Loading

கடிதம் ஒருவரின் தகவலைத் தாண்டி அவரின் உணர்வுகளையும் கடத்தும் அல்லவா…. அப்படிப்பட்ட கடிதத்தில் சிறந்தது காதல் கடிதம் என்று சொன்னால் மறுப்பு சொல்ல யாரும் இல்லை…

 

காதல் எத்தனை பெரிய சக்தி நிறைந்த வார்த்தை தெரியுமா….உலகத்தை கட்டியிழுத்துக் காலடியில் போட்டு ஆட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது…

 

காதல் அழகு என்றால் ஒருதலைக்காதல் அதை விட ஆழமான உணர்வு மிக்கது… ஏனென்றால் தான் காதலிக்கும் அந்த ஒரு நபரின் மனநிலை பற்றி அதற்குத் தேவையே இல்லை….நான் உண்ணைக் காதலிக்கிறேன் என்று மட்டும்தான் சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்….பதிலுக்கு பதிலை அது எதிர்பார்ப்பதே இல்லை…. தனக்கான ஆளை தன் கண்ணால் ஒரு நொடி பார்த்துவிட்டால் போதும் அந்த நாள் முழுக்க…முதலில் இருந்து தொடங்கி புதிதாய் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விடுவார்கள்….

 

ஒருதலைக் காதலிலுமே காதலை சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திருப்பது ஒரு வகை உணர்வு என்றால்…காதலைத் தெரிவிக்காமலே தனக்குள்யே காதலனைக் கொண்டாடிக் கொண்டு வாழ்வது ஒரு போதை… அங்கு தடை சொல்லவோ குறை கூறவோ யாரும் இல்லை…. நானும் என் காதலும் என்ற குறுகிய வட்டத்தில் சந்தோஷமாக வாழ முடியும்….

 

பருவம் எட்டியதும் என்ன ஆகுமோ தெரியாது இந்த ஹார்மோன் கூட்டத்துக்கு…. பல வருடமாக பார்த்து பழகிய அவனைப் பற்றிய சிந்தனையை வொறொன்றாக மாற்றி என்னை அவனுக்கு அடிமையாக்கி விடுகியது…. இதற்கு முன்னால் நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் ஒரு சின்ன பொருத்தம் கூட இருக்காது….அந்த மாற்றத்தைத்தான் இங்கு எல்லோரும் காதல் என்று கூச்சலிடுகிறார்கள்….

 

சுயவிருப்பமாய் அரசுப் பள்ளிக்கு சென்ற முதல் நாள்….பெரும் தயக்கத்துடன் மகளை அங்கு விட்டுச் செல்ல மனமில்லாமல் திக்கித் திக்கி நடந்து போன அம்முவின் அப்பாவிடம்….மாமா நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க அம்முவ நான் பாத்துக்குறேன் அப்படினு ஒரு குரல் தைரியம் குடுக்க…கேட்டை விட்டு கடந்து போனார்….

 

அந்த குரல் யாருடையதுனா அம்முவோட எதிர்த்த வீட்டு பையனோடது….அதே ஸ்கூல்லதான் அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்…. அம்முவின் அப்பாவிடம் மட்டும்தான் பண்பாய் பேசுகிறான் மத்தபடி இவர்கள் இருவருக்கும் ஆகவே ஆகாது….

 

சிறு வயதில் இருந்து பகையாளிகள்தான்…. சண்டையின் எண்ணிக்கையும் இவர்கள் இருவரின் வயதின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே இருவருக்கும் பேச்சு வார்த்தை என்பதே இல்லாமல் போய் விட்டது…

 

இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்ததால் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது….

 

பழகும் போது எதிராளியாகத் தெரிந்தவன்….பேசாத போதும் பார்க்காத போதும் வேறொரு ஆளாக புதிதாய் தோன்றினான்…

 

அவன் மீதான ஆர்வம் அதிகரித்தாலும் அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் கடும் சுமைகளை சுமந்துகொண்டு பாலைவன சுடு மணலில் வெறும் காலில் கடப்பது போல அவஸ்தையோடு வேறு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்…ஆனால் இனிமேல் அந்த வருத்தம் வந்து தீண்டப் போவதில்லை… பதிலுக்கு சிலுசிலுவென குளிர்காற்றல்லவா தீண்டும்….

 

முதல்நாள் பள்ளிக்கு சென்ற போது அங்கிருந்த அத்தனை கண்களும் என்னை சுற்றி வளைத்து நோட்டமிட்டுக் கொண்டே இருந்தது….தயக்கத்தில் சில நேரமும் பதற்றத்தில் சில நேரமும் கழித்துக் கொண்டிருந்தேன்…. பருவ வயதில் சொப்பனத்தில் தோன்றும் காதலனின் உருவம் போல் ஒத்த உருவம் என் கண்ணெதிரே சற்று தொலைவில் தெரிய…என் கவனம் முழுவதுமாய் அதன் பக்கம் திரும்பியது….

 

சொப்பனத்தில் இதுவரை நடக்காத…நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் சில விஷயங்கள் அரங்கேறியது…. மங்களாகத் தெரியும் அந்த பிம்பம் தெளிவான தோற்றத்தை கண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்தது….

 

மனதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும் வெளித் தோற்றத்தில்….ஓஓஓ…இவனா என்று சந்தித்துக் கொண்டு முகத்தை சடைப்பாக வைத்துக் கொண்டேன்…..

 

கனவில்தானே காதலன் நினைவில் எதிரியல்லவா…சில நேரம் அல்ல பல முறை தோன்றும் இது சிறுபிள்ளைத்தனமாக இருக்குதே என்று…ஆனாலும் அந்த உணர்வில் ஏதோ புதிய மயக்கம் உள்ளது…

 

அவனோ பண்பானவன்…. என் தந்தையைப் பார்த்ததுமே அவ்வழியாக சென்று கொண்டிருந்த கால்களைத் திருப்பி எங்களுக்கு அருகில் வந்து நின்று விசாரிக்கத் தொடங்கினான்…. தந்தையும் அவனும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள்….ஆனால் அதெல்லாம் என் காதுகளில் படவே இல்லை….நானோ தெளிந்திராத மயக்கத்தில் அவனின் கருவிழியில் நிழல் படும் அந்த இமை முடிகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன்…

 

சரிமா பாத்து நடந்துக்கோ…. நான் போய்ட்டு வரேன் என்று என் தந்தை என் வலது கையைப் பிடித்து சொன்னபோதுதான் நான் தெளிந்தேன்…. அப்போதும் ஓரிரு வார்த்தைகள் கேட்டது ஆனால் புரியவில்லை….

 

எங்கு சென்று யாரைக் கேப்பது என்று தினறிக்கொண்டு இருக்கும் போது…என்னுடைய தெருவிலேயே இருக்கும் என் தோழி எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்தாள்…அவளைப் பார்த்ததும் புத்துணர்ச்சி அடைந்த என்னை கவனித்தவன்….இங்கே வா என்று அவளை அழைத்து…. இவ உன் கிளாஸ் தான்….தெரியும்ல இவள….இல்ல சொல்லவா என்று வினாவினான்….அவளோ ஏதோ உயர் அதிகாரியைப் பார்த்து பயம் கொள்வது போல அவன் பேசியதற்கு பதில் பேசாமல் தலையை மட்டும் பூம்பூம் மாடு போல ஆட்டினாள்…..எனக்கு சிரிப்பதா ஆச்சர்யப்படுவதா என்றே தெரியவில்லை….

 

இதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒன்னாவே இருங்க நீ இவளப் பாத்துக்கோ என்று சொல்ல….நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் தான் ஆல்ரெடி என்று வாய்விட….அதை ஒரு பொருட்டாக கூட கருதாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்….

 

நானும் என் தோழியும் இனிமேல் இணைபிரியாமல் இருக்கப் போகும் அந்த நாட்களை நினைத்து ஆர்வத்தில் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு சிரித்தபடியே எங்களுக்கான வகுப்பில் சென்று அமர்ந்தோம்….

 

நினைத்தது நடந்து விட்டது என்ற நிம்மதியுடன் வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பட்பட்டென விடை கூறி பெருமிதத்துடன் இருக்கும் எனக்கு அப்போது தெரியவில்லை என்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த பதிலுமே தெரியாது என்று… இதுவே வகுப்பில் பயிலும் சக மாணவர்களுக்கும் எனக்கும் இடைய ஒரு வாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியது…

 

ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் என்னைப் பிடித்திருந்தாலும்…நான் நட்பாக ஏற்றுக் கொண்ட யாருமே என்னை அப்படி பார்க்கவில்லை பதிலாக வெறுப்பு உணர்வோடுதான் பார்த்தார்கள்….அதில் என் தோழி மட்டும் விதி விலக்கு….அவள் என்னைப் புரிந்து கொண்டு அனுசரித்து நடந்து கொள்வாள் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்ல அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை….

 

எப்போதுமே என்னைச் சுற்றி கலகலவென சிரித்துக் கிண்டலும் கேலியுமாக….

 

…கதை தொடரும்…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்