Loading

என் உயிர் – 2 🧬

நாயகனோ மதுவை கையில் வைத்துக் கொண்டு மாதுவின் மாதுளை நிற இதழை வதம் செய்து கொண்டிருந்தான். ஒரு நிலையில் இல்லாமல் போதையில் தன்னை மறந்து வேறு உலகத்தில் லயித்து இருக்க, திடீரென்று கண் மூடி மதி மயங்கி இருந்தவன் சடாரென்று மது கோப்பையை உடைத்து சிதற வைத்தான்.

பப்பில் ஒலிக்கும் ஓசையில் அருகிலிருந்தவர்களுக்கு மட்டுமே அச்சிதறலின் சத்தம் கேட்க, திடுக்கிட்டு திரும்பினார்கள். ஆனால், அவனுடன் ஒன்றி இருந்தவளோ அதிர்ந்ததை விட பயந்து போனது தான் அதிகம்.

வேகமாக அவளை தள்ளி நிறுத்தி வைத்து விட்டு, தூரத்தில் ஒரு டேபிளில் அமர்ந்து இந்நிகழ்ச்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருப்பவளை நிமிர்ந்து கண் திறந்து பார்த்தான். அப்பார்வையில் மிரண்டு விட்டாள். இருந்தும் தைரியத்தை வரவழைத்து அவள் தப்பிக்க முயற்சிக்கும் எழும் நொடியில் அவளின் தோள்பட்டையில் ஒரு கை அழுத்தியது. நிமிராமலே அந்த கையின் உரிமையாளன் பற்றி தெரிய, இப்பொழுது நன்றாகவே தனது கிலியை முகத்தில் பிரதிபலித்தாள்.

அதனைக் கண்டு ஏளன புன்னகை வீசிய நிலவனாகிய நம் நாயகன் தனது தோழனை கண்டு கர்வ புன்னகை வீசினான்.

பின்பு, நிலவன் அருகில் சென்று அலைபேசியில் உள்ள  பதிவை அழித்து விட்டு நிமிர , ஒரு நொடிக்கு குறைந்த ஒரு திருப்தி பார்வை அப்பெண்ணின் கண்களில் தெரிந்ததை கண்டு கொண்டவன் சிறிதும் யோசிக்காமல் அதை உடைத்து விட்டு அவளின் முகத்தில் சில ரூபாய் கட்டுகளை வீசி விட்டு நகர்ந்து விட்டான்.

அவர்கள் வெளியில் செல்லும் வரை அங்கு நிசப்தம் மட்டுமே பரவி இருந்தது. தனது திட்டம் தவிடு பொடியாகி விட்டதே என்ற கோபத்தில் முத்தம் பெற்ற பெண் ஒளிப்பதிவு செய்த பெண்ணை முறைத்து விட்டு வெளியில் வர முற்பட, அவளுக்கு பில்லை நீட்டினான் ஒருவன்.

நிலவனுக்கும் போதை ஏற்றுவதற்கு சற்று அதிகமாகவே மது வாங்கியதால் விலை சற்று அதிகமாக இருந்தது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் தனது திட்டம் வீணாகிவிட்டதே என்கின்ற கடுப்போடு தனது பர்ஸை தேட , அதன் பலன் என்னவோ பூஜ்யம் தான். ஒளிப்பதிவு செய்த தோழியும் இவளை நம்பி வந்ததால் இருவரும் பதட்டத்துடன் தேட, வெளியில் நிலவனும் , அவனது ஆருயிர் நண்பன் சஞ்சயும் ஹைஃபை கொடுத்து கொண்டு அப்பர்ஸினை தூர வீசினர்.

நிலவன் தூக்கி போட்ட ரூபாயை வைத்து வெளியில் வந்த பூஜா மற்றும் அவளது தோழி சீமா இக்காட்சியை கண்டு உள்ளம் வெதும்பினர். அதில் ஒரு படி மேலே சென்ற சீமா சஞ்சயின் முதுகில் அடித்தாள்.

அதில் கோபம் கொண்ட சஞ்சய் கை நீட்ட முற்பட , நிலவன் அவனை அடக்கினான். பின்பு முறுக்கி கொண்டு சீமா பூஜாவுடன் முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

இவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாமல் நன்றாக இரவு உணவை உண்டு விட்டு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

இரவு எதுவும் சொல்ல கூடாது என்று சஞ்சயின் தாய் இருவரும் வந்தததை உறுதி செய்து விட்டு தத்தம் அறைக்கு சென்று விட்டார். அதுவே இவர்கள் இருவரின் பெரிய போனஸ் ஆகும்.

ஆனால் , இரவு பதினொன்று ஆகின்றது அனைவரும் தூங்குவர் என்று கூட கருதாமல் காலிங் பெல்லை ஒருவர் விடாமல் அடித்துக் கொண்டிருந்தனர்.

அதில் அனைவரின் தூக்கமும் பறிபோனது. சஞ்சய் தந்தைக்கு சுகர் , பிபி இருப்பதால் அப்பொழுது தான் கண் அசந்தவர் இச் சத்தத்தில் அவர் விழிக்க, சஞ்சயின் பெற்றோர்கள் ஆன சந்திரன் மற்றும் மோகினி வெளியில் வரும் நேரம், வெளியில் நின்றவரின் கன்னத்தில் அறை விழுந்து இருந்தது. அதில் ஸம்பித்து நின்றது சஞ்சய்யின் பெற்றோர்கள் மட்டும் அல்ல இன்னும் நால்வர்.

🏘️ சாலமேடு

செல்வி தனது அத்தானைப் பற்றி கூறியதும் வெதும்பி விட்டவள் மெலிதாக கோபம் வெளியில் எட்டிப் பார்த்தது. அதில் முகம் சுளித்து செல்வியை அதட்ட , செல்வி உடனே ” இங்க பாரு பொறுமை வேணும். காதல் கண்ணை மறைக்கும்ங்கிறதுக்கு உதாரணம் ஆகிடாதே. நான் அத்தான் பொய் தான் சொல்லுறாருனு சொல்லலை. அவர் உண்மை தான் சொல்லுறாரானு விசாரிப்போம். அதோடு அவருக்கு அங்க வேற பொண்ணு மேல ….. “

” செல்வி …. என்னை ரொம்ப சோதிக்கிற “

” அய்யோ வேற எதுவும் பொண்ணை பிடிச்சிருக்கானு விசாரிப்போம்னு தான் சொல்ல வந்தேன் .. “

அதில் புருவம் சுருக்கி”நானும்  அதுக்கு தான் கோபப்பட்டேன். வேற என்ன நினைச்ச நீ ? “

இப்படி கூறுபவளை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை  செல்வி. பிற பெண்ணை விரும்புவதே தவறு என்று நினைப்பவள் தகாத உறவுகள் வைத்திருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் மேலோங்கியது செல்விக்கு . வெள்ளந்தியாக இருக்கும் தனது தோழிக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள் வராஹியிடம்.

இவ்வளவு யோசனையுடன் இருப்பவளைக் கண்டு கவி தனது தோழி தனக்கு தீங்கு நினைக்க மாட்டாள் என்று நினைத்து தனது கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு பொறுமையாக அவளிடம் கேட்டாள் “நீ என்ன சொல்ல வரனு தெளிவா சொன்னா தான் எனக்கு புரியும் செல்வி “

அவள் பொறுமையாக கேட்டவுடன் இது தான் சந்தர்ப்பம் இவளை புரிய வைப்பதற்கு என்று. பொறுமையாக புரிய வைக்க முயன்றாள் செல்வி.

“இல்லடி உன் மாமாவுக்கு சுத்தமா படிக்க தான் வரலைனு நினைச்சோம். ஆனால், அவன் ஸ்கூலையும் சரி, ஊர்லையும் சரி அப்படி ஒன்னும் நல்ல பேரு வாங்கல “

“இதுலாம் யாரு சொன்னா உனக்கு? ” தனது புருவத்தை உயர்த்தி கேட்டாள் கவி.

“ஆங்ங்…….. அது உனக்கு வேண்டாம். நமக்கு விஷயம் தெரிஞ்சா போதும் ” என்று கூறிய அடுத்த நொடி கவி ஒன்றும் கூறாமல் நடையைக் கட்டினாள்.

அவளின் பின்னால் ஓடிய செல்வி அவளை பிடித்து நிறுத்தி “சரிடி இதுலாம் கூட விடு . உனக்கு உன் அத்தான் மேல இருக்கிற காதல் மாதிரி உன் அத்தானுக்கு உன் மேல இருக்குதா ? நம்ம தான் இந்த ஊரை விட்டு தாண்டல . ஆனா , உன் மாமா சென்னை , மும்பை, ஹைதராபாத், டெல்லினு சுத்திக்கிட்டு இருக்காரு. அங்க ஒரு பொண்ணு மேல கூட ஆசை வந்து இருக்காது ?”

கவி அடுத்து பேச வருவதற்குள் கை நீட்டி தடுத்த செல்வி “போதும் டி… உன் மாமாவுக்கு கொடி தூக்குனது. கடைசியா ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு “

கேளு என்பது போல் கவிதாயினி பார்க்க, “என் தாய்மாமா விரைப்பான ஆளு தான். ஆனாலும் நான் தான் கட்டிக்கப் போறேனு அந்த லூசு இப்பவும் என்னைப் பாத்த கண்ணுல ஹார்ட் விடுது. உன் அத்தான் என்னைக்கோ ஒரு நாளு தான் ஊரு பக்கம் வருது. உன்கிட்ட என்னைக்காச்சும் பேசிருக்கா ? “

” அது ….. என் வீட்டாளுங்களுக்கு தெரிஞ்சா தான் பிரச்சனையே “செல்விக்கு கூறுவது போல் தனக்கும் கூறிக் கொண்டாள்.

“ஆமாடி …. அது உனக்கும் தெரியும். இருந்தும் அவன் வந்திருக்கானு உன் அத்தை திட்டினாலும் எத்தனை தடவை உன் அத்தை வீட்டுக்கு போயிருக்க? அவன் ஒரு தடவையாச்சும் உன்னை பாக்க முயற்சி பண்ணிருக்கான ? இவ்வளவு ஏன் உன் மாமா நீ வீட்டில இல்லைனு தெரிஞ்சா மட்டும் தான் உன் வீட்டுக்கே வரான். இதுல அவனுக்கு உன் மேல லவ் இல்லைனு பச்சையா தெரியுது. பேசாம வேற எவனையாச்சும் கல்யாணம் பண்ணு . நிம்மதியா இருப்ப “என்று கூறி முடிக்கும் போது, இருவரும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விட்டனர்.

அவள் யோசிக்கட்டும் என்று நினைத்து செல்வி பஸ் ஏறி சென்று விட்டாள். ஆனால், கவி தான் அவளது பஸ்ஸில் ஏறாமல் யோசித்துக் கொண்டே வயல் வழியே சென்று தனது வீட்டை அடைந்தாள்.

வாசலில் நிறைய காலணிகள் இருப்பதைக் கண்டு அத்தை வீட்டார்கள் திருமணம் பற்றி தான் பேச வந்துள்ளனர் என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி. கால்கள் பின்னிக் கொண்டன. கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. தன்னை மறந்து மயங்கி சரிந்தாள்.

🧬🧬🧬🧬

” த   டெலில் நாசர்  அவார்ட் கோஸ் டு மிஸ்டர் . செழியன் ஃபிரம் இந்தியா ” (டெலில் நாசர் விருது மிஸ்டர் செழியனுக்கு செல்கிறது ) என்று ஒலிக்க, கரகோஷங்கள் ஒலிக்க, அங்கு ஐம்பது வயது மிக்க மனிதர் எந்த ஒரு முகப்பாவனையும் காட்டாமல் அமைதியாக நடந்து மேடை ஏறி வர, விருது வழங்கப்பட்டது . பின்பு, அனைவருக்கும் பொதுவாக ஒருவர் “எதனால் இந்த ஜெனிட்டிக்ஸ் துறையை தேர்ந்தெடுத்தீங்க? “

“சின்ன வயசில் சின்னதா ஒரு ஈர்ப்பு. படிக்க வசதியும் இருந்ததால் நான் அந்த துறைக்கே வந்து இன்னும் அதிகமா கத்துக்கிட்டு கண்டுபிடிச்சிருக்கேன் “

“உங்கள் கண்டுபிடிப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்க? “

” குரங்குல இருந்து தான் மனுஷன் வரான். சோ, குரங்கு முன்னாடி ஏதோ இருந்திருக்கு. ஆனா, இப்படி வரதால் நமக்கு அதோடு இயல்பும் கொஞ்சம் கொஞ்சம் நம்ம ஜீனில் இருக்கும். அதில் நம்ம மனிதன் தனிப்பட்டு சொல்ல முடியாது இல்லையா? எல்லாம் கலந்த கலவையாக தான் மனிதன் இருப்பான். அதை முறியடிக்கும் விதமா நம்ம மனிதன் டி என் ஏவில் இருந்து அந்த உணர்வுகளை முறியடிச்சேன். சில குணங்கள் நம்மை விட்டு போய் விட்டது. உதாரணத்துக்கு சொல்லனும்னா கோபம் . கோபம் படுவது மனித இயல்பு தான். அதில் வர்ற வெறி விலங்குகள் இயல்பு. அதை பிரிக்கும் பொழுது அவன் கிட்ட வித்தியாசம் தென்படுது. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் மனித உணர்வுகள் மாறுபட்டிருக்கு “

” உங்களுடைய அடுத்த ஆராய்ச்சி ? “

“வளர்ந்த மனிதனிடம் இவ்வளவு வித்தியாசங்கள் பார்ப்பது போல், உருவாகும் பொழுதே அவர்களை மாற்றுவது. அதை விட பெண் கருவா , ஆண் கருவா என்பதை பற்றியும் ஆராய போகிறேன். அதாவது க்ரோமோஸோம்ஸ் “

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்