286 views

ஹைதரபாத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தில் தாசிகளுக்கெனவே இருந்த ஒரு குடியிருப்பில் வாழ்ந்தவர் அனுஷியா. 

 

தன் பதினாறு வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு எதுவுமே இன்றி அநாதையாக வந்து சேர்ந்தவரை அரவணைத்தது அக் குடியிருப்பில் வாழும் தாசிகள் தான்‌.

 

அங்கிருந்த அனைவரும் விதியாலும் சதியாலும் தாசிகளாக மாறியவர்களே. 

 

ஆகையால் தம்மைப் போல் அனுஷியா மாறி விடக் கூடாது என்பதற்காகவே கயவர்களின் பார்வையில் இருந்து முடிந்தளவு அவளை மறைத்து வைத்தனர்.

 

இவ்வாறிருக்க அனுஷியா தன் இருபதுகளின் தொடக்கத்தில் காலடி எடுத்து வைக்க, அக் குடியிருப்பின் நிர்வாகியின் பார்வையில் விழுந்தாள் அனுஷியா.

 

இதுவரை எப்படியோ அவருக்கு தெரியாமல் தான் மற்ற தாசிகள் அனுஷியாவை அங்கே தங்க வைத்திருந்தனர்.

 

நிர்வாகியின் பார்வையில் விழுந்தால் நிச்சயம் அனுஷியாவையும் அவர் தம்மைப் போலவே மாற்றி விடுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

 

எப்படியோ இதனை அறிந்து விட்ட நிர்வாகி சத்யன் கேவலமாக ஒரு திட்டத்தைத் திட்டினார்.

 

“இந்தப் பொண்ணுக்கும் என் பொண்ணு வயசு தான் இருக்கும்… அதனால இந்தப் பொண்ணு இங்கயே பாதுகாப்பா இருக்கட்டும்… ஆனா இனிமே இப்படி எனக்குத் தெரியாம திருட்டுத்தனம் பண்ணாம இருங்க…” என மற்ற தாசிகளைப் பொய்யாக மிரட்டி விட்டுச் சென்றார்.

 

அன்றிலிருந்து அனுஷியா அங்கேயே அடைந்து கிடக்காமல் ஏதாவது வேலை கிடைக்குமா எனத் தேடி அலைய, அவள் செல்லும் இடம் எல்லாம் அவள் தாசிகளுடன் வசிப்பதால் அவளைக் கேவலமாகப் பார்த்தும் வார்த்தைகளால் வதைத்தும் வந்தனர்.

 

மனமுடைந்து திரும்பும் அனுஷியாவிற்கு அங்கிருந்த தாசிகள் தான்‌ ஆறுதலாக இருந்தனர்.

 

அனுஷியா மூலம் நல்ல வருவாயை ஈட்ட எண்ணிய நிர்வாகி அதற்குத் தகுந்த வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, அச் சந்தர்ப்பமும் கிடைத்தது.

 

அன்று வழமை போலவே வேலை தேடி அலைந்த அனுஷியாவின் கைப்பேசிக்கு அழைத்தார் நிர்வாகி.

 

அவசரமாக அழைப்பை ஏற்ற அனுஷியா, “சொல்லுங்க ஐயா…” என்க, “அம்மாடி அனுஷியா… நம்ம மாலினி இருக்காளே… அவளுக்கு சின்ன பிரச்சினை ஆகிடுச்சு மா…” என்றார் சத்யன்.

 

அனுஷியாவை அங்கு அழைத்து வந்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்ததே மாலினி தான்.

 

அவளுக்கு என்னவோ ஏதோவென பதறிய அனுஷியா, “அக்காவுக்கு என்னாச்சு ஐயா?” எனக் கேட்டாள் பதட்டமாக.

 

சத்யன், “வழமையா வர கஸ்டமர் இல்லாம இன்னைக்கு புது கஸ்டமர் ஒன்ன பார்க்க அந்தப் பொண்ணு போயிருக்கா… போன இடத்துல கொஞ்சம் பிரச்சினை போல… நான் வேற வேலை விஷயமா வெளிய வந்திருக்கேன்… மத்ததுங்க எல்லாரும் கஸ்டமர பார்க்க போயிருக்காங்க… அவங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது… அதான் மா உன் கிட்ட சொல்றேன்… கொஞ்சம் நீ போய் பார்த்து அந்தப் பொண்ண கூட்டிட்டு வர முடியுமாம்மா?” எனக் கேட்டார்.

 

மாலினிக்கு பிரச்சினை என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காத அனுஷியா, “அட்ரஸ சொல்லுங்க ஐயா… நான் உடனே போறேன்…” என்றாள்.

 

அதன்படி சத்யன் அனுப்பிய முகவரிக்கு சென்று பார்க்க, அதுவோ ஏதோ லாட்ஜ் போல் இருந்தது.

 

அதனைப் பற்றி யோசிக்காதவள் உள்ளே சென்று சத்யன் கூறிய அறை எண்ணைத் தேடிச் சென்றாள்.

 

மூடியிருந்த கதவை வேகமாகத் திறந்தவள் கண்டது என்னவோ இருட்டாக இருந்த அறையைத் தான்.

 

வேகமாக அறை விளக்கை ஒளிர விட்டவள், “அக்கா… எங்க இருக்கீங்க?” எனக் குரல் கொடுத்தபடி முன்னேற அவளைப் பின்னிருந்து அணைத்தது ஒரு உருவம்.

 

“ஏய்… யாரு நீ? விடு என்னை… அக்கா…” என அனுஷியா பயத்தில் கத்த, “செம்ம ******* ஆ இருக்க பேபி…” என்றது ஒரு ஆண் குரல்.

 

அவனிடமிருந்து இருந்து வந்த மது வாடையில் அனுஷியாவிற்கு வாந்தி வருவது போல் இருந்தது.

 

“ச்சீ…” என வேகமாக அக் கயவனைத் தள்ளி விட்ட அனுஷியா கதவைத் திறக்க முயல, அதுவோ பூட்டப்பட்டிருந்தது.

 

அனுஷியா அதனைத் திறக்க முயற்சிக்கும் போதே அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த கயவன், “எங்க பேபி தப்பிக்க போற? உன்ன போக விடுறதுக்கா அந்தாளுக்கு அம்புட்டு பணத்த அள்ளி அள்ளி கொடுத்தேன்…” என்றவன் அனுஷியாவை முத்தமிட நெருங்க, தன்னைத் திட்டமிட்டு இங்கு அனுப்பி உள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டவள் அக் கயவனிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னை முத்தமிட நெருங்கியவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.

 

அதில் ஒரு நொடி அவனின் பிடி இளக, அதனைப் பயன்படுத்தி தப்பிக்க முயற்சித்தாள் அனுஷியா.

 

ஆனால் அவள் காரி உமிழ்ந்ததில் வெறியான கயவன் அனுஷியாவின் உடையைப் பற்றி இழுக்க, அவனின் பிடியில் அனுஷியா அணிந்திருந்த ஆடையின் கைப்பகுதி கிழிந்தது.

 

அவமானத்தில் அனுஷியாவின் விழிகள் கண்ணீரை சுரக்க, ஆடை கிழிந்த பகுதியில் பார்வையைப் பதித்த கயவனின் கண்கள் அவளை அடைய வெறியடைந்தன‌.

 

“ப்ளீஸ் என்னை விட்டுரு…” என அனுஷியா கண்ணீருடன் கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவனோ அனுஷியாவை வலுக்கட்டாயமாக கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்து தன் ஆசையைத் தீர்க்க முயன்றான்.

 

அக் கயவனின் தொடுதலில் அனுஷியாவிற்கு நெருப்பில் வேகுவது போல் உணர்ந்தவள் அவனிடமிருந்து தப்பிக்கப் போராட, அக் கயவனின் உடல் பலத்திற்கு முன் அனுஷியாவின் கரங்களின் பலம் ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது.

 

இருந்தும் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியவளின் பார்வையில் பட்டது கட்டிலின் அருகில் இருந்த மேசையில் இருந்த பூச்சாடி.

 

தன் கரத்தை நீட்டி பெரும்பாடு பட்டு அதனை எடுத்த அனுஷியா தன் மீது இருந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க, ஏற்கனவே போதையில் இருந்தவனின் பிடி விடுபட்டது.

 

அவனிடமிருந்து தப்பித்து அனுஷியா வெளியே ஓட, தன்னிலை அடைந்த கயவனும் அவளைப் பின்னால் துரத்தினான்.

 

தன் கற்பைக் காத்துக்கொள்ள வேகமாக ஓடியவள் அக் கயவன் அவளை விடாது துரத்தவும் அவன் காணும் முன் அவசரமாக ஒரு அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டாள்.

 

நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டவள் மெதுவாக அவ் அறை விளக்கை ஒளிர விட்டதும் கண்ட காட்சியில் அனுஷியாவின் இதயம் ஒரு நொடி இயங்க மறுத்தது.

 

அவ் அறையின் திறந்திருந்த ஜன்னலின் மீது ஒரு கையில் மதுக் கிண்ணத்துடன் ஏறி நின்றிருந்த ஒருவன் அங்கிருந்து பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அனுஷியா வேகமாக அவனின் கையைப் பிடித்து கீழே இழுக்கவும் நிலை தடுமாறி அனுஷியாவின் மீதே விழுந்தார் பல்லவன்.

 

அனுஷியாவோ பல்லவனின் நெருக்கத்தில் அதிர்ச்சியில் இருக்க, “எதுக்காக என்னைக் காப்பாத்தின?” எனக் கேட்டார் பல்லவன் போதை மயக்கத்தில்.

 

அவசரமாக அவரிடமிருந்து விலகிய அனுஷியா அங்கிருந்து செல்லப் பார்க்க, “ஏன் என்னை காப்பாத்தின? நான் சாகணும்… சாகணும்…” என உலறியவாறே எழுந்து மீண்டும் ஜன்னல் பக்கம் நடக்க, தான் சென்ற பின் மீண்டும் அவர் ஏதாவது செய்து கொள்வாரோ என்ற பயத்திலும் அறைக்கு வெளியே இருந்த கயவனிடமிருந்து தப்பிக்கவும் சற்று நேரம் அங்கேயே இருக்க முடிவு செய்தார் அனுஷியா.

 

ஆனால் அவரின் மனமோ பல்லவனை அந் நிலையில் தனியே விட்டு செல்ல ஒப்புக்கொள்ளவில்லை.

 

ஜன்னல் பக்கம் நடந்த பல்லவனின் கரத்தைப் பற்றி நிறுத்திய அனுஷியா, “ஏன் உங்களுக்கு வாழ பிடிக்கல?” எனக் கேட்டாள் தயக்கமாக.

 

அவளின் கேள்வியே அவளுக்கு அபத்தமாகத் தோன்றியது.

 

தான் ஏன் சம்பந்தமே இல்லாமல் இவ் ஆடவனுக்காக வருந்துகிறோம் என மனசாட்சி வேறு கேள்வி எழுப்பியது. 

 

அனுஷியாவின் கேள்வியில் அப்போது தான் அவளை உற்று நோக்கினார் பல்லவன்.

 

பின் ஒரு கசந்த புன்னகையுடன், “எல்லாம் இருக்கு… ஆனா ஒன்னுமே இல்ல…” என்ற பல்லவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தார்.

 

பல்லவனின் பதிலில் அனுஷியாவின் மண்டை தான் குழம்பியது.

 

போதையில் இருப்பவரிடம் எதுவும் கேட்டுப் பயனில்லை எனப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு எதுவும் கேட்காது கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

சில நொடிகளில் அவளின் அருகில் வந்தமர்ந்த பல்லவன், “பணம் மட்டும் இருந்து போதுமா? வாழ்க்கைல சந்தோஷமும் நிம்மதியும் இருக்கிறவன் தான் உண்மையான பணக்காரன்…” என்றார்.

 

உள்ளே இறங்கிய மதுவின் காரணமாக மனதில் உள்ளவை அனைத்தும் வெளி வந்தன.

 

அனுஷியா அவர் கூறுவதை செவிமடுக்க, “என் தங்கச்சி… சின்ன வயசுல இருந்து அவ தான் எனக்கு எல்லாமே… அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணேன்… அவ காதலிச்சாங்குற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் கூட வசதியே இல்லாத, எந்த வேலைக்கும் போகாதவன கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வெச்சேன்… ஆனா அவ என்னடான்னா எப்பப்பாரு அவ புருஷன் பணம் கேட்டான்னு என் கிட்ட வந்து நிப்பா… நானும் தங்கச்சி தானேன்னு அள்ளி அள்ளி கொடுத்தா அவ புருஷன் ஊதாரித்தனமா செலவு பண்றான்… அதனால இனிமே பணம் தர முடியாதுன்னு சொன்னேன்… அப்பவாச்சும் அவனுக்கு பொறுப்பு வரும்னு நம்பிக்கைல தான்… ஆனா என் தங்கச்சி பணம் தர மாட்டேன்னு சொன்னதும் என்னையே எதிர்த்து பேசுறா… அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்த பண்ண என்னையே தப்பா பேசுறா… வாழ்க்கையே வெறுத்து போச்சு…” என்றவர் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கரத்தைப் பற்றி, “என் கவலை புரியுதா உனக்கு?” எனக் கேட்டார் அவளின் முகம் நோக்கி.

 

அனுஷியாவின் தலை தானாக ஆம் என ஆடவும் மெலிதாகப் புன்னகைத்த பல்லவன் அனுஷியாவின் மடியில் தலை வைத்துப் படுக்க, அனுஷியாவோ அதனை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

 

அவசரமாக பல்லவனைத் தன்னிடம் இருந்து விலக்க முயல, “நீயும் என்னை விட்டுப் போகப் போறியா?” எனக் கேட்டார் பல்லவன் கண்ணீருடன்.

 

பல்லவனின் விழி நீர் அனுஷியாவை ஏதோ செய்ய, தன் முயற்சியைக் கை விட்டாள்.

 

அதன் பின் பல்லவன் தன் மனம் விட்டு ஏதேதோ பேச, விடியும் வரை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அனுஷியா.

 

பேசியவாறே பல்லவன் உறங்கி விட, அனுஷியாவும் தன்னையும் மீறி உறங்கி விட்டாள்.

 

கதிரவனின் ஒளிக்கீற்று கண்ணில் படவும் முதலில் கண் விழித்த பல்லவன் தன் அருகில் இருந்த பெண்ணைக் கண்டதும் திடுக்கிட்டார்.

 

அனுஷியாவும் உறக்கம் கலைந்து எழுந்து விட, “சாரி சாரி நான்…” எனப் பல்லவன் பதட்டமாக ஏதோ கூற முயன்றார்.

 

“நைட் நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க… அதான் நான்…” என அனுஷியா தடுமாறவும் தான் பல்லவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது.

 

“நீங்க எப்படி இங்க?” எனப் பல்லவன் குழப்பமாகக் கேட்கவும் தான் எவ்வாறு அங்கு வந்து மாட்டிக் கொண்டேன் என விளக்கினாள் அனுஷியா.

 

பல்லவன், “நா…நான்… நான் ஏதாவது உங்க கிட்ட தப்பா…” எனத் தயங்க, அவர் என்ன கேட்க வருகிறார் எனப் புரிந்து கொண்டவள், “அப்படி எதுவும் இல்ல… நீங்க உங்க மனசுல இருந்த கவலை எல்லாம் சொன்னீங்க…” என்கவும் பல்லவனின் முகத்தில் கசந்த புன்னகை.

 

சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா, “அ…அந்தப் பொறுக்கி இன்னும் வெளிய தான் இருக்கானோன்னு பயமா இருக்கு… என்னை கொஞ்சம் உங்க கூட வெளிய கூட்டிட்டு போறீங்களா?” எனக் கேட்டாள் தயக்கமாக.

 

சரி எனச் சம்மதித்த பல்லவனும் தன்னுடன் வந்த பெண் போல் அனுஷியாவை வெளியே அழைத்துச் செல்ல, சுற்றி இருந்தவர்களின் பார்வை அனுஷியாவைக் குறுகுறுவென மொய்த்தன.

 

அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அனுஷியாவிற்கு மிகுந்த அவமானமாக இருந்தது.

 

லாட்ஜை விட்டு வெளியே வந்ததும், “நான் உங்கள உங்க வீட்டுல ட்ராப் பண்ணவா?” எனக் கேட்டார் பல்லவன்.

 

தான் வாழும் இடத்தைப் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பல்லவன் தன்னைத் தவறாக எண்ணுவார் என அவரின் உதவியை மறுத்து விட்டாள் அனுஷியா.

 

“தேங்க்ஸ்…” என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சில அடிகள் நடந்த அனுஷியா மீண்டும் பல்லவனிடம் திரும்பி வந்து, “பிரச்சினையோ கவலையோ வந்தா தற்கொலை பண்ணிக்குறது தான் முடிவுன்னா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க… உங்கள விட கஷ்டத்த அனுபவிக்கிறவங்களும் இங்க இருக்காங்க… அவங்க எல்லாரும் அதை எதிர்த்து போராடிட்டு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க… உங்க பிரச்சினைக்கான தீர்வ யோசிங்க… ஆனா அது நிச்சயம் தற்கொலையா இருக்காது…” என்று விட்டு சென்றாள்.

 

அனுஷியாவின் தலை மறையும் வரை மென் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பல்லவனின் மனம் அனுஷியாவின் வார்த்தைகளில் இதமாக உணர்ந்தது.

 

தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்த அனுஷியாவோ மாலினியிடம் நடந்த அனைத்தையும் கூறி கண்ணீர் வடிக்க, “அனு… இனிமேலும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பு இல்ல… எங்க வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு… நீயாவது நல்லா இருக்கணும்… உன்ன என் சொந்த தங்கச்சா தான் நான் பார்க்குறேன்… இதுல கொஞ்சம் பணம் இருக்கு… இதை எடுத்துக்கிட்டு இந்த ஊரை விட்டு எங்கயாவது தூரமா போயிடு… ஏதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கோ… உனக்கு கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்… உனக்கு ஏதாவது தேவைன்னா என் நம்பருக்கு கால் பண்ணு… ஆனா இனிமே இங்க மட்டும் இருக்காதே… அந்த சத்யன் மோசமான ஆளு… எனக்கு அப்பவே அந்த ஆள் மேல சந்தேகமா இருந்தது… நீ இங்க இருந்தா நிச்சயம் அவன் உன்னையும் இந்த நரகத்துல தள்ளாம விட மாட்டான்…” என்றாள் மாலினி.

 

மாலினியின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு வழியின்றி மாலினி கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மறுநாளே அங்கிருந்து கிளம்பினாள்.

 

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என வேக வேகமாக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளை வழி மறித்தான் அன்று லாட்ஜில் அவளின் கற்பைக் களவாட நினைத்த கயவன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *