Loading

முதல் நாள் காலேஜில், அறிமுக வகுப்பு மட்டுமே இருந்ததால் சமிக்கு சலிப்பாக இருந்தது. மதிய உணவு இடைவெளியில் சமி, சஞ்சய்க்குக் கால் செய்தாள்.

“ஜெய் என்னடா இவ்ளோ மொக்கையா இருக்கு?? மதியமும் இப்படி தான் இருக்குமா?”

“ஹேய் நான் தான் சொன்னேன்ல முதல் நாள் இப்படி தான் இருக்கும். நாளைல இருந்து தான் கிளாஸ் எடுக்க ஆரம்பிப்பாங்க.”

“அய்யோ இன்னைக்கு தான் அட்டென்டென்ஸ்(attendance) இல்லைல அப்ப நான் வீட்டுக்கு போகிறேன்.”

“தனியா எப்படிப் போவ?? இரு நான் வரேன். இரண்டு பேரும் சேர்ந்து போகலாம்.”

“உனக்கு கிளாஸ் இல்லையா??”

“எனக்கு இருக்கு ஆனால் நானே கிளாஸ் கட் அடிச்சுட்டு படத்துக்கு போகலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். உன்ன வீட்டில் விட்டுவிட்டு படத்துக்குப் போகிறேன் நான்.”

“ஏய் அப்ப நானும் படத்துக்கு வரேன். என்னையும் கூட்டிட்டு போ.”

“நான் பசங்க கூட போறேன் சமு. அதனால் இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்.”

“நீயும் இருக்க மாட்ட, நந்துக்கு கிளாஸ் இருக்கும். நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்கனும். அதுக்கு நான் இங்கயே இருக்கேன்.”

“ஹேய் சரி சரி வா உன்னையும் படத்துக்குக் கூப்பிட்டு போறேன். பார்க்கிங் ஏரியா வந்துரு.”

“அய்யா ஜாலி இதோ வந்துட்டேன்.” என்று மகிழ்ச்சியாகக் கூறினாள்.

சமி பார்க்கிங் ஏரியா வந்தாள். அங்கு சஞ்சய் தன் நண்பர்களுடன் நின்றுக் கொண்டிருந்தான்.

“சமு இவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ். இது அகில், அவன் ராம், அப்புறம் இவன் பரத்.”

“ஹாய். சரி போலாமா??”

“இரு சமு நீ வரேன் சொன்னல அதனால பரத் மற்றும் ராம் ஓட ஆளுங்களும் வராங்க.”

“வாவ் அப்ப நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்களா?? சூப்பர்.” அப்பொழுது இரண்டு பெண்கள் அங்கு வந்தார்கள். பரத் மற்றும் ராம் அவர்களின் துணையோடு சென்றார்கள். அகில் அவனது வண்டியிலும், சஞ்சய் மற்றும் சமி, பரத்தின் வண்டியிலும் சென்றார்கள்.

புகழ்பெற்ற அந்த மாலில் அவர்கள் அனைவரும் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது சஞ்சய்,”சமு உனக்கு ஃபிரண்ட்ஸ் யாரும் செட் ஆகலயா??”

“இல்லை. ஏனோ யாரும் என் மைன்ட் செட்டோட செட் ஆகல.” அப்பொழுது சமியின் ஃபோன் அடித்தது. வாசு தான் கூப்பிட்டிருந்தார்.

“ஐ பாப்ஸ் இப்ப தான் நினைச்சேன் உங்களுக்கு கால் பண்ணனும்னு. நீங்களே கூப்பிட்டீங்க.”

“சொல்லுடா.”

“பாப்ஸ் இன்னைக்கு முதல் நாள் ரொம்ப போரிங்கா இருந்துச்சு பாப்ஸ். அதான் ஜெய்யோட படத்துக்கு வந்துட்டேன்.”

“சரிடா மினிமாகிட்ட சொல்லிட்டியா??”

“அய்யோ பாப்ஸ் நீங்களே சொல்லிடுங்க. இல்லாட்டி என்ன திட்டியே ஒரு வழி ஆக்கிடுவாங்க.”

“சரிடா நான் சொல்லிக்கிறேன். நீ என்ஜாய் பண்ணு.” பின் சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு வைத்துவிட்டாள். பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு படம் பார்க்கச் சென்றனர்.

காலேஜில், ஆர்த்தி பார்க்கிங் ஏரியாவில் ரிஷிக்காகக் காத்திருந்தாள். அப்பொழுது ரிஷி அங்கு வந்து தன் வண்டியை எடுத்தான். ஆர்த்தி ரிஷியிடம்,”ரிஷி சஞ்சய் இன்னும் வரல??”

“சஞ்சய்யும் யுகியும் படத்துக்கு போயிருக்காங்க.”

“என்னது படத்துக்கா?? சஞ்சய் என்ட எதுவும் சொல்லல??”

“தெரியலையே.” என்று கூறிவிட்டு அவன் வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

“ரிஷி அப்ப நாம இரண்டு பேர் தான எங்காவது வெளில போகலாமா?”

“ஸாரி ஆர்த்தி இன்னைக்கு செம வேலை. நாளைக்குப் போகலாமா??”

ஆர்த்தி சோகமான முகத்துடன் சரி என்று தலை ஆட்டினாள். ரிஷி வேலைப் பளுவால் அவளைக் கவனிக்கவில்லை. நேராக தன் வீட்டிற்குச் சென்றான். ஆர்த்தி இறங்கியவுடன் அவன் வீட்டினுள் சென்றுவிட்டான். அதே நேரம் சஞ்சய்யும் சமியும் சிரித்துக் கொண்டே நுழைந்தனர். இதைப் பார்த்த ஆர்த்திக்கு கோவம் வந்தது. ஏனோ சமி வந்தவுடன் சஞ்சய் மற்றும் ரிஷி மாறியதாகத் தோன்றியது அவளுக்கு. அதே கோபத்துடன் தன் வீட்டிற்குச் சென்றாள்.

கங்காதேவி சாய்விருக்கையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். ஆர்த்தி உள்ளே வருவதைப் பார்த்த அவர் அவளை அழைத்தார். ஆனால் ஆர்த்தி வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள். இதைப் பார்த்த கங்காதேவி துணுக்குற்றார். வேகமாக அவளின் அறைக்குச் சென்றார். அங்கே கோவத்துடன் அமர்ந்திருந்த ஆர்த்தியைப் பார்த்து,”ஆர்த்தி கண்ணா, என்னடா ஆச்சு?? ஏன் இவ்ளோ கோவம்??”

“பாட்டி இந்த சம்யுக்தா வந்ததிலிருந்து எனக்குக் கொஞ்சம் கூட மரியாதை இல்லை பாட்டி. ஒரு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள ரிஷியும் சஞ்சயும் அவளுக்குத் தான் சப்போர்ட் பண்றாங்க. எனக்கு பிடிக்கவே இல்ல பாட்டி. இன்னைக்கு காலைல அவளுக்காக ரிஷி என்னை திட்டிட்டான். இப்ப சஞ்சய் அந்த சம்யுக்தா கூட படத்துக்கு போய்டு வந்திருக்கான்.”

“என்ன ஆர்த்தி சொல்ற??? இரண்டு பேரும் படத்துக்கு போனாங்களா??”

“ஆமா பாட்டி எனக்கு என்னமோ அவ சஞ்சயை வலைல விழ வைச்சுட்டாளோனு தோணுது.”

“அது கண்டிப்பா நடக்காது. நீ கவலை படாத.”

“எப்படி பாட்டி இவ்ளோ கான்ஃபிடன்டா சொல்றீங்க??”

“அதுலாம் அப்படி தான் கண்ணா. நீ கவலைப் படாத. அந்த பொண்ணுனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ ஜாலியா இரு.”

“பாட்டி அதான் கேட்டேன், எப்படி இவ்ளோ உறுதியாக சொல்லறீங்க??”

“அது அப்படிதான் கண்ணா, ப்ரகாஷ ஆஃப் பண்ற மாதிரி என்கிட்ட ஒரு விஷயம் இருக்கு. அதுனால நீ கவலைப்படாத. அந்த சம்யுக்தானால ஒன்னும் பண்ண முடியாது.”

“பாட்டி அப்படி என்ன விஷயம்??” கங்காதேவி ஆர்த்தியிடம் அந்த விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தாள் ஆர்த்தி.

“பாட்டி இவ்ளோ நடந்துருக்கா?? ப்ரகாஷ் அங்கிளா இப்படி?? நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல. சூப்பர் பாட்டி எப்படியோ எனக்கு ரிஷி கிடைக்கனும் அந்த சம்யுக்தா இவங்கள விட்டு போகனும். இதை சொல்லியே நீங்க அந்த சம்யுக்தாவ வீட்ட விட்டு அனுப்ப சொல்லுங்க பாட்டி.”

“அவசரப்படக் கூடாது ஆர்த்தி. எல்லாத்துக்கும் அதே விஷயத்த யூஸ் பண்ண கூடாது. நீ கொஞ்சம் அமைதியா இரு. அவள நான் பாத்துக்கறேன். சரியா!!”

“சரி பாட்டி, எனக்கு அவ போனா போதும்.”

“நீ கவலைப்படாம இரு. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் சரியா.”

“சரி பாட்டி.”

இங்கு ரிஷி வீட்டில் ரிஷி சமியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். “யுகி எதுக்கு நீ என்ட பேசாம இருக்க அத சொன்னா தான எனக்குத் தெரியும்.”

“ஜெய் நான் யாரிடமும் பேச மாட்டேனு சொல்லிடு.”

“ஏய் அதான் எதுக்குன்னு கேக்றேன்ல!!! சொல்லு.”

“நீங்க என்ன ஃப்ரண்டா நினைக்கல அதான் உங்களுக்கும் ஆர்த்திக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை நீங்க என்ட சொல்லல. அதுனால என்ட பேசாதீங்க.”

“அய்யோ அதான் பிரச்சனையா. நான் சொல்லக் கூடாதுனு இல்ல யுகி. ஏதோ மறந்துட்டேன்.”

“மறந்துட்டிங்களா?? என்ன சொல்றீங்க நீங்க?? அப்ப உங்களுக்கு ஆர்த்தியை பிடிக்காதா??”

“ஏய் அப்படிலாம் இல்ல. ஜஸ்ட் அவ எப்பவும் என்கூடயே இருந்தனால எனக்கு புதுசா எதுவும் தோனலை. அதான் எனக்கும் அவளுக்கும் நிச்சயம் ஆன மாதிரியே தெரியல. அதான் உன் கிட்ட சொல்லலை.”

“சரி சரி. உங்களை இன்னைக்கு பயங்கரமா கெஞ்ச விடனும்னு நினைச்சேன். பட் நீங்க தலை வலினு சொன்னியா அதான் பிழைத்துப் போங்கனு விட்டுட்டேன்”

“அடப்பாவி நல்லா வருவ நீ.”

“சரி சரி இங்க ஒரு ஆள் இருக்கிறது உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா??” என்று சஞ்சய் கேட்க. சமியும், ரிஷியும் அவனை கண்டுக்காமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சஞ்சய் அவர்கள் இருவரையும் அடிக்க துரத்தினான். இவர்கள் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கங்காதேவிப் பார்த்தார். சமியை முறைத்து விட்டு யாருக்கோ அழைத்தார். பின் பேசி விட்டு சமியைப் பார்த்து மர்மமாகச் சிரித்தார்.

இவர்கள் இங்கே விளையாடிவிட்டுச் சாப்பிடச் சென்றனர். அப்பொழுது யாரோ ஒருவர் வீட்டின் பின் பக்கமாக உள்ளே நுழைந்தார். யாருக்கும் தெரியாமல் சமியின் அறைக்குச் சென்றார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment