Loading

அத்தியாயம் 42

காரிருளும் காற்றிலேறியிருந்த குளிருமாய் பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் விர்ரென பறந்து கொண்டிருந்தது அந்த மகிழுந்து. சந்தனாவின் ஒவ்வாமையின் பொருட்டு ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஓட்டுநர் இருக்கையிலிருந்த பிரபஞ்சனின் அருகே நிரஞ்சனா அமர்ந்திருந்தாள். எனக்குத் தெரிந்தது மௌனம்தான் என்பதாக மகிழுந்து மனிதர்களின் அமைதியால் நிரம்பியிருந்தது.

பின்னிருக்கையில் அக்னிஸ்வரூபன் கண்மூடி பக்கவாட்டில் தலைசாய்த்திருக்க, அவனருகே அமர்ந்திருந்த சந்தனா அவன் விரல்களோடு விரல் கோர்த்து அழுத்தினாள்.

விழி திறந்து அவளைப் பார்த்தவனின் கண்கள் சிவந்திருந்தன. “ஐ’ம் ஓகே!” என்றான்.

அவன் புஜத்தில் கன்னம் சாய்த்துக் கொண்டாள். அவளுக்கு வசதியாக சரிந்தமர்ந்து தோள் கொடுத்தவன், முகம் மோதிய குளிர்காற்றை வாங்கிக்கொண்டு இருளிடம் விழி மொழி பேசினான்.

இருவருக்கும் திருமணமாகி சரியாக ஒரு மாதம் ஆகியிருந்தது. தேனிலவுக்கென்று எங்கும் செல்வதில் சந்தனா ஆர்வம் காட்டவில்லை. அவள் அவளின் அனு அத்தையின் நலனைக் கருதி, தன்னை எங்கும் அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. வருடத்தில் கால்வாசி நாட்களை வெளிநாட்டில் கழிக்கும் அவனுக்கும் அதில் ஆர்வமில்லை.

ஆக முந்தாநாள் காலையில் செய்தி கேள்விப்பட்டதும் உடனேயே பெங்களூரில் இருந்து புறப்பட்டு வர முடிந்தது. பிரபஞ்சன் தம்பதியருடன் பாஸ்கரன் தம்பதியரை அனுப்பிவிட்டு, இவன் சந்தனா, அர்ஜூனை அழைத்து வந்தான்.

இவனுக்கு பெரிதாக எந்த உணர்வும் தோன்றவில்லை. அலட்டிக் கொள்ளவுமில்லை. ஆனால் விடயத்தைக் கேட்டதிலிருந்து சந்தனா அழுதுகொண்டே இருந்தாள். அர்ஜூன் அழவில்லை என்றாலும் யாருடனும் பேசாமல் இறுகிப் போய் இருந்தான். பெங்களூரில் இருந்து சென்னை வரை அவளையும் அவனையும் தேற்றுவதே இவனுக்கு பெரிய வேலையாக இருந்ததால் அப்போது இவன் வேறு எதையும் சிந்திக்கவுமில்லை.

அர்ஜூன் சென்ற வாரம்தான் பெங்களூர்வாசியாகி இருந்தான். சென்ற வாரம் பார்த்து, பேசி, உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்திருக்க, இந்த வாரம் இவன் சொன்ன அந்த வார்த்தைகளெல்லாம் காற்றுடன் கலந்துவிட்டனவாம்! இவனைக் கருவிலிருந்தே நேசித்த ஒரு ஜீவன்; வாழ்வின் அந்தி வரையிலும் இவன் பெயரையே உச்சரித்த ஒரு ஜீவன் இன்று தன் ஜீவநிலையை நிவர்த்தி செய்து கொண்டதாம்! இதுவரை அனுபவித்திராத பெரும் கனத்தை நெஞ்சின் நடுவே உணர்ந்தான் அர்ஜூன்.

இரு நாட்களுக்கு முன்பு கலியபெருமாள் இறைவனடி சேர்ந்திருந்தார். இவர்கள் பெங்களூரில் இருந்து செல்லும்போது மற்ற இருவரையும் கவனித்துக் கொண்ட சஞ்சய்க்கு இப்போது ஊர் திரும்பும்போது மனநிலை சற்று கடினமாகவே இருக்கிறது.

ஒருவரைப் பற்றி இதுநாள் வரையில் இருந்த நினைவுகளெல்லாம், அவரின் மறைவுக்குப் பிறகுதான் அதிகளவில் கிளறப்பட்டு, மனக்கண்ணில் ‘ஸ்லைட் ஷோ’ போல ஊர்வலம் போகும். இவனுக்கும் அப்படித்தான் மழைக்கால நிசி நேரப் பூச்சிகளைப் போல் அவரின் நினைவுகளே அதிகமாக தலைக்குள் மிதக்கின்றன.

கலியபெருமாள் தன் அந்திமத்தை முன்கூட்டியே உணர்ந்தாற் போல், அர்ஜூன் சென்ற வாரம் பெங்களூர் புறப்படும்போதே, அவனுடன் அவினாஷையும் அழைத்துப் பேசியிருந்தார்.

அதன் சாராம்சம், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் தன் பூத உடலை ஸ்ரீரங்கத்து பரம்பரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. சென்னையிலுள்ள பாஸ்கரன் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அத்துடன் தன் சொத்துக்களை சஞ்சய், அர்ஜூன், அவினாஷ், சந்தனாவிற்கு என நான்கு பாகங்களாகப் பிரித்து எழுதியாக வேண்டும். தவிர ஸ்ரீரங்கத்து பரம்பரை வீட்டை இதுநாள் வரையில் தன்னைப் பராமரித்து வந்த இல்லத்தின் பேரில் எழுத வேண்டும். தன் மனைவியின் நகைகளை அனுவும் நிர்மலாவும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டியது!

இவ்வாறாக அவர் உயில் எழுதச் சொன்னதுடன், அனைத்திற்கும் உச்சமாய் அவரின் பூத உடலுக்கு கொள்ளி வைக்க வேண்டியது அவரின் மூத்த பேரனாகிய சஞ்சய் பாஸ்கர் எனவும் சொன்னார்.

‘எல்லாம் சரிதான்!’ என்ற அவினாஷ் உடனடியாக எதுவும் செய்ய வேண்டாமென தாத்தாவை ஆட்சேபிக்க, அர்ஜூன் நிர்மலாவை அழைத்துவிட்டான். அவளும் வந்து அவசரப்பட வேண்டாமென சொல்ல, அவர்களை அதட்டி மிரட்டி, பிடிவாதமாக பாஸ்கரனிடமும் பேசி, சொன்ன அனைத்தையும் செய்ய வைத்திருந்தார்.

முந்தாநாள் அதிகாலை நான்கு மணியளவில் இவர்களுக்கு இல்லத்திலிருந்து செய்தி வந்தது. இரவெல்லாம் கடும் தலைவலி என்று அவதிப்பட்டவர் அதிகாலையில் உயிர் நீத்திருப்பதாக சொன்னார்கள். இவர்களும் உடனேயே புறப்பட்டு வர, காரியங்கள் வேகமாக நடந்து முடிந்தன. அவர் கேட்டுக் கொண்டதைப் போலவே மின் மயானத்தில் அவர் உடலுக்கு கற்பூரம் ஏற்றி வைத்தான் சஞ்சய்.

பாஸ்கரனுக்கு ஆறுதலாக சென்னையில் இரு நாட்கள் இருந்த பிரபஞ்சன், போட்டது போட்டபடி வந்ததில் நிலுவையிலுள்ள வேலைகளைப் பார்க்க பெங்களூர் புறப்பட நினைக்க, பாஸ்கரனே சஞ்சுவையும் அவர்களுடன் புறப்பட சொல்லிவிட்டான்.

சஞ்சய் சந்தனாவை அங்கேயே இருக்க சொல்ல, அவள் கணவனின் முகத்தில் என்னத்தை கண்டாளோ! தானும் உடன் வருவதாகச் சொல்லி கிளம்பிவிட்டாள். இதோ இருளை வெறித்துக் கொண்டிருப்பவனின் எண்ணங்களிலெல்லாம் அவனின் தாத்தா!

பாஸ்கரன் வீட்டில் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது, “அப்பா ஏன் ஸ்ரீரங்கம் போக வேணாம்ன்னு சொல்லிட்டார்?” என நிர்மலா அண்ணனிடம் கேட்க, மௌனத்தை மட்டும் பதிலாகக் கொடுத்தான் அவன்.

“வேற இடத்தையோ வீட்டையோ இல்லத்துக்கு எழுதி கொடுத்திருக்கலாம்ல? ஏன் பரம்பரை வீட்டைக் கொடுக்கணும்? கடைசில கொஞ்சம் தெளிஞ்சிருந்தார்ன்னு நினைச்சேன். அப்டி இல்லை போல!” ஆற்றாமையுடன் சொல்லிவிட்டு அவள் வேறுபுறம் நகர்ந்ததும் தன் மூத்த மகனைப் பார்த்தான் பாஸ்கரன்.

அப்பாவிடம் விழி மூடித் திறந்தவன், ‘ஐ’ம் ஓகே!’ என இதழசைத்தான்.

கலியபெருமாள் பிறந்து, ஓடியாடி விளையாடிய வீடு; அவரின் இல்லறத்தையும் நல்லறத்தையும் பார்த்த வீடு; அவரின் குழந்தைகளான பாஸ்கரன், நிர்மலா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த வீடு! அனைத்திற்கும் மேல் பிஞ்சுக் குழந்தை சஞ்சுவை அவர் கொடுமைப்படுத்தியதும் அந்த வீட்டில்தான்! இப்படியாக சர்வத்திற்கும் சாட்சிபூதமாக இருந்தது அந்த வீடுதானே?

அவரின் இம்மையும் மறுமையும் அந்த வீட்டில்தான் என்று சதா சொல்லிக்கொண்டே இருந்தவர், அந்திமத்தில் அவரின் விருப்பத்தை மாற்றிக்கொண்டது, சஞ்சுவின் பொருட்டுதான் என்று சஞ்சுவுக்கு மட்டுமல்லாமல் மற்ற சிலருக்கும் புரிந்துதான் இருந்தது. அதனால் தற்சமயம் அவனின் மனநிலையும் எப்படியிருக்குமென புரிந்ததாலேயே பாஸ்கரன் அவனைப் பிரபஞ்சனுடன் புறப்பட சொன்னான்.

நிர்மலா சஞ்சுவையும் அந்த வீட்டையும் தொடர்புபடுத்தி பார்க்கவில்லை. அதனால் அவளுக்கு அப்பாவின் தீர்மானங்களும் புரியவில்லை.

அந்த வீடு இருந்தால் இப்போதும், இனியெப்போதும் இவன் அங்கே செல்ல வேண்டி வரலாம். அப்படி சென்றால் நிச்சயம் உள்ளம் வெந்து போவான்! ஆக பேரனின் மனநிலையை முன்கூட்டியே கணித்திருந்த பெரியவர், அவனுக்காக அந்த வீட்டையே வேண்டாமென்றிருக்கிறார். நெடுஞ்சாலைப் பிரயாணத்தில் இவனின் நெடுமூச்சும் கலந்தது.

அனைத்தையும் சிந்தித்தபடியே இருளை நோக்கியிருந்தான்.

தாத்தா போனதில் மனைவியின் கண்ணீரும் தம்பியின் மனதுன்பமும்தான் இவனை வருத்தியதே தவிர, தாத்தாவிற்காக குறைந்தபட்சம் வருத்தம் கூட தோன்றவில்லை. ‘அப்படியா?’ என்ற மனநிலைதான்!

ஆனால் அவர் இவனுக்காக பரம்பரை வீட்டைத் துறந்திருக்கிறார்; கடைசியாக இவன் கையால் தீபம் வாங்கிச் சென்றிருக்கிறார்.

ஏதோ சொல்லத் தெரியாத அவஸ்தை மனதைப் பிசைந்தது. மீண்டும் ஆழ்ந்த சுவாசமெடுத்துக் கொண்டான். தனக்கிழைத்த செயலுக்கு அவர்தம் வாழ்ந்த காலத்திலேயே இரட்டிப்பாகக் கூலி செலுத்தியிருக்கிறார். தானும் பழையதை நினைத்து வருந்தி தாத்தாவுக்கு இன்னும் பழி சேர்க்க வேண்டாம். போகும்போது நிம்மதியாக போகட்டும்!

விழி மூடித் திறந்தவன் தன் தோள் சாய்ந்து தூங்கியிருந்த மனைவியைப் பார்த்தான். சிரிப்பு வந்தது.

புறப்படும்போது அனு நிலைத்தப் பார்வையில் மகனை நோக்க, “நான் அவனைப் பத்திரமா பார்த்துப்பேன். நீ இங்கே காரியமெல்லாம் முடிஞ்சதும் வந்து கூப்பிட்டுக்கோ!” என்ற நிரஞ்சனாவின் வார்த்தைகளில் நிம்மதியுற்றவளாய் கீற்றுப் புன்னகை வீசினாள்.

நிரஞ்சனாவைக் காட்டி இவனிடம் சொன்னாள். “அம்மா கூடவே இரு!”

அவன் இன்னும் குழந்தை இல்லை என்று சொல்ல நினைத்தாலும், இருபத்தியிரண்டு வருட பாதிப்பு தெளிய நாட்களாகும் என்று புரிந்த பிரபஞ்சன், அனு யாரையும் விட தன் மனைவியை நம்புவதைக் கண்டு பெருமிதம் கொண்டான்.

“ஏன் எங்க கூட இருந்தா நாங்க பார்த்துக்க மாட்டோமா?” என்று அனுவை இடித்துக்கொண்டு வந்து நின்றாள் இவனின் மாரியாத்தா!

“நீ ‘அருண்’ பார்லரைப் பார்த்தா புருஷனை மறந்துடுவ!” என நிர்மலா மகளை வாரி விட, அனைவருக்கும் புன்னகை அரும்பியது.

“அதெல்லாம் நான் ஒழுங்கா பார்த்துப்பேன்.” என்று ரோஷமாக சொன்னவள் இப்போது அவன் மீதே தூங்கி வழிகிறாள்.

அதிகாலையில் பெங்களூர் வந்து சேர்ந்தவர்கள் நிரஞ்சனாவின் வீட்டில்தான் இறங்கினார்கள். பாட்டியிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு தங்கள் அறைக்கு வந்ததும் அவன் கேட்டான். “ஏண்டி என் பின்னாடியே வந்த மாரியாத்தா? அவங்களுக்கு துணையா அங்கேயே இருந்து காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் வந்திருக்கலாம்ல?”

அவனைப் பார்க்காமல் குளிப்பதற்கு துணியை எடுத்தவாறே, “தாத்தாவைப் பத்தி நீ என்கிட்ட சொல்லலைன்னாலும் உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியாதா சஞ்சுத்தான்?” எனக் கேட்டவள், அவன் முகம் பார்த்து சொன்னாள். “அவரைப் பத்தி கேட்டு உன் நினைவுகளைக் கிளறிவிட்டு உன்னைக் கஷ்டப்படுத்த வேணாமேன்னு தான் இத்தனை நாளும் நான் அதைப் பத்தி பேசல.”

“எனக்கு கஷ்டம்ன்னு யாருடி சொன்னா?”

“அப்போ என்கிட்ட சொல்ல உனக்கு விருப்பமில்லயா?”

“நிச்சயமா நீ அழறதைப் பார்க்க விருப்பமில்லை.”

“நான் ஒண்ணும் அழற ஆள் இல்லை.”

கேலிச் சிரிப்பொன்றை சிந்தினான். தாத்தாவின் இறப்பு செய்தி கேட்டதிலிருந்து கண்களில் அருவி வைத்திருக்கிறாளா என சந்தேகிக்கும்படி அழுது தீர்த்தவளல்லவா!

அவன் சிரிப்பில் ரோஷம் பொத்துக்கொண்டு வர, விருட்டென நகர்ந்தவளை இழுத்து நிறுத்தி, அவள் உச்சந்தலையில் கன்னம் சாய்த்துக்கொண்டான். “பெரிசா ஒண்ணுமில்லை. டெய்லி பாட்டிங்க தூங்க வச்சிட்டு மார்க்கெட் போனப்புறம் எழுப்பிவிட்டு கீழேயே அடிப்பார். ஸ்கூல் போனப்புறம் அதெல்லாம் குறைஞ்சாலும் சில லீவு நாட்கள்ல மாட்டிக்குவேன். அர்ஜூன்தான் இந்த வீட்டை ஆளப் பிறந்தவன். நீ சாக்கடைன்னு சொல்லி சொல்லி அடிப்பார். வெளியே தெரியாத மாதிரி பாத்திரத்தால சூடு வைப்பார். யார்க்கிட்ட சொன்னாலும் அம்மாவைக் கொன்னுடுவேன்னு பயமுறுத்துவார். அப்போலாம் தாத்தாவை அரக்கன் மாதிரி இமாஜின் பண்ணிக்குவேன். அவரோட தனியா இருக்கவே பயமா இருக்கும்.

எல்லாம் அம்மா முகத்தைப் பார்க்கற வரைக்கும்தான். ஈவ்னிங் அம்மா மடில விழுந்துட்டா அப்டியொரு பாதுகாப்பும் தைரியமும் நிம்மதியும் வரும். அம்மா சஞ்சு’ன்னு கூப்பிடறதைக் கேட்டாலே மத்தவங்க சாக்கடைன்னு சொன்னதெல்லாம் மறந்து போகும்டி மாரியாத்தா! ஷி’ஸ் சம்திங் ஸ்பெஷல் வித் சில்ரன்னு என்னை நினைச்சு மட்டுமில்ல; உன்னை, அவினாஷை, அர்ஜூனைப் பார்க்கும்போதும் புரியுது.”

அவன் அம்மாவின் நினைவில் லயித்துக் கிடக்க, சிறிது நேரத்திற்கு பின்னரே சந்தனாவிடமிருந்து சத்தம் வராததில் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான். அவள் தரையில் விழிகள் நிலைக்க அப்படியே நின்றிருந்தாள்.

“ஹேய் மூச்சு விடுடீ!” என முதுகில் அடித்து உலுக்க,

சட்டென தெளிந்தவள் கையிலிருந்த துணிகளைப் போட்டுவிட்டு, “உனக்கு வலிச்சிருக்கும்ல?” என அவனின் கன்னங்கள் தாங்கினாள். அவளின் இதழ்கள் கீழ்நோக்கி வளைந்தது.

சாதாரணமாக இரண்டே வரிகளில் சொல்லிவிட்டான். இன்னும் சொல்லாமல் விட்டது எத்தனையோ! ஆனால் சஞ்சுவின் குழந்தை முகத்தை சிந்தையில் நிறுத்தி கேட்டவளுக்கு இதற்கே நெஞ்சுக்கூட்டை அழுத்திப் பிழிந்தாற் போலிருந்தது.

“ப்ச் இல்லடா!”

சிதிலமான அந்த சின்ன இதயத்தை நினைத்து இப்போது வருந்தியவள், “நீ அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல? ச்சு! நான் உன்னை விட பெரியவளா இல்லாம போயிட்டேன் பாரு!” என்றிட,

அவள் சொன்னது நகைப்புக்குரியதாக இருந்தாலும், மனைவியின் அழுகுரலில் இவனுக்கு தாங்கவில்லை. “பெரியவளா இருந்தா என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிருக்கலாம்ன்னு நினைக்கறியா?” என்றான் விளையாட்டாக!

அவள் இன்னும் அவன் கன்னங்களைத் தடவிக்கொண்டு, பாவமாகப் பார்த்து நிற்க, “ஏண்டி இப்டி பாவமா பார்க்கற?” எனக் கேட்டான்.

“நீ பாவம்தானே? ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்ல? அதுவும் அந்த சின்ன வயசுல…”

“மாரியாத்தா, நான் அதெல்லாம் மறக்காம தான் இருந்தேனே தவிர, எல்லாத்தையும் எப்பவோ கடந்து வந்துட்டேன்டீ! அதையே மனசுல, புத்தில ஏத்திக்கிட்டு தொங்கிட்டு இருந்திருந்தா இந்நேரம் நான் ஒரு சைக்கோவா இருந்திருப்பேன்‌. ஏன் உன்னைக் கூட என்னால ரொமான்ட்டிக்கா பார்க்க முடிஞ்சிருக்காது.

யோசிச்சு பார்த்தா ஐ’ம் தி லக்கியஸ்ட் வன் இன் தி வேர்ல்ட்! தாத்தா தான் இனி உனக்கு என் தொல்லை இல்லைன்னு, என்னைக் கோவிலுக்கு கூட்டிட்டு போய் அந்த மோசமான ஆட்கள் கிட்ட விட்டார். திருச்சில அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்ச நான் அந்த ராத்திரி நேரத்துலயும் அப்பா, பாட்டியை ஏன் பார்க்கணும்? அவங்களும்தான் என்னை ஏன் அவங்களோட கூட்டிட்டு போகணும்? அப்டி கூட்டிட்டு வந்தவங்க அவங்க பெத்த பிள்ளை மாதிரிதான் வளர்த்தாங்க. அவங்களுக்கு வேற ஒரு பையன் இருந்திருந்தா கூட என்னை இப்டித்தான் வளர்த்திருப்பாங்க. அப்டிப்பட்ட நல்லவங்க கைல கிடைச்ச நான் லக்கி இல்லையா?”

“…….”

“அப்புறமும் என் மனசுல அம்மாவை நினைச்சு ஆசையும் ஏக்கமும் தீரலை. கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கும் மேல அவங்களை நான் நினைக்காத ஒரு நாள் கூட என்கிட்ட கிடையாது தெரியுமா? இதோ! அவங்களும் திரும்ப கிடைச்சாங்க. அதுவும் எப்டி? பிறந்ததுல இருந்து என் மேல வச்ச அன்புல ஒரு துளி கூட குறையாம! இல்லைன்னா இதுதான் விதின்னு அர்ஜூனை மட்டும் பார்த்துக்கிட்டு வாழ்ந்துடாம, திடீர்னு வந்து குதிச்ச என்னை இத்தனை பிரியத்தோட, உரிமையோட சேர்த்துக்கிட்டு எனக்காக நான் இருக்கற இடத்துக்கு வந்திருப்பாங்களா?”

கட்டிலில் அமர்ந்தவன், கண்ணீர் உகுத்து நின்றிருந்தவளை இழுத்து தன் மடியில் இருத்திக்கொண்டு காது மடலில் மீசை உரச சொன்னான். “நான் முதல்முதலா ஆசைப்பட்ட ஒரு பொண்ணு… அவ இப்போ என் மடில! என் கைக்குள்ளே! சும்மா இல்ல; யார் சொல்லியும் கேட்காம அவளோட மொத்தக் காதலையும் நெஞ்சு திணற திணற எனக்கே எனக்காக வச்சிட்டு காத்திட்டு இருந்தாளாம்! லவ் யூ சந்தனம்!”

“அத்தான்…”

“இன்னும் கேளு! இது எல்லாத்தையும் விட இந்த உலகத்துலயே என்னை அதிகமா வெறுத்த ஒரு ஜீவன் தாத்தா! அந்த ஜீவன் இன்னிக்கு என் கைல தான் கடைசி தீபம் வேணும்ன்னு கேட்டு வாங்கிட்டு போயிருக்குது… இப்போ சொல்லு நான் பாவப்பட்ட ஜீவனா? இல்ல கேட்ட வரம் அத்தனையும் கிடைச்ச பாக்கியசாலியா? எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு கஷ்டமான பார்ட் இருக்கும். அது எனக்கு எட்டு வயசோட முடிஞ்சு போச்சுன்னு நம்பறேன்.”

“ஆனா உனக்கு அந்த மோசமான நினைவுகள்லாம்…”

“இருந்துச்சு! பிரகதி கல்யாணத்தப்போ அம்மாவைப் பக்கத்துல வச்சிட்டு நான்தான்ம்மா உன் பிள்ளைன்னு சொல்ல முடியாம அவஸ்தைப்பட்டப்போ இருந்துச்சு. அத்தனை வருஷத்துக்கப்புறம் உங்கம்மாவை, தாத்தாவை, சித்திப்பாட்டியைன்னு ஒவ்வொருத்தரையா பார்க்கும்போது ரொம்ப மோசமா ஃபீல் பண்ணேன். பட் ஐ’ம் ஹேப்பி நௌ, சந்தனா!” என்றவனின் இதழ்கள் அவளின் வலக்கன்னத்தில் வலம்வர, அவள் எதிர்வினைக் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.

“ப்ச் இதுக்குத்தான் நான் இதை யார்க்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கல. அப்டியே பாவம் போல பார்க்க வேண்டியது.”

“நான் பாவமா நினைக்கல. ஆனா நீ இன்னும் அதையே நினைச்சிட்டிருக்கியா சஞ்சுத்தான்?”

“ப்ராமிஸ்டீ! நீயும் அம்மாவும் என் கூடவே இருந்தாலே போதும். எனக்கு வேறெந்த ஞாபகமும் வராது.”

“உனக்கு தாத்தா மேல கோவம் வரலையா? எனக்கே அவரை பழிவாங்கணும்ன்னு தோணுது.” என்றதில் சிரித்துவிட்டான்.

“ஹாஹா… எப்டியாம்?”

“நான் மட்டும் அத்தை இடத்துல இருந்திருந்தா கண்டிப்பா அத்தையை மாதிரி பிரிஞ்சு போய் இருக்கமாட்டேன். கூடவே இருந்து இன்னும் நாலு பிள்ளையை சரகேஸில பெத்துக்கிட்டு, தாத்தா முன்னாடியே இருந்து அதுங்களைப் பாராட்டி சீராட்டி வளர்த்து அவருக்கு வயித்தெரிச்சலைக் கிளப்பி, நெஞ்சுவலி வர வச்சு அப்போவே வைகுண்டத்து வாசலைக் காட்டிருப்பேன்!” மிகத் தீவிரமாக சொன்னவளைக் கண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் சஞ்சய்.

“ஹஹ்ஹஹா… யூனிக் பீஸ்’டீ நீ!”

“உனக்கு அவர் மேல கோபமே இல்லையா சஞ்சுத்தான்?” என மீண்டும் கேட்க,

“மே பீ இருந்திருக்கும், அம்மாவைப் பார்த்தப்புறமும் அவங்க எனக்கு கிடைக்காம போயிருந்தா! அப்டி மட்டும் ஆகிருந்தா… இப்போ என் கைல கொள்ளி வாங்கினவருக்கு அப்போவே அவர் கேட்காமலே சில பல சித்ரவதைகளோட சேர்த்து கொடுத்திருப்பேன்.” என்றான்.

வெற்றுக் குரலில், சாந்தமான த்வனியில்தான் சொன்னான். ஆனால் அவன் கண்களில் வெளிப்பட்ட வன்மத்தை, குரோதத்தை, அடக்கப்பட்ட சீற்றத்தைக் கண்டவள் முதுகுத் தண்டில் ஜில்லிப்பை உணர்ந்தாள்.

தன் காதல் கணவனிடம் யாரும் கண்டிராத மற்றொரு பரிமாணத்தைக் கண்ட அதிர்ச்சியில் இருந்ததால், “குளிக்கலாம் வா சந்தனம்!” என்று இழுத்தவனின் இழுப்பிற்கு சென்றவளால் அவனுடன் ஒன்றத்தான் முடியவில்லை.

மாலையில் அர்ஜூனுக்கு அழைத்தான். தாத்தாவின் இறப்பில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தவன் அர்ஜூன்தான். அன்று யாரிடமும் பேசாமல் அமைதியே உருவாக இருந்தான். சந்தனாவிடம் கூட எதுவும் பேச முற்படவில்லை‌. இவர்கள் கிளம்பும்போதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

இப்போது அழைத்துப் பேச, சற்றே தெளிந்திருந்தான் இவன் தம்பி.

“காரியத்தன்னிக்கு நானும் சந்தனாவும் வர்றோம். அம்மாவைப் பார்த்துக்கோ!”

“எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ சோக டியூன் போடாம இருந்தா போதும்.”

“அதை நாலு நாளா யார் கூடவும்  பேசாம இருந்த நீ சொல்ற?”

அண்ணனும் தம்பியும் மாறி மாறி அடித்துக்கொண்ட நக்கலிலும் அவர்களுக்கான அக்கறைப் புதைந்துகிடந்தது.

இசைக்கும்🍂🍁…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. எல்லா விஷயங்களையும் சரியா ஹேண்டில் பண்ற, சரியா புரிஞ்சுக்கிற அக்னி ஒரு ஆச்சரியம் தான்

    1. Author

      மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 🍃🪶

  2. பூச்சாண்டியிடம் சிக்கவைத்த பாவத்திற்காக சர்வத்திற்கும் சாட்சி பூதமான வீட்டை தனது பூத உடல் கூட அண்ட விடாமல் துறந்துவிட்டார்.

    “நெடுஞ்சாலை பிரயாணத்தில் இவனது பெருமூச்சும் கலந்தது”.

    “அம்மா கூடவே இரு” அனு ✨😇

    “அருண் பார்லர பார்த்தா புருஷனை மறந்திடுவ” 🫢

    பிறந்த போது இருந்த அதே பிரியத்தோடும் உரிமையோடும் இழைந்த உறவுகள்.

    மாரியாத்தாவின் பழிவாங்கும் திட்டம். அட அட அட 🤣🤣 சரகேசில இன்னும் நிறைய குழந்தைகளை பெத்து வளர்த்து அவர வெறுப்பேற்றி அப்போவே அவருக்கு வைகுண்ட பிராப்தம் கிட்ட செய்திருப்பா போல.

    அவன் தங்க அம்மாவின் அன்பு கிட்டியிருக்கவில்லை என்றால் சஞ்சு Antihero அக்னி ஸ்வரூபம் எடுத்திருப்பானோ!

    1. Author

      ஆமா, நிலைமை அப்டி ஆகிருந்தா அக்னியை anti-heroவா பார்த்திருக்கலாம்😅😅 நன்றிகள் சிஸ் 🪶🪻