Loading

தமிழ்நாட்டின் ஒரு மலையடிவாரம் அருகில் கரடு ஓரம் அமைந்த அழகிய கிராமம் பூங்குளம். கரடு என்றால் சிறிய குன்று என்பது பொருள். இங்கு பசுமை மட்டும் அல்ல மக்களுக்கிடையே பாசமும் கொஞ்சம் அதிகம் தான். மக்கள் பேசும் தமிழ் மொழியை விட கீச்…கீச்… குக்கூ…குக்கூ…கா..கா…கொக்கரக்கோ… என்ற பறவைகளின் மொழி தான் பூங்குளம் கிராமத்தில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கும். பசுமையான வயல்வெளிகளும்,கண்கவரும் மல்லிகை பூந்தோட்டங்களும், ஊர் ஓரமாய் அமைந்திருக்கும் ஏரியும் பூங்குளத்து பேரழகின் அடையாள சின்னமாக விளங்கும். நகரங்களை போல் நெரிசல் இல்லாமல் ஆங்காங்கே அமைந்த சில வீடுகளில் தூய்மையான தென்றல் காற்று ஒரு வாஞ்சையுடன் வந்து வருடிச்செல்லும்.

வானுயர்ந்த மரங்கள் இங்கு பல இருந்தாலும் காட்டிற்கு சிங்கம் ஒன்று போல பூங்குளம் கிராமத்தின் மூத்த பல தலைமுறைகளை பார்த்த பழமையான ஆலமரம் நேர்கொண்டு கர்வத்துடன் நிமிர்ந்து வேரூன்றி நிற்கும். ஆலமரத்தின் ஒரு புறம் ஒரு சிறிய காளியம்மன் கோவிலும் மறுபுறம் ஆரம்ப சுகாதார மையமும் அமைந்திருக்கும். இந்த ஆலமரத்தின் முன் இருக்கும் இடம் தான் முதியவர்கள் அமர்ந்து ஊர் கதை பேச மட்டுமல்லாமல் சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடும் ஒரு விளையாட்டு பூங்காவாகவே இருந்தது. அந்த ஆலமர விழுதுகள் தான் அவர்களது ஊஞ்சல்.

நாள் முழுக்க பூமிக்கு ஒளி தரும் வேலையை செய்து விட்டு மாலையில் கதிரவனும் மேகத்துடன் மறைந்து வானில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். மூன்று சிறுவர்கள் ஆலமரத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். “டேய்… யாரு முதல்ல ஓடிப்போய் மரத்தோட விழுதைப் பிடித்து தொங்குறாங்கனு பார்க்கலாமா” என தலையை ஆட்டியவாறு சொன்னான் ரவி. அவிழ்ந்து கொண்டிருந்த அரைக்கால் சட்டையை அரைஞாண் கயிற்றில் சொருகிவிட்டு பாக்கலாமா என முன் கை வைத்து தடுத்து “ஒன்னு ரெண்டு மூணு இப்ப வாங்கடா….” என சொல்லி சங்கிலி ஓட ஆரம்பிக்க உடன் பழனியும், ரவியும் வேகமாக ஓடினர்.

இந்த சிறுவர்களை பார்க்க வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகை விரித்து பறப்பது போல் இருந்தது. இவர்கள் ஓடும் போது வழியில் இரை தேடிக் கொண்டிருந்த கோழிகள் எல்லாம் தெறித்து பறந்தோடின. இவர்கள் எதிரில் இருசக்கர வாகனத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்த தாத்தா பயந்து “ஏ …ஓரமா போங்கடா… “என சொல்லிக்கொண்டே வண்டியை திருப்பி நிலை தடுமாறி தென்னை மரத்தில் போய் முட்டிக் கொண்டார். இவற்றை எதுவும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக மூவரும் ஓடினர்.

ரவி முதலில் வந்து விழுதைப் பிடித்து ஏறிய படியே “ஹே…. நான் ஜெயிச்சிட்டேன்” என கத்தினான். பழனி இரண்டாவதாக வந்தான். கடைசியாக வந்த சங்கிலி விழுதை பிடிக்க முடியாமல் எகிரி எகிரி குதித்தான். “என்ன எட்டலையா? அதுக்குத்தான் தம்பி வளரணும்கிறது” என்று சொல்லி சிரித்தான் பழனி. “அப்படி எல்லாம் இல்ல இந்த விழுது கொஞ்சம் ஒசரத்துல இருக்கு, இப்ப பாரு” என சொல்லிவிட்டு ஒரு குதி குதித்து விழுதை பிடித்தான் சங்கிலி. மூவரும் சந்தோஷமாக விழுதுகளில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தனர். இவர்கள் பூங்குளம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். நெருங்கிய நண்பர்களாக எப்போது பார்த்தாலும் ஒன்றாகவே திரிந்து கொண்டிருப்பார்கள். “அங்க பாருடா, உங்க ஆயா கரட்டுல இருந்து மாடுகளை ஓட்டிட்டு வந்துருச்சு” என பழனி சொல்லி முடிப்பதற்குள் “என்ன ஆயா வந்திருச்சா…? என கத்தியபடி வேகமாக கீழே குதித்து வீட்டுக்கு ஓடினான்.

“ஐயோ மாட்டிற்கு கழனி தண்ணி ஊத்தி வைக்கணும், கட்டுத்தறியை கூட்டணும் எவ்வளவு வேலை இருக்கு” என புலம்பிய படியே வேகமாக மாட்டுத்தாழியில் தண்ணியை ஊற்றி வைத்துவிட்டு கட்டுத்தறியை கூட்ட ஆரம்பித்தான் சங்கிலி.

“ஏ ….ஏ …சூ….சூ… என்ன அவசரம் மெதுவா போடி என முன்னே ஓடும் மாட்டை பார்த்து திட்டிவிட்டு, இந்த மாட்டை பாரு வரமாட்டேங்குது” என சொல்லி மற்றொரு மாட்டின் பின்புறம் ஒரு தட்டு தட்டி ஒரு ஆறேழு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள் சங்கிலியின் பாட்டி சின்ன தாயி.

“என்னடா சங்கிலி இன்னும் கட்டுத்தறியை கூட்டலையா ? பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பிள்ளைகளோட ஆட போயிட்டியா ? பிறந்ததும் உன் அம்மாவை முழுங்கிட்ட, கொஞ்சம் வருஷத்தில் உன் அப்பனும் போய் சேர்ந்துட்டான். இப்ப என் உசுர வாங்கிட்டு இருக்க, வயசான காலத்துல ஆயாளுக்கு ஒத்தாசையா இருப்போம்னு கொஞ்சமாவது தோணுதா உனக்கு” என வசை பாட ஆரம்பித்தாள் சின்னத்தாயி.

“இப்படியே கத்திட்டு இரு உன்னையும் ஒரு நாள் முழுங்கிடுறேன்” என முணுமுணுத்தான் சங்கிலி. “என்னடா சங்கிலி முணுமுணுக்கற பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட்டியா? இல்லையா? என்றாள். “ஆயா சும்மா வார்த்தைக்கு வார்த்தை சங்கிலினு கூப்பிடாத நான் என் பெயரை மாத்திட்டேன் சரண் என கூப்பிடு” என்றான். “என்ன சரடா என்ன பேரு இது ? உனக்கு எவ்வளவு அழகா சங்கிலி கருப்பன்னு நம்ப தாத்தாவோட பேர வச்சிருக்கோம்” என பெருமையாக கூறினாள். “ஆமா உனக்கு தாத்தா மேல இருக்குற பாசத்தை காட்டுவதற்கு நான் தான் கிடைச்சேனா” என சலித்தவாறே சொன்னான். “சரி விடுடா சங்கிலி தூக்குல முறுக்கு மாட்டி வச்சிருக்கேன் போய் கை கழுவிவிட்டு எடுத்து சாப்பிடு” என பாசமாக கூறினாள். என்ன தான் பேரனை வஞ்சித்தலும் உள்ளுக்குள் சின்னத்தாயிற்கு பாசம் அதிகம்.

ரவியும்,பழனியும் வெகு நேரம் விளையாடிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.”என்ன பழனி இவ்வளவு நேரமா விளையாடுவ, போய் கை கால் எல்லாம் போய் கழுவிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என அக்கறையுடன் அவன் அம்மா சொன்னாள். ஒரே பிள்ளை என்பதால் அவன் அம்மா, அப்பா இருவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தான் அவன். அப்பா சிறிய காய்கறி கடை வைத்திருந்தாலும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி ஆகவே வளர்ந்தான் பழனி.

நம் ரவிக்கு அப்படி இல்லை கூடப்பிறந்த தம்பி கிருஷ்ணன் தான் அங்கே செல்ல பிள்ளை. செல்லமாக அவனை கிட்டு என அழைப்பார்கள்.ரவி வீட்டில் நுழையும் போதே “அம்மா அண்ணா வந்துட்டான். இன்னும் அவன் வீட்டு பாடம் கூட முடிக்கல” என அவன் அம்மாவிடம் போட்டுக் கொடுத்தான் கிட்டு.

“ஏன்டா ரவி பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் துணியை கூட மாற்றாமல் விளையாட கிளம்பிட்ட… சட்டை எல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு பாரு. உன்னை விட ஆறு வயசு சின்னப்புள்ளை கிட்டு எப்படி பொறுப்பா நடந்துகிறான் பாரு” என திட்டினாள் ரவி அம்மா சாந்தி.

சாந்தி பொறுப்பான குடும்பத் தலைவி. கூலி வேலை, வயல் வேலை, கொத்து வேலை என எந்த வேலைக்கும் செல்வாள். இவள் வேலைக்கு சென்று தான் குடும்ப செலவை சமாளிக்கிறாள். இவள் கணவன் மணி வேலைக்குச் சென்றாலும் வீட்டு செலவுக்கு பணம் அரிதாகவே தருவான். சம்பாதிக்கும் அனைத்தையும் குடித்து அழித்துவிட்டு வீட்டில் வந்து சண்டை இழுப்பதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளான்.

“சாந்தி கொஞ்சம் ரசம் இருந்த குடேன்” என பக்கத்துக்கு வீட்டு பெண் அலமேலு கேட்டாள். அலமேலு உடன் தான் சாந்தி தினமும் வேலைக்கு செல்வாள். இருவரும் நல்ல தோழிகள். அலமேலுவின் கணவன் வெளியூரில் லாரி ஓட்டுனராக பணிபுரிகிறார். மாதத்திற்கு ஒரு முறை தான் வருவார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவள் பரிமளா பத்தாம் வகுப்பு படிக்கிறாள். தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் பூங்குளத்தில் தனியே வசித்து வருகிறாள் அலமேலு.

“என்ன அக்கா… இன்னைக்கு ஏதும் சமைக்கலையா ?” என சிரித்தபடி கேட்டாள் சாந்தி. “அதை ஏன் கேக்குற சாந்தி கருவாட்டு குழம்பு நல்லா மணக்க மணக்க வச்சேன். ஆனால் என் இரண்டாவது பிள்ளைக்கு கருவாடு வாசனையே ஆகாது.ரசம் வை என அடம் பிடிக்கிறாள்” என்றவள் ரசம் வாங்கி கொண்டு “உனக்கு கொஞ்சம் கருவாட்டு குழம்பு ஊத்தி தரட்டுமா” என கேட்டாள். “அந்த மனுஷனுக்கு தான் கருவாட்டு குழம்புன்னா உசுரு இருந்தா கொஞ்சமா ஊத்தி குடுங்க” என்றாள் சாந்தி.

“சரி இரு பரிமளா கிட்ட குடுத்து அனுப்புறேன்” என சொல்லி விட்டு சென்ற அடுத்த நிமிடமே கருவாட்டு குழம்பு வந்துவிட்டது. கிராமங்களில் இந்த மாதிரி பண்டமாற்று முறைகள் அதிகம். ஒரு வீட்டில் பலகாரம் செய்தால் அதன் வாசனை செல்லும் இடமெல்லாம் பலகாரமும் பரிமாற பட்டுவிடும். பகிர்ந்து உண்பது இவர்களுக்கு வழக்கம்.

“ஏ…சாந்தி… வாடி வெளியே, புருஷன் வந்து வாசலில் காத்துக் கிடக்கிறேன் கதவை திறடி” என திறந்திருந்த கதவை சத்தமாக தட்டியபடி சாந்தியின் கணவன் மணி குடி போதையில் தள்ளாடி கொண்டிருந்தான். “யோவ் அக்கம் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் நம்மளையே பாக்குறாங்க வா…” என அவள் கணவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். ரவி கிட்டு இருவரும் சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். “என்ன செய்வது எல்லாம் என் தலையெழுத்து” என தலையில் அடித்து கொண்டு கணவனுக்கு உணவு பரிமாறினாள். போதையில் தலை தொங்கிய படியே கால்களை விரித்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் மணி. கருவாட்டு குழம்பை மற்றும் நன்றாக வழித்து சாப்பிட்டு விட்டு, “என்னடீ வெறும் சோறு மட்டும் போட்டு இருக்க குழம்பு எங்கே” என சத்தம் போட்டான். அவள் வைத்த பருப்பு குழம்பு ஊற்றினாள். “நிறுத்து என்ன குழம்பில் கருவாடையே காணோம்” என தேடி பார்த்து திட்டினான்.”கருவாட்டு குழம்பு அலமேலு அக்கா கொடுத்தது, பருப்பு வேணாம்னா ரசம் கொண்டு வரட்டா” என தயங்கியபடி கேட்டாள். “என்னாது ரசமா, புருஷன் காலையிலிருந்து கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சுட்டு வந்தால் வெறும் ரசத்தை ஊத்திரியா…?” என கத்திய படி தட்டை தள்ளி விட்டு அப்படியே சாய்ந்து விட்டான். சாப்பாடு வீடு முழுக்க சிதறியது. “உன்ன காலையில பார்த்துகிறேன்” என பல்லை கடித்துக்கொண்டே சிதறிய சோற்றை சுத்தம் செய்தாள் சாந்தி.

காலை விடிந்தும் விடியாததுமாக ஏதும் பேசாமல் மல்லிகை பூ எடுக்க தோட்டத்திற்கு சென்று விட்டாள் சாந்தி. பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்திருந்தாலும் காலை நேரங்களில் லேசான பனி பொலிவு இருந்தது. பசுமை நிறைந்த மல்லிகை செடி இலைகளின் மீது ஆங்காங்கே முத்து முத்தாய் இருந்த பனிநீர் துளிகளையும், வெண்மையாய் பூத்த மல்லிகை மலர்களையும் காண கண்கள் இரண்டு போதாது. பூங்குளம் கிராமத்தில் மல்லிகை பூ விவசாயம் தான் அதிகம். ஒருமுறை செடி வைத்து விட்டால் போதும் பத்து பன்னிரண்டு வருடம் வரை பூ எடுக்கலாம். ஆனால் களை எடுப்பது, உரம் போடுவது, பூச்சி மருந்து அடிப்பது, பூக்கும் காலம் முடிந்த பிறகு செடிகளை வெட்டி விடுவது என பல பராமரிப்பு வேலைகள் இருக்கும். ஒரு காப்படி எடுத்தால் அதாவது கிட்டத்தட்ட ஒரு டம்ளர் அளவு எடுத்தால் ஐந்து ரூபாய் தருவார்கள். சாந்தி ஒரு நாளைக்கு பத்து காப்படி எடுத்துவிடுவாள். சாந்தி சிறு வயதில் இருக்கும் போதிலிருந்தே பூவெடுத்து பழக்கம் எனவே வேகவேகமாக எடுப்பாள். வாரத்திற்கு ஒரு முன்னூறு ரூபாய் வரை கிடைக்கும். பூ மகசூல் குறைந்தால் குறைவான எண்ணிக்கை காப்படி தான் எடுக்க முடியும்.

சாந்தி மல்லிகை தோட்டத்திற்கு வந்ததும் அவள் தினமும் எடுக்கும் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கினாள். அவரவர்களுக்கு என தனியாக செடிகளை பிரித்துக் கொள்வார்கள். சிறிது நேரம் கழித்து வந்த அலமேலு “என்ன சாந்தி ராத்திரி ஒரே கச்சேரி போல” என கிண்டல் அடித்தாள். “நீ கொடுத்த கருவாட்டு குழம்புனால வந்த பிரச்சனை தான்” என நடந்த அனைத்தையும் கூறினாள். “எனக்கு புருஷன் கூட இல்லாத கவலை, உனக்கு புருஷன் கூட இருந்தும் கவலை” என்ன செய்றது நாம வாங்கின வரம் அப்படி” என சொல்லி பெருமூச்சு விட்டாள் அலமேலு. அப்போது தோட்டத்து முதலாளி ஐயா மாணிக்கம் வந்து பூ எடுக்க ஆரம்பித்தார்.

“ஏன்யா நீங்க வந்து கஷ்டப்படுறீங்க…. இன்னைக்கு வேற ஆள் யாரும் வரலையா என சாந்தி கேட்டாள். “இல்லமா இன்னைக்கு முகூர்த்த நாள், நம்ம ரங்கசாமி வீட்டு கல்யாணம் வேறு எல்லாம் அங்க போய்ட்டாங்க” என்றார்.

“அந்த காலத்தில் தண்ணீருக்கு பஞ்சம், காட்டுக்கு வந்து பூ எடுத்தால் தான் பூங்காட்டுக்காரர்கள் கிணற்றில், தொட்டியில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் இணைப்பு கொடுத்து விட்டார்கள். அதனால் மல்லிகை பூ எடுக்க ஆள் கிடைப்பது சிரமம் ஆகிவிட்டது” என வருத்தத்துடன் சொன்னார் மாணிக்கம்.

சாந்தி பூ எடுத்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் அவள் பிள்ளைகள், கணவன் என மூன்று பேரும் தூங்கி கொண்டிருந்தனர்.
“என்ன இன்னும் தூக்கம் எழுந்திரிங்க மணி என்ன ஆகுது பாரு, பள்ளிக்கூடத்துக்கு போகனும் இல்ல” என்ன பிள்ளைகளை தட்டி எழுப்பிவிட்டு அவள் வேகமாக சமைக்க ஆரம்பித்தாள்.

பிள்ளைகள் பள்ளி செல்ல தயாரானார்கள். பிள்ளைகளை பள்ளி சீருடையில் பார்த்த சாந்தி இருவரையும் அழைத்து அணைத்து கொண்டு சொன்னாள் “நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சு பெரிய ஆளாகி நல்ல வேலைக்கு போகணும், இல்லனா அம்மா மாதிரி இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என சொன்னாள். “அம்மா தினமும் இதே தான் சொல்ற போரடிக்குதுமா” என்றான் கிட்டு. “சரி சீக்கிரம் சாப்பிட்டு பள்ளிக்கூடத்துக்கு போங்க” என அவர்களுக்கு உணவு பரிமாறினாள்.அவளும் குளித்து தயாராகி வேலைக்கு கிளம்பும் போது தான் அவள் கணவன் மணி மெதுவாக எழுந்து அமர்ந்தான். “என்ன அதுக்குள்ள கிளம்பிட்டியா ரொம்ப தலை வலிக்குது ஒரு காபி போட்டு குடேன் என ஏதும் நடக்காதது போல பால் வடியும் முகத்துடன் கேட்டான் மணி.

சாந்தி கோவமாக “துறைக்கு காபி வேற கேக்குதா ராத்திரி செஞ்ச ரகளை எல்லாம் மறந்துடுச்சா” என்றாள். “நான் என்ன செஞ்சேன் கஷ்டப்பட்டு வேலை முடிச்சுட்டு சாப்பிடாமல் கூட நான் பாட்டுக்கு வந்து படுத்துட்டேன்” என்றான் மணி.” அப்படியா எத்தனை தடவ சொல்லுறது அதிகமாக குடிக்காதான்னு சம்பாதிக்கிற எல்லா காசுக்கும் குடிச்சது மட்டுமில்லாம பிள்ளைகள் தூங்குதுன்னு கூட பார்க்காமல் வந்து சண்டைக்கு நிக்குற, ஊரே வேடிக்கை பாத்துச்சி தெரியுமா ? நீ எல்லாம் வயித்துக்கு சோறு தான திங்குறீங்க..” அப்படி இப்படி என இடைவிடாது வசைபாடினாள்.

” சாந்தி பூஜையை முடிச்சிட்டியா நாம இப்ப வேலைக்கு கிளம்பலாமா” என அலமேலு கூறினாள். ” எங்க போகணும் அக்கா” என்றாள் சாந்தி. “நேத்து போன அதே கட்டடத்துக்கு தான் இன்னும் ரெண்டு நாளைக்கு போக வேண்டும். வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் வேற எடம் பாத்து சொல்றேன் என மேஸ்திரி சொல்லிருக்காரு” என்றாள் அலமேலு. சாந்தி மணியை பார்த்து “சோறு பொங்கி வச்சிருக்கேன், போட்டு சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புற வழியை பாரு, இன்றைக்கும் அந்த கருமத்தை குடிச்சு தொலைக்காதே” என கணவனிடம் கூறி விட்டு வேலைக்கு கிளம்பினாள் சாந்தி. “இப்ப புதுசு புதுசா நோய் பரவுதாம். கொரோனானு ஒரு புது நோய் பல இடத்தில் பரவிக்கொண்டு இருக்காம், பாத்து பத்திரமா இருக்கனும்” என சாந்தி அலமேலுவிடம் கூறினாள். “அது எல்லாம் வெளி நாட்டில் இருக்கறவங்களுக்கு வரும் நோய். நாம கிராமத்துல இருக்கோம் நமக்கெல்லாம் வராது” என சொன்னாள் அலமேலு.

மாலை 4 மணி ஆனது. சங்கிலி வீட்டு பெல் எப்போது அடிப்பார்கள் என காத்துக் கொண்டிருந்தான். “சரி மாணவர்களே நாளையிலிருந்து முழு ஆண்டு தேர்வு நடக்க போகுது. எல்லோரும் நல்லா படிச்சுட்டு வரணும் சரியா” என்றார் ஆசிரியர். “என்னாது பரிச்சையா அதும் நாளிலிருந்தேவா.. ரொம்ப கஷ்டம்” என சோகமாக தலை குனிந்தான் சங்கிலி. அவனுக்கும் படிப்பிற்கும் ஏழாம் பொருத்தம் தான். பழனி ஓரளவு படிப்பான் ஆனால் ரவி படிப்பில் படு சுட்டி, நல்லா படிக்கிற இன்னும் நிறைய புத்தகங்களை படி என அவனுக்கு அப்பப்போ சில ஆங்கில புத்தகங்களை தருவார் வகுப்பாசிரியர். அவன் அம்மா சாந்தி ஆசை பட்ட படி படித்து பெரிய ஆளாக வேண்டும் என உறுதியோடு இருந்தான் ரவி. எது எப்படியாக இருந்தாலும் இவர்கள் அனைவரின் வாழ்க்கையும் ஒரு தெளிந்த நீரோடை போல தான் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்