Loading

“நண்டு நான் தான் உன்னோட ஷாம்பு, ஷாம்பவி.” என்று கூற அனைவரும் அதிர்ந்தனர். சமி, ஆகாஷ், ராம் மற்றும் லக்ஷ்மி திகைத்தனர்.

“ஷாம் என்ன சொல்ற?? ரிஷியா உன்னோட நண்டு??” என்று ஆகாஷ் கேட்க

“ஆமா அண்ணா. நான் சொல்லிட்டு இருந்த நண்டு இவன் தான்.” என்று கூற, மற்றவர்களுக்கு என்ன கூற என்று தெரியவில்லை. நொடியில் தன்னை சமன் படுத்திய கங்கா பாட்டி,”ஏய் யார் நீ?? ஷாம்பவி செத்து பத்து வருஷம் ஆச்சு. இப்ப வந்து நான் தான் ஷாம்பவினு கதை விடுறியா??”

“இப்படி சொல்லி தான் எல்லோரையும் நம்ப வச்சுட்டு இருக்கீங்களா?? சை நீங்க இவ்ளோ கீழ்த் தரமா இருப்பீங்கனு நான் யோசிக்கவே இல்லை.”

“யாரைப் பார்த்து என்ன வார்த்தைச் சொல்ற??” என்று அவளை அடிக்கப் போக, ஆகாஷ் நடுவில் வந்து அவரின் முகத்தின் நேராக,”கை மேல பட்டுச்சு அவ்ளோதான். எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்க.” என்று கோவமாகக் கூற, கங்கா பாட்டி ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்.

“ஏய் முதல்ல அவளை யார்னு சொல்ல சொல்லு!! அவ எதுக்கு இப்ப ஷாம்பவினு பொய் சொல்லிட்டு இங்க வந்துருக்கா??”

“நான் ஒன்னும் பொய் சொல்லலை.” என்று கூறி, வேகமாக தன் கைப் பையிலிருந்து ஒரு ஃபோட்டோவைக் காட்டினாள். “இது என்னோட அப்பா ஈஸ்வர். நானும் அவரும் எடுத்துக் கிட்ட புகைப்படம் இது. இப்ப நம்புறீங்களா??” என்று கேட்டாள்.

“இல்லை இதை நம்ப முடியாதுனு நீங்க சொன்னீங்கனா இன்னொன்று சொல்கிறேன். அன்னைக்கு நான் வீட்டை விட்டு வெளில போனேனே அப்போ நீங்க என் பின்னாடி வந்தீங்க. என்னை ஒருத்தன் கூட்டிட்டு போறதைப் பார்த்துட்டு அப்படியே வேற பக்கம் போய்டீங்க. இப்பவாவது என்னை நம்புறீங்களா.” என்று கேட்க, கங்கா பாட்டிக்கு வேர்த்துக் கொட்டியது. அவர் ஷாம்பவி பார்க்கவில்லை என்று தான் நினைத்தார். இப்பொழுது அனைவரும் அதிர்ச்சியுடன் பாட்டியைக் கேள்வியாகப் பார்த்தனர்.

“என்ன எல்லாரும் என்னைப் பார்க்கறீங்க?? இவள் யாருனே தெரியலை. இவ சொல்றதை நீங்க நம்புறீங்களா??”

“அப்ப நான் பொய் சொல்றேனு சொல்றீங்க அப்படி தான??”

“ஆமா நீ பொய் தான் சொல்ற.”

“ஓ அப்ப நான் சொன்ன எல்லாம் நடக்கலைனு உங்க ஆருயிர் பேத்தி மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க பார்க்கலாம்.” என்று கூற, சமியும் ஆகாஷும் மனதிற்குள் அவளுக்கு சபாஷ் போட்டனர். பாட்டியோ இவள் இப்படிக் கூறியவுடன் என்ன செய்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

“அம்மா அவ சொல்றதும் சரி தான். உங்களுக்கு நீங்க பெத்த பையனை விட நான் பெத்த பொண்ணு மேல தான் பாசம் ஜாஸ்தி. அதனால அவ மேல சத்தியம் பண்ணுங்க அம்மா.” என்று முரளி கூற, பாட்டிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

“என்னங்க நீங்களே இப்படி பேசுறீங்க!!! அத்தையை சத்தியம் பண்ண சொன்ன நாமலும் அவங்க மேல சந்தேகம் படுற மாதிரி ஆகாதா??” என்று வாசுகி கேட்க, ஷாம்பவி அவரை நோக்கி,”ஓ தி கிரேட் வாசுகி நீங்க தானா?? மண்ணிச்சுடுங்க எனக்குச் சுத்தமா உங்க முகம் ஞாபகத்துல இல்லை. அது எப்படி இருக்கும் நீங்க பெத்த பொண்ணு எக்கேடு கெட்டு போனாலும் உங்களுக்கு உங்க சந்தோஷம் தான முக்கியம். அதனால தான என் அப்பா இறந்த இரண்டாவது மாசத்துலயே உங்க அக்கா கணவரையே கல்யாணம் பண்ண ஆள் ஆச்சே.” என்று ஏளனமாகக் கூற, வாசுகிக்கு சுறுக் என்றது. அவருக்கு அவளை எதிர்த்துப் பேச முடியவில்லை.

“இப்பவாவது என்னை நீங்க நம்புறீங்களா நான் தான் ஷாம்பவினு. நான் சொல்றது பொய்யா இருந்திருந்தா இந்நேரம் அவங்க சத்தியம் பண்ணிருப்பாங்க.” என்று கூற அனைவரும் அவள் உண்மையைத் தான் கூறுகிறாள் என்று அமைதியாக இருந்தனர்.

“அப்ப நீ தான் என் ஷாம்புவா??” என்று ரிஷி கேட்க,

“ஆமா நண்டு. நீயாவது என்னை நம்பு.”

“கண்டிப்பா உன்னை நம்புறேன் நான். ஏனா நான் உன்னை எல்லார் முன்னாடியும் ஷாம்புனு கூப்பிட்டது இல்லை. நாம தனியா இருக்கும் போது மட்டும் தான் கூப்பிட்டு இருக்கேன். நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்த ஒன்று. அதனால் நீ தான் ஷாம்பவி.” என்று ரிஷி அழுத்தமாகக் கூறினான்.

“அம்மாடி நானும் நம்புறேன். நீ தான் ஷாம்பவினு. ஆனால் இத்தனை நாள் எங்க மா இருந்த??” என்று முரளி கேட்க,

“அவ எங்களோட ஆஸ்ரமத்துல தான் இருந்தா.” என்று ராம் கூறினார்.

“என்னது ஆஸ்ரமத்துலயா??? உனக்காக இங்க நாங்களாம் இருக்கும் போது எதுக்கு மா ஆஸ்ரமத்துல இருந்த??”

“எனக்காக இங்க யாரும் இல்லை. என்னைப் பெத்த அம்மாவே கண்டுக்கலை அப்புறம் நான் எப்படி மத்தவங்களை நம்ப முடியும்??”

“என்ன மா இப்படி பேசுற.”

“என்னை இப்படி பேச வச்சது உங்க அம்மா,மனைவி அப்புறம் உங்க பொண்ணு தான்.”

“நான் ஒத்துக்கிறேன். அம்மாவும் வாசுகியும் தப்பு செஞ்சுருக்காங்க ஆனால் ஆர்த்தி என்ன பண்ணா??”

“என்ன பண்ணலை?? அவளால தான் நான் வீட்டை விட்டு போனதே. அதனால் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியுமா??? ராம் ஸார் மட்டுமில்லைனா நான் இப்ப எங்கயாவது பிச்ச எடுத்துட்டு இருத்துருப்பேன் இல்லாட்டி எதாவது நாட்டுல என் உடம்ப வித்து வாழ்ந்துட்டு இருந்திருப்பேன்”

“என்ன மா என்ன என்னமோ சொல்ற??” என்று முரளி கேட்க,

“ப்ச் என்ன பேசுற ஷாம்பவி??” என்று லக்ஷ்மி அதட்ட,

“இல்லை மா இது தான் கண்டிப்பா நடந்திருக்கும். நீங்க இல்லைனு சொல்ல முடியாதே!!!”

“பழசைலாம் எதுக்கு மா பேசிகிட்டு??”

“இவங்களுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியனும். ஆனால் தெரிஞ்சாலும் இவங்க சந்தோஷம் தான் படுவாங்க. என் விதியை நினைச்சு நான் தொந்துட்டு இருக்கேன் மா. ஏதோ எங்க அப்பா செஞ்ச புன்னியம் ராம் ஸார் என்னை காப்பாற்றினார். இல்லாட்டி?? அந்த நாட்களை இப்ப நினைச்சாலும் உடம்புலாம் பதறுது மா.” என்று கூற லக்ஷ்மி அவளை ஆதரவாக அனைத்துக் கொண்டார். பாட்டி,ஆர்த்தி மற்றும் வாசுகி தவிர மற்றவர்களுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தங்கள் மேல் கோவம் கூட இருந்தது. இவளை அப்படியே விட்டு விட்டோமே என்று.

“ஏய் இப்ப நல்லா தான இருக்க. வீட்டை விட்டு ஓடிப் போனது உன் தப்பு என்னமோ நாங்க ஓடி போகச் சொன்னது மாதிரி பேசிட்டு இருக்க??”

“போதும் நிறுத்துங்க. நீங்க நேரடியா சொல்லலை ஆனால் நீங்க தான் காரணம்.” என்று கூறிவிட்டுக் கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்தது என்று கூறத் தொடங்கினாள்.

பத்து வருடத்துக்கு முன்பு, வாசுகிக்கு அப்பொழுது தான் திருமணம் ஆகி முரளி வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஷாம்பவி ரிஷியுடனும் சஞ்சயுடனும் விளையாடிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஆர்த்திக்கு கோவமாக வந்தது. இத்தனை வருடத்தில் அவளுடன் ரிஷியும் சரி சஞ்சயும் சரி விளையாடியது கிடையாது. இப்பொழுது ஷாம்பவியுடன் விளையாடுவதும் அவளைக் கொஞ்சுவதையும் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பயங்கர கோவம் வந்தது. ஷாம்பவியை அழ வைக்க வேண்டுமென நினைத்தாள். உடனே வாசுகியிடம் சென்று,”அம்மா தங்கச்சி பாபா என் கூட விளையாட மாட்டிங்குறா. என்கூட விளையாட சொல்லுங்க மா.” என்று அழுது கொண்டே கூற, உடனே வாசுகி ஷாம்பவியை தேடி வந்தார். அவள் அப்பொழுது ரிஷியுடன் பேசிக் கொண்டிருந்தாள். சஞ்சயை நளினி அழைத்ததால் அவன் வீட்டுக்குச் சென்று விட்டான்.

“ஷாம்பவி.” என்று வாசுகி கூப்பிட, அவள் ரிஷியிடம் சொல்லிவிட்டு வாசுகியிடம் வந்தாள்.

“என்ன மா??”

“நீ ஏன் அக்காகூட விளையாட மாட்டீங்குற?? போய் அவ கூட விளையாடு.”

“அம்மா நான் நண்டு கூட விளையாடிட்டு இருக்கேன். அக்காவ அங்க வரச் சொல்லுங்க.” என்று கூற,

“ஆர்த்தி நீ அவங்க கூடப் போய் விளையாட வேண்டியது தான??”

“பாட்டி வீட்டுக்குள்ள தான் விளையாட சொல்லிருக்காங்க. நான் வெளில போக மாட்டேன்.”

“ஷாம்பவி அப்ப நீ எல்லாரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வா. இங்க விளையாடுங்க.” அவர் கூற, இவள் வேகமாகப் போய் ரிஷியைக் கூப்பிட அவன் வர மாட்டேன் என்று கூறிவிட்டான்.

“அம்மா நண்டு வரலை. அதனால நானும் வரலை.” என்று கூற, ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள். வாசுகிக்கு எரிச்சலாக இருந்தது.

“ப்ச் சை இம்சையா இருக்கு.” என்று வாய்க்குள் முணங்கி விட்டு,”ஷாம்பவி இப்ப நீ வராட்டி உன்னை அடிச்சுருவேன். ஒழுங்கா வாடி இங்க.” என்று கோவமாகக் கூற, ரிஷி அவளை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டுச் சென்று விட்டான். ஷாம்பவி சோகத்துடனே உள்ளே வந்தாள்.

“ஒழுங்கா அக்கா கூட உள்ளேயே விளையாடு சரியா. இன்னொரு வாட்டி என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார். ஆர்த்தி அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,”இங்க பார் இனிமே நீ ரிஷிகூடயோ சஞ்சயைகூடயோ விளையாடக் கூடாது புரியுதா??” என்று கேட்டாள்.

“நான் ஏன் அவங்க கூட விளையாடக் கூடாது??”

“இது என் வீடு நான் சொல்றதை தான் நீ கேட்கனும். அதனால இனிமே அவங்க கூட விளையாட கூடாது.”

“அதலாம் முடியாது நான் விளையாடுவேன்.” என்று ஷாம்பவி கூற, ஆர்த்தி ஷாம்பவியின் கண்ணத்தில் அடித்து விட்டாள். ஷாம்பவி வலியில் அழ, ஆர்த்திக்கு இப்பொழுது பயம் வந்தது. எங்குத் தாயும் தந்தையும் தன்னை திட்டி விடுவார்களோ என்று.

“ஏய் அழாத. அழுத அப்புறம் பாட்டிகிட்ட சொல்லி உன்னை ஹாஸ்டல் அனுப்பிடுவேன்.” அதுக்கும் சேர்த்து இன்னும் அழுக, வாசுகி சத்தம் கேட்டு வந்துவிட்டார். அவர் வருவதைப் பார்த்து ஆர்த்தியும் அழுக ஆரம்பித்து விட்டாள்.

“ஏய் ஒரு டீ.வி. பார்க்க விடுறீங்களா இரண்டு பேரும்?? இப்ப எதுக்கு இரண்டு பேரும் அழுதுக்கிட்டு இருக்கீங்க??” ஷாம்பவி பேசும் முன் ஆர்த்தி,”அம்மா என் கூட விளையாட சொன்னதுக்கு முடியாது சொல்லி என்னை கீழ தள்ளி விட்டுட்டா. நீங்க வரதைப் பார்த்து அவ அழுக ஆரம்பச்சிட்டா.” என்று கூற, வாசுகி ஷாம்பவி முதுகில் இரண்டு அடி குடுக்க,”அம்மா அவ பொய் சொல்றா. அவ தான் என்னை அடிச்சா.” என்று கூற, வாசுகி ஆர்த்தியைப் பார்க்க,”அவ தான் பொய் சொல்றா. ரிஷிகூட விளையாட விடாம செஞ்சுட்டேனு என்னை அவ தான் தள்ளி விட்டா.” என்று கூற, வாசுகிக்குப் பைத்தியம் பிடிக்கும் போல் ஆகி விட்டது.

“என்னமோ பண்ணுங்க இரண்டு பேரும். ஆனால் இன்னொரு வாட்டி சத்தம் வந்துச்சு இரண்டு பேரையும் அடிச்சுடுவேன்.” என்றுக் கூறிவிட்டுச் சென்று விட்டார். ஆர்த்திக்குச் சந்தோஷமாக இருந்தது. ஷாம்பவிக்கு கோவம் வந்து ஆர்த்தியை நிஜமாகவே கீழே தள்ளி விட்டாள். அப்பொழுது உள்ளே வந்த கங்கா பாட்டி அதைப் பார்த்துவிட்டு ஷாம்பவியைப் போட்டு நன்றாக அடித்து விட்டு ஆர்த்தியைக் கூப்பிட்டுச் சென்று விட்டார். ஷாம்பவி இதை வாசுகியிடம் கூற, வாசுகியும் அவளைத் திட்டிவிட்டு சென்று விட்டார். ஷாம்பவிக்கு கஷ்டமாக இருந்தது. அவளுக்கு அவள் தந்தையின் ஞாபகம் வந்தது. சோகமாக அறைக்குச் சென்று தான் தன் தந்தையுடன் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளுக்குத் தோடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஆர்த்தி மற்றும் பாட்டியின் குரல் கேட்டது.

“பாட்டி எனக்கு இந்த ஷாம்பவியை பிடிக்கவே இல்லை. எதுக்கு அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்தீங்க??”

“கவலைப்படாத குட்டிமா, இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருப்பா. அதுக்கு அப்புறம் அவளை ஹாஸ்டல்ல சேர்த்துரலாம் சரியா.”

“அய்யா ஜாலி. அப்ப அவ இங்க இருக்க மாட்டாள??”

“இல்லை குட்டிமா. அவளைக் கொண்டு போய் ரொம்ப தூரம் இருக்குற ஹாஸ்டல்ல சேர்த்துரலாம். அங்க இவ தப்பு பண்ணினா கருப்பு ரூம்ல அடிச்சு வச்சுருவாங்க. உன்னையே அடிச்சுட்டாள அதான் அவளை அங்க கொண்டு போய் சேர்த்துரலாம்.” என்று கூற, இதைக் கேட்ட ஷாம்பவிக்குப் பயமாக இருந்தது. அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். வாசுகியிடம் சென்று,”அம்மா என்னை ஹாஸ்டல்லலாம் சேர்க்க வேண்டாம். பாட்டி வீட்டுல விட்ருங்க மா.”

“ஏய் எதுக்கு டி இப்ப அங்க போகனும். உன்னை இங்க கூப்பிட்டு வந்தே இருபது நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள என்ன உனக்கு??” என்று கேட்டார்.

“அந்த பாட்டி என்னை ஹாஸ்டல்ல சேர்க்கப் போறாங்களா.”

“அதனால என்ன?? நானும் உன் அப்பாகிட்ட அத தான் சொன்னேன். எவ்ளோ பிரச்சனை பண்ணார் தெரியுமா. ஒழுங்கா இங்க இருந்து போ. ஹாஸ்டல் போனா நீ நல்லா படிப்ப. இப்ப முதல்ல என்னை டி.வி. பார்க்க விடு.” என்று கோவமாகக் கூறினார். ஷாம்பவிக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை. அதனால் அவளே அவள் பாட்டி வீட்டுக்குச் சென்று விடலாம் என வெளியே வந்தாள். செருப்பை அணிந்து கொண்டு அந்தப் புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள். இதை தோடத்தில் இருந்து உள்ளே வந்த பாட்டி பார்த்துவிட்டார். இவள் எதற்கு இப்படி ஓடுகிறாள் என்று பார்க்க இவரும் வெளியே வந்தார். அதற்குள் அவள் ரொம்ப தூரம் சென்றிருந்தாள். அதனால் அவளைப் பார்க்க முடியவில்லை. அவருக்கு மனதிற்குள் திருப்தி. ஹாஸ்டல் செலவைக் கூட மிச்சம் வைத்துவிடுவாள் என்று. வேகமாக உள்ளே சென்று வாசுகியிடம்,”ஏய் உன் பொண்ணு எங்க போறா?? நான் கூப்பிட கூப்பிட வேகமா ஓடுறா??”

“என்னை அத்தை சொல்றீங்க??”

“ம் உன் பொண்ணு வீட்டை விட்டு ஓடிப் போய்டா.” என்று கூற வாசுகிக்குப் பயமாக இருந்தது. அவரும் வெளியே வந்து ஷாம்பவியை தேடினார். வாசுகி ஷாம்பவி சென்ற திசையில் போகப் பாட்டி அவரை தடுத்து “நான் இந்தப் பக்கம் பார்க்குறேன். நீ அந்தப் பக்கம் பார்.” என்று எதிர்த் திசையில் பார்க்கச் சொன்னார்.

பாட்டி மெதுவாக நடந்து வந்தார். அப்பொழுது அங்கு ஒருவன் ஷாம்பவியிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்.

வீட்டை விட்டு ஓடி வந்த ஷாம்பவி எந்தப் பக்கம் செல்வதென் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த ஒருவன் அவளிடம் வந்து,”பாப்பா நீங்க எங்க போகனும்??”

“பாட்டிகிட்ட போகனும்.” என்று கூற,

“உங்க பாட்டியை எனக்குத் தெரியும். வாங்க நான் கூட்டிட்டு போறேன்.” என்று கூற, அந்த குழந்தையும் அவன் தனக்கு உதவுகிறான் என்று எண்ணி அவனுடன் சென்றுவிட்டாள். ஆனால் போகும் முன் கங்கா பாட்டி இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டாள். அவரோ இவள் பார்ப்பதைப் பார்த்து வேகமாகத் திரும்பி அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment