கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-18
அழுதுக் கொண்டே ருத்ரா எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி செல்வதை கூட்ட நெரிசலில் நின்று இருந்த யுகன் கண்டுக் கொண்டான். அவளின் கண்ணீர் அவனின் நெஞ்சை பிசைய உடனே தன்னவளை நோக்கி வேகமாய் விரைந்தான். கூட்டத்தை தாண்டி வண்டியை ஓரம் கட்டி விட்டு உள்ளே அவளை தேடி செல்ல நான்கு ஐந்து பேர் சூழ்ந்து நிற்க ருத்ரா ஓரமாய் அழுது கரைந்துக் கொண்டு இருந்தாள். காரணம் எல்லாம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசிக்கவே இல்லை. அவளின் கண்ணீரை காண பொறுக்காதவன் அவளை சமன் செய்யும் வழியை தான் யோசித்தான்.
“ருத்ரா.. என்ன ஆச்சு.. இங்க பாரு..” என உரக்க கூறியவன் கார்த்திக்கையும் ராஜேஷையும் தள்ளி விட்டு வேகமாய் ருத்ரா முன்னே மண்டியிட்டு அமர்ந்தான். அவளின் கையை பிடித்துக் கொண்ட யுகன், “ருத்ரா என்ன பாரு… அழாத.. ஏன் என்ன ஆச்சு? சொல்லு” என பதட்டத்துடன் கேட்க அவனை பார்த்ததுமே இன்னும் ஓ வென அழ துவங்கினாள். அவள் காதல் தனக்கு இல்லை என்பதை கூட பொறுத்துக் கொள்ள முடிந்தவனால் அவளின் கண்ணீரை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளை தன் பக்கம் திருப்பியவன், “ரிலாக்ஸ் ருத்ரா.. எதுனாலும் உனக்காக நான் பண்ண தயாரா இருக்கேன்.. முதல்ல அழறதை நிறுத்து.. என்ன பாரு.. என்ன ஆச்சுன்னு சொல்லு.. உனக்காக நான் என்ன வேண்ணாலும் பண்றேன்” என கூறியவனின் வார்த்தையில் அவ்வளவு காதல், அவ்வளவு தவிப்பு. அவன் செயலிலும் பேச்சிலும் ஜூலியும் கார்த்திக்கும் அதிர்ந்தார்கள். விம்மி அழுத ருத்ரா யுகனை கண்டு, “யுகா.. அவன் போய்ட்டான்.. என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டான்.. அவன் இங்க இருந்து போகுறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவது அவனை பாக்கணும்ன்னு நினைச்சேன்.. ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டான் யுகா..” என தேம்பி அழுதபடியே கூற யுகனுக்கு அவன் இதயத்திலே யாரோ சம்பட்டியால் அடித்தது போன்ற உணர்வு உண்டானது. வேறு ஒருவனுக்காய் சுற்றி இருக்கும் சூழலை கூட பார்க்காமல் இப்படி அழுகிறாளே என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் ரணமானது.. அவளின் கண்ணீரை துடைத்தவன், “அழாத ருத்ரா.. அவன்.. அவன்.. திரும்ப வருவான்..” என்று வேதனையின் உச்சத்தில் மிகவும் கடினப்பட்டு அந்த வார்த்தைகளை கூறினான். தன்னவலாக ஆக்கிக் கொள்ள வருடமாய் காத்துக் கொண்டு இருந்தவன் இன்று அவன் வாயாலே இன்னொருவன் வருவான் என்று சொல்லக் கூடிய நிலைமை அவனுக்கு உண்டானது. அவனின் அவநிலையை எண்ணியே அவனுக்கு இயலாமையில் சிரிப்பு உண்டானது. அவனுக்காக அவள் இவ்வளவு அழுகிறாளே இத்தனை வருடத்தில் அவள் வாழ்க்கையில் தன்னை ஒரு ஆளாக அவள் கருதி இருக்கிறாளா அவள் கண்ணிற்கு தாம் தெரிந்து இருக்கிறோமா என்று தோன்றியது அவனுக்கு.
இப்பொழுது அதனை எல்லாம் யோசிக்கும் நேரம் இல்லை என்று உணர்ந்தவன் ருத்ராவின் கையை பிடித்து எழுப்பினான்..
“ருத்ரா நம்ம வீட்டுக்கு போலாம்.. இங்க எல்லாரும் பாக்குறாங்க..” என எழுப்பியவன் கையை உதறி விட்டாள் ருத்ரா. “நான் எங்கயும் வரலை.. நான் ஜூலி வீட்டுக்கு போறேன்.. என்ன தனியா விடு.. நான் அப்பா கிட்ட பேசிக்குறேன்” என அழுகை உடனே கூறினாள். அதில் இன்னும் உடைந்தான் யுகன், “ருத்ரா.. ப்ளீஸ் என் கூட வா மா..” என கெஞ்சலுடன் கூறியவனை பார்த்து மறுப்பாக தலை அசைத்தாள் ருத்ரா. அவளின் முட்டாள் மனது இங்கயே இருந்து அழுதுக் கொண்டு இருந்தாள் அவன் வந்து விட மாட்டானா என்று ஏக்கம் கொண்டது. ஜூலியும் யுகனும் அவளின் மனதை அறிந்தார்கள்.
“ருத்ரா.. உன் யுகா மேல நம்பிக்கை இல்லையா.. உனக்காக நான் என்ன வேண்ணாலும் செய்வேன்னு உனக்கு தெரியும்ல.. அவன் வருவான் ருத்ரா.. நான்.. நான்.. சொல்றதை நம்பு.. கண்டிப்பா.. உனக்காக.. அவன் வருவான்” என கமரிய குரலில் கண்களில் தேங்கிய நீருடன் கூற ருத்ரா வெடித்து அழுதாள். சிறு பிள்ளை போல் அவள் மனம் தவித்தது. இந்த தவிப்பில் யுகன் ஒருவனால் மட்டுமே அவளுக்கு ஆறுதல் குடுக்க முடியும். அழுதவளை தோளோடு அணைத்தபடியே அவன் வண்டியை நோக்கி அழைத்து சென்றான். கார்த்திக் தடுக்க பார்க்க ஜூலி அவனின் கைகளை பிடித்து மறுப்பாக தலை அசைத்தாள். இருவருக்குமே யுகன் யார் என்று தெரியாது.. ஆனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை வைத்தே இருவருக்கும் இடையே அழுத்தமான பந்தம் ஒன்று இருக்கிறது என்று புரிந்துக் கொண்டார்கள். ருத்ரா விசும்பிக் கொண்டே வர யுகன் அவனின் வண்டியை எடுத்தான். வழி நெடுங்கிலும் ‘அவன் என்ன விட்டு போய்ட்டான்ல’ என்று புலம்பிக் கொண்டே வந்தாள் ருத்ரா. வேதனையில் பல்லை கடித்த யுகன் அவனின் கண்ணீரை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டான்.. நேராக அவன் வீட்டிற்கு சென்றான். இந்த நிலையில் அவள் வீட்டிற்கு சென்றாள் பெற்றவர்கள் இருவரும் இன்னும் வருத்தப்படுவார்கள் என்று அங்கு செல்லவில்லை.
“நீ மேல போ ருத்ரா நான் பார்க் பண்ணிட்டு வரேன்.. நீ இன்னிக்கு இங்கயே தங்கிக்கோ.. நான் கீழ் வீட்டுல இருந்துக்குறேன்” என்று கூறியவன் வண்டியை நிறுத்த சென்று விட்டான். இயந்திரமாய் மேலே படி ஏறி அவன் வீட்டின் உள்ளே நுழைந்தாள். சோபாவில் சிலையென அமர்ந்து இருந்தவள் நினைவுகள் எல்லாம் ஸ்ரீயே சுற்றி இருந்தது. அவள் மீண்டும் அழ துவங்க பத்து நிமிடத்திற்கு பிறகு சாப்பாடு உடன் மேலே ஏறி வந்தான் யுகன். அவள் அழுவதை பார்த்து உடனே அவளிடம் சென்றவன், “நீ அழுதுட்டே இருந்தா அவன் திரும்ப வந்துருவானா? அவன் ஊருக்கு தானே போய் இருக்கான்.. இங்க வராமலையா போவான்.. நீ ஒழுங்கா சாப்புடு.. கண்டிப்பா அவன் வருவான்..” என துக்கத்தை மறைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறினான். ருத்ரா அதனை காதில் வாங்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள். யுகனுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் பறந்தது.. அவனும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூற அவன் போய்ட்டான் என்றதிலே ஒப்பாரி வைத்தாள்.
“ருத்ரா.. சொல்றதையே கேக்க மாட்டியா.. உனக்கு எப்போதுமே கூட இருக்குறவங்களை பத்தி கவலையே இருக்காதா.. உன்ன பத்தி மட்டுமே யோசிக்குற.. அது தப்பு இல்ல.. ஆனா என்னிக்காவது உனக்காக அக்கறை காட்டுரவங்க பத்தி நீ யோசிச்சி இருக்கியா.. அவன் என்ன நிலமையில உன் கிட்ட சொல்லாம போனானோ.. மத்தவங்க இடத்துல இருந்து யோசிக்கவே மாட்டியா..” என ஆதங்கத்துடன் கத்தினான் யுகன். அதில் பேச்சற்று அவனை ருத்ரா பார்க்க இயலாமையில் தன்னை நொந்தவன் அவள் முன்னே மண்டியிட்டு கைகளை பிடித்துக் கொண்டு, “சாரி.. சாரி… உன் கிட்ட கத்திட்டேன்.. ப்ளீஸ் ருத்ரா அழாத.. எனக்கு கஷ்ட்டமா இருக்கு.. எனக்கு வலிக்குது.. என்ன புரிஞ்சிக்கோயேன்.. இத்தனை வருசத்துல நான் உன் கண்ணுக்கே தெரியலையா? என்ன பத்தி என்னிக்காவது ஒரு நாளாவது யோசிச்சி இருக்கியா? இவன் யாரு? எதுக்காக நம்ம கூடவே இருக்கான்.. என்ன பத்தி யோசிச்சி இருக்கியா?” என இயலாமையில் அவசரப்பட்டு கேட்டு விட்டான் யுகன். அவனுக்கே மனம் வலித்தது. ருத்ராவிற்கு புரியவில்லை.. எதற்காக திடீரென்று அவன் இப்படி கேட்கிறான் என புரியாமல் பார்த்தாள்.
இதற்கு மேலும் மறைத்து வைத்து ஒன்றும் இல்லை என்று நினைத்த யுகன், “ருத்ரா.. நான் உன்ன முதல் முறையா பார்த்ததுல இருந்தே எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்.. உங்க வீட்டுல தங்குன நாளுல இருந்தே எனக்கு உன் மேல லவ்.. ஆனா ஒரு முறை கூட உன் கிட்ட நான் சொல்ல நினைச்சதே இல்ல.. நீ படிக்கணும் உன் வாழ்க்கையில நான் தடையா இருக்க கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா எப்போ நீ இன்னொருத்தனை லவ் பண்றன்னு என் கிட்டவே சொன்னியோ அப்போவே உன் கிட்ட நான் லவ் பண்ற விஷயத்தை சொல்ல கூடாதுன்னு முடிவு பண்ணேன்.. ஆனா ப்ளீஸ்.. சத்தியமா என்னால முடியலை ருத்ரா.. நான் காதலிக்குற பொண்ணு இன்னொருத்தனுக்காக அழுகுரதை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியலை.. எனக்கு வலிக்குது ருத்ரா.. உன்ன எப்படி எல்லாம் பாத்துக்கனும்ன்னு நான் நினைச்சேன் தெரியுமா.. மனசுல அவ்ளோ ஆசைய வளர்த்துக்கிட்டேன்.. இப்போ என்னால உன்ன இந்த நிலமையில பாக்க முடியலை ருத்ரா.. ப்ளீஸ்.. உனக்கு ஆறுதலா அவன் வருவான்னு என்னால சொல்ல கூட முடியலை.. திரும்ப திரும்ப என்ன அதை சொல்ல வைக்காத.. எனக்கும் மனசு இருக்கு.. வலிக்குது..” என இறைஞ்சும் குரலில் கூறியவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவள் கால் அருகே அப்படியே அமர்ந்து ஊமையாய் அழுதான். அவனின் காதலும் அவள் முன்னே வாய் பேச முடியாத ஊமையாய் இன்று நிற்கிறது. தன் அக்கறையும் பாசத்தையும் அவள் கவனிக்கவே இல்லை என்று அவனுக்கு கோவம் இல்லை.. தன் மீதே பழியை போட்டுக் கொண்டான். சரியான நேரத்தில் தாம் இன்னும் அவள் மனதை கவராமல் விட்டோமோ.. அவளை ஈர்க்கும்படியாக தாம் இல்லையோ என்று தன்னை தானே தாழ்த்தி வருந்திக் கொண்டான்.
ருத்ராவின் நிலை சொல்லவா வேண்டும்.. பிடித்து வைத்த சிலை போல் அப்படியே சமைந்து விட்டாள். யுகன் தன்னை காதலிக்கிறானா என்ற அதிர்ச்சி அவளுக்கு.. அதுவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலிக்குறானா என்று இருந்தது. அதை எல்லாம் தாண்டி அவன் ஏன் இதனை இப்பொழுது கூறுகிறான் என்ற யோசனை அவளை கிறுக்குத்தனமாய் கேள்வி கேட்க வைத்தது.
“இப்போ எதுக்கு யுகன் சொல்ற? அவன் இல்லனதும் நீ சான்ஸ் யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறியா?” என சுருக்கென்று யோசிக்காமல் ருத்ரா கேள்வி கேட்க யுகன் விருக்கென்று நிமிர்ந்து பார்த்தான். அவளை பார்த்து அவனுக்கு கொஞ்சம் கூட கோவமே வரவில்லை. வலி நிறைந்த புன்னகை ஒன்றை வெளியிட்டவன், “நான் ஒன்னும் அவ்ளோ கேவலமானவன் இல்ல ருத்ரா.. எனக்கு லவ் ஓட வலி என்னனு தெரியும்.. அந்த அளவுக்கு என் காதல் மோசமானது இல்ல.. ஆனா என்ன அவ்ளோ கேவலமா நினைச்சிட்டில..” என்று கேட்டவனை பார்க்க ருத்ராவிற்கு மேலும் அழுகை மூண்டது.. “என் மனசுல ஸ்ரீ தான் இருக்கான்” என அழுகை உடனே அவள் கூற, “எனக்கு தெரியும்.. நான் கீழ போறேன்.. ரொம்ப நேரம் அழாத” என்று கூறி விட்டு கண்களை அழுந்த துடைத்தபடியே விறுவிறுவென்று கீழே இறங்கினான் யுகன். அவன் சென்ற திசையையே வேதனையுடன் பார்த்தாள் ருத்ரா.
யுகன் அவன் மனசுல எவ்ளோ காதலை வச்சுக்கிட்டு இவள ஆறுதல் படுத்திக்கிட்டு இருக்கான் இவ என்ன லூசு மாதிரி இப்படி கேக்குறா அவன மேலும் மேலும் ரொம்ப காயப்படுத்துறா 😔