Loading

அத்தியாயம் -20

சிற்பிக்கு பழச்சாற்றை அவனும் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான்.அங்கே வந்த பார்த்தி சிற்பி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து “சிற்பி வலி எப்படி இருக்கு? கொஞ்ச நேரத்துல எங்க எல்லோரையும் ரொம் பயமுறுத்திட்டே” என்று அக்கறையாக அவளருகில் உட்கார்ந்துக் கொண்டவன் காந்தனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.

குறுஞ்செய்தி பார்த்து காந்தனும்,சஹாவும் நிரஞ்சனின் அறைக்கு வந்து சிற்பியிடம் பேசினார்கள்.காந்தன் சிற்பியிடம் “சாரி எல்லாம் என்னாலத் தான் நீ தான் போக மாட்டேன்னு சொன்னே. நான் உன்னை கட்டாயப்படுத்தி அனுப்பி இப்போ இந்த நிலைமைக்கு உள்ளாகிட்டேன் என்னை மன்னிச்சிடு சிற்பி”என்று கவலையோடு சொன்னான்.

சிற்பி “எதுக்கு சாரி காந்தன்? சில விஷயங்கள் நடக்கனும்னு இருக்கும் போது அது கண்டிப்பாக  நடக்கும் அதே மாதிரி இது அதனால சாரி எல்லாம் கேட்காதீங்க” என்றாள்.

நிரஞ்சன் “சிற்பி நான் தான் அலமாரி விழாமல் பிடிக்கத் தானே செய்தேன் நீ ஏன் என்னை தள்ளி விட்டு மொத்தமும் உன் மேல விழுந்து இப்போ நீ தானே  அவஸ்தை படுறே?”என்று அக்கறையோடு கேட்டான்.

சிற்பி “இது என்னோட தப்பு சார். நான் தான் புக்கை எடுத்ததோடு போகாமல் ஒவ்வொரு பொருளாக எடுத்து பார்த்து அலமாரி மேல சாயவும் அது சரிஞ்சு போச்சு என்னால நீங்க ஏன் வேதனைப்படணும்? அதான் உங்க மேல விழ விடாமல் தள்ளி விட்டேன் நாளைக்கு மறுநாள் போட்டி இருக்கு சாரி எல்லாம் என்னோட தப்புதான்

அனுமதி இல்லாமல் உங்க  பொருளை தொட்டுட்டேன்” என்று  அப்பாவியாக கேட்டாள்.

அந்த நிலைமையிலும் தன் மேல் உள்ள தவறை அவள் ஒத்துக் கொண்டது  கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் அவனின் உள்ளம் சாயத் தொடங்கியது.

அவளால் அசைய முடியாமல் உட்கார்ந்து இருந்தாள்.

முதுகில் வலி எடுக்கவும் எப்படி சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.நிரஞ்சன் மெதுவாக தலையணையை விலக்கி அவளைப் படுக்க வைத்தான்.

அவள் சொல்லாமலேயே வலியை  அவன் புரிந்துக் கொண்டு படுக்க வைத்தது சிற்பிக்கு ஆச்சரியமாய் இருந்தது.அந்த அதிர்ச்சி விலகாமல் நிரஞ்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்த்தி “சிற்பி உங்க ஊரு கன்னியாகுமரி தானே சொன்னே?”

“ம்ம்…”

“இங்கே எங்கே தங்கி இருக்கே? நாங்களும் இதுவரைக்கும் எதுவும் இதைப் பற்றி கேட்கலை அதான்”

சிற்பி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.’உண்மையைச் சொன்னால் சபரி இவருடைய மாமா என்ற விஷயம் தெரிந்து விடும்.பொய் சொன்னால் இவள் மாட்டிக் கொள்வாள்’ என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சிற்பியின் கைப்பேசி அழைத்தது.

அதை எடுத்து நிரஞ்சன் சிற்பியிடம் கொடுத்தான்.சபரி தான் அழைத்திருந்தார்.

அழைப்பை எடுத்தவள் “ஹலோ சார் ஒரு விஷயம் இங்கே ப்ளாட்ல வொர்க் செய்யும் போது சின்னதா ஒரு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு சார்”

மறுமுனையில் சபரி பதற்றத்தோடு  “என்னாச்சும்மா சிற்பி?” என்று கேட்டார்.

நடந்த விஷயங்ளைச் சொன்னாள்.எல்லாவற்றையும் கேட்டவர் “இப்போ உனக்கு வலி பரவாயில்லை”

“என்னால அசையக் கூட முடியலை சார்”  என்று தன் நிலைமையைச் சொன்னாள்.”இரும்மா நான் நேர்ல வந்து பேசுறேன்” என்று கைப்பேசியை வைத்து விட்டு சிற்பியைக் காண அவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தார் சபரி.

நிலைமையைக் கேட்டு உடனே சபரி தன் மகனான செழியனை கைப்பேசியில் அழைத்து “செழியன் நான் சொல்ற இடத்துக்கு வந்துருப்பா” என்றதும் அவனோ “என்னாச்சுப்பா ஏன் திடீர்னு அவசரமாக வரச் சொல்லுறீங்க? எதாவது பிரச்சினையா?” என்று அவன் பதறியபடி கேட்டான்.

அதைக் கேட்ட சபரி “ம்ம்… நேர்ல வா சொல்றேன்” என்று விலாசத்தை செழியனுக்கு அனுப்பி விட்டார்.அவனோ அவர் அனுப்பி இருந்த இடத்திற்கு அருகில் இருந்ததால் விரைவிலேயே  வந்திருந்தான்.

அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் காத்திருந்தவனுக்கு சிற்பியின் நினைவாகவே இருந்தது.விவரம் தெரியாமல் அவன் எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியாக நின்றான்.சிறிது நேரத்தில் சபரியும் வந்து விட “அப்பா யாருக்கு  என்னாச்சு?” என்று பதற்றமாகவே கேட்டான்.

சபரி சிற்பிக்கு நடந்த விவரங்களைச் சொல்ல அதைக் கேட்டு செழியனும் பதறிப்போனவன் “அப்பா இதை நீங்க முதலிலேயே சொல்லி இருந்தா நானே மேலே போய்  அவளை அழைச்சிட்டு ஹாஸ்பிடல் போய் இருப்பேன்” என்றான்.

உடனே  சபரி “அதெல்லாம் டாக்டர்கிட்டே காட்டியாச்சு ஒன்னுமில்லை நீ எங்கூட அமைதியா வந்தாலே போதும்” என்று சொல்லி இருவருமாக அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

சபரி அழைப்பு மணியை அழுத்தவும் பார்த்தி கதவை திறந்தான்.சபரியைக் கண்டதும் “சார் உள்ளே வாங்க சிற்பி ரூம்ல இருக்கா” என்றான். இருவரும் வேகமாகச் சென்றனர்.

உள்ளே வந்த செழியன் எதைப் பற்றியும் யோசிக்காமல் படுத்துக் கொண்டிருந்த சிற்பியின் அருகில் போய் அமர்ந்து அவளது தலையை வருடியபடி “சிற்பிகா என்னாச்சும்மா?” என்று அவன் அருகில் அமர்ந்து கேட்டான்.

பக்கத்தில் தான் நிரஞ்சனும் காந்தனும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் செழியனை  யாரென்று யோசனையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது விழிகளை திறந்து செழியனைக் கண்டதும் அவனது கைகளை இறுக்கமாக  பற்றிக் கொண்டவள் ஓஓஓவென்று அழத் துவங்கினாள்.

இதை யாரும் சற்று எதிர்பார்க்கவில்லை.செழியனுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.ஆனால் அதை வெளிக்காட்டாமல் “வலிக்குதா சிற்பி” என்றதும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.உடனே செழியன் அவளை லேசாக பிடித்து நிமிர்த்தவும் அவன் நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.இதற்கிடையில் சஹாவும் பார்த்தியும் அங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இவர்கள் நால்வரிடமும் அவளால் வலியை காட்ட முடியவில்லை.ஆனால் செழியன் அவளின் சிறுவயது முதலே ஒரு தோழனாக இருப்பவன் அதனால் அவனைக் கண்டதும்  வலியும் கண்ணீரும் சேர்ந்தபடி வந்து விட்டது.

செழியன் சிற்பியை ஒருவாறு அணைத்தவாறே அவளைப் பார்த்துக் கொண்டிருக்க இதைப் பார்த்த நிரஞ்சனுக்கும் காந்தனுக்கும் கோபமாக வந்தது.பார்த்தியும் சஹாவும் வந்திருப்பவன் யாரென்று அறியும் ஆவலில் நின்றுக் கொண்டிருந்தனர்.

சிற்பியோ அழுதபடியே “அத்தான் ரொம்ப வலிக்குது” என்று அழுதாள்.அவளின் அழைப்பினில் நிரஞ்சன் அப்படியே அதிர்ச்சியில் நின்றான்.அதுவரை அமைதியாக இருந்த சபரி இதற்கு மேல் உண்மையை மறைத்தால் சரியாக வராது என்று எண்ணினார்.

உடனே நிரஞ்சனைப் பார்த்து “தம்பி இப்படி கொஞ்ச நேரம் வர்றீங்களா?” என்று சொன்னதும் நிரஞ்சன் அவருக்கு அருகில் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்து வரவும் “நிரஞ்சன் சிற்பி என் மனைவியோட அண்ணன் பொண்ணு கொஞ்சம் குடும்பத்துல சூழ்நிலை சரியில்லாததுனால இந்த வேலையில் சேர்த்து விட்டேன் சிபாரிசு வேணாம்னு நான் சாம்பவி மேடம்கிட்டே உண்மையைச் சொல்லலை.இப்போ நிலைமை இப்படி ஆகவும் உங்ககிட்ட சொல்ல வேண்டியது ஆகிடுச்சு” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நிரஞ்சன் “சார் இதைப் பத்தி இப்போ சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்” என்றான்.

அதைக் கேட்டதும் சபரி மென் புன்னகையை படர விட்டவர் நிரஞ்சனின் தோளிலே  லேசாக தட்டியவர் “நான் இப்போ சொல்ற விஷயம் தெரிய வேண்டிய அவசியம்  இருக்கு நிரஞ்சன் நாளைக்கு சாம்பவி மேம்க்கு விஷயம் தெரிய வரும் போது அவங்களும் இதைப் பத்தி ஓரளவு நீங்க விளக்கம் சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அதற்கு நிரஞ்சனும் “சரிங்க சார் நீங்க என்னச் சொன்னீங்களோ அதையே சாம்பவி மேம் என்கிட்ட கேட்கும் போது சொல்றேன்” என்றான்.

இவர்கள் இருவரும்  பேசிக் கொண்டிருப்பதை மூவரும் ஓரமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.உடனே பார்த்தி “அப்போ சபரி சாரோட வந்து  இருக்கிறது அவங்க பையன் அதாவது சிற்பிக்கு முறைமாமன்னு நினைக்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டதும் காந்தன் திரும்பிப் பார்க்க செழியன் சிற்பியின் முதுகை தடவி விட்டப்படி “சிற்பி சின்னப் பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காதே! போதும்” என்று அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு ஏதோ ஒருமாதிரியாக இருந்தது.இவன் பார்த்துக் கொண்டிருப்பதை போலவே அங்கே வந்த நிரஞ்சனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சபரி தன் மகனைப் பார்த்து “இவன் என்னுடைய மகன் செழியன் சரியாக உங்களிடம் என்னால அறிமுகப்படுத்த முடியலை இன்னொரு நாள் நல்ல முறையில் பேசிக்கலாம் செழியா சிற்பியை அழைச்சிட்டு வா வீட்டுக்கு போகலாம்” என்றதும் அவனோ “அப்பா  சிற்பியால நடக்க முடியலை” என்று  யாருமே எதிர்பாராத நேரத்தில் அவளை இரண்டுக் கரங்களால் அள்ளியபடி தூக்கச் சென்றான்.

இதைப் பார்த்த சிற்பி “அத்தான் ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க நானே நடந்து வர முயற்சிக்கிறேன்” என்றவளை செழியன் “ப்ச் சும்மா இரு சிற்பி நான் பார்த்துக்கிறேன் அம்மாக்கும் அத்தைக்கும் யார் பதில் சொல்லுவா?” என்று அவளை இரு கரங்களால் அள்ளியபடி தூக்கிக் கொண்டு சென்றான்.

சிற்பி தயக்கத்தினால் தலையை குனிந்துக் கொண்டாள்.செழியன் முன்னால் செல்ல சபரி நிரஞ்சனைப் பார்த்து “ரொம்ப நன்றிங்க இவ்வளவு நேரம் சிற்பியை கவனிச்சிகிட்டீங்கல்ல நன்றி” என்று காந்தன் கொடுத்த மருந்துகளையும் சிற்பியின் கைப் பையையும் வாங்கிக் கொண்டுச் சென்றார்.

நிரஞ்சன் வாசலில் எட்டிப் பார்த்தான்.சிற்பி செழியனையும் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.காரில் பின்னால் அமர வைத்ததும் செழியனைப் பார்த்து சிற்பி “செழியா எதுக்கு இந்த தேவையில்லாத வேலை கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தால் நானே நடந்து இருப்பேன் இப்போ நாலு பேரும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் கிண்டல் செய்யப் போறாங்க” என்றாள்.

அதைக்கேட்டு  சிரித்த செழியன் “உன்னை இப்போத் தான் முதல் தடவையா தூக்குற மாதிரி பேசுற அடிக்கடி என்னை தூக்க வைக்கனும்னே எதாவது செய்து ஏமாத்துவே இப்போ உண்மையாகிடுச்சு அதோட உனக்கும் என் அப்பாவுக்குமான உறவைப் பத்தி இனிமேல் கம்பெனிக்கும் தெரிஞ்சுடும் அதனால வேலை கண்டினியூ ஆகுதான்னு தெரியலை பார்ப்போம் முதல்ல உன்னுடைய உடல்நிலை தான் முக்கியம் அப்புறம் தான் எல்லாம்” என்று அவன் பேசி முடிக்கவும் சபரியும் தன் காரில் வந்து அமர்ந்தார்.

மூவருமாக அங்கிருந்து சென்றார்கள்.சபரியின் மனமோ சாம்பவியிடம் உண்மையைச் சொல்வதால் தன்னைப் பற்றி எதாவது தவறாக எண்ணி விடுவரோ என்ற யோசனையில் வந்துக் கொண்டாருந்தார்.

நிரஞ்சன் எதுவும் பேசாமல்   தன் அறையில் அப்படியே போய் அமர்ந்துக் கொண்டான்.காந்தன் தன்னுடைய இசைக்கருவியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.பொதுவாக கோபம்,ஏமாற்றம்,தனிமை இது போன்ற நிலைமைகளில் அவன் அப்படித்தான்.ஏனோ அவனுடைய மனம் ஒருவிதமாத விரக்தியில் இருந்தது.அதனால் அவனும் தனியாக இருந்தான்.

பார்த்தியும் சகாவும் கைப்பேசியை  எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.இவ்வளவு நேரமாக இருந்த ஒரு சிரிப்பு, பேச்சு,அக்கறை,கவலை எல்லாம் ஒருநொடியில் காணாமல் போன உணர்வில் நால்வரும் இருந்தனர்.



Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. நிரஞ்சன் பண்றது லவ் தான் … ஆனா இந்த காந்தனை தான் புரிஞ்சுக்க முடியல … எனக்கு செழியனை நினைச்சா தான் பாவமா இருக்குது …

  2. நிரஞ்சன் அவளை மனதில் வைக்க முயல்கிறான்.

    காந்தன் தோழியாக சகோதரியாக நினைக்கிறானா இல்லை என்றால் எதற்கு அந்த கோபம், ஆதங்கம், கவலை

    எப்படியோ உண்மை தெரிஞ்சாச்சு. இனி சாம்பவி என்ன சொல்ல போறா பார்ப்போம்.