அத்தியாயம் – 9
“ஆனாலும் நீ ரொம்ப பண்றடா… பாவமா இருக்குடா அந்தப் பொண்ண பார்க்க…“
“ஆனா அவ எனக்கு பாவம் பார்க்காம என் ஹார்ட்ல ஓட்ட போட்டுட்டாளே…”
“ஆத்தி வாடா போய் ஒரு ஸ்டிச்சஸ் போட்டுட்டு வருவோம் “ என்று கூறி வேணி கண்ணடிக்க, தூரத்தில் நின்றிருந்த விதுராவிற்கோ “ரொம்பத்தான் காதலு… நொடியும் இந்தம்மா இவர விட்டுப் பிரிஞ்சிருக்க மாட்டாங்க போலவே” என்று நினைத்தவள் அவர்களை நோக்கி நடந்தாள்.
“எப்ப உன்கிட்ட கவிதை கொண்டுவரச் சொன்னேன். இவ்வளவு லேட்டா கொண்டு வந்திருக்க…” என்று சற்றே மதுரவேணி எகிற, வேந்தனின் கண்களோ விதுராவின் தீண்டி விளையாடிடும் முன்நெற்றி முடிகளில் நிலைத்திருந்தது.
‘ச்ச நமக்கான இடத்த எல்லாம் இந்த முடிகள் ஆக்குப்பை பண்ணுதே ‘ என்று சற்றே பொறாமை கொண்டான்.
“அது கொஞ்சம் லேட் ஆகிடுச்சு சீனியர்… வீட்டுக்குப் போக டைம் ஆச்சு சீனியர்… அதான் வர முடியல” என்று சற்று உள்ளே சென்ற குரலில் பெண்ணவள் சொன்னாள்.
“அடுத்த பஸ் ஸ்டாப்ல இருக்குற வீட்டுக்கு… ஹ்ம்ம்… நல்லா உருட்டுறமா நீ...” என்றவள், “உனக்கு உருட்டினினு பெயர் வச்சா என்ன?…” என்று வேணி கேட்க, “எதே” என்று ஒரு நொடி ஜெர்க்கானவள் , “ கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க சீனியர்” என்று கொஞ்சம் திடமாகப் பேச ஆரம்பித்தாள்.
“சரி சரி அந்த கவிதையை வாசி பார்க்கலாம் “ என்று வேந்தன் தன் திருவாயைத் திறக்க, அவனை ஒரு நொடி கண்களில் நிரப்பியவள்,
“இமைப் பொழுதில்
எனில் நுழைந்தாய் மணாளனே – எந்தன்
நினைவுகளை எனில் மழுங்கடித்தாயோ!
உன்னோடு பலதூரம் சென்றிட
வாழ்நாள் முழுதும் – உன்னுடன்
பயணம் தொடர்ந்திட விரும்பினேன்
அழைத்துச் செல்வாயோ
உன்னுடன் என்னையும்
இமைப்பொழுதும் உனைமறவாதே
ஒரு வாழ்க்கை
வாழ்ந்தால் நலமே, வாழ்வோமா…!”
விதுரா கூறிய இந்த கவிதையைத்தான் அவளிடமே காமராஜர் மண்டபத்தில் வைத்துக் கூறினான்.
“என்ன சீனியருக்கு ப்ரப்போஸ் பண்ணுற… அம்புட்டு பிடிக்குமா என்ன…?” வேந்தன் தலை சாய்த்து புருவமுயர்த்தி கேட்க, விதுராவிற்கு தன் மனம் நழுவுவது போன்று இருந்தது.
கண்ட நாள் முதலாய் அவள் மனதில் பதிந்து விட்டதே கேள்வனின் முகம். யாரிடமும் வெளிப்படுத்தாத அந்த உணர்வு காதலா கவர்ச்சியாய் இருக்குமோ என்ற ஐயத்தில் அப்படியே விட்டு விட்டாள். அதிலும் மதுரவேணியின் உடனிருப்பைக் கண்டு
விலகியே நிற்கிறாள் இந்த இரண்டு ஆண்டுகளாக விபரம் ஏதுமின்றியே…
ஆனால் இரண்டு நாள் முன்னரே அவனைத் தன் தாயின் தமையன் மகன் தன் முறைமாமன் என்று அறிந்திருக்க, அன்று முதலே அவனை மனதில் தன் தலைவனாய் உருப்போட்டுக் கொண்டிருகாகிறாள்.
காரணமே இன்றி அவனை அவள் மனதில் பசுமரத்தாணி போல உருவம் செதுக்கி வைத்திருக்கிறாள். அதனை எங்ஙனம் சொல்வாள் இவ்விடலைப் பெண்.
“இவ்வளவு நேரமும் அந்த எண்ணம் வரல… ஆனா இப்ப உண்மையிலேயே கேட்டா என்ன..?”
இத்தனை நாட்களும் அவர்களுக்கு இடையில் உள்ள உறவிற்கு பெயர் தெரியாமல் தள்ளி நின்றாகி விட்டது. இனியும் தள்ளி நிற்க அவசியம் என்ன… பெயரறியா உறவிற்கு நாமாகப் பெயர் சூட்டி அதனை உண்மையாக்குவதை விட, இப்பொழுது உண்மை அறிந்து ஒரு முடிவிற்கு வரலாமே என்ற எண்ணம் வந்துவிட்டது.
வேந்தனின் கண்களில் தன் கண்களை இரண்டற கலந்திட நினைக்க, அவன் கண்களோ காதல் எனும் எண்ணெயில் நிறைந்து வழிந்தது.
ஒருகணம் தடுமாறிட, அவனோ புன்னகை மாறாதவனாய்
“என்ன உண்மையை கேட்கணும்…” புருவத்தினை ஏற்றி இறக்கிக் கேட்க, அவனில் அவளது இதயம் நழுவி விழுவதை உணர்ந்தாள்.
வார்த்தைகள் தடுமாறிடினும்
“உன்னோடு கைகோர்த்து
இன்னுமொரு ஐம்பதாண்டுகள்
வாழ்ந்திடும் எண்ணம் என்னிலே…
என்னை எனக்காய் ஏற்று
வாழ்நாளெல்லாம் உன்னுடன்
எந்தன் வாழ்வைப் பிணைத்திட – நின்
மனதினில் எனக்கொரு இடமுண்டோ…?”
விதுராவின் கண்களில் தெரிந்தக் காதலின் ஆழத்தில் விழுந்தவன்,
“உடைந்து நொறுங்கி நிற்கும் போது உன் உயிர் முன் ஒரு முகம் தோன்றி உன் ஒட்டுமொத்த வலிமையையும் அது மீட்டெடுக்குமாயின் அதுவே உனக்கான காதல்…
அந்தக் காதல் நானாகவே உன் வாழ்நாள் முழுதும் இருந்திட விருப்பம்…
உன் சம்மதம் வேண்டி… இந்த மெய்யின் வேந்தனாகும் வாய்ப்பு உண்டோ… “
இவர்கள் காதல் வசனம் பேச, மதுரவேணியோ ‘இந்த டயலாக் அ நாம எங்கேயோ கேட்டிருக்கோமே…’ என்று யோசிக்க அவள் மூளையோ பதில் தருவேனோ என்று ஆட்டம் காட்டியது.
“மெய்க்கு வேந்தனா…” விதுரா சந்தேகம் கேட்க,
“விதுரானா ஞானமானவள் உண்மையானவள்… அதானே… உண்மைக்கு இன்னொரு வார்த்தை மெய்… இந்த உண்மையானவளின் வேந்தனாகும் வாய்ப்பு கிடைக்குமா…
இன்னொரு மீனிங்… மெய் னா உடல் னு ஒரு பொருள் இருக்கு… வேந்தன்னா அரசன். இந்த உடலின் அரசனாகும் வாய்ப்புண்டோ… இது தான் பொருள்” என்றிட, “ஓ” என்றவள் வெட்கத்தில் சிவந்தது நின்றிருந்தாள்.
மதுரவேணியோ “அது எப்படி டா வில்லன் மட்டும் இப்படி எல்லாம் வசனம் பேசுனா அவன தூக்கி போட்டு பொழக்குறீங்க… இவனுங்க எல்லாம் இந்த வசனம் சொன்னா காதல் மன்னன்னு கொண்டாடுறீங்க “ என்று பதில் கிடைக்காது புலம்ப,
“அது லாம் அப்படி தான் பேபி” என்றபடி வேணிக்கு ரூட் விட்டபடி அவளருகில் ஒருவன் அமர்ந்தான்.
“என்னடா… புதுசா குழைஞ்சு நெளிஞ்சு பேசுற… அடில புழு எதும் பிராண்டுதா… ஒரு ஆல்பெண்டசோல் போடு. எல்லாம் சரியா போயிடும். பெட்டர் நைட் சாப்பாடு சாப்பிட்ட பிறகு போடு” என்றிட, அவனுக்கோ எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாமா என்று இருந்தது.
“தோ பாருமா… நான் உன்ன லவ் பண்றேன். நீ என்ன லவ் பண்றியா… அம்புட்டு தான் என் கொஸ்டீனு…” என்று அவன் நேரடியாகக் கேட்க, வேணி கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.
“இப்ப ஆச்சும் கேட்கத் தோன்றிச்சே... ஆனாலும் நீ குறும்பு “ என்று கூறி சிரிக்க, அவனோ பயங்கர குஷியாகி விட்டான்.
“நீ கரும்பு “ என்றிட ,
“நீ இரும்பு னு சொல்ல மாட்டேன். என் மில்டரி மாமா தான் என் இரும்பு… “ என்று கூறி வெட்கப்பட, விதுராவின் மனம் கலக்கங்கள் நீங்கி நிம்மதியில் நிறைந்தது. அவன் மீண்டும் கேள்வியாய் கேட்டுத் தொலைக்க, ஒரு புகைப்படத்தினை எடுத்துக் காட்டினாள்.
அதில் வேணியும் அவளோடு ஒரு கட்டுமஸ்தான உடம்பு கொண்ட நல்ல வலுவான ஆடவன் வேணியின் தலையை தன் தோள்களில் சாய்த்து அவள் தலை கோதியவாறு நேசமான பார்வையுடன் நின்றிருந்தான். உடற்கட்டு பார்க்க ஒரு இராணுவ வீரனுக்குரியதாக இருந்தது.
“கல்யாணம் பண்ணிக்கலாமா… நின் சம்மதம் வேண்டி நிற்கிறேன் “ என்றிட, அவள் நெற்றியில் முத்தமிட்டு அவன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, அவளது காதல் கைகூடிய மகிழ்வில் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
வெளியே சொல்லப்படாத உள்ளத்தில் புதைத்து வைத்திருந்த அந்த காதல்.
அதற்கு மேல் பேச நா எழவில்லை இருவருக்கும். அந்த அணைப்பே அவர்களை அமைதியாக்கி காதலின் கீதையைப் பேசிக்கொள்ள வைத்தது.
அவர்களுக்குள் பேச வேண்டிய காரியங்கள் ஏகப்படவை கொட்டிக் கிடந்தும் மனம் எதையும் எதிர்பாராது அந்த அணைப்பு தந்த அமைதியில் தன் காதலை சுகிக்கச் செய்தது. பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ…
“ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி…
ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னை நீ வேரோடு பேர்த்தாயடி…”
அணைப்பின் சுகத்தில் திளைத்திருந்தவர்கள் திரும்பிப் பார்க்க, “ இந்த பீஜிஎம் போதுமா சீனியர்… “ என்று இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள் மீரா.
“இந்த பிஜிஎம்மே தேவையில்ல” என்று விதுரா அணைப்பில் இருந்தவாறே கூறினாள்.
“அத இரண்டு பேருக்கும் இடைல கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டு நின்று கூட சொல்லலாம்” என்று கூற, “ உனக்கு ஏன் மா எரியுது” என்று சிரித்தவாறே கூறினான் வேந்தன்.
“எரியாம... என் எட்டு வருச காதல் கதைலயே ஒரு ஹக் இல்ல… இங்க என்னனா அக்செப்ட் ஆன முதல் நாளே ஹக்கு கிஸ்ஸூ… ஐயோ.. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையலயே… என் எட்டு வருச காதலே…“ என்று புலம்ப ,
“ஆத்தி இவ தொடங்கிட்டா… இன்னைக்கு ஈவினிங் பாக்கலாம். பை” என்றவள் வகுப்பறைக்கு ஓடி விட்டாள். அவளுக்கு பின்னிருந்து மீராவும் “அநியாயம் டி. இது மிகப்பெரிய அநியாயம் “ என்றவாறு ஓடினாள்.
காதல் கடலில் மூழ்கி எழுந்தனரா இல்லை அதிலே மூழ்கினரா…?