ஒரே இடத்தில் ரொம்ப நேரமாகப் படுத்து இருப்பது பிடிக்காமல் மெல்ல எழ நினைத்தான் பிரணவ். அதைப் பார்த்த ப்ரணீதா “நோ பிரணவ் இப்ப நீ குட் பாயா இருந்தால் தான் டாக்டர் அங்கிள் வந்து நீ சமத்துப் பையனா இருக்கனு சீக்கிரமா வீட்டுக்குப் போக சொல்லுவாங்க. இல்லனா இன்னும் ஒரு டே இருக்கணும்” என
“ப்ச்..” என்று மீண்டும் படுத்துக் கொண்டு “பரி போர் அடிக்குது என்னோட பொம்மை எல்லாம் மாதவ் அண்ணா கிட்டச் சொல்லி எடுத்துட்டு வாயேன்” என்று சிணிங்கிக் கொண்டு சொல்ல,
“நம்ம என்ன பிக்னிக் வந்து இருக்கோம் பாரு அது எல்லாம் எடுத்துட்டு வர. இப்ப நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ இனி நமக்கு நிறைய ஒர்க் இருக்கு. பிரணவ் கண்ணா குட் பாய் மாதிரி எனக்கு ஹெல்ப் பண்ணுவிங்களாம்” என்று அவனிடம் அன்று பொழுதும் பேசிக் கொண்டே அவனுக்குச் சலிப்பு வராமல் பார்த்துக் கொண்டாள்.
மதியம் மேல் பரிசோதித்த மருத்துவர்கள் அவனை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்க, சந்தோசமாக வீட்டுக்கு வந்து விட்டான். அவன் மனநிலை இப்படி இருக்க அதற்கு மாறாக இருந்தது ப்ரணீதாவின் மனநிலை. அவனைக் கீழே பாதுக்காப்பாக விளையாட விட்டு விட்டு பக்கத்தில் அவன் விளையாடும் முழு இடமும் தெரியும் படி பேபி மொனிட்டரிங் கேமரா இன்ஸ்டால் செய்து, போனில் அவனின் நலத்தை அறிந்து கொள்ளும் படி செய்தாள். இன்னும் அவளுக்குத் தெரியவில்லையே தன் தோழிகள் என்ன செய்தார்கள். ஏன் இவன் இப்படி ஆனான் என்று அதன் இந்த ஏற்பாடு.
அவனின் அறையைப் புரட்டி போட்டு எதாவது அவனைப் பற்றி கிடைக்கிறதா என்று தேட துடங்கினாள். அவனது அறையில் இரண்டு பக்கமும் இரண்டு கபோர்டு இருந்தது. முதல் கபோர்டு முழுவதும் அவன் டிரஸ் மற்றும் புத்தகமே பெரிதும் இருந்தது.
அடுத்த முனையில் இருக்கும் கபோர்டுடை திறக்க பார்க்க அதுவோ திறக்கவே இல்லை. பூட்டி இருப்பது புரிந்து உடனே தன் அத்தையிடம் கேட்க, அவரோ “அது அவனோட ரொம்ப பர்சனல் கபோராட் மா. எப்பவுமே அதைப் பூட்டி அவன் தான் சாவி வெச்சி இருப்பான். உள்ள என்ன இருக்குனு யாருக்கும் தெரியாது. ஆனா பெரிசா புதையல் எல்லாம் இருக்காது” என்று சிரித்துக் கொண்டே செல்லும் அவருக்குத் தெரியாதே அதில் விலைமதிக்க முடியாத பல பொக்கிஷம் இருப்பது.
பெரிய கபோர்டு. பாதியாகப் பிரித்து மேல் இரண்டு கதவு. அதே போல் கீழ் இரண்டு கதவு. மேல் இருக்கும் கதவின் பூட்டை திறக்க முடியவில்லை. கீழ் கதவைத் திறக்க, சில பல முயற்சிக்குப் பின் வெற்றிகரமாகத் திறந்து விட்டது.
ஆனால் அதற்குள் கீழே பெரிதாகச் சத்தம் கேட்க, உடனே மானிட்டரை பார்க்க அதில் பிரணவ்வை காணவில்லை. அவசரமாகக் கீழே ஓடினாள். என்னமோ எதோ என்று பயந்து கொண்டே கீழே இறங்க, அங்கோ “டேய் இது என்னோட கார் டா நான் தர மாட்டேன். செல் மட்டும் தான் ரிமோடிற்கு போடணும். போட்டு நானே வெச்சிப்பேன் இதுல கை வெச்ச அவ்வளோ தான் சொல்லிட்டேன்” என்ற மாதவ் கையில் ப்ளூ கலர் ரிமோட் கண்ட்ரோல் காரை வைத்து கொண்டு ஹால் முழுவதும் சுற்றிக் கொண்டு இருக்க,
அவன் பின்னே “அண்ணா நான் தானே சின்ன பையன் உனக்கு எதுக்கு இது. ஒழுங்கா கொடுத்துட்டு போ இல்லனா அங்க இருக்கிற பூ தொட்டிய தூக்கி போட்டுடுவேன்” என்று அவனை மிரட்டிக் கொண்டே துரத்த,
‘இதுங்க இரெண்டுத்துக்கும் சின்ன பிள்ளைன்னு நினைப்பு. அவன் தானே எதோ புரியாம பேசறான்னு பார்த்த இந்த மாம்ஸ் க்கு புத்தி எங்க போச்சோ’ என்று கடுப்பாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருக்க,
இருவரின் சேட்டையும் அதிகம் ஆனதே தவிரா துளியும் குறையவில்லை. பக்கத்தில் ஒரு மெல்லிய உருட்டுக் கட்டையைப் பார்த்தவள் அதை எடுத்துக் கொண்டு இருவரும் நோக்கி “இரண்டு பேரும் சத்தம் போடாம இருக்கீங்களா இல்லை நாலு அடி போடவா” என்று சத்தமாகக் கத்தி சொல்ல,
முதலில் இருவரும் முழித்து விட்டு அமைதியாக அமர்ந்து விட்டனர். இதைக் கண்ட இந்திரா “இரண்டும் அடங்காத பிசாசு மா. முன்ன எல்லாம் ஏன்டா வீட்டில் இருக்கோம் என்னைத் தேட வேண்டாம்னு எழுதி வெச்சிட்டு போய்டலாம் போல இருக்கும். எப்ப பிரணவ் இப்படி ஆனானோ அப்ப இருந்து மாதவ் கிட்ட பெருசா பேச கூட மாட்டான். அவன் பிரென்ட் நந்தன் கிட்ட மட்டும் தான் அமைதியா இருப்பான்.
நீ வந்த பின்னத் தான் முன்ன போல விளையாடுகிறான். ஆமா என்ன அவனோட கபோர்டு எல்லாம் கிளீன் பண்ணிட்டு இருந்தியே முடிச்சிட்டியா” என
“இல்ல அத்தை அதுக்குள்ள இவங்க சத்தம் கேட்டு வந்துட்டேன். கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்கு நாளைக்கு பார்த்துகிறேன். இவங்க இரண்டு பேரையும் கூப்பிட்டு போறேன் அத்தை” என்று எங்கே போகப் போகிறோம் என்ற தகவலைச் சொல்லாமல் விட்டு விட்டாள்.
மாதவ்விடம் வந்து “வெளியே போகணும் ரெடி ஆகுங்கள்” என்று மொட்டையாகச் சொல்ல, எங்கே என்று கேட்க அவளை நோக்க அவளோ பிரணவ் கையை பிடித்துக் கொண்டு அவனது அறையை நோக்கிச் சென்றுவிட்டாள்.
திருவான்மியூர், கடலில் உப்பு காற்று நிறைந்து இருக்க காரில் சென்று கொண்டு இருக்கும் போது பிரணவ் “பரி பீச் போலாமா” என்று ஆர்வமாகக் கேட்க,
“கண்டிப்பா நீ சமத்தா இருந்தால் வரும் போது போகலாம்” என்று அவன் அருகே பின் இருக்கையிலிருந்து கொண்டு முன்னே மாதவ் விடம் போன் மூலம் வழியைச் சொல்லிக் கொண்டு இருக்க,
மாதவ் பொறுமையாக “ப்ரீ குட்டி எங்க போக போறோம்னு சொன்ன நல்ல இருக்கும். எங்கனே தெரியாமலே ரொம்ப நேரமா வண்டி ஓட்டிட்டு இருக்கேன்” என்று பாவமாகக் கேட்க,
“என் பிரென்ட் இங்க தான் கிளினிக் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. அதான் சும்மா ஒரு விசிட்” என்று பிரணவ் இருக்கவே பாதியை மட்டும் சொல்ல, அடுத்த சில நிமிடத்தில் இறங்க வேண்டிய இடம் வந்தது.
நேம் போர்டு பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து தான் போனான் ‘செரினிட்டி ஸ்பேஸ்’ உடனே ப்ரணீதாவை திரும்பிப் பார்க்க அவளோ அவனை அழுத்தமாகப் பார்த்து கொண்டு பிரணவை கீழே இறங்க வைத்து அந்த இடத்தை சுற்றி அமைந்துள்ள பொருட்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க,
மாதவ் “இங்க யாரைப் பார்க்க வந்து இருக்கோம். முதலில் வீட்டுக்குப் போகலாம் வா. பிரணவ் பற்றி என்ன நினைப்பாங்க” என
அவனைப் புரியாமல் பார்த்தவள் “எனக்கு என்ன பண்றேன்னு நல்லாவே தெரியும் மாதவ். பெட்டர் ஸ்டே க்விட் குயிட்” என்று அவனை முறைத்துக் கொண்டே சொல்ல,
“இங்க வந்து போகிறதை யாரவது பார்த்தால் நம்ம பற்றி என்ன நினைப்பாங்க. ப்ளீஸ் வீட்டுக்கு போய்டலாம்” என்று மாதவ் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு சொல்ல,
“உங்களால என் கூட வர முடியும்னா வாங்க இல்லையா இங்க காரில் வெயிட் பண்ணுங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு பிரணவ்விடம் “வா கண்ணா உள்ள போகலாம்” என்று அவனை அழைத்துப் போக, உள்ளே செல்ல மனம் சுத்தமாக இல்லை என்றாலும் தம்பிக்காகச் சென்றான் மாதவ்.
மனநிலை மருத்துவரைப் பார்ப்பது ஒன்றும் குற்றம் இல்லையே. உடம்பு எப்படி சில நேரங்களில் பாரத்தை,யும் பல அழுத்தத்தையும் தாங்க முடியாமல் ஒய்வு வேண்டிச் சளி, காய்ச்சல், உடல் வலி போன்றவற்றைத் தருகிறதோ, அதே போல் தானே மூளையும்.
மூளையை நலமாக வைத்து இருந்தால் தானே எண்ணம் நல்லதாக இருக்கும். நலத்தைப் பேணி காக்க மருத்துவரின் உதவியை நாடுவது இயல்பே. சின்ன மாற்றத்தை உணரும் போதே மனநிலை மருத்துவரை அணுகினால் பல இன்னல்களிலிருந்து வெளிவர உதவலாம். பல சைக்கோ உருவாகாமல் தடுக்கலாம். குடும்பங்களே சுருங்கிய பின் பேசவே ஆள் இல்லாத போது கண்டிக்க யார் இருக்கிறார்கள் என்பதால் தானே பலர் இங்கே தான் செய்வது சரி என்று நினைத்து பின் விளைவுகளை யோசிக்கத் தவறுகிறோம்.
மன நோயை, புற்று நோயை விட கொடியதாக நினைத்து அஞ்சாமல் சாதாரண தலைவலி போல் நினைத்து மருத்துவரை அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
ப்ரணிதா “பிரணவ் கண்ணா உள்ள என் பிரென்ட் இருக்காள். அவங்க உன் கிட்ட சில கேள்வி கேட்பாங்க. நீ நல்ல பிள்ளையா எல்லாத்துக்கும் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லணும் சரியா” என அவனும் அவளுக்கு தலையை ஆட்டிக்கொண்டு வரத் தயங்கி கொண்டு இருந்த தமையனின் கையை பிடித்துக்கொண்டு முன்னேற மாதவ்வும் அவனிடம் எதுவும் சொல்ல இயலாமல் செல்ல, இதை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு பின் சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் யாரும் இல்லாத வரவேற்பறை தான் இவர்களை வரவேற்றது. அதைக் கண்டதும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். தாங்கள் வரும் பொழுது யாரும் இருக்கக் கூடாது என்று சொன்னவள் ஆயிற்றே.
மாதவ் மனசாட்சி ‘இடம் எல்லாம் சூப்பரா தான் இருக்கு ஆனா ஈ ஓட்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கே. அப்ப டாக்டர் எவ்வளவு திறமை. இங்க போய் வந்து இருக்கோம் என்ன நடக்க போகுதோ’ என்ற மனநிலையில் தான் இருந்தான் உள்ளே செல்லும் வரை.
இவர்கள் வந்ததும் எங்கு இருந்து தான் வந்தாரோ என்பது போல் ஒரு நடுத்தர வயது மனிதன் “வாங்க உங்களுக்காகத் தான் டாக்டர் மேடம் வெயிட் பண்ணிட்டு இருகாங்க” என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
உள்ளே டாக்டர் ஜான்வி அவர்களுக்காகக் காத்திருக்க, இங்க எல்லாம் எதற்குக் தான் வருமோ என்று சலிப்பாக மாதவ் நடந்து வர, எப்படியாவது பிரணவை சரி பண்ணிடனும் என்று நம்பிக்கையுடன் ப்ரணீதா இருக்க, வீட்டுக்கு போய் என்ன விளையாடலாம் என்ன சாப்பிடலாம் என்று விளையாட்டுத் தனத்துடன் துள்ளிக் குதித்துச் சென்றான் பிரணவ்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க, விதியின் விளையாட்டு தான் என்னவோ??
உயிரோட்டம் தொடரட்டும்
நிலானி தாஸ்