
சபதம் – 29
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.
பொருள்:
வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் நான் கொண்ட காதலால், என் வளையல்கள் என் கையிலிருந்து கழலுகின்றன. என்னுடைய காதல் என் தாய்க்குத் தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். என் தலைவனின் பகைவர்களைக் கொல்லும் வலிய தோள்களைத் தழுவ விரும்புகிறேன். ஆனால் அவையில் பலரும் இருப்பதால் எனக்கு நாணமாக உள்ளது. என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், ஒரு பக்கமும் சாராது, இரு பக்கமுமாக உள்ள இந்த மயங்கும் ஊர்.
பாலைவனத்தின் நடுவே, நிலவொளி பரவிய அந்த இரவில், முகலாய ஆளுநரின் கூடாரம்
ஒரு கருமிருகம் போல அமைதியை விழுங்கிக் கொண்டிருந்தது. காற்றில் தூபத்தின் மணம் கனமாகப் பரவிக் கொண்டிருந்தது. வியர்வையின் உப்பு வாசனையும், புதியதாக கூர்மையாக்கப்பட்ட எஃகின் குளிர்ந்த உலோக நறுமணமும் அந்த கூடாரத்தின் உள்ளே கலந்திருந்தன.
தாழ்ந்த மேசையின் மேல் அரவள்ளியின் வரைபடங்கள் விரிக்கப்பட்டிருந்தன. ராணா கோட்டை, அதிவார் கோட்டை, ஹூன் வம்சத்தின் அமைதியான குடியிருப்பு, சுவர்ணகாட்டியின் பொற்கொடி மற்றும் ஸ்தபத ஸ்தம்பம் போன்ற வழித்தடம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கோட்டையும், ஒவ்வொரு மலை வழியும் அந்த இரவில் ஒரு உயிருள்ள எதிரியாகவே தோன்றியது. மிர்சா குதுப் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். கம்பளத்தின் மீது சிதறிய மணல் துகள்கள் அவரது காலடியில் நொறுங்கின.
அவரது கண்களில் பேராசையின் நெருப்பு, அதிகாரத்தின் பசி அனைத்தும் கலவை மின்னியது. கூடாரத்தின் நடுவே ஒரு தூதன் மண்டியிட்டு இருந்தான்.
அவன் குரல் நடுங்க, “ஹுசூர்… செய்தி உறுதியாகிவிட்டது. ராணா மற்றும் அதிவார் இராச்சியங்கள் திருமணத்தின் மூலம் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. இளவரசர் வீர் மற்றும் இளவரசி யசோதராவுக்கு திருமணம் முடிவாகி இருக்கிறது.”
அதனைக் கேட்ட மிர்சா குதுப் நடையை நிறுத்தினார். அந்த நொடியில் கூடாரம் முழுவதும்
ஆழ்ந்த அமைதி நிலவியது. ஆளுநர் மெதுவாக திரும்பினார். அவரது குரல், அதிக மென்மையுடன் வெளிப்பட்டது. அந்த மென்மைதான் அவரது கோபத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது.
“திருமணம்… ராணாவுக்கும் அதிவாருக்கும் இடையிலா?” என்றதும் தூதன் தலைகுனிந்து, “ஆம், ஹுசூர். இன்று காலை முரசு கொட்டி மக்களுக்கு அறிவித்திருக்கின்றனர்” என்றதும்
மிர்சா குதுப்பின் முகத்தில் கொடூரமான புன்னகையுடன், “அப்படியானால் அரவள்ளி
ஒரே இராச்சியமாகிவிடும். ஒரே படை. ஒரே கோட்டை. ஒரே எதிரி.”
அதை உணர்ந்த ஆளுநர் கோபத்தில் மேசையைக் குத்தினார். மைக்குடுவைகள் நடுங்கின.
வரைபடத்தின் மீது மைத் துளிகள் சிதறின.
“அவர்கள் ஒன்றானால், நாம் அரவள்ளியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. தெற்கை அடைய முடியாது. வர்த்தகப் பாதைகளைக் கட்டுப்படுத்த முடியாது” என்றவர் அரவள்ளி மலைத்தொடரின் வரைபடத்தின் மீது சாய்ந்து ஹூன் வம்சக் குடியிருப்பை நோக்கி
விரலை சுட்டினார்.
“முதுகெலும்பை முறித்துவிட்டால்…உடல் தானாக சரிந்து விழும்” என்றதும் அவர் அருகே இருந்த தளபதிகள் பதற்றமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அதில் ஒருவர் துணிந்து, “ஹுசூர்… ஹூன் வம்சத்தினர் நடுநிலையினர். இரு இராச்சியங்களையும் காக்கும் குலம். அவர்களைத் தாக்கினால், ராணா மற்றும் அதிவார் இன்னும் விரைவாக ஒன்றிணைந்து விடுவார்கள்” என்றதும் மிர்சா குதுப் சிரித்தார்.
அந்த சிரிப்பு பாலைவன இரவையே நடுங்கச் செய்யும் வகையில் இருந்தது. மேலும் தொடர்ந்த ஆளுநர், “அதுதான் வேண்டும். அவர்கள் ஒன்றாகட்டும். போர் தொடங்கட்டும்” என்றார்.
மீண்டும் வரைபடத்தைச் சுட்டிக் காட்டியவர், “முதலில் ஹூன் வம்சத்தைத் தாக்குவோம்.
அவர்களின் குடியிருப்பை எரிப்போம். இரத்தத்தில் பொறிக்கப்பட்ட எச்சரிக்கையை அரவள்ளி அறியட்டும்.”
மிர்சா குதுப்பின் புன்னகை மறைந்து, ஒரு வித குரூரத்துடன், “அந்த திருமணம் ஒருபோதும் நடக்கக்கூடாது. ராணா மற்றும் அதிவார் ஒன்றானால்…அரவள்ளியைக் கைப்பற்ற முடியாது” என்றவர் தனது க்ஹுபிய படையின் (ரகசிய படை) தளபதியிடம், “இன்றிரவே ஹூன் வம்சம் அழிந்து விட வேண்டும்” என்றவர் படைவீரர்களை நோக்கி திரும்பினார்.
“பெண்களை மட்டும் உயிரோடு விடுங்கள்” என்றதும் வீரர்கள் குழம்பினர். அதனை கண்ட மிர்சா குதுப்பின் கண்கள் மின்ன, “அரவள்ளி இளவரசர்களுக்கு செய்திகளை எடுத்துச் செல்லட்டும்” என்றபடி தனது குறுவாளை உயர்த்தினார்.
விளக்கின் ஒளியில் மின்னிய அந்த குறுவாளை வரைபடத்தில் ஹூன் வம்ச அரண்மனையின் மீது குத்தியபடி, “இன்றிரவு… அரவள்ளியின் வீழ்ச்சி தொடங்கட்டும்” என்றதும் முகலாயப் படை குதிரைகளில் ஏறியது. வாள்கள் இழுப்பட்டன. அந்த பாலைவன இரவு அவர்களின் பயணத்தை விழுங்கிக் கொண்டது.
அந்த இரவு அசாதாரணமான அமைதியில் நிரம்பியிருந்தது. ஹூன் வம்ச மூதாதையர்கள் இரவு நேர தொழுகையான தஹஜ்ஜுத் செய்து கொண்டிருக்க காற்றில் மந்திரங்களின் ஒலி கலந்திருந்தது.
அந்த இரவின் நிசப்தத்தில் ஹூன் வம்சத்தின் முந்தைய தலைவர் மட்டும் தனது ஓலைச்சுருள்களை கலைத்தபடி அமர்ந்திருந்தவருக்கு எழுபது வயது. வெண்மையான தாடியுடன் அந்த வயதிலும் கூர்மையான கண்களுடன் ஓலைச்சுருள்களை ஆராய்ந்து கொண்டிருந்தவர் காதுகளில் ஏதோ சத்தம் கேட்க, அதில் எச்சரிக்கை அடைந்தவர், மேஜையின் மேல் இருந்த உடைவாளைக் கைகளில் ஏந்திக் கொண்டார்.
ஹூன் வம்ச அரண்மனை பாதுகாப்புக்கு பலர் இருந்தாலும், அவர் மகனும் பேரனும் வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை அவரை நம்பியே விட்டு சென்றிருந்தனர்.
ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தவர் மெதுவாக எழுந்தார், அவரின் கைகளில் உறைவாள் மின்ன, அதனை இறுகப் பற்றியவரின் முன் அந்த அரண்மனையின் ஒரு மூலையில் தீப்பிடித்த சுவடு தெரிந்தது.
பெண்கள் தங்கியிருந்த அறைகளிலிருந்து கூச்சல் எழுந்தது. முகலாயப் படையினர்
முகத்தை மூடியபடி, வாள்களை உருவியபடி வீட்டின் முற்றத்துக்குள் பாய்ந்தனர். அவர்களின் நகர்வு ஒருவித துல்லியத்துடன் நடந்தேறியது.
எதிர்த்து நிற்க முயன்ற காவலர்கள் ஒரே நொடியில் விழுந்தனர். அந்த நேரத்தில் ஹூன் வம்சத்தின் முதிய தலைவர் வாள் ஏந்தியபடி வெளியே வந்தார்.
கண்களில் எரியும் கோபத்துடன், “அரவள்ளியின் காவலர்களைத் தாக்கத் துணிந்தீர்களா?”
என்று அவர் முழங்கினார்.
முகலாய தளபதி ஏளன புன்னகையுடன், ““ஹூன் வம்சம் இன்றோடு அழிந்தது. உங்கள் குலம் இனி எதையும் காக்காது” என்று பதிலளித்தான்.
அதைக் கேட்ட முதியவருக்கு எங்கிருந்து அவ்வளவு வேகம் வந்தது என்று தெரியவில்லை, வாளை சுழற்றி எதிரிகளை துவம்சம் செய்தவர், “அரவள்ளி நிலைத்திருக்கும் வரை ஹூன் வம்சம் நிலைத்திருக்கும். இது எனது வாக்கு” என்றவர் வாள் முகலாய வீரர்களை தாக்கிய வேகம் போர்க்களத்தை ஒரு கணம் மாற்றியது.
ஆனால் வயது என்பது எந்த வீரனுக்கும் துரோகம் செய்யும் எதிரியைப் போன்றது. முகலாய படைவீரன் அவரது காலில் வெட்டினான். மற்றொருவன் தோளில் குத்தினான். ஒரே நேரத்தில் இரு வீரர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாது விழுந்தார்.
அவரது ஆடைகள் இரத்தத்தில் நனைந்தன. அப்படியிருந்தும் மீண்டும் எழுந்தவர், “நான் சுவாசிக்கும் வரை…ஹூன் வம்சத்தின் வாரிசுகளை நெருங்க இயலாது” என்றவரின் வார்த்தைகளுக்கு பதிலாக தளபதி அவரது மார்பில் வாளை இறக்கினான்.
முதியவர் தரையில் சரிந்தார். அவரது கண்கள் இறுதி நொடியிலும் ஹூன் வம்சத்தின் பெருமையை தாங்கியபடி வீழ்ந்தார்.
முதியவரை வீழ்த்திய படைவீரர்கள் உள் அறைகளில் புகுந்தனர். பெண்களின் சத்தம் அந்த இடத்தை கோரமாக காட்டியது. முதியவர் சிகந்தர் அலி கான் மகனின் மனைவி அந்த அறையின் வாயிலை மறைத்தபடி நிற்க, அவருக்கு பின்னால் பேரனின் மனைவி தனது கணவனின் தங்கைகளை தன் உடலால் காத்தபடி நின்றாள்.
ஸுலேய்க தனது தங்கை மெஹருன்னிஷாவுடன் அண்ணனின் பிள்ளைகளை பாதுகாத்து நின்றனர். குழந்தைகள் அச்சத்தில் நடுங்கியபடி அழுது கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்தபடி வாயிலை மறைத்திருந்த பெரியவரை தள்ளிவிட்டவர்கள், பெண்கள் என்றும் பாராமல் கன்னத்தில் அடித்து, ஸுலேய்க மற்றும் மெஹருன்னிஷாவை முடியைப்பிடித்து இழுத்து செல்ல முயல, குடும்பத்தினர் அனைவரும் அவர்களை தடுக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் உள்ளே வந்த தளபதி, “ம்ம்… ஆளுநர் உத்தரவு பெண்களை ஒன்றும் செய்யக் கூடாது என்பது” என்றவன் ஸுலேய்க மற்றும் மெஹருன்னிஷாவை நெருங்கி, “எங்கள் செய்தியை உங்கள் இளவரசர்களுக்கு தெரிவியுங்கள்” என்றவர் மேலும் தொடர்ந்து, “திருமணத்தை நிறுத்தாவிட்டால் அரவள்ளி பற்றி எரியும் என்று” என்றவன் தனது குறுங்கத்தியை அங்கிருந்த சுருளில் குத்தி விட்டு வெளியேறினான்.
அதோடு படையினருக்கு பின்வாங்க உத்தரவிட்டான். முகலாயர்கள் அரவள்ளியின் இருலுக்குள் மறைந்தனர். அரண்மனை பற்றி எரிந்தது, பெண்கள் காயமடைந்திருந்தனர்.
அவர்களின் முன் முதியவரின் உடல் மடிந்து கிடந்தது.
வீரும், ராணசூரும், ஹூன் வம்சத்தின் அடுத்த தலைவருமான ஹம்சா கான் காட்டை கிழித்துக் கொண்டு குதிரைகளில் பாய்ந்து வந்தனர். அவர்களின் இதயங்கள் கோபத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
சிக்கந்தர் அலி கானின் பேரன் குதிரை நிற்பதற்கு முன் தாவி இறங்கி அரண்மனைக்குள் புகுந்தவனின் விழிகள், அங்கு இறந்து கிடந்த தனது தாத்தாவை பார்த்ததும், “பாபாஜான்..” என்றபடி அதிர்ந்து நின்றான்.
அவரை சுற்றி வீட்டு பெண்கள் கண்ணீருடனும், காயத்துடனும், ஒரு வகை பயத்துடனும் அமர்ந்திருந்தனர். அவரது மனைவி இரு குழந்தைகளையும் அழுகையுடன் அணைத்தபடி அமர்ந்திருந்தாள். மெஹருன்னிஷா உதடு கிழிந்து கைகால்களில் ரத்தம் வடிய அன்னையின் மடியில் படுத்திருந்தவளின் கண்கள் அவளது பாசமிகு பாபாஜானின் உடலில் நிலை குத்தி நின்றது. ஸுலேய்க உடல் நடுங்க கன்னம் வீங்கி, நெற்றியில் வடிந்த ரத்தத்துடன், முறிந்த கைகளை அசைக்க முடியாமல் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தபடி இருந்தது. அரண்மனை அரைபகுதி இடிந்திருந்தது.
அதனை கண்ட ஹம்சா முழங்காலில் விழுந்து கதறினான். வீர் அவனது தோளில் கை வைத்தபடி நின்றிருந்தவன் தாடை கோபத்தில் இறுகியபடி, “நாம் தாமதமாக வந்திருக்கிறோம்”என்று கூறினான்.
ரணசூர் முன்னே வந்து முதியவரின் உடலருகே மண்டியிட்டவனது கண்களில் துயரமும் கோபமும் கலந்து நெருப்பாய் எரிந்தது.
“எங்களை மன்னியுங்கள்…எங்களால் உங்களை காக்க முடியவில்லை” என்று மெல்ல முனங்கியவனின் கண்கள் மரத்தூணில் பொறிக்கப்பட்ட குறுங்கத்தியில் நிலைத்தது.
ரணசூரின் வீரின் விழிகளும் அந்த கத்தியில் பதிய, “இது எச்சரிக்கை அல்ல. இது போருக்கான அறிவிப்பு” என்றவனின் வார்த்தைக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தான் வீர்.
அதனை கேட்ட ஹம்சா கான் கோபத்துடன், “அப்படியானால்…அதற்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று வெகுண்டெழுந்தான்.
மூவரும் சேர்ந்து காயமடைந்த பெண்களையும் சிறுமிகளையும் தூக்கி கொண்டு கோட்டைக்குத் திரும்பினர். அவர்களின் பின்னால் ஹூன் வம்சத்தின் புனித இல்லம் நெருப்பில் சாம்பலாகி கொண்டிருந்தது.
அதனை தொடர்ந்து அரவள்ளி முழுவதும் போரின் தாளங்கள் ஒலிக்கத் தொடங்கின.
ரணசூரன் வந்துவிட்டான்……
