Loading

அத்தியாயம் – 42

​”என்ன பேபி, பேக்கிங் எல்லாம் முடிஞ்சதா?” எனக் கேட்டபடி நித்திலாவின் அருகில் வந்து அமர்ந்தான் விக்ராந்த்.

​”ஹ்ம்ம்… முடிஞ்சது அத்து. அத்தை, ஊர்மி அத்தை, இனியா, சுமிக்கான்னு எல்லாரும் சேர்ந்துதான் குழந்தைக்குத் தேவையான பொருள்களையும், எனக்கும் தேவையானது எல்லாத்தையும் எடுத்து வச்சாங்க,” என்ற நித்திலா, பின் மெதுவாக, “ஆனா ஏன் அத்து இவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்குப் போகணும்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே… டாக்டர் கூட ஒரு வாரம் முன்னாடி வந்தா போதும்னுதானே சொன்னாங்க?” எனக் கேட்டாள்.

​”வேணாம் பேபி… நாம டாக்டர் சொன்ன தேதிக்குக் கொஞ்சம் முன்னாடியே போறதுதான் சரின்னு எனக்குப் படுது,” என விக்ராந்த் தன் கவலையை மறைத்துச் சொல்ல,.. ​அதற்கு நித்திலாவோ விளையாட்டாக, “ஏன் அத்து, பிரசவ வலி வந்து நான் செத்துப் போயிடுவேன்னு பயப்படுறீங்களா?” எனக் கேட்க, விக்ராந்தின் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது.

​”எதுக்காக இப்படி என்னை வார்த்தையால கொல்லுற நிலா?” என அவன் மிகுந்த வேதனையுடன் கேட்க, அவன் கலங்குவதைக் கண்டு பதறிய நித்திலா, “ப்ச்… இதுக்கு ஏன் அத்து ஃபீல் பண்றீங்க? நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்,” என்றாள்.

​”சும்மா பேச்சுக்குக்கூட இப்படிச் சொல்லாத நிலா. என்னால தாங்க முடியல” என்று வலியோடு சொல்ல… அவளோ… “ஓகே சொல்லல போதுமா” என்று சொன்ன பின்னரும் அவன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான். அவனது பயத்தின் ஆழம் அவளுக்குப் புரியவில்லை.

​”ப்ச்… நான் தான் சும்மா சொன்னேன்னு சொல்லிட்டேன்ல… இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க? ஸாரி அத்து… ப்ளீஸ் என்கிட்ட பேசுங்களேன்,” என அவள் குழந்தை போலக் கெஞ்சினாள்.

அவளது அந்த மழலைத்தனமான பேச்சில் விக்ராந்தின் கோபம் மெல்ல கரைந்தது.
​மெலிதாகச் சிரித்தவன், அவளது கரங்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டு… “பேபி… நான் உன்கிட்ட கொஞ்சம் விஷயம் பேசணும்,” என்றான் மிகத் தீவிரமான குரலில்.

​”என்ன அத்து, எதுவும் சீரியஸான விஷயமா?” என நித்திலா கேட்க, “சீரியஸான விஷயம் இல்ல… ஆனா என்னை பத்தி உண்மையை உன்கிட்ட சொல்லணும். இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல,” என்றான் விக்ராந்த். நித்திலா எதுவும் பேசாமல் அவன் சொல்லப்போவதை உன்னிப்பாகக் கவனித்தாள்.

​”பேபி… நான் லாவண்யாவை லவ் பண்ணதா உன்கிட்ட சொன்னேன், ஆனா அது உண்மையில்ல. உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் தான் அப்படி நினைச்சிட்டு இருந்தேன். எப்போ உன்னை பார்த்தேனோ, அப்போதே அவ மேல இருந்தது வெறும் ஈர்ப்புதான்னு புரிஞ்சது. உன்னை பார்க்கும்போது வர்ற அந்த ஃபீலிங்ஸ் அவகூட இருந்தப்போ எனக்கு வந்ததே இல்ல. உன் கூட இருக்கும்போது ஒரு நொடிகூட உன்னை விட்டு பிரியக்கூடாதுன்னு என் மனசு ஏங்கும்,”

​”நீ கேட்கலாம்… லவ் பண்ணிருந்தா ஏன் வார்த்தையால காயப்படுத்தினேன்னு. அதுதான் நான் செய்த பெரிய தப்பு. நீ என்னைத் திருப்பி அதே கேள்வியைக் கேட்டப்போதான், அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிக்கும்னு நான் உணர்ந்தேன்,” என்றவன், தன் தந்தைக்காகத்தான் அவள் தன்னை மணம் முடித்தாள் என்ற எண்ணமும், லாவண்யாவின் தொல்லையும்தான் தன்னை விவாகரத்து பத்திரம் கொடுக்க வைத்தது என்பதையும் விளக்கினான்.

​அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். ஆனால் நித்திலாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை, அது வெற்றுத்தாளாக இருந்தது.

“என்ன பேபி, என்னை நம்பலயா நீ?” என விக்ராந்த் பதற்றமாகக் கேட்க,.. ​அவளோ… “அன்னைக்கு நீங்கதானே அத்து லாவண்யாவை லவ் பண்றேன்னு சொன்னீங்க? அவளைப் பத்தி அவ்வளவு பெருமையா புகழ்ந்தீங்களே… அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” என வினவினாள்.

​”அது உன்னைச் சீண்டுறதுக்காகவும், என் லைஃப்ல லாவண்யான்னு ஒருத்தி இருந்ததை உன்கிட்ட மறைக்கக் கூடாதுங்கிறதுக்காகவும் சொன்னது. ஆனா அவ வீட்டுக்கே வருவான்னு நான் எதிர்பார்க்கல பேபி. என் கோபத்தால உன்னை சில நேரம் காயப்படுத்திருக்கேன், ஆனா உன்னை விட்டு பிரியணும்னு நான் ஒருபோதும் நினைச்சதில்லை. உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே நீதான் எனக்கானவள்னு முடிவு பண்ணிட்டேன், அப்படி இருக்கும் போது எப்படி உன்னை விட்டு பிரிய நினைப்பேன் பேபி” என்றான்…

“எனக்கு புரியல அத்து… கல்யாணமான அடுத்த நாளே கணவன்ங்கிற உரிமையை எடுத்துக்கிட்டீங்க. அப்போ நான் உங்க மனசுல இருக்க வாய்ப்பில்லை, அப்படின்னா வெறும் உடல் ரீதியான…” என அவள் தயக்கத்துடன் கேட்க முயல,
​உடனே குறுக்கிட்ட விக்ராந்த், “இல்ல பேபி! அப்போவே நீ என் மனசுலதான் இருந்த. கணவன்ங்கிற உரிமையில மட்டும் நான் உன்னை நெருங்கல, மனசால விரும்புன பொண்ணுங்கிறதாலதான் உன்கிட்ட அந்த உரிமையை எடுத்தேன்,” என்று சொன்னவனை குழப்பம் நீங்காமல் தான் பார்த்தாள் நித்திலா,..

நித்திலாவின் குழப்பமான முகத்தைக் கண்ட விக்ராந்த், “ஒரு நிமிஷம் பேபி,” என்று கூறியபடி தனது கைப்பேசியை எடுத்தவன், அதில் சேமித்து வைத்திருந்த நித்திலாவின் ஒரு புகைப்படத்தை அவளிடம் காட்டினான்.

​”பேபி… இந்த போட்டோல இருக்கிற இடம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என அவன் மென்மையாகக் கேட்க, நித்திலா ஆச்சரியத்துடன் அந்தப் புகைப் படத்தை வாங்கிப் பார்த்தாள்.

​”இது… நான் கல்யாணத்துக்கு முன்னாடி என் பிரண்ட்ஸோட அடிக்கடி போற ரெஸ்டாரண்ட் ஆச்சே! அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்ச அந்த ஒயிட் சல்வார் போட்டிருக்கேன். இந்த போட்டோ எப்படி உங்களுக்குக் கிடைச்சது அத்து?” என விழிகள் விரியக் கேட்டாள்.

விக்ராந்த் புன்னகைத்தபடி…
“அன்னைக்கு உன் பிரண்ட்ஸ் கூட நீ அங்கே வந்திருந்தப்போ, நானும் அதே ரெஸ்டாரண்டில் தான் இருந்தேன். அப்போதான் உன்னை நான் முதல் முறையா பார்த்தேன்,” என்றவன், அன்று அவளைப் பார்த்த அந்த நொடியில் தனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பையும், அவளது சிரிப்பில் தன் இதயம் தொலைந்த கதையையும் ஒவ்வொன்றாக விவரித்தான்.

நித்திலா இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு ஒரு பக்கம் பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதயம் இனிமையால் நிறைந்தது. லாவண்யா தான் அவனது முதல் காதல் என்று நினைத்து இவ்வளவு காலம் பிரிவை எண்ணி வருந்தியவளுக்கு, ‘தன்னுடைய அத்துவின் முதல் காதல் நான்தான்’ என்ற உண்மை புரிந்தபோது அந்தச் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.

​சந்தோஷத்தில் அவளது கண்கள் குளமாகின. பேச நா எழாமல், விக்கித்து நின்றவளின் கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. இவ்வளவு காலம் தான் செய்த தவறான கற்பனைகளை எண்ணி அவள் மனம் உருகியது.

​”அ..த்…து” எனக் கண்ணீர் மல்க அழைத்தவளின் வார்த்தை முழுமையடைவதற்குள், அவளது வயிற்றில் ‘சுளீர்’ என்று ஒரு பயங்கரமான வலி எழுந்தது. அந்த வலியின் வேதனை அவளது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

​”பேபி!” என விக்ராந்த் பதற்றத்துடன் அவள் கன்னத்தைத் தொட, நித்திலா தன் இடுப்பைப் பலமாகப் பிடித்துக்கொண்டவள்,.. “அ… அத்து,” என மீண்டும் அவனை அழைக்க முயன்ற போது வலியை இன்னும் அதிகமாய் உணர்ந்தாள்.

​”பேபி… பேபி… என்னாச்சு?” என்றான், அவனது கண்களில் மரண பயம் தெரிந்தது,..

“அ.. அத்து…. ரொம்ப வலிக்குது!” அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. வலியில் அவள் சத்தமாக அலறிவிட்டாள். நித்திலாவின் அந்தக் கதறலில் விக்ராந்த் அப்படியே அரண்டு போய்விட்டான். ​அவனுக்கு எதுவுமே காதில் விழவில்லை.

‘வலி வருவதற்கு முன்னாடி குழந்தையை வெளியே எடுக்கணும், இல்லனா நித்திலாவின் உயிருக்கு ஆபத்து’ என்று டாக்டர் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் அவன் மூளையில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. பயத்தில் அவன் கை, கால்கள் நடுங்கத் தொடங்கின.

நித்திலாவின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த வித்தார்த் விக்ராந்தின் அறைக்கு ஓடி வந்தான்,…

“விக்கி என்னாச்சுடா” வித்தார்த் கேட்க, அவனுக்கு அதெல்லாம் காதில் விழவில்லை, டாக்டர் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது…

“டேய் விக்ராந்த்” என்று உலுக்கிய பிறகு தான் அவன் சுயநினைவுக்கு வந்தான், தன்னவளின் நிலை புரிந்தவன்,..  “அண்ணா… வண்டியை எடு! சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகணும்!” எனக் கத்தியவன், நித்திலாவைத் தன் கரங்களில் அப்படியே அள்ளிக்கொண்டான்.

​”இது இப்போதான் உனக்கு புரியுதாடா?” என வித்தார்த் அவசரமாக வண்டியை எடுக்க ஓடினான். நித்திலாவின் வேதனையான சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் பயமும், சொல்ல முடியாத பதற்றமும் குடி புகுந்தது.

வித்தார்த் காரைத் தயார் நிலையில் வைத்திருக்க, விக்ராந்த் வலியில் துடிக்கும் நித்திலாவைச் சுமந்து கொண்டு பின்னிருக்கையில் ஏறினான். அவர்களுக்குத் துணையாகச் சுமித்ராவும் முன்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கார் மின்னல் வேகத்தில் மருத்துவமனையை நோக்கிப் பறந்தது.

​விக்ராந்த் ஏறக்குறைய உயிரற்றுப் போய் அமர்ந்திருந்தான். அவனுக்குள் பயம் ஒரு ராட்சசனைப் போல வளர்ந்து கொண்டிருந்தது. நித்திலாவின் முகத்திலோ மரண பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

​”அத்து… அத்து பயமா இருக்கு, நான் செத்து போயிடுவேனா?” என அழுதுகொண்டே கேட்டாள் நித்திலா. விக்ராந்திற்கு அவளது நிலை ஒருபுறம் பயத்தை ஏற்படுத்த, ‘செத்துப்போயிடுவேனா’ என்ற அவளது வார்த்தைகள் அவன் இதயத்தை ஈட்டியால் குத்தியது.

​”உனக்கு எதுவும் ஆகாது பேபி, உனக்கு எதையும் நான் ஆக விட மாட்டேன்,” என அவள் கன்னம் தொட்டுத் தேற்றிட, ​நித்திலா அவன் கைகளைப் பற்றி விம்மினாள்.

“அ.. அத்து… எனக்குத் தெரியாது அத்து… நீங்க என்னைத்தான் நேசிச்சீங்கன்னு எனக்குத் தெரியாது. இத்தனை நாட்களும் நீங்க வேறொரு பொண்ணை விரும்புறீங்கன்னு நினைச்சுதான் உங்களை விட்டுப் பிரிஞ்சு போகணும்னு நினைச்சேன். ஆனா… ஆனா… இப்போ நான் உங்க கூட வாழ ஆசைப்படுறேன் அத்து. ப்ளீஸ் அத்து என்னை காப்பாத்துங்க! நான் சாக விரும்பல, உங்க கூட வாழணும்… ப்ளீஸ் அத்து!” என வலியிலும் வேதனையிலும் கதறினாள்.

​”பேபி… பேபி… இப்படிலாம் பேசாதடி! நான் உன்னை என்னை விட்டு எங்கேயும் போக அனுமதிக்க மாட்டேன். நீ இல்லன்னா நான் இல்லடி! உனக்கு எதுவும் ஆகாது, இந்த அத்து மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல?” எனச் சொல்லி அவளை அணைத்துக்கொண்டான்.

விக்ராந்தின் கண்கள் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தன.

​”அண்ணா ப்ளீஸ் டா… காரை இன்னும் கொஞ்சம் வேகமா ஓட்டு!” எனத் தவிப்புடன் கத்தினான். எப்போதும் எதற்கும் கலங்காத, எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் தன் தம்பி இன்று ஒரு பெண்ணுக்காக இப்படிப் பதறுவதைக் கண்டு வித்தார்த்தின் கண்கள் கலங்கின. ‘காதல் ஒருவனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது!’ என அவன் வியந்தபடி காரைச் செலுத்தினான்.

“அத்து… ஒருவேளை எனக்கு ஏதாச்சும் ஆகிட்டா, நம்ம குழந்தை தாயில்லாப் பிள்ளையா ஆகிடுமா? என் குழந்தை என்னை மாதிரி தாய் இல்லாம வளரக் கூடாது. நீங்க நம்ம குழந்தைக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்களா? ப்ளீஸ் அத்து…” என அவன் கன்னம் தடவிக் கேட்டாள்.

​அவள் வாயைத் தன் கையால் மூடிய விக்ராந்தால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவன் கண்கள் மடைதிறந்த வெள்ளமெனக் கண்ணீரை வடித்தன.

வித்தாரத்துக்கும் சுமித்ராவிற்கும் மனம் தாங்கவில்லை, நித்திலாவின் அலறலும் அவளது பேச்சும் கண்ணீரை தான் வரவழைத்தது….

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர், மருத்துவருக்கு நித்திலாவின் நிலையை கண்டு சற்று பதற்றம் ஏற்பட்டாலும்  செவிலியர்களிடம் உடனடியாக நித்திலாவை ஆபரேசன் தியேட்டருக்குள் அழைத்து வர உத்தரவிட்டார்,…

ஸ்ட்ரச்சரை செவிலியர்கள் இழுத்து செல்ல,.. அந்த கணம் விக்ராந்தின் கையைப் பிடித்துத் தடுத்த நித்திலா, “ஒரு நிமிஷம்!” என நிறுத்தியவள்,.. ​”அத்து… நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?” எனப் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு அவள் கேட்க, “ஏன் பேபி, ப்ளீஸ்டி… அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ டாக்டர் சொல்றதைக் கேளு,” என விக்ராந்த் கதறினான்.

​”இல்ல அத்து, இப்போ பேசுனாத்தான் உண்டு. அப்புறம் கடைசி வரைக்கும் பேச முடியாம போயிடப் போகுது. நம்ம குழந்தைக்காக, உங்களுக்காக… நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். எனக்காகச் சத்தியம் பண்ணுங்க,” என அவள் பிடிவாதமாக நின்றாள். அவளது நிலையை கண்டு பயந்து போன விக்ராந்த், அவளைச் சமாதானப்படுத்த வேறு வழியின்றி, “ச.. சரி பேபி, நான் ஒத்துக்கிறேன்,” என நா தழுதழுக்கச் சொன்னவன்,.. மருத்துவரிடம் திரும்பி,.. ​”டாக்டர் ப்ளீஸ்… என் பேபியை என்கிட்ட பத்திரமா ஒப்படைச்சிடுங்க!” என  கையேந்தி மன்றாடிய அந்தத் தருணம், அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

அவர்களின் ஆத்மார்த்தமான காதலைக் கண்டு பிரமித்த மருத்துவர், “தைரியமா இருங்க மிஸ்டர் விக்ராந்த்,” என்று கூறிவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அப்பாடா இப்பொழுதாவது உண்மையை கூறினானே. அவன் தந்தை தான் அவன் வாழ்வில் இரண்டாம் முறையாக விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்.

    லாவண்யா தான் அவன் முதல் காதல் என்றெண்ணி வருந்தி அவனையும் வருத்தி இனிமையான பேறுகால நாட்களை அவனை விட்டு பிரிய வேண்டிய நிலையை எண்ணி துயரினில் அவஸ்தையுடன் கடந்து என்று எத்தனை வேதனைகள் இருவருக்கும்.

    இப்பொழுது தான் தான் தன் அத்துவின் முதல் காதல் என்றறிந்து உவகை கொள்ளும் வேளையில் அவன் இத்தனை நாட்களாக பயந்த ஒன்று நடந்தேறியேவிட்டது.

    எல்லாவற்றையும் முன்கூட்டியே தயாராய் செய்ய எண்ணி செயல்பட்டும் விதி அவர்களுக்கு முன்னதாக செயல்பட்டு விட்டது.

    விலகி செல்ல நினைத்து நிதானமாக இருந்தவள் இன்று பிரிந்துவிடுவோமோ என்று கதறுகிறாள்.

    அவசரப்பட்டு சத்தியம் பண்ணிட்டியே விக்ராந்த் அவ வெளிய வந்து என்ன செய்ய போறாளோ. 🫢