இதுக்கு அப்புறம் இனி எல்லாமே அவதான் அப்படினு நான் முடிவு பண்ணேன்…”
“டேய் இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?… ஏன்டா ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போதும்… அங்க இருந்த எல்லாரும் ஐயோ அம்மானு அடிச்சுகிட்டு அழும்போதுமாடா உங்களுக்கு காதல் வரனும்… இது எங்கையும் பாக்காத கேக்காத செய்தியா இருக்கேடா…சரி நீ மேல சொல்லு “
“என்னென்னே தெரியல ஏதோ ஒரு படபடப்பு… அந்த பதட்டத்துலயே எனக்கு நல்லா வேர்த்து ஊத்தி வேர்வ சொட்ட சொட்ட நானும்… ரத்தம் சொட்ட சொட்ட அவளும்… ஒருத்தருக்கு ஒருத்தர் கண் இமைக்காம பாத்துட்டே இருந்தோம்… அவளோட பார்வ என்னைய விட்டு விலகவே இல்ல… அவளுக்கும்தான்.”
அதுவரைக்கும் அமைதியா உக்காந்து கேட்டுட்டு இருந்த அவரு சட்டுனு எழுந்து அப்புவ ஒரு மாதிரி வித்தியாசமா பாக்க ஆரமிச்சாரு… ஆனா அதை எல்லாம் கவனிக்காம அவன் வேற எங்கையோ பாத்துட்டு அவள பத்தி பேசிட்டே இருந்தான்.
“அவள அந்த வண்டில ஏத்தும்போது ஸ்ட்ரச்சர்ல தூக்கி வைக்க ரெண்டு நர்ஸ் வந்தாங்க… காரணம் என்னனு தெரியல அவங்களால தூக்க முடியல… அவங்க என்னைய உதவிக்கு கூப்பிடவே இல்ல… ஆனா நானாவே போய் அவள தூக்குனே… அவள முதல் முறையா தொட்டப்போ…. ப்ப்பா அப்படியே நெருப்ப தொடுற மாதிரி இருந்தது… எப்படினா கனல்ல கை வச்ச மாதிரி அனலா இருந்தது… அப்போதைக்கு எனக்குள்ள குளிரா இருந்தது… அதென்னவோ தெரியல… இதத்தா காதல்னு சொல்லுவாங்க… நான் கேள்விப்பட்டு இருக்கேன்… அது எனக்கே நடக்கும் போதுதா தூக்கி வாரி போடுற மாதிரி இருந்தது…”
(காலால மணல எட்டி அவன் முகத்துலயே உதச்சிட்டு)
“யேய் இப்போ எனக்கு உன்னப் பாத்தா தூக்கி வாரி போடுதுடா… ஏன்டா நீ இவ்ளோ நேரமா டோட்டுல அடிபட்டுக் கெடந்த பொண்ணவாடா சொல்லிட்டு இருந்த?”
“ம்ம்ம் நான் அவள பாக்கும் போது அவ அப்படித்தான் இருந்தா… அந்த ஒத்த வரி கருப்பு ஆறு மாதிரி இருந்த புருவத்துக்குப் பக்கத்துல ஒரு பெரிய வெட்டு அதுல இருந்து ரத்தம் பரவி ரோடெல்லாம் ஆகிருச்சு… அவளோ வேதனையிலும் அவ என்ன பாத்து ஏதோ சொல்ற மாதிரி இருந்தது… என்னால அத உணர முடிஞ்சது… ஆனா புரிஞ்சுக்க முடியல… அவளத் தூக்கிட்டு அந்த வண்டிக்குள்ள போகும்போது அவ கைல கட்டி இருந்த வாட்ச் கழன்டு என் சட்ட பட்டன்ல மாட்டிகிச்சு… அப்படி நடக்கும்போது… நான் திரும்ப வருவேன் காத்திருனு என் கிட்ட சொல்ற மாதிரி இருந்துச்சு… மத்ததெல்லாம் அந்ததந்த நொடியோட முடிஞ்சு போச்சு ஆனா இது மட்டும் ஒரு மாதிரி என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு… இன்றும் ரெண்டு நாள்ல இன்டர்வியூ போன இடத்துல நல்ல ரிசல்ட் வந்துருச்சுனா அதுவே போதும்… அடுத்து நான் அவள எப்படியாவது தேடி கண்டுபுடிச்சு என் கூடவே கூட்டிட்டு வந்துருவேன்…”
அப்பு இந்த மாதிரி பேசுறத கேட்டு அவர் ஆடிப்போனாரு… அவரால அந்த இடத்துல நிக்கவே முடியல… அங்கிருந்து வேகமா கெளம்பி எழுந்து நடந்து போய்ட்டாரு… இவரு வீடு போய் சேருறதுக்குள்ள வீட்ல அப்பு உக்காந்திருந்தான்…
அப்பு அவர் கிட்ட போய் பேசுனாலும் அவர் எந்த பதிலுமே பேசல… அதுக்கு பதிலா அவன ஆச்சர்யத்தோடையும் பயத்தோடயும் பாத்துட்டு இருந்தாரு…
“என்ன எங்கிட்ட பேச புடிக்கலையா?… “
“இல்லடா… நீ வேற “
“அப்புறம் என்ன யோசன?”
“இல்ல இத்தன நாளா எப்படி ஒரு பைத்தியத்து கூட இருந்தேனு நான் யோசன பண்ணிட்டு இருக்கேன் “
“புரியல “
“உனக்கு புரியாது… ஏன்டா சைக்கோவாடா நீ வலில துடிதுடிச்சுட்டு இருந்த பொண்ண பாத்து அவ அப்படி இருந்த இப்படி இருந்தா… அவளுக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இருக்கு… என்கிட்ட அவ பேசுனா அப்படினு சொல்லிட்டு இருக்க… என்கிட்ட சொல்ற மாதிரி வேற யார் கிட்டயும் போய் சொல்லிட்டு இருக்காது… உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேத்துருவாங்க… “
“அப்போ நான் என்ன பொய்யா சொல்றேன்?”
“அது எப்படிடா அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில உனக்குக் காதல் வரும்?”
“எனக்கு வந்ததே… ஏன் தப்பா? “
“தப்பா ரைட்டானுலாம் எனக்குத் தெரியாது… ஆனா இந்த மாதிரி எல்லாம் நடக்குமான்றதே எனக்குத் தெரியால… சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லையா உனக்கே… அவ கண்ணிமைக்காம என்னையே பாத்தானு சொல்றியே… ரோட்டுல அடிபட்டு ரத்த வெள்ளத்துல தத்தளிச்சிட்டு இருந்த பொண்ணு கண்ண மூடலைனா என்ன அர்த்தம் தெரியுமா… அவ செத்துட்டானு அர்த்தம்… “
“ஐய்யோ…. அப்படி சொல்லாதீங்க… ( கைய மடக்கி நரம்பு தெரிய கண்ணு சிவந்து கண்ணீர் வடிய பல்லக் கடிச்சுகிட்டு நின்றான்)”
இதுதான் அப்பு அவர் கிட்ட பேசுன கடைசி வார்த்த அதுக்கப்புறம் அந்த ரூம்ல அப்பு அழற சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு… எவ்ளோதான் சமாதானம் பண்ணியும் அவனோட அழுகைய நிப்பாட்டவே முடியல… ரொம்ப போராடுனாரு ஆனா ஜெயிச்சது என்னவோ அப்புதான்.
அவன் முகத்துல இருந்த சிரிப்பு மொத்தமா மாறி அப்புவ அவர் முதல்முறையா பாக்கும்போது எப்படி இருந்தானோ அதே மாதிரியே இருந்தான் அந்த ரெண்டு நாளுமே… மூனாவது நாள் இன்டர்வியூ ரிசல்ட் மெயிலுக்கு வந்ததும்தான் அந்த முகம் கொஞ்சம் மாறுச்சு…
அந்த சந்தோஷத்த சொல்லனுனு நெனச்சான் ஆனா அவர் கிட்ட பேசனுனு அவனுக்குத் தோனவே இல்ல… அதுனால ஒரு பேப்பர்ல எழுதி வச்சிட்டு தூங்கிட்டான்…
இந்த நாள அவன மாதிரியே ஆர்வத்தோட எதிர்பார்த்து காத்துட்டு இருந்த ஒரே ஆள் அவர்தான்… அவன பாராட்டி பேசுனாலும் திட்டி பேசுனாலும் எந்த பதிலுமே அவன் கிட்ட இருந்து வராதுனு தினமு வேலைக்கு போறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சிட்டு செலவுக்கு காசும் வச்சிட்டு இவர் கடற்கரைக்கு போயிருவாரு…
இத்தன நாளா நம்ம பையன் ஊர விட்டு அங்க போய் நல்லா சந்தோஷமாதான் இருக்கானு நம்பிட்டு இருந்த அம்மா கிட்ட எனக்கு வேறொரு இடத்துல இப்போ பாக்குற வேலைய விட நல்ல வேல கெடச்சிருக்குனு பொய் சொல்லி சந்தோஷப்பட்டான்.
கொஞ்ச நாள்லையே பழையபடி அப்பு அவர்கிட்ட பேசி சிரிக்க ஆரமிச்சான்… பரவாயில்ல அந்த நெனப்புல இருந்து இவன் மாறிட்டான் அப்படினு அவரு தப்புக் கணக்குப் போட்டுட்டாரு.
…கதை தொடரும்…