கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-11
காதலிக்கும் காலத்தில் நிதர்சனம் யாவும் கண்களுக்கு புலப்படாது. உடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நீளாதா என ஏங்கி ஒவ்வொரு மணித்துளியையும் பொக்கிஷமாய் மனதில் சேகரிப்பார்கள். விட்டு விலகி இருக்கும் நேரம் எல்லாம் நத்தையை விட மெதுவாய் நகர்வது போல் தோன்றும். வார்த்தை மொழிகளுக்கு இடைவெளி விட்டு பார்வை மொழிகளாலே பல ஆயிரம் கதைகள் இருவரும் பேசிக் கொண்டார்கள். கண்களால் அப்படி என்ன பேசிட முடியும்? வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள் அனைத்தையும் நேத்திரங்களே அழகாய் வெளிகாட்டிடும். காதல் அப்படி தான். இது தான் காதல் என்று வார்த்தைகளில் அதனை அடக்கிட முடியாது. அதனை உணர மட்டுமே முடியும். சில நேரம் வேண்டும் என்று நினைக்கும், சில நேரம் முரண்டு பிடிக்கும். அருகே நெருங்க துடித்தாலும் மனம் நெருங்க விடமால் தடுக்கும். கைகள் கோர்த்திட ஏக்கம் கொண்டாலும் கண்கள் நான்கும் சேர்ந்துக் கொள்ளும்.. இப்படிப்பட்ட நிலை அறியாத இனிமையான தவிப்பு தான் காதல். கண்ட உடன் காதலில் இது தான் அழகு. சொல்லிக் கொள்ளாமலே காதலுடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். காதலின் ஒவ்வொரு நிலையுமே சுகமானதாய் இருக்கும். பார்க்கும் போது வர மகிழ்வும், பிரிந்து இருக்கும் நேரங்களில் பார்க்க துடிக்கும் தவிப்பும் சுகமாய் இருக்கும். அதனை விட காதலை யார் முதலில் சொல்லிக் கொள்வது என்ற காத்திருப்பு இன்னும் சுகமானது. காதலுக்கு அணியாய் இருப்பது காத்திருப்பு தானே. அதில் தான் ஸ்ரீயும் ருத்ராவும் இருக்கிறார்கள். இருவருக்குமே தெரியும் நட்பை தாண்டி காதல் என்ற ஒன்று அவர்களுக்குள் இருக்கிறது என்று. ஆனால் சொல்லிக்கொள்ளாமல் கவிதையாய் நாட்களை கடத்தினார்கள்.
நாட்கள் கரைய இரண்டாவது செமஸ்டரில் காலடி எடுத்து வைத்தார்கள். நட்பும் காதலும் இன்னும் மலர்ந்தது. ஐந்து பேரும் ஒரே குழுவாக இருந்தார்கள். இதில் செமினார் என்று ஒன்று எடுக்க கூறிட ஸ்ரீயும் ருத்ராவும் கூட்டு சேர்ந்தார்கள். அதில் அவர்கள் உணர்வு இன்னும் பலமானது. எங்குமே இருவரும் ஒன்றாய் செல்வதும், வருவதுமாய் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் வகுப்பினர்களுடன் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கிராமத்திற்கு ஷெபர்ட் விசிட் சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் கல்லூரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் கரிசல்பட்டி என்ற கிராமம் அமைந்து இருக்கிறது. மாணவ மாணவிகள் பேருந்தில் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் என்பதனால் அனைவரும் அதிலே ஒன்றாய் பயணித்தார்கள். இதில் அரசாங்க பேருந்தில் தான் வர வேண்டும் அந்த பயண சீட்டு இருந்தாள் மட்டுமே ஷெபர்ட் மதிப்பெண் வழங்குவோம் என்று இருக்க அனைவரும் காலையில் வெள்ளனவே பேருந்தில் ஏறி விட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்கு பின்பு அந்த ஊரை அடைந்தார்கள்.
வழமையாய் சொல்லும் போல் பச்சை பசேல் என்று எல்லாம் அந்த கிராமம் இல்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஓட்டு வீடுகள் இருக்கும். அதில் ஒரு சில கட்டிட வீடுகளும் மண் வீடுகளும் இருந்தது. அந்த ஐம்பது வீடுகள் இருக்கும் பகுதி தான் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமம். அந்த கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளியும், சுகாதார நிலையமும் இருக்க ஷெபர்ட்க்கு பிரித்த அணியை போல் அவர் அவர்கள் அணி உடன் சேர்ந்து வேலைகளை ஆரம்பித்தார்கள். ஒரு அணி அங்கு இருக்கும் பள்ளி கூடத்திற்கு சென்று சிறுவர் சிறுமிகளுக்கு பாடம் கற்பித்து பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும். இன்னொரு அணி அங்கு இருக்கும் மக்களிடம் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இன்னொரு அணி மருத்துவம் மற்றும் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை அங்கு இருப்பவர்களுக்கு கூற வேண்டும். விழிப்புணர்வு நடத்துபவர்களுக்கு தான் சிரமமான வேலை. அங்கு இருப்பதில் சிலர் வந்து இருப்பவர்களை மதியாமல் திட்டிக் கொண்டும் கறாராக பேசிக் கொண்டு இருக்க, ஒரு சிலர் இவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறி அவர்களின் குறையை பட்டியலிட்டு கூறிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு அணி ஊரில் சில இடங்களில் மரம் நட வேண்டும். அதில் தான் இவர்கள் ஐவரும் இருந்தார்கள். மரம் நட வேண்டும் என வந்து இருந்த பேராசிரியர் கூறிட ராஜேஷ் அவர்களை விட்டு கழண்டு வேறு அணிக்கு செல்ல பார்த்தான்.
“டேய் எருமை.. எங்க கூட வந்து செடி நட்டு வை டா” என ஜூலி அவனின் சட்டை காலரை பிடித்து இழுக்க, “நீங்க எல்லாம் ஜோடி ஜோடியா போய் மரத்தோட சேர்த்து உங்க லவ்வையும் வளப்பிங்க.. எனக்கு தேவையா.. நான் போய் ஊர சுத்தி பாக்குறேன்” என்று ராஜேஷ் கூறி தப்பித்தான். “பைத்தியம், நீ என் கூட வர்றதுக்கு என்ன டா உனக்கு.. பன்னாட” என ஜூலி கருவிக் கொள்ள கார்த்திக் பெரு மூச்சு விட்டான். இவளை இந்த ஜென்மத்தில் உசார் செய்ய முடியாது என்று அவனுக்கு தோன்றியது. அவன் நிலை தான் பரிதாபம். ஸ்ரீ, ருத்ரா இருவரின் எண்ணத்தை புரிந்துக் கொண்டவள் கார்த்திக் எண்ணத்தை பற்றி கவனிக்காமல் விட்டாள். ராஜேஷ் கூறியதை கேட்டு ஸ்ரீயும் ருத்ராவும் எதுவுமே நடவாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். கார்த்திக், “என்ன ருத்ரா வரியா நம்ம ஒண்ணா போய் செடி நட்டு வைப்போம்” என வேண்டும் என்றே அவளை சீண்டுவதற்காக கேட்க, ருத்ரா அதிர ஸ்ரீ அவனை பயங்கரமாய் முறைத்தான். அவன் பேசுவதற்கு முன்பு ஜூலி, “நீ என் கூட வா.. நம்ம வேற இடத்துல போய் நட்டு வைப்போம்.. கரடி மாதிரி ஏன் டா இருக்க” என புலம்பியபடியே அவனை இழுத்து செல்ல, “அப்படி வா டி வழிக்கு என் செல்ல குட்டி” என கொஞ்சியபடியே பின்னே நடந்தவன் ஸ்ரீயை பார்த்து கண்ணடித்தான்.
“இங்க என்ன நடக்குது? நீங்க ரெண்டு பேரும் எப்ப கூட்டு சேர்ந்திங்க?” என ருத்ரா புரியாமல் கேட்க லேசான சிரிப்புடன் செடிகள் இருக்கும் பையையும் ருத்ரா கையில் இருக்கும் பூவாளியையும் எடுத்துக் கொண்டு முன்னே நடக்க ருத்ரா அவன் பின்னே நடந்தாள். இரண்டு ஜோடிகளும் அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்காய் சென்று செடிகளை நட்டு வைத்தார்கள். ஸ்ரீ குழி தோண்டி குடுக்க ருத்ரா அதில் அழகாக செடிகளை வைத்து மூடினாள். அவள் நட்டு வைக்கும் பொழுது அவனின் கைபேசியை எடுத்து அழகாய் அவளை படம்பிடித்தான். கார் கூந்தல் ஒரு பக்கமாய் சரிந்து விழ மஞ்சள் சுடிதார் அணிந்து இருந்தவள் அந்த தோட்டத்தில் பூத்து குலுங்கும் பூக்களுக்கு நிகராய் அவன் கண்ணிற்கு ஒளிர்ந்தாள். கடப்பாறையை கையில் வைத்து அதில் முட்டு குடுத்து சாய்ந்து நின்றபடியே அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் ஸ்ரீ. ருத்ரா நிமிர்ந்து பார்க்க ஸ்ரீ அவளையே பார்ப்பதை கண்டு உதட்டை கடித்தவள் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். அவளின் சிறு சிறு அசைவும் அவனுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது. லேசாய் தோள்களை குலுக்கி கண்களை சிமிட்டி அவனின் கன்னக்குழி தெரிய புன்னகைத்தான். ருத்ராவின் விழிகள் தன்னிச்சையாக அவனின் கன்னக்குழியில் பதிந்தது. ஏனோ அவற்றை காணும் நேரம் எல்லாம் அவனின் கன்னத்தை பிடித்து கில்லி விட தோன்றியது அவளுக்கு.
“பார்த்து முடிச்சாச்சுன்னா போலாமா?” என நக்கலாய் ஸ்ரீ கேட்ட பின் தான் நடப்பிற்கே வந்தாள். சிவக்கும் கன்னத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நடந்தாள். அவர்களிடம் இருக்கும் செடிகளை எல்லாம் ஒவ்வொரு வீட்டில் நட்டு வைத்த பின் அந்த தெருக்களை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அங்கு வசிப்பவர்கள் பாசி மணிகளால் செய்யக்கூடிய அணிகலன்களை விற்பவர்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் அவற்றை வாசலில் அமர்ந்தவாறு மணியை கோர்த்துக் கொண்டு இருக்க ருத்ரா விழி அகலாது பார்த்துக் கொண்டு வந்தாள். ஒரு வீட்டில் கடையாகவே வைத்திருக்க அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்ணில் ஒரு பிரேஸ்லைட் கண்ணை பறித்தது. கருப்பு மணிகளும் தங்க நிற வளையமும் கோர்கப்பட்டு நடுவே சிறிய இதய வடிவம் கொண்ட பிரேஸ்லைட் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனை பார்த்தபடியே கடக்க சென்றவளை தடுத்தான் ஸ்ரீ.
“அக்கா.. இந்த பிரேஸ்லைட் எவ்வளவு கா..” என அங்கு அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து ருத்ரா கண் வைத்த பிரேஸ்லைட்டை காட்டி கேட்க, “முப்பது ரூபா பா” என்று கூற உடனே அதனை வாங்கினான் ஸ்ரீ. ருத்ரா திகைப்புடன் அதிர்ச்சியாக பார்க்க அவளிடம் கையை குடு என்பது போல் கையை காட்டினான். “ஸ்ரீ..” என தயங்கியவள் கையை பிடித்து பிரேஸ்லைட்டை போட்டு விட்டவன், “உனக்கு இது அழகா இருக்கு ருத்ரா..” என ரசனை நிறைந்த விழிகளால் கூற, “தேங்க்ஸ்” என கூச்சத்துடன் கூறினாள்.
“சரி வா அடுத்த தெருவுக்கு போய் அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பாப்போம்” என ஸ்ரீ கூறி முன்னே நடக்க அவனின் கை சட்டையை பிடித்து தடுத்த ருத்ரா, அந்த பெண் பக்கம் திரும்பி “அக்கா இதே மாதிரி இருக்குற இன்னும் ஒன்ன எடுத்துக்குறேன்” என்று கூறி காசை குடுத்தவள் அதே போல் இருப்பதை எடுத்து ஸ்ரீ கையில் போட்டு விட்டாள். ஸ்ரீயின் மகிழ்ச்சியை பற்றி கூறவா வேண்டும்.. அதே போல் இருப்பதை அவன் கையிலும் போட்டு விட்டதில் இறக்கைகட்டி பறந்தான்.
இருவரும் ஜூலி மற்றும் கார்த்திக் இருக்கும் பக்கம் சென்றிட அங்கு ஜூலியோ கன்னம் சிவந்து நின்றுக் கொண்டு இருக்க கார்த்திக் உதட்டிற்குள் சிரிப்பை மறைத்தபடி நின்று இருந்தான். “என்ன ஆச்சு ஜூலி ஏன் இப்படி இருக்க?” என ருத்ரா அவள் கையை பிடித்துக் கொள்ள அவளோ இருந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் ருத்ரா கையை பார்த்து, “ஹே இது அழகா இருக்கு.. எங்க வாங்குன? எனக்கும் வேணும்” என ஆர்வமாய் கூறினாள். கார்த்திக், “உனக்கு அதே மாதிரி கிடைக்காது.. அது வேற ஆளுக்கு கிடைச்சிருச்சு.. உனக்கு வேணும்னா சொல்லு நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி வாங்கிக்கலாம்” என குறும்பாக ஸ்ரீ கையை காட்டியபடியே கூற ஜூலி கேலி உடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள். “ஆமா நீ ஜூலிய என்ன பண்ண? அவ அப்படி இருந்தா?” என ஸ்ரீ கார்த்திக் காதில் அமைதியாய் கேட்க லேசாய் சிரித்தான் கார்த்திக். “கைய புடிச்சி செடி நட்டு வச்சேன்.. அது ஒரு குத்தமாம்” என கமுக்கமாய் சிரிக்க, “நீ கொஞ்சம் ஓவர் ஸ்பீட்டா தான் போயிட்டு இருக்க..” என புருவம் உயர்த்தினான் ஸ்ரீ.
எல்லாருக்கும் ஜோடி கொடுத்துட்டு இந்த rajesh விட்டுட்டு vachittiye avanukkum எதாவது பாத்து பண்ணி vidu பாவம் பையன் romba feel பண்றான் 😂😂super da ❤️❤️
Avanuku Thane ethavathu panni vidalam😂 thanks darling 😍
இரண்டு ஜோடியை இப்படி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தா ராஜேஷ் புலம்பாம என்ன பண்ணுவான்? அவன் மட்டும் என்ன பாவம் பண்ணா அவனை ஏன் தனியாசுத்த வச்சிருக்கீங்க ??
😂 ராஜேஷ் சிங்கிள் சங்க தலைவன் கா. நன்றி அக்கா😍