Loading

பிரணவ்வின் தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் விழி விரித்து நின்றாள் சிதாரா.

பிரணவ், “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா… நீ ரொம்ப அழகா இருக்காய்… ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா…” என்க,

அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய, 

தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,

அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.

பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள். 

அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,

“பாய் தாரா… அப்புறம் கால் பண்றேன்…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

அவனின் தீண்டல் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஒருபக்கம் இருக்க அவனின் செயலில் சிதாரா இன்னும் அதிர்ச்சியில் இருக்க, 

அங்கிருந்து வேகமாக செல்லும் பிரணவ்வைப் பார்த்தவாறே அவளிடம் நெருங்கிய தோழிகள் அவளை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

லாவண்யா, “என்னாச்சி சித்து… ஏன் நீ இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிறாய்… அது அபி அண்ணா கூட சென்னைல இருந்து வந்த அவர் ஃப்ரென்ட் தானே… அவர் உன் கிட்ட தனியா என்ன பேசிட்டு போறாரு…” என்க சிதாராவோ திருதிருவென முழித்தாள்.

“வனி உன் கிட்ட தான் சித்து கேட்டுட்டு இருக்கா… பதில் சொல்லு…” என அக்ஷரா கூற,

சிதாரா, “அவருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போறாருடி…” என்கவும் அதிர்ந்த இருவரும் ஒரே சமயத்தில், “என்ன…” என்றனர்.

பின் அக்ஷரா, “ஹேய்…… ஜாலி… நம்ம சித்துவ ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு…. சீக்கிரமா ட்ரீட் குடு சித்து…” என கத்த லாவண்யாவும் அதற்கு ஒத்து ஊதினாள்.

அவசரமாக இருவரின் வாயையும் அடைத்த சிதாரா, “கத்தாதுங்கடி லூசுங்களா… நாம ஒன்னும் சிட்டில இல்ல இருக்கோம்.. கிராமத்துல… பெரிசுங்க காதுல விழுந்துச்சி.. அவ்வளவு தான்…” என்கவும் இருவரும் அமைதியாகினர்.

பின், “அவர் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னார்.. நான் சொல்லல.. அப்போ நான் எதுக்கு ட்ரீட் தரணும்..” என்க,

லாவண்யா, “ஓஹோ…. சமாளிக்கிறீங்களா மேடம்… அப்போ இந்த வெட்கத்துக்கு அர்த்தம் என்னம்மா…” என்க,

வெட்கப்பட்ட சிதாரா, “போடி…” என்று விட்டு அங்கிருந்து ஓடவும்,

“ஹேய்… நில்லுடி…” என கத்திக் கொண்டு அவளை துரத்தினர் அக்ஷரா மற்றும் லாவண்யா.

வீட்டுக்கு வந்த சிதாரா அடிக்கடி மொபைலையே பார்த்த வண்ணம் இருக்க அவள் எதிரப்பார்த்த அழைப்பு தான் வரவில்லை.

மறுநாள் காலை சிதாராவின் மொபைல் ஒலிக்க அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரணவ், “தாரா…” என்றான்.

சிதாரா அவசரமாக, “ஏன்ங்க நைட்டு கால் பண்ணல…” என்க பிரணவ்விற்கோ ஏதோ சாதித்த உணர்வு.

பிரணவ், “என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா…” என்க,

“ஹ்ம்ம்..” என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.

மனதிற்குள் சிரித்த பிரணவ், “உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா… இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்… அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு…” என்றான்.

சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.

அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.

திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.

அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.

ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, “அவ என் தங்கச்சிடா… அவளுக்கு குழந்தை மனசு… எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே..” என்பான்.

பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.

பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.

சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.

ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.

திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.

ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.

 நாட்கள் வேகமாகக் கடக்க அக்ஷரா, சிதாரா, லாவண்யா மூவரினதும் இறுதிப் பரீட்சைகளும் முடிந்தன.

பலர் இன்னுமே பெண்களின் படிப்புக்கு வரையறை வைத்து அதன் பின் அவர்களை திருமணம் எனும் பெயரில் வீட்டிலே அடைப்பர்.

அது போலவே சிதாராவின் தந்தையின் சகோதரி ஒருவர் அவளின் பரீட்சை முடிவடைந்ததை அறிந்து குடும்பத்துடன் தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தனர்.

நல்ல நேரம் சிதாராவின் தாய்க்கு சகோதரர்கள் இருக்கவில்லை.

இல்லையேல் அவர்களும் தட்டைத் தூக்கிக்கொண்டு வந்திருப்பர்.

சிதாராவின் தந்தை சங்கர், தாய் தேவி இருவருமே செய்வதறியாது முழித்தனர்.

பெண் தர முடியாது என்று கூறினாலும் குடும்பத்தில் சச்சரவு ஏற்படும் என இருவரும் சிதாராவிடம் கேட்க,

சிதாராவுக்கோ மேற்படிப்பை முடிக்க ஆசை ஒரு பக்கம் இருக்க பிரணவ்வுடனான காதல் அவளை சம்மதிக்க வைக்கவில்லை.

பெற்றோரிடமும் மேற்படிப்பை முடிக்கும் தன் ஆசையைக் கூற சங்கரும் தன் தமக்கையிடம் சிதாராவின் படிப்பைக் காரணம் காட்டி மறுக்க,

அவரோ நிச்சயத்தை மட்டுமாவது வைத்துக் கொள்ளலாம் என ஒரே பிடியில் நின்றார்.

சிதாராவுக்கோ தன் அத்தையைப் பற்றி நன்றாகவே தெரியும்.

தான் விரும்புவதை எப்பாடுபட்டாவது சாதித்துக் கொள்வார்.

அவர் ஏதாவது செய்து பெற்றோரை சம்மதிக்க வைத்து விடுவார் எனப் பயந்தவள் உடனே பிரணவ்வுக்கு அழைத்து காரணத்தைக் கூறாது மறுநாளே அவளை சந்திக்க வருமாறு கூறினாள்.

மறுநாள் பிரணவ்வும் அபினவ்விடம் கூட கூறாது பூஞ்சோலை கிராமம் வர அவனை சந்திக்க கோவிலுக்குச் சென்றாள் சிதாரா.

பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, “எப்படி இருக்காய் தாரா… ஐ மிஸ்ட் யூ சோ மச்..” எனக் கூறி அவளை அணைக்க வர அவனைத் தடுத்த சிதாரா,

“பிரணவ்… எனக்கு பயமா இருக்கு… தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க…” என்க,

அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ்,

“என்னாச்சு தாரா… உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்…” என்றான்.

சிதாரா, “எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்… எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க..” என்க,

பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, “இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே…” என்க சிதாரா அதிர்ந்தாள்.

பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா, 

“என்ன விளையாடுரீங்களா பிரணவ்… நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்…” என்கவும்,

“நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா…” என்றான்.

“என்ன பிரணவ் சொல்றீங்க… உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்… நீங்களும் என்ன காதலிக்கிறீங்கல்ல… அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க..” என அழுதபடி சிதாரா கேட்க,

அவள் கரத்தை விட்ட பிரணவ்,

“நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்…” என்றான்.

பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

சிதாரா, “திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க… அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க…” என்க,

சத்தமாக சிரித்த பிரணவ்,

“நீ என்ன லூசா தாரா… பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா… இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்… அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல… பார்க்க ஏதோ அழகா இருந்தாய்… பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… அவ்வளவு தான்…” என்றான்.

சிதாரா, “இல்ல… எனக்கு தெரியும்… நீங்க பொய் சொல்லுறீங்க… வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்…” என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,

அவள் கையை உதறியவன், “ஏய்… ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு… அறிவில்லயா… அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு… நீ ரொம்ப அழகா இருந்தாய்… உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி… அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்… முடியல… அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா… 

அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே… இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா… நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்… உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது…

சாதாரண கிராமத்துக்காரி நீ… உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ… உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்… கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது… உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு… அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசப்படாதே…” என்றான்.

பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.

பின், “வரட்டா பேபி…” என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,

“தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க… என்னால நீங்க இல்லாம வாழ முடியாது… உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… ப்ளீஸ்… உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்ன நான் மாத்திக்குறேன்… என்ன விட்டு மட்டும் போக வேணாம்…” என அழுது கெஞ்ச,

“ச்சீ… போடி அந்தப்பக்கம்..” என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.

அவன் சென்ற பின்னும் அவன் கூறிய வார்த்தைகளையே நினைத்து அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

சிதாராவைத் தேடி லாவண்யாவும் அக்ஷராவும் அவள் வீட்டிற்குச் செல்ல அவள் கோவிலுக்கு சென்றுள்ளதாக தேவி கூற இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.

கோவில் குளத்தின் அருகில் சிதாரா விழுந்து கிடப்பதைக் கண்டவர்கள் அவசரமாக அவளிடம் ஓட அவளோ சுயநினைவின்றிக் கிடந்தாள்.

லாவண்யா அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்த சிதாரா,

மீண்டும் பிரணவ்வின் வார்த்தைகள் நினைவு வர இருவரையும் கட்டிப்பிடித்து கதறினாள்.

தோழிகள் இருவருமே சிதாராவின் அழுகைக்கு காரணம் புரியாது அவளிடமே கேட்க சிதாராவிடமிருந்து அழுகை மட்டுமே வெளி வந்தது.

அக்ஷரா, “என்னாச்சு சித்து… ஏன் இப்படி அழுதுட்டு இருக்காய்…” என்க,

“எல்லாமே முடிஞ்சி போச்சு அச்சு… எல்லாமே முடிஞ்சி போச்சு…” எனக் கூறி அழுதாள் சிதாரா.

லாவண்யா புரியாமல், “என்ன முடிஞ்சி போச்சுடி… தெளிவா சொல்லேன்..” என அதட்ட,

சிதாரா, “போய்ட்டான்… மொத்தமா என்ன விட்டு போய்ட்டான்…” என்க இருவரும் அதிர்ந்தனர்.

அக்ஷரா, “பிரணவ் அண்ணன பத்தியா சொல்றாய்… என்னாச்சுடி…” என்க ஆம் என தலையசைத்த சிதாரா வேறு எதுவும் கூறாது அழுதாள்.

லாவண்யா அக்ஷராவிடம், “இப்படி கேட்டா இவ எதுவும் சொல்ல மாட்டாள்.. அழுதுட்டே தான் இருப்பா… நான் ஆதுவ வர சொல்றேன்…” என்றவள் உடனே ஆதர்ஷுக்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் ஆதர்ஷ் வரவும் அவன் கண்டது அழுது கொண்டிருந்த சிதாராவைத் தான்.

ஆதர்ஷ், “என்னாச்சு நியா.. ஏன் சித்து அழுதுட்டு இருக்கா..” என்க,

லாவண்யா அவனிடம் விஷயத்தை கூறியவள், “வேற என்ன கேட்டாலும் சொல்லாம அழுதுட்டே இருக்கா ஆது… அதான் உன்ன கூப்பிட்டோம்..” என்றாள்.

ஆதர்ஷ், “சித்தும்மா.. என்னாச்சிடா… அண்ணன் கிட்ட சொல்லு… பிரணவ் உன்ன ஏதாவது சொன்னானா..” என்றான்.

தன்னைப் போல் தான் ஆதர்ஷும் பிரணவ் பிடித்திருப்பதாக கூறியதை காதலிப்பதாக எண்ணிக்கொண்டு சம்மதம் கொடுத்துள்ளான் எனப் புரிந்து கொண்ட சிதாரா,

தற்போது அவள் உண்மையைக் கூறினால் நிச்சயம் ஆதர்ஷுக்கு குற்றவுணர்வாக இருக்கும் என,

“பிரணவ் மேல எந்தத் தப்பும் இல்லண்ணா… நான் தான் அவன சரியா புரிஞ்சிக்கல…” என பாதி உண்மை பாதி பொய்யாக கூறினாள்.

“நான் வேணா பிரணவ் கிட்ட பேசி பார்க்கவா சித்தும்மா..” என ஆதர்ஷ் கேட்க அவனை அவசரமாகத் தடுத்த சிதாரா,

“இல்ல வேணாம் அண்ணா.. அவர எதுவும் கேக்காதீங்க… எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போய்டுச்சு அண்ணா… நான் தான் அவர புரிஞ்சிக்கல… என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.. ப்ளீஸ் அண்ணா.. என்னால ஃப்ரெண்ட்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் இடைலயும் எந்த பிரச்சினையும் வர வேணாம் அண்ணா… கொஞ்ச நாள் போனா நானே சரி ஆகிடுவேன்…” என்றாள்.

அதன் பின் அவர்களும் அவளை எதுவும் கேட்கவில்லை.

பிரணவ் பேசிய எதையுமே சிதாரா யாரிடமும் கூறவில்லை.

இருவருக்குள்ளும் ஏதோ சிறிய கருத்து வேறுபாடு என நினைத்து அவர்களும் விட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் சிதாராவிடம் இருந்த பழைய உற்சாகம் முழுவதும் குறைந்திருந்தது.

ஆதர்ஷ் அபினவ்விடம் கூற அபினவ் பிரணவ்விடம் கேட்டதற்கு அவன்,

“ரெண்டு பேருக்கும் செட் ஆகல..” என்று மட்டும் கூறினான்.

ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருக்க மூவரின் பரீட்சை முடிவுகளும் வந்திருந்தன.

மூவருமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர்.

ஒரு வாரம் கழித்து திடீரென பெற்றோரிடம் வந்து நின்ற சிதாரா மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கூறினாள்.

பெற்றோர், தோழிகள் என அனைவரும் அதிர்ந்து ஏன் எனக் கேட்டதற்கு,

“சின்ன வயசுல இருந்தே அப்ரோட்ல ஹயர் ஸ்டடீஸ் முடிக்கனும்னு ஆசை… அதான்..” என்றாள்.

அதன் பின் நியுயார்க் ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் சங்கர் சிதாராவுக்கு அட்மிஷன் வாங்க,

பெற்றோர், தோழிகள் என அனைவரிடமும் விடை பெற்று தன் எதிர்காலத்துக்காக வேண்டி விமானத்தில் நியுயார்க் பறந்தாள் சிதாரா.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.