Loading

பேரு மகி… இங்கதா விஏஓவா இருக்காராம்… பக்கத்து ஊரு ரைஸ் மில் ஓனர் பையனாம்… என்று தனக்குத் தெரிந்ததை தோழியிடம் ஒப்பித்துக்கொண்டிருந்தாள் அம்மு…

 

“ஓஓஓ… அப்போ சமூகம் பெரிய இடம்தான் போலயே”

 

“ஆமாடி… அப்படிதான்”

 

“அது சரி… யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டு இப்போ இவ்ளோ விஷயம் சொல்ற… அது எப்படி?”

 

“யேய்… இந்த அளவுக்கு பைத்தியமா சுத்துறாரு என் பின்னாடி… யாரு என்னனு விசாரிக்க வேணாமா?… அதான் விசாரிச்சேன்”

 

“ம்ம்ம் பயங்கரம்தான்…”

 

“ஆமா… பாக்க நல்லவர் மாதிரிதா தெரியிறாரு… ஆனா பழக்கம் எப்படியோ “

 

“போதும்டி நிறுத்து… அவர பைத்தியம்னு சொல்லிட்டு கடைசியில நீ பைத்தியம் ஆகிறாத (அவ சொன்ன மாதிரியே கடையில் பித்துப் பிடிக்கும் என்பது அப்போது அம்முவிற்குத் தெரியாது… சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தாள்)… இத இதோட விட்டுட்டு… உன் வேலைய மட்டும் பாரு”

 

“அதெல்லாம் தெரியும் எனக்கு… இன்னும் ஆயிரம் மகி வந்தாலும் என் அப்புவுக்கு ஈடாக முடியாது தெரிஞ்சுக்கோ…”

 

“ம்ம்ம் நீதான் அப்பு அப்புனு அவனையே நெனச்சு உருகிட்டு இருக்க… ஆனா அவனுக்கு நீ நியாபகத்துல கூட இருக்கியோ என்னவோ… சென்னையில வேற இருக்கான்… அங்க எந்த பொண்ணோட டூயட் பாடிட்டு சுத்திட்டு இருக்கானோ தெரியல… “

 

அம்முவும் அவள் தோழியும் வகுப்பில் பேசிக்கொண்டிருந்த காட்சி இந்த வசனத்திற்கு பிறகு மறைந்து… அடுத்தது அப்புவின் பக்கம் கதை திரும்பியது…

 

கல்லூரிப் படிப்பைத் தொடர சென்னை வந்தவன் வேலைக்காக… வேர்த்து ஊற்றி நாற்றம் பரவிய சட்டையுடன், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சாலையின் ஓரத்தில்… புழுதி ஊதித் தூற்ற… அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமல்… தன்னை வேலைக்கு வேண்டாம் என்று நிராகரித்த கம்பெனியை விட்டு நடந்து வந்து கொண்டிருத்தான்…

 

சாலையில் தெரிந்த பல நூறு மற்ற முகங்களும் தூசிக் கூட்டங்களும் அகல அவன் முகம் காட்சிப்படுத்தப்பட்டது…

 

கையில் வாங்கிச் சேர்த்து அடுக்கு அடுக்காய் அடுக்கி இருந்த படிப்புப் பத்திரங்களை குப்பை என்று சொல்லி வெளியே தள்ளிய அலுவலரின் நடத்தையை சகித்துக்கொள்ள முடியாமல் வெறுத்துப் போய்… கால் போன போக்கில் போய்க்கொண்டிருந்தான்.

 

இக்காட்சி ஒளிபரப்பாகும் போது மீராவின் கைவிரல்கள் அவளது ஆசைக் கனவனின் கைவிரலைத்தேடி அவர்கள் அமர்ந்திருந்த சோஃபாவின் வழியே பயணிக்க…. சேருமிடம் ஏற்கனவே தெரிந்தவனோ இறுகப்பற்றிக் கொண்டான்… இருட்டில் முகம் தெரியவில்லை… வழக்கமாக அவன் இதயத்தை தொந்தரவு செய்யும் அவளது மூக்குத்தியின் ஒளி மட்டும் தெரிந்தது… ம்ம்ம் சில நேரங்களில் நிலவைவிட நட்சத்திரம் நம் மனதைக் கொள்ளையடிக்கும் அல்லவா? அதுபோலத்தான்.

 

திரையில் காட்சிகளின் நகர்வுகள் அவர்களது கண்களுக்கு விலங்கிட்டு அவற்றை அவ்விடமிருந்து நகரவிடாமல் செய்தது…

 

தடுமாறிய மனதுடன்… தன் தாயைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற பெரிய பொறுப்புடன் அந்த புன்பட்ட இதயம் வலியில் துடித்ததை தத்ரூபமாக காட்டியிருந்தார்கள்…

 

இதற்கு மேல் அங்கு வாழ எந்த வழியும் இல்லை எனத் தெரிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட முடிவு செய்தான்… ஊருக்குச் செல்ல மனமிருந்தாலும் கையிலும் பையிலும் பணமில்லை… எல்லாக் கதவுகளும் அடைபட்டிருந்த அவ்வேளையில்… கால் ஓய்ந்து நின்ற இடமான கடற்கரையிலே கையைத் தலைக்கு வைத்துத் தாங்கி படுத்திருந்தான்… 

 

அவன் வயதினை ஒத்த ஊரார்கள் சிரித்து மகிழ்தபடி அப்பாதையினைக் கடக்கும் போது அந்த சிரிப்பின் சத்தம் எல்லாம் இடியாய் அவன் இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது.

 

அப்பாதையின் வழியே கடக்கும் பல ஆயிரம் பாதங்கள் கடல் மண்ணை அவன் முகத்தில் தூக்கி வீச… நடந்த அவமானங்களையும், பட்ட கஷ்டங்களையும் நினைத்துப் பார்த்து கண்ணீர் விடுகிறான்….

 

மீசையிலும் தாடியிலும் பலர் காலடி தீண்டிய மணல்கள் மாளிகை கட்டிக்கொண்டிருக்க… பார்ப்பவர் எல்லாம் ஏதோ பிச்சைக்காரன் போல என்று கண்டும் காணமல் கடற்கரையில் தங்களின் காதலைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

அலைகளே அச்சப்படும் அளவிற்கு இருள் சூழ்ந்த போதிலும் அங்கிருந்து அவன் புறப்படவே இல்லை… வாழ்க்கையில் பிச்சைக்காரன் என்று வயிற்றுப்பசி அவன் மீது பாவம் பார்க்குமா என்ன?. பசியின் வேகம் அவன் உடல்நிலையை வீழ்த்த, எச்சில் வற்றிய வாயுடன்… தள்ளுவண்டிக் காரன் கிண்ணத்தில் எதையோ கிளற ஏக்கத்துடன் பார்த்தான்.

 

“ஏய் என்ன பாக்குற?” என்று கடைக்காரர் கேக்க… பதில் பேச முடியாமல்… தலையை மட்டுமே அசைத்து இல்லை என்றான். அவன் வாடிப்போன முகம் அவரை மனதிலகச் செய்துவிட்டது. அன்று மீந்து போன உணவுப் பண்டங்களை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து அப்புவின் கையில் தந்தார்… 

 

பசிக்குமுன் எதிரில் படைத்தவனே இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாது… அதில் அவன் மட்டும் என்ன விதிவிலக்கா?… கையில் வாங்கியதும் பெருமூச்சு விட்டு குனிந்த தலை நிமிராமல் தொண்டைக்கு துளிகூட இடைவெளி விடாமல் இறக்கினான்…

 

விக்கல் வந்த போதும்கூட போர்வீரனின் வேகத்தை மிஞ்சி செயல்பட்டத்தைப் பார்த்த கடைக்காரரோ தண்ணீர் கொண்டு வந்து நீட்டினார்.

 

“ஏய் இந்தா… தண்ணியக் குடி”

 

“ம்ம்ம் ( தண்ணியை கடகடவென குடித்து டம்ளரை மணலில் வேகமாக வைக்க… அது பாதி புதைந்துவிட்டது).”

 

“சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு?”

 

“என்னது? ( அவர் கேட்ட கேள்வி சரியாக செவியை சென்றடையாததால் மீண்டும் கேட்டான்)”

 

“எத்தன நாளா சாப்பிடாம இருக்கனு கேட்டேன்… காதுல விழலையா?”

 

“(சாந்தமான சிரிப்புடன்)… மூனு நாளா “

 

“ம்ம்ம் பேட்ச்சிலரா?”

 

“ஆமா…. “

 

“என்ன காதல் தோல்வியா?”

 

“(வெற்றுச் சிரிப்பு சிரித்தபடியே)… காதலா?… அடப் போங்க… என் வாழ்க்கைலயே தோத்துருவன் போல இந்த லட்சனத்துல காதல் ஒன்றுதான் எனக்கு கேடா?… அதெல்லாம் இல்ல… “

 

“இல்ல இந்த வயசுல இப்படி இருந்தா காதல் தோல்வியாதான இருக்க முடியும்?”

 

“யாருன்னா சொன்னா?… அதெல்லாம் எல்லா வசதியும் இருக்கவனுக்கு இருக்க ஒரே ஒரு கவல… ஆனா இந்த வயசுல என்ன மாதிரி இருக்க பசங்கதான்ன அதிகம்… எங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே கவலையிலதா ஓடிட்டு இருக்கு”

 

“என்னப்பா நீ… எல்லாம் வாழ்ந்து முடிச்சு வெறுத்துப் போன மாதிரி பேசுற “

 

“என்ன பண்றது?… இன்னும் வாழவே ஆரமிக்கல ஆனா எல்லாமே முடிஞ்ச மாதிரி இருக்கு “

 

“ம்ம் சரி தட்டு காயிது பாரு… குடு கழுவிட்டு நான் கெளம்புறேன்….”

 

“ம்ம்ம் இந்தாங்க… ரொம்ப நன்றி “

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்