Loading

திருவிழாக் கோலமாய் ஊரே மிளிர…புதிதாய்த் திருமணமான இருவரும் சேர்ந்து தங்களின் நாளை திருவிழாவில் செலவிட கோவிலுக்கு புறப்பட்டு இருந்தனர்…

அவளுக்குக் கொண்டாட்டம்தான் ஆனால் அவன்தான் ஏதோ துக்க செய்தி கேட்ட காது போல முகம் வாடி இருந்தான்….ஏதோ போனால் போகட்டுமே என்று வருவது போல நடந்து வீதி வழி இரண்டு பேரும் வந்து கொண்டிருந்தார்கள்…

தனியாளாய் இருந்தாலே வழிப்போக்கர்களின் வார்த்தைகளை எதிர் கொள்வது என்பது கடினம்… திருமணமாகி ஒரே வாரமான புது தம்பதியாய் இருக்கிற போது இதே நிலமை எந்த அளவு இருக்குமென்று சற்று யோசித்துப் பாருங்கள்…

“என்னப்பா எப்படி இருக்க நல்லா இருக்கியா?… ரெண்டு பேரையும் ஒன்னா பாக்கும்போது அவ்ளோ அழகா இருக்கு…உங்கள இப்படி பாக்குறதுல என் மனசே நெறஞ்ச மாதிரி இருக்கு… நீங்க ரெண்டு பேரும் இதே போலவே என்னைக்கும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கனும் “

வீதியில் ஒருவர் இவர்களைப் பாத்து இவ்வாறு பிதற்ற…இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்… விஷயம் என்னவென்றால் அவர் இருவரின் பார்வையும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியது…

அவள் வெட்கத்தில் குறுகி தலையை குனிந்த படியே கருவிழி மட்டும் உசத்தி இதழோர சிரிப்புடன் நானப் பார்வை பார்த்தாள்…ஆனால் அவன் பார்வையோ அவளைச் சுட்டெரிக்கும் அனல் போல் அத்தனை கோபத்தையும் எரிச்சலையும் சுமந்து கொண்டு இருந்தது…

வழியில் இது போல் ஐந்து ஆறு பேரை கடந்து வந்திருப்பார்கள்…வழியிலே இத்தனை பேர் என்றால் கோவிலில் இன்னும் எத்தனை பேர் இதே பாட்டை திரும்பத் திரும்ப பாடுவார்களோ என்று எரிச்சலுற்று…

“மீரா”

“ம்ம்ம் என்ன…நீ மட்டும் கோவிலுக்கு போய்ட்டு வர்றியா எனக்குத் தல வலிக்குது…”

“ஏன் என்னாச்சு?”

“இல்ல நேத்துல இருந்தே தல பாரமா இருக்க மாதிரி இருந்துச்சு…நான்தா அத பெருசா எடுத்துக்கல…ஆனா இப்போ அது அதிகமாகி ரொம்ப வலிக்குது…என்னால ஒழுங்கா நடக்க கூட முடியல”

“அப்படியா…சரி நீ வீட்ல போய் ரெஸ்ட் எடு…நான் மட்டும் போய்ட்டு வர்றேன்…”

“ம்ம்ம் சரி”

இதோட சேர்த்து இன்னும் எண்ணிக்கையிலயே அடக்க முடியாத எத்தனையோ பொய்ய அவன் வாழ்க்கையில சொல்லிதா ஆகனும்ற சூழ்நிலைல இருக்கும் போது…பொய் சொல்றதுக்கு கூச்சமோ சங்கட்டமோ பட்டா எப்படி?…

மீரா சரினு சொன்ன அடுத்த நிமிஷமே வந்த வழியே திரும்ப போய்ட்டான்…

மீரா கோவிலுக்கு போன பிற்பாடு…அங்க இருந்த எல்லாரும் என்னமா “தனியா வந்திருக்க உன் புருஷன் என்ன பண்றான்…ஏன் உன்ன தனியா விட்டிருக்கான்… ரெண்டு பேரும் ஜோடியா வந்திருக்கலாம்ல” அப்படினு கேட்டாங்க…ஆனா அவ எந்த முக மாற்றமு காமிக்காம சிரிச்ச முகத்தோட கேள்வி கேட்ட ஒவ்வொருத்தருக்கும் பதில் சொன்னா…

திருவிழாக் கூட்டத்துல எத்தைனயோ பேர் அவங்களப் போலவே இளம் ஜோடியா கைய கோர்த்துகிட்டு கடைவீதில நடந்து போற அழக ஏக்கத்தோடயே ரசிச்சுகிட்டு இருந்தா மீரா…அப்போ தன் முதுகுல ரெண்டு முற தட்டி தன்ன யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கவும் மீரா திரும்பி பாத்தா…

தேகம் சுருங்கி உடல் மெலிந்த ஒரு வயசான பட்டிதான் அது…அவங்க எதையோ தூக்க முடியாம தூக்கி சிரமப் படுறத பாத்த உடனே…பாட்டி அத என் கையில குடுங்க அப்படினு சொல்லி மீரா வாங்கிகிட்டா…

“அம்மா கண்ணு என்னையே இந்த ரோடு மட்டும் கிராஸ் பண்ணி அந்த பக்கமா விடுமா…ரொம்ப கூட்டமா இருக்கு…என்னால நகரக்கூட முடியல…யாராவது கீழ தள்ளி விட்றுவாங்களோனு வேற பயமா இருக்கு…”

“சரி பாட்டி…வாங்க என் கைய புடிச்சுக்கோங்க…நான் உங்கள பத்திரமா அந்த பக்கம் விட்டறேன் “

(பாட்டியோட நடைக்கு ஏத்த மாதிரியே பொறுமையா நடக்க ஆரமிச்சு…அவங்க பேச பேச பதில் பேசிகிட்டே வந்தா…கூட்டத்துல சத்தம் அதிகமா இருந்தனால பாட்டி பேசுறது அவளுக்கு சரியா கேக்கல….ஆனாலும் அவ காதுல கேட்ட ஒன்னு ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா)

“என்னமா உன் பேர் என்ன…?”

“மீரா”

“மீராவா…. ம்ம்ம் ம்ம் நல்ல பேரு நல்ல பேரு…இந்த ஊரா?”

“ஆமா இதே ஊருதா பாட்டி…”

“சரி சரி…நான் பக்கத்து ஊருமா…என் வீட்டுக்காரு ஒரு காலத்துல இந்த ஊர்ல வாழ்ந்திருக்காரு… அதுக்கப்புறம் இங்க நமக்கு சரிப்பட்டு வராதுனு கெளம்பி பக்கத்து ஊருக்கு வந்துட்டாரு… அங்கையே என்னைய பாத்து கல்யாணமும் பண்ணதால நாங்க அங்கையே இருந்துட்டோம்…அவரு இங்க இருக்குறதுக்கு முன்னாடி வேற வேற மாநிலத்துல வேற வேற ஊர்ல எல்லாம் இருந்திருக்காரு ஆனா என்னமோ தெரியல அவருக்கு இந்த ஊர்தான் ரொம்ப புடிக்கும்…எப்போதுமே இந்த ஊர பத்தியும் இந்த ஊர்ல அவரு பாத்து பழகுன மனுஷங்கள பத்தியும் பெருமையா பேசிட்டு இருப்பாரு…இந்த ஊர விட்டுட்டு வெளியூர்ல போய் வாழ்ந்தனால இந்த ஊர் திருவிழாவுக்கு எங்க இருந்தாலும் மறக்காம வந்துருவாரு…ஏன்னா அப்போதான் எல்லாரும் இங்க இருப்பாங்க…ஒரே நாள்லையே அவர் பாக்கனும்னு ஆசப் படுற எல்லாரையும் பாத்துட்டு…அந்த நாள் முழுக்க அவ்ளோ சந்தோஷமா மன நிறைவோட வீட்டுக்கு வருவாரு…அந்த பழய நியாபகத்துலயே இந்த வருஷமு நாங்க ரெண்டு பேரும் வந்தோம்…”

“ம்ம்ம் தாத்தா எங்க?…. நீங்க மட்டும் இங்க இருக்கீங்க “

“அவரு எங்க போனாருனே எனக்குத் தெரியலயேமா…இங்க நில்லு நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் அப்படினு சொல்லிட்டு போனாரு….ஆனா அந்த மனுஷன இன்னும் காணோம்…அவரு அப்படிதாம…இப்போ வழில யாரையாவது தெரிஞ்சவங்கள பாத்திருப்பாரு…நேரம் போனதே தெரியாம உக்காந்து கத பேசிட்டு இருப்பாரு…வந்துருவாரு “

“சரி பாட்டி….ரோடு கிராஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு…என்னாலையே கூட்டத்துல மூச்சு விட முடியல…வேர்த்து ஊத்துது…நீங்க எப்படி அந்த கூட்டத்துல நிப்பீங்க…பாவம்… நீங்க இங்கையே நில்லுங்க அப்போதான் தாத்தா வந்தாலுமே ஈசியா உங்கள அவரு பாக்க முடியும் “

“சரிமா “

“ம்ம்ம் சரி பாட்டி நான் கெளம்புறேன்….நீங்க பாத்து கவனமா நில்லுங்க “

“சரிமா பாத்து போய்ட்டுவா…முகத்துல இருக்க பொலிவுக்கும் கழுத்துல இருக்க தாலி கயிறுக்கும் வித்தியாசமே தெரியல… ரெண்டுமே அம்புட்டு அழகா ஜொலிக்குது…உனக்கு உன் வாழ்க்கையில எல்லா சந்தோஷமு கெடைக்கனும்…நீ நல்லா இருக்கனும்மா”

“ரொம்ப சந்தோஷம் பாட்டி நான் வரேன்…”

பாட்டிய விட்டு நடந்து கொஞ்ச தூரம் வந்த பிறகு…அந்த பல ஆயிரம் சத்தத்துக்கு நடுவுலயும்…

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. எதுக்கு பொய் சொல்லிட்டு poraan appo avala avanukku pidikkalaiya pidikkamalaya marriage பண்ணிkittaan ❤️❤️❤️

      I like meera character ❤️❤️