Loading

ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் லாவண்யா, அக்ஷரா இருவருவருமே கோயம்புத்தூர் வந்தடைந்தனர்.

நிச்சயத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஆர்யான் மற்றும் சிதாராவின் குடும்பம் இணைந்து நிச்சயத்துக்கு அனைவருக்கும் உடைகள், ஆபரணங்கள் வாங்கச் சென்றனர்.

ஆடைத் தேர்வை பிள்ளைகள் வசமே பெரியவர்கள் ஒப்படைத்து விட்டனர்.

கீழ் தளத்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் தேர்வு செய்து கொண்டிருக்க, 

மேல் தளத்தில் ஆர்யான் ஆண்கள் பிரிவிலும் தோழிகள் மூவரும் பெண்கள் பிரிவிலும் தமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

பெண்கள் அவசரமாக உடை தேர்வு செய்தால் அதிசயம் தானே.

இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.

ஆர்யான் தனக்கு பொருத்தமான வேஷ்டி சட்டை எடுத்துக் கொண்டு தோழிகள் இருந்த பக்கம் வந்தான்.

அவர்களோ அங்கிருந்த பணியாளரை வைத்து செய்து கொண்டிருந்தனர்.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து உடைகளும் தோழிகள் முன் கடை பரப்பப்பட்டிருக்க இன்னுமே தேர்வு செய்தபாடில்லை.

அதைக் கண்ட ஆர்யான்,

“இதுங்கள திருத்தவே முடியாது… எவ்வளவு நேரம் தான் செலக்ட் பண்ணுவீங்க… இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல… தள்ளுங்க நானே பாக்குறேன்…” என மூவரிடமும் கூற, 

தோழிகள் மூவரும் அவனுக்கு வழி விட்டு நின்றனர்.

சிதாரா மெதுவாக அக்ஷராவின் காதில்,

“என்னவோ பெரிய ஹீரோ போல வந்து சீன் போடுறான் பாரு… பொண்ணுங்களோட ட்ரஸ் செலக்ட் பண்ணுறது அவ்வளவு ஈசியா என்ன… எப்படி முழிக்க போறான் பாரு…” என்க அக்ஷரா வாய் மூடி சிரித்தாள்.

ஆர்யானோ ஐந்து நிமிடத்திலே அவர்கள் பக்கம் திரும்ப,

சிதாரா, “என்ன ஜிராஃபி… ஏதாவது ஹெல்ப் வேணுமா…” என அவனைக் கேலி செய்ய,

ஆர்யான் மூவரின் கையிலும் அழகான வேலைப்பாடுடைய லெஹேங்காவை வைக்கவும் மூவருமே அதனை விழி விரித்து நோக்கினர்.

லாவண்யா, “அண்ணா…. சும்மா சொல்லக் கூடாது… அவ்வளவு அழகா இருக்கு இந்த ட்ரஸ்… நாம பல மணிநேரம் உக்காந்து தேடினாலும் இவவ்ளவு நல்லதா செலெக்ட் பண்ண மாட்டோம்…” என்க,

அக்ஷராவும் அதனை ஆமோதித்தாள்.

சிதாரா இன்னும் அமைதியாக இருக்க,

அவளை குறும்படன் நோக்கிய ஆர்யான்,

“ஏதாவது சொல்லனுமா மினி… பரவாயில்ல தேங்க்ஸ் எல்லாம் சொல்ல அவசியமில்ல… நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்…” எனக் கூறி கண்ணடித்தான்.

சிதாரா சமாளிப்பாக, “ஹ்ம்ம்… ஏதோ பரவாயில்லை… நல்லா தான் செலெக்ட் பண்ணி இருக்க… ” எனக் கூறியவள் ஆர்யான் மீண்டும் ஏதாவது கூறும் முன் தோழிகளை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ஆர்யானும் கீழே சென்றான்.

நகைக்கடைக்கு சென்று விட்டு ஒரு ஹாட்டலில் இரவுணவை முடித்தனர்.

சங்கர் இரவு அங்கேயே ஆர்யானின் குடும்பத்தைத் தங்கி விட்டு செல்லக் கூற,

ரஞ்சித், “இல்ல சம்மந்தி… கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க அப்படி தங்கினா அவ்வளவு நல்லா இருக்காது… பக்கத்துல ஏதாவது ஹாட்டல்ல தங்கிட்டு காலைல கிளம்புறோம்… அப்போ வரோம் சம்மந்தி…” என்று விட்டு அவர்கள் விடை பெற்றனர்.

செல்லும் முன் சிதாராவிடம் வந்த ஆர்யான் அவள் கையில் ஒரு பொலித்தீன் பையைக் கொடுக்க சிதாராவோ அவனை கேள்வியாய் ஏறிட்டான்.

“மினி இதுல ஒரு சேரி இருக்கு… உனக்குன்னு சொல்லி நானே ரெடி பண்ணது… உனக்கு மனசுக்கு ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ணுற ஏதாவது ஒரு நாளைக்கு தான் நீ இத கட்டனும் மினி…” என ஆர்யான் கூற,

அவனுக்கு நன்றி கூறி பெற்றுக் கொண்ட சிதாரா, 

“இந்த கொஞ்ச நாளா நீ ரொம்ப டிஃபரன்ட்டா பிஹேவ் பண்ணுற ஜிராஃபி… எனக்கு இன்னுமே உன் மேல டவுட்டா இருக்கு…” என்க,

அவளுக்கு பதிலேதும் கூறாது புன்னகைத்து விட்டு கிளம்பினான் ஆர்யான்.

நாட்கள் வேகமாகக் கடந்து நிச்சய தினத்தை அடைந்தது.

சாதாரணமாக நிச்சயத்தை நடத்தலாம் என ஆர்யானும் சிதாராவும் எவ்வளவு கூறியும் கேட்காது ரஞ்சித், சங்கர் இருவருமே பெரிய மண்டபமாகப் பார்த்து அனைவரையும் அழைத்து விமர்சையாக நிச்சயத்தை ஏற்பாடு செய்தனர்.

ஆதர்ஷ், அபினவ், அவர்களின் குடும்பத்தினர், லாவண்யா மற்றும் அக்ஷராவின் குடும்பத்தினர் என அனைவரும் நிச்சயத்துக்கு வந்திருந்தனர்.

ஆர்யான் அன்று தோழிகள் மூவருக்கும் தேர்ந்தெடுத்த லெஹேங்காவையே மூவரும் அணிந்திருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து நிச்சயப் பத்திரிகை வாசிக்கவென தேவி லாவண்யாவிடம் சிதாராவை அழைத்து வரக் கூற,

சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்த லாவண்யா அவளை அங்கு காணாமல் குழம்பினாள்‌.

பாத்ரூமிலும் பார்க்க அங்கும் இல்லை.

பதட்டமாக சங்கர், ரஞ்சித், அகிலா, தேவி நால்வரும் இருந்த இடத்திற்கு வந்தவள் சிதாரா அறையில் இல்லாத விஷயத்தைக் கூற,

சரியாக அபினவ்வும் வந்து ஆர்யானையும் காணவில்லை எனக் கூறினான்.

அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இருவருக்கும் அழைத்துப் பார்க்க இருவருக்குமே முழு ரிங் சென்று கட் ஆகியது.

ஆதர்ஷும் அபினவ்வும் அவர்களைத் தேடி விட்டு வருவதாக செல்லப் பார்க்க மண்டப வாயிலில் ஆர்யான் சிதாராவின் கைப் பிடித்து அழைத்து வருவதைக் கண்டதும் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ரஞ்சித், “எங்கடா போனீங்க… ரெண்டு பேரையும் காணோம்னு சொன்னதும் எங்க எல்லாருக்கும் எவ்வளவு டென்ஷனா இருந்தது தெரியுமா..‌. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருக்குற விருந்தாளிங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்…” என ஆர்யானைக் கடிந்து கொள்ள,

“சாரிப்பா… மினிக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குறதா சொன்னா.. அதான் ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய நின்னு காத்து வாங்கிட்டு இருந்தோம்…” என ஆர்யான் கூற,

ரஞ்சித் மீண்டும் அவனைத் திட்ட வாயெடுக்க அவரைத் தடுத்த சங்கர்,

“அப்புறம் இத பத்தி பேசிக்கலாம் சம்மந்தி… நல்ல நேரம் முடியிறதுக்கு முன்னாடி பத்திரிகைய வாசிச்சு நிச்சயத்த முடிக்கலாம்…” என்கவும் ரஞ்சித் அமைதியாகினார்.

ஆனால் ஆர்யானின் முகம் ஒரு வித இறுக்கத்துடனும் சிதாராவின் முகம் பயத்துடனும் இருப்பதை ஆதர்ஷ் அவதானித்து விட்டான்.

பின் பத்திரிகை வாசித்து முடித்ததும் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ளக் கூறினர். 

ஆதர்ஷ் கையை நீட்ட சிதாரா கைகள் நடுங்க தயக்கத்துடன் அவன் கைப் பிடித்து மோதிரத்தை அணிவித்தாள்.

பின் சிதாரா கையை நீட்ட அவள் கரம் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆர்யான்,

அவள் கரத்தை எடுத்து சற்று அழுத்தியவன் அவள் கண்களைப் பார்க்க,

சிதாராவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆர்யான் சிதாராவின் கைப் பற்றி அழுத்தவும் சிதாராவின் கை நடுக்கம் குறைந்து அவளும் அமைதியாகினாள்.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து தன் கண்களை மூடித் திறக்கவும் சிதாரா கண்கள் லேசாகக் கலங்க ஆர்யானைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

பதிலாக சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.

வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் விருந்து உண்டு விட்டு வாழ்த்துக் கூறி விடை பெற்றனர்.

பின் அனைவரும் மண்டபத்திலிருந்து கிளம்பி சிதாராவின் வீட்டுக்குச் சென்றனர்.

லாவண்யா, அக்ஷராவிடம் ஆர்யான்,

“மினி ரொம்ப டையர்டா இருப்பா… நீங்க ரெண்டு பேரும் அவள ரூமுக்கு கூட்டிட்டு போங்க…” என்க அவர்களும் சிதாராவை அழைத்துக் கொண்டு சென்றனர்.

மற்ற அனைவரும் ஹாலில் இருக்க, “உங்க எல்லோரு கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லனும்…” என ஆர்யான் பீடிகையுடன் ஆரம்பிக்கவும் அனைவரும் அவனைக் குழப்பமாய் நோக்கினர்.

ஆர்யான், “அங்கிள்… அப்பா… எனக்கும் மினிக்கும் நாளைக்கே கல்யாணம் நடக்கனும்…” என்க அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.

அறைக்குச் சென்றதுமே மனதில் இருந்த பாரத்தை மறக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ தெரியாது, சிதாரா உடையைக் கூட மாற்றாது தூங்க,

அவளை அறையில் விட்டு வெளியே வந்த அக்ஷரா, லாவண்யாவுமே ஆர்யான் கூறியதைக் கேட்டு கிளம்பினர்.

ஆதர்ஷ் ஏற்கனவே மண்டபத்திலிருந்தே இருவரையும் அவதானித்துக் கொண்டிருந்ததால் ஆர்யான் என்ன சொல்ல வருகிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கர், “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க… திடீர்னு இப்படி சொன்னா என்ன பண்ண முடியும்… அதுவுமில்லாம நீங்க தானே சொன்னீங்க ரெண்டு பேரும் வன் வெகேஷன்ல தான் வந்திருக்கீங்க… அதனால திரும்ப நியுயார்க் போய்ட்டு சித்துவோட ஸ்டடீஸ முடிச்சிட்டு வந்து அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்குறேன்னு… நீங்களும் அது வரை அங்கயே பண்ணுறேன்னீங்க… நீங்க சொன்னதுனால தானே கல்யாணத்த தள்ளி போட்டுட்டு நிச்சயத்த மட்டும் ஏற்பாடு பண்ணிணோம்…” என்றார்.

ரஞ்சித்தோ கோவமாக, “வர வர நீ உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்குற ஆரு… நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னா எப்படி… உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா… அப்படி உடனடியா கல்யாணத்த நடத்தனும்னு ஏன் திடீர்னு முடிவெடுத்திருக்க… என்ன நடந்தது…” எனக் கேட்டார்.

தாய்மார் இருவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் முழிக்க ஏனையோர் பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்தனர்.

“ஆமா நான் தான் கல்யாணத்த லேட் ஆகி வெச்சிக்கலாம்னு சொன்னேன்… ஆனா இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்… என்ன ஏதுன்னு எல்லாம் கேக்காதீங்க… எப்பவா இருந்தாலும் நானும் மினியும் தானே மேரேஜ் பண்ணிக்க போறோம்… அதை கொஞ்சம் அவசரமா நாளைக்கே வைங்கன்னு நான் சொல்றேன்… அதான் இப்போ இங்க எல்லாரும் இருக்காங்க தானே… ஏதாவது கோயில்ல சிம்பிளா மேரேஜ வெச்சிக்கலாம்…” என ஆர்யானும் பதிலுக்குப் பேச,

ரஞ்சித்துக்கு ஆர்யானின் நடவடிக்கையில் ஆத்திரம் வந்தது.

அகிலா தான் அவரை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்க வைத்தார்.

சங்கர், “ஆனா மாப்பிள்ளை…” என ஏதோ கூற வர,

ஆர்யான், “அங்கிள் ப்ளீஸ்… அப்பா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாரு… நீங்களாவது நான் சொல்றத கேளுங்க… இந்த கல்யாணம் கண்டிப்பா நாளைக்கே நடந்தாகனும்…” எனக் கெஞ்சினான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு சங்கர் யோசிக்க,

அவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த லாவண்யாவின் தந்தை ராஜேந்திரன்,

“சங்கர்… அதான் மாப்பிள்ளை தம்பி அவ்வளவு சொல்றாரே… ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்… நம்ம குடும்பத்துல முக்கியமானவங்க எல்லாருமே இங்க இருக்காங்க… நம்ம பொண்ணுக்கு நம்ம ஆசிர்வாதம் போதாதா.. எங்க எல்லாரையும் விட மூணாவது மனுஷங்களா இவங்க நல்லா இருக்கனும்னு ஆசை பட போறாங்க… நீ சரின்னு சொல்லு… சம்மந்தி நீங்களும் தான்… நாளைக்கே ஏதாவது நல்ல கோயில்ல நான் கல்யாணத்த ஏற்பாடு பண்ணுறேன்… அதுவுமில்லாம ரெண்டு பேரும் எப்படியும் இன்னும் கொஞ்சம் நாள்ள வெளிநாட்டுக்கு போக போறாங்க… அது புருஷன் பொஞ்சாதியா போனா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும் தானே…” என சங்கரிடமும் ரஞ்சித்திடமும் கூறினார்.

அனைவருக்கும் அவரது சொல் சரி எனப்பட சங்கர், ரஞ்சித் இருவருமே சம்மதித்தனர்.

அவர்கள் சம்மதித்ததும் தான் ஆர்யான் நிம்மதியாக உணர்ந்தான்.

ஆர்யான் வெளியே செல்ல அபினவ், ஆதர்ஷ் இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

ஆதர்ஷ், “ஏதாவது ப்ராப்ளமா ஆர்யான்…” எனக் கேட்க,

இருவரையும் கண்டு நொடியில் முக பாவனையை மாற்றிக் கொண்ட ஆர்யான்,

“ச்சீச்சீ… அப்படி எதுவும் இல்லையே…” என சிரித்து சமாளிக்க,

அபினவ், “அப்போ எதுக்கு சடன்னா மேரேஜ‌ நடத்தனும்னு சொல்ற…” என்றான்.

ஆதர்ஷும் ஆர்யானைத் தான் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆர்யான், “அது வேற ஒன்னுமில்ல… நிச்சயம் தான் முடிஞ்சதிடுச்சில்ல..‌. மேரேஜையும் அப்படியே முடிச்சிட்டா சந்தோஷம் தானே… எனக்கும் மினி கூடவே இருந்தது போல இருக்கும்… வன் மினிட்… எனக்கு இம்போர்டன்டான கால் ஒன்னு… நாம அப்புறம் பேசலாம்…” என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.

பின் அபினவ்விடம், “சித்துக்கு இன்னைக்கு என்கேஜ்மன்ட்னு பிரணவ்வுக்கு தெரியுமா…” என்க,

“ஆமாடா… பட் டூ டேய்ஸ் முன்னாடி ஏதோ பிசினஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனான்… எங்க போறேன்னு சொல்லல… டேய்.. அவன் இப்ப முன்ன மாதிரி இல்லடா… சித்துவ நெனச்சி உண்மையாவே திருந்திட்டான்… நீ அவன் கூட முன்ன மாதிரி பேசுடா… ரொம்ப ஃபீல் பண்ணுறான்…” என அபினவ் கூறவும் வெறும் தலையசைப்பை மட்டும் பதிலாக அளித்தான் ஆதர்ஷ்.

மறுநாள் காலை கோயிலில் குடும்பத்தினர் மத்தியில் அனைவரின் ஆசியுடனும் ஆர்யான் மற்றும் சிதாரா திருமணம் எளிமையாக நடந்தது. 

சிதாராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான் ஆர்யான்.

ஆர்யான் சிதாராவின் கழுத்தில் தாலி கட்டியதும் அவளையும் அறியாமல் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட ஆர்யான்,

“நான் உன் பக்கத்துல இருக்கும் போது எதுக்காகவும் நீ அழக் கூடாது மினி…” என்கவும் சரி எனத் தலையாட்டினாள்.

பின் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

திருமணத்தை ஆர்யான் உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியதில் மாத்திரமே ரஞ்சித்துக்கு கோவம் இருந்தது.

மற்றபடி சிதாரா தன் வீட்டு மருமகளானது அவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

சிதாராவை அணைத்துக் கொண்ட அகிலா,

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சித்துமா… எது எப்படியோ நீ எங்க வீட்டு மருமகள் ஆகிட்ட… நீ எங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு இல்லங்குற குறையை தீர்க்க வந்தவ… எங்க வீட்டுல உன்ன ராணி மாதிரி பார்த்துப்போம்… உனக்கு என்ன வேணும்னாலும் இந்த அத்த கிட்ட தயங்காம கேளு…” எனக் கூறவும் சிதாரா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

சங்கர், தேவி இருவருக்கும் சிதாராவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததில் மகிழ்ச்சி.

தேவி சிதாராவிடம், “இனி அவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு அப்பா அம்மா… அந்த குடும்பத்தோட மருமகளா அவங்க மரியாதைய காப்பாத்துற கடமை உனக்கும் இருக்கு சித்து… மாப்பிள்ளை பேச்சை கேட்டு நட… அவர் எது பண்ணாலும் நிச்சயம் அது உன் நல்லதுக்காகத் தான் இருக்கும்…” என்று விட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

சங்கரும் சிதாராவை உச்சி முகர்ந்து, “சந்தோஷமா இருமா… உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் மாப்பிள்ளை பாத்துப்பாரு…” என்க அவரை அணைத்து கண்ணீர் விட்டாள்.

சற்று நேரத்திலே நண்பர்கள் அனைவரும் சிதாராவை கேலி கிண்டல் செய்து சிரிக்க வைத்தனர்.

கோயிலுக்கு வந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ராஜேந்திரன்.

அனைவரும் விருந்து பரிமாறுவதில் கவனமாக இருக்க,

சிதாராவை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாய் வந்தான் ஆர்யான்.

அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட சிதாரா,

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரயன்… அவன் திரும்ப ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது… ப்ளீஸ்… என்ன விட்டு எங்கையும் போயிடாதே…” என அழுதாள்.

ஆர்யான், “மினி… இனிமே நீ எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்ல… நான் தான் உன் கூட இருக்கேன்ல… என்ன பிரச்சினையா இருந்தாலும் என்ன தாண்டி தான் உன்ன நெருங்கனும்…” என்றான்.

நண்பர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் வருவதைக் கண்டதும் ஆர்யானை விட்டு விலகிய சிதாரா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அக்ஷரா, “என்ன ஆர்யான் அண்ணா… இப்போ தானே கல்யாணம் முடிஞ்சது… அவ்வளவு பொறுமை இல்லயா உங்களுக்கு… அதுக்குள்ள பொண்டாட்டிய தனியா கூட்டிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணுறீங்க…” எனக் கேலி செய்ய அனைவரும் நகைத்தனர்.

ஆர்யான் அவர்களைப் பார்த்து இளித்து வைக்க,

சிதாராவோ சங்கடமாக புன்னகைத்தாள்.

லட்சமி பாட்டி நண்பர்கள் இருந்த இடம் வந்தவர்,

“என்னைய டார்லிங் டார்லிங் சொல்லி கொஞ்சிட்டு மெதுவா என் பேத்திக்கு ரூட்டு விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல படுவா…” என ஆர்யானிடம் கூற,

“டார்லிங்… ரொம்ப பொறாமைப்படுற போல தெரியிது… நீ மட்டும் சரின்னு சொல்லு… இதே மேடைல உன்ன ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன்…” என ஆர்யான் கூறவும் அனைவரும் சிரித்தனர்.

லட்சுமி பாட்டி, “பாத்தியா சீதா கண்ணு… எப்படி பேசுறான்னு… இப்போ தான் கல்யாணம் ஆச்சு… அதுக்குள்ள ரெண்டாம் தாரம் கேக்குதாம்…” என சிதாராவிடம் ஆர்யானை மாட்டி விட,

சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக முறைத்தாள்.

ஆர்யான் உடனே முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ளவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

லட்சுமி பாட்டி, “இவன இப்போ இருந்தே உன் முந்தானைல முடிச்சு வெச்சிக்கோ சீதா… உன்ன விட்டு வேற எவளையாச்சும் பார்த்தா என் கிட்ட சொல்லு… இவன் கண்ண புடுங்கி காக்காக்கு போடுறேன்…” என்கவும்,

“டார்லிங்…. வை திஸ் கொலவெரி..” என ஆர்யான் சோகமாகக் கேட்கவும் அனைவருக்கும் அவனைப் பார்த்து சிரிப்பு வந்தது.

இவர்கள் இங்கு சந்தோஷமாக இருக்க,

“ஓஹ்ஹ்ஹ்… என் கிட்ட இருந்து அவள காப்பாத்த உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா… விட மாட்டேன்டா… அவள உன் கிட்ட இருந்து பிரிச்சு உன்ன பலி வாங்காம விட மாட்டேன்டா… உன்ன கதற வைக்கிறேன் பாரு….” எனக் கூறி பயங்கரமாக சிரித்தான் அவன்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.