அனைவரும் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க, அபிராமியும் காமாட்சியும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அபிராமி கொடுத்த நகைகளில் பழமையான மற்றும் ஆலய வடிவமைப்பு (antique temple design) கொண்ட கனமான ஆரம் ஒன்றும் அதற்குரிய பெரிய காதணியும் அணிந்து, சாட்சாத் லட்சுமி தேவியே பிரத்யட்சமாகி வந்ததைப் போல் பூ அலங்காரத்துடன் வந்த சந்தனா இரு பாட்டிகளிடமும் காட்டி, திருஷ்டி வழித்தவர்களிடம் ஆசிப் பெற்று பூவாய் மலர்ந்து புன்னகைத்தவாறே அவர்களருகே அமர்ந்தாள்.
அவளின் நகை ஒவ்வாமையை அறிந்திருந்த காமாட்சி அபிராமியிடம் சொன்னார். “பரவாயில்லை எங்க சந்தனம் நீங்க சொல்லவும் கேட்குது. அந்தக் காலத்துல அனு நாங்க சொல்ற எதையும் கேட்கவேமாட்டா. தான் பிடிச்ச முயலுக்கு மூணே…” எனும் முன்,
“எங்கம்மா பிடிச்ச முயலுக்கு காலே கிடையாது.” என வேகத்துடன் அங்கே வந்து நின்றான் சஞ்சய்.
அனுவும் நிரஞ்சனாவும் கொடுத்த தட்டுக்களைப் பணியாளர்களுடன் சேர்ந்து காரில் அடுக்கி வைத்துவிட்டு, மனைவியைப் பார்வையிட்டவாறே அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.
“அக்னி!” என்று அபிராமி அதட்ட,
“சித்திப்பாட்டி கொஞ்சம் உன் வாய்க்கு அஃதெஸிவ் போடு!” என்ற சந்தனா, “சஞ்சுத்தான் ப்ளீஸ்…” என அவனை உள்ளறைக்கு இழுத்து வந்தாள்.
“என் அம்மாவை எதுவும் சொல்லாம இருக்கறதுன்னா இங்கே இருக்கலாம். இல்லைன்னா திரும்ப சென்னைக்கே போகச் சொல்லு.” என்று வார்த்தைகளைக் கடித்தெடுத்தான்.
“அக்னி! பாட்டி பாவம்… இப்போல்லாம் அத்தையை விட நீங்க தான் ரொம்ப பயமுறுத்தறீங்க!”
அன்று தாத்தாவைச் சித்ரவதை செய்து கொன்றிருப்பேன் என்று சொன்னபோதே, அவன் அவளுக்குள் கிலியைப் பரப்பியிருந்தான். அப்போதே அவன் அனுவின் மேல் அவளை விடவும் பல மடங்கு பாசம் வைத்திருக்கிறானென புரிந்தது. அதே அளவு பாசம் நிரஞ்சனாவின் மேலும் இருக்கிறது. அதனால்தான் அவன் அவளை மீறி இடைப்பட்ட காலங்களில் அனுவைக் காண வரவில்லை என்பதும் புரிந்தே இருந்தது.
ஆனால் அனுவிடம் இன்னும் ஏதோவொரு ஆதங்க உணர்வில் சிக்கித் தவிக்கின்றான். என்ன அது?
“என்ன பயமுறுத்தறாங்க? இவங்க எல்லாரும் அன்னிக்கு கொஞ்சம் நிதானிச்சு பேசியிருந்தா… நான் எங்கம்மா வயித்துல பிறந்திருப்பேன். அம்மாவும் இன்னிக்கு வரை தான் செஞ்ச தப்பை சுமந்துக்கிட்டு தவிச்சிட்டிருக்கமாட்டாங்க!” என்று பட்டென்று தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டான்.
இதைத்தான் சிந்தித்துப் பேசவேண்டும் என்கிறார்களோ! சில பிரகஸ்பதிகளின் சுடு சொற்கள் எதிராளியின் பலவீனத்தைத் தாக்கி அவர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்வதுடன், அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சேர்ந்தவர்களையும் பல பல இன்னல்களை அனுபவிக்கச் செய்துவிடுகிறது. ஆனால் சுடு சொற்களைக் கொட்டிவிட்டு போனவர்களுக்கு அவர்களின் குற்றம் மட்டும்தான் பிரதானமாகத் தெரியும். தங்களின் வார்த்தைகளோ அவர்களின் வலியுணர்வுகளோ எப்படி புரியும்? தவறிழைத்தவர்களுக்கு வரும் குற்றவுணர்வு அது வாழ்நாள் தண்டனை!
அனு மகனின் போதனையில் தன் தண்டனையைக் கடக்க கற்றிருக்கிறாள்; மறக்க கற்கவில்லை!
சஞ்சுவிற்கு தன் ஆதங்கத்தைக் கொட்டும் வழிதெரியாமலும் இத்தனை வருடங்களாகப் பூஜித்து வந்த அன்பைச் சிறுக சிறுக வெளிப்படுத்தும் பொறுமையற்றும், இந்த முப்பத்தோரு வயதிலும் தன் தம்பியிடம் பொறாமையைப் பகிர்ந்து கொள்கிறான்.
“எனக்கு புரியுது ஸ்வரூப். ஆனா பாட்டி சும்மா ஏதாவது பேசுமே தவிர நல்லவங்க! அத்தை தனியா இருந்த சமயத்துல கம்பானியனா இருந்தது சித்தி பாட்டிதான்! அவங்க டாக்ஸிக்கா இருந்திருந்தா பாஸ்மாமா அத்தை கூட இருக்க அனுமதிச்சிருக்க மாட்டாங்க.”
இவனுக்குமே அது புரிந்தது. பிடிக்கவில்லை என்றாலும் இவனுக்கு சோறூட்டி, இன்னபிற சிசுருஷைகள் செய்து எட்டு வயது வரை இவனை வளர்த்தவரல்லவா? இருந்தும் கோபத்துடனே அவளிடமிருந்து கையை வெடுக்கென உருவிக்கொண்டு போனான்.
அவன் ஆதங்கத்தைத் தீர்த்துவிட இயலாத கையாலாகாத்தனத்துடன் கணவன் போன வழி பார்த்து நின்றவள், தன் அத்தைக்கும் அத்தானுக்கும் துயர சாயலற்ற ஓர் ஜீவிதத்தைத் தந்து விடும்படி பரம்பொருளை வேண்டிக்கொண்டு வெளியே வர,
காமாட்சி, “என்னடி சொன்ன அவன்கிட்ட? ‘ஸாரி பாட்டி’ன்னு சொல்லிட்டு போறான்.” என்றவர், அபிராமியிடம் திரும்பி, “நான் சொல்லல? எங்க சந்தனம் சாமர்த்தியசாலி!” என்றதில், இவளுக்கு புன்னகை அரும்பியது.
*******
நான்கு மாதங்களுக்குப் பிறகு,
அந்த பிரம்மாண்ட திருமண மஹாலில் அபிராமியும் காமாட்சியும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, நிரஞ்சனா வரும் உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள். பிரபஞ்சனும் பாஸ்கரனும் ஆட்களின் வேலைகளை மேற்பார்வைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
ஒரு இளைஞன் அனுவிடம் சொல்லி கொண்டிருந்தான். “நம்ம ஷாட் ஃப்லிம் பயங்கர ரீச் ஆன்ட்டி! நிறைய வ்யூஸ் போயிருக்குது. நீங்க கல்யாண வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. அடுத்த ப்ராஜெக்ட் ரெடியா இருக்குது.”
“தாங்க்ஸ் ஜீவி! இருந்து சாப்பிட்டு போ!” என்று புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள்.
பாவனா ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பட்டதாரி. அவளின் நண்பன்தான் இந்த ஜீவிதன். அம்மாவின் ஓவிய திறமையை வீட்டிற்குள் வைத்து வீணாக்க விரும்பாத சஞ்சய், பாவனாவின் வேலைகளில் அம்மா ஏதேனும் உதவ முடியுமா எனக் கேட்டிருக்க, அவள்தான் தன் நண்பன் அவனுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யும் அனிமேஷன் குறும்படங்களுக்காக, அவனின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் குறைந்த சம்பளத்தில் ஒரு ஓவியக் கலைஞரைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தாள். கார்ட்டூன் பாத்திரங்கள் போலல்லாமலும், ஒரே போலிருக்கும் ‘ஏஐ’ பாத்திரங்கள் போலல்லாமலும் கருவிற்கேற்றாற் போல் உயிரோட்டமான மனிதர்களையும் நிழலுருவங்களையும், வரைந்து கொடுத்த அனுவின் ஓவியங்கள் வெற்றிப்படியில் ஏறி வரும் ஜீவிதனுக்கு பேருதவியாக இருந்தது. அனுவிற்கும் இந்த வேலைகளிலேயே சிந்தை செல்ல, அவளின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது.
தன் ஆறு மாத வயிற்றுடன் பாவனாவின் அக்கா மகனைத் தூக்கிக்கொண்டு புகைப்படத்திற்கு அழகு காண்பித்துக் கொண்டிருந்தாள் சந்தனா.
“சனா, வெய்ட் தூக்கக் கூடாதுன்னு தெரியாது? ஒழுங்கா ஒரு இடத்துல உட்காரப் போறியா இல்லையா?” என்ற அதட்டல் குரலில் முன்னே இருந்த அனைவரும் மணமேடையைப் பார்க்க, அங்கே பாவனாவின் அருகில் அமர்ந்து பட்டு வேட்டி, சட்டையில் மாலையும் கழுத்துமாக இருந்த அர்ஜூன் சந்தனாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஐயர் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு, அவனுக்கும் மேல் அவனை முறைத்தார். அவரும் எவ்வளவு நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்! ஒன்று அருகேயிருக்கும் பாவனாவைக் கொஞ்சுகிறான். இல்லையெனில் சந்தனாவைக் கண்காணித்து அதட்டுகிறான். தன்னிடம் மந்திரத்திற்கான நேரம் (duration) எவ்வளவு, தாலியை என்னிடம் தரும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா எனக் கேள்விகளாய்க் கேட்டு கடுப்படிக்கிறான்!
அது வாய்தானா? இல்லை, நிற்காமல் இயங்கும் வைஃபை நெட்வொர்க்கா?
“அவன் தாலி கட்டுற வரை சும்மா இரேண்டி!” என மனைவியை நொந்துகொண்ட சஞ்சய், அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, அவளைப் பிடித்து அபிராமியின் அருகே அமர வைத்தான். “இவ எங்கேயும் எழுந்து போகாம பார்த்துக்கோங்க பாட்டி!”
அத்துடன் நில்லாமல், அனுவைத் தரதரவென இழுத்துப் போய் அர்ஜூன் அருகே நிற்க வைத்து, “அவனை வாட்ச் பண்றதுதான் உன் வேலை! வாயைத் திறந்தான்… அவ்ளோதான்!” என்று எச்சரித்துவிட்டு நகர்ந்தான்.
அனு தன் இளைய மகனைப் பார்த்தாள். குழந்தைகள் நம் வாழ்வின் வரங்கள். இவளுக்கு கிடைத்த இரு வரங்களில் ஒன்று பறிக்கப்பட்டிருந்த நேரங்களில் இன்னொரு வரம் இவளை ஆகர்ஷித்திருந்தது.
அவன் இவள் வயிற்றுக்குள் இருக்கும்போதே ஒரு நிமிடமும் சும்மா இருக்கமாட்டான். மருத்துவமனையில் பரிசோதிக்கப் போனால் ஒவ்வொரு முறையும் ஸ்கேன் செய்யும் மருத்துவரும் செவிலியர்களும் சிரிப்பார்கள்.
“உங்க பேபி செம ஆக்டிவ்வா இருக்குது.”
“வெளியே வந்து உங்களுக்கு நிறைய வேலை வைக்கும் பாருங்க!” என்பார்கள்.
அவர்கள் சொன்னது எத்தனை நிஜம்! அப்போதிருந்து இதோ இப்போது அவன் திருமணத்தில் தாலி கட்டும்போது கூட இவளுக்கு காவல் காக்கும் வேலை வைக்கின்றானே! பள்ளியில் படித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும், ‘என்னால் இவனைச் சமாளிக்க முடியவில்லை!’ என்றலறிய ஆசிரியையைகளை இப்போதும் இவளுக்கு நினைவிருக்கிறது.
அனு இவற்றையெல்லாம் யாரிடமும் பிரஸ்தாபித்துக் கொண்டதில்லை. அவன் வயிற்றில் இருந்தபோது ஏற்பட்ட உடல் உபாதைகள், அலுப்புகள், அவன் அசைவில் மகிழ்ந்த கணங்கள் குறித்து பேசியதில்லை. பின்னரும் அர்ஜூனின் சேட்டைகளைச் சொல்லி சுகமாய் அலுத்துக் கொண்டதில்லை. இவையெல்லாம் எந்த வயதிலும் ஒரு தாய்க்கு உண்டான பெருமிதங்களல்லவா?
அவள் இவற்றையெல்லாம் தனக்குள்ளேயே தான் வைத்துக்கொண்டாள். பாஸ்கரனிடம் கூட சொல்வதில்லை.
தற்போது மசக்கையில் இருக்கும் சந்தனா தன் உடல் உபாதைகளைப் பகிரும்போது கூட ஓர் வழிகாட்டியாய் மட்டும் இருந்து கொள்கிறாள். ‘எனக்கும் இப்படி, அப்படி இருந்தது’ என்று ஒரு சொல்லும் அவளிடமிருந்து வந்துவிடாது!
எல்லாம் சஞ்சுவின் பொருட்டு! அந்த விடயத்தில் கூட அவன் மனம் வாடிப் போவதை அவள் விரும்பவில்லை.
பாவனாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டு தன்னைப் பார்த்து கண்சிமிட்டும் மகனைக் கண்டு இவளுக்கு இதழ்கள் புன்னகைக்க, கண்கள் பனித்தது. குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பாவனாவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அந்த நேச கணங்களைக் காலத்துக்கும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள புகைப்படக்காரரின் கருவிகள் அழகாய்ப் படம் பிடித்துக்கொண்டிருந்தன.
“அங்கே புகையுது பாரும்மா!” என்ற அர்ஜூன் தன் அண்ணனைக் கண்காட்ட, அனு திரும்பிப் பார்த்தாள்.
சாதாரணம் போலிருந்தாலும் ஏறி இறங்கும் புருவங்களில், ‘நானு?’ என்ற கேள்வியும் பொறாமையும் வெளிப்பட்டது தாய் மனதிற்கு புரிந்தது.
அவன் கீழே அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து, “ஏய் மாரியாத்தா எந்திரிச்சு வா!” என,
“இப்போ மட்டும் நான் எழுந்து கஷ்டப்பட்டு அந்த அஞ்சு படியை ஏறலாமா?” என்று அபிராமியிடம் நியாயம் கேட்டாள் அவள்.
“வாய் பேசாம வாடி!” என்று கீழே இறங்கி வந்தவன் அவளை எழுப்பி படக்கென்று கைகளில் அள்ளிக்கொண்டான்.
பார்த்திருந்த அத்தனை பேருக்கும் பதற்றம்!
“பார்த்து! பார்த்து!” என்று பதறிய அர்ஜூன், அனுவின் அருகே நின்றிருந்த நிரஞ்சனாவிடம், “என்னன்னு கேளுங்கம்மா! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா என்ன பண்றது?” என ஏற்ற இறக்கத்துடன் கேட்டு அவளை ஏற்றிவிட, அது சிறப்பாக வேலை செய்தது.
“பிரக்னென்ட்டா இருக்கறவளை இப்டித்தான் வெடுக்குன்னு தூக்கறதா?” என்று மகனின் முதுகில் ஒரு அடியை வைத்த நிரஞ்சனா, அனுவிற்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள். “சீமந்தம் முடிஞ்சு அவ அம்மா வீட்டுக்கு போற வரைக்கும் சனா என் கூட இருக்கட்டும் அனு. இவன் முரட்டுத்தனத்தை அவ எப்டி தாங்குவா?”
தன் கூர்மையான செவிப்புலனால் அருகே இருந்து கேட்டுவிட்டவன் புசுபுசுவென எழுந்த கோபத்தில், “தொலைச்சு கட்டிடுவேன். இந்த வயசுல ஏன்மா வில்லி வேலைப் பார்க்கற நீ?” எகிற,
“நான் கூட்டிட்டு போகத் தான் போறேன்.” என்றவள், அருந்ததி நட்சத்திரம் பார்க்க சென்ற மணமக்களின் பின்னால் சந்தனாவையும் இழுத்துக்கொண்டு போக, இவன் அனுவை முறைத்தான்.
“நான் சொல்லிப் பார்க்கறேன் சஞ்சு.”
அப்போதும் அவன் முறுக்கிக்கொண்டு நிற்க, “சனா உன்னை விட்டு இருக்கமாட்டா! அதை விடவும் அவளையும் பாட்டியையும் ஒரே வீட்டுல வச்சு ரஞ்சியால சமாளிக்க முடியாது.” என்றவள், அவனை இவள் உயரத்திற்கு குனியச் செய்து நெற்றியில் முத்தமிட்டு, சற்றுமுன் அவனுள் எழுந்த பொறாமையை நேர் செய்தாள்.
அந்த சமாதான அன்பில் மனதினைப் புத்துணர்ச்சி நிறைக்க, அம்மாவுடன் நின்று சுயமிகள் எடுத்துத் தள்ளினான், அனுராதா தன் இருதய அறைகளில் சுமந்து கொண்டிருக்கும் சஞ்சய் பாஸ்கர்!
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா…
🦋நிறைந்தது🦋
தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த நட்புக்களுக்கு ஸ்ரீயின் மனம் நிறைந்த நன்றிகள்🍃🌷 டாட்டா ஃப்ரெண்ட்ஸ் 🌈🎈
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
38
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Very nice ☺️
Thank u 🌈🫧
அம்மாவின் கைகளால் செல்ல அடிகளை வாங்கி சேர்த்துக்கொள்ளும் ஆசை சஞ்சுவிடம்.
“சிறுவன் வளர்க்கும் நாய்க்குட்டிக்கான பந்தோபஸ்து” 😍😍அச்சோ எவ்ளோ அழகு.✨
சனாவின் மீதான அர்ஜுனின் அக்கறை அத்தகையதே.
“எங்க அம்மா பிடிச்ச முயலுக்கு காலே இல்லை”. 🌟
அவ்வப்போதான அவன் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
தாய்மைக்கே உண்டான பெருமிதங்களை மகிழ்வாய் பகிர அவளுள் எழும் தயக்கம் அவளது குற்ற உணர்வின் பலன் தானே.
“அனு தண்டனையை கடக்கிறாள் மறக்கவில்லை” 👌🏼
ஒருவனுக்கு கருவறையை அளிக்காத குற்றத்திற்கு அதில் வசிக்கும் வாய்ப்பை பெற்ற அர்ஜுனிற்கும் சேர்த்தே தண்டனை வழங்கும் படி ஆகிற்று.
சஞ்சுவின் தங்க அம்மா 💛
உங்களின் ஒவ்வொரு கருத்தும் வார்த்தைகளும் மனதை வருடியது🪶🌷 ஆரம்பம் முதல் நிறைவு வரை உடன் வந்தமைக்கு மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 💗🎈
நிறைவு.. வாழ்க்கை என்பது அவரவர் பக்க நியாயம் தான். அனுவோட பக்க நியாயத்தை அழகா சொல்லியிருக்கீங்க. தொடங்கும்போது அக்னி அனுவோட தான் தொடங்குனீங்க. முடிக்கும் போதும் அவங்க ரெண்டு பேரோட முடிச்சிருக்கீங்க.
ஆரம்பித்த விதம், முடித்த விதம்னு நிறைய கவனிச்சிருக்கீங்க🫶✨ உங்களின் ஒவ்வொரு கருத்தும் செம பூஸ்ட் அப்பா இருந்தது🦋🌷 ஆரம்பம் முதல் நிறைவு வரை உடன் வந்தமைக்கு மிக்க நன்றி சிஸ் 🌿🌼
வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நபர்களுக்கு இடையே நிகழும் நிகழ்வுகளையும் அவர்களது உணர்வுகளையும் அழகாய் விவரித்து, இரண்டும் இணையும் விதத்தை நெகிழ்வாய் பரிசளித்து, அதன் பின்னான அவர்களது பயணத்தை உணர்வுபூர்வமாக ரசிக்கும் வகையில் அளித்திருக்கிறீர்கள்.
மிகவும் அழுத்தமான கதைக்கரு. ஆனால் அவ்வழுத்தத்தை கூட அழகிய வார்த்தைகளின் கோர்வைதனில் வருடி மனதை மெல்லியதாய் அசைக்க செய்வதாய் எழுத்துக்கள்.
கதையின் கருவை கையாண்ட விதத்தினில் அதன் தாக்கம் மனதினில் அழுத்தமாக இல்லாமல் ஆழமாக பதிவதாய்.
வாய்வழி கதையாக கூற நேரும் சமயம் அழுத்தமான ஒன்றாக இருப்பது, உங்களது உவமைகள் மற்றும் உரையாடலின் நேர்த்தியினால் மட்டுமே இதம் தரும் தென்றலாய் வருடி செல்கின்றது.
மகிழம்பூ மரத்தடி சந்தன தென்றலாய் மனதை இதமாய் மோதி ஷாரா பெண், தெற்றுப்பல்காரி, ரட்சிக்கும் தேவதை, சூப்பர்மேன், சந்தனத்திற்கு உகந்தவன், மை பாய், உருளைக்கிழங்கின் பக்குவம், மாரியாத்தா, சஞ்சுத்தான், பாவனைகளின் சொந்தக்காரி என தொடர்ந்து தங்க அம்மா என்று சந்தன மனம் வீசி சென்றது. 🌟
வார்த்தை ஜாலம் மற்றும் அன்பின் ஜாலம் நிறைந்த பாஸ்கர் ❤️ எனக்கு மிக பிடித்தமான கதாபாத்திரம்.
யாரையும் எதிலும் கட்டாயப்படுத்தாமல் அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தும் பாங்கு.
“”என் சத்திய வார்த்தையை நம்பி மனம் புரிந்தவள்”, “இறுக்கி பிடிச்ச கைகள்ல பூரண அன்பை எழுதியிருக்கீங்கபா”.
சிறிதே தலை காட்டினாலும் பாஸ்கரின் மூன்றாவது புத்திரன் அஜய் மற்றும் சனாவிற்காகவே படைக்கப்பட்ட அருண் ஆகியோர் மனம் கவர்ந்தனர். ✨
கதையின் நுட்பமான கையாடல், வார்த்தைகளின் அழகிய கோர்வை, உரையாடல் மற்றும் உவமைகளின் வடிவமைப்பு என நான் ரசித்த அனைத்தையும் எழுதினால் அதனையே ஒரு புத்தகமாக வெளியிடலாம். 🫣 அதனால் சிலவற்றை மட்டும் காட்சிப்படுத்துகின்றேன்.
“அபார அன்பின் தீக்கங்குகள்”
“நெம்பி தள்ளும் நேசக்குழல் கொண்டு உறிஞ்சுகின்றன”
“வரம் தரும் இன்பசாபமாய்”
“முகவரி இழந்தனர் முகம் இழக்கவில்லை”
“நடுக்கமேறிய நாணம்”
“சின்னவள் சுற்றும் பூச்சரத்தின் வாசனை”
“சிக்கலான உணர்விழைகள்”
“வரங்களின் கதவுகள் என் பக்கம் இல்லை”
“விழிகளின் வடிவம் வாய்மை பேசும்”
மகிழம்பூ மரத்தடி சாரல் குளுமையில் நனைந்து மழைக்குருவி சிறகுலுக்கி சென்றது போல் வாசிப்பவர் மனதையும் மெல்லிதமாய் குலுக்கி சென்றது. 🌻
அற்புதமான புதினம் 💛
விரைவில் புத்தகமாக பிரசவிக்க வாழ்த்துகள் 👏🏼
கதைக்கு டீஸர் மாதிரி இருக்குது💥💫 பாஸ்கர்க்கான முதல் ரசிகையைப் பார்க்கிறேன்🪽🩷என்னோட வார்த்தைகள் அத்தனையும் உங்க விமர்சனத்தில் நிரம்ப அழகாகி தெரிகிறது 🍃🌷 மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 💝🎈