Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-17

முதுகலை இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பிராஜக்ட் செய்வதற்காக இன்டர்ன்ஷிப் சென்று விட்டார்கள். ஐவருக்கும் வேறு வேறு கம்பனியில் வேளை கிடைத்து இருக்கிறது. மூன்றாவது செமஸ்டர் பரீட்சை முடிந்து இத்துடன் இரண்டு மாதங்கள் ஆகிறது. வேளையில் இருந்தாலும் இன்னும் தொடர்பில் தான் அனைவரும் இருந்தார்கள். ஆனால் ஒருவனை தவிர. ஶ்ரீ.. இரண்டு மாதங்களாய் அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுக்கு அழைப்பும் போகவில்லை. ருத்ரா அவனுக்கு அழைக்காத நாளே இல்லை. பேர்வெல் அன்று ஏக்கம் கலந்த பார்வை பார்த்ததே அவள் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. 

 

திடீரென்று யாருடனும் பேசாமல் இருக்கிறானே என்று யோசனை மற்ற நால்வருக்கும். நால்வரில் ஒருவருடனும் அவன் பேச்சே வைத்துக் கொள்ளவில்லை. ராஜேஷ்ஷும் கார்த்திக்கும் ஶ்ரீ வீடு வரை சென்று விசாரித்து பார்த்தார்கள். அவனின் அம்மா, ஶ்ரீ வேலை விடயமாக வேறு ஊருக்கு சென்று இருக்கிறான்.. அவ்வப்பொழுது ஃபோனில் பேசுவான் என்று கூறினார். நாலு பேருக்கும் குழப்பம் இன்னும் அதிகமானது. எதனால் தங்களை அவன் உதாசீனப்படுத்துகிறான் என்று அவர்களுக்கு புரியவில்லை. விடையம் அறிந்த ருத்ராவிற்கு கண்கள் குளமாகியது. 

அவன் ஆர்மிக்கு செல்வதற்கு முன்பே காதலை தாமதமாவது முதலில் அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். கல்லூரியில் அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை. சிறிது பயம், நானாம் என அவளை தடுத்தது. ஆனால் இப்பொழுது காதலை சொல்லாமல் தவற விட்டோமோ என்ற வலி அவளின் நெஞ்சை பிசைந்தது. கனத்த இதயத்துடன் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டு இருந்தாள். அவள் மாற்றம் வீட்டில் இருப்பவர்களுக்கு புரிந்தது.

 

ஒரு நாள் வேலை விட்டு சோர்ந்த முகத்துடன் வந்தவளை பார்த்து சதாசிவம் பேச்சு குடுத்தார். 

 

“அம்மாடி.. நானும் பாக்குறேன் உன் முகம் வாட்டமாவே இருக்கு.. அப்பா கிட்ட நீ எதை வேன்னாலும் சொல்லலாமா..” என பரிவாக அவளின் தலையை நீவியபடியே கேட்டார் சதாசிவம். அவர்களுக்கு காப்பியை கொண்டு வந்து வைத்த லக்ஷ்மி, “எங்களை பத்தி தெரிஞ்சும் எதுக்கு நீ உன் மனசுகுள்ளவே வச்சி அழுத்திட்டு இருக்க.. நாங்க என்ன உன்ன அவ்ளோ கண்டிப்பா வளர்த்து இருக்கோமா?” என கேட்டதும் தயக்கத்துடன் அவர்களை பார்த்தாள். அவள் காதலிக்கும் விடையத்தை சொல்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை.. ஆனால் அவள் இன்னும் உரியவனிடம் காதலை சொல்லவே இல்லையே.. அதனால் தான் சிறிது யோசித்தாள்.

 

“அம்மா, அப்பா.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.. என்னோட கிளாஸ்மெட்” சிறிது தயக்கத்துடன் கூறுபவளை பார்த்து லேசாய் அதிர்ந்தார்கள். அவள் முக வாட்டத்தை வைத்தே இதுவாக தான் இருக்கும் என கணித்து இருந்தார்கள். ஆனாலும் சிறிது அதிர்ச்சி அவர்களுக்கு. லக்ஷ்மி பேச வர அவரை தடுத்த சதாசிவம், “சரி மா அந்த பையன் உன்ன லவ் பன்றானா? இப்போ என்ன பண்றான்? நீ கண்டிப்பா உன் எதிர்காலத்தை பத்தி யோசிச்சி இருப்ப.. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.. ஆனா ஒரு அப்பாவா பையனை பத்தி நான் தெரிஞ்சுக்கணும்ல..” 

“என்னங்க பேசுறீங்க நீங்க..” என லக்ஷ்மி மீண்டும் பேச வாயெடுக்க மீண்டும் அவரை அமைதியாய் இருக்கும்படி கூறினார் சதாசிவம்.

 

“குட்டிமா.. இந்த வயசுல லவ் வர்றது வயசு கோளாறுனு சொல்ல மாட்டேன்.. நீயே இதுக்கு முன்ன தெளிவா காதலை பத்தி நிறையா சொல்லி இருக்க.. அப்போ நீ தெளிவா யோசனை இல்லாம இப்படி சொல்ல மாட்டன்னு தெரியும் அப்பறம் எதுக்கு நான் கேட்ட கேள்விக்கு நீ தயங்குற?” 

 

“இல்லப்பா.. அது இன்னும் நான் லவ் பண்றேன்னு அவன் கிட்ட சொல்லலை.. அவனும் என் கிட்ட சொல்லலை.. அவன் மிலிட்டரிக்கு போறதுக்குள்ள சொல்லனும்னு இருக்கேன்..” என தயக்கத்துடன் ருத்ரா கூற பெற்றவர்கள் இருவருமே அதிர்ந்தார்கள்.

 

“மிலிட்டரிக்கு போறானா? என்ன டி சொல்ற… நிலமை புரிஞ்சி தான் பேசுறியா? எந்த நேரம் என்ன ஆகும்னு தெரியாது.. எனக்கு இருக்குற ஒரு புள்ள நீ.. நாளைக்கி நடக்க கூடாது ஏதாவது ஆனா உன்னால தாங்கிக்க முடியுமா? இல்ல உன் வாழ்க்கையை அப்படியே பாத்துட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியுமா?” ஆதங்கத்துடன் அம்மாவின் குரல் வெளிவந்தது.

“அம்மா உயிர் போனும்ன்னு விதியில இருந்தா ஆர்மில இருந்தா மட்டும் இல்ல.. ரோட்டுல போறப்போ கூட போகும்..” 

“பேசு டி பேசு.. இது எல்லாம் பேச்சுக்கு தான் நல்லா இருக்கும்.. நான் ஒத்துக்க மாட்டேன்..” என லக்ஷ்மி பொங்க, “அமைதியா இரு லக்ஷ்மி.. அம்மாடி நீ முதல்ல அந்த பையன் கிட்ட பேசு.. நீ எப்படி உறுதியா இருக்கியோ அதே போல நீ எங்க ரெண்டு பேரையும் நம்பவை.. எங்களுக்கு நம்பிக்கை குடு.. நீயே நல்லா யோசி.. அதுக்கு அப்பறம் அந்த பையனை வந்து பேச சொல்லு..” என்று சதாசிவம் கூற ருத்ராவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. லக்ஷ்மி பேச்சற்று நின்றார். 

 

“தேங்க்ஸ் அப்பா.. நீங்க தான் பெஸ்ட்.. கண்டிப்பா உங்க நம்பிக்கைய நான் பொய் ஆக்க மாட்டேன்..”

 

“ஆனா அம்மாடி இப்போ உனக்கு இருபத்தி ஒரு வயசு..இருபத்தி அஞ்சு வயசுகுள்ள உனக்கு நான் கல்யாணம் பண்ணனும்.. அதுக்குள்ள அந்த பையனை கூட்டிட்டு வந்து பேசுனா நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. அதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாது.. அப்பறம் நான் காட்டுற பையனுக்கு நீ சம்மதம் சொல்லனும்னு சரியா? அப்பா உனக்காக டைம் குடுத்து இருக்கேன்.. நீயும் அப்பா பத்தி யோசிக்கணும்..” என பொடி வைத்தார் சதாசிவம். ருத்ராவிற்கு மனம் நெருடலானது.. எப்படியும் ஶ்ரீயை சந்தித்து அவனிடம் காதலை கூறி தந்தையிடம் அழைத்து வர வேண்டும் என்று நினைத்தாள். சதாசிவம் கூறியதுக்கு சம்மதமாய் தலை அசைத்தவள் உடனே அவள் அறைக்கு சென்று ஶ்ரீயை எப்படி பார்ப்பது அவன் எங்கே இருப்பான் எப்படி கண்டு பிடிப்பது என்று தீவிரமாய் தேடலில் இறங்கினாள்.

 

“என்னங்க நீங்க அவ பிடியிலே இருக்கீங்க.. பையன் வேற ஆர்மி அது இதுன்னு சொல்றா.. எப்படிபட்ட பையன் என்ன ஏதுன்னு தெரியாம பட்டுன்னு சரின்னு சொல்லிட்டீங்க.. இது நம்ம பொண்ணு வாழ்க்கை” 

 

“லக்ஷ்மி.. முதல்ல பையன் வரட்டும்.. விசாரிப்போம்.. சரின்னு பட்டா அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய அமைச்சு குடுப்போம்” என சதாசிவம் கூற வெளியே ஒருவனின் இதயம் சுக்கு நூறாய் உடைந்தது.. இவர்களை பார்த்தே நீண்ட நாள் ஆனது என யுகன் இவர்களை காண வந்து இருந்தான். வாசலில் இதனை கேட்டவனுக்கு இதயம் நொறுங்க அப்படியே திரும்பி சென்று விட்டான். திரும்ப திரும்ப அவனுக்கு அவனின் காதல் வலியை கொடுத்தது. 

 

“என்னங்க அப்போ மூர்த்தி அண்ணா கூட பேசுனது? யுகன் தம்பிக்கு நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கலாம் சொன்னது?”

 

“லக்ஷ்மி நான் அப்போவே சொல்லிட்டேன்.. ருத்ரா அசைபட்டா தான் அது நடக்கும்ன்னு.. எனக்கும் வருத்தம் தான்.. ஆனா அவ ஆசைபட்ட வாழ்க்கை வாழ்ந்தா தானே சந்தோசமா இருப்பா.. நல்லவேளை யுகன் கிட்ட நம்ம அவசரப்பட்டு வார்த்தை விடல.. இல்லனா அவன் மனசுல அனாவசியமா ஆசையை வளர்த்துட்டு இருந்து இருப்பான்” என்று கூறிய சதாசிவம் அவர் அறைக்கு சென்றார்.

 

ருத்ரா அவளின் நட்பு கூட்டத்திடம் ஶ்ரீயை பார்த்ததே ஆக வேண்டும் என கூறிட அனைவருக்கும் காரணம் புறிந்ததனால் அவர்களும் அவன் இருக்கும் இடத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாரம் கடந்த நிலையில் அவர்களின் ஜூனியர் சரண் கார்த்திக்கு ஶ்ரீ பற்றிய தகவலை அனுப்பி இருந்தான். அதில் ஶ்ரீ அன்றைய தேதியில் அவன் சென்னையில் இருந்து அலஹாபாத் டிரெய்னிங்க்காக செல்ல இருக்கிறான் என தகவல் கிட்ட உடனே அதனை ருத்ராவிடம் தெரிவித்தான். 

 

அதில் அதிர்ந்த ருத்ராவிற்கு இதயம் தாறுமாறாய் துடித்தது. ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஏன் இப்படி செல்ல வேண்டும் என யோசித்தவளுக்கு உடனே அவனை பார்க்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. எப்படி சென்னையில் இருந்து செல்கிறான் என அவர்களுக்கு தெரியவில்லை. சரண் அவனின் NCC ஆசிரியர் கூறியதை அப்படியே சொன்னான். சரண், ராஜேஷ், கார்த்திக், ஜூலி, ருத்ரா என அனைவரும் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஒவ்வொரு பஸ்ஸாக தேடினார்கள். பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என ஒவ்வொன்றாக தேடினார்கள். 

 

தேடி ஓடி அலைந்த ருத்ரா கடைசி இடமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு ஒரு ரயில் அலஹாபாத் செல்லும் ஒரு ரயில் இருப்பதாக தகவல் பெற்றதும் உடனே அங்கு விரைந்தாள். மற்ற அனைவரும் வேகமாய் அங்கு விரைந்தார்கள். 

 

ஆட்டோ பிடித்து ஏறிய ருத்ரா கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்டதை பார்த்ததும் கண்களின் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள். எப்போது சிக்னல் விழும் எப்போது வண்டி நகரும் என்ற படபடப்பு அவளுக்கு.அவனை கான முடியாத ஏக்கம் பார்க்கவே முடியாதா என்ற தவிப்பில் அழ துவங்கினாள். 

“அழாத பாப்பா.. நம்ம சீக்கிரம் போய்டலாம்” என ஆட்டோக்கார அண்ணா அவளின் நிலை என்ன என்று கூட அறியாமல் ஆறுதல் கூறினார். போனில் ஶ்ரீக்கு நீண்ட நேரமாய் அழைக்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள். ஆனால் எதிர் புறத்தில் அவளின் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை. சிக்னல் விழுந்தாலும் இன்னும் வண்டி நகராமல் இருந்தது. 

 

“அண்ணா.. நான் இங்கயே இறங்கிக்குறேன்.. ஸ்டேஷன் கிட்ட தான் நான் நடந்து போய்க்கிறேன்” என்று கமரிய குரலில் கூறியவள் அவருக்கு காசை குடுத்து விட்டு இறங்கினால். அவளுக்கு என்ன கவலையோ என்று பாவமாக அந்த ஆட்டோக்காரர் பார்த்துக் கொண்டு இருந்தார். கீழே இறங்கியவள் கண்களை அழுந்த துடைத்தபடியே வேக எட்டுக்களுடன் அனைத்து வண்டியையும் கடந்து நடைமேடை பக்கம் சென்றாள். வேகமாய் அவள் நடந்துக் கொண்டு இருக்க அவளின் போன் அடித்தது. ஆசையாக அவள் எடுத்து பார்க்க ஜூலி அழைத்து இருந்தாள்.

 

“என்ன ஆச்சு? பாத்தியா? இல்லையா?” என்று தவிப்புடன் கேட்டாள். 

“இன்னும் இல்ல.. நீ இப்போ எங்க இருக்க?” என ஜூலி கேட்க,

 

“டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்.. இப்போ நடந்து வந்துட்டு இருக்கேன்” என்று கூறியவள் தேங்கிய கண்ணீரோடு அழைப்பை துண்டித்தாள். அவசரமாய் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்துக் கொண்டு இருக்க வருவோர் போவர் எல்லாம் அவளை ஒரு நொடி திரும்பி பார்த்தார்கள். ஸ்டேஷன் சென்றவள் நேராக அங்கு இருக்கும் அவளின் நண்பர்கள் பக்கம் ஓடினாள்.

 

“என்ன ஆச்சு? கண்டு பிடிச்சிங்களா?” என்று பதட்டத்துடன் அவள் கேட்க, அதற்கு மவுனம் சாதித்தார்கள், அவளின் நண்பர்கள். 

 

“உங்களை தான் டா கேக்குறேன்.. ப்ளீஸ் சொல்லுங்க” என அழுகை உடனே ருத்ரா கெஞ்ச அதற்கு மறுப்பாக தலை அசைத்தான் கார்த்திக். 

 

“என்ன கண்டு பிடிக்க முடியலையா?” என்று கேட்டவள் கண்களை துடைத்துக் கொண்டு ஏதேனும் ரயிலில் இருக்கிறானா என்று தேட ஓடினாள்.

 

“அவன் போய்டான்” என கார்த்திக் கோபத்துடன் கூற ருத்ரா உறைந்தாள். உலகத்தின் ஓசைகள் அனைத்தும் நின்றது போன்ற ஒரு உணர்வு. அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு முறை.. ஒரு முறையாவது அவனை பார்த்து விடலாம் என ஓடி வந்தாள்.

 

 

“போய்டான்ல?” என வலி நிறைந்த விழிகளுடன் கேட்பவளுக்கு என்ன பதில் சொல்வது என அவர்களுக்கு தெரியவில்லை. அவளின் இந்த வலிக்கும் வேதனைக்கும் காரணமானவன் விழிகளும் கண்ணீரில் நிரம்பி இருக்க

ரயிலில் சீட்டில் கண்களை இறுக மூடி அமர்ந்து இருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஸ்ரீக்கு என்ன ஆச்சு திடீர்னு ஏன் யார்கிட்டயும் சொல்லாம போயிட்டான்

      1. Author

        சொல்றேன் அக்கா நன்றி😍🥰