Loading

அத்தியாயம் 75

     இராதா இல்லத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில், “என்னங்க தினமும் என்னை இப்படி வாக்கிங் கூட்டிட்டு வரீங்களா? என்னவோ தெரியல உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு இப்படி நடக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க பிள்ளைங்களும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்க.” பூரிப்பாய் சொன்னாள் ஊர்மி.

     “நிஜமாவா, இதுவரைக்கும் உனக்கு எத்தனையோ பரிசுப் பொருள் ஆசையா நான் வாங்கிட்டு வந்து தந்து இருக்கேன். அப்ப எல்லாம் நீ இந்தளவுக்கு சந்தோஷப்பட்டது இல்ல. சாதாரண நடைப்பயணம் அது உனக்கு இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குதா?

     பொண்டாட்டிங்களைப் புரிந்து கொள்வது எப்படி, அவங்களுக்கு எப்ப என்ன பிடிக்கும் என்பதைப் பத்தி யாராவது பாடம் எடுத்தாங்கன்னா சொல்லு. அது எத்தனை காஸ்ட்லியா இருந்தாலும் நான் அங்க போய் சேர்ந்துக்கிறேன்.” என்ற நாகாவை முறைத்தவள், “என்ன லந்தா?” தோரணையாகக் கேட்டாள்.

     “முன்னாடி எல்லாம் நான் எவ்வளவு ஆசையா பேசினாலும் கண்டுக்கவே மாட்ட. ஒருவிதமான எரிச்சலோட தான் பதில் பேசுவ. உனக்கு உண்மையிலே என்னைப் பிடிச்சிருக்கான்னு கூட அப்பப்ப எனக்குத் தோணும். ஆனா, இப்பெல்லாம் என்னை வெட்ட வெட்டப் பார்க்கிற. அத்தனை ஆசை தெரியுது உன் கண்ணில். அதிசயம் என்னென்னா அதை என்னால் புரிஞ்சுக்க கூட முடியுது.” நாகா தன்னைப் போல் தன் மனதில் இருப்பதைச் சொல்ல, சிரித்தாள் ஊர்மி.

     “ஒருத்தங்க நம்ம கிட்ட எப்படி நடந்துக்கிறாங்க என்பது, நாம அவங்க கிட்ட எப்படி நடந்துக்கிறமோ அதைப்பொறுத்து தான் இருக்கும். நான் உங்ககிட்ட நடந்துக்கிறது நீங்க என்கிட்ட எப்படி நடந்துக்கிறீங்க என்பதோட எதிரொளிப்பு தான்.” என்றவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்.

     “அப்ப என்னோட எந்தப் பரிசும் உனக்குப் பிடிக்கலையா ஊர்மி.” தவிப்பாய் கேட்டான் நாகா. அவனுக்கு அவன் கவலையே பெரிதாகத் தெரிந்தது.

     “அட என் மக்கு புருஷா, நீங்க எனக்கு நிறைய பரிசு வாங்கிக் கொடுத்து இருக்கீங்க. அதை என்கிட்ட கொடுத்துட்டு, என் முகத்தைப் பார்க்காம நான் பிரிக்கிற அந்த கவரையே பார்த்துக்கிட்டு இருப்பீங்க.

     பிரிச்சுப் பார்த்துட்டு நான் அந்தப் பொருளைப் பார்க்காமல், உங்களையே பார்த்துக்கிட்டு இருக்கிறதால அது எனக்குப் பிடிக்கலன்னு நீங்களே முடிவு பண்ணிடுவீங்களா.

     எனக்கு உங்களோட எல்லாப் பரிசுகளையும் ரொம்பப் பிடிக்கும். அதை விட அதிகமாப் பிடிச்சது என்ன தெரியுமா? எனக்காக தேடிப் போய் பரிசு வாங்கிட்டு வரணும் னு நினைச்ச உங்களோட மனசு தான்.

     அதனால் தான் பரிசை பிரிக்கும் போதும் சரி, அதுக்கு அப்புறமும் சரி நான் அந்தப் பரிசை விட எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசான உங்களையே வைச்ச கண்ணு வாங்காம பார்த்திட்டு இருப்பேன்.” என்றுவிட்டு புன்னகைத்தாள் ஊர்மி.

     “ஆரம்பத்தில் நாம அடிச்சுக்கிட்ட அழகுக்கு இப்படியெல்லாம் வாழ்வோம் னு சத்தியமா எதிர்பார்க்கல ஊர்மி. ஊர்மியைத் தவிர வேற யாராலும் உன்னைச் சமாளிக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கச் சொல்வது சரியாத் தான் இருக்கு. நாம இப்படியே சண்டை போடாம இருந்திடுவோமா?” ஆசையாகக் கேட்டவனுக்கு இடவலமாகத் தலையசைத்தவள்,

     “எப்பவும் கொஞ்சிக்கிட்டே இருந்தாலும் போர் அடிக்கும். அதனால அப்பப்ப கொஞ்சிக்கலாம், அப்பப்ப வெட்டிக்கலாம் என்ன அத்தான்.” என்றவள் கணவனைப் பார்த்து கண்ணடித்துச் சிரிக்கவும் செய்தாள்.

     “அம்மாடி ஒரே நேரத்தில் நாம இரண்டு பேரும் கோவப்பட்டா பிரளயமே வந்திடும். இன்னொரு முறை எல்லோரும் சுத்தி உட்கார்ந்து அட்வைஸ் மழை பொழிவதை என்னால் தாங்கிக்க முடியாது.

     ஒன்னு பண்ணுவோம் இனிமே நான் கோவப்பட்டா நீ அமைதியா இருக்கணும். நீ கோவப்பட்டா நான் அமைதியா இருந்திடுறேன். கோவம் குறைஞ்சதுக்கு அப்புறம் பண்ண தப்பை மிச்சம் இருக்கிறவங்க எடுத்துச் சொல்லலாம்.” என்ன சொல்ற என்றவனை அத்தனை பிடித்தது ஊர்மிளாவுக்கு.

     ஆனாலும் அவனைச் சீண்ட நினைத்தவள், “நீங்க சொல்றது கேட்கிறதுக்கு நல்லா இருக்கு. ஆனா நடைமுறைக்கு சாத்தியம் ஆகாதே. சாருக்கு கோவம் வந்தா தான் முத்து முத்தா வார்த்தைகள் வந்து விழுமே. அதையெல்லாம் கேட்டுக்கிட்டு நான் எப்படி அமைதியா இருக்க முடியும்.” என்றாள்.

     “அப்ப நான் கோவப்பட்டா நீயும் கோவப்படுவியா?” நாகா கேட்க, “படலாம் வாய்ப்பு இருக்கு.” என்றாள்.

     அதற்குக் கோபப்படாமல், “அப்ப நான் கொஞ்சுனா நீயும் அதே மாதிரி கொஞ்சுவியா?” விஷயத்திற்கு வந்தான் நாகா.

     சற்றே நிமிர்ந்தவள் அவன் காதில் அவள் ஏதோ சொல்ல, “வர வர உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு ஊர்மி.” கண்டித்தான் நாகா.

     “உள்ளே இருக்கிறது உங்களோட பசங்களாச்சே. அவங்கதான் எனக்கு பேசக் கத்துக் கொடுக்கிறாங்க.” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களை கடந்து சென்ற பானிபூரி வண்டியைப் பார்த்த ஊர்மியின் கண்கள் மின்னியது, வாயில் எச்சில் ஊறியது.

     “என்னங்க பானிபூரி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு  வேணும், வாங்கிக் கொடுங்க.” பரபரப்பாய் கேட்டாள்.

     “ஊர்மி இதெல்லாம் வேண்டாம், ஹைஜீனிக்காவே இருக்காது. அப்புறமா நல்ல ஹோட்டலில் வாங்கித் தரேன்.” என்றான்.

     “பானிபூரி எல்லாம் ரோட்டுக் கடையில் சாப்பிட்டா தான் செம டேஸ்ட்டா இருக்கும். எனக்குத் தெரியாது எனக்கு இப்ப பானிபூரி வேணும். நீங்க எனக்கு வாங்கித்தந்தா உங்களோட வீட்டுக்கு வருவேன். இல்லன்னா நான் இங்க இருந்து வரவே மாட்டேன்.” என்று விட்டு பூங்கா நாற்காலியில் அமர்ந்து விட்டாள் ஊர்மி.

     “ஊர்மி வரவர குழந்தை மாதிரி அடம் புடிச்சுக்கிட்டே இருக்க. வாங்கி தர முடியாதுன்னா வாங்கி தர முடியாது தான். இப்ப வா வீட்டுக்கு போகலாம்.” என்றபடி அவள் கரம் பிடித்தான்.

     “முடியாது, போராட்டம் போராட்டம். பானிபூரி வாங்கித் தரும் வரை போராட்டம். வேண்டும் வேண்டும் பானிபூரி வேண்டும். கைது செய் கைது செய் கர்ப்பிணி பெண்ணின் சிறிய ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத லாயர் நாகராஜை கைதுசெய்.” அவனுக்கு மட்டும் கேட்கும்படி தர்ணா செய்தாள். வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற அவள் நினைத்தது போலவே கடுப்பானான் நாகா.

     “ஊர்மி யாராவது பார்த்தா சிரிக்கப் போறாங்க. இப்ப என்ன உனக்கு பானிபூரி தானே வேணும். வாங்கி தரேன்.” டிசைன் டிசைனா படுத்துறாளே என்கிற புலம்பலுடன் அவளை அழைத்து சென்று வாங்கி கொடுத்தவன், அவள் உண்ணும் அழகையும், உண்டுவிட்டு அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளையும் ஆசையாய் பார்த்தான். இதைப் பார்ப்பதற்காக இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பானிபூரி வாங்கி கொடுக்கலாம் என்று முடிவு செய்தான்.

     மருத்துவமனையில், “பரத், பாஸ்கர் எங்க? அவனோட போன் ரொம்ப நேரமா ரிங்காகிக்கிட்டு இருக்கு.” உடன் வேலை செய்யும் இன்னொருவனிடம் விசாரித்தான் செல்வா.

     “பாஸ்கரா அவருக்கு முக்கியமான போன் கால் வந்திருக்குன்னு பேசிக்கிட்டு இருக்காரு. கல்யாணம் ஆகப் போகுது இல்லையா? அதனால் இப்பெல்லாம் அடிக்கடி போனும் கையுமாத் தான் இருக்கிறார்.” பரத் பதிலளிக்க, “அப்ப இந்த போன் யாரோடது.” தன் கையில் இருந்ததைக் காட்டி கேட்டான் செல்வா.

     “தெரியல” என்கவும், “ஓகே ஓகே நீ போய் வேலையை பாரு நான் பாத்துக்குறேன்.” என்ற செல்வா யோசிக்கலானான்.

     “பாஸ்கருக்கு எதுக்கு இரண்டு போன். அவனோட அந்த போனிலே இரண்டு சிம் வைச்சிருக்கானே.” என யோசித்தவனுக்கு மூளையில் மின்னல் வெட்ட, வேகமாக அந்த அலைபேசியைத் திறந்தான். மின்பூட்டு இல்லாமல் இருந்ததால் அது தானாகவே திறந்தது.

     வேகவேகமாக புலனத்தை (வாட்ஸ்ஸப்) ஆராய்ந்தவன் அவன் எதிர்பார்த்த எந்த ஒரு தகவலும் அதில் இல்லாமல் இருக்க முகம் சோர்வடைந்தான்.

     தேவையில்லாம நாம தான் பாஸ்கரை சந்தேகப்பட்டுட்டோம் என்று நினைத்தவன் போனை கீழே வைக்க, தெரியாமல் அவனுடைய சுண்டு விரல் பட்டு கேலரி திறந்து கொண்டது.

     அதில் செல்வாவும், அவன் கவனித்துக் கொள்ளும் இரண்டாம் நம்பர் அறையில் இருக்கும் நோயாளியுமான லேகாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் இருக்க, அதைக் கண்டு அதிர்ந்தான் செல்வான்.

     “அப்ப நான் சந்தேகப்பட்டது சரி தான். இந்த போட்டோவை எடுத்து அதை லீலாவுக்கு அனுப்பினது பாஸ்கர் தான். ஆனா இதைப் பண்றதால அவனுக்கு என்ன லாபம்.

     இப்ப மட்டுமில்ல கல்யாணத்துக்கு முன்னாடியே லீலாவுக்கு என்னைப் பத்தி தப்பான தகவல்களைச் சொல்லி இருக்கான். அப்ப கேட்டதுக்கு விளையாட்டு அது இதுன்னு சொல்லி சமாளிச்சிட்டான். அப்ப இருந்த நிலைமைக்கு நான் கூட நான் நம்பிட்டேன்.

     ஆனா இப்போ அவனோட தொடர்ச்சியான இந்தச் செயல்கள் எனக்கு சந்தேகத்தைக் கொடுக்குது. எதுக்காக பாஸ்கர் இப்படி எல்லாம் பண்ணனும். ஒருவேளை என்னையும் லீலாவையும் பிரிக்க நினைக்கிறானா? இதனால் என்ன பிரயோஜனம்.

     அவன்கிட்ட நேரடியா கேட்டுடலாமா, சந்தேகம் னு ஒன்னு வந்துட்டா அதை அவன்கிட்ட கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிறது தான் சரி. இல்லன்னா நாளைக்கு அதுவே மிகப் பெரிய பிரச்சினையில் கொண்டு வந்து முடியலாம்.” என்பதாய் செல்வா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், சரியாக பாஸ்கரும் வர,

     “என்ன பாஸ்கர் இதெல்லாம். அப்ப இந்த முறையும் லீலா மனசில் என்னைப் பத்தி தப்பான எண்ணங்களை வளர்க்கப் பார்த்தது நீதான் இல்லையா?” கோபமாய்க் கேட்டான் செல்வா.

     “செல்வா நான் இல்லாத நேரத்தில் என்னுடைய போனை எடுத்துப் பார்த்தியா? அன்னைக்கு நீ சொன்னியே மேனர்ஸ், சென்ஸ் அது எல்லாம் எனக்கு மட்டும் தான் இருக்கணுமா, உனக்கு இருக்க கூடாதா?” கடுப்பாகக் கேட்டான் பாஸ்கர். சட்டென செல்வா வந்து நின்றதும் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை அவனுக்கு. அதனால் முளைத்த சற்றும் நியாயமில்லாத கோபம் அவனுடையது.

     “பேச்சை மாத்தாத பாஸ்கர். எதுக்கு இப்படிப் பண்ண. உண்மையான காரணத்தை மட்டும் சொல்லு.” விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் விடப்போவதில்லை என்னும் தீர்க்கம் இருந்தது செல்வாவின் வார்த்தைகளில்.

     “நான் தான் பண்ணேன், இப்ப என்ன அதுக்கு.” சாதாரணமாகக் கேட்டான் பாஸ்கர்.

     “நீ பண்ண இந்த காரியத்தால என்னென்ன பிரச்சனை வரும் னு தெரியாதா உனக்கு?” செல்வா கேட்க, “ஏன் தெரியாது. லீலா உன் கூட சண்டை போடுவாங்க. பிரச்சனை வரும், கோச்சுக்கிட்டு உன்கிட்ட பேசாம இருக்கிறதுக்குக் கூட வாய்ப்பு இருக்கு. எல்லாம் தெரிஞ்சு தானே இதைப் பண்ணேன்.” அத்தனை சாதாரணமாகச் சொன்னான்.

     “ஆனா இதெல்லாம் ஏன்டா. உன்னை நான் என்னோட ஒரு நல்ல நண்பனாக நினைச்சு என்னைப் பத்தின எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கறேன். ஆனா நீ இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணுவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.” என்றான் செல்வா.

     “உன்னை நல்ல நண்பனா நானும் நினைச்சதால் தான் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணேன்.” கதை கட்டத் துவங்கினான் பாஸ்கர்.

     “எது நல்ல விஷயம் என்னையும், என் பொண்டாட்டியையும் பிரிக்க நினைக்கிறதா?” என்க, “இங்க பார் செல்வா. நீ தப்பு பண்ற. அதை உன்கிட்ட எத்தனையோ முறை சொல்லிட்டேன். ஆனா நீ கண்டுக்கிறதே இல்ல.

     நீ தப்பான வழியில் போகக் கூடாது, அதனால உன்னோட வாழ்க்கை கெட்டுப் போயிடக் கூடாதுன்னு உன் வொய்ஃப்பை நான் கொஞ்சம் அலர்ட் பண்ணேன். இதில் எந்த விதமான தப்பான நோக்கமும் இல்லை.” மொத்தமாக செல்வா பக்கம் திருப்பி விட்டுத் தான் தப்பிக்கப் பார்த்தான் பாஸ்கர்.

     “இப்ப தான் எல்லா விஷயமும் புரியுது. உன் மனசுல என்னைப் பத்தி சந்தேகம் இருந்தா, அதை என் கிட்ட கேட்டு தெளிவுபடுத்தி இருந்திருக்கணும். அதை விட்டுட்டு எதுக்காக இதெல்லாம் பண்ற. அதுவும் குற்றவாளிகள் பண்ற மாதிரி அட்ரஸ் இல்லாத மொட்டைக் கடுதாசி, தவறான கோணத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் எல்லாம் ஏன்.

     நான் கல்யாணம் ஆனவன் டா. எனக்கு பொண்டாட்டி இருக்கா. நான் இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்பில் இருப்பேன்னு என்னோட நண்பன் நீ எப்படி நினைக்கலாம். அதுவும் அவளோட. அவ யாருன்னு உனக்குத் தெரியும் தானே தெரிஞ்சுமா இப்படிப் பண்ற.” ஆதங்கமாய் கேட்டான் செல்வா.

     “இப்ப நான் என்ன சொன்னாலும் அது உனக்குத் தப்பா தான் தெரியும். ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் பண்ணது உன்னோட நல்லதுக்காக தான்னு நீ புரிஞ்சுக்குவ.

     இதுக்கு மேல என்னோட பிரண்ட்ஷிப்பை மெயின்டைன் பண்றதும், கட் பண்றதும் உன்னோட இஷ்டம். எனக்கு அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை. இருந்த வரைக்கும் உனக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தேன் என்கிற உணர்வு எனக்குப் போதும்.” என்றுவிட்டு நகர்ந்த பாஸ்கர், நேரே தன்னுடைய இடத்திற்கு வந்து தன்னுடைய செல்போன் திரையில்,
“மை ரெஸ்பான்சிபிளிட்டி” என்ற பெயரில் ஒளிர்ந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

     “செல்வா என் போனைப் பார்த்துக்கிட்டு இருந்ததை நான் கவனிச்சது நல்லதாப் போச்சு. சுதாரிச்சு, நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா இதை செல்வா நம்பி இருப்பான்னு எனக்குத் தோணல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அந்த லீலாவோட கதையை முடிக்கணும். நாலு பேர் நல்லா இருக்கிறதுக்கு ஒருத்தர் செத்தா அதில் தப்பே இல்ல.” வெறியோடு பேசினான்  பாஸ்கர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. எதுக்குடா லீலாவை கொல்ல பார்க்கிறீங்க .. செல்வா மேல இருக்க கோபத்துல அவளை ஏன் கொல்லனும் .. ஆமா லேகா இன்னும் சாகலையா ..

  2. Leela enna pannanga, avangala en kolai panna ninaikuranga

  3. லேகா செத்துட்டா என்டு தானே செல்வா தெய்வாவோட சண்டை போட்டான். அப்ப​ லேகா சாகேல்லையா?