Loading

எனக்கு பசியாத்துன அந்த பறந்த மனசு கொஞ்ச நேரத்துல அங்க இருந்து சிட்டா பறந்துருச்சு… 

 

எனக்குனு எதாவது போக்கிடம் இருந்திருந்தா போயிருப்பேன் எனக்குதான் அதெல்லாம் இல்லையே… காத்துல பறக்க விட்ட வெத்துக் காகிதம் போல அந்த கடற்கரை காற்றின் தாக்கத்தில் அங்கேயே திரிந்தேன்… 

 

என்னைத் தெரியாதவர்களுக்கும் எனக்குத் தெரியாதவர்களுக்கும் அங்கிருந்த ஆயிரம் மணர்குவியல்களில் ஒன்றாகத்தான் நான் தெரிந்திருப்பேன்…

 

ரோட்டோரக் கடைகளின் பின்புறத்தில் அன்றைக்கு மீந்து போகும் உணவிற்காக போட்டி போட என்னைவிட இளையோரும் மூத்தோரும் வயது வேறுபாடின்றி ஏக்கத்துடன் காத்திருந்தார்கள்… 

 

அப்படி ஒவ்வொரு முறை நிற்கும்போதும் என் மனதில் தோன்றியது எல்லாம்… பல நாள் பசியால் வற்றிய மார்புடைய தாயின் மடியில் காய்ந்த வாயுடன் பாலுக்காகக் காத்திருக்கும் பச்சைப் பிள்ளையைப் போலத்தான் அத்தனை பேரும் காட்சிப்படுத்தப் பட்டார்கள்… படைத்தவன் பாவம் புன்னியம் எல்லாம் பார்ப்பான் என்று சொல்லியே ஏமாற்கிறார்கள் மூடர்கள்… இங்கு அவனும் ஒருசாரார்தான் என்று யாருக்கும் புரியவே இல்லை.

 

பசியுடன் போராடிக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு அன்றைக்கு உணவளித்த அதே நபரை இரண்டாவது முறையாக நான் அங்கிருந்த ஐந்தாவது நாள் பார்த்தேன்… அவரைப் பார்த்ததும் மிகவும் நெருங்கிய நபரை பார்த்தது போல உற்சாகம் பொங்கி எழுந்தது… அவருக்கும்தான்…

 

ஆசையாய் அவர் அருகில் சென்றேன்… 

 

“யேய்… நீ இன்னும் இங்கையேதான் சுத்திட்டு இருக்கியா?… படிச்சவன்தானடா ஒரு இன்டர்வியூ போனா என்ன அடுத்தது ட்ரைப் பண்ண வேண்டியதுதானா… இப்படியே இருந்து என்ன பண்ண போற?… குடும்பத்த நல்லா கவனிக்கனும்ற ஆசை எல்லாம் இருக்கா இல்லையா உனக்கு?… ம்ம்ம்… “

 

“ஆச மட்டும் இருந்தா போதுமா?”

 

“வேற என்னடா வேணும்?… இருக்கவே இருக்கு படிப்புன்ற ஆகச் சிறந்த சொத்து அத விட என்னடா வேணும்?…”

 

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்… ஆனா, அதுக்கு முன்னாடி காசு வேணும்… அது இல்லைனா இதெல்லாம் ஒன்னுமே இல்ல”

 

“ம்ம்ம் இந்த வயசுலதா வாழ்க்கையே ஆரம்பிக்கும்னு சொல்லுவாங்க… இது ஆரம்பம்தான போகப் போக நிறையா கத்துகிட்டு நல்லபடியா வாழ்வ… கடவுள் இருக்காரு…”

 

“ஆமா ஆமா இருக்காரு… ஒரு ஓரமா… அவரு இருந்து என்ன பயன் “

 

நான் ஒரு மாதிரி சடைப்பாவே பேச அவருக்கு என்னைய விட்டுட்டு கடந்து போக மனசே இல்லை… வயசு பயலா இருந்துட்டு என்னடா இப்படி பேசிட்டு உக்காந்திருக்க… இன்னைக்கு நான் எந்த வியாபாரமும் பாக்காம போனாலும் பரவாயில்ல. வா முதல்ல அப்படினு சொல்லி தரையில உக்காந்து என்னையும் உக்கார சொன்னாரு…

 

என்ன ஆச்சு?… படிச்சிட்டு ஏன் நீ இப்படி இருக்க?… உனக்கு என்னதான் வேணும்?… ஒரு வேள கைல காசு இருந்திருந்தா அடுத்தடுத்து இன்டர்வியூ போய் செலக்ட் ஆகி வேலைக்கு போயிருப்பியோ… அது இல்லைனு ஃபீல் பண்றியா? சொல்லு… நான் கூட காசு தரேன்…அப்படினு சொன்னாரு… (அப்போதைக்கு இந்த மாதிரி மனுஷங்க எல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க போலனு என்ன நானே மனசு தேத்திகிட்டேன்).

 

“சும்மா எதாவது சொல்லாதீங்க… எவ்ளோ காசு தருவீங்க மிஞ்சி மிஞ்சி போனா ஒரு இன்டர்வியூ அட்டென்ட் பண்ற அளவுக்கு தருவீங்க… அதுலயும் நான் க்ளியர் பண்ணலைனா அடுத்து எல்லாம் உங்களுக்கே என் மேல கோவம் வந்துரும்… உங்களுக்கு ஒன்னு தெரியுமா உங்கள மாதிரிதா எங்க அம்மாவும் என் மேல நம்பிக்க வச்சு வச்சு கடைசியில ஏமாந்து போகும்… பல தடவை ஏமாத்திட்டேன்… இப்படி எல்லாம் நான் பண்ணியுமே என் மேல கடுகளவும் கூட கோவப்படாம என் அம்மா ஏமாளியா வாழ்றத என்னால ஏத்துக்கவே முடியல… அவங்க முகத்தப் பாக்க கூட அருகதை இல்லாமதா நான் இங்க வெறும் உடம்பா சுத்திட்டு இருக்கேன்… என்னைக்கு எங்க அம்மா ஆசப்படுற மாதிரி ஆளா ஆகுறனோ அன்னைக்குத்தான் அவங்க முகத்துலயே முழிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணேன்… ஆனா இன்னும் அது நடக்கவே இல்ல… எனக்கு இருக்குறதுக்கு எல்லாம் ஒரே பயம்தான்… எங்க பசியால செத்துருவோமோனு சாவுக்கு பயந்து என் அம்மா கிட்டையே திரும்ப போயிருவேனோனுதா மனசு கெடந்து அடிச்சுக்குது…”

 

“உன்ன பாத்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு… பணங்கட்டி படிக்க வச்ச பெத்தவங்களையே ஏமாத்திட்டு தண்டமா சுத்திட்டு இருக்க பசங்க மத்தியில உன்ன நெனைக்கும்போது பெருமையா இருக்குப்பா எனக்கு… “

 

“அப்படி எல்லாம் இல்ல… நான் அந்த கட்டத்தை எல்லாம் கடந்து வந்து ரொம்ப நாள் ஆச்சு… அது மட்டும் இல்லாம எந்த பையனும் பெத்தவங்கள ஏமாத்தனும்னு நெனைக்க மாட்டான்… அவனோட சூழ்நிலைதான் அவன கெட்டவனா எல்லார் முன்னாடியும் காட்டுது… இங்க எல்லாருமே சூழ்நிலை கைதிதான “

 

ரெண்டு பேரும் மாறி மாறி பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல… 

 

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு நான் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது போல தெரிந்தது… அவரின் மௌனத்திற்கு பின் ஏதோ வலி இருக்கிறது என்று புரிந்தது… ஆனால் அது என்ன வலி என்பது தெரியவில்லை… இந்த கேள்வியை என்னால் மனதிலேயே வைத்துக்கொள்ள முடியவில்லை வாய் விட்டுக் கேட்டுவிட்டேன்…

 

என் வாயில் இருந்து அவிழ்ந்த வார்த்தை அவர் காதுகளைத் துளைத்த வேளையின் கண்ணீர் மழை கன நொடிக்குள் பெருக்கெடுத்தது… 

 

காரணம் என்னவென்று நான் கேட்டதற்கு… எனக்கும் சரியான நேரத்தில் கல்யாணம் ஆகியிருந்தால்… உன்னைப் போல் ஒரு ஆண் பிள்ளை என்னைப் பற்றி யோசிக்க இருந்திருக்கும்… ஆனால் அதற்கெல்லாம் எனக்குக் கொடுத்து வைக்கவே இல்லை… இந்த அனாதையை ஆதரிக்க யாரும் இல்லை… என்று சொல்லி அத்தனை பெரிய வயது ஆள் அழும்போது மனம் இரும்புக் கடலாகவே இருந்தாலும் இளகி ஓடும். 

 

என்னுடைய அப்பா இருந்திருந்தால் அவரைப்போல இருந்திருப்பாரோ என்னவோ… அவர் என்னை அழைக்கும் போது மாட்டேன் என்று சொல்ல எனக்கு மனமில்லை… அவர் பின்னாலே போய்விட்டேன்… 

 

அவருடன் இருந்த வேளையில் அன்பிற்கும் அடைக்கலத்திற்கும் எந்தக் குறையுமே இல்லை… உதவிதான் செய்வேன் அதற்கே நொடிக்கு நூறு முறை… பாத்துப்பா… பாத்து என்று சொல்லி பதறுவார்…

 

உழைத்துச் சேர்த்த ஒவ்வொரு பணத்தையும் இது உனக்கு இது எனக்கு என்று பங்கு போடாமல்… மொத்தமாய் தந்தார்… அவரும் ஒரு பாசக்கார ஏமாளிதான்.

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்