என் ஜீவன் ஏங்குதே – 43

Loading

அத்தியாயம் – 43

விக்ராந்தின் குடும்பத்தினரும், நித்திலாவின் தாத்தா ஜெயமோகனும், பாட்டி வைத்தீஸ்வரியும் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்த சூழலே மிகவும் கனமாக இருந்தது.

அப்போது ஒரு செவிலியர் வந்து, “ஸார், இதுல ஒரு சைன் வேணும்,” என ஒரு படிவத்தை நீட்டினார்.

​”எதுக்கு?” என விக்ராந்த் சந்தேகத்துடன் கேட்க, “பேஷண்ட் கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிகலா இருக்கு ஸார், அதுக்கான ஃபார்மாலிட்டிதான்,” என அவர் சொல்லும்போதே மருத்துவர் வெளியே வந்தார்.

“மிஸ்டர் விக்ராந்த், நித்திலாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இப்போ இருக்கிற சூழ்நிலையில தாய் அல்லது சேய்… இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாற்ற முடியும்.”

​இந்த வார்த்தைகள் விக்ராந்தின் காதில் இடியாக இறங்கியது. வித்தார்த் பதறிப்போய், “டாக்டர், நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? ரெண்டு பேரையும் காப்பாத்திக் கொடுங்க,” என்றார் லட்சுமணன்…

ஆனால் மருத்துவர் உறுதியாக, “நாங்க முயற்சி செய்றோம், ஆனா முடிவு எங்க கையில இல்ல. நான் முன்னமே இதைப் பத்தி சொல்லியிருந்தேன். இப்போ நீங்கதான் முடிவெடுக்கணும்,” என்றார்.

​ஒரு நொடி கூட யோசிக்காமல், விக்ராந்த் கண்கள் கலங்க, ஆனால் உறுதியான குரலில்.. “என் நிலாவை காப்பாத்துங்க டாக்டர்!” என்றான்…

விக்ராந்தின் பதில் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மற்றவர்களுக்கும் வேறு வழி இல்லை என்றே தோன்றியது,… ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் தான் எதுவும் புரியாமல் விக்கித்து விழித்து நின்றனர்…

விக்ராந்த் அப்படியே இடிந்து போய் அமர்ந்துவிட்டான். ‘மனைவியைக் காப்பாற்றுங்கள்’ என்று சொல்லிவிட்டாலும், அவனது மனசாட்சி அவனை வாட்டியது.

நித்திலா இந்தக் குழந்தைக்காக எத்தனை கனவுகள் கண்டாள்! தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், கருவிலேயே குழந்தையை அழிக்க விரும்பாமல் ஒன்பது மாதம் சுமந்து வந்தவள் அவள். இப்போது அவளது உயிரைக் காப்பாற்றத் தன் வாரிசைத் தியாகம் செய்யத் துணிந்ததை அறிந்தால், அவளால் அதைத் தாங்க முடியுமா?

‘நம்ம குழந்தை எங்கே?’ என்று அவள் கேட்டால் என்ன பதில் சொல்வது? இந்தக் கேள்விகள் விக்ராந்தை மிகவும் சித்திரவதை செய்தன.

​நேரம் நகர நகர, ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக விக்ராந்திற்குத் தோன்றியது. சில நிமிடங்களில் ஆபரேஷன் தியேட்டரின் சிவப்பு விளக்கு அணைந்தது. மருத்துவர் வெளியே வருவதைக் கண்டும், விக்ராந்த் எழவே இல்லை. ‘ஏதாவது தவறான செய்தி வந்துவிடுமோ’ என்ற பயத்தில் அவன் உடல் அப்படியே உறைந்து கிடந்தது.

​அவனை நோக்கி வந்த மருத்துவர், விக்ராந்தின் தோளைத் தட்டி மெலிதாகப் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பைக் கண்டவுடனேயே விக்ராந்தின் இதயத்தில் ஒரு சிறு மின்னல் வெட்டியது போல நம்பிக்கை பிறந்தது.

​”டோன்ட் வொரி மிஸ்டர் விக்ராந்த்… உங்க மனைவியும், அதோட உங்க பொண்ணும் மிகவும் நலமாக இருக்கிறார்கள்!”
​மருத்துவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், விக்ராந்த் “டா.. டாக்டர்!” என்று அலறியபடி சட்டென எழுந்தான்.

அவனது எதிர்பார்ப்பை கண்ட மருத்துவர் மெல்லிய புன்னகையுடன்,.. ​”எஸ் மிஸ்டர் விக்ராந்த்… உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு!” என்று உறுதிப்படுத்திய அந்த நொடி, விக்ராந்தால் அதற்கு மேல் தன்னைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை நேரம் நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த அத்தனை பயமும், பதற்றமும் வடிந்து ஓட, தன் முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல விம்மி அழத் தொடங்கினான்.

​அவனது அந்தத் தூய்மையான அன்பைக் கண்ட மருத்துவர், நெகிழ்ச்சியுடன் அவன் அருகில் வந்து “சில நேரங்கள்ல டாக்டர் கைவிட்டாலும், ஏன் அந்த கடவுளே கைவிட்டாலும், நீங்க உங்க மனைவி மேல வச்சிருக்க அன்பு இருக்கே… அது அவ்வளவு சீக்கிரம் அவங்களை உங்ககிட்ட இருந்து பிரிக்க விடாது. உங்க மனைவியோட மனசு முழுக்க நீங்கதான் இருக்கீங்க. ஆபரேஷன் நடந்துட்டு இருந்த கிரிட்டிக்கலான நேரத்துல கூட, அவங்க நாவிலிருந்து ‘அத்து’ என்கிற பெயர் மட்டும்தான் வந்துட்டே இருந்தது. உங்க ரெண்டு பேரோட காதலைப் பார்க்க எனக்கே ரொம்பப் பெருமையா இருக்கு. எனிவே, கங்கிராஜுலேஷன்ஸ்!” என்றார்.

தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கம்பீரமாக எழுந்தவன்,..
“தேங்க்ஸ் டாக்டர்… தேங்க் யூ ஸோ மச்!  என் உயிரையே நீங்க எனக்கு திருப்பிக் கொடுத்திருக்கீங்க. இதை நான் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்,” என்றான் நன்றியில் தழுதழுத்த குரலில்.

​மெலிதான புன்னகையுடன் தலையசைத்தவர்,.. “உங்க மனைவிக்கு இன்னும் இரண்டு மணி நேரத்துல நினைவு திரும்பிடும். இப்போ உங்க மகளை நர்ஸ் கொண்டு வருவாங்க, நீங்க பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு மருத்துவர் நகர்ந்தார்.

அடுத்த ஓரிரு நிமிடங்களில் செவிலியர் அந்தக் குழந்தையை விக்ராந்திடம் கொண்டு வந்து கொடுத்தார். துருதுருவென்ற கண்கள், ரோஜாப்பூ போன்ற மென்மையான இதழ்கள், கூரான மூக்கு எனப் பேரழகோடு இருந்த தன் சின்னஞ்சிறு மலரை, ஏதோ ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைப் போல மிகவும் கவனமாகத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டான் விக்ராந்த். தன் காதலின் சாட்சியாய், தன் ரத்தமும் சதையுமாய் இருக்கும் அந்த உயிரைக் கண்டபோது அவனது இதயம் சந்தோஷத்தில் நிறைந்தது.

​குழந்தையை ஆசை தீரப் பார்த்தவன், அதன் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். அந்த நொடி அவன் ஒரு முழுமையான தந்தையாக உணர்ந்தான்.

அதே சமயம் குடும்பத்தினர் அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தனர்.

லட்சுமணன் தன் பேத்தியைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டபோது, அவருக்குச் சந்தோஷத்தில் கண்ணீர் சுரந்தது, பேத்திக்கு மென்மையாய் தன் முத்தத்தினை வழங்கினார், பின் அவர் குழந்தையை ஜெயமோகனிடம் கொடுக்க, அவருக்குத் தன் பேத்தி நித்திலாவை முதன்முதலில் கையில் ஏந்திய அந்தப் பழைய நினைவுகள் நிழலாடின. அவருக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

அடுத்தடுத்து வைத்தீஸ்வரி அன்னலட்சுமி, வித்தார்த், சுமித்ரா என ஒவ்வொருவராய் குழந்தையை வாங்கித் தங்கள் அன்பை வழங்கினர்…

​விக்ராந்தின் மனம் நித்திலாவைக் காணத் துடித்துக் கொண்டிருந்தது. ஓரிரு மணி நேரத்தில் நித்திலா கண்விழித்துவிட்டதாகச் செவிலியர் வந்து சொல்ல, விக்ராந்த் பதறியடித்துக்கொண்டு அறைக்குள் சென்றான்..

​மருத்துவமனையின் அந்தப் படுக்கையில் மிகவும் சோர்ந்து காணப்பட்டாலும், விக்ராந்தைக் கண்டதும் நித்திலாவின் இதழ்கள் மெலிதாக விரிந்து புன்னகைத்தன..

விக்ராந்த் மெதுவாக அவள் அருகில் சென்று, அவளது மென்மையான கரங்களைப் பற்றிக்கொண்டான். ஆனால், அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை, அவளுக்கு புரிந்தது அவன் எதற்காக தன்னிடம் பேசவில்லை என்று,….

​”அத்து… என் மேல கோபமா?” என அவள் மெதுவான குரலில் கேட்க, அவனிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக, அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவள் கைகளில் விழுந்தது. அவளை இழந்து விடுவோமோ என்ற அந்தப் பயம் இன்னும் அவனுள் நீங்கவில்லை.

​”அத்து…” என அவள் அவன் தலையை வாஞ்சையோடு வருடத் தொடங்கினாள். அந்தத் தருணத்தில், வீட்டில் உள்ள மற்றவர்களும் நித்திலாவின் உடல்நலம் விசாரிக்க அறைக்குள் நுழைந்தனர். விக்ராந்த் சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டு சற்று ஒதுங்கி நின்றான்.

சுமித்ரா குழந்தையைக் கையில் ஏந்தி வந்து நித்திலாவிடம் காட்டினாள். ஒன்பது மாதங்கள் தன் கருவில் சுமந்து, இன்று தன் உயிரைக் கொடுத்துப் பெற்றெடுத்த அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்ததும் நித்திலாவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

​தன் நகலையே கையில் ஏந்தியது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. குழந்தையின் சிறு விரல்களைத் தொட்டுப் பார்த்தவளின் முகம் தாய்மையின் பூரிப்பில் ஜொலித்தது. அங்கிருந்த அனைவரது கண்களும் ஈரமாயின.

சில நாட்களில் நித்திலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவளை மாடி ஏறிச் செல்ல அனுமதிக்காமல், கீழ்த்தளத்திலேயே ஒரு அறை தயார் செய்யப்பட்டு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

​விக்ராந்த் ஒரு சிறந்த கணவனாக அவளுக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டான். ஒரு தந்தையாகத் தன் மகளைப் பராமரிப்பதிலும் அவன் சளைக்கவில்லை. ஆனால், நித்திலாவிடம் மட்டும் அவனது மௌனம் ஒரு வாரமாக நீடித்தது. அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.

​அவன் மௌனத்தைத் தாங்க முடியாத நித்திலா, அன்று மௌனத்தை உடைக்கத் தீர்மானித்தாள். “அத்து… என்கிட்ட பேசவே மாட்டீங்களா?” எனக் கேட்டபடி, அவளைக் கண்டுகொள்ளாமல் கடக்க முயன்ற கணவனின் கரத்தைப் பற்றினாள்.

​”இப்போ எதுக்காக என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க? நம்ம குழந்தைக்கு ஒரு தாய் வேணும்ங்கிற எண்ணத்துலதான் உங்களை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன். சரி, நான் சொன்னது தப்புதான்… என்னை மன்னிச்சிடுங்க,” என்று அவள் கெஞ்சிய பின்னரும் விக்ராந்த் இறங்கி வராமல் பிடிவாதமாக நின்றான்.

நித்திலா விரக்தியில், “அத்து… என்னை பார்க்கக்கூட உங்களுக்குப் பிடிக்கலையா? பிரசவத்துலேயே உங்களை விட்டுப் போயிருக்கணும். உங்க பாராமுகத்தைப் பார்க்கிறதுக்கு நான் இறந்திருப்பதே மேல்,” என்று கூறினாள்.

​அந்த வார்த்தையைக் கேட்டதும் விக்ராந்தின் பொறுமை எல்லை மீறியது. அவளை எரிப்பது போலப் பார்த்தவன், “அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டேன்னு வையேன்… காது செவிடாகிடும்! என்ன திமிராடி உனக்கு? உன்னால எப்படிடி என்னை இன்னொருத்தி கூட சந்தோஷமா வாழுன்னு சொல்ல முடிஞ்சது? ‘என்கூட நீயும் வந்துடுங்க அத்து’ன்னு சொல்லியிருந்தாக்கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா நீ…” என ஆத்திரத்தில் கத்தினான்.

​அவனது கோபத்தின் பின்னால் இருந்த ஆழமான காதலையும், தன்னை இழக்க அவன் அஞ்சிய பயத்தையும் உணர்ந்த நித்திலா, கோபத்தில் நின்ற அவனைத் தாவி அணைத்துக்கொண்டாள்.

அவனது மார்பில் சாய்ந்தபடி, “அன்னைக்கு நான் இருந்த நிலை அப்படி அத்து… மரணம் என் கண்ணு முன்னாடி தெரிஞ்ச மாதிரி இருந்தது. நான் உயிர் பிழைப்பேன்னு எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஆரம்பத்துல தைரியமா இருந்த எனக்கு, கடைசி நேரத்துல அந்தத் தைரியம் சுத்தமா இல்லாம போயிடுச்சு,” என விம்மினாள் நித்திலா, விக்ராந்த் அவளை இறுக அணைத்துக் கொண்டான்,…

​”சின்ன வயசுல நான் அம்மா இல்லாம தவிச்ச தவிப்பு என் கண்ணு முன்னாடி வந்து நின்னது அத்து. என் குழந்தையும் அப்படி கஷ்டப்படுமேன்னு நினைச்சுதான் அப்படிச் சொன்னேன். ஒரு ஆணால மனைவியோட துணை இல்லாம எப்படித் தனியா வாழ முடியும்? என் அத்து காலம் முழுக்கத் தனியா கஷ்டப்படக்கூடாதுன்னுதான் அப்படிச் சொன்னேன்,” என்று கண்ணீர் மல்க விளக்கியவள்,..
​”எப்போ நான்தான் உங்களோட முதல் காதல்னு தெரிஞ்சதோ, அந்த நொடியிலிருந்து உங்க கூட காலம் பூரா வாழணும்னு ஆசை வந்துடுச்சு. ஆனா அதே சமயம் செத்துப்போயிடுவேனோன்ற பயமும் இருந்தது. நீங்க என்கிட்ட பேசாம இருந்தது எவ்வளவு வலிச்சது தெரியுமா? என்னை ரெண்டு அறை விட்டிருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்… ஆனா இந்தப் பேசாத மௌனம் என்னால தாங்கிக்க முடியல அத்து!” என அவன் சட்டையை நனைத்தாள்.

அவளது பேச்சைக் கேட்டு விக்ராந்தின் இதயம் உருகியது. அவளை இன்னும் பலமாகத் தன் அணைப்பிற்குள் சிறைபிடித்தவன்,.. “உன்னை கஷ்டப்படுத்தணும்னு நான் பேசாம இல்லை பேபி… ஆனா ஹாஸ்பிட்டல்ல வச்சு ‘இதுதான் கடைசி’ன்னு சொன்னியே… அன்னைக்கு என்னை உயிரோட கொன்னுட்டடி! உன்னோட அந்த வார்த்தை எனக்கு எவ்வளவு பெரிய மரண பயத்தை உண்டு பண்ணுச்சு தெரியுமா?” என அவன் தழுதழுத்தான்.
​விக்ராந்தின் அந்த இறுகிய அணைப்பிலேயே அவன் கடந்த ஒரு வாரமாக அனுபவித்த வேதனையை நித்திலா உணர்ந்தாள். பிரிவின் பயம் இப்போது மறைந்து, ஒருவரை ஒருவர் விட்டு விலகாத காதலின் பிணைப்பு அங்கு நிலவியது.

அந்த நேரம் உறங்கிக் கொண்டிருந்த அவர்களின் செல்ல மகள் ‘வீல்’ என்று அழ, விக்ராந்த் மெதுவாக நித்திலாவை விட்டு விலகியவன், பின் தொட்டிலில் இருந்த குழந்தையைத் தன் அகன்ற மார்போடு அணைத்தபடி ஏந்தி வந்தான். அவன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தப் பேரழகைக் கண்டு நித்திலா மெய்மறந்து போனாள்.

​”அத்து… பாப்பா யார் மாதிரி இருக்கா?” எனத் தன்னையும் குழந்தையையும் சேர்த்து அணைத்திருந்த கணவனிடம் கேட்டாள் நித்திலா.

“ரொம்ப சீக்கிரம் கேட்கிற பேபி நீ இந்த கேள்வியை!” என அவன் கிண்டல் செய்ய, “பின்ன நீங்கதான் முகம் கொடுத்தே பேசலையே, அப்புறம் நான் எப்படி கேட்கிறது?” எனச் செல்லமாக முகம் சுளித்தாள்.

​”ஓகே ஓகே விடு… மறுபடியும் ஆரம்பிக்காத. நான் ஆசைப்பட்ட மாதிரியே என்னோட ஏஞ்சல் அப்படியே என் பேபியை தான் உரிச்சு வச்சிருக்கா,” எனத் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான் விக்ராந்த்.

​”நீங்க ஆசை பட்ட மாதிரி உங்களுக்குப் பொண்ணு வந்தாச்சு… ஆனா நான் ஆசைப்பட்ட மாதிரி எனக்குப் பையன் வேணும்ல? எப்போ எனக்குத் தரப்போறீங்க?” என நித்திலா கண்கள் மின்னக் கேட்க, விக்ராந்த் மிரண்டு போனான்.

“இன்னும் ஆபரேஷன் காயம் கூட ஆறல, அதுக்குள்ள அடுத்த குழந்தையா? இன்னொரு தடவை என்னால செத்து பிழைக்க முடியாது பேபி… தயவு செஞ்சு அந்த நினைப்பை விட்டுடு!” என்றான் பாவமாக.

​”அதெல்லாம் முடியாது… இன்னும் ஆறு மாசத்துல என் அத்துவை உரிச்சு வச்ச மாதிரி எனக்குப் பையன் வேணும்!” என அவள் அடம்பிடிக்க, “ஆளை விடும்மா தாயே, நான் ஓடிடுறேன்!” என குழந்தையுடன் நழுவப் பார்த்தான் விக்ராந்த். ஆனால் அவன் காலரைப் பிடித்து நிறுத்தியவள், “இனி நீங்களே நினைச்சாலும் என்னை விட்டுப் போக முடியாது!” என்றாள் குதர்க்கமாக.

​”ஓஹ்… அப்படியா?” என விக்ராந்த் குறும்பாகப் புருவம் உயர்த்தி கேட்க, “ஆமா!” என்றபடி அவனை நெருங்கினாள் நித்திலா.

“பேபி… பாப்பா உன்னைத்தான் பார்க்கிறா!” அவன் கிண்டலுடன் சொல்ல.. அவனை முறைத்துப் பார்த்தவள், “ஆமா! பிறந்து ரெண்டு வாரமே ஆன உங்க குழந்தைக்கு எல்லாமே புரிஞ்சிடுமாக்கும்?” எனச் சலித்துக் கொண்டாள்.

“என்ன உன்னோட பேச்சு, செயல் எல்லாம் இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்கு?” எனக் கேட்டபடி, விக்ராந்த் குழந்தையைப் பத்திரமாக மெத்தையில் படுக்க வைத்தான்.

அவன் திரும்பி நிமிர்வதற்குள், அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாய் கோர்த்துக்கொண்டவள்… அவனது கண்களை ஆழமாகப் பார்த்தபடி, “இதுக்கு முன்னாடி எப்படியோ தெரியாது… ஆனா இப்போ நீங்க என்னோட அத்து! எனக்கு மட்டுமே உரிமையானவர். உங்களோட காதலும் அன்பும் எனக்கு மட்டுமே உரியது. நான் இப்போ எந்தளவுக்குச் சந்தோஷமா இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடியல… ஐ லவ் யூ அத்து, லவ் யூ சோ சோ மச்!” என்றாள் காதலும் மையலும் ததும்பும் குரலில்.
​முதன்முதலாகத் தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் பெண்ணிடமிருந்து இந்த வார்த்தைகளை நேரடியாகக் கேட்கிறான் விக்ராந்த். அவனது கண்கள் ஆச்சரியத்திலும், அளவற்ற மகிழ்ச்சியிலும் ஒருசேர மின்னின.

​”பேபி… உண்மையாவா?” என அவன் இன்னும் நம்ப முடியாமல் கேட்க, அவனது முகத்தைத் தன் கைகளால் ஏந்தியவள், அவன் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்தத்தைப் பதித்துத் தன் காதலை உறுதிப்படுத்தினாள்.

​அவளது மென்மையான இதழ் ஒற்றலில் மயங்கியவன், “பேபி… என்ன இது சின்னக் குழந்தைக்குக் கொடுக்கிற மாதிரி முத்தம் கொடுக்கிற?” என முணுமுணுத்தபடி, அடுத்த நொடி அவளது இதழ்களைத் தன் காதலால் சிறை செய்தான்.
​இத்தனை நாள் இருந்த ஊடல், பிரிவு, வலி என அனைத்தும் அந்த ஒரு முத்தத்தில் கரைந்து போயின. ஒரு குட்டித் தேவதையின் வருகையோடு, விக்ராந்த் – நித்திலாவின் வாழ்க்கை ஒரு புதிய வசந்த காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
29
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அவள் உயிருடன் வேண்டும் என்பதற்காக தனது உயிர்நீரில் ஜனித்த உயிரை தியாகம் செய்ய துணிந்ததை அறிந்தாள் தன் உயிரானவள் எங்கனம் தாங்குவாள் என்ற வலி மிகு போராட்டம் விக்ராந்திற்கு.

    உன்னத அன்பின் பயனாய் அவன் உயிரானவர்கள் இருவருமே அவனுக்கு கிட்டிவிட்டனர்.

    🫢 இரண்டாம் திருமண விடயத்தில் நித்திலா கோபிப்பாள் என்று பார்த்தால் இங்கு விக்ராந்த் கோபித்து கொண்டானா?

    அம்மா அப்பாவின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அவளுக்கு எங்கே தன் குழந்தையின் வாழ்வும் அவ்வாறே ஆகி விடுமோ என்ற பயம்.