Loading

ராம் ரிஷியுடன், ப்ரகாஷ்அவரின் இல்லத்திற்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் நளினி ஓடிச் சென்று கட்டிக் கொண்டார்.

“ராம் ரொம்ப நன்றி. எப்படி ரிஷியை வெளில கொண்டு வரதுனு மண்டையை ஒடச்சிட்டு இருந்தேன். நீங்க எனக்கு வேலையே குடுக்காம செஞ்சுட்டீங்க. நான் உங்களுக்கு எப்படி கைம்மாறு செய்ய போறேனு தெரியலை.”

“ப்ரகாஷ் கைம்மாறுலாம் பெரிய வார்த்தை. என் சமி ஒன்னு சொல்லி செய்யாம இருக்க முடியாது. அதான். அவளுக்காகத் தான். நான் ரிஷியைத் தற்காலிகமாகத் தான் வெளில கொண்டு வந்திருக்கேன். அவனை முழுசா இந்தக் கேஸ்ல இருந்து வெளில கொண்டு வரனும்.”

“அது எப்படி முடியும்?? அந்த கங்கா அம்மா தான் கேஸ்ஸ வாபஸ் வாங்க மாட்டேனு சொல்றாங்களே. அதுவுமில்லாம ஆர்த்தி இப்ப எப்படி இருக்காளோ தெரியலை. அவளுக்கு எதுவும் ஆயிடுமோனு பயமா இருக்கு.” என்று கவலையோடு ப்ரகாஷ் கூற, ராம் ரிஷியைப் பார்த்தார். அவன் பயங்கர கோவத்துடன் இருந்தான்.

“அப்பா அவளுக்கு ஒன்னுமில்லை. அங்க ஹாஸ்பிட்டல்ல ஜூஸ் குடிச்சுட்டு ஹாயா படுத்துட்டு இருக்கா.” என்று ரிஷி கூற, கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பயங்கர கோவம்.

“அண்ணா என்ன சொல்ற நீ??” ரிஷி டாக்டர் சொன்ன அனைத்தையும் கூற அனைவருக்கும் அதிர்ச்சி.

“சை இப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா?? அதான் நந்துக்கு விருப்பமில்லைனு சொல்விட்டாரு. அப்புறம் இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சா அவங்க பேத்தி சந்தோஷமா இருப்பாளானு யோசிச்சாங்களா??”

“அதெல்லாம் அவங்களுக்கு அவசியமில்லை. அவங்களுக்கு இந்த சொத்து மேல தான் கண்ணு. எல்லாத்தையும் அவங்க ஆழனும்னு நினைக்கிறாங்க.”

“அப்பா என்ன சொல்றீங்க??” என்று ரிஷி கேட்க, ப்ரகாஷ இப்படி உளறி விட்டோமே என்று கவலை கொண்டார்.

“அது ஒன்னுமில்லைல ரிஷி, உன்னை ஆர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட ஷேர்ஸும் அவங்க கைக்கு போய்டும். அதை வைச்சு மொத்த கம்பெனியும் அவங்க எடுத்துக்கு ட்ரை பண்றாங்க.”

“சை கேவலம் ஒரு கம்பெனிக்காக அவங்க பேத்தி வாழ்க்கையைக் கெடுக்கப் பாக்குறாங்க. இப்ப என்ன என்னுடைய ஷேர்ஸ் தான வேண்டும். நானே எழுதிக் குடுத்துடுறேன். என்னை நிம்மதியாக இருக்க விட்டா போதும்.” எரிச்சலுடன் சொன்னான் ரிஷி.

“அப்பா என் பேர்ல இருக்குற ஷேர்ஸ் கூட எழுதிக் குடுத்துருங்க. எனக்கு அதலாம் எதுவும் வேண்டாம். நான் படிச்சிருக்கேன். நான் வேலை பார்த்து சம்பாதிச்சுக்கிறேன்.” என்று சஞ்சையும் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

“நீங்க ஏன்பா உங்களோட உரிமையை விட்டு தரனும்??”

“இல்லை அங்கிள், எனக்கும் சரி சஞ்சயக்கும் சரி ஏனோ இந்த கம்பெனியோட ஒட்ட முடியலை. அதனால தான் நான் பாடம் எடுக்க போய்டேன். சஞ்சயும் அவன் இஷ்டத்துக்குச் செய்யட்டும் அங்கிள்.”

“அது மட்டுமில்லை அங்கிள், இந்த கம்பெனினால தான் பிரச்சனைனா எங்களுக்கு அப்படி ஒரு கம்பெனி தேவையே இல்லை அங்கிள்.”

“சந்தோஷமா இருக்குபா உங்களை இப்படி பார்க்க. சரி ப்ரகாஷ், சஞ்சய் இரண்டு பேரும் என்கூட வாங்க. நாம ஹாஸ்பிட்டல் போய் அந்த அம்மாவ பார்த்துட்டு கேஸ்ஸ வாபஸ் வாங்க சொல்லிட்டு வரலாம்.”

“அங்கிள் அப்போ நானும் வரேன்.”

“வேண்டாம் ரிஷி. நீ இங்கயே இரு. நாங்க மட்டும் பார்த்துட்டு வரோம்.” என்று கூறிச் சென்றார்.

இவர்கள் சென்றவுடன் நளினி ரிஷி வெளியே வந்ததற்காகக் கோவில் சென்று சாமி கும்பிட்டு வரேன் என்று கூறி அவரும் வெளியே சென்று விட்டார். இப்பொழுது சமியும் ரிஷியும் மட்டுமே இருந்தனர். இருவரும் அமைதியாக என்ன பேசவென தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்.

“யுகி அந்த பாட்டி உன்னை வந்து மிரட்டுனேனு ஏதோ சொன்னாங்களே அப்படியா??”

“ஹா ஹா அந்த பாட்டி என்னை மிரட்டுனாங்களா. குட் ஜோக். மே பி அவங்களுக்கு அப்படி தெரிஞ்சுருக்கலாம்.”

“ஓ என்ன சொன்னாங்க??” தெரியாத மாதிரி ரிஷி கேட்டான்.

“வேற என்ன சொன்னாங்க?? நீ ரிஷிகூட எதுக்கு ஊர் சுத்துற?? அவனை நீ காதலிக்கிறியா அப்படி இப்படி வந்து கத்திட்டு போனாங்க.”

“ஓ நீ அதுக்கு என்ன சொன்ன??”

“நான் இவ்ளோ நேரம் யோசிச்சிட்டு இருந்தேன். உங்க பேத்தியோட மனநிலை பத்தி, ஆனால் நீங்க இப்படி பேசுனதும் முடிவே பண்ணிட்டேன் நான் நந்துவ தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன்.” என்று கூறிவிட்டு ரிஷியைப் பார்த்து கண் அடித்தாள் சமி.

“அடிப்பாவி அப்ப நான் போட்டு வாங்குறேனு தெரிஞ்சே தான் பேசுனியா??”

“அப்புறம் என்னை அவ்ளோ முட்டாளாவ நினைச்சீங்க??” என்று சமி கேட்க ரிஷி மெதுவாக அவள் அமர்ந்திருந்த ஸோஃபாவாவுக்கு வந்தான் உட்கார்ந்தான்.

“நந்து இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க??”

“ஏன்மா உட்கார கூட கூடாதா??”

“உட்கார மட்டும் தான் வந்தீங்கனா தாராளமாக நீங்க உட்காரலாம்.”

“ஹா ஹா. ஓகே ஓகே. ஆகாஷ் எங்க ஆளே காணோம்.”

“ஆஷ் கோவை போயிருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான். அப்பவே ப்ளைட் ஏறிட்டதா சொன்னான். மோஸ்ட் ப்ராபபலி(probably) இப்ப வந்துடுவான் தான் நினைக்கிறேன்.”

“ஓகே ஓகே. சரி எனக்கு ஒரு ஒர்க் இருக்கு. இப்ப போனா தான் செய்ய முடியும். நான் முடிச்சுட்டு வந்துடுறேன். அம்மா இப்ப வந்துடுவாங்க.” என்று கூறிவிட்டு ரிஷி அங்கிருந்து சென்றுவிட்டான். சமிக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அப்படி என்ன முக்கியமான வேலை இருக்க போகிறதென்று.

ஹாஸ்பிட்டல் வந்தவர்கள் நேராக ஐ.சி.யு இருக்கும் பகுதிக்குச் சென்றனர். இவர்கள் மூவரையும் பார்த்தவுடன் முரளி கோவமாக வந்து,”எதுக்கு இங்க வந்தீங்க?? என் பொண்ணு உயிரோட இருக்காளா இல்லை செத்துட்டாளானு பார்க்க வந்தீங்களா??”

“என்ன மனுஷங்க நீங்க??? உங்களுக்கு புடிச்சா நிச்சயம் பண்ணிக்கணும் வேண்டாம்னா நிப்பாட்டிடனும்?? அப்படி தான?? ஆர்த்தி எவ்ளோ ஆசையா இருந்தா தெரியுமா உங்களுக்கு?? ஆர்த்திக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க எல்லாரையும் நான் சும்மா விட மாட்டேன்.” என்று வாசுகி கூற,

“இரண்டு பேரும் பேசி முடிச்சுட்டீங்களா?? எங்க உங்களுக்குக் கதை எழுதிக் குடுத்த கங்கா தேவி அம்மா??” என்று ராம் நக்கலாகக் கேட்க, முரளியும் வாசுகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன உளறுகிறீர்கள்??”

“நான் உளறல!! தெளிவா தான் பேசுறேன்.”

“அங்கிள் ஒரு வேலை இவங்களுக்கும் தெரியாது போல்.” என்று சஞ்சய் கூற இருவரும் குழம்பிப் போய் நின்றனர். அப்பொழுது டாக்டருடன் அங்கு வந்தார் கங்கா தேவி. இவர்களை அலட்சியத்துடன்,”எதுக்கு இங்க வந்தீங்க?? நீங்க எவ்ளோ கெஞ்சுனாலும் நான் கேஸ வாபஸ் வாங்க மாட்டேன்.”

“நாங்க எதுக்கு கெஞ்சனும்?? சஞ்சய் அவங்க நம்மகிட்டயா பேசுறாங்க??” என்று நக்கலாக ராம் வினவினார்.

“நம்மலை தான் பார்க்கிறாங்க. அப்ப நம்மகிட்ட தான் இருக்கும். ஆனால் அவங்க என்ன பேசுறாங்கனு தான் புரியலை.” இவர்கள் இருவரும் தன்னை அவமானப் படுத்துகிறார்கள் என்று கோவத்துடன்,”என்ன ப்ரகாஷ் இரண்டு பேரையும் பேச விட்டு அமைதியா இருக்க?? உன் பையன் வெளில வர வேண்டாமா??”

“அம்மா அப்படிலாம் சொல்லாதீங்க. எனக்கு என் பையன் தான் முக்கியம். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன். அவங்க பேசுனது எதையும் மனசுல வச்சுக்காதீங்க.”

“அப்போ உன் பையன் என் பேத்தியைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனு எழுதித் தரச் சொல். நான் கேஸ் வாபஸ் வாங்கிடுறேன்.”

“அம்மா கண்டிப்பா நான் எழுதி வாங்கி தரேன். ” கங்கா பாட்டி ஆணவமாகப் பார்க்க ப்ரகாஷ் தொடர்ந்தார்,”இப்படி பேசுவேனு தான நீங்க எதிர்பார்த்தீங்க. ஆனால் கண்டிப்பா நான் அப்படி செய்ய மாட்டேன்.” என்று ப்ரகாஷ் தீவிரமாகக் கூற, ராமும் சஞ்சயையும் பாட்டியைப் பார்த்து,”தொப்பி தொப்பி…” என்று சிரித்தனர்.

“இது ஹாஸ்பிட்டல். இங்க இப்படி தான் பிஹேவ் பண்ணுவீங்களா?? அதுவும் ஐ.சி.யு. முன்னாடி??” என்று டாக்டர் சத்தமாகக் கூறினார்.

“ஓ நீங்க தான் அந்த டாக்டரா?? சரி உங்க பேர் சொன்னீங்கனா உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வசதியா இருக்கும்.”

டாக்டர் ஒரு நிமிடம் அதிர்ந்து,”எதுக்கு என் மேல் நீங்க கம்ப்ளைன்ட் குடுக்குறீங்க??”

“பின்ன நல்லா இருக்குற பொண்ண சீரியஸ் கேஸ்னு ஐ.சி.யு.ல வச்சிருக்கீங்க. அதுவுமில்லாம நீங்க அந்தப் பொண்ணு உயிர் போற நிலைமைல இருக்கானு பொய்யா போலிஸ்கிட்ட சாட்சி சொல்லிருக்கீங்க. இதலாம் சேத்து நாங்க உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ண போறோம்.” என்று ராம் கூற கங்கா பாட்டியும் டாக்டரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

“அம்மா என்ன சொல்றார் இவர்??”

“ஓ அப்போ நிஜமாவே உங்களுக்கு விஷயம் தெரியாதா?? உங்க பொண்ணுக்கு ஒன்னுமில்லை. ஜாலியா ஐ.சி.யு.ல படுத்திருக்கா.” என்று ராம் கூற,

“என்ன சொல்றீங்க??”

“நான் சொல்றதை விட காட்சியா இந்த வீடியோவில் பாருங்க.”என்று கூறி அவரது கைப்பேசியைக் காட்டினார். அதில் ஆர்த்தி சிரித்துக் கொண்டு பாட்டியிடம் பேசுவது பின் டாக்டர் அங்கு வந்து ரிஷிக்கு எதிராக பொய் சாட்சி சொன்னதை சொல்லி தனக்கு இரண்டு லட்சம் கேட்டது என் தெளிவாகப் பதிவாகி இருந்தது. அதைப் பார்த்து நான்கு பேரும் அதிர்ச்சியடைந்தனர்.

“அம்மா அப்போ ஆர்த்திக்கு ஒன்னுமில்லையா?? எங்ககிட்ட கூட நீங்க ஏன் மா சொல்லலை?? இரண்டு பேரும் எவ்ளோ பயந்துட்டு இருந்தோம்?? ஆனால் நீங்க?? சத்தியமா உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை. இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம் வா வாசுகி போகலாம்.” என்று கூறி முரளி வாசுகியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

“அய்யோ சார் ஏதோ பணத்துக்கு ஆசைப் பட்டு இப்படி பண்ணிட்டேன். என் மேல எதுவும் கம்ப்ளைன்ட் குடுத்துடாதீங்க. நானே ஸ்டேஷன் வந்து உண்மையை சொல்றேன்.” என்று கூறினார்.

“தேவையில்லை. இந்த கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்குறது மட்டும் தான் இப்ப முக்கியம். என்ன மா நீங்க வாபஸ் வாங்குறீங்களா இல்லை எங்க மேல உள்ள பகைல நீங்க இப்படி பொய் கம்ப்ளைன்ட் குடுத்துருக்கீங்கனு உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் தரட்டுமா??” என்று ராம் கேட்க,பாட்டி,”ஜெயிச்சுட்டீங்கனு நினைக்க வேண்டாம். நான் நினைச்சதை முடிக்காம விட மாட்டேன். அந்த ரிஷியை என் பேத்தி கழுத்துல தாலி கட்ட செய்யாம நான் ஓயமாட்டேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இவர்களும் நிம்மதியுடன் வீட்டுக்குச் சென்றனர்.

ரிஷி வீட்டில் அனைவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“மாம்ஸ் அந்த வீடியோ எப்படி கிடைச்சது உங்களுக்கு??”

“நானும் ரிஷியும் ஹாஸ்பிட்டல் போனோம்ல அப்போ அங்க இருந்த ஒரு நர்ஸ்கிட்ட சொல்லி என் ஃபோனை அந்த ஐ.சி.யு.ல ஆர்த்தி தெரியுற மாதிரி ஆனால் அவங்களுக்கு தெரியாத மாதிரி வைக்கச் சொன்னேன். திரும்பி இப்ப போகும் போது என் ஃபோனை வாங்கிட்டேன். ஸிம்பில்” என்று கூறினார்.

“இதுக்கு தான் ஒரு ஃபோலிஸ் கூட வேண்டும்னு சொல்றது.” என்று சமி சிரித்துக் கொண்டே கூறினாள். அப்பொழுது வீட்டின் வெளியே கார் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஆகாஷுடன் ஒரு பெண் உள்ளே வந்தாள். வந்தவள் வேகமாக ஓடி வந்து சமியைக் கட்டிக் கொண்டு,”சமி சென்னை வந்ததும் என்னை மறந்துட்ட போல.”

“ஏய் உன்னை மறக்கறவளா இருந்தா எதுக்கு ஆகாஷை அனுப்பி உன்னை வரச் சொல்ல போறேன்??”

“என்னது நீ தான் ஆகாஷ் அண்ணாவை அனுப்பினாயா??”

“என்ன உன் நொண்ணன் அவனா வந்து கூட்டிட்டு போறேனு சொன்னானா??”

“அண்ணா இப்படி என்னை ஏமாதிட்டீங்களே??”

“சரி சரி. இங்க நான் ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன்.” என்று ராம் கூற, அந்தப் பெண் தன் தலையில் அடித்துக் கொண்டு,”சாரி சார்.” என்று கூறி அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

“சார் லக்ஷ்மி மேடம் எங்கே??”

“அவளை இப்பத்தான் இங்க வானு கூப்பிட்டேன். இரண்டு நிமிஷத்துல வந்துருவா.”என்று கூறி முடித்தார் லக்ஷ்மி உள்ளே நுழைந்தார். அவரின் பின்னால் கங்கா பாட்டியும் உள்ளே வந்தார். பாட்டியைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தாள். அவரிடம் வேகமாகச் சென்று, அவரின் தோள்பட்டையைப் பிடித்து,”உங்க நிழலே என் மேல் படக் கூடாதுனு தான் நான் இத்தனை வருஷம் எங்கேயோ இருந்தேன். இப்படி மறுபடியும் எதுக்கு என் முன்னால் வந்து நிக்குறீங்க??” என்று கோவமாகக் கேட்டாள். அனைவரும் குழப்பமாகப் பார்த்தனர்.

“ஷாம் என்னாச்சு உனக்கு?? ஏன் இப்படி பண்ணுற??” என்று ஆகாஷ் கேட்டான்.

“அய்யோ அண்ணா என் வாழ்க்கையைக் கெடுத்த மனுஷி இதோ இந்த கங்கா தேவி தான்.” என்று கூற அனைவருக்கும் அதிர்ச்சி.

“ஏய் யார் நீ?? உன்னை நான் முன்ன பின்ன பார்த்ததே இல்லை. இதுல உன் வாழ்க்கையைக் கெடுத்தது நானா??”

“ஓ அப்ப என்னைத் தெரியாமல் தான் சென்னை வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்துலயே என்னைத் தேடி வந்தீங்களா??”

“ஏய் என்ன லூசு மாதிரி பேசுற?? நான் உன்னைத் தேடி வந்தேனா?? நான் இதோ நிக்கிறானே ரிஷி அவனை உண்டு இல்லைனு பண்ண தான் வந்தேன்” என்று கூற, அந்தப் பெண் ரிஷியைப் பார்த்து,”நீ ரிஷி நந்தனா??” என்று கேட்க, ரிஷி முழித்துக் கொண்டு தலை ஆட்டினாள். வேகமாக ஓடிச் சென்று அவன் கையைப் பிடித்து,”என்னைத் தெரியலையா உனக்கு??”

“சாரி நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை.”

“அய்யோ நண்டு நான் தான் உன்னோட ஷாம்பு, ஷாம்பவி.” என்று கூற அந்த அனைவரும் அதிர்ந்தனர்.

பாட்டி ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தவுடன் அவர்கள் வீட்டிற்குக் கூட செல்லாமல் ரிஷி வீட்டிற்கு வந்தார். அவர் கோவமாகப் போவதைப் பார்த்து ஆர்த்தி தன் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சமயம் தான் அந்தப் பெண் ரிஷியின் கையைப் பிடித்து அவள் தான் ஷாம்பவி என்று கூறிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு அவர்கள் சிலையாக நின்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்