Loading

அன்று சனிக்கிழமை சமிக்கு கல்லூரி விடுமுறை. அதனால் அவள் சிறிது தாமதமாக எழுந்து குளித்துவிட்டு கீழே சென்றாள்.

நளினி பரபரப்பாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். சமியை அங்குப் பார்த்த நளினி அவளிடம் வந்தார்,”என்னமா இப்ப தான் எந்திரிச்சியா??”

“ஆமா ஆண்டி, சாரி இன்னைக்கு காலேஜ் இல்லை அதான் கொஞ்சம் லேட்டா எந்திரிச்சுடேன்.”

“அடடா இதுக்கு எதுக்கு மா சாரிலாம். தினமும் சீக்கிரமா தான் எந்திரிக்குற!! இன்னைக்கு ஒரு நாள் லேட்டா எந்திரிச்சா தப்பில்லை. சரி வா நான் உனக்குப் பால் எடுத்துட்டு வர சொல்றேன்.” என்று கூறிவிட்டுச் சமையல் வேலை செய்யும் பெண்ணிடம் கூறி எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். பின் நளினி அங்கிருந்து சென்றுவிட சமி தான் ஆராய்ச்சியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலை செய்யும் பெண் பாலை சமியிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். அதை எடுத்துக் கொண்டு நளினியிடம் சென்றாள்.

நளினி தோட்டத்திலிருந்தார். சமி நளினியிடம் சென்று,”ஆண்டி இங்க என்ன நடக்குது??”

“இன்னைக்கு அமாவாசை, அதான் திதி கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அய்யர் வந்துருவாங்க. அவங்க வரதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டோம்னா சீக்கிரம் முடிஞ்சிரும்.”

“ஓ!! சரி ஆண்டி.” சமி அமைதியாக அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் ப்ரகாஷ்,ரிஷி மற்றும் முரளி அங்கு வந்தார்கள். சமி நளினியிடம்,”என்ன ஆண்டி ஆர்த்தி ஓட அப்பாவும் இங்க தான் திதி குடுப்பாரு??”

“ஆமாடா, வாசுகி இதெல்லாம் பண்ண மாட்டா, அவளுக்கு லேடீஸ் கிளப் போகத் தான் நேரமிருக்கும். கங்கா அம்மா அவளை எதுவும் சொல்ல மாட்டாங்க. அது ஒரு பெரிய கதை.(பெரு மூச்சு ஒன்று வெளியிட்டார்) அதனால் முரளி அண்ணா இங்க வந்து தான் தருவார். இது கங்கா அம்மா ஆர்டர்.”

“ஓ அப்போ நந்து எதுக்கு ஆண்டி இங்க வந்துருக்காரு?? அவரும் இரண்டு அங்கிள் மாதிரி வேஷ்டி கையில்லாத பனியனோட வந்துருக்காரு??”

“அது அது வந்து ஹான் என் தங்கைக்கும் தங்கை புருஷனுக்கும் அதாவது அவரோட தம்பிக்கும் அவன் தான் திதி கொடுப்பான். அதான்.”

“ஓ உங்களுக்குத் தங்கை இருந்தார்களா??”

“ஆமா, அக்கா தங்கையை அண்ணன் தம்பிக்குக் கட்டிக் கொடுத்தாங்க. ஒரு நாள் எதோ வேலை விஷயமா அவரோட தம்பி, என் தங்கச்சி அப்புறம் என் மாமனார் எல்லோரும் அவரோட தம்பியோட நண்பரைப் பார்க்கப் போனாங்க. அப்போ திரும்பி வரும் போது அந்த நண்பரும் இவங்க கூட வந்தார். மொத்தமா எல்லாரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க.”

“அச்சசோ!!!”

“ஆமா மா. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல அப்போ கங்கா தேவி அம்மா தான் இறுதி சடங்க முன்னாடி நின்னு பண்ணாங்க.”

“ஓ சாரி ஆண்டி.”

“அட பரவால மா. இதுல என்ன இருக்கு??” அப்பொழுது அய்யரும் வந்து விட நளினி அங்கிருந்து சென்றுவிட்டார். சமி அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் முரளி அவரின் தந்தைக்குத் திதி கொடுத்தார். பிறகு ப்ரகாஷ் அவரது தந்தை மற்றும் தாய்க்குத் திதி கொடுத்தார். பிறகு ரிஷி அவனின் சித்தப்பா சித்திக்குத் திதி கொடுத்தான். எல்லாம் முடிந்து அய்யருக்குச் சன்மானம் அளித்து விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.

“சரி வாங்கச் சாப்பிடலாம்.” நளினி அழைத்தார்.

“சரி மா நான் கிளம்பறேன்.” முரளி கூற.

“அண்ணா சாப்பிட்டு போங்க!!.”

“இல்லமா வீட்டில் சாப்பாடு ரெடியா இருக்கு. அதுவுமில்லாம அம்மா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.”

“சரி அண்ணா.” முரளி சென்றவுடன் ப்ரகாஷ் சமியைப் பார்த்து,”என்னமா நீ இன்னும் சாப்பிடலையா??”

“இல்லை அங்கிள். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பால் குடிச்சேன். அதான் அங்கிள்.”

“ஓ சரி மா.” சமி ரிஷியைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் ஏதோ யோசனையிலிருந்தான். சமிக்கு ஏதோ சரியாகத் தோன்றவில்லை. அவனிடம் பேச வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.

பிரகாஷ் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்று விட்டார். அன்று முதுநிலை வணிக நிர்வாகம்(MBA) அவர்களுக்கு மட்டுமே கல்லூரி இருந்தது. அதனால் ரிஷியும் கல்லூரி போகவில்லை. சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

சமிக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை. அவளுக்குப் போர் அடித்தது. அவள் வீட்டில் தன் அத்தையுடன் லூட்டி அடிப்பாள். ஆனால் இங்கு யாருமில்லாததால் மிகவும் கவலை அடைந்தாள். ரிஷியும் மூட் அப்ஸட்டாக இருந்ததால் ஆகாஷிற்கு ஃபோன் செய்தாள்.

“ஆஷ் எப்படா வருவ??”

“ஏய் ஒரு ஹலோ கூட சொல்லாம இப்படி கத்துற??”

“ம் இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ!!! எல்லாம் இந்த யாம்ஸால வந்தது. எதுக்கு என்ன தேவையில்லாம சென்னை அனுப்பினாங்க??”

“ஏய் முதல்ல கத்தாம விஷயத்தைச் சொல்.!!!”

“இன்னைக்கு எனக்கு காலேஜ் லீவ். எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா?? இந்நேரம் நான் அங்க இருந்திருந்தா லக்ஸ் கூட ஜாலியா இருந்திருப்பேன்.”

“சஞ்சய், ரிஷிலாம் இருக்காங்கல அங்க??”

“ஜெய்க்கு இன்னைக்கு காலேஜ் இருக்கு. நந்து இன்னைக்கு காலைல இருந்து மூட் அப்ஸட்ல இருக்காங்க. அதான் சொல்லு நீ எப்ப இங்க வருவ??”

“ஏய் இந்த சந்தர்ப்பத்தை நீ யூஸ் பண்ணிக்க வேண்டாமா?? போய் ரிஷிகிட்ட பேசு. எங்கயாவது வெளில கூட்டிட்டு போக சொல்லு. சாயந்தரமா அதுவும் ஆர்த்தி வர நேரமா பார்த்து நீங்க வாங்க. ரிஷிகிட்ட நீ நெருங்குரனு நினைச்சு லூஸு மாதிரி எதாவது பண்ணுவா அத நாம நமக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கலாம். ரிஷிகிட்ட இருந்து அவள பிரிச்சுரலாம்.”

“அப்படியா சொல்ற??”

“சம்யுக்தா நீ சென்னைக்கு போறதுக்கு முன்னாடி உன் மூளையை இங்க வச்சுட்டு போய்டியா??”

“ஏய் ஓவரா பேசதாட!!! என்னோட லட்சியம் என்னனு உனக்குத் தெரியும் தான?? கண்டிப்பா அந்த ஆர்த்தியையும் நந்துவையும் நான் பிரிச்சுடுவேன். அந்த ஆர்த்தி அழுகிறதைப் பார்த்து அவ பாட்டி கலங்கி நிக்கனும். அந்த காட்சியை நான் கண் குளிர பார்ப்பேன். இப்ப எனக்குப் போர் அடிக்குது. அதான் உனக்குக் கூப்பிட்டேன். சரி நீ சீக்கிரம் வா சரியா. நான் அதுக்குள்ள என்ன என்ன வேலை பண்ண முடியுமோ எல்லாத்தையும் பண்ணிடுறேன்.”

“சரி பார்த்துப் பண்ணு எதனாலும். நான் இன்னும் இரண்டு நாள்ல வந்துடறேன் சரியா??”

“என்ன இரண்டு நாளா?? ஏன் அவ்ளோ நாள்??”

“ப்ரீத்தி நான் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்குறேனு ஃபீல் பண்ணா. அதான். ஒரு டூ டேஸ் அவகூட இருந்துட்டு வரேன்.”

“சரி சரி. டூ டேஸ்க்கு மேல எடுத்துக்காத எனக்கு செம போர் அடிக்குது.”

“ஓகே. நான் சொன்னது ஞாபகம். எதனாலும் கேர்ஃபுல்லா பண்ணு சரியா.”

“ஹிம் ஓகே.” என்று கூறி தன் ஃபோனை வைத்துவிட்டு நந்துவை தேடிச் சென்றாள்.

நந்து தன் அறையில் திங்கள் அன்று எடுக்க வேண்டிய பாடத்திற்குக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான். சமி அவன் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

“வா யுக்தா!! எதாவது வேண்டுமா??”

“ஆமா நந்து. செம போர் அடிக்குது. நேத்து தான் ஜெய் சொன்னான் அவனுக்கு இன்னைக்கு காலேஜ் இருக்குனு. இந்த ஆஷ்யும் வர இரண்டு நாள் ஆகுமாம். ஜெய் முன்னாடியே சொல்லிருந்தா நான் ஊருக்கு போயிருப்பேன். நல்ல சான்ஸ் மிஸ் ஆக கூடாதுனு தான் இங்க இருந்தேன்.”

“நல்ல சான்ஸா?? என்ன சொல்ற யுக்தா??”

“அது அது இனிமே காலேஜ் வொர்க் அதிகமா இருக்கும். அப்புறம் வெளில எங்கயும் போக முடியாதுல அத சொல்ல வந்தேன்.”

“ஓ ஓ அத சொல்றியா!! சரி இப்ப என்ன போர் அடிக்குது அவ்ளோதான. சரி வா நாம வெளில போயிட்டு வருவோம்.”

“ஹைய் சூப்பர். டூ மினிட்ஸ்ல வந்துறேன்.” என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

பின் நந்துவும் சமியும் வெளியே சென்றார்கள். அவர்கள் முதலில் சென்றது பார்த்தசாரதி கோவில். அங்குச் சாமி கும்பிட்டுக் கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு ஃபோரம் மாலிற்கு சென்றனர்.

“யுக்தா எதாவது வாங்கனுமா நீ??”

“இல்ல நந்து இப்ப தான் அம்மா எல்லா வாங்கி கொடுத்தாங்க. அதனால எதுவும் வேண்டாம்.”

“அப்ப விண்டோ ஷாப்பிங் தானா??”

“ஆமா நந்து. அதுல ஒரு தனி கிக் இருக்கு.”

“இதுல என்ன கிக்கோ?? செம போர் அடிக்கும். நாம படத்துக்குப் போகலாமா??”

“ஸூயுர்(sure) போலாம்.”

பின் இருவரும் படத்துக்குச் சென்றனர். அந்த படம் முடிந்து ஒரு நல்ல ஹோட்டல் சென்று மதியம் உணவு முடித்தனர்.

“இப்ப எங்க போகலாம் நந்து??”

“வீட்டுக்குப் போகலாம் யுக்தா. எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு.”

“அதுக்குள்ளவா??? பீச்சுக்கு போயிட்டு அப்புறம் போகலாம் நந்து. ப்ளீஸ்.” மூஞ்சியைக் குழந்தை போல் வைத்துக் கொண்டு கேட்க ரிஷியால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. சிரித்துக் கொண்டே,”சரி வா.” என்று கூற சந்தோஷத்துடன் சமி அவனுடன் சென்றாள்.

பீச்சில் நன்றாக தண்ணியில் ஆட்டம் போட்டாள் சமி. நந்து மணலில் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வந்த சமி ரிஷியுடன் உட்கார்ந்தாள்.

“நீங்க ஏன் வரலை நந்து?? எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா??”

“இல்ல யுக்தா ஏதோ வர தோனல அதான்.”

“ப்ச் நான் காலைல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். உங்களுக்கு என்ன ஆச்சு?? ஏதோ மூட் அப்ஸெட்ல இருக்குறது போல் இருக்கே.”

“அது ஒன்னுமில்லை.”

“பொய் சொல்லாதீங்க!! என்கிட்ட சொல்ல இஷ்டம் இல்லனை பரவால விடுங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம்.” என்று கூறிக் கொண்டே எழுந்தாள். வேகமாக ரிஷி அவள் கையைப் பிடித்துக் கொண்டு,”உட்கார் யுகி. உன்கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல. முதல்ல உட்கார்.” என்று கூற அவளும் அமைதியாக உட்கார்ந்தாள்.

“எனக்கு இத யார்கிட்டயாவது சொல்லனும்னு தோணுது. ஆர்த்திகிட்டயோ இல்ல சஞ்சய்கிட்டயோ என்னால சொல்ல முடியல. முடியலைனு சொல்றத விட எனக்கு அவங்ககிட்ட சொல்ல தோனல. அதான் உண்மை. இப்ப நீ என்கிட்ட கேட்டதும் சொல்லனும்னு தோணுது. சொல்லவா??”

“சொல்லுங்க நந்து. என்னால முடிஞ்சத நான் செய்றேன்.”

“எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து நான் என் சித்தப்பா சித்திக்குத் திவசம் பண்றேன். ஆனால் எனக்கு டவுட் நான் ஏன் பண்ணனும்?? இத அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் கேட்டா சொல்ல மாட்டேங்கிறாங்க.”

“நானும் கேட்டேன் நந்து ஆண்டிகிட்ட. அவங்க என்கிட்ட சரியா அதுக்கான காரணம் சொல்லல. ஆனால் எதாவது ரீஸன் இருக்கும் நந்து.”

“எனக்கும் தெரியுது யுகி. ஆனால் என்னால முடியல. ஏதோ மனசுக்குக் கஷ்டமா இருக்கு.”

“நந்து நீங்க இன்னொருவாட்டி ஆண்டிகிட்ட கேளுங்க.”

“கேட்கனும். சரி அதவிடு. உன்கிட்ட சொன்னது கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு.”

“ஹா ஹா என்ன நந்து நீங்க?? நான் ஒன்னுமே பண்ணல. அப்புறம் எப்படி உங்களுக்கு நிம்மதியா இருக்கும்??”

“நீ எதுவும் சொல்லல, ஆனால் உன்கிட்ட சொன்னேன்ல அதுவே போதும். அத தான் சொன்னேன்.”

“சரி வாங்கப் போகலாம். இப்ப ஜெய் வந்துருப்பான்ல??”

“ம் வர டைம் தான். வா போகலாம்.”

இருவரும் வீட்டிற்குச் சென்றனர். சமி எதிர்பார்த்தது போல அதே சமயம் ஆர்த்தியும் சஞ்சயும் வீட்டிற்குள் நுழைந்தனர். ரிஷியும் சமியும் ஒன்றாக இறங்குவதைப் பார்த்த ஆர்த்திக்கு புசு புசுவென கோவம் வந்தது. அவளைப் பார்த்த சமிக்கு சிரிப்பாக வந்தது. இதைத் தான் அவளும் எதிர்பார்த்தாள். அவள் தங்களைப் பார்ப்பதை உணர்ந்து கொண்டு வேண்டுமென்றே நந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள். ஆர்த்தி கோபத்துடன் அவள் வீட்டிற்குச் சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்